நீரின்றி அமையாது உலகு என்பது நம் தமிழ ஆன்றோரின் பட்டறிவு. அதனால் தான் உயிர்களின் பெருக்கம் கருதியும், நிலைத்து வாழ்தல் கருதியும் ஆற்றங்கரை மேட்டில் பழம் நாகரிகங்களை உலகம் முழுதும் தோற்றுவித்து மனித இனம் மேம்படச் செய்த பெருமை நம் தமிழ் இனத்திற்கு உண்டு. மேலைக்கடல், கீழைக்கடல் என உலகை வலம் வந்து தாம் பெற்ற அறிவை எல்லாம் அங்கத்து மக்களுக்கு பகிர்ந்து அவரை நாகரீகராக்கி மனிதநாகரீகம் வளர்த்தவர் தமிழ் இனத்தவர் என்ற வகையில் தமிழரே உலக மூத்த தொல்குடி மக்கள் என்ற கருத்து மிகச்சரியானதே.
ஆற்றின் பயன் அறிந்த தமிழ வேந்தரும் மன்னவரும் கி. பி.8 ஆம் நூற்றண்டில் மக்கள் மேலும் மனப்பக்குவப்பட வேண்டி கோவில் இயக்கத்தை வளர்த்தெடுக்க கோவில்களை ஆற்றை அண்டிய நிலப்பகுதிகளில் கட்டியும் அவற்றை போற்றியும் வந்தனர். இதாவது, காட்டைக்கொன்று ஊரை ஏற்படுத்தி கோவிலைக் கட்டினர். கோவிலின் அன்றாட செயற்பாட்டிற்கும், கோவில் ஊழியர் பிழைப்பிற்கு சம்பளம் பெறவும்வேண்டி இவ்வாறு கோவில்களை ஆற்றை அண்டி கட்டியெழுப்பினர்.
அன்றாட கோவில் பூசனைக்கு, இதாவது, 3 கால பூசனைக்கு திருவமுது படைக்க நெல் வேண்டும். இந்தத் திருவமுது கோவில் ஊழியர்களின் குடும்ப உறுபினர்கள் 5-6 பேர் உண்ணத்தக்க அளவிற்கு பகிர்ந்து அளிக்க பெரிய கலன்களில் சோறு சமைக்கப்பட்டது. இதில் பிராமணர், பிராமணர் அல்லாதார் அடங்குவர். அதே நேரம் கோவில் ஊழியர்கள் பிழைப்பிற்காக பயிரிட்டு நெல் விளைத்துக் கொள்ள தனியே விளை நிலங்கள் ஒதுக்கப்பட்டன. ஏனென்றால் அக்காலத்தே காசு புழக்கம் எளியோரிடம் பெரிதாக புழங்கவில்லை பண்டமாற்றில் பொருள் தான் புழ்ங்கியது. எனவே விளைநிலத்தில் பயிற்செய்து நெல்லை பெற்று அதை மாற்றி பிறபொருளைப் பெறலாம். இதற்காகவே விளை நிலங்கள் கோயில் ஊழியருக்கு ஒதுக்கப்பட்டன. இவை பெரும்பாலும் இறையிலி நிலங்கள்தாம். அதோடு கோவில் ஊழியர் வாழ வீடுகளும் கட்டி ஒதுக்கப்பட்டன. ஒதுக்கப்பட்ட வீடோ, விளை நிலமோ கோவில் பணியில் இருக்கும்வரை அனுபவித்துக் கொள்ளலாம் ஆனால் விற்க முடியாது. இப்படி கோவில் இயக்கம் தங்கு தடையின்றி நடக்க வேண்டுமானால் பயிர்ச்செய்ய நீர் வேண்டுமே, அதனால் தான் கோவில்களை ஆற்றின் மேட்டிலேயே அரசர்கள் கட்டினர்.
தமிழ்நாட்டிலுள்ள பழங்கோவில்களைக் கணக்கெடுத்தால் அவற்றின் இருப்பிடத்தை நோக்குங்கால் இந்த உண்மை விளங்கும். இது ஒரு வகைப் பாதுகாப்பு (socio economic security) ஆகும். அதனால் தான் இக்கோவில் ஊர்கள் ஓராயிரம் (1,000) ஆண்டுகளாக இன்றளவும் மனித நாகரீகத்தைத் தாங்கி நிலைத்து நிற்கின்றன. அரசர்களின் நிருவாகத் தலைநகரங்கள் ஆளும் அரச குடும்பம் .ஒழிந்ததும் பாழ்பட் டு சிறு கிராமமாக இருப்பதை இன்றும் காண்கிறோம். அதேபோல வணிகர்கள் குழுமுகின்ற நகரங்கள் அவ்வணிகர் வரவு நின்றதும் மக்கள் போக்குவரத்து குறைந்து அவையும் சிற்றூர்களாக ஆகிவிட்டதையும் காணமுடிகிறது. இப்படி ஒரு தலைவிதி மட்டும் கோவில் ஊர்களுக்கும் நகரங்களுக்கும் நிகழாமை எதனால் என்றால் ஆற்றின் அண்டிய அமைப்பு தான் காரணம் எனலாம். ஆறுகள் ஊருக்கு வாழ்வூட்டின. காஞ்சியில் பல்லவர் ஆட்சி ஒழிந்தாலும் வேகவதி ஆற்றை சார்ந்து கோவில்கள் இருந்ததால் காஞ்சிபுரம் சிறு கிராமமாக ஆகாமல் தப்பியது.
தமிழ்நாட்டின் கோவில்கள் கொசத்தலை, கூவம், பாலாறு, செய்யாறு, தென்பெண்ணை, காவேரி, வையை, தாமிரபரணி, பிற கிளைஆறுகள், வெள்ளாறுகள் ஆகியவற்றின் கரைகளில் தாம் அமைந்துள்ளன. அரசர்கள் கோவிகளுக்காக காடுகொன்று ஊர்கள் அமைத்தாலும் அவற்றின் வயல்களில் 20% வரை தான் இறையிலி கோவில் நிலங்கள் எஞ்சிய பிற 80% நிலங்களால் அவர்களுக்கு அதிக விளைச்சல் வரிவருவாய் கிட்டியது. முதன்முதலாக பல்லவர் தாம் கோவில்களை கற்றளிகளாக மாற்றும் இயக்கத்தை தொடங்கினர் என்றாலும் சோழர் ஆட்சியில் தான் கருங்கல் கோவில்கள் பேரளவில் கட்டி வளர்த்தெடுக்கப்பட்டன. கோவில் இயக்கத்திற்காக முல்லை நிலங்கள் மருதநிலங்களாக மாற்றம் பெற்றதால் அரச கருவூலம் வரி வருவாயால் நிரம்பியது. இச்செல்வத்தைக் கொண்டு பெரும்நிலைப் படையை (Reserve army) சோழர்களால் கட்டியெழுப்பவும், பேணவும் முடிந்தது. விளைவு சோழ அரசு பெரும் பேரரசாக விரிந்து பரவி வலுப்பெற்றது என்றால் அது மிகைக் கூற்றாகாது. அதே நேரம் பிழைப்பற்று இருந்த மக்கள் பலரது வாழ்க்கைத்தரமும் முல்லை நிலம் மருத நில மாற்றத்தால் உயர்ந்தது. நாகரிகம் செழிப்புற்றது. கலைகள் வளர்ந்தன. இதைத்தான் வரப்பு உயர (வயல் அதிகரிக்க), நீர் உயரும் (நீரின் பயன்பாடு அதிகமாகும்) , நீருயர நெல் உயரும் (விளைச்சல் அதிகமாகும்), நெல் உயர (விளைச்சல் அதிகரிக்க) குடி உயரும் > (நாகரிகம், வாழ்க்கைத்தரம் உயரும்) ; அதே நேரம் கோன் உயரும் > (பேரரசாகும்) என்றாள் போலும் ஒளவை. இதைச் சோழரைக் கண்டு பாடினாள் ஒளவை என்பதே சரியாகும்.
காவிரியின் கிளை ஆறுகளால் கும்பகோணத்தை சுற்றி 40 கிலோ மீட்டருக்கு 5-6 கிலோ மீட்டர் இடைவெளிக்கு பல கோவில்கள் அமைந்து கோவில் இயக்கம் வலுப்பெற்றது போலவே வட தமிழ்நாட்டிலும் வேகவதி, பாலாறு, கொசத்தலை, கூவம் ஆறுகளை ஒட்டி காஞ்சி முதல் திருவள்ளூர் வரை 40 கிலோ மீற்றர் இடைவெளியில் கோயில் இயக்கம் வலுப்பெற்று இன்றளவும் விளங்கிவருவது பலரும் அறியவராத உண்மை.
கும்பகோணக் கோவில்கள் நவக்கிரகத் தொடர்பு காட்டுவதால் பிற இடங்களில் இருந்து சுற்றுலாவியர் அதிகம் வருகின்றனர். அங்கு கோவில்களும் பெரிதாக உள்ளன. ஆனால் கொசத்தலை, கூவம் ஆற்று கோவில்கள் நவக்கிரக தொடர்பு இன்மையால் சுற்றுலாவியர் யாரும் இங்கு வருவதில்லை; கோவில்களும் அளவில் சிறியன ஆனால் பழையன.
கூவம் ஆறு தக்கோலம் அருகே உருவாகி கேசவரம் அணைக்கட்டில் இருந்து கொசத்தலை ஆற்றை விட்டு பிரிந்து வேறு பாதையில் நடை போடுகிறது. இந்த ஆறு தோற்றத்தில் கால்வாய் போல் தான் இருக்கும். கொசத்தலை ஆறு போல் அல்லாமல் இந்த ஆற்றில் மணல் கிடையாது என்பது இதற்கு ஒரு பெரும் பேறாகும். இல்லாவிட்டால் மணல் கொள்ளைக்கு ஆட்பட்டிருக்கும். மழைக்காலம் தவிர பிறகாலங்களில் ஆங்காங்கே குட்டையும், குளமும் சிறு ஏரியும் போலத் தான் நீர் தேங்கியிருக்கும். இந்த ஆற்றை அண்டிய பகுதிகளில் பயிர்த் தொழில் மட்டுமன்றி செங்கல் அறுக்கும் தொழிலும் மேற்கொள்ளப்பட்டு வருவது ஒரு சிறப்பு. 1990 க்கு முன் நெற்குன்றம் வரை நண்ணீர்தான் பாய்ந்து கொண்டிருந்தது. அந்நீர் பயிருக்கும், உயிர்களுக்கும் நீராதாரமாக விளங்கியது. ஆற்றில் துணிதுவைப்பதும் நடந்து வந்தது. அந்த அளவிற்கு தூய நீர் இவ்வாற்றில் பாய்ந்தது. மக்கள் நடந்தே இந்த ஆற்றைக் கடந்து மறுகரை அடைந்தனர். ஆனால் இன்றோ மாநகராட்சி சாக்கடை லாரிகள் திருவேற்காட்டில் சாக்கடை நீரை இந்த ஆற்றில் வடிக்கின்றன. மேலைநாடு என்றால் இச்செயலுக்கு நீதிமன்றம் மாநகராட்சியை நாளொன்றுக்கு 30 லட்சம் தண்டம் செலுத்த சொல்லியிருக்கும். பணியாளருக்கு சிறைத் தண்டனை வழங்கியிருக்கும். இது இந்தியா என்பதால் அவ்வாறு ஏதும் நடக்கவில்லை. மற்றபடி திருவேற்காடு அருகே உள்ள பருத்திப்பட்டு, மேல்பாக்கம் தொடங்கி தக்கோலம் வரை இன்றளவும் இந்த ஆறு பருகும் நீரைத்தான் கொண்டுள்ளது. பயிர்களுக்கும் பல்லுயிர்களுக்கும் உயிர் ஆதாரமாக விளங்கிக் கொண்டு தான் உள்ளது. இந்த ஆற்றை அண்டி தக்கோலம் (திருவூறல்), இளம்பயன்கோட்டூர், திருவிற்கோலம், திருவேற்காடு போன்ற ஊர்களில் தேவார தலங்கள் உள்ளன. இவ் ஆற்றில் ஒவ்வொரு 500 மீட்டருக்கு ஆற்றின் குறுக்கே 3-4 அடிஉயர மண் மேட்டை ஏற்படுத்தினால் மழைநீர் வடிந்துஓடாமல் தேங்கி நிற்கும். இந்நீர் பல்லுயிர் ஓம்ப உதவும், சுற்றுச்சூழலை பசுமையாக வைத்திருக்கும். இதை அவ்வவ் ஊர் மக்கள் அரசை எதிர்பாராமல் தாமே இறங்கி செய்யவேண்டும்.
கடம்பத்தூர் இரயிலடியில் இருந்து தக்கோலம் வரை சாலை வழியில் செல்ல திருவள்ளூரில் இருந்து பேருந்துகள், தானிகள் (auto) உண்டு. சில கோவில்களை செவ்வாய்பேட்டை, திருவள்ளூர் இரயிலடியில் இருந்து அடையலாம்.
தக்கோலம் முதல் கோயம்பேடு வரை இந்த ஆற்றுமேட்டில் ஒவ்வொரு 5-6 கிலோ மீட்டருக்கும் சைவ, வைணவக் கோவில்களை அருகருகே கொண்ட ஊர்கள் அமைந்துள்ளன. அவை கூவம், தக்கோலம், சிவபுரம், காலம்பாக்கம், இருளஞ்சேரி, நரசிங்கபுரம், பேர ம்பாக்கம், கீழச்சேரி, மணவாளநகர், திரூர், பெருமாள்பட்டு, சித்துக்காடு, திருவேற்காடு, நூம்பல், மதுரவாயல், கோயம்பேடு என்பன. அந்த அளவிற்கு பண்டு அரசர்கள் கோவில் இயக்கத்தை இந்த ஆற்று மேட்டில் வளர்த்துள்ளனர்.
இந்த கூவம் ஆற்றின் மேட்டில் அமைந்த ஊர் தான் திருமணம் என்ற சித்துக்காடு. இவ்வூரில் தான் தாதேசுவரர் சிவன் கோவிலும் சுந்தரராஜ பெருமாள் கோவிலும் அமைந்துள்ளன. இவை இரண்டும் பாண்டியர் கால கோவில்கள் எனப்படுகின்றன. இந்த ஊரை பட்டாபிராமில் இருந்து 6 கிலோ மீட்டர் பயணத்தில் வெளிவட்டச் சாலை வழியாக அடையலாம். அதே போல பூந்தண்மல்லி நசரத்துபேட்டையில் இருந்து (outer ring road) 7 கிலோ மீட்டர் பயணத்தில் அடையலாம். வெளிவட்டச் சாலைக்கு மேற்க்கில் ஒரு கிலோ மீட்டர் உள்ளே சென்றால் இக்கோவில்கள் முன்னும் பின்னுமாக அமைந்திருக்கக் காணலாம். துப்புரவாகப் பேணப்படும் கோவில்கள் இவை. சுந்தரராஜ பெருமாள் கோவிலின் மதில்புறத்தே கோவிலுக்கு வெளியே வடகிழக்கு பகுதியில் ஒரு குத்துக் கல் போல் நிறுத்தப்பட்டுள்ளது ஒரு பாண்டியர் கால கல்வெட்டு.
இக்கோவில்கள் பற்றி அறிய இதில் நுழைக > http://aalayamkanden.blogspo t.in/2011/11/sithukadu-holy-la nd-of-siddhars.html & http://www.indian-heritage .org/temple/dtrswrr.html
1. சுந்தரராஜ பெருமாள் கோயில் கோபுர வாயில்.
2. இப்பெருமாள் கோவில் சுந்தர பாண்டியன் கால கல்வெட்டு.
3. தாதேசுவரர் கோயில் கோபுர வாயில்.
அடுத்து கூவக்கரையில் அமைந்த இன்னொரு ஊரான திருவூர் சிங்காண்டேசுவரர் கோயில் வெளியே நிறுத்தியுள்ள 16 ஆம்நூற்றாண்டு கல்வெட்டுகள்.
4. தம் வடுகஇன அடையாளத்தை மறவாமல் பன்றிச் சின்னத்தை பொறித்துள்ள கல்வெட்டு.
5. இம்மடி திருமலை நாயக்கன் கல்வெட்டு.
படம்- 2 ஐந்து வரிகளுக்கு மேல் எழுத்துகள் சிதைந்த நிலை. படித்த வரிகள் கீழே:
1 ஸ்வஸ்திஸ்ரீ கோற்சட ப
2 ன்மரான த்ரிபுவனச் சக்
3 கரவத்திகள் ஸ்ரீ சுந்
4 தர பாண்டிய தேவர்க்
5 கு (பதினெட்டாவது)........வூர்
6 க்கோட்டத்து
இது ஒரு திருவாழிக்கல் கல்வெட்டு. நிலம் கொடையாக் அளிக்கப்படும்போது நிலத்தின் விவரங்களோடு நான்கு எல்லைகளிலும் ஆழிக்கல் என்னும் இவ்வகை
முத்திரைக் கற்கள் நடப்படுவது மரபு. சில எல்லைக் கற்களில் எழுத்துப் பொறிப்பு இருக்காது. சிலவற்றில் மட்டுமே எழுத்துகள்-நிலத்தின் எல்லை குறித்தது-
இருக்கும். ஆழி (சக்கரம்) இருப்பதைக் காண்க. பெருமாள் கோயிலுக்கானதால் ஆழிக்கல்; சிவன் கோயிலைச் சார்ந்ததெனின் சூலக்கல். - சுந்தரம். .
பின் குறிப்பு: ஜடவர்ம சுந்தர பாண்டியனின் (1250 - 1268) 18 ஆம் ஆட்சியாண்டு நில எல்லைக் கல்வெட்டு.
படம்-4 கல்வெட்டுப் பாடம்
1 ஸ்வஸ்திஸ்ரீ மஹாமண்டலேச்வ
2 ர இம்மடி (தி)ம்மராய மஹாராய
3 ற்கு செல்லாநின்ற சகாப்தம்
4 1424 மேல் செல்லாநி(ன்)ற
5 துந்துமி வருஷம் மாசி மாதம்
6 10 தேதி ஸ்ரீமன் மகாமண்டலே
7 சுர மேதிநி மீசுர கண்ட கட்டா
8 ரி சாளுவ திப்பய தேவ மகாரா
9 சாவின் குமரனார் (க)சவராசாவு
10 ம் துருகூரில் மஹாசநமும் சிங்
11 கீசுரமுடையாற்க்கு தன்ம சாசன
12 ம் பண்ணி குடுத்தபடி ..
13 தந சீமையாந துருகூரி(ல் கொ)..
14 ல்லைப் பற்று ................
15 ஆற்றுக்காலுக்கு வடக்கு ...(ஆக) மு
16 ப்பத்துயிரண்டு அடிக்கோலால்
17 குழி 200 இந்த குழி இரு (நூறு) சிக்கீ
18 சுரமுடையாற்கு தென்னமர தோ
19 ப்பு வைய்போகத்துக்கு சா
20 ளுவ திப்பராசாவுக்கு தன்மமா
21 (ம்) இதுக்கு அகிதம் பண்ணி
22 நவன் கெங்கை கரையில் காரா
23 ம் பசுவைக் கொன்ற தோஷத்
24 திலே போவன்.
குறிப்பு: சிவப்பு வண்ண எழுத்துகள் கிரந்தம். கல்வெட்டில் காணப்பெறும் காலக்குறிப்பு சக ஆண்டு 1424; துந்துமி வருடம். சக ஆண்டு 1424-க்கு இணையான ஆக்கில ஆண்டு கி.பி. 1502. தமிழாண்டு துந்துமி கி.பி.1502-ஆம் ஆண்டுடன் பொருந்திப்போகிறது. ஆனால், கல்வெட்டில் குறிப்பிடப்பெறும் (இம்மடி) திம்மராய மகாராயர் மற்றும் சாளுவ திப்பயதேவ மகாராயர் ஆகியோரின் பெயர்கள் விஜயநகர அரசர்களின் வரிசைப் பட்டியலில் காணப்படுவதில்லை.
திம்மராயரின் பெயருக்குப் பின்னர் திப்பயதேவரின் பெயர் குறிப்பிடப்படுவதாலும், திப்பய தேவரின் மகனாராகக் குறிப்பிடப்படும் ஒருவர்
துருகூரின் ஊரார்/ஊர்ச்சபையினருடன் (துருகூர் மஹாசநம்) சேர்ந்து இறைவர்
சிங்கீசுவரமுடையார்க்கு 200 குழி அளவுள்ள தென்னந்தோப்பு நிலம் கொடையாக
அளிக்கப்பட ஏற்பாடு செய்வதாகக் குறிப்புள்ளதாலும் திப்பய தேவர் என்பவர்
விஜயநகர அரசர் நியமித்த தமிழக ஆட்சியாளர் ஆவார் எனக் கொள்ளலாம்.
கொடை நிலம் 200 குழி, கோயிலின் விழா நிகழ்ச்சிகளுக்கு (வைய்போகத்துக்கு)ப்
பயன்பட்டிருக்கவேண்டும் எனத்தெரிகிறது.
கல்வெட்டுப் படம்-5
கல்வெட்டுப் பாடம்;
1 ஸ்வஸ்திஸ்ரீ மன் மகா
2 மண்டலேசுர க்ரிஷ்ண
3 தேவ மகாயிராயற்
4 குச் செல்லாநின்ற
5 சகாப்தம் 144(6)
6 ன் மேல் வெய வரு
7 ஷம் காத்திகை மாதம்
8 (10) தேதி ஸ்ரீமது யிம்மடி
9 திருமலை நாயக்கரும்
10 துரு(கூர் மகாசனமும்)
குறிப்பு: சிவப்பு வண்ண எழுத்துகள் கிரந்தம்.
விளக்கம்;
கலவெட்டில் காணப்படும் சக ஆண்டும், தமிழ் ஆண்டான
விய (வெய) ஆண்டும் சரியாகப்பொருந்துகின்றன. அவை
இரண்டும் கி.பி. 1526-ஆம் ஆண்டைக் குறிக்கின்றன. இந்த ஆண்டு,
கல்வெட்டில் குறிக்கப்பெறும் கிருஷ்ன தேவ ராயரின் ஆட்சிக்
காலத்துடனும் பொருந்துகின்றன. ஆனால், முந்தைய கலவெட்டுப்போலவே,
இம்மடி திருமலை நாயக்கர் கிருஷ்ண தேவராயரின் பிரதிநிதி
எனலாம். இவர் மதுரைத் திருமலை நாயக்கராக இருக்க முடியாது.
ஏனெனில், மதுரை திருமலை நாயக்கரின் காலம் கி.பி.1623-1659.
முந்தைய கல்வெட்டுப் போலவே, துருகூர் ஊர்ச்சபையும் திருமலை
நாயக்கரும் இணைந்து கோயிலுக்கு ஏதோ கொடை அளித்துள்ளனர்
எனலாம். மேர்கொண்டு கல்வெட்டு வரிகள் கிட்டாமல் முழுச்செய்தி
அறிய இயலவில்லை. - சுந்தரம்.
இக்கல்வெட்டுகளை வாசித்து பொருள் கூறியவர் திரு. சுந்தரம் (கோவை)
பின் குறிப்பு: திருவூர் 16 ஆம் நூற்றாண்டில் துருகூர் என வழங்கியது புரிகிறது. இன்று சிங்காண்டேசுவரர் உத்பலாம்பாள் கோவில் 16 ஆம் நூற்றாண்டில் சிங்கீசுவரம் என்று அழைக்கப்பட்டது போலும் இல்லாவிட்டால் இக்கால் கூவக்கரையில் கீழச்சேரியில் மப்பேடு அருகே சிங்கேசுவரம் என்ற இன்னொரு பெரிய சிவன் கோயில் உள்ளது அதைக் குறிப்பதாகுமோ என்ற ஐயம் எழுந்தது. இரண்டாவது கல்வெட்டு மாடவிளாகம் கட்ட நிலத்தையும் பொன்னையும் கிருஷ்ணதேவராயரின் படைத்தலைவர் இம்மடி திருமலை நாயக்கர் கொடையாக கொடுத்ததாக கல்வெட்டு சேகரத்தில் பதிவாகி உள்ளது. அச்செய்தி கல்வெட்டின் கீழ்ப்பகுதி உடைந்ததால் படிக்கமுடியாமல் போனது.
கட்டுரையை படித்த பின் உற்றார் உறவுகளோடு நட்போடு பகிந்து கொள்ளுங்கள்.
கூவம் ஆற்று கோவில்களை அறிய கீழே தொடுப்பை சொடுக்குங்கள்
http://sivasankaravijayam.blo gspot.in/2013/12/temples-on-ba nks-of-coovam.html
http://www.madrasmusings.com/v ol-25-no-15/the-temples-of-the -cooum/
https://shanthiraju.wordpress. com/around-chennai-north/
http://www.thehindu.com/opinio n/blogs/blogs-end-of-the-day/a rticle6258150.ece
கூவம் ஊர்வாரி வரைபடம் http://wikiedit.org/ India/Mappedu/232387/
•This e-mail address is being protected from spambots. You need JavaScript enabled to view it•
•<• •Prev• | •Next• •>• |
---|