1. ஸ்வஸ்திஸ்ரீ வாணகோவரையன் (ஓலை சிற்றகழி ஊரவர் கண்டு தங்களூரில்) இருபத்
2. தெட்டாவது முதல் மகனார் சவுண்(ட)பர் நம(க்)கு நன்றாக வைத்த அ(கர)த்துக்குப்
3. பேர் கொண்ட பட்டர்கள் இருபத்தொரு(வரு)க்கு த(ங்க)ளூரிலே ஒருவர்க்கு ஒரு (ம)னையும் புன்
4. செய் நிலத்திலே ஒருவருக்கு ஒன்(ற)ரையாக வ(ந்த) புன்செய் நிலம் முப்ப(த்)தொன்றரை
5. யும் வைத்திய விருத்திக்கு ஒரு மனையும் பு(ன்)செய் நிலத்திலே ஒன்றரை நிலமும்
6. (ஆகப்பேர் இருபத்திருவருக்கும் மனை இருபத்திரண்டும் புன்செய்) நிலம் முப்பத்திரு வே
7. (லியும் இறையிலி ஆக இட்டோம். இந்நிலம் மகதேசன் கோலாலே அளந்து கொ)
8. ண்டு நமக்கு நன்றாக சந்திராதித்த(வ)ரையும் இறையிலிஆக அனுபவிப்பார்களாகப்
9. பண்ணுவதே. இவை வாணகோ(வ)ரையன் எழுத்து.
10. (இப்பட்டர்கள்) குடியிருக்
11. கிற மனைகளுக்கு நிலம் கா
12. லும் பாடிகாப்பானுள்
13. ளிட்டபணி செய் மக்களு
14. க்கு நிலம் காலும் ஆக நி
15. லம் முப்பத்திரு வேலியும்
16. சந்திராதித்தவரையும் இ
17. றையிலி ஆக விட்டோம்.
18. இந்நிலம் மகதேசன் கோலாலே அளந்து கொண்டு அனுபவிப்பார்களாகப் பண்ணவதே.
19. (கன்னட மொழியில் கையெழுத்து உள்ளது)
இடம்: பெரம்பலூர் வட்டம் சித்தளி கிராமம். வரதராஜபெருமாள் கோவில் மகாமண்டபம் தென்சுவரில் வெட்டப்பட்ட 19 வரி கல்வெட்டு.
மகன் – கீழ்ப்படிந்த வீரன், subordinate soldier; மனை – வீடு.
விளக்கம்: மூன்றாம் இராசராசனுக்கு 28 ஆவது ஆட்சிஆண்டில் (1244 AD) அவனுக்கு அடிபணிந்து ஆட்சிபுரிந்த மூன்றாம் அதிகார நிலை அரையனான வாணகோவரையன் தனக்கு உடல்நலம் தேறவேண்டி அவனுக்குக் கீழ்படிந்த வீரனான சவுண்டபர் அகரம் வைக்கிறான். அந்த அகரத்தை செய்த இன்றைய சித்தளியான அன்றைய சிற்றகழி ஊர் பிராமணர் 21 பேருக்கும், ஒரு மருத்துவரின் வளர்ச்சிக்கும் ஆக 22 பேருக்கு பேர் ஒருவருக்கு ஒரு வீடும், 1-1/2 புன்செய் நிலமும் பெறும்படியாக 32 வேலி நிலமும் அரசவரி இன்றி வழங்கப்படுகின்றது. இந்நிலங்கள் மகதேசன் கோலால் அளந்து கொடுக்க ஏற்பாடானது. நிலவும் ஞாயிறும் நிலைக்கும் வரை இப்படி நடக்கவேண்டும் என்று வாணகோவரையன் ஆணைஓலை வெளியிட்டான். வாணர் கோலார் பகுதியில் இருந்து வந்ததால் அவர் தாய்மொழி கன்னடம் என்பதால் இறுதியில் கன்னடத்தில் கையொப்பம் இட்டான்.
இந்த பிராமண வீடுகளை ஒட்டி நிலம் காலும் ஒதுக்கப்படுகின்றது. அவை கொல்லைப்புறமாக இருக்க வேண்டும் என்று ஊகிக்க முடிகின்றது. இவர்களுடன் பாடிகாவல் உள்ளிட்ட பிற பணியாளருக்கும் இறையிலியாக தலைக்கு கால்நிலம் என 32 வேலி நிலம் நிலவும் ஞாயிறும் நின்று நிலைக்கும் வரை செல்லக் கடவதாக வழங்கப்படுகின்றது.
22 பேருக்கு 32 வேலியை வகுத்தால் ஒருவருக்கு ஒன்றரையாக (1.45) நிலம் கிட்டுகின்றது. இந்த ஒன்றரையில் கால் என்பது சற்றொப்ப 0.242 என வருகின்றது. அப்படியானால் பாடிகாவல் உள்ளிட்ட பிற கோவில் பணிசெய்வோருக்கு நிலம்கால் என்ற அளவில் 32 வேலி நிலத்தை வகுத்தால் 128 பேர் நிலம் பெறுகின்றனர். ஆக ஒரு பழைய கோவில் ஊரை திருத்திச் சீரமைத்து பெரிய ஊராக அமைத்தான் வாணகோவரையன் என்பது விளங்குகின்றது. இந்த கால்நிலம் பெறும் 128 பேரில் 22 பிராமணரும் அடங்குவர் என்று தெரிகின்றது. அந்த 22 பேரைக் கழித்தால் 128 – 22 = 106 பிராமணரல்லாதார் நிலம் பெற்றனர். இந்த கால்நிலம் என்பது பயிர் நிலமல்ல மாறாக அவர்கள் தம் சொந்த செலவில் வீடு கட்டிக் கொள்வதற்கே என்று புரிகின்றது. பிராமணருக்கு அரசனே வீடு கட்டிக் கொடுத்ததால் அவை அளவில் பெரியவாகவும் கிணறு உடையவாகவும் இருப்பதில் வியப்பு ஏதும் இல்லை.
அதேநேரம் கால்நிலம் பெற்றவர்கள் எளியோர் என்பதால் அவர்களால் அதிகம் செலவழித்து பெரிய வீடு கட்ட முடியவில்லை என்பதோடு கிணறு வெட்டினால் கூடுதல் செலவாகும் எனபதால் கிணறுஅற்ற சிறு வீடுகளாகவே அவர்தம் வீடுகள் காட்சிப்படுகின்றன. கால்நிலம் என்பதும் சிறுபரப்பு நிலத்துண்டு தான் அதுவே சிறிய வீட்டிற்கும் காரணமாகின்றது.
மற்றொரு மடலாடல் குழுவில் 3 ஆண்டுகள் முன் பிராமணர் பிறர் வீடுகள் கிணறு அமையா வண்ணம் தடுத்துவிட்டனர் என்று தொல்லியலாளர் பத்மாவதி என்பவர் கருத்து கூறியதாக பதிவான போது அதை மறுத்து பிராமணர் வீடுகள் கிணறுடன் இருப்பதற்கு அவை வேந்தர், மன்னர், அரையர்களால் பெருஞ்செலவு செய்து கட்டப்பட்டவை. பிறருடைய வீடுகள் கிணறு இன்றி சிறியவாக இருப்பதற்கு காரணம் அவர்தம் வீடுகள் அவர் தம் சொந்த செலவால் கட்டப்பட்டதே காரணம் என்று பிழையை சுட்டிக் காட்டினேன். தொல்லியலாளர் பத்மாவதி திராவிட கருத்தியலின் தாக்கத்தால் அவ்வாறு தவறான ஒரு கருத்தை கல்வெட்டில் செய்தியாக கூறப்பட்டுள்ளது என திணித்துள்ளார் என்று எடுத்துரைத்தேன். இப்போது போல அப்போது என்னால் கல்வெட்டுச் சான்று ஏதும் தரஇயலவில்லை என்பதே குறை.
தொல்லியல், வரலாற்று ஆய்வாளர்கள் தம் சொந்தக் கருத்தை கல்வெட்டுச் செய்தியாக புகுத்தாமல், திணிக்காமல் இருப்பதுவே சாலவும் நன்று, அல்லவிட்டால் பல தலைமுறைக்கு அத்தவறான கருத்து எடுத்துச் செல்லப்பட்டு சமூகத்தில் குழப்பத்தையும் கலவரத்தையும் ஏற்படுத்தும் என்பதே நடப்பு உண்மை.
இப்போது இந்தக் கல்வெட்டின் மூலம் பெரம்பலூர் வட்டம் சித்தளி ஊரில் மட்டும் அல்ல, கோவில் அமைந்த பிற எல்லா ஊர்களிலும் இதே முறையில் தான் பிராமணருக்கு வீடும், பிறருக்கு வீட்டு மனை மட்டும் என வழங்கப்பட்டன. அதனால் தான் பிராமண வீடுகள் கிணறுள்ள பெரிய வீடாகவும், பிறருக்கு கிணறற்ற சிறிய வீடாகவும் அமைந்தன என்று புரிந்து கொள்ளப்பட வேண்டும். இன்றும் கோவில் ஊர்க் கிராமப் புறங்களில் வீடுகள் இதே நிலையில்தான் அமைந்துள்ளன என்பதைக் கண்டு தெளியலாம். இந்த வேறுபாட்டிற்கு ஏற்றத்தாழ்விற்கு வேந்தர், மன்னர், அரையர் தாம் காரணமே ஒழிய பிராமணர் காரணகர் அல்லர். அப்படியான நிலையில் பிராமணரைப் பழிப்பது நன்றன்று.
வேந்தர், மன்னர், அரையரான அரசர், நாட்டுக் கிழான் ஆகிய நாலடுக்கு அதிகார அமைப்பு பிராமணருக்கு வேத பாடசாலை அமைத்து கல்வி புகட்டி, கோவில் கட்டி வேலைவாய்ப்பு தந்து குடியிருக்க வீடும் ஏற்படுத்தித் தந்தது என்ற வகையில் 4 அகவை முதல் இறக்கும் காலம் வரை பாதுகாவலராக உத்தாரமாக (supportive) இருந்து தந்தைக்கு ஒப்பான நிலையில் பேணியதற்கு பிராமணர் நன்றி உணர்வுள்ளவராக இருத்தல் வேண்டும். ஆளப்பிறந்தவர், ஆண்டகுடி, மண்ஆண்டவர், அடக்கிஆண்டவர் என்று மார்தட்டிக் கொள்வோர் காரணமின்றி பிராமணரைப் பழிப்பது என்பது இதில் அவர்கள் போற்றும் அரசகுடியோரை பழிப்பதாகவே கருதத்தக்கதாக உள்ளது.
பார்வை நூல்: தமிழ்நாட்டுக் கல்வெட்டுகள் தொகுதி III, பக். 100. தமிழ்நாடு அரசு தொல்லியல் துறை, எழும்பூர், சென்னை – 8.
•This e-mail address is being protected from spambots. You need JavaScript enabled to view it•
•<• •Prev• | •Next• •>• |
---|