[இந்நாவல் கனடாவிலிருந்து வெளிவந்த 'தாயகம்' பத்திரிகையில் தொண்ணூறுகளின் ஆரம்பத்தில் 'அருச்சுனனின் தேடலும் அகலிகையின் காதலும்' என்னும் பெயரில் தொடராக வெளிவந்த நாவல். பின்னர் குமரன் பப்ளிஷர்ஸ் வெளியீடாக வந்த 'மண்ணின் குரல்' தொகுப்பிலும் வெளிவந்திருந்தது. இப்பொழுது ஒரு பதிவுக்காக, ஒரு சில திருத்தங்களுடன் 'பதிவுகள்' இணைய இதழில் வெளியாகின்றது. மேலும் இந்நாவலுக்குத் தற்போதுள்ள பெயரிலும் பார்க்க 'புதிய பாதை' என்னும் தலைப்பு இருப்பதே நன்றாக எனக்குத் தோன்றுகின்றது. அதன் விளைவாக இதன் பெயர் 'புதிய பாதை' என்று மாற்றப்படுகின்றது. இந்நாவல் அப்போதிருந்த அரசியற் சூழலில் புதிய பாதையை வற்புறுத்துகின்றது. நாவலின் பிரதான பெண் பாத்திரமான 'டீச்சர்' பாத்திரத்தினூடு சமூகத்தில் நிலவி வந்த ஓரபட்சமான நம்பிக்கைகளுக்கு எதிராகவும் குரல் கொடுப்பதோடு புதிய பாதையை நாடி நிற்கிறது. எனவேதான் 'புதிய பாதை' என்னும் பெயருடன் நாவல் இனி அழைக்கப்படும். எதிர்காலத்தில் மீண்டும் நூலாக வெளிவருவதாகவிருந்தால் 'புதிய பாதை' என்னும் பெயரிலேயே வெளிவரும்.-பதிவுகள்]
அத்தியாயம் ஏழு: 'டீச்சரி'ன் கடந்த காலம்!
அன்று அவனுக்கு நிறைய வேலைகளிருந்தன. "மான் பவரிற்கு போனான். வேலை ஏதாவது கிடைக்குமா என நோட்டம் விட்டான். 'போஸ்ட் ஒபிஸ்"க்கு சென்றான். வீட்டிற்கு அனுப்ப வேண்டிய கடிதங்களை போஸ்ட் பண்ணினான். பெல் கனடாவிலிருந்து றெட் நோட்டிஸ் வந்திருந்தது. ஜெராட் ஸ்குயரில் உள்ள பெல் கனடாவில் போய் பணம் கட்டினான். இவ்விதமாக நாள் முழுக்க பரபரப்பாக இருந்தான். நேற்று இரவு மாமா மகனும் மற்றவர்களும் கூறியது ஞாபகத்திற்கு வந்தது. அவளது கடந்த கால வாழ்வு பற்றி அவனுக்கு அக்கறை இல்லை. அதைப் பற்றி அவளிடம் கேட்கவும் அவனுக்கு விருப்பமில்லை. ஆனால் சுற்றியிருக்கிறவர்கள் சும்மா இருக்கப் போவதில்லையே. அவன் பிரச்சனைகளைப் பற்றி கவலைப்படவில்லை. ஏற்கனவே ஓராயிரம் பிரச்சனைகள் அவனைச் சூழ்ந்திருந்தன. ஆனால் அவனால் அவளுக்கு பிரச்சனைகள் வருவதை அவன் விரும்பவில்லை. அவளது சூழ்நிலைகள் புரியாமல் அவள் வாழ்வில் குறுக்கிடுவதையும் மனம் ஏற்கவில்லை.
இதற்கு ஒரே வழி? அவளிடமே எல்லாவற்றையமே கேட்டு விட வேண்டியது தான். இவ்விதம் எண்ணினான். பிரச்சனையில் கனம் குறைந்தது போல் உணர்ந்தான். சில வேளைகளில் பிடிக்காதவற்றையும் செய்வதன் மூலம் பிரச்சனைகள் தீரும் வாய்ப்புகள் ஏற்படுகின்றன. இவ்விதம் தனக்குள் எண்ணிக் கொண்டான். இதுவும் அத்தகைய சந்தர்ப்பங்களில் ஒன்றே".
இவ்விதமான முடிவுகளுடன் அன்று 'பார்க்கில் அவன் காத்திருந்தான். வழமையாக ஆறு மணிக்கெல்லாம் வந்து விடுபவள் நெடுநேரமாகியும் வரவில்லை. இப்படித்தான் ஒரு விசயத்தை வேண்டுமென்ற ஆவலுடன் செய்யும்போதுதான் தடங்கல்கள் ஏமாற்றங்கள் சம்பவித்து விடுகின்றன. ஏனைய சமயங்களில் தாராளமாக கிடைக்கும் பொருள் தேவைப்படும் சமயங்களில் தான் காணாமல் போய் விடுகிறது என்று எண்ணிக் கொண்டான். அன்று அவளைச் சந்திக்க வேண்டுமென ஒரு வித எதிர்பார்ப்புடன், ஆவலுடன் காத்திருந்தான். ஆனால் அவளோ வரவில்லை. நெடுநேரம் தனிமையில் அமர்ந்திருந்து விட்டு 'அப்பாட்மென்ட் திரும்பும் போது அவளிருப்பிடம் செல்வோமா' என ஒரு கணம் நினைத்தான். மறுகணமே இவ்விதமாகவொருவித நினைவு கூட எழுந்தது. "அவள் வருவதாயிருந்தால் கட்டாயம் வந்திருப்பாள். அவள் வராமலிருப்பதற்கு ஏதாவது தவிர்க்கக் முடியாத காரணம் இருக்க வேண்டும். இந்நிலையில் அவளைத் தொந்தரவு செய்வது நல்லதல்ல"
ஆனால் அவள் அன்று மட்டுமல்ல தொடர்ந்தும் வராமலே இருந்தாள். அதுதான் அவனுக்கு புதிராகப் பட்டது. வியப்பைத் தந்தது. எங்கேயோ ஏதோ ஒன்று பிழைத்திருப்பது புரிந்தது. தொடர்ந்தும் இப்படியே தொடர்வது சரியாகப்படவில்லை. அன்று அவளிடம் செல்வதாக தீர்மானித்தான். இதே சமயம் பிறந்த மண்ணிலோ மோதல்கள் உக்கிரமடைந்திருந்தன. குடாநாட்டைச் சுற்றி வர அரசபடைகள் சுற்றி வளைத்திருந்தன. இம்முறை நிலைமை மக்களுக்குப் பாதகமாக இருப்பதாகவே பட்டது. தமக்குள் ஒற்றுமையின்மை, அயல்நாட்டின் ஆதரவின்மை. எதிர்காலம் பயங்கரமாகத் தெரிந்தது. நடப்பதைக் கண்டு கொள்ள வேண்டியது தானென எண்ணினான். அம்மாவின், தங்கச்சியின் ஞாபகம் எழுந்தது. ஒன்றாக இருந்த காலங்களை எண்ணி நெஞ்சு சிலிர்த்துக் கொண்டது. கூடவே அவளது குடும்ப நிலைமையையும் நினைத்துப் பார்த்தான். அவர்களுக்கு ஏதாவது நடந்திருக்கலாம். போலவும் பட்டது. எல்லாவற்றுக்கும் அவளைப் பார்ப்பதே சரியானதாகவும் தோன்றியது.
வழக்கத்தை விட சிறிது நேரத்திற்குள்ளாகவே அவன் 'பார்க்கை விட்டுப் புறப்பட்டான். அவளது 'அப்பாட்மென்ட் பில்டிங்லொபியில் கதவு திறந்தே கிடந்தது. வசதியாகப் போயிற்று. அவளது அப்பாட்மென்ட் கதவை தட்டி விட்டுக் காத்திருந்தான்.
கதவில் பொருத்தியிருந்த சிறு கண்ணாடியினூடு அவள் பார்ப்பதை உணர்ந்தான். அவனுக்கு நம்பவே முடியவில்லை. அவளா இவள்? ஆடலும் பாடலும் துள்ளலுமாக கலகலத்த டீச்சரா இவள்? இவளுக்கு என்ன நடந்தது? மனம் குழம்பியது. வாடிப்போய் துவண்டிருந்தாள்.
"என்ன சிறுவா, பார்த்துக் கொண்டே நிற்கிறாய்? அவள் இயல்பானவளாக காட்டிக் கொள்ள முனைந்தாள். முயற்சியில் வெற்றி கிட்டவில்லை. அவனுக்கும் தொண்டை இறுகிக் கிடந்தது.
"சரி, சரி உள்ளுக்கு வாயேன் டீச்சரின் சொற்களுக்கு கட்டுப்பட்டு உள்ளே சென்றான். கதவைச் சாத்தி விட்டு அவளும் திரும்பினாள்.
'எனிதிங் ரு ட்ரிங், வட் டு யூ லைக்'
'எனிதிங். ஆனா அவசரமில்லை’
அவள் கேத்தலை பிளக் பண்ணி விட்டு வந்து அவனருகில் அமர்ந்தாள். மெளனமாக இருந்தாள். அதிசயமாக இருந்தது. பேச்சை அவன் தான் முதலில் ஆரம்பித்தான்.
'டீச்சர் உனக்கென்ன நடந்தது. உன் பேர்சனாலிற்றிக்கும் இந்த தோற்றத்துக்கும். கொஞ்சம் கூடப் பொருத்தமேயில்லை. என்ன நடந்தது?
அவள் இதற்கு உடனடியாக பதில் கூறவில்லை. மெளனமாக இருந்தாள். 'இவளுக்கும் காரணத்தைக் கூற விருப்பமில்லை" எனப் பட்டது.
'டீச்சர் உனக்கு விருப்பமில்லை என்றால் பரவாயில்லை. சொல்லத் தேவையில்லை'
அது ஒரு லோங் கொம்பிளிக்கேற்றட் ஸ்டோரி. அதுதான் எப்படிச் சொல்லலாமெண்டு யோசித்துப் பார்த்தன்'
சிறிது நேரம் மெளனமாக இருந்தாள்.
இதற்கிடையில் கேத்தல் கொதித்ததற்கு அடையாளமாக விசில் அடித்தது.
"ஊர்க் கோப்பித்தூள் மல்லி போட்டு அரைச்சது கிடக்கு. அதையே போட்டிட்டு வாறன். ஒகே'
'ஒகே' இவனும் தலையசைத்தான். மல்லி மணக்க மணக்க வேர்க்கொம்பு போட்ட ஊர்க்கோப்பி கொண்டு வந்து தந்து விட்டு அருகிலமர்ந்தாள். கோப்பியைச் சுவைத்தபடி அவன் கதை கேட்க தயாரானான்.
'சிறுவா, அன்றைக்கு என்னைப் பற்றி கொஞ்சம் சொன்னனான். அது கொஞ்சம் தான். இன்னும் நிறையக் கிடக்கு. அதைச் சொல்லி ஏன் குழப்புவான் என்று பார்க்கிறன்"
'பரவாயில்லை டீச்சர், சொல்வதால் உன் மனப்பாரம் குறையலாமில்லையா'
நான் உனக்கு ஒன்றை இன்னமும் சொல்லேலை. ஐ ஆம் எ மரீட் வுமன். பட் மை மரிஜ் இஸ் எ டோட்டல் பெயிலியர் சிறுவா. அன்றைக்கு சந்திக்கும்போது நீ கேட்டாயே எப்படி நீ இங்க வந்தனி என்று சொல்றன் கேள். எனக்கு கல்யாணம் எண்பத்தி மூன்று கலவரம் நடந்த சமயத்தில் நடந்தது. உடனேயே என் புருஷன் இங்க வந்திட்டார். அவருக்கு லாண்டட் கிடைச்சு, ஸ்பொன்சர் பண்ணி, நாலு வருசத்துக்கு முன்னாலதான் இங்க வந்தனான். அன்றைக்கு உன்னர மச்சானை எனக்கு தெரியும் என்று சொன்னன் ஞாபகமிருக்கா"
இவன் தலையசைத்தான்.
'உன்னர மச்சான் என்ரை ஹஸ்பண்ட ஃபிரண்ட்தான். அதான் தெரியும் எண்டனான். என்ர புருஷன் எனக்கு எல்லாம் வாங்கிப் போட்டார். மாடு மாதிரி உழைச்சார். என்னிலை உயிரையே வைச்சிருந்தார். ஆனால் அவர் அளவுக்கு மீறி உழைச்சார். அதிகமாக உழைப்பிலேயே நேரத்தைச் செலவழிச்சார். அந்தச் சமயத்தில அவரோட அடிக்கடி அவரின்ரை ரிலேட்டிவ் ஒருத்தனும் வருவான். செயினும் சென்ட்டுமாக ஸ்டைலாக உடுப்புப் போட்டுக் கொண்டு அக்டர் மாதிரி சிவப்பாயிருப்பான். அவரோட அடிக்கடி வந்து கொண்டிருப்பவன். அவரில்லாத சமயங்களிலும் வரத் தொடங்கினான். வரும் போது அடிக்கடி வீடியோ கொண்டு வருவான். வந்த புதுசு எனக்கும் வேற வேலையில்லை. போரடிச்சுக் கொண்டிருந்த எனக்கும் பொழுது போய் கொண்டிருந்தது. ஒருநாள் அவன் ஒரு வீடியோ கொண்டு வந்திருந்தான். பரபரப்பாக இருந்தான். வெளிறியிருந்தான். 'என்ன காய்ச்சலா" என்று கேட்டன். 'இல்லை தலையிடி கொஞ்ச நேரம் படுத்திருக்கிறன். நீங்கள் படத்தைப் பாருங்கள்' என்று விட்டு அறைக்குள் படுத்து விட்டான். சமயலை முடித்து விட்டு ஆறுதலாக படம் பார்க்கத் தொடங்கினேன். நல்ல படம். சிவகுமாருடைய. கிராமத்துப்படம்.
அவள் கூறிக் கொண்டே போனாள். இவனுக்கு கதையில் சுவாரஸ்யம் இருப்பதாகப் பட்டது. இதைப்போய் இன்ட்ரஸ்டிங் இல்லாத கதை என்று கூறினாளே என்று கருதினான்.
"ஆனா படம் அரைவாசியில இருந்தாப் போல மாறியது. இடையில் ஒரு செக்ஸ் படம் ஒன்றைப் பதித்திருந்தார்கள். எனக்கு ஒரே ஷொக்காக இருந்தது. வீடியோவை ஒஃப் பண்ணுவம் என்று ஆனால் செக்ஸ் இருக்குதே. அது ஒரு பயங்கரமான பொறி. கவனமாயிருக்கா விட்டால் கவ்வி விடும் தனிமை. இளமை. வீடியோவில் போய் கொண்டிருந்த சீன்ஸ் எல்லாமே சேர்ந்து. அவன் சந்தர்ப்பத்தை சரியாகப் பாவித்து விட்டான். அவன் ஏற்கனவே திட்டமிட்டுத் தான் வந்திருந்தான். நான் இலகுவாகச் சிக்கி விட்டேன். அவனோ அந்தச் சம்பவத்தை வைத்து தொடர்ந்தும் வெருட்டியபடி வந்து போய் கொண்டிருந்தான். என் புருஷனை நினைச்சாத் தான் கவலையாக கிடந்தது. எண்பத்தி மூன்றிலை நாட்டை விட்டு வந்ததில் இருந்து எனக்கு துரோகம் செய்யவில்லை. அவர் மாடு மாதிரி உழைச்சது கூட எனக்காக என் குடும்பத்துக்காக தான். இந்த நிலையில் என் மனச்சாட்சியே என்னைக் கொல்லத் தொடங்கியது. என்ன செய்யலாமென்று யோசித்துப் பார்த்தன். கடைசியில் முடிவு செய்தன்."
சிறிது நேரம் மெளனமாயிருந்தாள். பெருமூச்சொன்றை விட்டாள். தொடர்ந்தாள்.
'சந்தர்ப்ப சூழ்நிலையால் ஒருக்கா தவறிப் போனன். என்ரை புருஷனுக்கு துரோகம் செய்திட்டன். அதற்காக நிலைமைய நீடிக்க விட மனசு விரும்பேலை. ஒருநாள் அவரிட்ட நடந்ததெல்லாம் சொன்னன். அவரால் நம்பவே முடியவில்லை. அடுத்த நாள் அவரும் உன்ரை மச்சானும் ஒளிந்து நின்றார்கள். வழக்கம் பேரில் அவரில்லாத நேரம் பார்த்து அவன் வந்தான். இரண்டு பேருமாய் சேர்ந்து அவனை அடிஅடியென்று அடித்துப் போட்டினம். ஆனா அதற்குப் பிறகு என்ரை புருஷனோட சேர்ந்து வாழ்றது எனக்கு சரியாகப் படவில்லை. அவரிட்ட மன்னிப்புக் கேட்டன். அவர் மன்னித்து விட்டதாக சொன்னார். ஆனா என்னால் ஏற்க முடியவில்லை. அவருக்கு நான் செய்த துரோகம் தான் என்னை இழுத்தடிச்சது. உன்ரை மச்சானும் அவருக்காகப் பேசிப் பார்த்தார். நான் அவருக்கு ஏற்றவளில்லை என்று மறுத்துப் போட்டன். கடைசியில அவரும் விவாகரத்துக்க சம்மதித்துப் போட்டார். இதுதான் என்ரை பழைய கதை"
அவள் அமைதியாக ஜன்னலினூடு வெளியே நோக்கினாள்.
'நீ என்னைப் பற்றி என்ன நினைக்கிறாய். கெட்டவள், ‘பிச்" என்று நினைக்கிறியா"
அவனுக்கு அவளைப் பார்க்க பரிதாபமாக இருந்தது. தவறு செய்வது மனித சுபாவம். தொடர்ந்து செய்வது தான் தவறு.
உணர்ந்து திருந்துவது தான் பெருமை' என்றான்.
‘ஒருக்காத் தவறின பிறகும் திரும்பவும் அந்த தவறையே செய்து கொண்டிருந்த என்னைப் பற்றி என்ன நினைக்கிறாய்"
'டீச்சர், சந்தர்ப்ப சூழ்நிலையை வைச்சு உன்னை அவன் பிளாக்மெயில் பண்ணியிருக்கிறான். நீ உணர்ந்து உண்மையை உன்ரை புருஷனிட்ட சொன்னாய் பார். யூ ஆர் எ கிரேட் வுமன் அதற்கு பிறகும் உன்னை மன்னிச்சு ஏற்க விரும்பினாரே உன்ரை புருஷன். ஹீ இஸ் த கிரேட்டஸ்ட். ஆனால் நீ ஒரு பிழை விட்டிட்டாய்'.
"என்ன சொல்றாய்"
'உன்ரை புருஷன் விவாகரத்து செய்தது சரியில்லை. எங்கட சமூகத்தில புருஷன்மார் தவறிப்போய் வந்தால் மனிசிமார் ஏற்கினம். புருஷன்மாரும் அடங்கிப் போகினம். ஆன்ா மனுசிமார் தவறிப் போய் வந்தால் புருஷன்மார் ஏற்பதேயில்லை. அப்படி அருமையாக உன்ரை புருஷனைப் போல சில பேர் ஏற்க ரெடியாக இருந்தாலோ உங்களை மாதிரி பெட்டையளாலை உங்கட அடிமை மனோபாவத்தாலை சேர்ந்து வாழ முடிவதில்லை. இந்த நிலை மாற வேண்டும். 'பிலோசபிக்கலாக நீ சொல்றது சரியாகத் தான் இருக்கு. ஆனா பிரக்டிக்கலா. அடங்கி அடங்கி. வாழ்ந்து வந்ததாலோ என்னவோ எங்களாலை துணிஞ்சு நிற்க முடியவில்லையோ என்னவோ'
'அது சரி இதுக்கும் ஒரு கிழமையாக பார்க்கிற்கு வராததற்கும் என்ன காரணம்? 'ம். அது இன்னொரு கதை. கெட் ரெடி' என்றவள் குடித்த கோப்பி கப்களை எடுத்துச் சென்று கழுவி வைத்துவிட்டு வந்து அவனருகில் அமர்ந்தாள். அவன் இன்னொரு கதை கேட்க தயாரானான்.
அத்தியாயம் எட்டு! பிரச்சினைக்குரிய தீர்வு என்ன?
உச்சரின் கடந்த கால வாழ்வு இவனுக்கு அவள்மேல் ஒருவித இரக்கத்தை ஏற்படுத்தியது. அவள் தன் தவறுகளை ஒப்புக்கொண்ட விதம் அவள்மேல் ஒரு வித மதிப்பை ஏற்படுத்தியது. "பெரும்பாலான மனிதர்கள்" தவறுகளை ஒத்துக்கொள்வதில்லை. அதற்குப் பதிலாக அதற்கான காரணங்களை மற்றவர்களின் தலைமேல் சுமத்தித் தப்பிவிட முனைவார்கள். ஆனால் இவள் வித்தியாசமானவள். தான் தவறியதை தைரியமாக வெட்கப்படாமல் ஒப்புக்கொள்கின்றாள். ஆனால் இவளிடத்திலும் தாழ்வு மனப்பான்மை நிறைந்து கிடக்கின்றது. குற்ற உணர்வால் கணவனுடன் இணைந்து வாழ இவளால் இயலவில்லை. ஆனால் பெரும்பாலானவர்கள் இவளது தைரியத்தை திறந்த மனத்தை என்னைப்போல் ஏற்றுக்கொள்ள மாட்டார்கள். காமப்பிசாசு என்றுதான் சொல்வார்கள். புருஷனுக்கு துரோகம் பண்ணியவளென்று தான் காறித்துப்புவார்கள். இவ்விதமான நினைவுகள் நெஞ்சில் பரவின.
‘என்ன சிறுவா. ரெடியா இல்லை.என்ரை கதையைக் கேட்க அலுப்பாயிருக்கோ"
அவனருகே வந்தமர்ந்தவள் கேட்டாள். இல்லை டீச்சர்.உன்ரை நிலையை யோசித்துப் பார்த்தன்'
‘என்ரை நிலையை யோசித்துப் பார்க்கிறதுக்கு என்னயிருக்கு" அவள் சிரித்தாள். அந்த சிரிப்பிற்குப் பின்னால் வெகு ஆழத்தே ஒருவித சோகம் இருப்பதாக இவனுக்குப் பட்டது. அவளது கேள்விக்கு எவ்வித பதிலையும் கூறாதவனாக அவளை நோக்கினான். இவள் உண்மையிலேயே அழகானவள் தான். ஆனால் இந்த அழகு நெஞ்சைத் தட்டி எழுப்பிக் கிளர்ச்சியூட்டி விடும் அழகல்ல. புனிதமான, லச்சுமிகரமான, அமைதியான இனிமையான அழகு, ஆராதிக்க வைக்கின்ற அழகு. எனக்கு இவ்விதம் தோன்றுகின்றது இவளது அழகு. இவளை இந்த நிலைக்குத் தள்ளி விட்டவனின் கண்களிற்கோ கிளர்ச்சியூட்டுவதாக இருந்திருக்கிறது.
சிறிதுநேரம் மெளனமாக இருந்துவிட்டு ஜன்னலினூடு வெளியே நோக்கினாள். மீண்டும் இவனை நோக்கினாள். அவளது கண்கள் கலங்கியிருப்பதுபோல் இவனுக்குப் பட்டது.
‘என்ன டீச்சர். உனக்கு விருப்பமில்லையென்றால் பரவாயில்லை. உனக்குப் படுகிற நேரம் சொல்லலாம்" என்றான்.
'சிறுவா, இவ்வளவு நாளும் எனக்கு என்ற பிரச்சனைகளைச் சொல்லி பாரத்தை இறக்கிறதற்கென்று சினேகிதிகள் என்று யாருமே இல்லையென்ற கவலையை உன்ரை பிரண்ஷிப் மாத்திப்போட்டுது. என்ரை கதையை உனக்குச் சொல்லுறதிலே ஒருவித ரிலீவ்' எனக்கு சிறிது நேரம் மெளனமாகயிருந்தாள். தொடர்ந்தாள்.
'போன திங்கள் உன்னை மீட் பண்ண வேண்டுமென்று அவசரமாய் வந்து கொண்டிருந்து வழியில் தான் அவரைச் சந்தித்தனான்'
'யாரை டீச்சர்"
'அவர் தான்.என்ரை எக்ஸ் ஹஸ்பண்டைத்தான் சொல்லுறன். கனநாளைக்கு பிறகு அன்றைக்குத்தான் அவரைச் சந்தித்தனான். நல்லா மெலிஞ்சு வயக்கெட்டுப்போனார். முந்தியென்றால் எப்பவும் வெள்ளைக்காரன் மாதிரி கிளினாகத் தான் இருப்பார். எனக்கு ஒரே 'சொக்கா'யிருந்திச்சு. உடுப்பெல்லாம் கசங்கி தாடியும் மீசையும் நிறைஞ்சு என்ன மாதிரியிருந்த மனுசன் எப்படி மாறிப்போட்டார்’
'டீச்சர் அதற்கு நீயும் முக்கிய காரணமாயிருக்கலாம். நீ மட்டும் அவரோட சேர்ந்து வாழ்ந்திருந்தால் இப்படி அவர் மாறியிருக்கத்தேவையில்லை’
'சிறுவா.என்னை மாதிரி அன்லக்கி பேர்சன். யாருமேயில்லை.சனியன் பிடிச்ச மாதிரி..அன்றைக்கு மட்டும் என்ரை 'மைன்டைக் கொண்ட்ரோல்' பண்ணி இருந்திருந்தால் எனக்கு இந்தப் பிரச்சினை வந்திருக்காதல்லவா...ஒரு சின்ன இன்சிடென்ற் அவ்வளவு தூரம் எங்கட வாழ்க்கையை மாத்திப்போட்டுது பார்த்தியா"
'டீச்சர், வீணாய் உன்ரை வாழ்க்கையை வீணாக்கிக்கொண்டிருக்கிறாய். இந்த விசயத்தில் உனக்கு நல்ல "பொசிட்டிங் திங்கிங்' வேண்டும் இவ்விதம் கூறினான். அதே சமயம் தன் வாழ்வை நினைத்துப் பார்த்தான். தானும் இவளைப்போல் தன் வாழ்க்கையை இன்னுமொரு விதத்தில் பாழாக்கிக்கொண்டிருக்கிறேனா? இவ்விதம் எண்ணினான். "ஆனால் இவள் வாழ்க்கைக்கும் என் வாழ்க்கைக்கும் நிறைய வித்தியாசமிருக்கு. இவள் சூழ்நிலைகள் காரணமாக உணர்ச்சிகள் கண்ணை மறைத்த ஒரு சந்தர்ப்பத்தில் தவறினாள். வருந்துகிறாள். ஆனால் நான்? கண்ணுக்கு முன்னால் நடந்த அநியாயத்தை கண்டும் காணதவனாக இல்லை அந்த அநியாயத்திற்கு துணை போனவனாக அல்லவா இருந்திருந்தேன். என் அறிவிற்குப் பிழை என்று தெரிந்தும் வேடிக்கை பார்த்துவிட்டேன்'
"கனநாளைக்குப் பிறகு அவரை இந்தக்கோலத்தில் பார்த்ததும் கையும் காலும் ஓடவில்லை. பேச்சும் வரவில்லை. அவருக்கும் இப்படித்தான்'
'டீச்சர் இதிலையிலிருந்து என்ன தெரியுது தெரியுமா?
"என்ன தெரியுதாம் சொல்லன்'
'நீ இன்னமும் அவரை உள்ளுக்குள்ள விரும்புறாய். அவரும் உன்னை இன்னமும் நினைச்சுக்கொண்டு தானிருக்கிறார். ஆனால் உன்னை அவரோட சேரவிடாமல் உன்ரை இன்பீரியரிட்டி கொம்பிளக்ஸ் தான் தடுக்குது.
"யேஸ். நீ சொல்றது சரிதான். ஸ்டில் ஐ லவ் ஹிம் சோ மச்.கடைசியில் அவர் என்னை இன்வைட் பண்ணினார் ரெஸ்ரோறன்டிக்கு.நானும் ஒமென்றன். இவரும் அன்றைக்கு நல்லா குடிச்சுவிட்டார். நிற்க முடியாத அளவுக்கு ‘புல்லோட்" அளவு தெரியாத அளவிற்கு நல்லா ஏத்திவிட்டார். கடைசியில் ரக்ஸி பிடிச்சுக்கொண்டு தான் வந்து சேர்ந்தம். குடிவெறியிலை இவர் ரக்ஸிக்காரனோடயும் கொழுவிப்போட்டார். நல்ல வேளையாக ரக்ஸிக்காரன் எங்கட பெடியன் தான். 'அக்கா உங்கட மூச்சிக்காக பேசாமலிருக்கிறன்' என்றவன் காசு கூட குறைத்துத்தான் கேட்டான். நான் தான் சரியில்லை என்று ரண்டு டோலர் "டிப்பும் போட்டுக் கொடுத்தன். அன்றைக்கு இவர் நல்ல வெறியிலயிருந்ததிலை இவரை என்ர அப்பாட்மென்ட்டிலேயே மறிச்சுப் போட்டன். போன உடனேயே இவர் பிரண்டு போனார். அவரை ஒரு மாதிரி கட்டிலிலை கிடத்திப் போர்த்திவிட்டு வெளியிலை நிலத்திலை, என்னட்டை இருந்த 'எக்ஸ்ட்ரா ஸ்லிப்பிங் பாக்' போட்டு படுத்தனான். உடனேயே நித்திரையாய் போட்டன். ஒரே களைப்பு'
இவள் கதை சொல்லும் விதம் சுவாரஷ்யமானது. இவள் கதைகள் எழுதினால் நன்றாக இருக்கும். இவ்விதம் சிந்தித்தான். ‘ஒரு மோர்னிங் மூன்று மணியிருக்கும். யாரோ என் மேலையிருப்பது போல் தெரிஞ்சது. முழிச்சுப் பார்த்தால் அவர். என்னால் நம்பவே முடியவில்லை. அவரை தள்ளிப் பார்த்தேன். மனுஷன்ரை பிடி "ஸ்ரோங்'காயிருந்திச்சு. நான் அவரைத் தள்ளினது அவருக்குப் பிடிக்கேலை. 'என்னடி பெரிய பத்தினி வேசம் போடுறாய். நான் உன்ரை புருஷன் தானே' என்றார். சிறுவா. ஐ குடின்ற் பிலிவ் ஹிஸ் வேர்ட்ஸ். சே. அவரை எவ்வளவு பெரிசாக மதிச்சனான். அவரே இப்படி என்னோட நடந்ததோட இப்படிக் கேட்டதை நினைச்சா அவரே இப்படிச் சொன்னதும் எனக்கு சரியான ஆத்திரம் வந்திட்டுது. தள்ளிப் பார்த்தன். முடியேலை.. பக்கத்திலை கிடந்த 'கப்பாலை எடுத்து அடிச்சுப்போட்டன். அவருக்கு நெத்தியிலை காயம் அதற்குப் பிறகு தான் அவர் பிடியை விட்டார். ஐ ஆம் சொரி என்றார். உடனேயே போய் விட்டார். இந்தக் கிழமை முழுக்க என்ரை மனசே சரியில்லை. அதுதான் வெளியிலை வெளிக் கிடவேயில்லை. ஆனா அவர் போனபிறகு நல்லா யோசிச்சுப் பார்த்தன். அவரை நினைக்க நினைக்க தான் கவலையாயிருக்கு. என்னாலேதானே அவருக்கு இந்த நிலைமை."
'இவள் நிலை மிகவும் பரிதாபத்திற்குரியது. ஆனால் இவளை விட இவளது கணவனின் நிலை தான் பரிதாபத்திற்குரியது.
இவள் செய்த துரோகத்தால் ஏற்கனவே சீர்குலைந்து கிடக்கும் வாழ்க்கையை இழுத்துச்செல்லவே கஷ்டப்படுகிறான். இந்நிலையில் இவளை மறக்க முடியாமல் வேறு அந்தரப்படுகிறான். அவனும் உணர்ச்சிகள் உள்ள மனிதன் தானே. கனநாளைக்குப்பிறகு இவளைச் சந்தித்திருக்கிறான். உணர்ச்சி வசப்பட்டிருக்கிறான். ஆனால் இவள் அவனுக்கு செய்ததை விட அவன் செய்தது பெரிய விசயமேயில்லை. துரோகமேயில்லை. இங்குள்ள சட்டதிட்டங்களின்படி அவன் செய்தது பிழைதான். ஆனால் மனச்சாட்சியின்படி பார்க்கப் போனால் அவன் நிலை அனுதாபத்திற்குரியது' 'டீச்சர் நான் ஒன்று சொல்லுவன் கேட்கிறாயா?”
‘என்ன. என்ன சொல்லப்போறாய்.முதலிலை சொல்லு பார்ப்பம்"
'உங்கள் இரண்டு பேருடைய பிரச்சனைக்கும் சரியான வழி ஒன்றுதான்"
‘என்ன வழி
'பேசாமல் அவரோட சேர்ந்து வாழ்ந்து கொள். நீ அவருக்கு துரோகமிழைச்சாய், திருந்தி மன்னிப்புக் கேட்டாய். இப்ப அவரும் உன்னோட தவறாக நடக்க முயன்றிருக்கிறார். உணர்ந்து விட்டார். டீச்சர் நீ சொன்னாயே.செக்ஸ் ஃபீலிங்ஸ் பொல்லாத பொறியென்று.உண்மைதான். பார்த்தியா.இப்ப உன்ரை புருஷன் நடந்த முறையை. நீயிருந்த இடத்தில் இன்னொரு பெண், இருந்திருந்தாலும் அவர் இதைத்தான் செய்திருப்பார். நீ அன்றைக்கு உன்னை இழந்த மாதிரி அந்தப் பெண்ணும் இருந்திருந்தால்.நிச்சயம் உன்ரை புருசன் தவறித்தான் போயிருப்பார்.இல்லையா டீச்சர்.
'சிறுவா.நீ நல்லா ஆர்க்யூ பண்ணப்பழகிட்டாய். என்டாலும் நீ சொல்லுறதிலையும் விசயம் இருக்குத்தான். பாத்தியா.இதற்கு தான் நல்ல ஒரு ஃப்ரெண்டு இருக்க வேணுமெண்டிறது. என்ரை கதையை உனக்குச் சொன்னன். நீயும் உன்ரை அபிப்பிராயங்களைச் சொன்னாய். எனக்கும் மனசு லேசாயிருக்குது. சிறுவா. நான் இப்ப சந்தோசமாயிருக்கிறன். தாங்க் யூ போர் லிஸினிங்'
சிறிது நேரம் அவர்களிற்கிடையில் ஒருவித அமைதி நிலவியது. புறாக்கள் சில பல்கனியில் படபடத்தன. அவளே அமைதியைக் கலைத்தாள்.
'சிறுவா, அவரை நானொருக்கா சந்திக்கவேணும். நீ தான் ஹெல்ப் பண்ணவேண்டும்."
'டீச்சர், சொல்லன். முடிஞ்சதைச் செய்வேன்." 'அவரைச் சந்தித்திச்சு நீயொருக்கா நிலைமையை விளங்கப்படுத்த வேணும். எனக்கு அவரின்ரை முகத்திலை முழிச்சு பேச அந்தரமாயிருக்கு."
"டீச்சர், நீ எப்ப போகச் சொல்லுறயோ, என்ன செய்யச் சொல்லுறியோ, ஐ ஆம் ரெடி'
'சிறுவா.தாங்யூ சோ மச் போர் யுவர் கைன்ட்நெஸ் பட்.உன்னை என்ரை நல்ல 'பிரண்டாக நினைச்சு உன்னட்ட என்ரை கதையெல்லாம் சொல்லிப் போட்டன். அதே மாதிரி நீயும் உன்ரை கதையைக் கூறினாயென்றால் என்னால் முடிஞ்சதைச் செய்ய ரெடியாயிருக்கிறேன்"
இவள் இவ்விதம் கூறவும் அவன் சிறிது நேரமும் பதில் கூறாமல் சும்மாயிருந்தான். 'இவளது நிலைமைக்குக் காரணமென்ன' இந்த நாட்டுச் சூழ்நிலைகளும் ஒரு காரணமல்லவா.பொருளாதாரக் காரணங்களிற்காக இவளது புருஷன் வேலை வேலை என்று அலைஞ்சதும் இவளது நிலைமைக்கு ஒருவகையில் காரணம் தான். அந்நிய நாட்டில் அகதியாக, புதிய பொருளாதார சூழல்களிற்குள் அகப்பட்டு, மனிதத்துவத்தை இழந்து கொண்டிருப்பவர்களின் வாழ்க்கையில், கணவன் மனைவியருக்கு இடையில் சில வேளைகளில் ஏற்பட்டு விடும் பாதிப்பின் விளைவு இவளென்றால் உன்னதமானதொரு இலட்சியத்துக்காக உருவான போராட்டத்தில் உருவான சீர்குலைவுகளின் பாதிப்பின் ஒரு விளைவு நான். தற்போதைய சூழலில் எம்மவரின் போராட்டத்தில் தலைவிரித்த ஒழுங்கீனங்களினால் வீணாக்கப் பட்டவர்களின் பிரதிநிதியாக நான் இவ்விதமாக எண்ணிக் கொண்டான்.
"என்ன சிறுவா! என்ன பேசாமல் கிடக்கிறாய்"
'டீச்சர்' என்ர கதையை இன்னொரு சமயம் சொல்லுறன். உன்ரை கதை எங்கட ஆக்களின்ரை ஒரு சோணத்தைக் காட்டுதென்றால் என்ரை கதை இன்னொரு கோணம், கட்டாயம் உனக்குச் சொல்லுவன்'
இவ்விதம் கூறியவன் எழுந்து பல்கனிக்கு வந்தான். அவளும் கூட எழுந்து வந்தாள். இலேசான குளிர் காற்று நெஞ்சிற்கு இதமாக இருந்தது. இவ்வளவு நேரமும் சீரியஸான அவளது கதையைக் கேட்டுக்கொண்டிருந்ததில் அம்மிக் கிடந்த நெஞ்சிற்கு குளிர்காற்றும் விரிந்திருந்த வெளியுலகும் இதமாக இருந்தன. அவளது நிலையும் அதுதான். இன்னுமொருவரிடம் உள்ளத்து உணர்வுகளை கொட்டுவதும் நெஞ்சிற்கு இதமாக இருக்கும். இயற்கையை ரசிப்பதிலும் நெஞ்சின் பாரங்கள் குறைந்து சுகமாயிருக்கும் இவ்விதம் தனக்குள்ளாகவே கூறிக்கொண்டாள்.
'சிறுவா..இப்படியே பார்த்துக் கொண்டிரு. நான் போய்ச் சாப்பாட்டிற்கு ரெடி பண்ணுறன். புட்டும் குறுமாவும் செய்யப் போறன். உனக்கு ஒகேயா.அல்லது வேறெதாவது."
"புட்டு தின்று கனநாளாச்சு. ஓகே டீச்சர்" என்றான். புட்டும் குறுமாவும் யாழ்ப்பாணம் ஐந்து சந்திக்கு அருகாமையில் கிடந்த "மொக்கங் கபே'யை, ஆசாத்' கடையை பள்ளி நண்பர்களில் ஒருவனான முபாரக்கை நினைவிற்கு கொண்டு வந்தது. ஆனால் இன்றைக்கு யாழ்ப்பாணத்திலை ஒரு முஸ்லிம் இல்லை" என்ற உண்மையும் நெஞ்சில் படம் விரித்தது. ஒருவித வேதனையில் நெஞ்சு வலித்தது.
அத்தியாயம் ஒன்பது.: உள் முரண்பாடுகள்!
அவள் இன்னமும் சமையலில் மூழ்கியிருந்தாள். இவன் ஏதாவது உதவி செய்ய விரும்பினான். அவள் 'ஒரு டென்மினிற்சிலை எல்லாம் ரெடியாயிடும். நீ ஒன்றுக்கும் கவலைப்படாதை' என்று மறுத்துவிட்டாள். இவன் பழையபடி சிந்தனைகள் வளையம் பின்ன பல்கனிக்கு வந்துவிட்டான். எண்ணங்கள் மீண்டும் 'முபாரக்'கின்மேல் தாவியது. இவன் மூலமாகத்தான் 'முபாரக்கின் குடும்பத்தினரும் இவன் குடும்பத்தினரும் நெருங்கிப் பழகத் தொடங்கியிருந்தனர். இவர்களுக்கிடையில் மதம் ஒரு பிரச்சனையாக என்றைக்கும் இருந்ததில்லை. அரசியல் கருத்துக்களில் சிற்சில வேறுபாடுகள் இருந்தன. இருந்தபோதும் ஒவ்வொருத்தனுக்கும் அதைப்பற்றி தீர்மானிக்க உரிமை உண்டு என்பதே இருவரதும் நிலையாக இருந்தது. சின்ன வயதிலிருந்தே இவங்களை நம்பக்கூடாது. தொப்பி பிரட்டிகள்' என்ற கருத்துக்களை இறுகப்பற்றியிருந்த ஒரு சமுதாய அமைப்பிலிருந்து உருவாகியிருந்த இவனுக்கு முதல்முறையாக இன்னொரு சமூகத்தின் உணர்வுகளை அபிலாஷைகளை கனவுகளை புரிந்துகொள்வதற்கு உதவியது முபாரக்கின் நட்பு. அதே சமயம் அவனது அமைப்பில் இணைந்திருந்த முஸ்லிம் நண்பர்களின் ஞாபகமும் தோன்றியது. அதில் ஒருவன் எழுபதுகளிலேயே இயக்கத்தில் தன்னைப் பின்னிப் பிணைந்தவன். இயக்கத்திற்கு ஆட்கள் சேரவே அஞ்சிக் கொண்டிருந்த கால கட்டத்தில் சேர்ந்தவன். 'என்ன இருந்தாலும் அமிர்தலிங்கத்தின்ரை திறமை இவங்களுக்கு சரிப்பட்டு வருமா? இவங்களாவது ஆமியை எதிர்த்து வெல்வதாவது? இளங்கன்று பயமறியாது?’ என்று கள்ளையும் அடித்துக்கொண்டு ஊர்ப்பெரியவர்கள் அரசியல் பேசிக் கொண்டிருந்த காலத்தில் இயக்கத்திற்கு அதுவும் பல்கலைக்கழக மருத்துவ பீடத்திற்கு கிடைத்த அனுமதியையும் துச்சமாக்கி விட்டுப்போய் சேர்ந்தவன். அவனை எண்ணி அடிக்கடி இவன் வியந்ததுண்டு. அந்தக் காலம், அந்த உணர்வு, எதிர்பார்ப்பு எல்லாமே வெறுங்கனவாக இப்போது இவனுக்குப் படுகிறது. 'கனவு தான். அழகானதொரு கனவுதான். அமைப்பை அடியோடு மாற்றி விடும் ஆவேசத்தில் உருவான புரட்சிக் கனவுதான்' இவ்விதம் கூறிக்கொண்டான். ஆனால் இடையிலேயே அத்திவாரம் நொருக்கப்பட்ட மாளிகை. இலக்குத் தவறிவிட்ட பயணம். இதுபோல் தான் எமது போராட்டமும் குறிதவறி, இலக்கிழந்து செல்லும் நிலையில் மழுங்கிவிட்டதா" என்றும் தன்னையே கேட்டுக்கொண்டான்.
அன்றிரவு தன் அப்பாட்மென்ட்டுக்கு திரும்பும்போது அவன் மனதில் உறுதியான போக்கு நிரம்பி வழிந்தது. அவளது நினைவும் கூட எழுந்தது. இவளுடைய வாழ்க்கையைச் சீர் செய்ய என்னால் இயன்ற உதவியைக் கட்டாயம் செய்வேன். செய்யவேண்டும். ஒருவகையில் இவள் அனுதாபத்திற்குரியவள்"
அவன் தன் படுக்கையில் புரண்டபோது அடுத்த அறையில் மாமா மகன் ஆழ்ந்த தூக்கத்திலிருந்தான். அதற்கடையாளமாக அவன் பெரிதாக விட்டுக் கொண்டிருந்த குறட்டை ஒலி கூட அந்த இரவின் அமைதிக்கு ஒருவித இனிமையை சேர்த்துக் கொண்டிருந்தது.
இவனுக்கு மனம் உறுதியாக தெளிவாக ஒருவித நம்பிக்கையில் மூழ்கிக் கிடப்பதாகப் பட்டது. சிலவேளைகளில் இப்படித்தான் மனம் உற்சாகத்தால் பொங்கிவழிந்துவிடுகிறது. இச்சமயங்களில் நித்திரை தான் வரமாட்டேன் என்கிறது. எழுந்து குறிப்பேட்டை எடுத்து பக்கங்களை புரட்டினான். தன் கடந்த காலப் பாதிப்புகளின் விளைவாக இருந்த குறிப்பேட்டின் பக்கங்களை மீண்டும் வாசிப்பது நெஞ்சுக்கு இதமாக இருந்தது. ஒருவிதமான சந்தோசகரமான உணர்வுகளையும் தந்தது. அதில் ஒரு பக்கத்தில் இவ்வாறு எழுதப்பட்டிருந்தது.
"எங்கே போகிறோம்?” நாங்கள் எங்கே போகின்றோம்? எதை நோக்கி எதை அடைய இந்த ஆவேசம் எங்களால் எங்களுக்குள்ளேயே ஒன்றாக, ஒற்றுமையாக செயல்பட முடியவில்லை. தொலைநோக்கில் எமது சமுதாய நலன்களை சிந்திக்க முடியவில்லை ஏன்? சமுதாயப் பிரச்சனைகளைச் சரியாக இனம் கண்டு ஆராய முடியவில்லை. ஆனால் பிரச்சனைகளின் அடியை ஆராயாமல் தண்டனை கொடுப்பதில் மட்டும் நாங்கள் மகாசமர்த்தர்கள். சமுதாயத்தில் நிலவிய பொருளாதாரச் சூழல்கள் காரணமாக கொள்ளையடித்தவனுக்கு, விபசாரம் செய்தவளுக்கு நாங்கள் கொடுத்த தண்டனைகள். அவர்களை இந்நிலைக்கு தள்ளிவிட்ட சமூகத்தின் பிரதிநிதிகள் தானே நாங்கள்.சமூகத்தை குற்றம் சொல்லத்தான் மனம் வருமா? அவனது ஞாபகம்தான் எழுகிறது. அவன் இறுதியாக கூறிய வசனங்கள் இன்னமும் பசுமையாக பதிந்திருக்கின்றன. 'அண்ணை மாரே, என்னைக் கொள்ளையன் என்றீங்கள். சமூக விரோதி என்றீங்கள். போராட்டச் சூழலில் களையெடுக்கப்பட வேண்டியவன் என்றீங்கள். ஆனா ஒன்றை மட்டும் மறந்திட்டீங்கள். நீங்கள் ஒருத்தருமே என்னை இந்த நிலைக்கு தள்ளிவிட்ட இந்த சமூகத்தை பற்றி கொஞ்சம் கூட சிந்திக்க மறந்துவிட்டீங்களே. இதே இந்த வேடிக்கை பார்த்துக்கொண்டு நிற்கின்ற சமூகத்தாலை ஒதுக்கி வைக்கப்பட்ட சமூகமொன்றில் தான் நான் பிறந்தவன். படிக்க வசதியில்லை. கூலி வேலை செய்து காலம் பாழாய் போச்சு, ஆமிக்காரன் சுட்டு அப்பாவும் செத்துப்போனார். அம்மாட வருத்தம் ஆதரவற்ற தங்கை மார், வாழ முடியவில்லை. வேலையில்லை. வயிற்றுப் பசிக்காக களவெடுத்தன். இப்படிப் பசிக்காக களவெடுத்து வாழுறதை விட சாகிறதே மேல்.ஆனால் அம்மா தங்கச்சிமாரை நினைச்சாத்தான் கவலையாயிருக்கு. படைச்ச ஆண்டவனே வழியைக் காட்டட்டும். ஆனால் அண்ணைமாரே, நான் களவெடுத்ததற்கு காரணமே இந்த சமூகம் தானே. அந்த சமூக அமைப்பை மாற்றத்தானே நீங்களெல்லாம் போராடிறீங்க. அப்படியென்றா, என்னை இந்த நிலைக்கு ஆளாக்கிய இந்த சமுதாயமல்லவா முதலாவது குற்றவாளி.
அந்த இளைஞனின் சொற்கள் இப்பொழுதுதான் கேட்பது போல் காதில் கேட்கின்றன. அவன் கூறியதில் தான் எவ்வளவு உண்மை இருக்கின்றது. வேடிக்கை பார்த்து நின்ற கூட்டமோ ஆர்ப்பரித்து வரவேற்றது. நானோ.மனிதத்துவம் வெகு அற்பமாக, இலகுவாக சிதைக்கப்படுவதை வேடிக்கை பார்த்தபடி நின்றுவிட்டேன். அந்தச் சமயத்தில் அந்தத் தண்டனை சரியென்பதுபோல் வேடிக்கை பார்த்துவிட்டேன். ‘கடமையைச் செய் பலனை எதிர்பாராதே" எதற்கும் இருக்கவே இருக்கிறது பகவத் கீதை, அநீதிக்கெதிரான போருக்கு ஆதரவளிக்கிறதென்று தான் பேர். ஆனால் நடக்கிற ஒவ்வொரு அநீதிக்கும் அதை நடத்துவதற்கு ஆதரவாய் இருப்பதும் இந்த கீதையல்லவா? எதற்கெடுத்தாலும் கடமையைச் செய். பலனை எதிர்பாராதே"
சமுதாய அமைப்பையே மாற்றிவிடப்போவதாக, வறுமை ஏற்றத் தாழ்வுகளை அழித்தொழிக்கப் போவதாக சூளுரைத்த அதே சமயம் எங்கள் நன்மைக்காக, எங்கள் வளர்ச்சிக்காக, வட்டிப்பணத்தில் லஞ்சப்பணத்தில் வெளிநாட்டுப் பணத்தில் ஊர்நிலைமை புரியாது வாழ்ந்தவனுக்கு வக்காலத்து வாங்கினோம். வறுமையால் திருடியவனை கம்பத் திலேத்தினோம். அவன் மனிதனில்லையா? அவனுக்கு வாழ உரிமையில்லையா? அவனது அடிப்படை உரிமைகளை மறுதலிக்கின்ற எம்மால் எவ்விதம் அவற்றுக்காகப் போராட முடியும்? எங்களுக்கு எங்கள் மேலேயே நம்பிக்கை வைக்க முடியவில்லை. எங்களை நம்ப முடியாத எம்மால் எவ்விதம் மற்றவர்களை நம்ப முடியும்? முதலில் நாங்கள் எங்களைச் சுத்திகரிக்க வேண்டும். தவறுகளை ஒப்புக்கொள்ளவேண்டும். எமக்கிடையில் ஒற்றுமையை ஏற்படுத்தவேண்டும். மக்களின் பிரச்சனைகளை அவர்கள் எந்தப் பிரிவினைச் சேர்ந்தவர்களாயினும் எந்த நிலையிலிருந்தாலும் புரிந்துகொள்ள முயலவேண்டும். புரிந்து செயற்படவேண்டும்."
இவ்விதம் குறிப்பேட்டில் எழுதப்பட்டிருந்தது. இன்றைக்கு நானோ இங்கு தப்பி வந்துவிட்டேன். ஆனால் நடந்த அநியாயங்களுக்கு நானுமல்லவா துணையாக இருந்துவிட்டேன். எத்தனை உயிர்களின் இழப்பிற்கு நானும் ஒருவகையில் காரணமாயிருந்துவிட்டேன். போராட ஆவேசத்துடன் புறப்பட்ட நான், நடைபெற்ற அநீதிகளுக்கு ஒருவகையில் பொறுப்பாக இருந்த நான், இன்று நாட்டை விட்டு எதற்காக ஓடிவந்தேன்? என் உயிரைக் காத்துக் கொள்ளவா? நான் எவ்வளவு பெரிய சுயநலவாதி. பண்ணிய பாவத்துக்கு பரிகாரம் செய்யவில்லை. பாதுகாப்பாக பறந்து வந்துவிட்டேனா?
இவ்விதமான நினைவுகளில் சிறிதுநேரம் மூழ்கியிருந்தான். டெலிபோன் மணி அடித்தது. இந்நேரத்தில் யாராயிருக்கும்?
ஏதாவது லோங் டிஸ்டன்ஸ் கோலோ "ஹலோ"
.சிறிது நேரம் எதிர்த்தரப்பில் மெளனம் நிலவியது. இவன் தொடர்ந்ததும் "ஹலோ, ஹலோ" என்றான்.
மீண்டும் மெளனம் அதனைத் தொடர்ந்து ஒருவன் கரகரத்த குரலில் தள்ளாடினான்.
'டேய். எங்களையெல்லாம் ஏமாத்தலாமெண்டு நினைக்கிறியாடா. இங்க வாறதுக்கு உங்களுக்கு எல்லாம் என்ன தகுதியடா? உங்கட உயிரைக் காப்பாற்ற மட்டும் இங்கே ஓடி வருவீங்கள். ஆனா மற்றவன்ரை மண்டேலை போடேக்கை மட்டும் கவலையே படமாட்டீங்கள். அப்படித்தானே'
எதிர்த்தரப்பில் பேசியவன் நன்கு குடித்திருந்தான். ஆத்திரத்தில் அவன் நடுங்குவதை இவன் உணர்ந்தான். "யாராயிருக்கும் எதிர்த்தரப்பில் போனை வைத்துவிட்டான்.
இவன் மனதில் ஒருவித அமைதி பரவியது. போனில் பேசியவன் இவன்மேல் குற்றம் சாட்டியது இவனது குற்றஉணர்வில் சிறுபகுதியைக் குறைத்தது. 'அவன் சொன்னதில் தப்பென்ன? உண்மைதானே யன்னலினூடு தொலைவில் கறுத்து விரிந்திருந்த வானத்தில் எரிநட்சத்திரமொன்று கோடு கிழித்தது. பொலிஸ் காரொன்று 'சைரன் அலறலுடன் விரைவது தொலைவில் கேட்டது.
மீண்டும் நண்பனின் ஞாபகமும் தோன்றியது. அவன் கூட சித்திரவதைப்பட்டுத் தான் முடிந்ததாக கேள்விப்பட்டிருந்தான். ஒன்றாய் படுத்து ஒன்றாய் திரிந்து வாழ்ந்தவனை அவனுடன் திரிந்தவனே சித்திரவதை செய்து சாய்க்க முடியுமென்றால். இவ்விதம் செய்ய எவ்விதம் முடிகிறது. நாங்கள் உண்மையில் ஆறறிவுள்ள மனிதர்கள் தானோ? அல்லது மனிதப் போர்வையில் உலவுகின்ற மிருகங்கள் தானோ? மிருகங்கள் கூட இவ்விதம் தவிர்க்க முடியாத காரணங்களுக்காக முட்டி மோதிக் கொள்வதில்லையே..அற்ப காரணங்களுக்காக நாங்கள் போடும் சண்டைகளோ..?
அச்சமயம் பாரதியின் பாடல்களில் ஒன்று நினைவுக்கு வந்தது.
"கொஞ்சமோ பிரிவினைகள் ஒரு கோடியென்றால் அது பெரிதாகுமோ? ஐந்து தலைப்பாம்பென்பான் அப்பர் ஆறுதலையென்று மகன் சொல்லிவிட்டால். நெஞ்சு பிரிந்திடுவார் பின்பு நெடுநாள் இருவரும் பகைத்திருப்பார்.
பாரதி கூறியது உண்மைதான். அற்ப காரணங்களுக்காக ஏராளமாய் சண்டை போடத் தயங்காத ஒரு சமூகத்தில் உருவானதால் தானோ என்னவோ எம்மாலும் ஒற்றுமையாக இயங்க முடியவில்லை போலும், அற்பக் காரணங்களிற்காக அடிபட்டு அழிவதை தடுக்க இயலவில்லை போலும். எம் சமூகத்தைப் பிடித்திருக்கின்ற மிகப் பயங்கரமான வியாதி இந்த ஒற்றுமையின்மை தான். அன்றும் சேரன், சோழன், பாண்டியன் என்று ஒருவரை ஒருவர் கொன்று குவித்து ஆட்சி பிடிப்பதில் அகமகிழ்ந்திருந்தோம். வீரமும் காதலும் தான் வாழ்வின் இரு கண்கள்போல் வாழ்ந்திருந்தோம். பழம்பெருமை பேசுவதும் முட்டி மோதுவதுமே இன்று எமக்கு வாழ்வாகிவிட்டது. எங்களைப்பற்றி பழம்பெருமை பேசுவதில் காலத்தைக் கழிக்கும் நாமோ ஒரு விசயத்தில் மட்டும் எங்களைப்பற்றி பெரிதாக பதறிக்கொள்வதில்லை. ஒற்றுமையாக தமிழன் வாழ முடியும் என்பதில் உலகின் மூத்த குடிக்கு நம்பிக்கையேயில்லை. பல்வேறு பிரிவுகளாக காரியமாற்றி காரியத்தைச் சிதைப்பதற்கு பதில் ஒரு அணியில் திரண்டு ஒரு குடையின் கீழ் இயங்குவதுதான் சரி என்று சிலர் கூறிக்கொள்கிறார்கள். ஆனாலும் உண்மை என்னவென்றால் யாருமே எமக்கிடையில் ஒற்றுமையை ஏற்படுத்துவதற்காக முயல்வதில்லை. அப்படி முயல்பவர்களும் சம்பந்தப்பட்டவர்களாக இல்லாமல் மூன்றாம் பேர்வழியாக இருந்து வருகிறார்கள் ஏன்? ஏன்? எம் சமூகத்தைப் பீடித்திருக்கின்ற இந்த ஒற்றுமையின்மை வியாதியின் அடிப்படைக் காரணம் என்ன? எமது சமூகத்தின் அடித்தளமே சுயநலம், போட்டி, பொறாமை, பேராசை, தற்பெருமை, ஆணவம்.இவற்றின் இத்தகைய குணங்களின் மேல் தான் கட்டப்பட்டிருக்கின்றது.
"எளிய சாதிகள் கும்பிட வந்திட்டாங்கள்"
"தொப்பி பிரட்டிகள். இவங்களை நம்பேலாது"
'எளிய வடக்கத்தியான்.வயிற்று வலியை நம்பினாலும் வடக்கத்தியானை நம்பக்கூடாது'
"மட்டக்களப்பான் மாந்திரிச்சுப்போடுவான். கவனம் பிள்ளை"
முதல் முதலில் நாங்கள் எங்கள் சமூகத்தை மாற்றவேண்டும். மாற்ற முடியுமா? நிச்சயமாக முடியும். சந்திரனின் மனிதனால் காலடி எடுத்து வைக்கமுடியும் என்றால் தமிழனால் தன்னை சுத்திகரிக்கவும் முடியும். எங்கள் சமூகம் தொடர்ந்தும் செழிப்புற்று வாழவேண்டுமென்றால் இந்தச் சுத்திகரிப்பு மிகவும் அவசியம். 'தமிழன் தமிழன்' என்று சிந்திப்பதற்கு பதிலாக 'மனிதன் மனிதன்' என்ற ரீதியில் பிரச்சனைகளை அணுகப் பழகவேண்டும். எமது வாழ்நாள் இவ்வரலாற்றின் சிறுதுளி. இச்சிறுதுளியையே இப்பிரப்ஞ்சத்தின் காலம் என்பதுபோல் இறுமாந்து கிடக்கின்றோம். இந்தப்போக்கை மாற்றவேண்டும். இந்தச் சிறுதுளிக்கும் அப்பாலும் விரிந்து கிடக்கப்போகும் வரலாற்றின் போக்கைப் புரிந்து எமது கால கட்டத்திற்கான எமது இருப்பிற்கான சரியான பங்களிப்பைச் செய்யவேண்டும்"
இவ்விதமாக சிந்தித்தபடியே அவன் உறங்கிப்போனான்.
[தொடரும்]
•This e-mail address is being protected from spambots. You need JavaScript enabled to view it•
நாவல்: அருச்சுனனின் தேடலும், அகலிகையின் காதலும் (1-3)
நாவல்: அருச்சுனனின் தேடலும், அகலிகையின் காதலும் (4-6)
•<• •Prev• | •Next• •>• |
---|