இயல்புவாத எழுத்து இரண்டு வகையானது. வாழ்க்கையை அப்படியே பிரதிபலிப்பது ஒரு வகை. இந்த வகையான எழுத்தில் பெரும்பாலும் தனிநபர் துயரங்களும், உறவுச்சிக்கல்களும், சம்பவங்களும் மட்டுமே இடம்பெறும். ஒரு புகைப்படத்தைப் போல குறிப்பிட்ட சூழலைப் பிரதிபலிக்கக் கூடியது இந்த எழுத்து. குறிப்பிட்ட சம்பவங்களை விவரிப்பதை மட்டுமே தனது நோக்கமாகக் கொண்டு இருப்பதால் இந்த எழுத்தாளர்கள் மென்மேலும் தங்கள் எழுத்தின் நயத்திலும் நுட்பங்களிலும் கவனம் செலுத்துகின்றனர். மொழியை அடுத்த கட்டத்துக்கு நகர்த்திச் செல்வதில் இந்த எழுத்து முக்கிய பங்காற்றுகிறது.
இன்னொரு வகையான இயல்புவாத எழுத்து என்பது நிகழ்வுகளை அரசியல் பொருளாதாரப் பின்னணில் ஆராயக் கூடியது. உள்ளதை உள்ளபடி கூறுவது என்பதைக் கடந்து எழுத்தாளர் காரணங்களைத் தேடிச் செல்கிறார். எடுத்துக்கொண்ட காலம், புவியியல் அமைப்பு, பங்குபெறும் மனிதர்களின் மனக்கட்டமைப்பு ஆகியவற்றை ஊருடுருவிப் பார்த்து தனது முடிவுகளை இலக்கியமாக முன்வைக்கிறார். இங்கே நிகழ்வுகள் தனித் தீவுகளாகக் கருதப்படுவதில்லை. சமூக வளர்ச்சிப் போக்கில் அங்கமாக, பின்விளைவாகக் கருதப் படுகின்றன. மனித உணர்வும் கூட ஒரு குறிப்பிட்ட சூழலின் வி்ளைபொருளாக இருக்கிறது. ஒரு கலவரச்சூழலில் நாம அடையும் உணர்வுகளை அனுமதி பெற்று நடத்தும் ஆர்ப்பாட்டத்திலோ, உண்ணாவிரதத்திலோ அடைவது சாத்தியமில்லை. எனவே உணர்வுகள் சூழலில் இருந்து விளைந்து வருபவை. இந்த வகையான எழுத்தில் தனிமனிதனை விட சமூகச்சூழலே முக்கியத்துவம் பெறுகிறது. சமூக வரலாற்றுக்குப் பொக்கிஷமாக இருக்கக் கூடியவை இந்த எழுத்துக்கள்.
சுப்ரபாரதி மணியன் இந்த வகையான எழுத்துக்களை தமிழுக்கு அறிமுகப்படுத்தியவர்களின் ஒருவர். நவீன ஆலைகளைக் கோவில்களாகப் பார்த்தது ஒரு தரப்பு. உரிமைப் போராட்டங்களுக்கான களமாகப் பார்த்தது இன்னொரு தரப்பு. இரண்டையும் கடந்து அது இந்த மண்ணின் மீது ஏற்படுத்திய பாதிப்பை முதலில் உணர்ந்து கொண்ட நுண்ணுணர்வு கொண்ட எழுத்தாளர் சுப்ரபாரதி மணியன். இன்று சுற்றுச்சூழல் பார்வை கொண்ட புனைவுகளும், அபுனைவுகளும் தமிழிலக்கியத்தில் மிக முக்கியமான இடத்தைப் பிடித்துள்ளன. ஆனால் இந்த விழிப்புணர்வு வருவதற்கு முன்பே அவரின் ” சாயத்திரை “ நாவல் வந்தது. பின்பு நொய்யல் ஆறு சந்திக்க இருந்த மாபெரும் அழிவையும், ஓரத்துப்பாளையை அமில அணை உருவாக இருந்ததையும் குறித்த முன்னுணர்வை அளித்தது அந்த நாவல்.
அதன் பின்பு தொடர்ச்சியாக திருப்பூர் பிரதேசத்தின் சமூகப் பின்னணியை மிக ஆழமாக தனது எழுத்துகளின் பிரதிபலித்து வருகிறார் சுப்ரபாரதி மணியன்.
அராஜமான முதலாளித்துவ உற்பத்தி உருவாக்கிய நகரம் திருப்பூர். யார் வேண்டுமானாலும் பணத்தை மூட்டை கட்டிக் கொண்டு வந்து தொழில் தொடங்கலாம். பணத்தை லாரியில் ஏற்றிக் கொண்டு செல்லலாம். அல்லது போண்டியாகி அங்கேயே பனியன் கம்பெனியில் வேலைக்குச் சேரலாம். இந்தியாவின் எல்லாப் பகுதிகளில் இருந்தும் வாழ்விழந்த விவசாயிகளும், இடையர்களும், மீனவர்களும் இங்கே வருகிறார்கள். கூட்டம் கூட்டமாக திரும்பிச் செல்கின்றனர். திருப்பூர் எல்லோருக்கும் சொந்தம் யாருக்கும் சொந்தமில்லை. ஒழுங்கமைக்கப்பட்ட நகரங்கள், கிராமங்களின் சட்ட திட்டங்களும், ஆண் பெண் உறவுமுறைகளும் இங்கே குழம்பிப் போகின்றன. டாலர் சிடி.
இந்த வாழ்க்கை முறை இப்போது தமிழகத்தின் மற்ற நகரங்களுக்கு கிராமங்களுக்கும் பரவி வருகிறது. பழனிமலை அடிவாரத்தில் முருக நதிக் கரையோரம் (ஷண்முகநதி?) உள்ள ஒரு கிராமத்தின் கதைதான் ரேகை. தங்களுக்கே உரிய விதிகளைக் கொண்ட ஜோசியக்காரர்கள் பிரதானமாக வாழும் கிராமம் அது. வெளியூர்க்காரர்கள் இரவே வந்து தங்கி ஜோசியம் பார்த்துச் செல்கின்றனர்.
காலம் கிராமத்தைப் புரட்டிப் போடுகிறது. உலகமயமாக்கல் வாழ்க்கையைச் சிதறடிக்கிறது. விவசாயம் மாறிப் போகிறது. தாய் மொழிக் கல்வி புறக்கணிக்கப்படுகிறது. முருகநதி சாக்கடையாக மாறிப் போகிறது. அதன் குழந்தைகள் திருப்பூருக்கும், கோவைக்கும், சென்னைக்கும் இடம் பெயர்கின்றனர். அதே நேரம் பிஹாரிகளும், ஒரியாக்காரர்களும் கரும்புத் தோட்ட வேலைக்கு பழையனூருக்கு வருகின்றனர். கம்ப்யூட்டர் ஜாதகம் வருகிறது. சாதியும், மதமும், போலீசும், பாலியல் தொழிலாளியான பரமேஸ்வரியும் கிராமத்தின் பிரிக்க முடியாத பாத்திரங்களாகிப் போகின்றனர்.
சமூக நாடகங்கள் நடத்தும் சுப்பையா ஒரு வினோதமான ஆனால் தவிர்க்க முடியாத பாத்திரம். சற்றே துயரம் தோய்ந்த மனநிலையை உருவாக்கும் அந்தப் பாத்திரம் மிக அழகாக வார்க்கப்பட்டிருக்கிறது. அற்புதமான திறமைசாலியான சுப்பையா தனது அரசியல் நோக்கங்களுக்காக மனைவி மக்களைப் பிரிந்து கொடும் வறுமையில் உழல்கிறான். சமரசம் செய்து கொள்ள மறுத்தாலும் அவனது திறமையை தன்னார்வத் தொண்டு நிறுவனங்கள் பயன்படுத்திக் கொள்கின்றன. சமரசம் என்று அறியாமலேயே செய்து கொள்ளப்படும் சமரசம் இது. ஏராளமான அறிவுஜீவிகளுக்கு நிகழ்ந்தது இதுதான். முன்னேறிச் செல்ல வழியில்லாமல், ஒருங்கிணைக்கும் கட்சி இல்லாமல் சம்பவங்களிலும், புராஜெக்ட்களிலும் வாழும் முற்போக்கு வாழ்க்கை. சமரசம் சுப்பையாவுக்கு எதையும் அள்ளிக் கொடுத்து விடுவதில்லை.
ஒரு குறும்படம் எடுக்க வேண்டும் என்ற தீராத ஆசையில் கழிகின்றன அவனது நாட்கள். அவனுக்கு பதில் சோமு ஆற்றைச் சுத்தம் செய்ய முனைந்து நிற்கிறான். லட்சியங்களை அடுத்த தலைமுறை தானாக எடுத்துக் கொள்கிறது என்பதைக் காட்டும் காட்சி இது.
சுப்பையாவுக்கு நேரெதிரான பாத்திரம் கோபால். கள்ளநோட்டு, திருப்பூரில் கடை, சென்னையில் கடை என்று கிடைத்ததைப் பிடித்துக் கொண்டு மேலேறும் எல்லாச் சமரசங்களும் செய்து கொள்ளும் பாத்திரம்.
கொங்கு நகர்ப்புறங்களில் நாம் அன்றாடம் பார்க்க நேரிடும் எல்லோரையும் இந்த நாவலில் பார்க்கலாம். கடும் உழைப்பாளியான அமலம், கிருத்துவ போதகர், ஹஜ் செல்பவரின் நலனுக்காக பிரார்த்தனை நடத்தும் தேவாலயம் ... . . ..கேம்ப் கூலிப் பெண்கள் .. . . .
இந்த நாவலை முழுமையும் இயல்புவாத நாவல் என்று சொல்லிவிட முடியாது. காலத்தைக் கடந்து செல்லும் போதும், உறவுகளை விவரிக்கும் போதும் சற்றே நான் லீனியர் பாணி கைக்கொள்ளப்பட்டிருக்கிறது. ஒருவிதமான மிஸ்டிகல் தன்மை கொண்ட, பழனிமலை அடிவாரத் கிராமத்துக்கும், ஜோதிடத்தை வாழ்கையாகக் கொண்ட கதை மாந்தர்களுக்கும் அந்தப் பாணி முழுவதும் பொருந்திப் போகிறது. அந்தந்தக் காலத்தில் வெளிவந்துள்ள திரைப்படங்கள் காலகட்டத்தைக் காட்ட ஆசிரியரால் ஒரு உத்தியாகப் பயன்படுத்திக் கொள்ளப்பட்டுள்ளது சிறப்பு.
மொத்தத்தில் நமது காலத்தின் குறுக்கு வெட்டுத் தோற்றம் இந்த நாவல். உண்மையான பாத்திரங்களை மிக அற்புதமாக நாவலோடு இழைத்திருப்பது புனைவுக்கும், உண்மைக்கும் இடையே ஊடாடும் தன்மையை அளிக்கிறது. அதே நேரம் சட்டையில்லாத சாமியப்பன், கௌசல்யா போன்ற உண்மைப் பாத்திரங்களை மிக நேர்த்தியாக நுட்பமாகக் கையாண்டிருப்பது ஆசிரியரின் சாதுர்யம்.
தமிழில் சமூகப் பார்வையில் புனைவிலக்கியம் எழுதுவது மிகவும் சிரமமான ஒன்றாகும். இங்கு சாதியம் பற்றி, கேம்ப் கூலி முறைபற்றி, வட நாட்டுத் தொழிளாளர்கள் பற்றி பல ஆய்வுகள் இருந்திருந்தால் எழுத்தாளர் தனது புனைவுக்கான விவரங்களை அங்கிருந்து எடுத்துக் கொள்ள முடியும். அவை இல்லாத சூழலில் எழுத்தாளரே ஆய்வாளரின் பணியையும் செய்ய வேண்டிய நிலை உள்ளது. எல்லாக் களப்பணிகளையும் அவரே செய்ய வேண்டியுள்ளது. எனவே பன்முகத்தன்மை கொண்ட, உழைப்புக்கு அஞ்சாத, ஊடுருவும் பார்வை கொண்ட ஒருவராலேயே சமூகத்தை உண்மையாகப் பிரதிபலிக்க முடியும்.
சுப்ரபாரதி மணியன் அதை அற்புதமாகச் சாதித்திருக்கிறார்- மீண்டும் ஒருமுறை.
- *ரேகை :சுப்ரபாரதி மணியனின் புதிய நாவல் ரூ 125 . பொன்னுலகம் பதிப்பகம், திருப்பூர் 70104 84465 -
•This e-mail address is being protected from spambots. You need JavaScript enabled to view it•
•<• •Prev• | •Next• •>• |
---|