கந்தையா நடேசன் என்ற இயற்பெயர்கொண்டவரும், இலக்கிய ஊடகத்துறைகளில் தெணியான் என அழைக்கப்பட்டவருமான ஈழத்தின் மூத்த இலக்கிய ஆளுமையின் பிறந்த தினம் இன்றாகும். வடமராட்சியில் பொலிகண்டியில் கந்தையா - சின்னம்மா தம்பதியருக்கு 06-01-1942 இல் பிறந்த நடேசு, இலக்கிய உலகில் பிரவேசித்ததும் தெணியான் என்ற பெயரில் எழுதத்தொடங்கியவர். தான் கல்வி கற்ற கரவெட்டி தேவரையாளி இந்துக்கல்லூரியிலேயே நீண்டகாலம் ஆசிரியராக பணியாற்றி ஓய்வுபெற்றுள்ள தெணியான் மற்றும் ஒரு மூத்த எழுத்தாளர் கே. டானியலின் வாரிசு எனவும் வர்ணிக்கப்பட்டவர். நூறுக்கும் மேற்பட்ட சிறுகதைகள், பல நாவல்கள் உட்பட சில விமர்சனக்கட்டுரைத் தொகுதிகளையும் தமிழ் இலக்கியத்திற்கு வரவாக்கியிருக்கும் தெணியானின் பாதுகாப்பு என்ற சிறுகதை யாழ்ப்பாணம் ஜீவநதியில் வெளிவந்தது. இச்சிறுகதை தற்போது இலங்கைப்பாடசாலைகளில் 11 ஆம் ஆண்டு மாணவர்களுக்கான தமிழ் பாட நூலிலும் சேர்த்துக்கொள்ளப்பட்டிருக்கிறது.
யாழ்ப்பாணத்திலிருந்து முன்னர் வெளியான விவேகி இதழில் 1964 இல் தெணியானின் முதல் சிறுகதை பிணைப்பு வெளியாகியது. அதனைத்தொடர்ந்து, மல்லிகை, ஞானம், யாழ். முரசொலி, வீரகேசரி, தினக்குரல் உட்பட பல இதழ்களில் அயராமல் தொடர்ந்து எழுதியிருப்பவர். இவருடைய கழுகுகள் (நாவல்) சொத்து (சிறுகதைத்தொகுதி) குடிமைகள் (நாவல்) என்பன தமிழ்நாட்டில் பிரபல பிரசுர நிறுவனங்களான நர்மதா பதிப்பகம், என்.சி.பி.எச் மற்றும் கருப்பு பிரதிகள் வெளியீடுகளின் ஊடாக தமிழக வாசகர்களையும் சென்றடைந்துள்ளன.
இலங்கை முற்போக்கு எழுத்தாளர் சங்கம் வாழ்ந்த காலத்தில் யாழ்ப்பாணக்கிளையின் செயலாளராகவும் இயங்கியிருக்கும் தெணியான், தமது படைப்புகளுக்காக இலங்கை தேசிய சாகித்திய விருது, வடகிழக்கு மகாண அமைச்சுப்பரிசு, யாழ். இலக்கிய வட்டத்தின் பரிசு, இலங்கை தேசிய கலை இலக்கியப்பேரவை - தமிழ்நாடு சுபமங்களா இதழ் ஆகியன இணைந்து வழங்கிய பரிசு, மற்றும் தமிழ்நாடு கு. சின்னப்பபாரதி அறக்கட்டளை விருது, கொடகே விருது, கலாபூஷணம் விருது ஆகியனவற்றுடன் இலங்கை அரசின் உயர் இலக்கிய கௌரவமான சாகித்திய ரத்னா விருதும் பெற்றிருப்பவர். இலங்கை வானொலிக்காக முன்னர் பல நாடகங்களும் எழுதியிருக்கும் தெணியான், பேராசிரியர் கா. சிவத்தம்பி, மல்லிகை ஜீவா ஆகியோர் பற்றியும் விரிவான நூல்களை வரவாக்கியிருப்பவர். தான் கல்வி கற்ற, ஆசிரியப்பணியாற்றிய தேவரையாளி இந்துக்கல்லூரியின் இரண்டு வெளியீடுகள் மற்றும், மல்லிகை ஜீவாவின் ஈழத்திலிருந்து ஓர் இலக்கியக்குரல் நூலினதும் தொகுப்பாசிரியருமாவார்.
கனடாவில் வதியும் தெணியானின் தம்பி க. நவம் நடத்திய நான்காவது பரிமாணம் இதழின் சார்பில் வெளியான மரக்கொக்கு நாவல் சிங்களத்திலும் மொழிபெயர்க்கப்பட்டுள்ளது.
இலங்கையில் வடபிரதேசத்தில் அடிநிலை மக்களுக்காக ஓயாது குரல்கொடுப்பதற்காக எழுதிவந்திருக்கும் தெணியான், அம்மக்களின் ஆத்மாவை வெளிப்படுத்தும் அதிகமான சிறுகதைகளையும் எழுதியிருப்பவர். அதேசமயம் ஆலயங்களில் பூசகர்களாக பணியாற்றும் அந்தணர்களின் உரிமைகளுக்காகவும் எழுதியவர். அம்மக்களின் துயரம்தோய்ந்த கதையை பொற்சிறையில் வாடும் புனிதர்கள் என்ற தலைப்பில் நாவலாக்கியிருக்கும் தெணியான், ஏதனம் என்ற நாவலையும் வித்தியாசமாக படைத்திருப்பவர். ஏனம் என்ற சொல் பேச்சுவழக்கில் ஏதனம் என்றே மக்கள் மத்தியில் சொல்லாடலாக இருந்துவருகிறது எனத்தெரிவித்துள்ளதுடன், இல்லங்கள் தோறும் நித்திய பயன்பாட்டுக்குரியதாக புழங்கும் பாத்திரமே ஏதனம். இங்கு பானங்கள் அருந்தக்கொடுக்கும் பாத்திரம் ஏதனம் எனக்குறிப்பிடப்படுகிறது. பேச்சுமொழியில் மாத்திரமன்றி, செம்மொழி வழக்கிலும் தமிழில் இடம்பெற்றுள்ள ஒரு சொல்" என்றும் பதிவுசெய்துள்ளார்.
தமிழ் நாவல் இலக்கியத்தில் தெணியானின் ஏதனம் கவனத்திற்குரிய படைப்பாகும். இதனை இலங்கையில் பூபாலசிங்கம் புத்தகசாலை வெளியிட்டுள்ளது. 1964 முதல் அரைநூற்றாண்டுக்கும் மேலாக அயராமல் இலக்கியப்பிரதிகளை எழுதிவரும் தெணியானுக்கு கடந்த 2003 ஆம் ஆண்டில் நடந்த மணிவிழாக்காலத்தில், பல இலக்கிய ஆளுமைகள் இவர் பற்றி எழுதியிருக்கும் மணிவிழா சிறப்பு நூலும் வெளிவந்திருக்கிறது. இவரது பல்துறை இலக்கிய ஆற்றல்களை மதிப்பீடு செய்யும் " தெணியானின் படைப்புகள் மீதான பார்வை" - " தெணியானின் ஜீவநதிச்சிறுகதைகள் " ஆகியனவற்றை யாழ். ஜீவநதி கடந்த 2013 இல் இவரது பிறந்த தினத்திலேயே விழா எடுத்து வெளியிட்டமை குறிப்பிடத்தகுந்தது.
இலங்கையில் மல்லிகை, ஞானம், கனடா காலம் முதலான கலை, இலக்கிய இதழ்கள் தெணியானை அட்டைப்பட அதிதியாகவும் பாராட்டி கௌரவித்துள்ளன.
இன்று 77 வயதையடைந்துள்ள எங்கள் மூத்த இலக்கிய சகோதரன் தெணியான், இதுவரையில் எந்த ஒரு வருடத்திலும் தமது பிறந்த நாளைக் கொண்டாடவில்லை என்பதும் ஒரு முக்கிய செய்தி.
அதனால் நாம் அவரை நினைத்து அவரது 77 ஆவது பிறந்த தினத்தை கொண்டாடுவோம்.
Letchumanan Murugapoopathy <
•This e-mail address is being protected from spambots. You need JavaScript enabled to view it•
•<• •Prev• | •Next• •>• |
---|