முதலில் இந்த நாவல் வெளியீட்டைப்பற்றிச் சிறிது சொல்ல வேண்டும். இந்த நாட்டின் முக்கியமான ஒரு தனியார் புத்தக வெளியீட்டு நிறுவனமான கொடகே புத்தக நிறுவனம் வருடந்தோறும் நூற்றுக்கான நூல்களை வெளியீட்டு வருகிறது. அது சிங்களம் மற்றும் ஆங்கில நூல்களை மட்டுமே வெளியிடாது, கடந்த 8 வருடங்களாக மேலாகச் சுயமான தமிழ் நூல்களைவெளியீட்டதும், தமிழ் நூல்களைச் சிங்களத்திலும், சிங்கள நூல்களைத் தமிழிலும் வெளியிட்டதும், அவர்கள் நடத்தும் கொடகே சாகித்திய விழா, கையெழுத்துப் பிரதிகளுக்கான போட்டிகள் நடத்தி விருதுகளும் பணப்பரிசில்கள் வழங்கல் மற்றும் மூத்த எழுத்தாளர்களைக்கெளரவித்தல் போன்ற சகல நிகழ்வுகளிலும் தமிழ் எழுத்தாளர்களை இணைத்துக் கொண்டு சிங்கள எழுத்தாளர்களுக்கு வழங்கப்படும் அதே அளவான கெளரவத்தையும் வழங்கி வருகிறது. அந்த வரிசையில் 2017 ஆம் ஆண்டுக்கான கையெழுத்துப் போட்டியில் சிறந்த நாவலுக்கான விருதினைப் பெற்றுக்கொடகே நிறுவனத்தினாலேயே நூலாக பிரமிளாபிரதீபனின் கட்டுபொல் எனும் இந்த நாவல் பிரசுரமாகி இருக்கிறது.
கட்டுபொல் எனும் இந்த நாவல் ஈழத்து நாவல் இலக்கியத்தில் குறிப்பாக மலையக நாவல் இலக்கியத்தில் மிகக்கவனத்தினைப் பெறுவதற்குக் காரணம் இது வரை காலம் மலையகச் சமூக அரசியல் துறையினராலும் மலையக இலக்கியத்தின் புனையாக்கத்துறையிலும் பேசப்படாத ஈழத்தின் தென்பகுதி பெருந்தோட்டப் பகுதி ஒன்றின் மக்களின் வாழ்வியலைப் பேசுகிறது என்ற வகையிலும், இதுவரை இந்தப் பெருந்தோட்டத்தின் பயிர் செய்கையான கட்டுபொல்(முள் தேங்காய்) எனும் பயிர் செய்கை பற்றிப் பேசுகின்ற,அப்பயிர் செய்கையில் ஈடுபடும் மக்களின் வாழ்வியலையும் பேசுகின்ற முதல் மலையக நாவல் என்ற வகையிலும் இந்த நாவல் நமது கவன ஈர்ப்பைப் பெறுகிறது.
அடுத்து ஈழத்துப் பின்காலனிய இலக்கியமாகவும் இந்த நாவல் வெளிப்பட்டிருப்பதும் இந்த நாவல் முக்கியத்துவம் பெறுவதற்கான பிரதானக் காரணியாகிறது.
ஈழத்துப்பின்காலனிய இலக்கியம் என்ற நோக்கில் 60களுக்கு பின்னான ஈழத்து மலையகத் தமிழ் இலக்கியம் முன்னிலை வகிக்கின்றது. ஈழத்து மலைய தமிழ் இலக்கியத்தை ஈழத்துப் பின்காலனிய இலக்கியமாகப் பார்ப்பதற்கு என்ன தேவை, என்ன பொருத்தப்பாடு இருக்கிறது என்பது கேள்விகள் எழலாம்.
பின்காலனிய நிலவரத்தின் முக்கிய ஒர் அம்சமாக நிலம் இழந்தவர்களின் குரல் என்பது சொல்லப்படுகிறது. காலனியத்தால் பல நூற்றாண்டுகளுக்கு முன்னதாக ஈழத்து மண்ணுக்குக் கொண்டு வரப்பட்டு, பெருந்தோட்டப் பயிர் செய்கையில் ஈடுபடுத்தப்பட்டு, பல தலைமுறையாக இலங்கையில் வாழ்ந்து மடிந்து, சுதந்திர இலங்கை என்ற என்று சொல்லப்பட்டாலும் காலனிய மனோபாவம், காலனியச் சமூகக் கட்டமைப்பின் எச்சொச்சங்கள், காலனிய அரசியல் சட்ட அமைப்பின் தொடர்ச்சி போன்ற நிலவரங்களின் காரணமாக அந்த மலையக மக்கள் இலங்கை தேசத்திலிருந்து நாடு கடத்தப்பட, காலனிய ஆட்சி தொடக்கம் பின்காலனிய கால ஆட்சி வரை பல இன்னல்களையும் துயரங்களை அனுபவித்த, அத்தகைய நிலைமைகளுக்கு எதிராகப் போராடிய, நிலம் இழந்தவர்களின் குரலாக மலையகத் தமிழ் இலக்கியம் வெளிப்பட்டதன் காரணமதாக அது ஈழத்துப் பின்காலனிய இலக்கியப் போக்கில் முதன்மையான அடையாளத்தினைப் பெறுகிறது.
அந்த வகையில் நிலம் இழந்தவர்களின் குரல் என்பது 60களுக்கு பின் மலையக மக்கள் இருப்பில் ஒலித்த போதும் கூட அக்குரல் சமூக அரசியல் நிறுவனமயப்படுத்தப்படாவிடினும்ஈழத்துத் தமிழ் இலக்கிய வரலாற்றில் மலையக இலக்கியத்தில்தான் முதல் முதலாக அக்குரல்ஒலித்தது எனலாம். அக்குரல் 80களுக்கு பின்னான ஈழத்துத் தமிழ் இலக்கியத்தில் (இதில் புலம்பெயர் இலக்கியமும் அடங்கும்) ஒலித்த அக்குரலுக்கு முன்னோடியாக மலையகத் தமிழ் இலக்கியத்தில் ஒலித்த நிலம் இழந்தவர்களின் குரல் அமைந்தது. அந்த வகையில் ஈழத்து மலையகத் தமிழ் இலக்கியம் ஈழத்துப் பின்காலனிய இலக்கியத்தின் முன்னோடியாகத் திகழ்கிறது. அந்த வரிசையில் பிரமிளா பிரதீபனின் கட்டுபொல்எனும் இந்த நாவலும் ஈழத்துப்பின்காலனிய இலக்கியமாக நம்மால்அடையாளப்படுத்தப்படுகிறது.
மேலும் இந்த நாவல் ஒரு பின்காலனிய இலக்கியமாக அடையாளப்படுத்துவதற்கு இந்த நாவல் பேசும் இன்னுமொரு முக்கிய அம்சமும் தகமையாகச் சொல்ல வேண்டி இருக்கிறது.
காலனியமானது இலங்கையில் மேற்கொண்ட வேலைத்திட்டங்களைத் தொழில் திட்டங்களை அதாவது பல்வேறு பயிர்செய்கைகளை மலைய பகுதிகளுக்குக் கொண்டு வந்து அப்பயிர் செய்கைகளுக்காக உழைக்க இந்தியாவிலிலிருந்து லட்சக்கணக்கான மக்களைக்கொண்டு வந்தது. (அப்பயிர் செய்கைகளில் தேயிலை ரப்பர், கொக்கோ போன்றவைகள் அடங்கும்.)
இவ்விடத்தில் இந்தியாவின் முக்கிய ஆய்வாளர்களில் ஒருவரான பிபன் சந்திரா தனது காலனியம் எனும் நூலில்,காலனியம் குறித்தும், அது தனது ஆதிக்கத்திற்கு உட்பட்ட நாடுகளில் புகுத்திய தொழில் துறைகளைப் பற்றியும் பேசும் பொழுது முன் வைத்த ஒரு குறிப்பினை இங்கு நினைவுக் கூருவது பொருத்தமாக இருக்கும் என நினைக்கிறேன்.
'காலனியங்கள் தங்களது நாடுகளில் உயர் தொழில் நுட்பம், உயர் உற்பத்தி ஆற்றல், உயர் ஊதியம்,மூலதனம் அதிகமாகத் தேவைப்படும் பொருட்களை உற்பத்தி செய்ய, தம் ஆதிக்கத்திற்கு உட்பட்ட காலனிய நாடுகளைத் தாழ்ந்த தொழில் நுட்பம், தாழ்ந்த உற்பத்தி ஆற்றல், குறைந்த ஊதியம், மற்றும் உழைப்பு அதிகமாகத் தேவைப்படும் பொருட்களை உற்பத்தி செய்யப்பயன்படுத்திக் கொண்டன'' என்பார்.
ஆனால் காலனியத்திற்குப் பிறகான சுதந்திர நாடு எனச்சொல்லப்பட்ட இலங்கை நாட்டில் நாம் முன் குறிப்பிட்ட்து போல் காலனிய மனோபாவம், காலனியச்சமூகக் கட்டமைப்பின் எச்சொச்சங்கள், ,காலனிய அரசியல் சட்ட அமைப்பின் போன்ற நிலவரச் சூழலில் காலனிய நாட்டவரானதோட்டத்துறை சார்ந்த ஜெரோமி வெல்ஸ் (Jeromy Wales) என்பவரால் 1966 ஆம் மலேசியாவிலிலிருந்து கொண்டு வரப்பட்டு இலங்கையின் காலி மாவட்டத் தோட்டங்களில் கட்டுபொல் (முள் தேங்காய்) அறிமுகப்படுத்தப்பட்டு, ஏலவே காலனியத்தால் தேயிலை ரப்பர் போன்ற பயிர் செய்கையில் பணி செய்து கொண்டிருந்த அப்பகுதி மக்கள்கட்டுபொல் பயிர் செய்கைக்கு மாற்றப்பட்டார்கள். அந்தப் பயிர் செய்கை நூற்றுக்கான ஏக்கர் நிலத்தில் நடைபெற்று, தனியார் தொழில் துறையினரால் கையாளப்பட்டது. அத்தோடு ஏலவே காலனியத்தால் கொண்டு வரப்பட்ட பயிர் செய்கைகளுக்குத் தேவைப்பட்ட உழைப்பை விடக் கடின உழைப்பை வேண்டி நின்ற ஒரு பயிர் செய்கையாக கட்டுபொல் பயிர் அமைந்தது. அத்தோடு அதே குறைந்த அளவான ஊதியமே அம்மக்களுக்கு கட்டுபொல் செய்க்கைக்காகவும் வழங்கப்பட்டது.
பின்காலனியச் சூழலில் அறிமுகப்படுத்தப்பட்ட பயிர் செய்கை என்ற வகையிலும், அப்பயிர் செய்கையில் ஈடுபடுத்தப்பட்ட பிரதேச மக்களைப் பற்றியும்,கட்டுபொல் பயிர் செய்கை பற்றியும் பேசுகின்ற நாவல் என்ற வகையில் பிரமிளாவின் கட்டுபொல் எனும் இந்த நாவல் ஈழத்துப் பின்காலனிய இலக்கியமாக அடையாளப்படுத்துவதற்கான தகமையை பெற்றுக் கொள்கிறது.
அத்தோடு பிரமிளா இந்த நாவலை எழுதும் செய்தி அறிந்து நண்பர் திலகர் அவர்கள் அவரை ஊக்குவிக்கும், பத்திரிகையில் எழுதியகட்டுபொல பற்றிய குறிப்பொன்றில் குறிப்பிட்டது போல் பிரமிளா வின் கட்டுபொல் நாவல் பேசி இருக்கும் பிரதேசத்தைப் பற்றியும் கட்டுபொல் என்ற பயிர் செய்கை பற்றியும் 60களுக்கு பின்னான மலையக அரசியல் சமூக இலக்கிய வரலாற்றில் பேசப்படாத நிலையில், அதைப்பற்றி முதல் முதலாகப் பேசுகின்ற மலையக இலக்கியப் படைப்பாக பிரமிளாவின் இந்தக் கட்டுபொல் நாவல் அமைகிறது.
இனி இவ்விடத்தில் நாவலின் கட்டமைப்பைப்பற்றிச் சிறிது சொல்ல வேண்டும். பிரமிளா இந்த நாவல் முற்றும் முழுதுமாக யதார்த்தப் பாணியிலேயே எழுதி இருக்கிறார். அதற்கு உதாரணமாக பிரமிளாவின் நாவல் பேசும் பிரதேசச் சூழலில் தமிழ்-சிங்களக் கலப்படமும், இரு சமூகங்களிடையிலான புரிந்துணர்வினையையும், புரிந்துணர்வின்மையையும் அதே நிலையில் சித்திரித்திருப்பததையும் சொல்லாம்.
மேலும் சற்றுக் குறைவாக வேகத்துடனும் அந்த நாவல் நடக்கின்ற காலத்தையும் துல்லியமாகவும் வெளிப்படுத்தும் வகையில் இந்த நாவலைப் பிரமிளா முன் வைத்திருந்தால், இந்த நாவல் மேலும் விரிவாக அமைந்திருக்கும். அத்தோடு அந்த நாவல் நடக்கின்ற காலகட்டத்தைத் துல்லியமாக முன் வைத்திருந்தால், அக்கால கட்டச் சமூக அரசியல் பொருளாதார நிலவரங்களுக்கும் அந்த நாவலின் உள்ளடக்கத்திற்குமான ஊடாட்டத்தை வாசகர்கள் அறிந்து கொள்ளக் கூடியதாக இருந்திருக்கும். ஆனாலும் இந்த நாவல் கொடகே கையெழுத்துப் போட்டிக்காக எழுதப்பட்டமையால் என்னவோ போட்டியில் நாவல் பிரதிக்கான முன்நிபந்தனை சொல்லப்பட்ட பக்க அளவுகளை பிரமிளா மனங்கொள்ள வேண்டி இருந்ததனால் இந்த நாவல் வேகமாகவும் சுருக்கமாகவும் முடிந்திருக்கிறது. அத்தோடு இது இவரது முதலாவது நாவல் என்ற வகையிலும் அடக்கமாக வெளிப்பட்டிருக்கிறார் எனவும் தெரிகிறது.
இந்த நாவலின் பாத்திர வார்ப்பினைப் பொறுத்த வரை பிரமிளா வளர்ந்து வரும் மலையக எழுத்தாளராயினும் தேர்ந்த ஒரு நாவலாசிரியரின் திறனுடன் பாத்திரங்களை வார்த்திருப்பது பாராட்டுக்குரியது.
இனி இன்றைய காலகட்டத்தில் பிரதியின் அரசியலைப்பற்றி விசாரமும் பிரக்ஞையும் தீவிரமாக நிலவும் சிந்தனை சூழலில், ஒர் இலக்கியப் பிரதி எந்த மொழியில், எந்தப் பார்வையில் அதாவது அப்பிரதி பெண்ணிய மொழியில் பேசுகிறதா? ஆணிய மொழியில் பேசுகிறதா? பெண்ணியப் பார்வையில் பேசுகிறதா?அல்லது ஆணியப் பார்வையில் பேசுகிறதா? என்ற விசாரணைக்கான கேள்விகள் தவிர்க்க முடியாமல் விமர்சக வாசகத் தளத்தில் எழுகின்றன.
அந்த வகையில் பிரமிளா பிரதீபன் இந்த நாவல் பிரதி எந்த மொழியில் எந்தப் பார்வையில் பேசுகிறது ? என்ற கேள்வி இந்த நாவலின் வாசிப்பின் தொடக்கத்தில் எழுந்தது. அதுவும் அவர் ஒரு பெண் எழுத்தாளர் என்ற வகையில் அந்தக் கேள்வி எனக்குள் அழுத்தமாகவே எழுந்தது. அக்கேள்வியைச் சற்று இலகுபடுத்திக் கேட்பது என்றால் பிரமிளா தனது இந்த நாவலில் யார் பக்கம் நின்று பேசுகிறார்? என்பதாக அமையும்.அந்தக் கேள்வியுடன் இந்த நாவல் பிரதியை வாசித்த முடிந்த பின் அந்த நாவலில் அதில் வரும் எல்லாப் பெண்களின் பக்கம் நின்றே பிரமிளா பேசுகிறார் என்பது எனக்கு உறுதியாகியது. அந்த நாவலில் வரும் ஒவ்வொரு பெண்ணும் பெண்ணாக இருப்பதால் மட்டுமே அந்த நாவலில் வரும் பெரும்பாலான ஆண்களால் வன்முறைக்கும் ஆதிக்கத்திற்கும் உட்படுவதையும் எடுத்துக் காட்டி அப்பிரதேசப் பெண்களின் இருப்பு நிலை எதிர்கொள்ளும் போராட்டத்தையும் சித்திரிக்கும் பொழுதெலாம். கதைசொல்லியான பிரமிளா பெண்களுக்காவே பேசுகிறார். ஒரு பெண் படைப்பாளியின் பிரதி எந்த அரசியலில் எந்த மொழியில் பேச வேண்டுமோ அந்த அரசியலில் .அந்த மொழியில் இந்த நாவலில் பிரமிளா பேசியிருப்பது என்பது அவரது தனித்துவமாக மிளிர்கிறது.
மொத்தத்தில் இலங்கையின் தென்பகுதியின் பெருந்தோட்ட மக்களை பற்றியும், அப்பிரதேசத்தில் தற்காலத்தில் முக்கிய பயிர் செய்கையான கட்டுபொல்(முள் தேங்காய்) பற்றியும் மலையக இலக்கிய வரலாற்றில் முதல் முதலாக ஒரு நாவலாக தந்த சாதனைக்கும், மலையக இலக்கியத்தில் பெண்ணிலை நின்று எழுதப்பட்ட பிரதிகள் பற்றிய ஆய்விற்கு பயன்படும் வகையில் பிரமிளா பல சிறுகதைப் பிரதிகளை தந்திருந்த போதும், இன்று அத்தகைய ஆய்வுக்காக பயன்படும் வகையில் ஒரு நாவல் பிரதியினையும் தந்தமைக்கும் பிரமிளா பிரதீபனுக்கு எனது பாராட்டுகள்.
•This e-mail address is being protected from spambots. You need JavaScript enabled to view it•
•<• •Prev• | •Next• •>• |
---|