1963 இல் ஆனந்தவிகடனில் ‘சிறுமை கண்டு பொங்குவாய்’ என்ற முத்திரைக் கதையுடன் அறிமுகமானவர் எழுத்தாளர் குந்தவை. இவரது இயற்பெயர் சடாட்சரதேவி. யுத்தத்தின் கோரமுகங்களைத் தரிசித்து தொண்டைமானாற்றை விட்டு அகலாது தனது தளர்ந்த வயதிலும் தனியாக வாழ்ந்து வருபவர். ஈழத்தில் பெயர் குறிப்பிடக்கூடிய மூத்த பெண் எழுத்தாளர்களில் ஒருவர். இன்றுவரையும் எழுதி வருபவர். இவரின் “யோகம் இருக்கிறது”, “ஆறாத காயங்கள்” ஆகிய இரண்டு சிறுகதைத்தொகுப்புகள் இதுவரை வெளிவந்துள்ளன.
குந்தவையின் சிறுகதைகள் யதார்த்த வாழ்வின் பதிவுகள். ஈழத்து மாந்தர்களின் வாழ்வின் இருண்ட பக்கங்களையும் தன்னைப் பாதித்த கதைகளையும் மண்ணின் பண்பாட்டோடு அழகாக வெளிப்படுத்துபவை. இவரின் கதைகளில் வரும் காட்சிச் சித்திரிப்புக்கள் வாசகரை கதைகளோடு கட்டிப்போடக்கூடியவை.
இவர் எழுதிய “பாதுகை” என்ற சிறுகதை பற்றி இச்சிறுகட்டுரையில் குறிப்பிடலாம். இறுதி யுத்தத்தின் பின்னர் காணாமலாக்கப்பட்ட பல பிள்ளைகளின் கதைகளில் ஒரு கதையைச் சொல்வது. அவளின் ஒரேயொரு மகன் அவளின் கண்முன்னேயே காணாமல் ஆக்கப்பட்டவன். மகன் வருவான் என எதிர்பார்த்து, தாய் எதிர்கொள்ளும் வேதனைகளும் உள்ளக்குமுறல்களும் உணர்வுபூர்வமாக இச்சிறுகதையில் பதிவாகியுள்ளது.
“வாசலில் நின்று அம்மா அம்மா என்று கூப்பிட்டான் தயாளன். உள்ளே ஒருவருமிருப்பதாகத் தெரியவில்லை. முன் எப்பொழுதாவது இந்த வீட்டின் முன்நின்று இப்பிடி அன்னியன்போல் கூப்பிட்டிருப்பானா என யோசித்தான். “ரமணா” என கூப்பிட்டுக் கொண்டு அட்டகாசமாக உள்ளே நுழைந்துதான் பழக்கம். மீண்டும் கூப்பிட்டான். வெளியிலிருந்து வீட்டைச் சுற்றிக்கொண்டு யாரோ வருவது தெரிந்தது. ரமணனின் அம்மாதான். பாதியாய் இளைத்திருந்தாள். முன்கற்றைத் தலைமயிர் வெளுத்து காற்றில் அலைந்தது. கன்னம் ஒட்டிப்போய் இருந்தது. நடுவே சுருக்கங்கள்.”
இவ்வாறு ரமணின் தாய் இச்சிறுகதையில் அறிமுகப்படுத்தப்படுகிறார். நீண்ட காலத்திற்குப் பின்னர் தனது நண்பன் ரமணனின் நிலை தெரிந்திருந்தும், அவனின் தாயாரிடம் ஒரு முறை வரும் சக நண்பனாகிய தயாளனின் பார்வையூடாகவே இச்சிறுகதை நகர்த்தப்படுகிறது. அப்போது ரமணனோடு படித்த, பழகிய உறவாடிய காலங்கள் எல்லாவற்றையும் அவன் மீட்டுப் பார்க்கிறான். அந்தத் தாயாரோடு பல விடயங்களைப் பரிமாறிக் கொள்கிறான்.
“ஆம்பிளை செக் பொயிண்டிலிருந்து என்ரை பிள்ளை வெளியில வந்தவன் தம்பி. நான் கண்டனான் அதுக்குள்ளை என்னை பொம்பிளை செக் பொயின்ரிலை கூப்பிட்டாங்கள். நான் உள்ளை போயிட்டன். திரும்பி வந்து பார்த்தா என்ரை பிள்ளையைக் காணேல்ல. வெளியில நிண்ட தாங்கள் பிடிக்கேல்லை எண்டான். பஸ் வந்து தங்களை வவுனியாவிற்கு ஏற்றிச் செல்லுமெனக் காத்திருந்த சனத்துக்குள்ள நான் ‘விசரி’ மாதிரிச் திரிஞ்சன். என்ரை பிள்ளையைக் கண்டீங்களோ? என்று கேட்டு ஒரு நாளோ இரண்டு நாளோ? பசி தாகம் ஒண்டுமே தெரியேல்ல”
மகனைப் பிரிந்த வேதனைகளும் வார்த்தைகளும் தயாளனையும் வாட்டுகிறது. நாளை புறப்படும்போது ரமணனின் நினைவாக ஏதாவது ஒரு பொருளை எடுத்துச்செல்லலாம் என எண்ணுகிறான். தற்செயலாக அவனின் செருப்பு கண்களுக்குப் புலப்படுகிறது. அதனை எடுத்துச்செல்ல மனம் விரும்புகிறது.
“முன் கதவைச் சாத்தப்போன வேளை கதவிற்குப் பின்னால் அந்தச் செருப்புகளை அவன் கண்டான். அவை ரமணனின் செருப்புகள். அவற்றை கிளிநொச்சியில் ரமணன் வாங்கியபொழுது அவனும் கூட இருந்தான். அவை ரமணனுக்குப் பிடித்திருந்தன. நல்ல லெதரில் சிறிய வேலைப்பாடுகளோடு கூடிய செருப்புகள். அவற்றை அதிகம் ரமணன் அணிவதில்லை. வெளியூர்களுக்குப் பாடசாலைக்குப் போகும் வேளையில் அணிவான். மற்றும்படி கறுத்த ரப்பர் பாட்டா செருப்புத்தான் போட்டிருப்பான்.
தயாளன் அந்தச் செருப்புகளைப் பார்த்தவாறு நிற்பதைக் கண்ட ரமணன் தாய் அருகில் வந்தான். “இது ரமணனின் செருப்பு தம்பி. இதைத்தான் ரமணன் எண்டு வைச்சுக் கொண்டிருக்கிறம். ஒரே ஆறுதல் இதுதான். இதை பக்கத்தில வைச்சுப் போட்டுப் படுத்தாத்தான் வயித்துக்கொதி அடங்கி நித்திரை வரும்” என்றாள்.
அரிக்கேன் லாம்புத் திரியைக் குறைத்து வைத்துவிட்டு பாயை அவள் சுவரோரம் இழுத்துப் போடுவது தெரிந்தது. பின் போய் அந்தச் செருப்புகளை கையிலெடுத்துக் கொண்டு திரும்பி வந்தாள்.
இடுப்புச் சேலையைத் தளர்த்தி கொய்யகச் சுருக்குகளை வெளியே எடுத்து அவற்றில் செருப்புகளைப் பொதித்துச் சுருட்டி உள் பாவாடைக்குள் செருகி வயிற்றுக்கு நேரே இறக்கினாள் அவற்றை அணைத்துப் பிடித்தபடி படுத்துக் கொண்டாள்.
தயாளன் கண்களை நன்கு மூடிக் கொண்டான். மூடிய இமையோரத்தில் கண்ணீர் தேங்கியது.”
இவ்வாறாக, குந்தவையின் ‘பாதுகை’ சிறுகதை மகனை இழந்துபோன ஒரு தாயின் மனவேதனைகளையும் ஏக்கங்களையும் உணர்வுபூர்வமாகப் பதிவுசெய்கிறது. இதனாற்தான் வெங்கட் சாமிநாதன் ‘தொடரும் உரையாடல்’ என்ற கட்டுரையில் “குந்தவையின் அடங்கிய குரலும் அமைதியும் நிதானமும் விசேஷமானவை. அவரது எழுத்தும் அலங்காரங்களோ உரத்த குரலோ ஆவேச உணர்வோ அற்றது. ஆனால் மிகுந்த தேர்ச்சி பெற்ற எழுத்து.” எனக் குறிப்பிடுகிறார்.
இச்சிறுகதையை அடிப்படையாகக் கொண்டு நண்பர் மதிசுதா ‘பாதுகை’ என்ற குறும்படத்தை எடுத்துள்ளார். அக்குறும்படத்தில் குறித்த உணர்பூர்வமான இக்காட்சி அழகாகப் பதிவுசெய்யப்பட்டுள்ளது. இச்சிறுகதை சிங்களத்திலும் மொழிபெயர்ப்புக்குத் தேர்வாகியுள்ளது என்பதும் மேலதிக தகவல்கள் ஆகும்.
subramaniam kuneswaran <
•This e-mail address is being protected from spambots. You need JavaScript enabled to view it•
>
•<• •Prev• | •Next• •>• |
---|