ஈழத்தின் முதுபெரும் பத்திரிகையாளர் எஸ்.எம்.கோபாலரத்தினம் தனது 87ஆவது அகவையில்; நேற்று 15.11.2017 அன்று மட்டக்களப்பில் காலமானார். தமது இளவயதில் வீரகேசரி நாளிதழில் ஒப்புநோக்குநராக இணைந்து கொண்ட அவர் பின்னர் அங்கு உதவி ஆசிரியராகிப் பின்னர் சிரேஷ்ட உதவி ஆசிரியராகப் பதவி உயர்வுபெற்று பணிபுரிந்தார். 1958இல் ’ஈழநாடு” பத்திரிகை நாளிதழாக வெளியானபோது, அதன் செய்தி ஆசிரியராக இணைந்த கோபாலரத்தினம் 1980களின் முற்பகுதிவரை அதன் ஆசிரியபீடத்தின் பிரதானியாக இயங்கிவந்தார். 1985இல் ‘ஈழமுரசு” பத்திரிகையின் ஆசிரியராகப் பணியை ஏற்று அப்பத்திரிகையின் துரித வளர்ச்சிக்குக் காரணமாக இருந்தார். அவ்வேளையில்; 1987இல் இந்திய அமைதிப்படை இலங்கைக்குள் புகுந்து ஈழத்தின் பத்திரிகைச் சுதந்திரத்தில் கைவைத்தபோது கைது செய்யப்பட்டு பல மாதங்கள் இந்திய அமைதிப் படைகளின் சிறையில் தடுத்து வைக்கப்பட்டிருந்தார். பின்னர் வெளியே வந்ததும் ‘ஈழமண்ணில் ஒரு இந்தியச் சிறை’ என்ற தலைப்பில் தனது அனுபவத்தினை தொடராக தமிழகத்தின் ‘ஜுனியர் விகடன்” பத்திரிகையில் இடம்பெறச்செய்து, இந்திய அமைதிப்படையின் கோரமுகத்தை வெளிப்படுத்தினார். இத்தொடர் பின்னர் ‘ஈழ மண்ணில் ஓர் இந்தியச் சிறை” என்ற மூலத் தலைப்பிலேயே மட்டக்களப்பு றுழசடன எழiஉந Pரடிடiஉயவழைளெஇ வெளியீடாக ஆகஸ்ட் 2000 இல் நூலுருவாக வெளிவந்தது. இந்நூலில் இந்திய அமைதிப்படையினரால் தான் கைது செய்யப்பட்டதன் பின்னரான இரண்டு மாத சிறை அனுபவம் விரிவாகப் பதிவுசெய்திருந்தார். கைது செய்யப்பட்டதிலிருந்து விடுதலையாகும் வரை நடந்த நிகழ்வுகள், சிறையில் சந்தித்தவர்கள், அவர்களிடமிருந்து கேட்டறிந்தவை என அனைத்தும் பதிவுக்குள்ளாகியிருந்தன.
இந்தியப்படை 1991இல் இலங்கையிலிருந்து புறப்பட்ட பின்னர், ‘ஈழநாதம்” நமது ஈழநாடு” ஆகிய பத்திரிகைகளில் ஆசிரியராகப் பணியாற்றிய கோபாலரத்தினம் கொழும்பில் ‘சுடரொளி” பத்திரிகையின் ஆசிரிய பீடத்திலும் சிறிது காலம் தனது ஊடகவியல் பணியைத்; தொடர்ந்தார். பின்னர் மட்டக்களப்புக்குச் சென்று அங்கு ‘தினக்கதிர்” பத்திரிகையில் ஆசிரியராகப் பணியாற்றினார்.
தெகிவளை, நிகரி வெளியீட்டாளர்களினால் மே 2003இல் வெளியிடப்பட்ட ‘அந்த ஒரு உயிர்தானா உயிர்” என்ற அவரது நூல், மட்டக்களப்பிலிருந்து வெளிவரும் தினக்கதிர் நாளேட்டில் பிரதம ஆசிரியராக இருந்த வேளையில் எழுதப்பட்ட ஆசிரியர் தலையங்கங்களையே பெருமளவில் உள்ளடக்கியதாக இருந்தது. இந்நூலில் யாழ்ப்பாணத்து ‘ஈழநாதம்” பத்திரிகையில் வெளிவந்த இரண்டு ஆக்கங்களும் சேர்க்கப்பட்டிருந்தன. இவரது ஆசிரியத் தலையங்கங்கள் அனைத்தும் சமகால ஈழத்து அரசியல் நிலையை வைத்து எழுதப்பட்டவையே. தமிழ்மக்களின் மன எழுச்சியையும் இவை துல்லியமாகப் பிரதிபலிப்பனவாக அமைந்துள்ளன.
ஈழத்தில் அனுபவம்மிக்க பத்திரிகையாளராகத் திகழும் எஸ்.எம்.ஜி. அவர்கள் வீரகேசரியில் 7 ஆண்டுகளும், ஈழநாட்டில் 21 ஆண்டுகளும் ஆசிரியராகப் பணியாற்றிய அனுபவத்தை முன்வைத்து, ‘பத்திரிகைப் பணியில் அரை நூற்றாண்டு” என்றதொரு நூலையும் நவம்பர் 2003 இல் யாழ்ப்பாணம்: பாரதி பதிப்பக வெளியீடாக வெளியிட்டிருந்தார். ஈழத்தின் பத்திரிகையாளராகத் தான் வாழ்ந்துபெற்ற அனுபவங்களை இந்நூலில் சுவையாக விபரித்திருந்தார்.
பாரிசிலிருந்து வெளிவந்த ‘ஈழநாடு” பத்திரிகையில் கோபாலரத்தினம் அவர்கள்; எழுதிய தொடரின் ஒரு பகுதி ‘முடிவில்லாப் பயணத்தில்” என்ற தலைப்பில் சிறு பிரசுரமாக வெளிவந்திருந்தது. அந்நூலின் விரிவான பதிப்பினைப் பின்னர் ‘ஈழம்: முடிவில்லாப் பயணத்தில் முடியாத வரலாறு” என்ற தலைப்பில் எஸ்.எம்.ஜி அவர்கள் தமிழகத்தின்; சென்னை, தோழமை வெளியீடாக வெளியிட்டிருந்தார். இந்த நூலே இவரது இறுதி நூலென்று கருதுகின்றேன். டிசம்பர்; 2008இல் வெளிவந்த இந்நூல் அலைகடல் பயணம், கரை தெரியவில்லை, முடிவில்லாப் பயணம், துக்கதினம், ஓரின ஆட்சி-இது சிங்கள ஜனநாயகம், தனிச் சிங்கள அமைச்சரவை, அரசியல் யாப்பு, சிங்களக் குடியேற்றம், சிங்களம் மட்டுமே, அமைதிவழிப் போராட்டம், பண்டா-செல்வா ஒப்பந்தம், சரணடைந்தார் பண்டாரநாயக்க, கடவுளே வருவார் காடுகளே சுடும், ஓநாய்கள் மீண்டும் உறுமின, ஓரினத்தின் பிரதமர்-ஒரு தேசத்தின் பிரதமர் அல்ல, வஞ்சக வலை, நெடும்பயணம் போன நீதி, சிங்களம் சிங்களம் சிங்களம் மட்டுமே, ஈழநாடு, மறுபடியும் காந்தி மகாத்மா, ஆதிக்க நரித்தனம் ஆண் என்ன பெண் என்ன, குனிவதா நிமிர்வதா, புதுடில்லி வஞ்சகம், நட்டாற்றில் மூழ்கும் படகுகள், அடிமைகள் ஓய்வதில்லை, மீண்டும் வென்றார் சிறிமாவோ, இனப்பாகுபாடு-இனவெறி -இனஒழிப்பு, வங்கதேசம் போல், உலகத் தமிழர் மாநாடு, தமிழருக்குத் தனிஅரசு, ஆயுதம் செய்வோம், தனி ஈழப் பிரகடனம் ஆகிய தலைப்புகளினூடாக இலங்கையின் இனப்பிரச்சினையின் அரசியல் வரலாறு பேசப்படுகின்றது. பின்னிணைப்பாக புதினம் இணையத் தளத்தில் பிரசுரமான அனிதா பிரதாப் அவர்களுக்கு வழங்கிய நேர்காணலும் இணைக்கப்பட்டிருந்தது.
கோபு, எஸ்.எம்.ஜி ஆகிய அடைமொழிகளில் பத்திரிகையாளர்களால் அன்புடன் அழைக்கப்பட்ட எஸ்.எம்.கோபாலரத்தினம், ஈழத்துப் பத்திரிகை உலகில் மூத்த தேர்ச்சிபெற்ற ஒரு பத்திரிகையாளராக எப்போதும் மதிக்கப்பட்டவராக இருந்தார். இன்று ஈழத்துப் பத்திரிகைத்துறையில் சிறந்த விளங்கும் பலர், எஸ்.எம்.ஜி.யின் வழிகாட்டலின்கீழ் வளர்ந்தவர்களே. ஈழத்துப் பத்திரிகைத் துறையில் சுமார் 65 வருட எழுத்துப் பணியாற்றிய கோபாலரத்தினம் மீளாத்துயில் கொண்டுவிட்டார்.
அன்னாரின் இறுதிக்கிரியைகள் நாளை வெள்ளிக்கிழமை (17.11.2017) பிற்பகல் மூன்று மணிக்கு மட்டக்களப்பு பூம்புகார் 4ம் குறுக்குத் தெருவில் உள்ள அவரது இல்லத்தில் நடைபெறும்.
•This e-mail address is being protected from spambots. You need JavaScript enabled to view it•
•<• •Prev• | •Next• •>• |
---|