தமிழரின் காலக் கணிப்பில் ஒருவரின் அறுபதாண்டு வாழ்க்கை ஒரு ஆண்டுவட்டச் சுற்றைப் பூர்த்திசெய்கின்றது என்பர். அவ்வகையில் எமது தமிழ் இலக்கியவாதியான அ.முத்துலிங்கத்தின் இலக்கியப் பயணமும் ஒரு ஆண்டுவட்டப் பயணத்தைக் கடந்து தொடர்கின்றது. அறுபதாண்டுகளாகத் தளராமல், வரட்சி காணாமல் கையிருப்பில் இன்னமும் ஏராளமான ‘விஷயங்களை” வைத்துக்கொண்டு இலக்கியப் பயணமொன்றைப் புகலிடத்திலும் தொடர்வதென்பது எழுத்தாளனுக்கு இலகுவில் கிடைக்கும் பாக்கியமொன்றல்ல.
தற்போது புகலிடத்தில் வாழும் ஈழத்துப் படைப்பாளி அ.முத்துலிங்கம் யாழ்ப்பாணத்தில் எனது அயல் கிராமத்தவர். நான் ஆனைக்கோட்டையில் வாழ்ந்த எழுபதுகளில்; அவர் எழுத்துத் துறையில் அனைவரையும் பிரமிக்கவைத்துக் கொண்டிருந்தார். அவரது முதலாவது சிறுகதைத்தொகுதி ‘அக்கா” வெளிவந்த 1964இல் எனக்கு 10 வயது. நான் தென்னிலங்கையில் பிறந்து நீர்கொழும்பில் இளம்பிராயத்தைக் கடந்தவன். அங்கும் ஒரு நீர்கொழும்பூர் முத்துலிங்கம் எழுத்தாளராக இருந்தார். நான் நூலியல்துறையிலும், எழுத்துத்துறையிலும் ஈடுபட்டிராத அக்காலத்தில் சில சமயங்களில் அறியாமையால் இருவரையும் பெயர் மாற்றிக் குழப்பிக்கொண்டதுண்டு.
நான் புலம்பெயர்ந்தபின்னர் ‘நூல்தேட்டம்” ஆவணத்தொகுப்பின் வேலைத்திட்டத்தில் ஓய்வுவேளைகளில் முழுமையாக ஈடுபடத் தொடங்கிய காலகட்டத்தில்தான் அ.முத்துலிங்கம் அவர்களின் தொடர்பினை வலிந்து தேடிக்கொண்டேன். அப்பொழுது அவர் கனடாவில் இருந்தார். சிரமம் பாராது தனது நூல்களை எனக்கு தபால் பொதிகளில் அவ்வப்போது அனுப்பியும் வைத்திருந்தார். அவரால் அனுப்பப்படும் நூல்களை அவ்வப்போது நான் ஐ.பீ.சீ. வானொலியின் காலைக்கலசம் இலக்கியத் தகவல் திரட்டு நிகழ்ச்சியில் அறிமுகப்படுத்தி வந்துள்ளேன்.
2004இல் ஒருதடவை இலங்கை சென்றவேளையில் அமரர் பூபாலசிங்கம் அவர்களின் மகன் ராஜனை 14 ஆண்டுகளின் பின்னர் அவரது வெள்ளவத்தை புத்தகக் கடையில் சந்திக்கநேர்ந்தது. அவ்வேளையில் ராஜன் எனக்குத் தந்த நினைவுப்பரிசு ‘அ.முத்துலிங்கம் கதைகள்” என்ற பெருந்தொகுப்பாகும். அந்நாட்களில் ஈழத்தமிழ்ப் படைப்பாளிகளின் பெருந்தொகுப்புகள் பரவலாக வெளிவந்திருக்கவில்லை. அதனால் 2003 டிசம்பரில் தமிழினி வெளியிட்டிருந்த அப்பெருந்தொகுப்பு என்னைத் திகைக்க வைத்திருந்தது. எழுத்தாளர் அ.மு.வின் 2003 வரை வெளியான தேர்ந்த 75 சிறுகதைகளை 774 பக்கங்களில் உள்ளடக்கியதாக அந்நூல் இருந்தது.
பத்தாண்டுகளின் பின்னர் 2014இல் நூல் தேடலுக்காகத் தமிழகம் சென்றிருந்த வேளையில் ஈழநாடு பத்திரிகையாளர் அமரர் கே.ஜீ.மகாதேவாவின் அழைப்பையேற்று திருச்சிக்குச் சென்றிருந்தேன். நான் எதிர்பாராத வகையில் அன்று திருச்சிராப்பள்ளி ஆண்டவர் அறிவியல் கல்லூரியில், ஈழத்து இலக்கியத்தை தமது பட்டப்படிப்பிற்காகப் பயிலும் மாணவர்களுடனான ஒரு கலந்துரையாடல் நிகழ்ச்சியை ஒழுங்குபடுத்தியிருந்தார். பாடசாலை உயர்வகுப்பு மாணவர்களும் அதில் பங்கேற்றிருந்தனர். ‘புலம்பெயர்ந்த ஈழத்துப் படைப்பாளிகளின் இலக்கியப் பங்களிப்பு” என்ற பொருள்பற்றிப் பேசுமாறு என்னை தமிழ்த்துறைத் தலைவர் முனைவர் கரிகாலன் கேட்டுக்கொண்டதற்கிணங்க, எனது அறிமுக உரையை நிகழ்த்தினேன்.
இலங்கையிலிருந்து புலம்பெயர்ந்து லண்டன், ஐரோப்பா, கனடா, அவுஸ்திரேலியா என்று பன்னாடுகளிலும் புலம்பெயர்ந்திருந்த தமிழ்ப் படைப்பாளிகள் பற்றி திருச்சியில் உள்ள ஒரு அறிவியல் கல்லூரி மாணவர்களுக்கு எவ்வளவு தகவல்கள் எட்டியிருக்கும் என்ற கேள்வியுடன், ‘உங்களுக்குப் பிடித்த ஈழத்துப் படைப்பாளி ஒருவரின் பெயரைக் கூறுங்கள்”என்று ஒரு மாணவனைக் கேட்டேன். அவர் எழுந்து நின்று ‘அ.முத்துலிங்கத்தின் படைப்புகளை எனக்குப் பிடிக்கும்” என்றார் அழுத்தம் திருத்தமாக. தமிழகத்திலேயே பிரபல்யமாக வாழ்ந்துவரும் எஸ்பொ உள்ளிட்ட பிற ஈழத்துப் படைப்பாளிகளை விடுத்து கனடாவிலுள்ள அ.முத்துலிங்கம் என்பவரைப் பற்றி அந்த உயர்வகுப்பு மாணவன் குறிப்பிட்டமை என்னை மேலும் அவரைத் துருவிடத் தூண்டியது.
‘ஏன் அவரை உமக்கு அதிகம் பிடிக்கும்” என்ற எனது கேள்விக்கு ‘அவரது எழுத்துக்களில் எப்போதும் அறிவியல் செய்திகளையும் இணைத்துவிட்டிருப்பார். ரஜனி படங்களில் பாம்பு சென்டிமென்ட் வருவது போல, முத்துலிங்கம் தனது கதைகளிலும் சென்டிமென்டாக ஏதாவதொரு விலங்கையோ மரத்தையோ பற்றிய செய்திகளை சொல்வதுடன் கதையின் ஒப்பீட்டுப் பாத்திரமாகவும், சிலவேளை கதையின் முக்கிய பாத்திரமாகவும் அதனை ஆக்கி விடுவார். அவரது கதைகளை வாசிக்கும்போது எனது விருப்பத்திற்குரிய டிஸ்கவரி சனல் பார்ப்பது போன்ற சுகானுபவம் கிட்டுகின்றது”; என்றான் அந்த அறிவார்ந்த மாணவன். எமது படைப்பாளி ஒருவரை எவ்வளவு கூர்மையாக ஒரு தமிழகத்துப் பள்ளி மாணவன் அவதானித்து உள்வாங்கியிருக்கின்றான் என்ற விடயத்தை அவ்வேளையில் பெருமிதத்துடன் என்னால் அறிந்துகொள்ள முடிந்தது.
1937 ஜனவரி 19இல் பிறந்த இலக்கிய நண்பர் அ.முத்துலிங்கம் தனது 21ஆவது வயதில், 1958இல் தினகரன் வார இதழில் ‘ஊர்வலம்” என்ற சிறுகதையுடன் இலக்கியப் பயணத்தைத் தொடங்கியவர். தினகரன் சிறுகதைப் போட்டியில் ‘பக்குவம்” என்ற கதைக்காக முதற்;பரிசை 1961இல் பெற்றுவிட்டபோதிலும், 1964 இலேயே தனது முதலாவது சிறுகதைத் தொகுப்பை வெளியிடும் வாய்ப்பைப் பெற்றார். 1958-1961 காலப்பகுதியில் எழுதப்பட்ட ஊர்வலம், கோடைமழை, அழைப்பு, ஒரு சிறுவனின் கதை, அனுலா, சங்கல்ப நிராகரணம், உன்மத்தராயிருந்தோம், இருப்பிடம், கடைசிக் கைங்கரியம், பக்குவம், அக்கா ஆகிய 11 கதைகளைத் தொகுத்து ‘அக்கா” என்ற தலைப்பில் முதலாவது சிறுகதைத் தொகுதி டிசம்பர் 1964இல் வெள்ளவத்தையில் அவர் சென். லோரன்ஸ் வீதி இல்லத்தில் இருந்த வேளையில் நூலுருவில் வெளியிட்டுள்ளார்.
விஞ்ஞானப் பட்டதாரியான இவர் இலங்கையில் பட்டயக் கணக்காளராகவும், இங்கிலாந்தில் முகாமைத்துவக் கணக்காளராகவும் கற்றுத் தேர்ச்சிபெற்றவர். ஏறத்தாள 20 ஆண்டுகள் உலகம் சுற்றும் வாலிபராகி உலக வங்கியிலும், ஐக்கிய நாடுகள் தாபனத்திலும் பணியாற்றியவர். பாக்கிஸ்தான், சு10டான், ஆப்கானிஸ்தான், கென்யா, சோமாலியா, சியராலியோன் ஆகிய உள்நாட்டு யுத்தம் மலிந்த பல நாடுகளில் கரடுமுரடான வாழ்க்கையை வாழ்ந்து ஏராளமான அனுபவங்களையும்;; பெற்றவர்.
அவரது புதிய நூலான ‘குதிரைக்காரன்” தொகுதிக்கு அவர் எழுதியிருக்கும் முன்னுரையில் ‘எப்போதும் ஏதாவது ஒரு புது விஷயத்துக்காக எழுத்தாளர் துடித்துக்கொண்டே இருப்பார். கண்கள் சுழன்றபடியே இருக்கும். ஒரு குளிர் ரத்தப் பிராணி இரைக்குக் காத்திருப்பதைப்போல மனம் ஒரு பொறிக்காகக் காத்திருக்கும்” என்று எழுதியிருக்கும் வரிகளை இங்கு மீளவும் குறிப்பிடுவது அவரின் வெற்றிக்கான இரகசியத்தை வாசகர்கள் அறிந்துகொள்ள வசதியாகவிருக்கும். அவரது கதைகளின் பன்முகத் தன்மையையும், பன்னாட்டுக் கலாச்சார, பண்பாட்டுநிலையின் அவதானிப்புகளையும், நுணுக்கமான மனிதாபிமான உணர்வுடன்கூடிய எழுத்துப் போக்கையும் வைத்து இலகுவில் எம்மால் இதனை உணர்ந்துகொள்ளமுடிகின்றது. இவரது படைப்புகளில் நகைச்சுவையும் நளினமும் எப்பொழுதும் ஊடாடிநின்று வாசிப்பை இனிதாக்குவதை எவரும் அவதானிக்கலாம்.
1964க்குப் பின்னர் இவரது நீண்டகால அஞ்ஞாதவாசம் ஆனி 1995 இல் காந்தளகம் சென்னையிலிருந்து வெளியிட்ட ‘திகடசக்கரம்” என்ற சிறுகதைத் தொகுதியின் வரவுடன்; முடிவுக்கு வருகின்றது. திகட சக்கரத்தில் இடம்பெற்ற அனைத்துச் சிறுகதைகளும் இலங்கையின் புவியியல் வரம்புக்குள் மாத்திரம் நின்றுவிடாமல், மேற்கு ஆபிரிக்கா, சு10டான், பாக்கிஸ்தான், ஆப்கானிஸ்தான் என்று எல்லை கடந்த கதைக்களங்களாக விரிவடைந்து ஈழத்து வாசகர்களை உள்நாட்டின் மண்வாசனையை மாத்திரமல்லாது உலகளாவிய மக்களின் மண்வாசனைகளையும் நுகரவைத்தது. ‘திகடசக்கரம்” கதைத் தொகுதி 1995இல் லில்லி தேவசிகாமணி பரிசினையும் இவருக்குப் பெற்றுத்தந்தது.
தொடர்ந்து அடுத்த ஆண்டில் (ஏப்ரல் 1996இல்) மேலும் 11 கதைகளுடன் இவரது ‘வம்சவிருத்தி” எஸ்.பொ.வின் மித்ர பதிப்பகத்தினூடாக சென்னையிலிருந்து வெளிவந்தது. அ.முத்துலிங்கத்திற்கு இக்கதைத்தொகுதி தமிழ்நாடு அரசின் சிறந்த சிறுகதைத் தொகுப்பிற்கான முதற்பரிசினையும், இந்திய ஸ்டேட் வங்கியின் முதற் பரிசையும் 1996இல் பெற்றுத்தந்து அவரைப் பெருமைப்படுத்தியது. இக்காலகட்டத்தில் தான் அ.முத்துலிங்கத்தின் இலக்கியப் பணிகளுக்காக கல்கி சிறுகதைப் போட்டிப் பரிசு, ஜோதி விநாயகம் பரிசு (1997) என்பனவும் கிடைத்திருந்தன.
அவ்வப்போது கணையாழி, கல்கி, இந்தியாடுடே ஆகிய சஞ்சிகைகளிலும், அனைத்துலகத் தமிழ்ப் படைப்புக்களின் தொகுப்பான கிழக்கும் மேற்கும் (வுறுயுN வெளியீடு, லண்டன்) மலரிலும் வெளிவந்த சிறுகதைகளைத் தொகுத்து 1998இல் மற்றுமொரு சிறுகதைத் தொகுப்பை ‘வடக்கு வீதி” என்ற பெயரில் சென்னை, மணிமேகலைப் பிரசுரமாக வெளியிட்டிருந்தார். இந்நூலுக்கான இலங்கை அரசின் சாகித்திய விருது இவருக்கு 1999இல் வழங்கப்பட்டது.
இக்காலகட்டம், தொழில் சார்ந்த நீண்டகால அலைந்துழல் வாழ்வின் பின்னர் அ.முத்துலிங்கம் அவர்கள் 2000இல் பணிஓய்வு பெற்று கனடாவில் நிரந்தர வதிவிடத்தைக் கண்டு குடும்பத்துடன் இளைப்பாறத் தொடங்கிய காலகட்டமாகும். 2000ஆம் ஆண்டின் பின்னரே அ.முத்துலிங்கத்தின் படைப்பாளுமை மேலும் வீறுடன் இராஜநடைகொண்டு பயணிக்கத் தொடங்கியதெனலாம். மூன்றாண்டு இடைவெளியின் பின்னர் டிசம்பர் 2001இல் அ.முத்துலிங்கத்தின் ‘மகாராஜாவின் ரயில்வண்டி” காலச்சுவடு பதிப்பகத்தினராலும் பின்னர் கிழக்குப் பதிப்பகத்தினாலும் வெளியிடப்பட்டது.
டிசம்பர் 2003இல் ‘அ.முத்துலிங்கம் கதைகள்” சென்னை தமிழினி பதிப்பகத்தினரால் அவரது சிறுகதைகளின் பெருந்தொகுப்பாக 774 பக்கங்களில் வெளியிடப்பட்டது. அவரது 75 சிறுகதைகள் இப்பெருந்தொகுப்பில் இடம்பெற்றிருந்தன. இந்நூலின் முன்னுரையில் க.மோகனரங்கன் பின்வருமாறு எழுதுகின்றார். ‘இவை புலம்பெயர்ந்த நாடிழந்த ஒருவரின் கதைகள். இவரது ஆக்கங்களில் இவ்வேக்கம், தவிப்பு வெளிவருவதில்லை. ஆனால் அவரது சகல கதைகளினதும் அடிநாதமாக இந்த மனநிலை புதையுண்டு கிடக்கின்றது. புலம்பெயர்ந்து வாழ்வதால் எதிர்கொள்ளும் இழப்புக்களின் ஈடுகட்டலாக இவரது கதைகளில் மொழியின் மீதான இம் மீள்பயணம் நிகழ்கின்றது. யூதர்கள் இரண்டாயிரம் வருடம் தங்கள் நிலத்தை மொழியில் சுமந்துதான் உலகமெல்லாம் அலைந்தார்கள். மண்ணும் தேசமும் விதைவடிவில் இக்கதைகளில் கருக்கட்டியுள்ளன. யூதர்கள் தம் மொழியை நட்டுத் தம் தேசத்தினை இரண்டாயிரம் ஆண்டுகளின் பின் உருவாக்கியது போல, முத்துலிங்கத்தின் கதைகளுக்குள் உலர்ந்து நீளுறக்கத்தில் மூழ்கிய விதைகள் ஒரு மழையில் முளைத்துக் காடாக மாறமுடியும்.” மனதை நெருடிடும் இவ்வரிகள் இப்படைப்பாளியின் படைப்புகளுக்கான ஒருசோற்றுப் பதமாகின்றது.
2004 வரை சிறுகதைகளை மாத்திரமன்றி பல சுவையான கட்டுரைகளையும் அ.முத்துலிங்கம் எழுதிவந்திருந்தார். அதுவரை அவை தொகுக்கப்படாதிருந்து வந்தது. இந்நிலையில் அவரது முதலாவது கட்டுரைத் தொகுதியை ‘அங்கே இப்ப என்ன நேரம்?” என்ற தலைப்புடன் நவம்பர் 2004இல் சென்னை தமிழினி பதிப்பகம் வெளியிடமுன்வந்தது. சிறுகதைகளுக்கு அப்பால் இவர் எழுதிய 48 கட்டுரைகள் இந்நூலில் தொகுக்கப்பெற்றுள்ளன. சிறுகதை வாசிப்பில் கிடைத்த அதே விறுவிறுப்பும், சுவையும் இவர் எழுதும் கட்டுரைகளிலும் குறைவின்றிக் காணப்பட்டன. கனடாவின்; வாழ்வியல் முறைகள், எதிர்பாராத சந்திப்புகள், ரசனை, பயணங்கள், கண்டதும் கேட்டதும், மொழிபெயர்ப்பு, விமர்சனம், அனுபவக்கதை, சிந்திப்பதற்கு என்று 9 பிரிவாகத் தன் கட்டுரைகளை வகைப்படுத்தி இத்தொகுதியில் வழங்கியிருந்தார்.
‘கடிகாரம் அமைதியாக எண்ணிக்கொண்டிருக்கிறது” என்ற மற்றொரு நூல் செப்டமெ;பர் 2006இல் உயிர்மை பதிப்பக வெளியீடாக வெளிவந்தது. தமிழ் எழுத்தாளர்களின் பார்வையில் உலகத் தமிழ் இலக்கியம் பற்றிய கருத்துக்களைப் பதிவுசெய்யும் நோக்கில் வெளிவந்த இந்நூலில், தன் எழுத்துலக நண்பர்களிடம் சமீபத்தில் அவர்களைக் கவர்ந்த புத்தகம் என்ன, அது ஏன் அவர்களைக் கவர்ந்தது என்று கேட்டு அவர்களது பகிர்தலைத் தொகுத்து, அ.மு. அவர்கள் நூலாக்கியிருக்கிறார். இதில் அம்பை, சாரு நிவேதிதா, இரா.முருகன், காஞ்சனா தாமோதரன், பி.ஏ.கிருஷ்ணன், மனுஷ்ய புத்திரன், நாஞ்சில் நாடன், எஸ்.ராமகிருஷ்ணன், சுஜாதா, வாசந்தி, அசோகமித்திரன், இந்திரா பார்த்தசாரதி, ஜெயமோகன், பொ.கருணாகரமூர்த்தி, மாலன், அ.முத்துலிங்கம், பாவண்ணன், ஷோபாசக்தி, சுகுமாரன், வெங்கட்சாமிநாதன் ஆகிய 20 படைப்பாளிகள் தத்தமது விருப்பத்துக்குரிய நூல்களைப் பற்றிய அறிவுபூர்வமான கருத்துக்களைப் பதிவுசெய்திருந்தனர்.
அதே 2006ஆம்ஆண்டு டிசம்பரில் அவரது ‘வியத்தலும் இலமே” என்ற மற்றொரு நூலை காலச்சுவடு பதிப்பகம் வெளியிட்டிருந்தது. இது ஒரு நேர்காணல்களின் தொகுப்பாகும். அ.முத்துலிங்கம் இந்நூலில் நேர்கண்டவர்களில் பெரும்பாலானவர்கள் எழுத்தாளர்கள், எளிதில் அகப்படாத புகழ்பெற்ற இவர்கள் தமிழர்களுக்கு அதிகம் பரிச்சயமில்லாதவர்கள். மிகச் சுவாரஸ்யமான இவர்களது நேர்காணல்கள் வாசகர்களை பரந்ததொரு உலக வாசிப்பிற்கு இட்டுச்செல்கின்றது. அமினாட்டா ஃபோர்னா, அகில் சர்மா, டேவிட் செடாரிஸ், டேவிட் பெஸ்மோஸ்கிஸ், கிறிஸ் ஃபிலார்டி, மொகமட் சஸீகு அலி, ஷ்யாம் செல்வதுரை, ஜெனி வீவ், ஜோர்ஜ் எல்ஹார்ட், வார்ரென் கரியோ, டேவிட் ஓவன், டீன் கில்மோர், மேரி ஆன் மோகன்ராஜ், மார்கிரட் அட்வூட், டேவிட் செடாரிஸ், ரோபையாஸ் வூல்ஃப், ஃபிராங்க் மக்கொர்ட், பிரிஸ்கி காஃவ்மன், எலெய்ன் பெய்லீன், அலிஸ் மன்றோ ஆகிய இருபது பேரின் நேர்காணல்கள் இத்தொகுப்பில் பதிவாகியுள்ளன.
இவ்வாண்டு ஆரம்பத்தில் அ.முத்துலிங்கத்தின் இலக்கிய வாழ்வை கௌரவித்து பத்திரிகையாளர் எஸ்.திருச்செல்வம் அவர்களின் அகிலன் நிறுவனத்தால் விருது வழங்கப்பட்டது. ஆண்டுதோறும் பெப்ரவரியில் வழங்கப்படும் ‘கனடா தமிழர் தகவல் விருது” எழுத்தாளர் அ.முத்துலிங்கத்தின் இலக்கிய சேவகத்தினை கௌரவித்து பெப்ரவரி 2006ஆம் ஆண்டு டொரன்ரோவில் வழங்கப்பட்டமையும் இங்கு பதிவுசெய்யவேண்டும்.
ஓகஸ்ட் 2007இல் அ.முத்துலிங்கம் எழுதிய ‘பூமியின் பாதி வயது” என்ற நூல் உயிர்மை பதிப்பக வெளியீடாக வெளிவந்தது. நவீன தமிழ் உரைநடைகளுக்கு ஒரு புதிய பரிமாணத்தையும் வசீகரத்தையும் சேர்த்த இந்நூலின் 38 கட்டுரைகளும் வாழ்வின் வியப்பும் நெகிழ்ச்சியும் கொண்ட தருணங்களை மிக நேர்த்தியான காட்சிகளாக்கியிருந்தன.
2008இல் அ.மு.வின் முதலாவது ஒலிப் புத்தக வடிவிலான சிறுகதைத் தொகுப்பொன்று வெளிவந்திருந்தது. அவ்வாண்டின் டிசம்பர் மாதத்தில் ‘உண்மை கலந்த நாட்குறிப்புகள்” என்ற தலைப்பில் அவரது முதலாவது நாவல் (புதினம்) உயிர்மை பதிப்பக வெளியீடாக வெளிவந்தது. தமிழில் சுயசரிதைத் தன்மைகொண்ட புனைவுகளில் தன்னிரக்கமும் படைப்பூக்கமற்ற வெற்றுத் தகவல்களும் பொது இயல்பாகிவிட்ட தமிழ்ச் சூழலில், அ.முத்துலிங்கத்தின் இந்த நாவல், அந்த வகை எழுத்திற்கு ஒரு புதிய உத்வேகத்தையும் அழகியலையும் வழங்கியிருந்தது. அவரது கவனத்தையீர்க்கும் ஒவ்வொரு அனுபவமும் பக்கங்கள் தோறும் உயிர்பெற்று இந்நாவலில் கலந்துறவாடியிருக்கின்றன. எந்தவொரு சிறிய நிகழ்வையும் நினைவையும் ஒரு மர்மமான ரசவாதத்தால் வாழ்வின் தரிசனமாக மாற்றிவிடும் அவர், நவீனத் தமிழ் எழுத்திற்கு ஒரு புதிய நீரோட்டத்தை வழங்கியிருந்தார். இந்த நாவலின் சில பகுதிகள் தனி ஆக்கங்களாக முன்னர் ஆங்காங்கே வெளிவந்திருந்த போதும், தனி நூல் வடிவத்தில் அவை தமது உள்ளிணைப்புகளால் ஆழ்ந்த ஓர்மையை வெளிப்படுத்தியிருந்தன.
2008இல் அ.முத்துலிங்கத்தின் தளராத தமிழ் இலக்கியப் பாதையில் மற்றுமொரு மைல்கல்லாக அவரது சிறுகதைகளின் தொகுப்பொன்று முதன்முறையாக பத்மா நாராயணன் அவர்களால் ஆங்கிலத்திற்கு மொழிமாற்றம் செய்யப்பட்டு ஐயெரளிiஉழைரள வுiஅநள என்ற தலைப்பில் வெளியிடப்பட்டது.
2009இல் ‘அமெரிக்கக்காரி” என்ற அவரது மற்றுமொரு சிறுகதைத் தொகுப்பு காலச்சுவடு பதிப்பக வெளியீடாக வெளிவந்தது. பின்னர் 2011 நவம்பரில் இது மீள்பதிப்பும் செய்யப்பட்டமை குறிப்பிடத்தக்கது. உலகெங்கும் பொதுவாகவும் மனித உணர்வுகளைத் துல்லியமாகவும் நுணுக்கமாகவும் கலையம்சம் குலையாமல் அங்கதத்துடன் வெளிக்கொணரும் சிறுகதைகளை அடக்கியது இந்நூல். ஒரு சராசரி தமிழ் வாசகருக்கு முற்றிலும் பரிச்சயமில்லாத களங்களில் நிகழும் இக்கதைகள் வாழ்வின் வியப்பும் விரக்தியும் நெகிழ்ச்சியும் நம்பிக்கையும் அழகும் அபத்தமும் நிறைந்த தருணங்களைச் சுவையாகப் பதிவுசெய்திருக்கின்றன. இத்தொகுப்பில் தாழ்ப்பாள்களின் அவசியம், பத்து நாட்கள், புவியீர்ப்புக் கட்டணம், லூசியா, பொற்கொடியும் பார்ப்பாள், வேட்டை நாய், உடனே திரும்பவேண்டும், 49ஆவது அகலக்கோடு, புகைக்கண்ணர்களின் தேசம், வெள்ளிக்கரண்டி, சுவருடன் பேசும் மனிதர், பத்தாவது கட்டளை, மன்மதன், மட்டுப்படுத்தப்பட்ட வினைச்சொற்கள், மயான பராமரிப்பாளர், அமெரிக்கக்காரி ஆகிய தலைப்புகளில் எழுதிய 16 கதைகள் அடங்கியிருந்தன.
2009இல் அ.முத்துலிங்கம் தனது படைப்புக்களுடன் ஆரம்பித்த இணையத்தளத்தில் அவ்வப்போது தனது மனதில் தோன்றியவற்றை இலக்கிய நயத்துடன் பதிவுசெய்துவந்துள்ளார். இவை கட்டுரைகளாகவும், தகவல் துணுக்குகளாகவும், சிறுகதைகளாகவும் அமைந்திருந்தன. அவற்றில் சில பின்னாளில் தமிழ்ப் பத்திரிகைகளிலும் சிற்றிலக்கிய ஏடுகளிலும் பிற ஊடகங்களிலும் மீள்பிரசுரமாகி வாசகர்களைக் கவர்ந்திருந்தன. பலரதும் அவதானிப்பைப் பெற்ற அத்தகைய 66 பதிவுகளை 2010 டிசம்பரில் ‘அமெரிக்க உளவாளி” என்ற தலைப்பில் சென்னை கிழக்கு பதிப்பகத்தின் மூலம் வெளியிட்டிருந்தார்.
அ.முத்துலிங்கம்; தான் சந்தித்த அனுபவங்களைச் சுவையான 58 கட்டுரைகளில் எழுதிச் சேர்த்து, ‘ஒன்றுக்கும் உதவாதவன்” என்ற பெயரில் மற்றொரு கட்டுரைத் தொகுப்பில் வழங்கியிருக்கிறார். இது உயிர்மை பதிப்பக வெளியீடாக டிசம்பர் 2011இல் வெளிவந்தது. வழமைபோல, ஏதோ ஒரு வகையில் அவரது கவன ஈர்ப்புக்குள்ளாகும் ஒவ்வொரு அனுபவமும் உயிர்ச்சித்திரமாக விழித்தெழும் ரசவாதம் இந்நூலில் சாத்தியமாகியிருக்கிறது. நவீன தமிழ் உரைநடைக்கு ஒரு புதிய பரிமாணத்தையும் வீச்சையும் சேர்க்கும் எழுத்தில் பல நிகழ்வுகளை இந்நூலில் ஆசிரியர் விவரித்திருந்தார். நிகழ்புலங்கள் அமெரிக்கா, கனடா, ஆபிரிக்கா, இலங்கை, ஐரோப்பா, இந்தியா என மாறினாலும் கதாமாந்தர்களின் மனிதநேயமும் மகிழ்ச்சியும், துயரமும், தியாகமும் மாறாமல் ஒரு தமிழ் வாசகருக்கு முற்றிலும் பரிச்சயமில்லாத தருணங்களை வாசிப்பவர் மனத்தில் நீடித்து நிறுத்துகின்றன.
2012இல் வெளிவந்த இவரது ‘குதிரைக்காரன்” என்ற சிறுகதைத் தொகுதிக்கு சிறந்த சிறுகதைத் தொகுப்பிற்கான ‘விகடன் விருது” அவ்வாண்டில் வழங்கப்பட்டது. அவ்வாண்டிலேயே திருப்பூர் தமிழ்ச் சங்கமும் அ.முத்துலிங்கம் என்ற எமது ஈழத்தின் பெருமைமிகு படைப்பாளிக்கு விருது வழங்கிப் பெருமைப்பட்டது.
அ.முத்துலிங்கத்தின் தேர்ந்த 45 சிறுகதைகளை ‘கொழுத்தாடு பிடிப்பேன்” என்ற தலைப்பில் க.மோகனரங்கன் அவர்கள் தேர்ந்தெடுத்துத் தொகுத்து 2013இல் வெளியிட்டிருந்தார். டிசம்பர் 2013 இல் காலச்சுவடு பதிப்பகமே இதையும் வெளியிட்டிருந்தது. இதில் குதம்பேயின் தந்தம், ஒரு சாதம், வம்ச விருத்தி, வடக்கு வீதி, பூமாதேவி, யதேச்சை, ஒட்டகம், கொழுத்தாடு பிடிப்பேன், அடுத்த புதன்கிழமை உன்னுடைய முறை, மொசு மொசுவென்று சடைவைத்த வெள்ளை முடி ஆடுகள், தாத்தா விட்டுப்போன தட்டச்சு மெசின்,போரில் தோற்றுப்போன குதிரைவீரன், பூமத்திய ரேகை, எந்த நிமிடத்திலும் பறிபோகும் வேலை, மகாராஜாவின் ரயில்வண்டி, நாளை, தொடக்கம், ஆயுள், விருந்தாளி, அம்மாவின் பாவாடை, கறுப்பு அணில், எதிரி, ஐந்தாவது கதிரை, தில்லை அம்பலப் பிள்ளையார் கோவில், ராகு காலம், தாழ்ப்பாள்களின் அவசியம், புவியீர்ப்புக் கட்டணம், வேட்டை நாய், புகைக் கண்ணர்களின் தேசம், சுவருடன் பேசும் மனிதர், மயான பராமரிப்பாளர், அமெரிக்கக்காரி, குதிரைக்காரன், மெய்க்காப்பாளன், ஐந்து கால் மனிதன், புளிக்கவைத்த அப்பம், எங்கள் வீட்டு நீதவான், தீர்வு, எல்லாம் வெல்லும், மூளையால் யோசி, சூனியக்காரியின் தங்கச்சி, நிலம் எனும் நல்லாள், ரயில் பெண், ஓணானுக்குப் பிறந்தவன், எலிமூஞ்சி ஆகிய தேர்ந்த சிறுகதைகள் இடம்பெற்றிருந்தன.
இதே 2013ஆம்ஆண்டில் ‘தமிழ்மொழிக்கு ஒரு நாடில்லை” என்ற தலைப்பில் இவரது நேர்காணல்கள் சில தொகுக்கப்பெற்று நூலுருவாகியிருந்தன. மேலும் இவ்வாண்டு இவரது இலக்கியப் பணிகளை நயந்து எஸ்.ஆர்.எம்.பல்கலைக்கழகம் ‘தமிழ்ப் பேராய விருதினை” இவருக்கு வழங்கியிருந்தமையும் குறிப்பிடத்தக்கது.
2014இல் கனடாவில், ஒன்ராரியோ மாநிலத்தில் மார்க்கம் நகரசபை இவருக்கு கனேடியப் பிரஜைகளுக்கான கௌரவமாகக் கருதப்படும் இலக்கிய விருதினை வழங்கியிருந்தது. அவ்வாண்டில் அ.முத்துலிங்கம் எழுதிய ‘கடவுள் தொடங்கிய இடம்” என்ற நூலும் வெளிவந்தது.
தொடர்ந்தும் 2015 இல் ‘பிள்ளை கடத்தல்காரன்”, 2016 இல் ‘தோற்றவர் வரலாறு” (கட்டுரைகள்), ‘ஆட்டுப்பால் புட்டு”, ‘அ.முத்துலிங்கம் சிறுகதைத் தொகுப்பு” (2 பாகங்களில் வெளிவந்தது) ஆகிய நூல்கள் வெளிவந்துள்ளமையை அறிய முடிகின்றது. 2017இல் அ.முத்துலிங்கத்தின் இரண்டாவது ஆங்கில மொழிபெயர்ப்புச் சிறுகதைத் தொகுப்பு யுகவநச லுநளவநசனயல என்ற தலைப்பில் வெளிவந்திருக்கிறது.
இவ்வாண்டில் (2018) அ.முத்துலிங்கம் எழுதிய கட்டுரைகளின் பெருந்தொகுப்பு
(2 பாகங்களில்) வெளிவரவுள்ள இனியசெய்தியையும் அவர் வாயிலாகவே என்னால் அண்மையில் அறிந்துகொள்ள முடிந்தது.
தனது அறுபதாண்டு இலக்கியப் பயணத்தில் தான் சந்தித்த தனிநபர்களின் கவனத்தை ஈர்த்த பண்புகள், தான் பயணித்த நாடுகளில் கண்டு, கேட்ட உணர்வுபூர்வமான செய்திகள், தான் சேகரித்துப் பாதுகாத்து வைத்த விலங்கினங்கள், தாவரங்கள் பற்றிய தனித்துவமான செய்திகள் இவை அனைத்தையும் தனது படைப்புக்களின் ஊடாகக் கச்சிதமாகப் பதிவுசெய்துவைத்திருக்கின்றார். இவர் தனது படைப்பாக்கங்களை அருவியின் ஊற்றுப்போல தங்குதடையின்றி எழுதிக் குவித்தாலும், வில்லியம் ஷேக்ஸ்பியர் போல, ஒரு தடவை கூறிய செய்தியை வேறொரு தடவை தனது எந்தப் படைப்பிலும் எழுதியதில்லை என்பது இவரது எழுத்துக்களின் சிறப்புகளில் ஒன்று. கட்டுரைகளில் அவர் கூறும் நுணுக்கமான தகவல்கள் எல்லாம் எப்போதும் எமக்குப் புதியவையாகவே உள்ளன.
‘எல்லாம் வெல்லும்” என்ற தலைப்பில் பெண்போராளிகள் பற்றிய அவரது சிறுகதையில் பிரிகேடியர் துர்க்காவின் வாழ்வின் கடைசி நாளையும் வன்னிக்காட்டுப் பறவைகளின், குறிப்பாக அந்த ஆறுமணிக் குருவியின் நுணுக்கமான விபரிப்புகளையும் அவரால் எப்படி அவ்வளது சுவையாக விபரிக்கமுடிகின்றது? ‘வம்ச விருத்தி” என்ற கதையில் வரும் பாக்கிஸ்தான் மலையாடு பற்றியும் உலகில் விரைவாக அழிந்துசெல்லும் அந்த விலங்கினம் பற்றியும் எவ்வளவு நுணுக்கமான செய்திகளை அவரால் விபரிக்கமுடிகின்றது? அதுவும் தான் சொல்லவந்த கதையுடன் தத்ரூபமாகப் பொருத்திக் கதைசொல்ல முடிகின்றது? அவரால் எப்படி இவை அனைத்தையும் காலம்காலமாகத் தன் மூளையில் சேகரித்துப் பாதுகாத்து வைக்க முடிகின்றது? எம்மிடம் கேள்விகள் தான் எஞ்சுகின்றன- பிரமிப்புடன்.
அவ்வப்போது நான் எழுதும் எனது கட்டுரைகளையும்;, முழுமைப் படுத்தப்பட்ட நூல்தேட்டம் நூலியல் பதிவுகளையும் நேரடியாகவே கணனியில் பொறித்துப் பதிவிடும் வழக்கம் எனக்குள்ளது. இது எனது நேரத்தை கட்டுப்படுத்தும் ஒரு பொறிமுறையாகப் பின்பற்றி வருகின்றேன். நண்பர் அ.முத்துலிங்கம் அவர்களின் வாயிலாக வந்து என்னைப் பிரமிக்க வைத்த மற்றொரு தகவல், அவர் தனது ஆக்கங்களை வெள்ளைத் தாளில் முதலில் எழுதித் திருத்திய பின்னரே தட்டச்சில் பொறிக்கின்றார் என்றதாகும். இது அவரோடு அண்மையில் உரையாடியபோது நேரில் பெற்ற தகவல் என்பதால்; நம்பாதிருக்கவும் முடியவில்லை. எப்படி இவரால் இவ்வளவு வேகத்துடனும் ஆளுமையுடனும் புத்துயிர்ப்புடனும் தொடர்ந்து எழுத முடிகின்றது என்பதை எண்ணிப்பார்க்கிறேன். இவருக்கும் தானே நாளொன்றுக்கு 24 மணிநேரம் வழங்கப்பட்டுள்ளது. புலம்பெயர் வாழ்வின் பல்வேறு நெருக்கடிகளுக்குள் இது இவருக்கு மட்டும் எப்படிச் சாத்தியமாகின்றது? எழுத்தையே வாழ்வாகக் கொண்ட ஒரு கதைசொல்லியால் மாத்திரமே இது சாத்தியம்.
2000ஆம் ஆண்டு தனது ஓய்வின் பின்னர் வீறுடன் இலக்கியம் படைத்துவரும் அ.முத்துலிங்கத்தின் நூல்கள் பெரும்பாலும் தமிழக வாசகர்களின் கரங்களையே எளிதில் சென்றடைகின்றன. தமிழகத்தில் வெளியாகும் ஈழத்தவரின் படைப்புகள் அனைத்தும் ஈழத்தைப் பரவலாகச் சென்றடைவதில்லை என்பது எனது 17 வருட நூல்தேடலின் அனுபவத்தின் வாயிலாக அறிந்துகொண்டவை. ஈழத்தமிழ்ப் படைப்பாளிகளின் பல நூல்களை தமிழகத்துக்குச் சென்றே பதிவுசெய்தாக வேண்டிய கட்டாய நிலை எனக்கு இருந்து வந்துள்ளது. குறிப்பிட்ட அந்த நூல்கள் தமிழகத்தை விட்டு வெளியே செல்லாமல்போனதே அடிப்படைக் காரணம் எனலாம்.
இந்நிலையில் எம்மவரான அ.முத்துலிங்கத்தின் படைப்புகள் அனைத்தும் ஈழத்தவரின் ‘ழௌடயாயஅ.ழசப” இணையத்தளத்தில் தரவேற்றம் செய்யப்படுவது விரும்பத்தக்கது. இதற்கான அனுமதியை அ.முத்துலிங்கம் அவர்கள் ஏற்கெனவே நூலகம் நிறுவனத்திற்கு ஏற்கெனவே வழங்கியிருப்பது மகிழ்ச்சிக்குரிய செய்தியாகும். தற்போதைய நிலையில் அ.முத்துலிங்கம் கதைகள், அக்கா, அங்கே இப்ப என்ன நேரம்?, திகடசக்கரம், மகாராஜாவின் ரயில்வண்டி, வடக்குவீதி, வம்ச விருத்தி ஆகிய அவரது ஏழு நூல்கள் மாத்திரமே இணைய நுலகத்தில் பார்வையிடக்கூடியதாக உள்ளது. விரைவில் எஞ்சிய நூல்களும் தரவேற்றம் செய்யப்படும் என்று எதிர்பார்க்கின்றேன். மேலும், அவரது படைப்புக்கள் அனைத்தும் ஈழத்து நூலகங்களையும்; சென்றடைய வேண்டும் என்பது எனது வேணவா. இக்கட்டுரை நூலகங்களுக்கான நூல் கொள்வனவாளர்களுக்கு அ.முவின் நூல்களின் தேடலுக்கு வழிகாட்டும் என்றும் நம்புகின்றேன்.
அறுபதாண்டுகளை இலக்கியப் பயணத்தில் செலவிட்டுத் தொடர்ந்தும் சளைக்காமல் பயணிக்கும் எமது இனிய நண்பர் அ.முத்துலிங்கத்தின் பணிகளை ஆவணப்படுத்தும் வாய்ப்பினை எனக்கு நல்கிய ஞானம் குழுமத்திற்கும் எனது நன்றி. (27.3.2018)
•This e-mail address is being protected from spambots. You need JavaScript enabled to view it•
•<• •Prev• | •Next• •>• |
---|