- எழுத்தாளர் கோமகனை ஆசிரியராகக்கொண்டு வெளியாகும் 'நடு' இணைய இதழில் வெளியான நேர்காணலிது.-
உலக மகாயுத்த காலங்களில் வெடிக்காத, மண்ணில் ஆழப்புதையுண்ட குண்டுகளை வெடிக்கச்செய்வதும் அல்லது வலுவிழக்கசெய்வதும் அவ்வப்பொழுது நாம் பத்திரிகைகளில் படிக்கின்ற விடயங்கள். அது போலவே ஒரு நிகழ்வில் எழுத்தாளர் ஜெயமோகன் சொல்லிய கருத்தொன்று சரியாக மாதம் ஆறைக் கடந்த நிலையில், ஈழத்துக்கவிஞர் கோ நாதன் அந்த உரையினை சமூக வலைத்தளங்களில் பகிர, ஜெயமோகனது கருத்துக்கு எதிராக சமூகவலைத்தளங்கள் அனல் கக்கின. ஆனால் அவரது உரையினைக் கூட்டிக்கழித்து விட்டு உரையின் மையச்சரடைப் பார்த்தால் அவர் சொல்ல வந்த கருத்தில் தவறுகள் இருப்பதாகத் தெரியவில்லை.
முப்பதாண்டுகளுக்கு மேலாக போர் தின்ற எமது நிலத்தில் சரியான வகையில் திறனாய்வுகள் முன்னெடுக்கப்படவில்லை என்பதே யதார்த்தம். போருக்கு முன்னரான காலங்களில் பல்கலைக்கழகங்களில் இருந்த தமிழ்த்துறைப் பேராசிரியர்கள் சீரிய விமர்சனப்போக்கையும் தமது காலத்துக்குப் பின்னர் ஒரு பரம்பரையையும் விட்டுச்சென்றனர். பின்னர் யுத்தம் இவையெல்லாவற்றையும் தின்றது போக, பல்கலைக்கழக மட்டங்களில் விமர்சன மரபை தமிழ்துறைப் பேராசிரியர்கள் யாரும் கண்டு கொள்ளவில்லை என்பதும் யதார்த்தமாகும். இதனை தமிழகத்து எழுத்தாளர்கள் தமதாக்கி அண்டைய நாடுகளில் உள்ள எழுத்தாளர்களை வகைப்படுத்தியதுடன் நில்லாது எகத்தாளமாகப் பொதுவெளியில் கருத்துக்களையும் சொல்ல ஆரம்பித்தனர்.
ஆக எங்களிலே அடிப்படைத்தவறுகளை வைத்துக்கொண்டு உணர்ச்சிவசப்பட்டு பொதுவெளியில் கூச்சலிடுவது நேரவிரையமாகும். ஒருவர் ஒரு தவறான கருத்தை முன்வைப்பாரானால் அதனை மறுதலித்து ஆதாரத்துடன் எதிர்வினையாற்றுவதே விமர்சன மரபு. அந்த வகையில் அண்மையில் பிரான்ஸ் வந்திருந்த அவுஸ்திரேலியாவைச் சேர்ந்த மூத்த ஊடகவியலாளரும் எழுத்தாளருமான லெ முருகபூபதியை இது தொடர்பாக ஒரு சிறிய நேர்காணலை நடு வாசகர்களுக்காகச் செய்திருந்தேன். இனி ……….
1.தமிழக எழுத்தாளர் ஜெயமோகன் ஈழத்து இலக்கிய வெளியில் காத்திரமான இலக்கிய மரபு இருந்ததில்லை என்றும் தங்களால் அடையாளப்படுத்தப்படுகின்ற ஈழத்து எழுத்தாளர்களையே எல்லோரும் கொண்டாடுகின்றார்கள் என்றும் ஒரு காட்டமான விமர்சனத்தை வைத்திருக்கின்றார். ஈழத்து இலக்கிய வெளியில் காத்திரமான இலக்கிய மரபு இருந்துள்ளதா ? இருந்திருந்தால் அவை ஆவணப்படுத்தப்பட்டுள்ளதா?
முருகபூபதி: எமது நண்பர் ஜெயமோகன் எப்போதிருந்து எம்மவர்களை அடையாளப்படுத்துகிறார்…? “ ஈழத்து இலக்கியவெளியில் காத்திரமான இலக்கிய மரபு இருந்ததில்லை. “ எனச்சொல்பவர்கள் யார் ..? என்பதன் பின்னணியை ஆராய்ந்து பார்ப்போமேயானால், அந்தக்குற்றச்சாட்டினை முன்வைப்பவர்கள் ஈழத்து இலக்கிய உலகை நன்கு அறியாதவர்கள் என்ற முடிவுக்குத்தான் நாம் வரவேண்டும். கங்கை இதழ் ஆசிரியர் பகீரதன் தொடக்கம் பின்னாளில் கலைமகள் ஆசிரியர் கி. வா. ஜகந்நாதன் வரையில் ஈழத்து இலக்கியம் பின்தங்கியிருப்பதாகவும் ஈழத்து இலக்கியத்தில் இடம்பெறும் சொற்களுக்கு அடிக்குறிப்பு தேவை என்றும் சொன்னவர்கள்தான்.
ஈழத்து இலக்கிய மரபு, மறுமலர்ச்சி காலம், தேசிய இலக்கியம், மண்வாசனை – பிரதேச இலக்கியம், முற்போக்கு இலக்கியம், தலித் இலக்கியம், போர்க்கால இலக்கியம், போரினால் உள்நாட்டில் இடம்பெயர்ந்தவர்களால் படைக்கப்பட்ட இடப்பெயர்வு இலக்கியம், மற்றும் அந்நிய தேசங்களுக்கு புலம்பெயர்ந்தவர்கள் ஆறாம் திணையில் ( பனியும் பனிசார்ந்த நிலப்பரப்பும்) படைத்துவரும் புகலிட இலக்கியம் முதலான பல பரிமாணங்களை பெற்று வளர்ந்துள்ளது. அதனால்தான் ஒரு காலத்தில் தமிழக இலக்கியவாதிகளினாலும் வாசகர்களினாலும் கவனத்திற்குள்ளாகாத ஈழத்து இலக்கியம் கடந்த நூற்றாண்டின் இறுதிக்காலம் முதல் விசேட கவனம் பெற்றுள்ளது.
ஈழத்திலிருந்துதான் நாவலரும், விபுலானந்தரும், தனிநாயகம் அடிகளும் தோன்றினார்கள். உலகத்தமிழ் ஆராய்ச்சிக்கு வித்திட்டவரும் ஈழத்து இலக்கிய வளர்ச்சி எழுதிய இரசிகமணி கனகசெந்திநாதனும் தமிழ் நாவல் இலக்கியம் என்ற ஆய்வு நூலை எழுதிய கைலாசபதியும் தமிழில் சிறுகதை இலக்கியம் தோற்றமும் வளர்ச்சியும் எழுதிய கா. சிவத்தம்பியும், ஏழாண்டு ஈழத்து இலக்கிய வளர்ச்சி எழுதிய மு. தளையசிங்கமும், இந்திய தத்துவஞானம் எழுதிய கி. இலக்ஷ்மண அய்யரும் எங்கிருந்து வந்தார்கள்..?
தமிழ்நாவல் இலக்கியத்திற்கு நூற்றாண்டு வந்தவேளையில் அதனை யாழ்ப்பாணம் பல்கலைக்கழகத்திலிருந்து இரண்டு நாள் ஆய்வரங்கின் மூலம் வெளிஉலகப்பார்வைக்கு கொண்டுவந்தவர்கள் யார்..? அதன்பின்னர்தானே தமிழகத்து இலக்கியவாதிகளுக்கு தமிழ் நாவல் இலக்கியத்திற்கு நூறு வயது பிறந்துவிட்டது என்ற தகவல் தெரியவந்தது.!
1982 – 1983 காலப்பகுதியில் மகாகவி பாரதி நூற்றாண்டை முதலில் முன்னெடுத்தவர்களும் ஈழத்து இலக்கியவாதிகள்தான்.
தேசிய இனப்பிரச்சினை நெருக்கடி உக்கிரமடைந்து, இனவிடுதலைப்போராட்டம் நடந்த பூமி இலங்கை. இலட்சத்திற்கும் அதிகமான தமிழ் புத்தகங்களை இனவாத அரக்கர்கள் தீக்கு இரையாக்கிய மண்! முப்பது ஆண்டுகாலம் நீடித்த போரினால் பல இலக்கியவாதிகளையும் ஊடகவியலாளர்களையும் இழந்த தேசம். அதனால் பின்னாளில் இலக்கிய வளர்ச்சி பற்றிய ஆவணப்படுத்தலில் தேக்கம் நிகழ்ந்திருக்க வாய்ப்பிருந்தது. ஈழத்து நூல்கள், இதழ்கள், பத்திரிகைகள் பற்றிய விரிவான தகவல்கள் அடங்கிய நூலகம் என்ற ஆவணப்படுத்தல் இயக்கம் தொடங்கப்பட்டதே ஈழத்தில் போர் உக்கிரமடைந்தவேளையில்தான். இன்று இணைய வசதியுடன் உலகின் எந்தப்பாகத்தில் வசிப்பவர்ளும் அந்த ஆவணங்களை எளிதாகப் படிக்கமுடியும். ஈழத்து இலக்கிய வளர்ச்சியின் மரபுவழி நீட்சியை சரியாக தெரிந்துகொள்ளாமல் எழுந்தமானமாக கருத்துச்சொல்பவர்கள், முதலில் ஈழத்தின் வரலாற்றையும் அங்கிருந்த இலக்கிய மரபினையும் ஆராய்ந்து தெரிந்துகொண்டு பேசவேண்டும்.
02. ஈழத்து இலக்கிய பரப்பில் இருக்கின்ற மூத்த எழுத்தாளர்கள் தமது இருப்பை மட்டுமே தக்கவைத்துக்கொண்டிருக்கின்றார்கள். அவர்கள் தமது காலத்துக்குப் பிறகு வர இருக்கின்ற படைப்பாளிகளை ஊக்குவிக்கவோ தட்டிக்கொடுக்கவோ இல்லை. அவர்களது படைப்புகளை பட்டியல் இடவோ தயாராக இல்லை, அவர்களது இத்தகைய போக்குகளே ஜெயமோகன் போன்றவர்களை பேசவைக்கின்றது என்று சொல்கின்றேன். இது தொடர்பாக .............?
முருகபூபதி: எழுத்தாளர்கள் மத்தியில்தான் ஆக்க இலக்கிய படைப்பாளிகளும் இலக்கிய விமர்சகர்ககளும் இலக்கிய நயப்புரை எழுதுபவர்களும் இருக்கிறார்கள். அத்துடன் இந்த எழுத்தாளர்கள் மத்தியில்தான் இலக்கிய இதழ் ஆசிரியர்களும் இணைய இதழ் ஆசிரியர்களும் பங்காற்றுகின்றனர். இவர்கள் பற்றிய ஆய்வுகளையும் பதிவுகளையும் எழுதிவருபவர்கள் சொற்பம்தான். அவ்வாறு எழுதுபவர்களும் எழுத்தாளர் என்ற வரிசையில்தான் இடம்பெறுகின்றனர்.
ஈழத்து இலக்கிய வளர்ச்சியில் முன்பொரு கால கட்டத்தில் வெளிவந்த படைபிலக்கிய நூல்களை பார்த்தீர்களானால், பெரும்பாலும் பல்கலைக்கழக விரிவுரையாளர்களும் பேராசிரியர்களும்தான் அவற்றுக்கு முன்னுரையோ அணிந்துரையோ எழுதியிருப்பார்கள். அவ்வாறு அத்தகைய அங்கீகாரத்தை எதிர்பார்த்திருந்தவர்கள் ஈழத்து எழுத்தாளர்கள்.
படைப்பிலக்கிய செல்நெறி குறித்து ஈழத்தின் மாக்ஸீய இலக்கிய விமர்சகர்கள் முன்வைத்த கோட்பாடுகள் பிறிதொருகாலத்தில் விமர்சனங்களுக்குட்படுத்தப்பட்டன.
எனினும் ஈழத்து இலக்கியவாதிகள், அவர்தம் படைப்புகள் ஊடாக வாசகர்களுக்கு அடையாளம் காண்பிக்கப்பட்டனர். அந்தப்பணியை செவ்வனே மேற்கொண்ட பலர் பற்றிய நீண்ட பட்டியல் இருக்கிறது.
கே. எஸ். சிவகுமாரன் தொடர்ச்சியாக ஆங்கில ஊடகங்களில் ஈழத்து படைப்புகளையும் படைப்பாளர்களையும் அறிமுகப்படுத்திவருபவர். நான் இலங்கையிலிருந்த காலப்பகுதியில் வீரகேசரி வாரவெளியீட்டில் வாரம்தோறும் இலக்கிய பலகணி பத்தியில் தொடர்ச்சியாக பலரை அடையாளம் காண்பித்து அறிமுகப்படுத்தியிருக்கின்றேன். அவுஸ்திரேலியாவுக்கு 1987 இல் புலம்பெயர்ந்து வந்தபின்னரும் எனது ஏராளமான பதிவுகளில் படைப்பாளிகளையும் அவர்தம் படைப்புகளையும் அடையாளம் காண்பித்து ஊக்குவித்துவருகின்றேன். இவ்வாறு தங்கள் ஆக்க இலக்கிய முயற்சிகளுக்கு அப்பால் மற்றும் ஒரு தளத்தில் நின்று சக படைப்பாளிகளை இனம் காண்பித்து அறிமுகப்படுத்துபவர்கள் சொற்பம்தான்.
அதனால் இலக்கிய ஆளுமைகள் பலரும் கவனிக்கப்படவில்லை எனச்சொல்லிவிட முடியாது. பல படைப்பாளிகள் தங்கள் படைப்புமொழியாலும் படைப்பூக்கத்தினாலும் தங்களை தக்கவைத்துக்கொண்டுள்ளனர்.
ஜெயமோகன் கூட 2009 இன்பின்னர்தான் எங்கள் ஈழத்து மலையக முன்னோடி படைப்பாளி தெளிவத்தை ஜோசப் அவர்களை தெரிந்துகொண்டவர். அக்காலப்பகுதியில்தான் அவர் எஸ்.பொ. , கா. சிவத்தம்பி, மு. தளையசிங்கம், கவிஞர்கள் வில்வரத்தினம், சேரன் ஆகியோர் பற்றி தனது “ ஈழ இலக்கியம் “ நூலில் விரிவாக எழுதினார்.
மூத்த எழுத்தாளர்கள் இளம்தலைமுறை எழுத்தாளர்களை தட்டிக்கொடுத்து ஊக்குவித்தால்தான் அங்கீகாரம் கிடைக்கும் என்று சொல்லிவிட முடியாது. வளர்ந்துவரும் எழுத்தாளர்களும் அந்த “ஊக்குவிப்பு “ களை நம்பி அவர்களின் பின்னால் ஓடவேண்டிய அவசியமும் இல்லை. என்னையே எடுத்துக்கொள்ளுங்கள் 1971 ஆம் ஆண்டு முதல் எழுதிவருகின்றேன். இதுவரையில் ஆறு கதைத்தொகுதிகள் உட்பட 22 நூல்களை எழுதியிருக்கின்றேன். அவற்றுக்கு எந்தவொரு விமர்சகரோ, ஆக்க இலக்கிய படைப்பாளியோ முன்னுரையோ – அணிந்துரையோ எழுதவில்லை. குறிப்பிட்ட ஒரு சிலர்தான் இதழ்கள் – ஊடகங்களில் எனது நூல்களை விமர்சித்திருக்கிறார்கள்.
சக படைப்பாளிகளைப்பற்றிய அங்கீகாரத்தை ஈழத்து விமர்சகர்கள் முறையாக அறிமுகப்படுத்தி பட்டியல் இடத்தவறியமையால்தான் தனது அடையாளப்படுத்தலின் மூலம் மற்றவர்கள் தெரிந்துகொள்கிறார்கள் என்ற ஜெயமோகனின் கூற்றை ஏற்றுக்கொள்ளமுடியாது. எமது இனிய நண்பர் ஜெயமோகன் அவர்கள், ஈழத்து இலக்கியம் கடந்துவந்த பாதை எத்தகையது? என்பதை நன்கு அறிந்திருப்பார் என்றுதான் நான் நம்புகின்றேன். ஆனால், எனது அந்தக்கணிப்பு தவறானால் அவர்தான் மேலும் மேலும் ஈழத்து இலக்கிய வளர்ச்சியில் பயணித்தவர்களையும் அதன் செல்நெறியை இனம்காண்பித்தவர்களைப்பற்றியும் அவர்களின் பதிவுகள் பற்றியும் தெரிந்துகொண்டு பொதுவெளியில் உரையாடல் வேண்டும்.
3.சமகாலத்தில் ஒரு பிரதிக்கு "முன்னெடுப்பு" ( Promotion ) அவசியமானதா? அத்தகைய முன்னெடுப்பு ஈழத்து இலக்கிய வெளியில் எவ்வளவு தூரத்திற்கு முன்னேற்றம் அடைந்துள்ளது?
முருகபூபதி : எந்தவொரு கலைக்கும் Promotion அவசியம். உலகெங்கும் கலைச்செல்வங்கள் ஆவணப்படுத்தப்பட்டு மியூசியங்களில் காட்சிப்படுத்தப்பட்டுவருவதன் பின்னணியிலேயே அதன் அவசியத்தின் பெறுமதியை புரிந்துகொள்கின்றோம். இலக்கிய பிரதிகளுக்கும் Promotion அவசியம். ஆனால், அதனைச்செய்பவர்கள் தனிப்பட்ட விருப்பு வெறுப்புகளுக்கு அப்பால் நின்று – காய்தல் உவத்தல் இன்றி இயங்கவேண்டும். சமகாலத்தில் முகநூல் கலாசாரம் வந்தபின்னர், ஒரு இலக்கிய நிகழ்வோ, நூல் வெளியீடோ விரிவாக ஊடகங்களில் எழுதப்படாமல் முகநூலில் சிறு குறிப்புகளாக வருகின்றன. அத்தகைய நிகழ்வுகள் ஒளிப்பதிவுசெய்யப்பட்டு, முகநூலில் பதிவேற்றமடைகின்றன. ஆனால், இந்த முகநூல் வசதி அல்லது பரீட்சயம் எத்தனை ஈழத்து மூத்த எழுத்தாளர்களுக்கும் மூத்த தலைமுறை வாசகர்களுக்கும் இருக்கிறது…? இன்னமும் இவர்களுக்கு கணினியும் இணையங்களும் அந்நியமாகத்தான் இருக்கின்றன.
பல மூத்த எழுத்தாளர்கள் பற்றிய பதிவுகள் இணைய இதழ்களில் வெளிவந்திருந்தாலும், அவற்றைப்பார்த்து பரவசமடைவதற்கும் அவர்களுக்கு வாய்ப்பு வசதி இல்லை. அவர்கள் தங்கள் வாசிப்புத்தேவைக்கு இன்றளவும் அச்சு ஊடகங்களைத்தான் நம்பியிருக்கிறார்கள். சமகாலத்தில் இந்த Promotion வேறு ஒரு தளத்திற்கு பரிமாணம் பெற்றுள்ளதாகவே நான் கருதுகின்றேன். அத்துடன் மறுவாசிப்பின் ஊடாகவும் வாசிப்பு அனுபவப்பகிர்வின் வழியாகவும் அவ்வப்போது Promotion நிகழ்ந்துகொண்டுதானிருக்கின்றன.
04. முதன் முறையாக பிரான்சுக்கு வந்திருக்கின்றீர்கள். பிரான்ஸ் மற்றும் ஈழவர் தொடர்பான மனப்பிம்பங்கள் உங்களுக்கு எப்படியாக இருந்தன ?
முருகபூபதி: சங்க இலக்கியம் எமக்கு அறிமுகப்படுத்தியது ஐவகைத்திணைகள், குறிஞ்சி – முல்லை – நெய்தல் – பாலை – மருதம். அவற்றின் ஆத்மா எத்தகையது..? அவை எத்தகைய நிலப்பரப்பை சார்ந்திருந்தவை..? என்பதும் உங்களுக்குத் தெரியும். இலங்கையில் இனநெருக்கடி கூர்மையடைந்து இனவிடுதலைப்போராட்டம் வெடித்த பின்னர், அய்ரோப்பா மற்றும் கனடா , அவுஸ்திரேலியா முதலான நாடுகளுக்கு வந்த தமிழ் மக்களினால் தோன்றியதுதான் ஆறாம் திணை. அதிலும் பிரான்ஸ் போன்ற நாடுகளுக்கு வந்த ஈழவர் சந்தித்த அகப்போராட்டங்கள், பருவகால வேற்றுமைகள், மொழி – கலாசாரம் மற்றும் தலைமுறை இடைவெளி உட்பட பண்பாட்டுக்கோலங்கள் இங்கு வாழும் இலக்கியப்பிரதியாளர்களினால் தொடர்ச்சியாக பதிவாகிவருகின்றன.
பனியும் பனிசார்ந்த மண்ணுக்கு வந்துள்ள எமது மக்கள் பனிக்குள் நெருப்பாக கனன்றுகொண்டிருப்பவர்கள். இயந்திரகதியான வாழ்வுக்குள் தங்ளை தகவமைத்துக்கொண்ட கடின உழைப்பாளிகள். பிரான்ஸ் லாசப்பல் பிரதேசத்தை பார்த்துவிட்டு பிரமித்துப்போனேன். நான் எங்கே நிற்கின்றேன்..? என்று சில கணங்கள் அதிர்ச்சியில் உறைந்தேன். இந்தப்பிரதேசம் என்ன மற்றும் ஒரு யாழ்ப்பாணமா..? என்ற கேள்வி மனதில் தோன்றியது. “ வெட்ட வெட்ட தழைக்கும் வாழைமரம் போன்றவர்கள் “ என்று ஒரு நண்பரிடம் சொன்னேன். அதற்கு அவர் “யாவும் தேவைகளின் நிமித்தம் “ என்றார். ஈழவிடுதலைப்போராட்டத்திற்கு பல்வேறு வழிகளில் உதவியவர்கள் பிரான்ஸில் புகலிடம் பெற்ற ஈழத் தமிழர்கள். ஆனால், இன்று நீடித்த போரில் பாதிக்கப்பட்ட மக்கள் அங்கே ஒரு உலகத்திலும் புகலிடத்து மக்கள் வேறு ஒரு உலகத்திலும் வாழ்ந்துகொண்டிருப்பதை அவதானிக்கின்றேன். பிரான்ஸிற்கு வந்தவர்கள் பற்றியும் அவர்களின் வெற்றி – தோல்வி – சாதனைகள் பற்றியும் விரிவான சமூக ஆய்வுகளை மேற்கொள்ளவேண்டிய தேவையும் இருக்கிறது. எங்கள் சமூகத்தின் கதைகள் ஆவணப்படுத்தப்படவேண்டும். அவை பிறமொழிகளுக்கும் வரவாகவேண்டும். முழு உலகையுமே விழியுயர்த்தி பார்க்கவைத்த சமூகமல்லவா…?
நன்றி : 'நடு' இணைய இதழ் - ( பிரான்ஸ்) / 'பதிவுகள்' இணைய இதழுக்கு அனுப்பி வைத்தவர் எழுத்தாளர் முருகபூபதி.
•<• •Prev• | •Next• •>• |
---|