வட இலங்கையில் இந்துக் கோவில்கள் பொதுவாகத் திராவிடக்கலையின் அடிப்படைகளை மையமாகக் கொண்டு அமைக்கப்பட்டு வந்தன. அண்மைக்காலங்களிலும் ஓரளவுக்கு இந்த அடிப்படையிலேயே அவை அமைக்கப்படுகின்றன. திராவிடக் கட்டடக்கலை மிகப்பழமை வாய்ந்த கட்டடக்கலைகளுள் ஒன்று. திராவிடக் கட்டடக்கலை ஆயிரம் ஆயிரம் வருடங்களுக்கு முன்னரே ஆரம்பமானது. கற்காலக் கட்டடக்கலையின் பொறியியல் மற்றும் சிற்பவியல் நுணுக்கங்களை மையமாகக் கொண்டு திராவிடக் கட்டடக்கலை ஆதிக்கமான கட்டடக்கலை அடிப்படைகளை வெளிக்கொணர்ந்தது.
1900இல் ஆரம்பப்பகுதியில் உலகரீதியில் உருக்குக்கம்பிகளால் வலுவூட்டப்பெற்ற 'காங்ரீட்' (Reinforced Concrete) பொதுமைப்படுத்தப்பட்டதன் பின்னர் இந்துக்கோயில்களின் கட்டடக்கலை புதிய பரிணாமம் எடுத்ததாகக் கருதிக்கொள்ள முடியாது. அது கற்காலக் கட்டட அமைப்பின் மீள் வடிவமைப்பாகவே காணப்படுகின்றது. சிற்பக்கலை வடிவங்கள் , கட்டடக்கலை நுணுக்கங்கள், பொறியியல் அடிப்படைகள் எல்லாமே கற்காலக் கட்டடக்கலையில் அடையாளம் காணப்பட்டவற்றை 'காங்ரீட்'டில் மீளமைப்பவையாகவே காணப்படுகின்றன.
வட இலங்கையில் பாரம்பரியக் கட்டடக்கலை வடிவங்களில் 'மடம்'கள் முக்கிய இடம் பெற்றன. 'நடை', 'திண்ணை' , 'தலைவாசல்', 'நடுமுற்றம்' (Centre Courtyard) உட்பட இன்னும் பல நுணுக்கங்கள் அடையாளம் காணப்பட்டன. நடுமுற்றத்தை மையமாகக் கொண்டு சுற்றிவர அமைந்த , வரிசையாக அழகு படுத்தப்பட்ட தூண்களைக் கொண்ட மெல்லிய நீளமான 'விறாந்தை' பிரதான அழகியல் வெளிப்படையாகக் காணப்பட்டது. நாற்சார் அல்லது முற்சார் ஓட்டுகூரை இந்தக் கட்டடக்கலையின் இன்னுமொரு பிரதான வெளிப்பாடாகக் கருதப்படுகின்றது.
25.06.18 திங்களன்று , நாவற்குழியில் அண்மையில் அமைக்கப்பட்டு பொதுமக்களுக்காகத் திறந்து வைக்கப்பட்ட சிவபூமி திருவாசக அரண்மனையின் ஒரு பகுதியாக நடுமுற்றத்தில் அமைக்கப்பட்ட அமைக்கப்பட்ட சில தட்சணாமூர்த்தி ஆலயத்தின் கும்பாபிஷேக வைபவத்தைப் பார்க்கும் சந்தர்ப்பம் கிடைத்தது. கும்பாபிஷேக வைபவங்கள் ஆரம்பிக்கும் முன்னராகவே சென்றிருந்தேன். கட்டடக்கலைஞன் என்ற ரீதியில் என்னைக் சில விடயங்களை உங்களுடன் பகிர்ந்துகொள்ள விரும்புகின்றேன்.
'திருவாசக அரண்மனை' என்ற பெயர் சூட்டல் மிகவும் பொருத்தமாக எனக்குப்பட்டது. தனித்தே திராவிடக் கட்டடக்கலையுமின்றி, தனித்தே வட இலங்கையின் பாரம்பரியக் கட்டடக்கலை வடிவமும் இன்றி இரண்டு வடிவங்களையும் ஓரளவுக்கு இணைத்து வெளிக்கொணரப்பட்ட வடிவாக இது காணப்படுகின்றது. தெரு வாசலில் அமைந்த வளாகத்தின் பிரதான வாசல் ஓரளவுக்குத் திராவிடக் கலையின் வெளிப்பாடு. உள்ளே முன்றிலில் கருங்கல்லில் நந்தி. இது கோவில் ஒன்றினுள் போகின்ற உணர்வைத்தருகின்றது. அதனைத்தொடர்ந்து கருங்கல்லில் முழுமையாகவே அமைக்கப்பட்ட தேர். அதன் பின்னால் பெரிய நடு முற்றம். முற்றத்தின் பின் நடுப்பகுதியில் திராவிடக் கலையின் வெளிப்பாடான , அரண்மனையின் மையப்புள்ளியாக அமைந்த சிறிய சிவ தட்சணா மூர்த்தி ஆலயம். ஆலயத்தையும் பாரிய நடு முற்றத்தையும் சுற்றிவர வரிசையாக அழகுபடுத்தப்பட்ட தூண்களையும் , முச்சார் ஓட்டு வீட்டமைப்பையும் கொண்ட நீண்ட விறாந்தை, வட இலங்கையில் மடங்களில் பிரதானமாகக் காணப்பட்ட கட்டடக்கலையின் வெளிப்பாடு. நடைமாடத்தின் வெளிப்பகுதியின் முழு நீளத்திற்கு அமைக்கப்பட்ட சுவரில் கருங்கல்லிலே செதுக்கப்பட்ட திருவாசகத்தின் பதிவுகள். இவையெல்லாவற்றையும் அரவணைத்து நிற்பதான தோற்றம்.
இன்னும் சில சிறு குறிப்புகள், உள்ளே சென்று மீண்டும் வெளிவரும் வரையில் பிரதானித்து நிற்பவை, சிவம் ஆலயம் என்ற உணர்வும், திருவாசகத்தின் மணமும் கலந்த ஓரளவிலான பாரம்பரியக் கட்டடக்கலை வடிவம். வரிசையாக வைக்கப்பட்ட சிவலிங்கம், முற்றிலும் சிவலிங்களைக் கொண்டு அமைக்கப்பட்ட பிரதான கோபுரம் - வித்தியாசமான சிந்தனை.
கிறிஸ்தவ, இஸ்லாமிய இன்னும் இதர சமயரீதியான கட்டடக்கலை வடிவங்கள் நவீன அல்லது மாற்றான வெளிப்பாடுகளைக் கொண்டிருப்பவை போன்று இந்துக் கோவில்களும் புதிய சிந்தனைகளை அணைத்து வெளிவருவது வரவேற்கக்கூடியது. புதிய சிந்தனைகளும் புதிய வடிவங்களின் வெளிப்பாடும் ஒரு புதிய பாதையின் ஆரம்பமே. இந்த அரண்மனையின் வெளிப்பாட்டின் பின்னால் காரணகர்த்தாக்களாக நின்ற அனைவருக்கும் எனது வாழ்த்துக்களும் பாராட்டுகளும்.
•This e-mail address is being protected from spambots. You need JavaScript enabled to view it•
•<• •Prev• | •Next• •>• |
---|