கி.ரா எனும் இரண்டெழுத்து மந்திரம் :
கி.ரா. ஒரு எளிமையான கதைச்சொல்லி. இவருடைய எழுத்துகளில்,வருணணைகளில் மாடமாளிகைகள் இருக்காது. இளவரசிகளின் பாதாதி கேச வருணணைகள் இருக்காது.ஏழை எளிய மக்களின், நடுத்தர வர்கத்தினரின் உழைப்பும், குடிசைகளின் வாழ்வும், கூழ்குடித்து ஏர்பூட்டி உழும் மக்களின் வாழ்வியல் எனும் நிழல் ஓவியங்கள் நம் மனக்கண்ணில் படரவிடுவதில் அசாத்திய திறமைமிக்க எழுத்தாளர். பல்கலைக்கழகத்தில் படிக்காவிடினும், புதுவை பல்கலைக் கழகத்தின் சிறப்பு பேராசிரியராகப் பணியாற்றியவர். எதார்த்த எழுத்தாளர் கு.அழகிரிசாமியின் பால்ய காலம் முதலான நண்பர்.கரிசல் கதைகளின் தந்தையான கி.ரா. நாட்டுப்புறவியலில் சிறந்து விளங்குபவர்.கம்யூனிஸ சிந்தாந்தி. இரு முறை போராட்டங்களில் பங்கேற்றுச் சிறைச் சென்றவர். இவரது ‘கிடை’ குறுநாவல் ‘ஒருத்தி’ எனும் திரைப்படமாக எடுக்கப்பட்டு சர்வதேச திரைப்பட விழாவில் திரையிடப்பட்டது. நாட்டுபுறக் கதைக் களஞ்சியம் உருவாக்கியவர். சிறுகதை, நாவல், நாட்டுபுறவியல் என தமிழின் பல்வேறு பரிமாணங்களில் மிளிர்ந்தவர். தமிழ் வளர்ச்சி ஆராய்ச்சி மன்ற விருது, இலக்கியச் சிந்தனை விருது, சிறந்த எழுத்தாளர் போன்ற விருதுகளைப் பெற்றவர். அனைத்திற்கும் முத்தாய்ப்பாய் ‘கோபல்லபுரத்து மக்கள்’ எனும் நாவலுக்காக 1991 இல் சாகித்ய அகாதெமி விருதுப்பெற்றவர்.அவரது கதைகளில் மிளிரும் கரிசல் மக்களின் வாழ்வியலை ஆய்வதாய் இக்கட்டுரை அமைகிறது.
கதவு காட்டும் ஏழ்மை:
‘வித்தக கலைஞன் தொட்டுவிட்டால் விறகு கட்டைக்கூட வீணையாகலாம்’ எனும் பழமொழிக்கு ஏற்ப கதவு எனும் ஜடப்பொருள் இக்கதையில் கி.ராவின் படைப்பாளுமையால் புராதனச் சின்னமாகிறது.கதை முழுவதும் லட்சுமி, சீனிவாசன் எனும் இருசிறுவர்களின் வழி ஏழ்மை வாழ்வு சித்திரிக்கப்படுகிறது. கதவு அவர்கள் பயணம் செய்யும் பேருந்தாகிறது. அதன் சுழற்சி சுற்றளவில் திருநெல்வேலியும் சுற்று வட்டாரங்களின் தூரங்களும் அடங்கி விடுகின்றன. வாழ்ந்து கெட்ட குடும்பத்தின் பணக்கார பழமையை விடாது காத்துக் கொண்டிருப்பது அது ஒன்றுதான். அதன் மீது சிறுவர்கள் விளையாடி மகிழ்கிறார்கள், அதை தன் தோழனாக பாவிக்கிறார்கள். அவர்களுடைய அப்பா மணிமுத்தாறில் கூலிவேலை செய்கிறாh.; அம்மா காட்டு வேலைக்கு சென்று விடுகிறாள்.
ஒரு தீப்பெட்டியில் இருந்த நாய் படத்தைக் கம்மஞ்சோறு கொண்டு ஒட்டுகிறாள்.அதைப் பார்த்து கைத்தட்டி ஆரவாரிக்கிறார்கள். ஊர் தலையாரி வருகிறார். உங்க ஐயா எங்கே? என கேட்கிறான். குழந்தைகள் ஊருக்குப் போய் இருப்பதை கூற, வந்தா தீர்வை (வரி) கட்டச் சொல்லிவிட்டு போகிறார். மறுநாளும் வந்து கேட்கும் போது அம்மா ஐயா அவரு ஊரிலே இல்லை. மணிமுத்தாறு போயி அஞ்சு மாசமாச்சி ஒரு தகவலையும் காணோம். மூணு வருசமா மழை தண்ணி இல்லையே நாங்க என்னாத்தை வச்சி உங்களுக்கு தீர்வை பாக்கியை கொடுப்பொம்? ஏதோ காட்டிலே போய் கூலி வேலை செய்து இந்த கொளந்தைகளைப் காப்பாத்ரதே பெரிய காரியம். உங்களுக்குத் தெரியாதா? என்றாள். (ப.3 கி.ராஜநாராயணன் கதைகள்)
தீர்வை கட்டாததால் தலையாரி ஆட்களைக் கொண்டு கதவைத் தூக்கிச் செல்கிறார். கதவு இல்லாததால் கைக்குழந்தையை தேள் கடித்து விடுகிறது. அதனால் குழந்தை இறந்துவிடுகிறது. இரவில் கடுங்குளிரில் நடுங்குகிறார்கள.; காய்ச்சி வைத்திருந்த கஞ்சியை கதவு இல்லாததால் நாய் குடித்துவிடுகிறது.அவர்கள் பட்டினி கிடக்கிறார்கள். தூக்கிச் செல்லப்பட்ட கதவு பள்ளிக்கு அருகில் உள்ள சாவடியில் உள்ளதைக் கண்டு பூரிக்கிறார்கள்.கண்ணீர் வடிக்கின்றனர். அதை பலமாக பற்றிக்கொண்டிருந்தனர் என முடிக்கிறார் கி.ரா. கதை முழுதும் ஏழ்மை வாழ்வியல் சித்திரம் போல் தீட்டப்பட்டுள்ளது.
வாழ்ந்து நொடிந்து போன குடும்பம், குடும்பத்திற்காக மனைவி மக்களை விட்டுப்பிரிந்து வெளியூருக்குச் சென்று கூலி வேலை செய்யவேண்டிய நிலை, தீர்வைக் கட்டமுடியாததால் தன் பணக்கார வாழ்வின் எச்சமாய் இருந்த கதவையும் இழக்க வேண்டிய நிலை, தன் பச்சிளம் குழந்தையையும் தேள்கடிக்குமஇ; காய்ச்சலுக்கும் பறிகொடுக்க வேண்டிய நிலை ஆகியவை வறுமை வாழ்வியலின் எழுத்தோவியமாய் இக்கதையில் விரிகின்றன.
நைந்துப்போன வேட்டி:
ஊருக்கெல்லாம் தன் உழைப்பினால் சோறுபோடும் விவசாயி பட்டினியாகப் படுக்கிறான்.நெசவு நெய்து ஆடைக் கொடுப்பவன் கந்தல் உடுக்கிறான்.இறைவனின் படைப்பினில் இந்த உலகம் விந்தையானதுதான். தூங்காநாயக்கருக்கு இருப்பது ஒரே ஒரு வேட்டிதான். காரணம் வறுமை. அதையே அவர் துவைத்துத் துவைத்து உடுத்த வேண்டி உள்ளது. காற்றாட வெளியில் போக நினைத்தவருக்கு சனியன் புளியம்பழம் உருவில் தொற்றிக்கொள்கிறது. அதைக் குனிந்து எடுக்க முயலும்போது வேட்டி ரெண்டாக ஒருசாண் நீளத்திற்கு தைக்க முடியாதவாறு பிய்ந்துபோய்விடுகிறது.
1942 ஆகஸ்டு புரட்சியின்போது மக்கள் கிளர்ச்சியில் ஈடுபட்டனர்.அரசு காவலர்கள் மூலம் அடக்குமுறை செய்தது. போராடுபவர்களைக் கொடுமைப்படுத்தியது. அந்த நேரத்தில் ஒரு அரசியல்வாதி தூங்காநாயக்கரின் வீட்டில் ஒளிந்து கொள்ள போலீஸ் வந்து தூங்காநாயக்கரை அடித்து ‘நச்சி’ எடுத்துவிடுகின்றனர். பின்பு விட்டுவிடுகிறார்கள். ‘ஆகஸ்டு வீரா’; எனும் பட்டத்தை நூலிழையில் தவறவிட்டதால் சுதந்திர போராட்ட தியாகிகளுக்குக் கிடைக்கும் பென்ஷனும் கிடைக்காமல் போய்விடுகிறது. கிராமத்தில் ஒவ்வொரு பணக்காரர்களுக்கும் இருக்கும் வேட்டிகளையும், குழாய்களையும் நினைத்து தன்னுடைய வறுமை நிலைமைக்கு நொந்துகொள்கிறார். சுதந்திர தின வெள்ளி விழாவைக் கொண்டாடுவதற்கு நிதி வசூலிக்க தியாகிகள் வருகிறார்கள். தான் இருக்கும் நிலையில் தூங்காநாயக்கருக்கு என்ன செய்வதென்று தெரியவில்லை.
“பரபரப்போடு எழுந்து நின்று இடது கையால் வேட்டியின் பிய்ந்த கிழிசலை மறைத்துக்கொண்டு அவர்களை வரவேற்கத் தயாரானார்” (ப.201 மே.கு.நூல்)
நைந்து கிழிந்துப்போவது வேட்டி மட்டுமல்ல.சுதந்திரம் பெற்று இருபத்தைந்தாண்டுகள் ஆகியும் போக்குவரத்திலும், வாழ்க்கை வசதிகளிலும் முன்னேறி இருந்தாலும் ஏழைகளின் வாழ்வு மட்டும் நைந்துபோன கந்தையாகவே உள்ள நிலையை இக்கதை சுட்டிக்காட்டி நிற்கிறது.
மதிப்பற்றுப்போன சம்சாரி வாழ்வு :
ஒவ்வொரு காலத்திலும் ஒரு சிலருக்கு மதிப்பும் மரியாதையும் கிடைக்கிறது.முன்பெல்லாம் நல்லவர்களும் சான்றோர்களும் அனைவராலும் மதிக்கப்பட்டனர்.அரசியல் போன்ற பொதுச்செயல்களிலும் ஈடுபட்டனர். ஆனால் தற்காலத்தில் குணமில்லாத பணமுடையோரையே பலரும் மதிக்கின்றனர். கொண்டாடுகின்றனர். பணம் பந்தியிலும் குணம் குப்பையிலும் கிடக்கிறது.
“கொத்தைப்பருத்தி” கதையில் கோனேரி செங்கன்னாவின் குடும்பம் மிகப்பெரிய பணக்கார சம்சாரிக்குடும்பம். 200 ஏக்கர் நெய்க்கரிசல் பூமிக்குச் சொந்தக்காரர்.வட்டாரத்திலேயே முதன்முதலில் காசுமாலை செய்த குடும்பம். பருத்தியை தினமும் வண்டி கொண்டுபோய் எடுத்துவரும் குடும்பம். மாவட்ட கலெக்டராக இருக்கும் தனது மகனுக்குப் பெண்கேட்டு வந்த வந்தட்டி நாயக்கருக்கு பெண்கொடுக்க மறுத்த பெருமையுடைய குடும்பம்.
“கலெக்டரா இருந்தால் அது அவன்மட்டுக்கும்.நாளைப்பயனுக்கு ஏதாவது ஒண்ணு ஆகிவிட்டால் என் பொண்ணுல்ல தெருவில நிப்பா?. பையனுக்கு நாலேக்கர் நிலமிருந்தா அவள் அதிலே கிண்டி கிளறித் தன்பாட்டையாவது கழிச்சிடுவா.ஒண்ணுமில்லாதவனுக்கு உத்தியோகத்தை நம்பி யாரு கொடுப்பா பொண்ணு?”(ப.304) என்று ஓங்கி கேட்டவர்.
ஆனால் இப்போது தனது பேரனுக்கு பெண் கேட்டு செல்லுமிடத்தில்
“காத்துட்டு சம்பளமானாலும் கவர்மெண்டு சம்பளம் இருக்கணும். மாசம் இருநூறு சம்பாதிக்கிற வாச்மேனாக இருந்தாலும் சரி அவனுங்களைக் கட்டத் தயார். சம்சாரிகளுக்கு இனிமேல் நம்ம பொட்டைப்பிள்ளைகள் வாக்கப்படாது வந்து கேக்காதீங்க” (ப.305)என்று கறாராகச்சொல்லிவிட்டனர்.
கோனேரியின் குடும்பம் பெரிய குடும்பம். ஏழு பெண்கள், ஆறு ஆண் குழந்தைகள்.இன்று பிரிந்து பிரிந்து சிறுத்துவிட்டது. கோனேரி பேரனுக்கு பெண்பார்த்து சலித்துவிட்டது. சம்சாரியின் வாழ்க்கைக்கு மதிப்பில்லாமல் போய்விட்டதை எண்ணி மனம் உடைந்துப்போகிறார்.
கரிசல் பூமியும் பெரிய வீடுமாய் இருந்த சம்சாரி கோனேரி, அன்று கலெக்டருக்கே பெண்கொடுக்க மறுத்த நிலைமாறி சம்சாரிக்கு பெண்ணைக் கொடுத்து பெண்கள் வேலை செய்து இடுப்பெடிந்து சாகவா என படிப்பும் அரசு வேலையுமே பெரிதாய் மதிக்கப்படுகிற காலம் நடப்பதை உணர்கிறார். கால மாற்றத்தில் மதிப்பின் வரையறைகளும் மாறிவருவதை இக்கதையில் காட்டுகிறார். சமுதாய வாழ்வியல் மாற்;றத்தை தௌ;ளிதின் விளக்கும் கதையாக ‘கொத்தைப்பருத்தி’ விளங்குகிறது
முடிவுரை:
படைப்பில் சமுதாயத்தில் நிலவும் சம்பவங்களை தன் அனுபவமாக எழுதுதல் உண்டு.ஒவ்வொரு பாத்திரங்களையும் அணுஅணுவாய் உள்வாங்கிக்கொண்டு விவரிக்கும் கி.ரா வின் தனித்திறன் பாராட்டுதற்குரியது. கரிசல் மக்களின் வாழ்வியல் கூறுகளை இவரது கதைகள் தௌ;ளிதின் விளக்குகிறது என்பது புலனாகிறது.
அடிக்குறிப்புகள்:
1. ‘கி.ராஜநாராயணன் சிறுகதைகள்’ (கதவு- சிறுகதை ப.3)
2.மேற்குறித்த நூல் (வேட்டி -சிறுகதை ப.201)
3.மேற்குறித்த நூல் (கொத்தைப்பருத்தி- சிறுகதை ப.304)
4. மேற்குறித்த நூல் (கொத்தைப்பருத்தி- சிறுகதை ப.305)
•This e-mail address is being protected from spambots. You need JavaScript enabled to view it•
* கட்டுரையாளர் - - முனைவர் அரங்க. மணிமாறன், முதுநிலை தமிழ் ஆசிரியர், அரசினர் ஆண்கள் மேல்நிலைப்பள்ளி – செங்கம், திருவண்ணாமலை மாவட்டம்.606701. -
•<• •Prev• | •Next• •>• |
---|