புத்தர் வந்த திசையிலிருந்து, காந்தி பிறந்த தேசத்திலிருந்து அவர்கள் வந்தார்கள். அவர்களுக்கு இடப்பட்ட நாமம் " அமைதிப்படை" ! மக்கள் அவர்களை நம்பினார்கள். ஏற்கனவே, சீனாவுடனும் பாகிஸ்தானுடனும் போரிட்டு, தங்கள் தேசத்தின் எல்லைகளை பாதுகாத்தவர்கள் எங்களையும் காப்பாற்றுவார்கள் என போற்றினார்கள்.
அவ்வாறு வந்தவர்களில் ஒருவரான மேஜர் ஜெனரல் ஷியோனன் சிங் அங்கு 32 மாதங்கள் தங்கியிருந்தவர். அண்மையில் அவர் மீண்டும் அங்கு வந்தபோது உதிர்த்த வாக்குமூலம் இது: "நாங்கள் இங்கு தரையிறங்கியபின், தாக்குதல்களை நாங்கள் பார்த்துக்கொள்வோம் என்று நினைத்து இலங்கை இராணுவத்தினர் தங்கள் ஆயுதங்களை கைவிட்டார்கள். இலங்கை இராணுவத்தினருடன் கைகுலுக்கிய நாங்கள், அமைதி காக்க வந்திருக்கிறோம் என்று தெரிவித்தோம். எதுபோன்ற ஆபத்துகளை எதிர்கொள்ள நேரிடும் என்ற எந்தத் தகவலும் வழங்கப்படவில்லை என்பதோடு, இலங்கைக்கு புதிதான எங்களுக்கு வழிகாட்டுவதற்கு வரைபடங்களோ, மேம்பட்ட உளவுத்துறை தகவல்களோ கொடுக்கப்படவில்லை."
இந்தியப்படை அங்கு வந்திறங்கியபோது, வட இலங்கையில் உரும்பராயில் வசித்த இரண்டு ஆசிரியர்கள் - அங்கு பிரசித்திபெற்ற கல்விமான்களாக அறியப்பட்டவர்கள், தங்கள் குடும்பத்தினரிடம் சொல்கிறார்கள்: " அமைதி காக்க வந்திருப்பவர்களை நம்பலாம். இலங்கை இராணுவத்திற்கு அவர்கள் கைகுலுக்கியது ஒருவகையில் இராஜதந்திரம். எங்கள் தமிழ் மக்களை அவர்கள் கைகுலுக்கி அரவணைப்பது தொப்புள் கொடி உறவு. அவர்கள் பிறந்த தேசத்தின் பிதாவின் அகிம்சையால், பிரித்தானிய ஆதிக்கம் வெளியேறியது. அதுபோன்று, இங்கும் எங்கள் பிரதேசத்தில் பேரினவாத ஆதிக்கத்தை வெளியேற்றுவார்கள். தைரியமாக இருங்கள். தயக்கமிருந்தால், ஊருக்குள்ளே உறவினர் வீடுகளில் சென்றிருங்கள்" என்று வழியனுப்பிவைத்தார்கள்.
அவர்களில் ஒருவர் நவரட்ணம் மானிப்பாய் இந்துக்கல்லூரியில் கணக்கியல் ஆசிரியர். மற்றவர் தம்பையா, யாழ். ஸ்ரான்லி கல்லூரியின் முன்னாள் அதிபர். ஆசிரியர் நவரட்ணம் தந்தையார். முன்னாள் அதிபர் தம்பையா, தாயின் தந்தையான தாத்தா. தந்தையும் தாத்தாவும் தங்கள் மகள்மாரை அன்று பாதுகாப்பாக அனுப்பிவைத்துவிட்டு, வீட்டிற்கு காவல் இருந்தனர். அமைதிகாக்க வந்தவர்கள், தங்களையும் காத்துக்கொள்ளவேண்டிய சூழ்நிலை தோன்றியது. அதற்காக அமைதியிழந்து அலைந்தார்கள். வேட்டுக்களை தீர்த்தார்கள். உரும்பராயில் பல அப்பாவி பொதுமக்களின் உயிர்களைப் பறித்தார்கள். அந்தத் தந்தையையும் தாத்தாவையும் அதன்பின்னர் காணவில்லை!
இவ்வாறு காணாமலாக்கப்பட்டவர்களின் கதைகள் எங்கள் தேசத்தில் தொடர்ந்தவண்ணமிருக்கின்றன.
வாசகர் முற்றம் தொடரில், எதற்காக இந்தச்செய்திகள் வருகின்றன? என யோசிக்கின்றீர்களா? அந்த தாத்தாவையும் தந்தையையும் அதன்பின்னர் பார்க்கமுடியாமல்போன ஒரு தேர்ந்த இலக்கிய வாசகியைப்பற்றிய பதிவுதான் இந்த அங்கம். ஈழத்து இலக்கியவளர்ச்சியில் இன்றும் பேசப்படும் ஒரு கவிதைத்தொகுதிதான் பத்துப்பெண்கள் எழுதி, 1986 ஆம் ஆண்டில் பேராசிரியை சித்திரலேகா மௌனகுரு அவர்களினால் தொகுத்து வெளியிடப்பட்ட சொல்லாத சேதிகள். அ.சங்கரி, சிவரமணி, சன்மார்க்கா, ரங்கா, மசூரா ஏ.மஜிட், ஒளவை, மைத்ரேயி, பிரேமி, ரேணுகா நவரட்ணம், ஊர்வசி ஆகிய பத்துப் பெண்கவிஞர்களின் 24 கவிதைகளின் தொகுப்பு சொல்லாத சேதிகள். ஈழத் தமிழ்ப்பெண் கவிஞர்களது முதலாவது கவிதைத் தொகுதி என்ற பெருமையையும் இத்தொகுப்பு பெற்றிருக்கிறது. அன்று செல்வி ரேணுகா நவரட்ணம் என்ற பெயருடன் இத்தொகுப்பில் கவிதை எழுதியிருக்கும் இவர், தற்போது மெல்பனில் திருமதி ரேணுகா தனஸ்கந்தாவாக இரண்டு பிள்ளைகளின் தாயாக எம்மத்தியில் இலக்கியம் பேசிக்கொண்டிருக்கிறார். பயிற்சிபெற்ற ஆங்கில ஆசிரியை. வசாவிளான் மத்தியகல்லூரியில் பணியாற்றியவர். இவரது ஆசான்கள் கவிஞர் சோ. பத்மநாதன், பேராசிரியர் மௌனகுரு. தந்தையும் தாத்தாவும் கல்விப்பின்னணிகளுடன் தேர்ந்த வாசகர்களாகவும் இருந்தமையாலும், ஆசான்கள், கலை, இலக்கியவாதிகளாகவும் படைப்பாளிகளாகவும் விளங்கியமையாலும் ரேணுகாவும் தீவிர வாசகரானார். தமிழிலும் ஆங்கிலத்திலும் கவிதைகள் எழுதினார். ஒரு சில கதைகளும் படைத்தார். யாழ்ப்பாணத்தில் அன்று வெளியான சட்டர்டே ரிவியூ பத்திரிகையிலும் இவரது ஆக்கங்கள் வெளியாகின.
தனது ஆறுவயதில் அம்புலிமாமா வாசகராகியிருக்கும் ரேணுகா, படிப்படியாக படைப்பிலக்கிய நூல்களின் மீது கவனத்தைச்செலுத்தியவர். தொடக்கத்தில் இவரது ஆதர்ச எழுத்தாளர்களாக விளங்கியவர்கள் கல்கியும் அகிலனும்தான். தந்தையார் நவரட்ணம், இவருக்கு ஷேக்ஸ்பியரின் நாடகங்களை அறிமுகப்படுத்தியதையடுத்து ஆங்கில இலக்கியங்களிலும் ஈடுபாடு காண்பித்தார். தாத்தா தம்பையா, இவருக்கு கல்கி, கலைமகள் இதழ்களை வாங்கி வந்துகொடுத்தார். அவற்றில் வரும் கதைகள், தொடர்கதைகளை விரைந்துவாசித்துவிடும் இயல்பும் இவரை தொற்றிக்கொண்டது. ஆசிரியர்கள் (அமரர்) கனகநாயகம், மற்றும் மெளனகுரு , சோ. பத்மநாதன் ஆகியோர் இவரை நவீன இலக்கியத்தின் பக்கம் திருப்பியதாக நினைவுபடுத்துகிறார்.
1985 ஆம் ஆண்டு மாஸ்கோவில் நடந்த உலக இளைஞர் மாணவர் விழாவுக்குச்சென்றிருந்தபோது, அங்கு சில இலங்கை மாணவர்களைச்சந்தித்தேன். அவர்களில் ஒருவர் எங்கள் கவிஞர் சேரனின் அண்ணன் பாண்டியன். மற்றவர் ஜயந்தா. பாண்டியன் தற்போது கனடாவில். 1988 ஆம் ஆண்டு எதிர்பாராதவகையில் ஜயந்தாவை மெல்பனில் சந்தித்தேன். எனது சமதர்மப்பூங்காவில் சோவியத் பயண இலக்கிய நூலிலும் இந்த நண்பர் ஜயந்தா வருகிறார். மாஸ்கோவில் படித்த தனது மற்றும் ஒரு நண்பர் தனஸ்கந்தா மெல்பனுக்கு வந்திருப்பதாகவும் அவரது மனைவி ரேணுகா இலக்கிய ஆர்வம்மிக்கவர் என்றும், இந்திய அமைதிப்படையின் காலத்தில் பெரிய இழப்புகளையும் சந்தித்துவிட்டு வந்துள்ளார் என்றும் தகவலைச்சொன்ன ஜயந்தா, உரும்பராயில் இந்திய அமைதிப்படை செய்த அட்டூழியங்களையும் விபரித்தார்.
ஊடகங்களில் அறிந்த செய்திகளின் பின்னணியில் ஆண்மை, தவிப்பு முதலான சிறுகதைகளையும் அக்காலப்பகுதியில் (1987-1988) எழுதியிருந்தேன். ஜயந்தா சொன்னதும் தாமதிக்காமல் அவருடன் சென்று தனஸ்கந்தா - ரேணுகா தம்பதியரை சந்தித்தேன். இவர்களுடன்அன்று தொடங்கிய நட்புறவு, சகோதர வாஞ்சையாக மலர்ந்து இற்றைவரையில் தொடருகின்றது. இவர்களுக்கு இங்கு பிறந்த மகனும் மகளும் தற்போது மருத்துவ கல்வித்துறையில் ஈடுபடுகின்றனர்.
அக்காலப்பகுதியில் மெல்பனில் சில கலை, இலக்கிய , கதம்ப நிகழ்ச்சிகளை நாம் நடத்தியவேளையில், ரேணுகா அவற்றில் கலந்துகொள்வதற்கு ஆர்வம் காண்பிக்கவில்லை. வடபுலத்தில் நீடித்த போர் அநர்த்தங்களுக்குள் பாசத்தை பொழிந்த தந்தையையும் அரவணைத்து நேசம் காண்பித்த தாத்தாவையும் எதிர்பாராதவகையில் அமைதிபேண வந்த இந்திய இராணுத்திடம் பறிகொடுத்திருந்த துயரத்திலிருந்து மீளமுடியாமல், தானுண்டு தன்பாடுண்டு என இருந்த ரேணுகாவிடமிருந்த சொல்லாத சேதிகள் கவிதைத்தொகுப்பையும் ஏற்கனவே அவர் இலங்கை இதழ்களில் எழுதியிருந்த ஆக்கங்களின் நறுக்குகளையும் வாங்கிப்படித்தேன்.
இலக்கிய சகோதரி அருண். விஜயராணியும் ரேணுகாவை எமது இலக்கிய வட்டத்திற்குள் அழைக்க முயன்றார். அவ்வாறு அவரது மனவலியை போக்குவதற்கு நாம் முயன்றோம். சிறிய புன்னகையுடன் அமைதியாக விடைகொடுத்து அனுப்பும் ரேணுகா, ஒருநாள் வீரகேசரியில் வெளியான எனது புதர்க்காடுகளில் சிறுகதையை ஆங்கிலத்தில் மொழிபெயர்த்து தந்தபோது ஆச்சரியமுற்றேன். அதனை Bush Walk என்ற தலைப்பில் எழுதியிருந்தார். கொழும்பில் The Island பத்திரிகையில் நண்பர் கே. எஸ். சிவகுமாரன் அதனை வெளியிட்டார்.
மெல்பனில் வெளியுலகத்தொடர்புகளை வெகுவாக குறைத்துக்கொண்டிருந்த ரேணுகா, தொடர்ந்து புத்தகங்கள் வாசித்து இலங்கையில் விட்டுவிட்டு வந்த வாசிப்பு அனுபவத்தை தொடர்ந்தார். எனினும் பொது நிகழ்ச்சிகளை தவிர்த்தார். ஆசிரியராகவும் எழுத்தாளராகவும், மொழிபெயர்ப்பாளராகவும், கவிஞராகவும் அறியப்பட்ட இவரிடமிருந்த வாசிப்பு அனுபவத்தை பொதுவெளியில் பகிரச்செய்வதற்கு பகீரதப்பிரயத்தனங்களை நானும் அருண். விஜயராணியும் மேற்கொள்ளநேர்ந்தது.
எமக்கு அது தவிப்பாகவும் இருந்தது. அவ்வப்போது நாம் சந்தித்துப்பேசிக்கொண்டாலும், இழப்பின் வலியிலிருந்து ரேணுகாவை மீட்பதையே நாம் குறிக்கோளாகக்கொண்டிருந்தோம். ரேணுகாவையும் அருண். விஜயராணியையும் இணைத்து நான் ஒரு சிறுகதை எழுதினேன். அதன்பெயர் வேலி. இச்சிறுகதை வீரகேசரியில் வெளியானது. அதன் பக்கத்தை உரும்பராயிலிருந்து ரேணுகாவின் அம்மா திருமதி ஞானசக்தி நவரட்ணம் தபாலில் அனுப்பியிருந்தார். இவரும் கலை ஆர்வம் மிக்கவர். தையல் கலையில் பல நுட்பங்களை கையாள்பவர்.
இவரும் ரேணுகாவின் தம்பி அரவிந்தனும் காலப்போக்கில் அவுஸ்திரேலியாவுக்கு வந்து இணைந்துகொண்டனர். அதன்பின்னர் ரேணுகா இரண்டு குழந்தைகளுக்கும் தாயாகியதுடன், இலக்கியக்குழந்தைகளையும் தனது வாசிப்பு அனுபவத்திலிருந்து பிரசவித்தார். காலம் ஓரிடத்தில் தரித்து நிற்பதில்லை. அது சக்கரம் பூட்டாமலேயே விரைந்து ஓடிவிடும். ரேணுகாவுக்கு மெல்பனில் Telstar இல் வேலைவாய்ப்பு கிடைத்தது. கணவர் தனஸ்கந்தா பொறியியலாளர். இருவரும் குழந்தைகளும் கலை, இலக்கிய பொது நிகழ்வுகளுக்கு வரத்தொடங்கினர். பிள்ளைகள் பாரதி பள்ளியில் தமிழும் கற்றார்கள். இசையும் பயின்றார்கள். ரேணுகா எமது எழுத்தாளர் விழா நிகழ்ச்சிகள் மற்றும் நூல் வெளியீட்டு நிகழ்வுகளில் உரையாற்றத்தொடங்கினார். நூல்களை நயப்புரை செய்து இதழ்களில் எழுதினார். இலங்கையில் வீரகேசரி, தினகரன், மல்லிகை ஆகியனவற்றிலும் அவுஸ்திரேலியா வெளியீடுகளான வானவில் கவிதைத் தொகுதி, பூமராங் மலர் ஆகியனவற்றிலும் இவரது படைப்புகள் வெளிவந்தன.
ஈழத்து இலக்கிய உலகில் ஒரு காலத்தில் மிகுந்த கவனிப்புக்குள்ளாகியிருந்தவரான முனியப்பதாசன் என்ற எழுத்தாளரின் கதைகளை மல்லிகைப்பந்தல் வெளியிட்டபோது அதற்கு அனுசரணையாக இருந்தவர் அருண். விஜயராணி. யாழ். முனியப்பரின் பக்தரான முனியப்பதாசனின் இயற்பெயர் தாமோதரம்பிள்ளை சண்முகநாதன். 1944 பிறந்திருக்கும் இவர் அற்பாயுளில் மறைந்தார். சித்தம்போக்கு சிவன்போக்கு என வாழ்ந்திருக்கும் முனியப்பதாசன் தனது இறுதிக்காலத்தில் தான் எழுதிய கையெழுத்துப்பிரதிகளையெல்லாம் எரித்து சாம்பாலாக்கிவிட்டு உரக்கச்சிரித்தவர். வாழ்க்கையின் தேடுதலை நோக்கிய ஒருவகை ஆன்மீகப்பயணத்திலிருந்து உள்ளொளி தேடிய அவரது கதைகளை வாசித்து புரிந்துகொள்வதும் சற்றுச்சிரமம். முனியப்பதாசன் கதைகள் தொகுதி அவரது மறைவின் பின்னர் நீண்டகாலம் கடந்துதான வெளிவந்தது. செங்கை ஆழியான் அதனைத் தொகுத்திருந்தார். எமது மெல்பன் தமிழ் எழுத்தாளர் விழாவில் அதனை அறிமுகப்படுத்தியபோது, தனது வாசிப்பு அனுபவத்தை எந்தச்சிக்கலுமின்றி நயமாக எடுத்துரைத்தவர் ரேணுகா தனஸ்கந்தா. பின்னர் அவரது வாசிப்பு அனுபவப்பிரதி மல்லிகையிலும் வெளியானது.
கதைகள், கவிதைகள், கட்டுரைகள் எழுதியிருந்தபோதிலும் இன்றும் தன்னை ஒரு எழுத்தாளராக அடையாளப்படுத்திக்கொள்ள விரும்பாத ரேணுகா, இன்றும் தன்னை ஒரு வாசகராகவே கருதிக்கொண்டிருப்பவர். எதிர்பாரதவகையில் அருண். விஜயராணி மறைந்து ஒரு மாதம் நிறைவடைந்தவேளையில் நிகழ்ந்த நினைவரங்கில், நினைவுகளை விட்டுச்சென்ற தனது உறவினரும் பிரியமான இலக்கிய சிநேகிதியுமான அருண். விஜயராணி பற்றி உருக்கமான நினைவுரையாற்றினார் ரேணுகா தனஸ்கந்தா.
ஆங்கில இலக்கியங்களிலும் ஆர்வம்கொண்டவரான ரேணுகாவிடம் சமீபத்தில் நீங்கள் படிக்கும் படைப்புகள் என்ன? எனக்கேட்டபோது, அவுஸ்திரேலிய ஆதிக்குடிகளின் இலக்கியங்கள் எனச் சொன்னார். சுமார் 30 வருடங்களுக்கு முன்னர், ஈடுசெய்யமுடியாத இழப்பின் வலிகளை சுமந்துகொண்டு புலம்பெயர்ந்து வந்த ரேணுகாவின் வாசிப்பு அனுபவத்திற்கு ஆதர்சமாக இருந்தவர்கள் அவரது தந்தையாரும் தாத்தாவும்தான். அன்று அமைதி காக்கவந்த மேஜர்கள், இன்று வரலாறுகள் எழுதுவார்கள்! அந்த வரலாறுகளுக்குள் மறைந்திருக்கும் பெறுமதிமிக்க மகத்தான மானுடர்களைப்பற்றி யார்தான் எழுதுவது? எதிர்பாராத நிகழ்வுகளின் சங்கமம்தான் வாழ்க்கை! அத்தகைய இந்த வாழ்க்கையில் எல்லாம் கடந்துபோகும்! தேர்ந்த வாசகர் ரேணுகா தனஸ்கந்தவுக்கு எமது வாழ்த்துக்கள்.
•This e-mail address is being protected from spambots. You need JavaScript enabled to view it•
•<• •Prev• | •Next• •>• |
---|