'கரும்பூறும் நறும்பாகும் கற்கண்டும்
கனிரசமும் கலந் தொன்றாய்
அரும்போதின் தேனமுதோ அலைகடலின்
திருவமுதோ அன்றி வீணை
நரம்போதும் இன்னிசையோ எனவியந்து
நயந்து கடல்மடை திறந்தாலென்ன
வரும்போது அவன்பேச்சில் இறும்பூது
எய்தாதார் யாருமில்லை..!"
கவிஞர், ஆசிரியமணி சி. நாகலிங்கம் அவர்களால் இவ்வாறு புகழ்ந்துரைக்கப்பட்ட முதுபெரும் எழுத்தாளர் - பேச்சாளர் நாவேந்தனின் பதினெட்டாவது நினைவு தினம் 10 - 07 - 2018 அன்று ஆகும்..! யாழ்ப்பாணத் தமிழ் எழுத்தாளர் சங்கத்தின் தாபகராகவும் அதன் முதற் செயலாளராகவும் இலங்கை இலக்கிய இரசிகர் சங்கத்தின் தலைவராகவும் செயற்பட்ட நாவேந்தன் யாழ். மாநகரசபையின் பிரதிமேயராகவும் திகழ்ந்துள்ளார்..! சாதாரண மக்களின் விடிவுக்காகப் பேனாபிடித்த படைப்பாளிகளில் குறிப்பிடத்தக்கவர் நாவேந்தன். அவர் சாதாரண மக்களின் பிரச்சினைகளை - அவர்களது ஆசாபாசங்களை வாழ்வியல் முரண்பாடுகளைத் தமது சிறுகதைகள் மூலம் வெளிக்கொணர்ந்தவர். அவரது சிறுகதைகள் வெறும் கற்பனைகளல்ல. அவை யதார்த்த பூர்வமானவை. சமூகத்தினரிடையே புரையோடிப் போயிருக்கும் அழுக்குகளை அப்புறப்படுத்தவும் சமூக அவலங்களையும் அறியாமைகளையும் வெளிச்சம் போட்டுக்காட்டி சமூக மாற்றத்தின் தேவைகளை உணர்த்தவும் அவரது எழுத்துக்கள் பெரிதும் உதவின. மானுடம் பயனுற விரும்பும் இலக்கிய ஆக்க முயற்சிகளில் ஐந்து தசாப்தங்களுக்கு மேலாகத் தம்மை அர்ப்பணித்து தொண்டாற்றியவர். அவர் பன்முகத் திறன்கொண்ட படைப்பாளி. ஈழத்தின் மூத்த எழுத்தாளர்களில் ஒருவரான இவர் சிறுகதை ஆசிரியர், பத்திரிகையாளர், கட்டுரையாளர், விமர்சகர், கவிஞர், பேச்சாளர், தொழிற்சங்கவாதி எனப் பல பரிமாணங்களைக் கொண்டிருந்தவர். அவர் மறைந்து பதினெட்டு ஆண்டுகள் கடந்துவிட்ட போதிலும் மக்கள் மனதில் அவரது பணிகள் நிலைத்து நிற்பதை நிதர்சனமாகக் காண முடிகிறது.
அமரர் நாவேந்தன் புங்குடுதீவைப் பிறப்பிடமாகக் கொண்டவர். த. திருநாவுக்கரசு என்பது இவரது இயற்பெயராகும். இவரது பேச்சாற்றலைக் கண்டு அன்று தமிழரசுக்கட்சித் தலைவர் ''கோப்பாய்க் கோமான்'' கு. வன்னியசிங்கம் 'நாவேந்தன்'' என்று பாராட்டினார். அன்றுதொட்டு நாவேந்தன் என்னும் புனைபெயராலேயே ஈழத்திலும் தமிழகத்திலும் நன்கறியப்பட்டவராகத் திகழ்ந்தார். தமது பதினைந்தாவது வயதில் 'இந்து சாதனம்" மூலம் எழுத்துத்துறையில் புகுந்த இவர் சிறுகதை, கட்டுரை, நாவல், கவிதை, விமர்சனம் எனப் பல்வேறு துறைகளில் தமது எழுத்தாற்றலைப் புலப்படுத்தியுள்ளார். ''சுதந்திரன்'' பண்ணையில் வளர்ந்த எழுத்தாளர்களுள் நாவேந்தனுக்குச் சிறப்பிடமுண்டு. சுதந்திரன் பத்திரிகையிலேயே அவரது பெரும்பாலான படைப்புக்கள் பிரசுரமாகியுள்ளன. நாவேந்தனின் தமிழ் நடை தனித்துவமானது. கொஞ்சும் தமிழிலும் குமுறும் எரிமலை நடையிலும் எழுதும் ஆற்றல் மிக்கவராக விளங்கினார். அவர் நடத்திய 'சங்கப்பலகை" இதழில் எழுதிய விமர்சனங்கள் இதற்குத்தக்க சான்றாகும்.
ஈழத்தில் வெளிவந்த சகல பத்திரிகைகளிலும் அவரது படைப்புக்கள் பல வெளியாகியுள்ளன. குறிப்பாக சுதந்திரன், வீரகேசரி, தினகரன், தினக்குரல், சிந்தாமணி, இந்து சாதனம், உதயன், உதயதாரகை, சமூகத் தொண்டன், கலைச்செல்வி, நவஜீவன், விவேகி, ஈழகேசரி ஆதியாம் பத்திரிகைகளில் இவரது படைப்புக்கள் பல வெளிவந்துள்ளன. தமிழகத்துப் பத்திரிகைகளான கவியரசர் கண்ணதாசனின் தென்றல், தென்றல் திரை, உமா, கலைமன்றம், தமிழன் குரல், மணி மொழி, சாட்டை, அறப்போர், தமிழ் சினிமா ஆகியவற்றிலும் இவரது படைப்புக்கள் பல இடம்பெற்றுள்ளன. கவியரசர் கண்ணதாசனின் அன்புக்குப் பாத்திரமான நாவேந்தனது படைப்புக்கள் அவரது 'தென்றல்" இதழ்களில் முதற்பக்கத்தை அலங்கரித்தமை இங்கு குறிப்பிடத்தக்கதாகும்.
நாவேந்தன் எழுத்தாளர் மட்டுமல்லர். தலைசிறந்த மேடைப் பேச்சாளராகவும் அரசியல்வாதியாகவும் தொழிற்சங்கவாதியாகவும் ஆளுமைமிக்க அதிபராகவும் மிளிர்ந்தவர். தமிழரசுக் கட்சியின் பிரச்சாரப் பீரங்கிகளில் ஒருவராகக் கருதப்பட்டவர். தந்தை செல்வா முதல் தலைவர் ஜீ.ஜீ. வரை இவரது உரைகளைப் பெரிதும் பாராட்டியுள்ளனர். தமிழரசுக் கட்சி நடத்திய போராட்டங்கள் பலவற்றில் பங்கு கொண்டவர். 1958 இல் இடம்பெற்ற சிங்கள ஸ்ரீ எதிர்ப்புப் போராட்டத்தில் ஈடுபட்டு ஒரு வார காலச் சிறைத் தண்டனையையும் அனுபவித்தவர். சிறையிலிருந்து மீண்டதும் தமது சிறை அனுபவங்களைப் படம்பிடித்துக்காட்டும் வகையில் 'ஸ்ரீ அளித்த சிறை" என்னும் நூலை எழுதி வெளியிட்டவர். இந்நூல் பல பதிப்புக்களைக் கண்டுள்ளது. இன்றும் இன உணர்வுள்ள இளைஞர்களால் விரும்பிப் படிக்கும் நூலாக விளங்குகின்றது.
தமிழ்க்குரல், சங்கப்பலகை, நாவேந்தன், நம்நாடு ஆகிய பத்திரிகைகளை நடத்தியவர் நாவேந்தன். தமது இறுதிக் காலத்தில் இவர் படைத்த 'மகதலேனா மரியாள்" என்னும் குறுங்காவியம் இவரது புலமைத் திறனுக்கு ஏற்ற எடுத்துக்காட்டாக இலங்குகிறது. தென்னிந்திய திருச்சபையின் யாழ். அத்தியட்சாதீனம் இதனை வெளியிட்டுள்ளது.
நாவேந்தன் 'வாழ்வு", 'தெய்வமகன்" என்னும் இரு சிறுகதைத் தொகுதிகளைத் தந்துள்ளார். 'வாழ்வு" இலங்கை அரசின் சாகித்திய மண்டல விருதினைப் (1964 -ல்) பெற்றுள்ளமை குறிப்பிடத்தக்கதாகும். இந்த இரு சிறுகதைத் தொகுதிகளும் 'நாவேந்தன் கதைகள்" என்னும் பெயரில் ஒரே நூலாக அண்மையில் வெளியிடப்பட்டுள்ளது. மானவீரன் கும்பகர்ணன், சிலப்பதிகாரச் செந்நெறி, தலைவர் வன்னியசிங்கம், நான் ஒரு பிச்சைக்காரன், மாவட்ட சபைகளைப் பகிஷ்கரிப்பது ஏன்..? ஆகிய கட்டுரை நூல்களையும் பெரு நெருப்பு, மண்டோதரி, தாரை முதலான நாடக நூல்களையும் இவர் படைத்துள்ளார். நக்கீரன், பண்டிதர் பரசுராமமூர்த்தி, ததீஜீ, ஆம்பலூர்க் கவி அருணகிரிதாசர், மேகநாதன், தீப்பொறி, காண்டீபன் என்னும் புனைபெயர்களில் இவர் எழுதிக் குவித்தவை ஏராளம். அவற்றுள் ஒரு சிலவே நூல்வடிவம் பெற்றுள்ளன. இவரது எழுத்துக்கள் அனைத்தும் நூல் வடிவம் பெறவேண்டும். அதுவே அவருக்கு நாம் ஆற்றும் நன்றிக் கடனாக அமையும் எனச் சுட்டிக்காட்ட விரும்புகின்றேன். யாழ்ப்பாண தமிழ் எழுத்தாளர் சங்கத்தின் தாபகராகவும், அதன் முதற் செயலாளராகவும், இலங்கை இலக்கிய இரசிகர் சங்கத்தின் தலைவராகவும் செயற்பட்ட நாவேந்தன் யாழ். மாநகரசபையின் பிரதிமேயராகவும் திகழ்ந்துள்ளார்.
சுருங்கக்கூறின் நல்லதோர் தமிழாசானாக, ஆளுமை மிக்க அதிபராக, சீரிய தொழிற்சங்கவாதியாக, மற்றாரும் போற்றும் மேடைப்பேச்சாளராகப், பன்முகத் தன்மை வாய்ந்த படைப்பாளியாக, மின்னல் வேகத்தில் எழுதிக் குவிக்கும் எழுத்தாளராகப், பகுத்தறிவுவாதியாகப் பரிமளித்தவர் நாவேந்தன் எனலாம். அவரது நினைவு நீடிக்கட்டும்..!
•This e-mail address is being protected from spambots. You need JavaScript enabled to view it•
•<• •Prev• | •Next• •>• |
---|