நான் மௌனமாகவும்
இல்லை
உரத்த குரலில்
பாடலும் இல்லை
மனதுக்குள் ராகம் ஒன்றை
முணுமுணுக்கிறேன்.” (வாஜ்பாய் எழுதிய கவிதை வரிகள்)
இந்த வரிகளுக்குள் அம்மனிதன் வாழ்ந்தான், வாழ்ந்து கொண்டிருக்கிறான். இப்போதும் நினைவுகளின் ஈரத்தில் அந்த மனிதனின் நாட்கள் .. அந்த ராகம் அபூர்வ ராகம் தான். குடும்பம் காதல் கற்பு இப்படியான சமூக எல்லைக்கோடுகளுக்குள் வரையறுக்க முடியாமல் வாழ்ந்து முடிந்த வாழ்க்கை … இதோ உடல் தளர்ந்து நடை முடங்கி படுக்கையில் ஒதுங்கி நாட்களை எண்ணிக்கொண்டிருக்கும் இன்றைய பொழுதுகளில் அந்த மனதுக்குள் ராகமாக ஓடிக்கொண்டே தான் இருக்கும்.
அவருடைய ராஜகுமாரியும் அவரும் குவாலியர் கல்லூரியில் ஒன்றாக படித்தவர்கள். வாஜ்பாய் புத்தகத்தில் வைத்து அனுப்பிய காதல் கடிதத்தின் சொந்தக்காரி. ஆனால் காதலை அவள் ஏற்றுக்கொண்டதும் அவள் எழுதிய கடிதமும் வாஜ்பாயால் வாசிக்கப்படாமல் புத்தகத்தின் பக்கங்களிலேயே முடிந்துப் போனது.
1947 இந்திய சுதந்திரம் மட்டுமல்ல, இந்திய பாகிஸ்தான் பிரிவினையின் சோகம் டில்லியைச் சுற்றி ஓலமிட்ட போதுதான் ராஜ்குமாரியின் காதலும் பிரிவினையில் தன்னை துண்டுகளாக்கி கொண்டது. எல்லைக்கோடுகள் வரையப்பட்டன. இந்தியாவும் பாகிஸ்தானும் எதிரி நாடுகளாகிப்போயின.
“உங்கள் நண்பர்களை நீங்கள் மாற்றிக்கொள்ளலாம், ஆனால் உங்கள் அண்டைநாடுகளை மாற்றிக்கொள்வது சாத்தியமில்லை”
வாஜ்பாய் சொல்லிய கருத்துதான். காதல் திருமணத்தில் முடியாமல் போகலாம்… ஆனால் காதலர்கள் அதனாலேயே முடிந்துப் போய்விடுவதில்லை” (இது என்னுடைய வரிகள்!!) வாழ்க்கை இருவரையும் வெவ்வேறு திசைகளை நோக்கி பயணிக்க வைத்தது. ராஜ்குமாரி திருமணத்திற்குப் பின் ராஜ்குமாரி கவுல் ஆனார். வாஜ்பாய் அரசியலில் முழுமூச்சுடன் ஈடுபட்டு நாடாளுமன்றத்தை நோக்கி பயணப்பட்டுவிட்டார். விதி அவர்களுடன் புதிதாக விளையாடியது. மீண்டும் டில்லியில் அவர்கள் சந்திக்கிறார்கள். மீண்டும் மீண்டும் மீண்டும்.. நினைவுகளில் வாழ்ந்தவர்கள் .. தங்களைப் புதுப்பித்துக் கொள்கிறார்கள். சந்திப்புகள் தொடர்கின்றன… காத்திரமான உரையாடல்களுடன், கவிதைகள் அவர்கள் தோட்டங்களில் பூத்துக்குலுங்குகின்றன. கணவர் தன் இரு பெண் குழந்தைகள் என்று வாழ்ந்து கொண்டிருக்கும் ராஜ்குமாரி கவுல் அவர்களின் வீட்டில் நிரந்தர உறுப்பினராகிவிடுகிறார் வாஜ்பாய்.
அந்த வீட்டில் அவருக்கான இடம்.. ?? உறவுகளைக் கொச்சைப்படுத்துகின்றவர்களுக்கு .. அவர் அங்கு யாராக இருந்தார் என்ற கேள்விதான் எழும். அவர் அங்கே அவராகவும் அவள் அவள் வீட்டில் அவளாகவும் இருந்தார்கள். அருகிலிருப்பது மட்டுமே போதுமானதாக இருந்தது. அவர்களுக்கு அதில் குற்ற உணர்வே இல்லை. இவர்களின் உறவு குறித்து பேசிய டில்லி அரசியல் வட்டத்திற்கோ ஊடகத்திற்கோ வதந்திகளுக்கோ பதில் சொல்லி தங்கள் உறவை அவர்கள் கீழ்மைப் படுத்திக் கொள்ளவில்லை. இதில் ராஜ்குமாரி கவுல் தெளிவாக இருந்திருக்கிறார் என்பதை எண்ணிப்பார்க்கும் போது பெருமையாக இருக்கிறது.
ராஜ்குமாரியின் கணவர் கல்லூரி பேராசிரியர் கவுல் அவர்களிடமும் தானோ வாஜ்பாயோ குற்றவுணர்வுடன் மன்னிப்பு கேட்ட வேண்டிய தேவை ஏற்படவே இல்லை , வதந்திகளுக்குப் பின் என் கணவருடனான என் உறவு இன்னும் நெருக்கமானது, ஆழமானது என்று தன் நேர்காணல் ஒன்றில் (woman's magazine in the mid-1980s) தெளிவுபடுத்துகிறார்.
ராஜ்குமரி கவுலின் மகள் நமிதாவைத்தான் வாஜ்பாய் தன் மகளாக தத்தெடுத்துக் கொண்டார். ராஜ்குமாரி கவுல், அடல் பிகாரி வாஜ்பாய் அவர்களின் சுவீகாரபுதல்வி நமிதாவின் தாய் என்று அவருடைய மரணச்செய்தியை பத்திரிகைகள் எழுதின. அரசியல் வட்டாரத்தில் வாஜ்பாயை அறிந்தவர்கள் அனைவரும் ராஜ்குமாரி கவுலை மதிக்கிறார்கள்.வாஜ்பாய் இல்லத்திற்கு வரும் தொலைபேசி அழைப்புகளை எடுக்கும் போதெல்லாம் ராஜ்குமாரி, “நான் ராஜ்குமாரி கவுல் பேசுகிறேன்” என்றே கடைசிவரை சொல்லி இருக்கிறார்.
கணவரின் மறைவுக்குப் பிறகும் வாஜ்பாய் இல்லத்தில் தன் குடும்பத்துடன் கடைசிவரை வாழ்ந்திருக்கிறார் ராஜ்குமாரி. …
“உயரே செல்லச் செல்ல
ஒரு மனிதனின் தனிமை கடுகும்
அவன் தனது சுமைகளைத்
தானே தாங்கி நிற்கிறான்” - (வாஜ்பாய் கவிதை வரிகள்.)
வாஜ்பாய் என்ற அரசியல் தலைவரின் தனிமை சுமைகளைத் 40 ஆண்டுகளாக தாங்கிய பெண் ராஜ்குமாரி கவுல்
நண்பகலில் வானம் இருண்டிருக்கிறது.
சூரியனை தோற்கடித்துவிட்டது
சூரிய நிழல்.
உன் ஆன்மாவிலிருந்து எண்ணெயைப் பிழிந்து
விளக்கின் திரியை ஏற்றலாம்.
வா,, மீண்டும் விளக்கை ஏற்றலாம்…
(வாஜ்பாய் கவிதை வரிகள்)
வாஜ்பாய் என்ற மனிதனுக்குள் எரிந்த விளக்கு.. அபூர்வமானதாக .. ..
சூரியன் ஒரு நிதர்சனம்.
அவனை இல்லை என்று சொல்ல முடியாது..
ஆனால் பனித்துளியும்
ஒரு சத்தியம் தானே… (வாஜ்பாய் கவிதை வரிகள்)
ஆம்.. சூரியன் மட்டுமல்ல, பனித்துளிகளும் சத்தியமானதாகவே இருக்கின்றன ..
வாஜ்பாய் நேருவின் காலத்தில் அரசியலுக்கு வந்தவர் . வலதுசாரி. இந்தி+இந்து = இந்தியா என்ற பிஜேபியின் குரலை அவர் எப்படி எடுத்துச் சென்றார் என்பதும் இன்றைய மோடி தலைமையிலான பிஜேபி அதை எப்படி எடுத்துச் செல்கிறது என்பதும் கவனிக்க வேண்டிய புள்ளிகள். பிஜேபி கட்சிக்குள்ளும் கூட இது பற்றிய விவாதங்கள் இன்னும் சிறிது காலத்திற்குப் பின் பேசுபொருளாக மாறும். இந்த அரசியல் தளத்திற்கு அப்பால் வாஜ்பாய் அவருடைய கவிதை அவருடைய ராகம் என்னை எப்போதும் கவர்ந்திழுத்திருக்கிறது. அவரை விட அவருடைய அந்த ராஜகுமாரியை என் விழிகளை உயர்த்தி விலகி நின்று பார்த்த காலம் இப்போது நினைத்தாலும் அதே உணர்வுகளின் தாளத்துடன் என்னை தனக்குள் சுவீகரித்துக் கொள்கிறது. ராஜ்குமாரிகள் .. வாழ்க்கைக்கு புதிய அர்த்தங்களை எழுதிக் கொண்டே இருக்கிறார்கள்.
நன்றி: புதியமாதவி சங்கரனின் முகநூற் பதிவு!
•<• •Prev• | •Next• •>• |
---|