- எழுத்தாளர் அகஸ்தியரின் நினைவு தினம் டிசம்பர் 8. அதனையொட்டி அவரது மகள் எழுத்தாளர் நவஜோதி யோகரட்னம் அனுப்பிய சிறுகதை. மின்னஞ்சல்களுக்குள் மறைந்து தவறிவிட்டதை இன்று கண்டுணர்ந்தோம். -பதிவுகள் -
இவன் தற்காலத்து நாகரிகப் பையன். ஆனால், யாழ்ப்பாண வைதீகப் பிடிப்பு இறுக்கம். சமய ஆசாரங்கள், விளையாட்டு வினோதங்கள், கோயில் திருவிழாக்கள் என்று நிகழ்ந்தால் நாட்டுப் பிரச்சினை தீர்ந்துவிட்டதாக இவன் கண்ட அரசியல் ஞானம். இளம் சந்ததியான இவனுக்கும் பழம் முத்துப் பாட்டியே ஞானக்குரு.
‘இந்தா ரண்டரையாகுது....’
சுரேஷ் மனசுள் லேசான கீத சுகம் நீவிற்று. சோர்ந்த உடல் சுரீரித்து, சடுதி உற்சாகம் கொண்டது. இடது கை விளிம்புச் சட்டை கிளப்பி ‘வார்ச்’ பார்க்க, முகத்தில் குதூகல மையல் பம்மிய ஆனந்த பரவசம்.
‘இன்னும் அஞ்சு நிமிசம் இருக்கு’
‘சேவையர் சூட்’ அவன் கையில் அவசரகோலமாகியது. ‘ஹங்கரில்’ கொழுவினான். ‘பாத்றூம் பேஷன் பைப்’ திறந்து சாடையாக முகம் அலம்பி, துவாய் எடுத்துப் பறதியாகத் துடைத்த பின், ‘சிவில் சேட்’, ‘ஜக்கற்’, ‘சூஷ்’ மாட்டினான்.
‘இனி வெளிக்கிடுவம்’
அடுக்குப் பண்ண, ‘பத்ரோன்’ இவன் எதிரே ருத்திரசர்மன் மாதிரி ‘றெஸ்ரோறன்’ சாலைக்கு வெளியே நிற்கின்றான்.
அவன் முகத்தில் மலர்ச்சி ததும்பும் சிரிப்புக் கவியவில்லை. கண்களில் அக்கினி கக்கிற மின்னல். சாந்தமான முகபாவம் தேங்கிய போதும், ‘விறுமசத்தி’ சாடை பத்ரோன் முகம் ‘சப்’பென்று இருக்கிறது.
தன்னுள் சுரேஷ் ‘கறுமுறு’த்தான் :
‘உவன் பத்ரோன் நெடுகலும் உப்பிடித்தான்’
பரவச நிலை குலைந்து நிற்கையில் நெஞ்சு நீவி ஒரு பெருமூச்சு. இவனை மீறிக் குதறிப் போயிற்று.
‘வெளிக்கிட்டாச்சு, மெல்லமா நடையைக் கட்டுவம்’
மனசு கிளர்த்திற்று : ஓர் இடறல்.
‘பொன்ஸர்’ சொல்லுவமா, விடுவமா?’ புருவம் நெருட, கண நேர யோசினை. பத்ரோன் பார்வை ‘இதமாக’த் தோணுவதாயில்லை.
‘வீண் முகஸ்துதியாக நினைப்பான்......?’
மனசு தராசு பிடித்தது.
யோசித்தான்.
‘அவன் ‘பொன்ஸ{ர்’ சொல்லாட்டியும் பறவாயில்லை. நாம் சொல்லுவம்’
எழுந்தமான சமாளிப்பு. தன்னுள் திருப்தியாகி, உடம்பு நசியச் சிலுப்பி, பத்ரோனைக் கடந்தான்.
‘பொன்ஸவா மிஸ்ஸர்’
கட் செவியன்போல் சுரேஷ் பதிலுக்காகக் காதைத் தீட்டினான். தலை திருப்பாமல் சிறு கடைக்கண் எறி.
பத்ரோன் வாயில் பதிலேதும் இல்லை.
அவன் கைப் புடங்கைத் திருகி ஊசி முனைப்பாக ‘உருளோசை’ப் பார்க்க இவனும் தன் கடிகாரம் பார்த்தான்.
மணி, ரண்டரை.
‘அறுதலன் இனி முறையான்’
கண்டம் ஒன்று தப்பினதான ஆசுவாசம்.
அடுத்து, ‘மெத்;ரோ’வைப் பிடிக்கிற ஆவேசம்.
வெளியேறி வேகமாக நடந்தான்.
சாலையோரங்களில் வித விதமான பட்சணங்கள்.
வாசைன நாசியை நெருடியது. யாழ்ப்பாணத்தில் முத்துப்பாட்டி பலகாரம் சுட்டு விற்கிற கொட்டில் நெடி மூக்கில் அம்மிற்று.
‘உந்தப் பிரச்சனையளுக்க முத்துப்பாட்டி இம்மட்டைக்கு.....’
அவலமாக யோசிக்க மனசு அழுந்தி மறுத்தது.
பாட்டி உருவம் கூனல் விழுந்து ஒரு கனவுபோல் பூஞ்சாணமாகக் கண நேரம் மனக் கண்ணில் அலைகிறது. வெண் துகில் மொட்டாக்கு.
பாட்டி ஊர்க்குமர்களைக் ‘கரை’ சேர்க்கிறதில் விண்ணி.
அது ஊர் பூராவும் தெரியும்.
‘நோர்வேயில மூத்தக்கா புருஷன் புள்ளையோட சீவிக்கிறதே அந்த ஆச்சியாலதான்...’
ஊனிய கண் கசிவு வெளிச்சத்தில் கும்மி மினுங்கிற்று.
‘பாட்டி இப்ப இருப்பாவோ....?’
ஐமிச்சமாக இருக்கிறது.
‘தங்கச்சிமார் ரண்டு பேரும் ஆளையாள் மாறிக் கடிதம் போடுவாளவ. கன நாளாக் கடிதமே வாறேல்ல... என்ன சங்கதி...?’
தேகமடங்கக் குருதி கொதித்தது.
போன வாரம் சமாதானப் பேச்சுவார்த்தை நடந்ததாகக் கேள்வி? இது கடை முதலாளிகளுக்கும் நடுக்கம் எடுத்திருக்கிறதை இவனும் கவனித்து வருகிறான். பிறகு ‘நியூஸ் பேப்பர்’ பார்க்கிற விருப்பம் இவனுக்கும் இல்லை.
‘இனி இயக்கக்காறருக்குக் காசு குடுக்கிறது பிசகு’
செய்தி காதில் விழுந்தபின் மனசு சொல்லுது:
‘சமாதானமாப் போறெண்டா, பேந்தேன் காசு குடுப்பான்....?’
ஒரே மனக் குடைச்சல்.
ஆனால் ஒரு வில்லங்கம்.
‘பிரச்சனை தீந்தால் வெளிநாடுகளில் உள்ள அகதியளத் திருப்பி அனுப்புவாங்கள்தானே?’
இவனும் அரசியல் தஞ்ச அகதி.
கடும் யோசினை.
உமிழ் நீர் தொண்டைக் குழிக்குள் ‘முடுக்’கிட்டது.
‘இலங்கைக்குப் போய் இனி என்னெண்டு சீவிக்கிறது?’
சாடையாக மூளை நரம்பில் வலி எடுத்தது.
சமாளித்து ‘அப்பாட்மெண்ட்’ வந்தாயிற்று.
‘கடிதம் கிடிதம் வந்திருக்கும்....?’
‘லெற்றர்பொக்ஸ்’ திறக்கப் பறதியாகப் ‘பொக்கற்’றுள் ‘கீ’யைத் தடவுகிறபோதுதான், ‘றூம்மேட்’ ரவி ‘கீ’ யும் எடுத்தது நினைவில் வருகிறது.
‘மறதிக்குச் செருப்பால் அடிக்கவேணும். அறுப்பாரோட ஆத்திரம் அவசரத்துக்கு ஒண்டும் செய்யேலாது. இன்னொரு ‘கீ’ சரிக்கட்ட வேணும்’
‘புறுபுறு’ப்பு ஓயவில்லை. ‘பொக்ஸ{ள்’ கை விட்டு ஒரு பாட்டம் தடவினான்.
‘கடிதங்கள் இருக்குமாப்போல கிடக்கு...?’
இரு விரல் கோதி மெல்ல நுழைத்து, தடக்குப்பட்டதை இடுக்கி எடுக்கப் பார்த்தான்.
‘அசெடிக் லெற்றர்;’, ஒரு ‘வெடிங்காட்’, ‘பாங் ஸ்ரேற்மன்’.
கொஞ்ச நாளாகக் காலில் சிறு அதைப்பு ஒரு சொறி புண் கசிந்து படர்ந்து வருகிறத. இரவில் சாதுவான ‘விண் விண்’ வலிப்பு. இருந்திருந்து ஊசி குத்துமாப்போல் கண்டி நோகுது. ‘சயிக்கிள்’ல ‘கம்பசு’க்குப் போகேக்க கொக்குவில் பாட்டாளிப் பாவலன் சந்தியில், ஆமிக்காறன் வாறானெண்ட பறதியில் ஆள் தடக்கிக் கால் இடறி ‘பெடறல்’ கட்டை மொழியில் அடித்தது. ஓட்டகப்புலத்தான் எண்ணையோட அப்ப சுகமானது.
‘அந்தப் பழைய நோவோ.....?’
‘செக்றூட்டி சோஷல் காட் டேற் றினியூ’ பண்ணாமல் ‘ஹொஸ்பிற்றல்’ ஏற்காது ‘பிறைவேற்’றில காட்டினால் ஒரு மாத சம்பளம் பத்தாது. ‘கொமேட்டு’ க்குப் போறதானால் லீவு எடுக்க ஏலாது. மூண்டு நாளுக்கு மேல லீவு போட்டால்தான் ஒரு கிழமை மெடிக்கல் தருவான். நசல் பிடிச்ச....
தஞ்சங் குடுத்த நாடு. திட்டவும் மனசு ஏவுதில்லை.
பசிக்களை. முகம் நெற்றி ஏகலும் நெய்யாய்ச் சளித்து மினுங்கிற்று. முகம் உரசிக் கன்னச் சோணைகளை அழுத்தினான்.
சப்பாத்துக்கள் கழற்றி நிமிர, மேசையில் ஒரு ‘சிலோன் லெற்றர்’ நலங்கிக் கிடக்கிறது.
தேகம் சுரீகரித்தது. கன நாளாகக் கடிதம் காணாத தவண்டை பரவசமான அக்களிப்பு உற்றுப்பார்த்தான்.
;றூம் மேட்’ ரவி பெயர்.
தொட்ட நத்தைச் சதை சாடை முகம் சூம்பிற்று.
‘தான் ஏதோ பெரிய ‘பிறைமினிஸ்ர’ ரெண்டு ரவியனுக்கு எண்ணம். தன்ர கடிதத்தை நான் பாக்கேனெண்டு தெரிஞ்சும், வேணுமெண்டு மேசையில வச்சிட்டுப்போயிருக்கிறான். பறையிறது முற்போக்கு? செய்யிறது பிற்போக்கு....’
வெக்காளம் ஆவேகித்து மண்டையுள் புரைந்தது.
கன நாளாகக் கடிதம் எழுதாத தங்கச்சிமாரில் சோபை இழந்த ஒரு ஆத்திரம் அருக்கூட்டிற்று.
நாட்டுப் பிரச்சினை - வீட்டுச் சங்கதி அறியவும் முடிவதில்லை.
‘பாவம் அதுகள்’
மனசு ‘திக்திக்’கென்று அடிக்கிறது.
‘உவன் ரவியின்ர கடிதத்தில் ஏதும் இருக்கும் பாத்திட்டு வைப்பமோ?’
விபரீத ஆசை மனசைக் கிளர்த்திச் சலனப்பட்டது.
‘எதெண்டாலும் ஒரு ஆளுக்கு வந்த கடிதம் மற்ற ஆள் பார்க்கப்படாது’
மனம் அடித்துச் சொல்லிவிட்டது.
அசமந்தமாக எழுந்த ஆசை, அடக்கிக்கொண்டான்.
சாப்பாடு சமைத்து வைத்த சிலமனைக் குசினியில் காணவில்லை.
‘தனக்;குமட்டாச் சரிக்கட்டித் திண்டிட்டு வெளிக்கிட்டிட்டான். சரியான சுயநலக்காறன். உவனோட பங்குப் பிணைப்புச் சரிவராது.
எரிச்சல் மனசுள் தன்னாரவாரம் புகைந்தது.
‘பிறிஜ் சட்டர்’ இழுத்துத் திறக்க, உள் தட்டுக் குலுங்கிற்று. அந்தவாகில் காய்கறி, பழவகை , மீன், இறைச்சி, சாப்பாடு கீழே கொட்டுண்ட பின்பே, தனக்குப் போட்ட வைத்த சாப்பாட்டுக் கோப்பைச் சோறும் கறியுமாகக் கவிழ்ந்திருப்பதைக் கவனித்தான்.
‘ஆஞ்சோஞ்சு பாராதவன் கருமம் தான் சாகக் கடவன்’
பழமொழி நினைவு வர, மனசு நொந்தது.
கண் சாடையாகக் கலங்கி மினுங்கிற்று.
கோட்டுண்டு சிதறியதைப் பக்குவமாக எடுத்துப் பீங்கானில் போட்ட பிறகே சங்கதி வெளிவந்தது.
‘ஒரு சிறங்கை சோறும் தேறாது’
இந்த அவதிக்குள் வெளியே மணி ‘ணிங்’ கிட்டது.
கதவு குழிப் பேழையூடாகப் பார்த்தான்.
இயக்கக்காறர் போல் நாலு பேர். இவனொத்த வயசுக்காறர். மெத்த அவதிப்படுகிறதாகத் தெரிகிறது. முன் பின் கண்டதில்லை.
‘அறை மாறி, ஆள் மாறி, அல்லது ரவியத்தேடி வந்திருக்கிலாம்.....’
கிலேசம், நெஞ்சுள் கிலுக்கட்டி அடித்தது.
கதவு திறந்து உள் விடாமல் விசாரித்தான்.
தங்களைத் தேடியல்ல, தாங்கள் தங்கியுள்ள இந்த ‘அப்பாட்மெண்’டுக்கே வந்ததாகத் தெரிவிக்கப்பட்டது.
ஓடி முழிசலானான்.
இயக்கக்காறர்தான். எந்த இயக்கமென்று தெரிவதாயில்லை. கை கால் ஓடவில்லை.
‘குடுத்தால் பழி, குடுக்காட்டி வில்லங்கம், வாய் துறந்தால் கொழுவல்......’
இவன் அழைக்கமுன் அவர்கள் ‘டக்’ கென்று உள்ளே வந்துபோதுதான் விஷயம் வெளித்தது.
இவே ‘தேவசேவை’க்காறர். கூட, ஒரு மொட்டாக்குச் சிஸ்டர். மங்கலுக்குள் இவை அவன் கண்ணில் செப்பமாகத் தெரியவில்லை.
இப்பதான் ஆக முழிசாட்டமாகியது.
‘இவே வேற வேல வெட்டி இல்லாமல் வந்த நாடுகளிலயும் தண்டிக்கொண்டு திரியினம். கறுமம் என்ன சவத்துக்கு உள்ள விட்டன்?’
ரகஸ்யமான பல தில்லுமுல்லுகள் அடிக்கடி திமிலோகப்படுவதை இவன் அறிவான். ‘பரலோக பிதா’ மீட்டதாக இல்லை.
‘அதில இது சேத்தி, அல்ல...?’
சினப்பு முகம் காட்டாமல் வந்தவர்கள் போலவே ‘நைஸாக’ச் சிரித்தான். தவற விட்ட எதையோ தேடுவதுபோல் பாசாங்கு செய்தான்.
தேவ தொண்டர்களில் ஒருவர் மேரை மரியாதையாக, ‘விசுவாசத்தின் ரட்சண்யம்’ சஞ்சிகையைக் காட்டிக் கேட்டார்:
‘இதுகளை நீங்கள் படிக்கிறதில்லையோ?’
இவன் முகம் அருக்குளித்தது.
‘நான் சைவம். ‘பைபிள்’ல ‘இன்றஸ்ற்’ இல்லை. படிக்கிறதுமில்லை’
‘வெறும் பேயன்’ என்று தங்களுக்குள் மட்டுக் கட்டிக் கொண்டனர்.
சிஸ்டர் ஆகவும் மனம் பொரிந்து கொண்டார்.
பரவாயில்லை. வேதாகமங்கள் சனங்களின் ரட்சிப்புக்குத் தொண்டு செய்கின்றன. நீங்களும் இதில பங்கு பற்றலாம் தானே? இதை ஒருக்கா வாசித்துப் பாருங்கோ’
‘தேவ நம்பிக்கையோட அபயமிட்ட சனங்களும் இலங்கையில ஆமியால அழிஞ்சதுதானே கண்ட பலன்?’
கணை தொடுக்க நினைத்தான். ‘ரவி நிண்டா வடிவாகக் கதைப்பான்’ என்று வாய் திறவாமல் இருந்தான்.
ரட்சணியத்தை நீட்டியவர் கை தவண்டையடித்தது.
‘குறை நினையாதேயுங்கோ. இப்ப வசதியில்i’
இவன் தட்டிக்கழிக்கிறதை மற்றவர் கவனித்து, மெல்ல எழுந்தார்.
‘இதை வச்சிருங்கோ. இப்ப வசதியில்லாட்டி, பிறகு தாருங்கோ வாறம்’
இவன் இதுக்கு மறுமொழி கூறத் தெரியாமல் முழிக்கிறதை ஒரு ‘பிடி’யாக்கிக் கொண்டார் அவர்.
சிஸ்டர் அழுங்குப் பிடியில் நின்றார்:
‘எப்ப வேண்டாலும் வசதி இருக்கிற நேரம் காசு தாருங்கோ. காசு பெரிசல்ல, மனிசர்தான் பெரிசு. இது வேத வாக்கியம். இது உங்களுக்கும் எங்களுக்கும் இடையில் தொடர்பை உண்டாக்கியிருக்கிறது. இதுக்காகத் தேவனுக்கு ஸ்தோத்திரம் சொல்லவேணும்’
இவனுக்கு இந்த வாக்கியம் அர்த்தப்படவில்லை.
மண்டை வலிக்குமாப் போல் இருந்தது.
‘இதென்ன தேவையில்லாத சில்லெடுப்பு’
வேத ரட்சணியத்தை அவன் கையில் அழுத்தி அக்களித்துச் சிரித்தார்.
‘இது பெரிய உத்தரிப்பு, சொல்லித் தப்பேலாமக்கிடக்கு’
வாழைப்பழத்தில் ஊசி ஏற்றின சாடை வேதாகமம்கொடுத்த சாதனையை அடக்கமாகப் பாவனை செய்து,‘எப்பிடியும்’ புத்தகம் வேண்ட வைச்சிட்டம்தானே’ என்ற சிறு திடும்போடு அவர்கள் வெளியேறியதும் நேரத்தைப் பார்த்தான்.
‘சிவ சிவா, நாலு மணியாச்சு’
பீங்கானில் வைத்த சோற்றை ‘வதக்வதக்’கென்று சாப்பிட்டான். உண்ட களை தேகத்தில் ஆயாசமாகவே ‘செற்றி’யில் கால் குத்துண இருந்தான்.
‘ரவி வருமட்டும் ரிவி பாத்திட்டு ஆறுக்குறங்குவம்’
கிடந்த ‘சனல்’ முழுக்கத் தட்டிப் பார்க்க, அப்பதான் சனல் ரண்டில் ‘லம்படா’ முடிந்து எழுத்து ஓடிக்கொண்டிருக்கிறது.
‘பறப்பாரால பிரேசியளின்ர நல்ல ஒரு பாட்டுப் ‘புரோக்கிராமை’ விட்டிட்டன்’
அறை ஏகலும் கொஞ்சம் மங்கல் தாவிற்று.
ரவி பேரில் வந்த கடிதத்தை மேஜையில் பார்க்க, தங்கச்சிமாரில் வேதனையான ஆத்திரம் கிளர்த்திற்று.
‘என்ன திகதியில் ‘சீல்’ விழுந்திருக்கு?’
விழி குத்தி உற்றுப் பார்த்தான்.
10.12.1989. தெல்லிப்பளை.
‘ஊரில பிரச்சினையெண்டா, ரவிக்குக் கடிதம் வந்திருக்காது. இதுகள் போட்டிருக்கலாம் தானே?’
மனசு கிளர்ந்து அழுத்த கண் சுரந்து நீர் பொசிந்து
மினுங்கிற்று. சுரந்த நீர் கடைக்கண்ணில் கீற்றுக் கோடுகளாக வழிந்தது.
‘எல்லாரும் துவக்குகளோட நிண்டா அதுகள்தான் என்ன செய்யும்?’
ஆறுக்கு இருபது நிமிஷம்.
‘இனி வெளிக்கிடுவம்’ என்று அடுக்குப் பண்ண, ‘ரெலிபோன்’ அடிக்கிறது.
பேசிமுடிய முகத்தில் சடுதியான ஒரு சோக வாட்டம்.
நோர்வேயிலிருந்து அத்தார் இவன் தங்கச்சிமார் பற்றிக் கதைத்திருக்கிறார்.
‘எங்கட நாட்டில பெண்ணாய்ப் பிறக்கிறதைவிட பெண்ணோட கூடிப் பிறக்கிறவன்தான் கறுமக்காறன்’
கன நாளாக இவனுள் மறுகிக் கொண்டிருந்த ஒரு ‘பிளான்’ , ‘போன்கோல்’ வந்த பிறகு மனசைப் பிரளயப்படுத்திற்று.
‘ரவியிட்ட நேரடியா வாய் விடுகிறது’
கன நாள் தருணம் பார்த்து வருகிறான். ஒரு நாளும் வாய்க்கவில்லை. இன்று மனசு கேள் கேள்’ என்று அடித்துக் கொள்கிறது.
நெஞ்சு விம்ம ஒரு பெருமூச்சு நீவி எழுந்தது.
ஒரு சங்கடம்.
‘ரவி ஒரே தங்கச்சிக்காரன். சகோதரி ஒண்டுக்குக் கேக்க, அவன் தன்ர தங்கச்சிக்கு என்னைக் கேட்டு, அது ‘மாத்துச்சடங்கில’ வந்து நிண்டா...?’
வயசு மையல் சூல் கொள்ளினும், அச்சம் குடி கொண்டது.
‘ஒரு மாத்துக் கலியாணம் ரண்டு குடும்பத்தைச் சீரழிக்கும்’ என்று முத்துப்பாட்டி நெடுகலும் சொல்லுறவ.
இவள் தற்காலத்து நாகரிகப் பையன், ஆனால், யாழ்ப்பாண வைதீகப் பிடிப்பு இறுக்கம் சமய ஆசாரங்கள், விளையாட்டு வினோதங்கள், கோயில் திருவிழாக்கள் என்று நிகழ்ந்தால் நாட்டுப் பிரச்சினை தீர்ந்துவிட்டதாக இவன் கண்ட அரசியல் ஞானம். இளம் சந்ததியான இவனுக்கும் பழம் முத்துப்பாட்டியே ஞானக்குரு.
கலியாணம் கட்டவும் ஆசைதான்.
‘முத்துப்பாட்டிக்கு எழுதிக் கேட்டு, அவர் ‘சரி’யெண்டா, வாய் வைப்பம்’
ஆதங்கத்தோடு எழுந்தான்.
‘மோசமான நாட்டுப் பிரச்சனையளுக்க முத்துப்பாட்டி என்ன ஆனாவோ?’
நெஞ்சு குமுறி, மனசு நெட்டுருவிற்று.
************
‘மெத்ரோ’ விட்டிறங்கி ‘றெஸ்ரோறன்ற்’ வாசல் ஏறும்வரை மனசு தங்கச்சிமாரில் மூழ்கியதால் சேர்வீஸ் காறரையோ சிற்றூழியர்களையோ அவதானிக்கவில்லை என்பதை ‘பத்ரோன்’ இவன் எதிரே நின்று ‘றிச்வார்ச்’ பார்த்தபோதுதான் உணர்ந்தான்.
புது ‘நியூஸ்’ஒன்று அடிபட்டது.
ஒழுங்கு தவறி, நேரம் பிந்தி, வேலை செய்கிறவர்கள் பட்டியலில் இவன் பெயர் முதலிடம் பெற்றிருக்கிறது.
ஆசை பூர்த்த ஆரவார மகிழ்ச்சி.
‘மூண்டு வருஷ சேர்வீசுக்கு, ரண்டு வருடச் ‘சோமாஸ்’ கிடைக்கும்’
அச்சா வலு புளுகம். கோயிலுக்கும் நேர்த்தி வைத்தான்.
‘கடவுளே , எப்பிடியாவது ‘பத்ரோன்’ என்னை வேலையால நிப்பாட்ட வேணும்’
இலங்கையிலே கடவுளிடம் அபயங் கேட்டவர்களில் பெரும்பாலும் ஒருவரும் தப்பவில்லை என்று இவன் அறிவான். என்றாலும், பய தோஷம் முழு நம்பிக்கையோடு மன்றாடியும் இவன் எதிர்பார்ப்புக்கு மாறாக பத்ரோனின் மறு அறிவிப்பு, ‘கிசுகிசு’வென்று பரவிவிட்டது.
‘சுரேஷ{க்கு ஜனவரியோடு சம்பளம் கூட்டியிருக்கிறது’
இது ஆவணி. ஜனவரிக்கு ஐந்து மாசம் பொறுக்க வேணும்.
‘மாதம் இருநூறு ‘பிறாங்’ கூடுகிற சம்பளம் வருஷத்தில் எவ்வளவு தேறும்?
மனசுள் கணக்கிட்டான்.
‘இலங்கைக் காசு ஆயிரத்துக்கு மேல வரும். பேய்க் காசு. இனி அல்லத்தட்டாமல் ஒழுங்கா வேலைக்குப் போறதுதான்’
தீர்மானம் எடுத்தாயிற்று.
‘சோமாஸ்’ எடுத்தால் பத்ரோனுக்குள்ள நட்ட நயம் என்னைப் பாதிக்காதபோது, எனது சம்பள உயர்வு எந்த வகையிலும் எனக்கே ‘லாபம்’
மார்க்ஸின் ‘கூலி விலை லாபம்’ நூலோ, சுரண்டல் முறையோ படிக்கவில்லை என்ற கவலை இவனுக்குக் கிடையாது. எனினும், ஒரு கணித மேதைத் தனத்தில் இறுமாந்து கொண்டு வெளியே தலை நீட்டினான்.
பத்ரோன் முகம் மலர்ந்து வரவேற்கிற சாடை சிரித்தபோது, இவன் வியந்தேபோனான்.
‘பொன்ஸ{ர் மிஸ்ஸ{ர்....’
‘தான் பத்ரோன் பெரிய கோடீஸ்வரன் என்ற அசும்பாவமே இல்லாமல் எப்பவும் ‘சிம்பிளா’கப் பழகுவதை இப்பதான் கண்டுபிடிக்க முடிஞ்சுது’
தனக்குள் சுரேஷ் ‘லொஜிக்’ கலாக யோசிக்கலானான்.
இதுகளைத் தெரியாமல் ‘முதலாளியள் சுரண்டுவங்’களெண்டு கம்யூனிஸ்ட்காறர் போல் எடுத்ததுக்கெல்லாம் ஓயாமல் ‘நொட்டை’ சொல்லுகிற ரவியைப் ‘பிடித்துத்தின்கிற’ ஆத்திரம் வந்தது.
தங்கச்சிமாரை நினைக்க ரவி மீது எழுந்த வெறுப்பு அடங்கிற்று.
‘எண்டாலும் சீக்கிரம் ரவிக்குப் பதிலடி குடுக்க வேணும்’ என்ற அங்கலாய்ப்பு அருக்கூட்டிற்று.
************
வேலை முடிந்து சுரேஷ் ‘ஆத்துப்பறந்து’ வந்தான்.
‘சோத்தி’க்கு வெளியே ஏக சோட்டுக்குக் காடையர் கூட்டம்... குருவித்தலையன்கள்.
இவன் சந்தேகம் குல்லிட்டது.
‘எங்கையெண்டாலும் மறைஞ்சு நிண்டிட்டு, உவங்கள் போன பிறகு போவமோ?’
‘வார்ச்’ சைப் பார்க்க, மணி ‘பன்ரண்டே முக்கால்’ கடக்கிறது... நடுச்சாமம் தாண்டுது.
‘ஒரு மணியோட ‘மெத்ரோ’ ஓட்டமும் இல்லை’
நினைக்க முகம் சூம்பி விகாரித்துக்கொண்டது. பதட்டம் மேனியடங்கப் புரைந்தது.
அவங்கள் ‘கலைஞ்ச’ பாடாயில்லை, இவனும் ‘போற’ பாடாயில்லை, யோசிக்க நேரமும் இல்லை.
புத்தி பேதலித்துக் கொண்டது.
‘கடவுளே காப்பாத்து’ என்று மனசுள் ஒரு சாஷ்டாங்கம்.
திரும்பிப் பார்த்தான். ஒரு ‘சனத்தை’யும் காணவில்லை.
‘எந்த ஆறுதலுமில்லை’ என்று வள்ளீசாகத் தெரிந்தபின், மனம் பதகளித்து ஆசுவாசப்பட்டது.
வலுவில் சப்பாத்தைக் கழற்றி, ‘ஜக்கற் பொக்கற்’றுள் கிடந்த ‘விஸா’வை எடுத்துக் கால் மேசுக்குள் செருகினான்.
‘முண்டினாங்களெண்டா. இதைக் குடுப்பம்’
பத்துப் பதினைஞ்சு ‘பிறாங்’கை ‘றடி’யாக எடுத்து வைத்துக்கொண்டு எட்டி நாலு சுவடு வைக்க, மின்னலடித்தசாடை... ஒரு குருவித்தலையன் குறுக்கே பாய்ந்து ‘விறுக்’கென்று சடுதியாக எதையோ உருவி எடுத்தான்.
கிறிஸ் கத்தி!
‘ஐயோ, நான் இண்டைக்குச் செத்தேன்’
தேகம் ‘பச்சத்தண்ணி’யாகிவிட்டது. இவன் அங்கலாய்த்து முழுசி நிற்கிற அவல கோலத்தை வாசியாக்கி, காடையன்கள் ‘பொன்ஸ்ஸ{வா மிஸ்ஸ{ர், சவா?’ என்று நகிடதமாகக் கேட்டு வாய் மூடவில்லை, இவன், ‘அவுக்’கென்று ‘பொக்கற்’றுள் வைத்த கை சில்லறைப் ‘பிறாங்’ முழுவதையும் அள்ளிக் கொடுத்த பின்தான் குருவித் தலையன் இவனைக் கை விட்டான்.
‘எப்படி ‘றூம்’ வந்து சேர்ந்தேன்?’
வியப்போடு கால் மேஸ் கழற்றிப் பார்த்தபோது நடுங்கிற கையில் ‘விஸா’ நலங்கிப் போயிருந்தது.
‘நடந்த சங்கதி தெரிஞ்சால் ரவி எக்கணம் கேலி பண்ணிச் சிரிப்பான்.....’
அவனுக்குப் பறையாமல் இவன் படுத்து விட்டான். கண்டம் ஒன்று நீங்கியதான நிர் விசாரணத்தோடு உணவு கொள்ளாத சடலமானான்.
ரா முழுக்க அவன் கனவில் காடையர்களான குருவித்தலையன்களே மோசமாக அட்டகாசித்திருக்கின்;கள்.
உடம்பு நொய்ந்து போய்விட்டது.
விடியக் கண் விழித்தபிறகும் ‘பெட்’டில் தீய்ந்து போய்க் கிடந்ததை ரவி கவனித்தான்.
‘என்ன சங்கதி உன் ‘பாட்டில முழுசிக் கொண்டு கிடக்கிறாய், ஏதுங் கரைச்சல் கிரைச்சலோ?’
அவன் கேட்ட பிறகே தான் ‘தப்பியொட்டி’ அந்தச் சம்பவம் மிகப் பயங்கரமாக இவனுக்குப் புலர்ந்தது.
காட்டிக் கொள்ளவில்லை.
‘அப்பிடி ஒண்டுமில்லை’
‘சமாளிக்கிறது கெட்டித்தனம்’ என்று இவன் நினைப்பு. போர்வை நீக்கி, ரவியை பார்த்தான்.
‘சங்கதி அறிஞ்சியோ?’
‘என்னது?’
‘எனக்கொரு ‘லக்’ அடிச்சிருக்கு’
‘அப்ப, உன் பாடு வாசிதான்’
ரவி நக்கல் பண்ண, இவனுக்குக் ‘ கெந்தி’யாயிற்று, தன் ‘உசத்தி’யைப் பறை சாற்றலானான்:
‘பத்ரோன் சம்பளம் கூட்டிப் போட்டான்’
ரவி நமட்டிச் சிரித்தான்.
‘தலை குத்திப் பிரண்டாலும் சம்பளம் கூட்டாத பத்ரோன், தனக்கு லாபமில்லாம எதையும் செய்யமாட்டான். இப்ப ஏன் கூட்டினானெண்டு தெரியுமா? அவன் உன்னை வேலையால நிப்பாட்டி, ‘சோமாஸ்’ குடுக்கிறது வாசியெண்டா, அந்த வாசி வேலையால நிப்பாட்டாமல் சம்பளம் கூட்டுதலால எப்பிடி வரும்? சோமாஸில் நிண்டாலும் சம்பளம் கூட்டினாலும் பத்ரோனுக்குத் தான் வாசி’
‘அதெப்படி?’
‘ஒரு ஆளை வேலையால நிப்பாட்டினா புதுசா ஆள் போட்டுச் சம்பளத்துக்கு அதிக நேரம் வேலை வாங்கிக் கொள்வான். அல்லாட்டி ‘சோமாஸ்’ எடுத்தவனுக்குப் பதிலாப் பழைய ஆக்களிட்ட ‘அவசரவேலை’ வாங்கி ஈடு செய்வான். எப்பிடிப் பார்த்தாலும் முதலாளிக்குத்தான் லாபம். முதலாளிமார் எப்பவும் எங்கையும் வேலைக்காறரைச் சுரண்டி வஞ்சிக்காமல் எதுவும் செய்யமாட்டாங்கள்....’
சுரேஷ{க்கு அரியண்டமாக இருந்தது. ரவியின் பேச்சைக் கேட்டால் என் வாசி கெடும்’ என்று நினைத்தான். ‘இவன்மட்டில் பேசிப் பயன் இல்லை. உவனுக்கு மண்டைக்க ஒண்டும் பூராது’ என்று ரவியும் கதையை மாற்றினான்.
‘மேசையில் கடிதம் வைச்சன். நீ எடுத்துப் பார்க்கேலப் போல’
ரவி கேட்டதே இவனுக்கு ;சுருக்’கென்று தைத்தது.
‘கவரில உன்ர பேரல்லோ இருந்தது?’
‘உடைச்ச ‘கவர்’ தானே – பார்த்திருக்கலாம்’
‘எண்டாலும் ஒராளின்ர பேரில வாற கடிதம் இன்னொராள் பார்க்கப் படாதுதானே?’
‘அதுவும் சரிதான், ஆனா, கடிதம் உனக்கும் சேத்திதான்.
கடிதத்தை எடுத்துக் குடுக்க கையோடு ரவி ‘பாத்றூம்’ பக்கம் போக இவன் இருந்தவாகில் படித்து விட்டுச் சிரித்தவனாக வலு ‘குஷி’யில் துள்ளி எழுந்தான்.
‘ரவி, ஒரு ‘குட்’ நியூஸ்’
‘என்னது?’ என்று ரவி கேட்கமுதலே சுரேஷ் சொன்னான்:
‘இலங்கையில இப்ப சரியான பிரச்சினையாம் ரண்டு பகுதியாலயும் சூடுபட்டு நாள் வீதம் அம்பது அறுவதெண்டு சனம் சாகுதாம். யாழ்ப்பாணத்துக்குப் பெரிய அழிவு வரப்போகுது. அதுக்கிடையில் தங்கச்சியவைய ‘ஏஜன்ஸி’ மூலம் மூத்த மாமா ஜேமனிக்கு அனுப்பி வைச்சிட்டார். அவே சுகமா வந்து சேந்திட்டினம்’
ரவி ‘நமட்டி’ச் சிரித்தான்.
‘உதே ‘குட் நியூஸ்?’, சனங்கள் சாகிறதும் உனக்குக் ‘குட் நியூஸ்’, என்ன? இந்தப் போர்வையில வேஷங்கட்டி நிக்கிறவையாலதான் பிரச்சினை முத்துது’
‘நான் அதைச் சொல்லேல....’
‘பின்ன, எதைச் சொன்னணி?’
பேச்சு வரவில்லை.
‘தங்கச்சியவே பிரான்சுக்கு வாற சங்கதிய முக்கியப் படுத்தாமல், ‘பாவம், அப்பாவிச் சனங்கள்தான் வீணாச் சாகுதுக’ளெண்டு ‘இரக்கமா’ச் சொல்லி ரவியை மெல்லமா வளைச்சிருக்கலாம். பறவாயில்லை. அதுகள் கரைச்சலில்லாமல் வந்து சேருமட்டும் ஒண்டும் பறையாமலிருந்திட்டுப் பிறகு பாப்பம்’
கன நேரமாகியும் சுரேஷ் பதிலேதும் சொல்லாமல் யோசித்தபடி இருந்தவன், கடைசி வரியைப் படித்தபோது...?
முத்துப்பாட்டி.......
அறை மயான அமைதியில்....
( தினகரன் - 1992.)
•This e-mail address is being protected from spambots. You need JavaScript enabled to view it•
•<• •Prev• | •Next• •>• |
---|