(இந்த நேர்காணலானது, இலங்கையிலிருந்து வெளிவந்து கொண்டிருக்கும் ஞாயிறு லக்பிம வாரப் பத்திரிகையில் (20.05.2018) வெளிவந்தது. நேர்காணல் செய்திருப்பவர் லக்பிம பத்திரிகை ஆசிரியர் குழுவைச் சேர்ந்தவரும், எழுத்தாளருமான திருமதி.கத்யானா அமரசிங்ஹ.)
கேள்வி : நீங்கள் தமிழ்மொழியில் ஆக்கங்களை எழுதி வரும் படைப்பாளியாக இருப்பதோடு, சிங்கள இலக்கிய நூல்கள் பலவற்றை தமிழ் மொழிக்கு மொழிபெயர்த்த மொழிபெயர்ப்பாளராகவும் இருக்கிறீர்கள். மொழிபெயர்ப்பின் மீதான ஈடுபாடு எவ்வாறு தோன்றியது?
பதில் : அது வேண்டுமென்றே செய்தவொன்றல்ல. தானாக நிகழ்ந்தது. பணி நிமித்தம் பிற நாடொன்றுக்கு வந்ததன் பின்னர் அதுவரைக்கும் நான் இலங்கையில் வசித்த காலத்தில் வாசித்துக் கொண்டிருந்த சிங்கள பத்திரிகைகள், சஞ்சிகைகள் போன்றவற்றை இழக்க நேரிட்டது. எனவே எனது சகோதரி கவிஞர் பஹீமா ஜஹான், இலங்கையில் சிங்களப் பத்திரிகைகளில் வெளியாகும் சிறந்த கவிதைகள், சிறுகதைகள், கட்டுரைகள் மாத்திரமல்லாது அரசியல் கட்டுரைகளையும் கூட மின்னஞ்சல் வழியாக அனுப்பிக் கொண்டிருந்தார். அவற்றிலுள்ள நல்ல, தீய விடயங்கள் குறித்து நாங்கள் வாதிட்டோம். தர்க்கித்தோம். அவை தமிழில் மொழிபெயர்க்கப்பட வேண்டும். அப்போதுதான் சிங்கள இலக்கியத்தைக் குறித்தும், ‘சிங்களவர்கள் அனைவருமே தமிழர்களுக்கு எதிரானவர்களல்ல’ என்பதையும், யுத்தத்தையும், இன மத வேறுபாடுகளை எதிர்க்கும் சிங்களவர்களும் இலங்கையில் வசிக்கிறார்கள் என்பதையும் தமிழ் வாசகர்களுக்கு தெளிவாக எடுத்துக் கூற முடியும் எனப் புரிந்தது. மொழிபெயர்ப்புப் பயணம் அப்போதிலிருந்து அவ்வாறுதான் தொடங்கியது.
கேள்வி : தமிழ் மொழி மூலமாகக் கல்வி கற்ற நீங்கள் சிங்கள மொழியறிவை எவ்வாறு பெற்றுக் கொண்டீர்கள்? சிங்கள சமூகத்தோடு சிறுபராயம் முதல் தொடர்பேதும் இருந்ததா?
பதில் : எனது ஊர் மாவனல்லை. எனவே சிறுபராயம் தொட்டு நான் வளர்ந்தது சிங்கள மக்களுடன்தான். சந்தையில், மைதானத்தில், வைத்தியசாலையில், கடைத்தெருக்களில் என அனைத்து இடங்களிலும் என்னைச் சூழ இருந்தவர்கள் சிங்கள மக்கள். அக் காலத்திலேயே அனைவரும் சிரமம் எனக் கூறும் சிங்கள மொழியை என்னால் புரிந்து கொள்ள முடியுமாக இருந்தது. பாடசாலையில் இரண்டாம் மொழியாக சிங்கள மொழியைத் தேர்ந்தெடுத்தேன். பிற்காலத்தில் கணினி வகுப்பில் சேர்ந்ததுவும் ஒரு சிங்கள ஆசிரியையிடம்தான். பல்கலைக்கழகத்திலும் என்னுடன் படித்தவர்கள் சிங்கள மாணவர்கள். இவ்வாறாக சிங்கள மொழி சிறுபராயம் தொட்டு என் கூடவே வந்ததால் சிங்கள மொழி எனக்கு நெருக்கமானதாக இருக்கிறது.
கேள்வி : படைப்பாக்கங்களுக்கு தூண்டுதலாக அமைந்த உங்கள் குடும்பப் பின்னணி, சிறு பராயம் மற்றும் நீங்கள் வெளியிட்டுள்ள இலக்கிய படைப்புக்கள் பற்றி?
பதில் : எனது சிறுபராயம் தொட்டு புத்தகம் வாசிக்கும் சூழல் எமது வீட்டிலிருந்தது. அம்மா முதற்கொண்டு வீட்டிலிருந்த அனைவரும் புத்தகங்களை வாசித்தார்கள். ஆகவே எனக்கும் அந்தப் பழக்கமே தொற்றியிருக்கிறது என்று கூறலாம். பாடசாலைக் காலங்களில் நிறைய இலக்கிய விழாக்களில் கலந்து கொண்டு பரிசுகளையும், சான்றிதழ்களையும் வென்றிருக்கிறேன். பாடசாலைக் காலத்துக்குப் பிறகும் நிறைய எழுத அவையும் பெரும் ஊக்கத்தையும் தைரியத்தையும் அளித்தன. உயர்தரக் கல்வியை மேற்கொண்டிருந்த காலத்திலேயே இலக்கியப் பத்திரிகைகளுக்கும் எழுதத் தொடங்கியிருந்தேன்.
‘இந்த வயதில் கல்விக்கு முக்கியத்துவம் கொடுங்கள். கற்று, வாழ்க்கையில் ஒரு நிலையான இடத்தை எட்டியதன் பிறகு எழுதத் தொடங்குங்கள். அப்போதுதான் அந்த எழுத்து ஆழமாகவும், காத்திரமாகவும் அமையும்’ என தக்க சமயத்தில் சகோதரி அறிவுறுத்தினார். ஆகவே உத்தியோகம் பார்க்க ஆரம்பித்த பிறகுதான் திரும்பவும் எழுதத் தலைப்பட்டேன். கல்வி கற்றுக் கொண்டிருந்த காலங்களில் எதுவும் எழுதாமலிருந்த போதும் அக் காலத்தில் புத்தகங்களை வாசிப்பதை நிறுத்தவில்லை. தமிழ், சிங்களம், ஆங்கிலம் என மூன்று மொழிகளிலும் சிறந்த நூல்கள் எனக் கூறப்படுபவற்றைத் தேடி வாசித்திருக்கிறேன்.
பிறகு திரும்பவும் நான் எழுதத் தொடங்கியது எனது வலைத்தளத்தில்தான். அவை தமிழ் வாசகர்கள் இருந்த அனைத்து நாடுகளையும் சென்று சேர்ந்தமையால் எனது வலைத்தளத்தில் பதிவிட்ட எனது கவிதைகள், சிறுகதைகள், மொழிபெயர்ப்புகள், அரசியல் கட்டுரைகள் என்பவற்றை அச்சு நூல்களாக வெளியிடத் தீர்மானித்தோம். அவ்வாறு கவிதைத் தொகுப்பு, சிறுகதைத் தொகுப்பு, மொழிபெயர்ப்புக் கவிதைத் தொகுப்புக்கள், மொழிபெயர்ப்பு நாவல், மொழிபெயர்ப்பு சிறுகதைத் தொகுப்புக்கள், அரசியல் கட்டுரைத் தொகுப்புக்கள் போன்றன இதுவரைக்கும் அச்சு நூல்களாக வெளியிடப்பட்டிருக்கின்றன. இந்த வருடத்தில் எனது புதிய கவிதைத் தொகுப்பையும், சிங்கள மொழிபெயர்ப்பு சிறுகதை தொகுப்பொன்றையும் வெளியிடத் தீர்மானித்திருக்கிறோம்.
கேள்வி : முப்பது வருடங்களாக நிலவிய யுத்தத்தின் காரணமாக தமிழ் மொழியில் எழுதி வரும் எழுத்தாளர்கள் பலருக்கும் இலங்கையை விட்டும் புலம் பெயரை நேர்ந்திருக்கிறது. மேலும் பல எழுத்தாளர்கள் யுத்தத்தில் சிக்கிக் கொள்ள நேர்ந்தது. இவற்றால் தமிழ் இலக்கியத்துக்கு ஏற்பட்ட பாதிப்பை நீங்கள் எவ்வாறு உணர்கிறீர்கள் ?
பதில் : யுத்தமானது, தமிழ் இலக்கியத்தைப் பெரிதும் பாதிக்கச் செய்தது என்பதே உண்மை. 1983 கலவரத்துக்கு முன்பு இலங்கையின் தமிழ் சினிமாவும், தமிழ் இலக்கியமும் வேகமாக வளர்ந்து வந்து கொண்டிருந்தவை. நிறைய எழுத்தாளர்கள் உருவாகியிருந்தார்கள். 1983 கலவரத்தில் அனைத்தையும் இழக்க நேரிட்டது. ஆசியாவின் பெரிய நூலகங்களில் ஒன்றான யாழ்ப்பாண நூலகமும், பல்லாயிரக்கணக்கான நூல்களும் எரிக்கப்பட்டு எதிர்கால சந்ததியினருக்கு அவை இல்லாமலாகின. அது சாதாரண விடயமல்ல.
யுத்தம் தொடங்கியது. யுத்தத்தின் காரணமாக போர்க்கால இலக்கியம் உருவானது. யுத்தத்தோடு சம்பந்தப்பட்டவர்களும், யுத்தத்தின் காரணமாக தமக்குரியவற்றை இழந்தவர்களும் தமிழ் மொழியில் எழுதியதெல்லாம் யுத்தமானது தமிழ் மக்களுக்கு உரித்தாக்கியிருக்கும் துயரத்தையும், கண்ணீரையும், இழந்த ஜீவிதங்களையும், துயருறும் மக்களையும் பற்றித்தான். அவ்வளவு காலமும் தமிழ் இலக்கியம் என்றால் அது இந்தியத் தமிழ் இலக்கியம்தானென ஏற்றுக் கொண்டிருந்த உலகத்தில் போரிலக்கியமாக இலங்கைத் தமிழ் இலக்கியம் வெளிப்படையாகத் தெரியத் தொடங்கியது. அது தனிப்பட்டு எழுந்து நின்றது.
யுத்த தேசத்தில் தமிழ் இலக்கியமானது கண்ணீராலும், இரத்தத்தினால் நிறைந்திருக்கும் இலக்கியம். அதை எழுதியவர்கள் யுத்தத்தால் பாதிக்கப்பட்ட மக்களும், போர்க்களத்தில் இருந்தவர்களும்தான். அவ்வாறுதான் யுத்தமானது தமிழ் இலக்கியத்தைப் பாதிக்கச் செய்தது. இன ஒடுக்குமுறை மேலோங்கி, தனி மனித சுதந்திரம், ஜனநாயகம், மனித உரிமைகள் போன்ற அனைத்தும் யுத்தங்களின் போது இல்லாதொழிக்கப்படுகின்றன. அந்தப் புள்ளியிலிருந்து இலக்கியமானது அத் துயரங்கள் குறித்த படைப்புக்களால் பூரணத்துவம் அடையத் தொடங்கி விடுகின்றது. '‘Protest literature’ என அழைக்கப்படும் அந்த இலக்கியம் இலங்கைத் தமிழ் இலக்கியத்தின் அடையாளமாக பிறப்பெடுத்தது அப்போதுதான்.
இப்போதும் கூட பொதுவாக தமிழ் இலக்கியம் எனும்போது இந்தியத் தமிழ் இலக்கியம், இலங்கைத் தமிழ் இலக்கியம், புலம்பெயர்ந்த இலங்கைத் தமிழர்களின் தமிழ் இலக்கியம், தமிழில் எழுதும் முஸ்லிம் எழுத்தாளர்களின் இலக்கியம் என ஒவ்வொரு படைப்பையும் வகைப்படுத்த முடிகிறது. யுத்தத்துக்கு முன்னர் இந்தளவு பிரிவுகள் இருக்கவில்லை.
கேள்வி : இலங்கைத் தமிழ் சினிமாவுக்கு மாத்திரமல்லாது, இலக்கியத்திலும் இந்திய ஆக்கிரமிப்பைத் தவிர்க்க முடியாதுள்ளது. இலங்கைக்குள் தரமான தமிழ் இலக்கிய படைப்புக்கள் குறைவாகத்தான் பதிப்பிக்கப்படுகின்றன. அநேகமான இலங்கைத் தமிழ் எழுத்தாளர்களின் தொகுப்புக்கள் இந்தியாவில்தான் பதிப்பிக்கப்படுகின்றன. உங்களுடையதும் கூட அப்படித்தான் இல்லையா? அதன் காரணத்தை நீங்கள் எவ்வாறு நோக்குகிறீர்கள்?
பதில் : நான் முன்பே கூறியது போல இலங்கைத் தமிழ் இலக்கியம் எனும்போது அதிலிருந்து யுத்தத்தையும், சிறுபான்மையினருக்கு இழைக்கப்படும் அநீதிகளையும் பற்றி எழுதுவதைத் தவிர்க்க முடியாது இல்லையா? யுத்த காலத்திலும், தற்போதும் யுத்தத்தைக் குறித்தும், தற்காலத்தில் நிகழ்த்தப்படும் இனக் கலவரங்கள் குறித்தும் எழுதப்படும் இலக்கியப் பிரதிகளை தமது பதிப்பகத்தினூடாக பிரசுரிக்க பல தமிழ்ப் பதிப்பகங்கள் தயங்குகிறார்கள். ஏதேனும் பிரச்சினைகள் வருமோ என அவர்கள் பயப்படுகிறார்கள். அந்தப் பயம் சாதாரணமானது தான்.
அண்மையில் கூட விடுதலைப் புலிகளின் தலைவர் வே. பிரபாகரனின் புகைப்படத்தை முன்னட்டையில் கொண்டிருந்த ஒரு இந்தியத் தமிழ் சஞ்சிகையை இலங்கையில் தனது புத்தகசாலையில் விற்பனைக்கு வைத்திருந்தார் என்பதற்காக தமிழ் பதிப்பகத்தைச் சேர்ந்த ஒருவரை காவல்துறை கைது செய்து விளக்க மறியலில் அடைத்தது. எனவே தான் உணர்வதை எழுதுவதற்கு, எழுதியதைப் பதிப்பிப்பதற்கு இலங்கைக்குள் சுதந்திரம் இல்லை எனும்போது அப் படைப்புக்களை வெளிநாட்டில்தான் பதிப்பிக்க நேர்கிறது. அதுதான் எனக்கும் நேர்ந்தது. எமது நாட்டின் எமது இலக்கியத்தை நாம் எழுதி இன்னொரு நாட்டிடம் பதிப்பிக்கக் கொடுக்க வேண்டியிருக்கிறது. காரணம் இலங்கையில் அதற்கான சுதந்திரம் இல்லை என்பதோடு அவ்வாறு பதிப்பித்தாலும் எதிர்கொள்ள நேரிடும் பிரச்சினைகள் அதிகம் என்பதால்தான். ஆகவே இலங்கையில் ஒரு தொகுப்பை பதிப்பித்து விட்டு சிறைக்குச் செல்லவும், அதன் பிறகு இலக்கியமே வேண்டாமென்று வீட்டிலிருந்து பெருமூச்சு விடவும் விரும்பாததால்தான் இலங்கை தமிழ், முஸ்லிம் எழுத்தாளர்கள் பலரும் இந்தியாவில் தமது புத்தகங்களை பதிப்பிக்கிறார்கள்.
கேள்வி : பிற நாடுகளில் பதிப்பிக்கப்படும் தமிழ் நூல்களின் பிரதிகளை இலங்கைக்கு தருவித்துக் கொள்ளும்போதும் பல சிக்கல்களை எதிர்கொள்ள வேண்டி வருவதாக அறியக் கிடைக்கிறது. இந்த விடயத்தில் உங்கள் அனுபவம் எவ்வாறிருக்கிறது?
பதில் : அது உண்மைதான். தமிழ்ப் புத்தகங்கள் தபால் மூலமாக இலங்கைக்கு அனுப்பப்படுமாயின், அப் புத்தகங்களின் அட்டைப்படம் முதற்கொண்டு முழுமையான உள்ளடக்கம் வரைக்கும் தபாலதிகாரிகளிடம் விவரித்த பிறகுதான் அப் புத்தகங்கள் எமக்கு கிடைக்கும். அட்டைப்படத்திலோ, உள்ளடக்கத்திலோ யுத்தம் சம்பந்தப்பட்ட ஏதேனும் இருப்பின் புத்தகங்களைப் பெற்றுச் செல்ல வந்தவரின் பாடு முடிந்தது. எவரும் அவ்வாறான சிக்கல்களை எதிர்கொள்ள விரும்ப மாடடார்கள், அல்லவா?
எனது அனுபவத்தைப் பற்றிக் கூறுவதானால், ஒரு தடவை நானும் கவிஞர் பஹீமா ஜஹானும் இணைந்து சிங்களக் கவிஞர் மஞ்சுள வெடிவர்தனவின் கவிதைத் தொகுப்பொன்றை மொழிபெயர்த்து ஒரு நூலாக வெளிநாட்டில் பதிப்பித்து வெளியிட்டிருந்தோம். அப் பதிப்பகம் அதன் பிரதிகளை எமக்கு அனுப்பியிருந்தது. புத்தகங்களைப் பெற்றுக் கொள்ள தபாலகத்துக்குச் சென்றால் புத்தகப் பொதியைப் பிரித்துப் பார்த்திருந்தார்கள். அத் தொகுப்பைப் பற்றிய விபரங்களை விசாரித்தார்கள். இராணுவ வீரர்களின் ஓவியம் அட்டைப்படத்தில் அச்சாகியிருந்தது. அதைக் கவனித்தவர்கள் அப் பொதியை எம்மிடம் ஒப்படைக்கவில்லை. ‘புத்தகங்களைத் திரும்பவும் கொழும்புக்கு அனுப்புகிறோம். அங்கு விசாரணைக்குப் பிறகு உங்களுக்கு ஒரு கடிதம் வரும். பிறகு அங்கே சென்று உங்கள் புத்தகப் பொதியைப் பெற்றுக் கொள்ளுங்கள்’ என்றார்கள். அக் கடிதம் வரும் வரைக்கும் நாங்கள் காத்துக் கொண்டிருக்கிறோம். இன்று வரையில் அக் கடிதம் வரவேயில்லை. இது நிகழ்ந்து தற்போது ஐந்து வருடங்கள் ஆகின்றன.
இது எனது அனுபவம் மாத்திரமல்ல. பிற நாடுகளிலிருந்து இலங்கையில் பெற்றுக் கொள்ள தமிழ்ப் புத்தகங்களை கொள்வனவு செய்யும் பலரும் இவ்வாறான அனுபவங்களை எதிர்கொண்டிருக்கிறார்கள்.
கேள்வி : ரஷ்ய மொழிபெயர்ப்பு இலக்கியங்களினூடாக மத்திய ஆசிய இஸ்லாமியக் கலாசாரப் பின்னணி குறித்துக் கூறப்படும் பல படைப்புக்களை நாங்கள் வாசித்திருக்கிறோம். இலங்கையில் இஸ்லாமிய இலக்கியப் படைப்புக்கள் சிங்கள வாசகர்களிடையே போதுமான அளவு சென்று சேர்ந்திருக்கின்றன என நீங்கள் கருதுகிறீர்களா? இல்லாவிட்டால் அதற்கான காரணமென்ன?
பதில் : இலங்கையின் இஸ்லாமிய இலக்கியமானது சிங்கள வாசகர்களிடையே போதுமான அளவு சென்றடையவில்லை. இலங்கையின் இஸ்லாமிய இலக்கியம் எனும் போது அதைக் கூட போர் பாதித்திருக்கிறது.
யுத்த காலத்தில் கூட இஸ்லாமிய இலக்கியப் படைப்புக்கள் பலவும் அதிகளவில் கிழக்கு மாகாணத்தில் படைக்கப்பட்டிருக்கின்றன. யுத்தத்தின் காரணமாக அவை குறித்து பெரிதளவில் பேசப்படவில்லை. தமிழ் மொழியில் எழுதப்படும் தரமான சிறந்த இலக்கியப் படைப்புக்களை மொழிபெயர்ப்பதை விட்டு விட்டு, நன்றாக விற்பனையாகக் கூடிய இரண்டாந்தர தொகுப்புக்களை மொழிபெயர்ப்பு செய்து இலங்கையில் புத்தக வியாபாரிகளிடம் சேர்ப்பிப்பதைத்தான், தமிழ்மொழியிலிருந்து சிங்கள மொழிக்கு மொழிபெயர்க்கும் அனேகமானவர்கள் செய்து வருகிறார்கள். எனவே அவற்றை வாசிக்கும் சிங்கள வாசகர்கள் இவ்வளவுதான் தமிழ் இலக்கியம், இவ்வளவுதான் இஸ்லாமிய இலக்கியம் என அந் நூல்களைக் கொண்டு வரையறுத்துக் கொள்கிறார்கள். இந் நிலைமை மாற்றப்பட வேண்டும்.
கேள்வி : இலங்கையில் 1950 களிலிருந்து அதிகளவில் இனக் கலவரங்கள் ஏற்பட்டுக் கொண்டேயிருக்கின்றன. அண்மையில் கூட இஸ்லாமிய சமூகத்தினருக்கெதிராக அவ்வாறானதொரு இனக் கலவரம் மூண்டது. இவ்வாறான நிகழ்வுகள் ஏற்படுத்தும் தாக்கமும், மன அழுத்தமும் ஒரு படைப்பாளியாக உங்களைப் பெரிதும் பாதிக்கும். இன ஒற்றுமையை வலியுறுத்தி பல படைப்புகள் வருகின்றபோதிலும், இப்போதும் கூட இலக்கியவாதியாகவோ, படைப்பாளியாகவோ நாங்கள் இருக்கும் இடம் குறித்து உங்களால் திருப்திப்பட முடிகிறதா? இன ஒற்றுமைக்காக ஒரு இலக்கியவாதிக்கு, படைப்பாளிக்குள்ள பொறுப்புக்கள் எவை?
பதில் : தற்கால இலங்கையானது, இரு புறமும் வெட்டக் கூடிய கத்தி போன்றிருக்கிறது. ஒரு புறம் இன வாதம். மறு புறம் சிறுபான்மை மக்களை அடக்கியாளக் கூடிய அரசியல் வியாபாரம். அரசியல்வாதிகள் எவ்விதத் தயக்கமுமின்றி தமது இலாபங்களுக்காக வேண்டி சந்தர்ப்பங்களுக்கேற்ப கத்தியின் இரு புறங்களையும் பாவித்துக் கொண்டிருக்கிறார்கள். இந்த அரசியல்வாதிகளிடையே எவ்வித இன மத வேறுபாடுகளுமில்லை. இந்த விடயத்தில் அனைத்து அரசியல்வாதிகளும் ஒன்றுதான். அவர்கள் உசுப்பேற்றி விடும் மக்கள் குறித்தும், அதன் காரணமாக தற்காலத்திலும், எதிர்காலத்திலும் இந் நாட்டுக்கும் நாட்டு மக்களுக்கும் ஏற்படக் கூடிய பாதிப்புக்கள் குறித்தும் எவருமே கவனத்தில் கொள்வதில்லை.
அண்மையில் வெளிவந்து பலரதும் பாராட்டுக்களைப் பெற்ற 'கூம்பியோ (எறும்புகள்)' எனும் சிங்களத் தொலைக்காட்சி நாடகத்தின் ஒரு பாகத்தை நானும் பார்த்தேன். அதில் பொட்டு வைத்திருக்கும் ஒரு தமிழ்ச் சிறுமி ஒரு பணக்கார வீட்டில் வேலை செய்கிறாள். அவ் வீட்டுக்கு பொருட்களை வினியோகிக்க வரும் ஒரு சிங்கள இளைஞனைக் கண்டு அவள் புன்னகைக்கிறாள். அவனோடு கொஞ்சிக் கதைக்கவும், தனது தொலைபேசி இலக்கத்தை அவனுக்குக் கொடுக்கவும் அவள் விரும்புகிறாள். அதற்கு முன்பு ஆண்கள் எவரையுமே கண்டதில்லை போல அவளது நடவடிக்கையின் மூலம் கேவலமாக அத் தமிழ்ச் சிறுமி சித்தரிக்கப்படுகிறாள்.
இக் காட்சியை நாடகத்தின் இயக்குனர் நகைச்சுவைக்காகச் சேர்த்திருக்கக் கூடும். கடந்த காலத்திலும் அப்படித்தான் இருந்தது. அனேகமான சிங்களத் திரைப்படங்களிலும், சிங்கள நாடகங்களிலும் பார்வையாளர்களை சிரிப்பூட்டுவதற்காக வேலைக்காரியாகவும், தோட்டக்காரனாகவும் தமிழ்க் கதாபாத்திரங்களை நுழைத்திருப்பார்கள். அவர்களை கேவலமாக சித்தரிப்பார்கள். முப்பது வருடங்களுக்கு முன்னரும் இந்த நிலைமைதான் இருந்தது. இப்போதும் அப்படித்தான் இருக்கிறது. எனவே இவ்வாறான படைப்புக்களை பார்க்கும், வாசிக்கும் பெரும்பான்மை சமூகமானது, சிறுபான்மை சமூகத்தை கேலிக்குரியதாகத்தான் கருதுகிறது. அவர்களை வெறுப்போடு பார்க்கிறது.
இன ஒற்றுமைக்காக உருவாக்கப்படும் இவ்வாறான படைப்புக்களில் கூட சிறுபான்மையினரை கேலியாகச் சித்தரிக்கும்போது இலங்கையில் பெரும்பான்மை சமூக கலைஞர்களைப் போலவே இலக்கியவாதிகளும் இன ஒற்றுமை என வரும்போது அவர்கள் இருக்குமிடத்தைக் குறித்து திருப்திப்பட முடியாது. இன ஒற்றுமை குறித்துச் சிந்திக்கும் எந்தவொரு கலைஞருக்கும், எந்தவொரு இலக்கியவாதிக்கும் இருக்க வேண்டிய பொறுப்பு என்பது சிறுபான்மையினரை கேலிக்குரியவர்களாக்காமல், அவர்களை மோசமானவர்களெனச் சித்தரிக்காமல் படைப்புக்களை உருவாக்குவதாகும்.
அண்மையில் கண்டியில் இடம்பெற்ற இனக் கலவரத்தின் போதும் அதுதான் நடந்தது. ஊரடங்குச் சட்டம் அமுலிலிருக்கும்போது கூட இனவாதக் கும்பலுக்கு அவ்வளவு மோசமான தாக்குதல்களையும், தாம் விரும்பியவாறு நிகழ்த்த முடிந்திருக்கிறது. அதாவது, அரசையும், சட்டத்தையும் கவனத்திலேயே கொள்ளாது தெருவிலிறங்கி பகிரங்கமாக சிறுபான்மையினரைத் தாக்கி, அவர்களது சொத்துக்களையும், உயிர்களையும் அழிக்க முடியுமாக இருக்கும் ஜனநாயக நாடு இது என்பதுதானே? இது எவ்வாறு சாத்தியமானது?
அனேகமான கலை, இலக்கியப் படைப்புக்களில் இலங்கையில் ஒரு இன சமூகத்தினரை, ஏனைய இன சமூகத்தினரை விடவும் சிறந்தவர்களாக சித்தரித்துக் காட்டுவதால் வந்த வினைதான் இல்லையா? எனவே இன ஒற்றுமை குறித்து இலக்கியவாதிக்கு, படைப்பாளிக்கு இருக்கும் பொறுப்புதான் ஏனைய மக்களையும் கௌரவமாக, அவர்களது மனித உரிமைகளுக்கு பாதிப்புகள் ஏற்படாதவண்ணம் தமது கலை, இலக்கியப் படைப்புக்களை சமூகத்துக்கு வழங்குவதாகும்.
கேள்வி : நீங்களும், உங்கள் சகோதரியும் சிங்கள மொழிப் படைப்புக்கள் பலவற்றை தமிழுக்கு மொழிபெயர்த்திருக்கிறீர்கள். அவற்றுக்கு தமிழ் வாசகர்களிடையே எவ்வாறான வரவேற்பிருக்கிறது?
பதில் : யுத்த காலத்தில், போரில் சிக்கித் துயருற்ற அப்பாவித் தமிழ் மக்கள் குறித்து சிங்களத்தில் எழுதப்பட்ட கவிதைகள், சிறுகதைகள், கட்டுரைகள் போன்றவற்றையே நாங்கள் மொழிபெயர்த்திருக்கிறோம். அவற்றை எழுதியவர்கள் சிங்கள இலக்கியவாதிகள். எனவே அவற்றின் தமிழ் மொழிபெயர்ப்பு படைப்புக்களை உலகம் முழுவதுமிருக்கும் தமிழ் வாசகர்கள் வாசித்துவிட்டு எம்மிடம் எழுப்பிய முதல் கேள்வி, 'பாதிக்கப்பட்ட தமிழ் மக்களுக்காக குரலெழுப்பும் சிங்களவர்களும் இலங்கையில் இருக்கிறார்களா?' என்பதுதான்.
அது வரையில் சிங்களவர்கள் அனைவருமே, இலக்கியவாதிகளும் கூட தமிழர்களை எதிர்ப்பவர்கள், தமிழர்களை வாழ விடாதவர்கள் என்றுதான் அவர்கள் எண்ணிக் கொண்டிருந்திருக்கிறார்கள். எனவே இன ஒற்றுமையை வலியுறுத்தி சிங்களத்தில் எழுதப்பட்ட சிறந்த படைப்புக்களைத் தேர்ந்தெடுத்து மொழிபெயர்த்து வழங்கி அந்த எண்ணத்தை மாற்ற எம்மால் முடிந்தது. இந்தியாவிலும், உலகம் முழுவதிலுமுள்ள தமிழ் வாசகர்கள் சிங்களத்தில் எழுதப்படும் இலக்கியப் படைப்புக்களை வாசிக்க ஆர்வத்தோடு இருக்கிறார்கள். மொழிப் பிரச்சினைதான் இங்கு சிக்கலாக இருக்கிறது. தற்போது எமது மொழிபெயர்ப்புக்களின் மூலம் அச் சிக்கலை ஓரளவு தீர்க்க முடிந்திருக்கிறது எனக் கூறலாம். எதிர்காலத்திலும் அதனை ஒரு சேவையாகச் செய்ய நாங்கள் காத்திருக்கிறோம்.
•This e-mail address is being protected from spambots. You need JavaScript enabled to view it•
•<• •Prev• | •Next• •>• |
---|