தஞ்சையை விட அதிக விறுவிறுப்பும், பரபரப்பும் கொண்டு இயங்கும் நகரம் கும்பகோணம் என்பதை காண்பவர் யாவரும் உணருவர். இதற்கு காரணம் இங்குள்ள பாடல் பெற்ற தளங்கள் தாம். அதிலும் கும்பகோணத்தை சுற்றியுள்ள கோவில்கள் பலவும் 12 ராசிக்குரிய அதிபதிகளை, சிறப்பாக 9 கோள்களை முதன்மைப்படுத்தும் வகையினவாக உள்ளன. இவை எல்லாம் கும்பகோணத்தை சுற்றி 40 கிலோ மீட்டர் தொலைவில் அமைந்து உள்ளன.இதனால் 9 கோள்களின் தோஷம் நீங்க பரிகாரம்
செய்யவேண்டி பலவேறு ஊர்களிலிருந்து மக்கள் நாள்தோறும் வருவதால் கும்பகோணம் ஒரு ஆன்மீகத் திருச்சுற்றுலா தலமாக உள்ளது. அதன் காரணமாகவே இவ்வூரில் பல தங்கும் விடுதிகள், கடைகள் என சுற்றுலாவினால் தொழில்வளமையும் பொருளியல் வளமையும் பொங்குகிறது. திருச்செலவு தான் இவ்வூர் இயக்கத்திற்கு உயிர்நாடி.
இவ்வூரில் பல கோவில்கள் அமையப்பெற்றாலும் கல்வெட்டு, சிற்பம் பழமை ஆகியவற்றில் முதன்மையானது என குறிக்கத்தக்க பெருமை உடைய கோவில் .அருள்மிகு நாகேசுவர சுவாமி திருக்கோயில்.. ஆதி கும்பேசுவரர் கோவில் போல் மிகப் பெரிதாக இல்லாவிட்டாலும் மக்கள் கூட்டம் நிரம்பி இராவிட்டாலும் சிறப்பு என்னவோ இந்த கோவிலுக்கு தான்.
பொதுவாக கும்பகோணத்தை சுற்றியுள்ள கோவில்களில் கருவறையையோ அல்லது மண்டபத்தையோ ஒட்டி தேர்ச்சக்கரங்கள் பொருத்தி குதிரை பூட்டி இழுப்பது போலவும் யானை இழுப்பது போலவும் கட்டி இருக்கிறார்கள். இது கட்டடபாணி பிற்கால சேர்கையாக இருக்குமோ என்ற ஐயத்தை ஏற்படுத்துகிறது. தொண்டைமண்டல கோவில் தூண்களில் புடைப்பு சிற்பம் இருப்பது போல இக்கோயில்களில் புடைப்பு சிற்பம் அவ்வளவாக காணப்படாமல் பூக்கோலம், மரம், கொடி போன்றவையே அதிகமாக பொதுவாக வடிக்கப்பட்டுள்ள்ளன. மேலும் பல மண்டபத் தூண்கள் கருநாடக கோவில் கட்டட அமைப்பை கொண்டுள்ளதானது இவை விசயநகர ஆட்சியில் 14 ஆம் நூற்றாண்டில் கட்டப்பட்டிருக்க வேண்டும் என்ற எண்ணத்தை உருவாக்குகின்றன, அதிக எண்ணிக்கையில் பணியாளர்களை அமர்த்தி இக்கோயில்கள் நன்றாகக் பேணப்பட்டு வருகின்றன.
பேருந்து நிலையத்திலிருந்து கோவில்கள் 2 கிலோ மீட்டர் தொலைவில் அருகருகே அமைந்துள்ளதானது இவ்வூர் முன்பு 2 கிலோமீட்டர் பரப்பளவிற்கும் குறைவாக இருந்திருக்கும் என்பதை காட்டுகிறது. இனி படங்கள் காண்போம்.
கருவறை புறச்சுவரை சுற்றிலும் சோழ வேந்தர், வேந்திகளின் சிலைகள் கண்கொட்டாமல் பார்க்கும்படியாக அழகுற செதுக்கி வடிவமைக்கப்பட்டுள்ளன. கச்சை இல்லா முலைமார்பு பல்லவர் உருவங்கள் தாமோ என மதிமயக்குகின்றன. எனினும் சிலைகளுக்கு அருகிலேயே வடிக்கப்பட்டுள்ள கல்வெட்டுகளை கொண்டு இவற்றின் காலத்தை அறியமுடியும் பல்லவரா/ சோழரா? என்றும் அறிய முடியும் என நம்பலாம்.
1. இளமை குலுங்கும் இளவரசி அல்லது இளைய அரசி.
2. தாலி அணிந்த வேந்தி /அரசி
3. நகையணி துறந்து பூணூல் மட்டுமே அணிந்து நோன்பு கோலத்தில் வேந்தர்.
4. காதில் குழையுடன் நோன்பிருந்த வேந்தன் இப்போது ஒயிலாக நிற்கிறான்.
5. சோழ வேந்தருக்கே உரிய தலைமயிர்கட்டு அணி. சிவப்பு கல்லில் இருந்து மாறுபட்ட பழுப்புகல் பிற்ப்பட்ட காலத்ததோ.
6. உலகப் பேரழகு தோற்கும் இந்த வேந்தியிடம்.
7. பேரமைதி தவழும் தோற்றம்.
8. வேந்தனுக்கு உரிய மிடுக்கு.
9. முறுக்கிய மீசை .உடைய வேந்தர்.
10. கையில்தாமரையுடன் வேந்திக்கு உரிய தோற்றத்துடன். 1 ஆம் பட பெண்ணின் முகச்சாயல் இவளுக்கு.
3 & 4 படங்கள் ஒரே ஆளுடையன. பிற வெவ்வேறு ஆள்களுடையவை .என்றாலும் ஒரே அரச குடும்பத்தவை.
தேராக மாற்றப்பட்ட மண்டபம். சக்கரத்தில் 12 ராசிக்கு உரிய அதிபதிகள் புடைப்பு சிற்பம்.
சிற்பங்களில் அஜந்தா ஓவியங்களின் சாயல் உள்ளது ஆதலால் இச்சிலைகள் பல்லவர்கானதாய் இருக்கவேண்டும் என்ற ஐயம் உள்ளது எனக்கு . சிலைகளினமைப்பு, நகை அணி கவனிக்கப்பவேண்டியவை. சிந்துவெளி சிலையின் கைகளில் தோள் வலைகள் இந்த வேந்தியின் கைகளில் உள்ளன. மேலும் சிந்துசிலை பெண் தொடையில் கைவைத்துள்ளது போலவே வேந்தியின் சிலையும் தொடையில் கை வைத்துள்ளது நோக்குக. கழுத்தில் ஆரம். இவற்றுக்குள்ள ஒற்றுமை காணும் போது ஓவியம்,
சிற்பம், பொற்கொல்லத் தொழில் என ஒரே பாணியை(style) பின்பற்றி வந்தது தெரிகின்றது. இந்த ஒப்புமை சிந்து நாகரிகம் தமிழரது என்று ஒப்புக்கொள்ளத தூண்டுகிறது.
•This e-mail address is being protected from spambots. You need JavaScript enabled to view it•
•<• •Prev• | •Next• •>• |
---|