பொ கருணகரகரமூர்த்தியின் பெர்லின் நினைவுகள் மற்றைய புலம்பெயர்ந்த அனுபவங்கள்போல் சிதைந்து நாவல், சிறுகதை என உருமாறாது, கற்பனை கலக்காமல் அபுனைவாக தமிழ் இலக்கியப்பரப்பிற்கு வரவாகியுள்ளது.இதனால் இது நமது புலப்பெயர்ந்தோரது இலக்கியத்தில் முக்கியமான ஓரிடத்தைப் பிடித்துள்ளது. வாசிப்பதற்கான அவகாசத்தைத்தேடிப் பல காலங்களாக அடைகாத்து வைத்திருந்தேன். கடைசியில் அது கை கூடியது. நிச்சயமாக ஒரு டாக்சி ஓட்டுனராக அவர் முகம் கொடுத்த அனுபவங்கள் பலதரப்பட்டவை. டாக்சி ஓட்டுனராகப் பலரோடு பல தருணங்களில் ஏற்படும் சம்பவங்கள் மற்றவர்களுக்கு எக்காலத்திலும் ஏற்படாது. அதிலும் எத்தனை டாக்சி ஓட்டுனர்கள், அவர்போல் தனது அனுபவங்களை இலக்கியமாக்கும் மொழி தெரிந்தவர்கள்? அவரது மருத்துவராகும் எண்ணம் ஈடேறவில்லை என்பது உண்மை, ஆனால் அது தமிழ் இலக்கிய உலகத்திற்கு அதிஷ்டமாக அமைந்தது. மருத்துவரது நினைவுகள் அவர் இறந்தபின்போ அல்லது அவரது நோயாளிகள் இறந்தபின்போ மறைந்துவிடும். ஆனால் டாக்சி ஓட்டுனரான நண்பர் கருணாகரமூர்த்தியின் நினைவுகள் அழிவற்றவை. குறைந்தபட்சம் தமிழ்மொழியிருக்கும் வரையில் வாழும். இந்தப் புத்தகத்தில் இலங்கை நினைவுகளையும் பெர்லின் நினைவுடன் குழைத்து எழுதியது சுவையானது. அத்துடன் பல இலங்கையரது வாழ்வுகளை மற்றவர்களுடன் கலந்தது அவரது அகதித்தமிழ் வாழ்க்கையும் பதிவாக்கியுள்ளது.
இலங்கைத் தமிழர்கள் ஐரோப்பியநாடுகளுக்கு செல்லுவது எண்பத்து மூன்றுக்கு முன்பாகவே நடந்தது. ஓரளவு ஆங்கிலம் படித்தவர்கள் மேற்படிப்புக்காக மாணவர் விசா எடுத்துக்கொண்டு இங்கிலாந்து செல்வதும், மற்றவர்கள் ஜெர்மனி, பிரான்ஸ் எனச் செல்லத் தொடங்கியதற்கு 72 களில் உருவாகிய தரப்படுத்தலே முதலாவதாகவும், சீதனச் சந்தையில் சகோதரிகளின் வாழ்வு இரண்டாவதாகவும், உந்து சக்திகளாகின. ஆரம்பத்தில் விமான கட்டணத்திற்கு பணம் உள்ள பெற்றோர்கள், பிள்ளைகளை அனுப்பத்தொடங்கினார்கள். அதில் முக்கியமாக நான் பிறந்த தீவுப்பகுதியினரே முன்னணிப்படையினர். விவசாயம் செய்யாத தீவுப்பகுதியினர் அதுவரையிலும் இலங்கையின் தென்பகுதியில் புகையிலைக் கடை, உணவுக்கடைகளை நோக்கித் தொடங்கிய பிரயாணம் இன முறுகல்களால் தடைப்பட்டதும் ஐரோப்பா சென்றனர். அக்காலத்தில் ஏரோபுளட் என்ற சோவியத் விமானத்தில் ஏறி கிழக்கு பெர்னிலில் இறங்கிய பின், மேற்கு பெர்லினில் செல்வதற்கு அக்கால கிழக்கு- மேற்கு அரசியல் பனிப்போர் உதவியது. அப்படியாகச் சென்றவர்கள் போட்ட பாதையால் 83 பின்பு மற்றயவர்கள் நடந்தார்கள்.
பேராசிரியர் நுகுமான் தனது முகவுரையில்,இந்தப்புத்கத்தில் அரைவாசி ஜெர்மானியரின் பாலியல் நடத்தையைப்பற்றிப் பேசுகிறது என எழுதியது என்னைச் சிந்திக்க வைத்தது. மன்மதபாணங்கள் இதயத்தைத் துளைத்து, இரத்தத்தை வெப்பமாக்கும் இரவு என்பது காமத்திற்க்கான நேரம். இந்தக்காலத்தில் டாக்சியோடும்போது பாலியல் தேவைகளை விற்பவரும், வாங்குபவர்களும் வந்து போவார்கள். இது பெருநகரங்கள் எங்கும் நடக்கும். சென்னைகூட இதற்கு விதிவிலக்கால்ல. பெர்லின் நினைவுகள் 403 வது பக்கத்தை படித்து முடித்த பின்பு பேராசிரியர் நுகுமான் கூற்று உயர்வு நவிட்சியாக தெரிந்தது.
யாராவது தமிழர்கள் பெர்லினுக்கு செல்வதென்றால் அதற்கு முன்பாக படிக்கவேண்டியதாக இந்தப்புத்தகம் இருக்கிறது.அதற்கப்பால் ஐரோப்பாவில் சென்ற பலரது வாழ்க்கைகளில் நடந்த விடயங்கள் இங்கு சொல்லப்பட்டிருக்கிறது. அவுஸ்திரேலியா போன்ற நாடுகளுக்க வந்த எமக்கு இப்படியான அனுபவங்கள் ஏற்படவில்லை. பிற்காலத்துத் தலைமுறையினர் இதன் மூலம் முந்தியவர்கள், வாழ்க்கையை நிலை நிறுத்தச் செய்த முயற்சிகள் மற்றும் தியாகங்களை அறிய உதவும் பதிவாகிறது.
யூதர்கள் அனுபவித்த கொடுமைகளையும் அதன் பின்பான தகவல்களும், அவைகள் நடந்த இடங்களை விவரிப்பதின் மூலம் அந்த விடயங்களை மீண்டும் நினைவுபடுத்த முடிகிறது. மானிடம் இப்படியான அவலங்களை மீண்டும் எதிர்கொள்ளாது இருப்பதற்காக ஒவ்வொரு தனிமனிதனுக்கும் இவை தெரியவேண்டும். பேர்லின் நகரத்தின் மக்களுக்கு அப்பால் அங்குள்ள பூங்காக்கள், நீர்நிலைகள், புல்வெளிகள், காடுகள், பறவைகள், மற்றும் மிருகங்கள் என ஒரு சூழலியல் விவரிப்பு என் போன்றவர்களுக்கு அங்கு செல்லும் அவாவைத் தூண்டுகிறது. படங்கள் கேக்கிற்கு மேல் வைத்த ஐசிங்காக அலங்கரிக்கிறது.
இந்தப்புத்கத்தில் உள்ள சில விடங்களைக் குறிப்பிடவேண்டும் முக்கியமாக எழுதிய மொழியின் தன்மை சரடாக இடறுகிறது. காவல்துறையின் சிறகம், அடுக்ககம், வெதுப்பகம், ஐஸ் திண்மம் மற்றும் அகவை எனத் தமிழ் பாவிக்கிறார். அதே நேரத்தில் 'சைட்பிட்டிங்', 'வின்டர்' என ஆங்கிலம் வருகிறது. அதே நேரத்தில் இவ்வளவு தூரம் தமிழேந்திபோல் வார்த்தைகளைப் பாவித்துவிட்டு ஜலக்கிரீடை என்றும் பாவிக்கிறார்.
எழுத்தாளர்களாகிய நாங்கள் எழுதியது மக்களிடம் செல்லும்போது அவர்கள் வாசிக்கவேண்டும் என்ற நோக்கத்திலே எழுதுகிறோம். பாவனையில் இல்லாத வார்த்தைகளோ, அதற்கப்பால் வட்டார வழக்குகள் என வரும்போது வாசிப்பின் போக்கில் இடறல் ஏற்படுகிறது. ஆங்கிலவார்த்தைகளைத் தொடர்ந்து தமிழ்ப்படுத்தும் வழக்கம் நம்மிடமில்லை. வட்டாரவழக்குகளோ அல்லது மற்றைய மொழிபேசுபவர்களையோ பாத்திரமாக அறிமுகப்படுத்தும்போது ஆங்கிலத்தில் ஓர் இரு வார்த்தைகளை அறிமுகப்படுத்தி விட்டு தொடர்ந்து வழக்கமான மொழியில் போவார்கள். உதாரணமாக ஸ்கொட்லாண்டைச் சேர்ந்த எழுத்தாளர் அவரது ஆங்கிலத்தில் எழுதும்போது அதை எப்படிப் படிக்க முடியும்?.இலக்கியத்தில் தமிழ் நாட்டவர்களும் இலங்கையர்களும் வட்டாரமொழியை புகுத்த முயற்சிப்பார்கள். எவ்வளவு முயற்சித்தாலும் உண்மைகளை முற்றாக இலக்கியத்தில் கொண்டுவரமுடியாது. இருவருக்கிடையே நடக்கும் முழு உரையாடலையும் எழுதினால் படிக்க முடியுமா? கதை சொல்லியின் நோக்கத்திற்கப்பால் உரையாடல் எழுதுவதில்லையே!
ரோனி மொறிசன் எழுதிய பிலவ்ட் நாவலில் Yonder (அப்பால் நிலம்) என்ற ஒரு சொல்லை பாவித்து அடிமை கறுப்பினத்தவர்கள் என்பதை கோடிகாட்டி விட்டு மற்றய பொதுவானவார்த்தைகளுடன் கதையை நகர்த்திக் கடந்து செல்கிறார். இதைவிட்டு முழு உரையாடலையும் கறுப்பின மக்களில் மொழியில் எழுதியிருந்தால் எப்படி வாசிக்கமுடியும்?
புத்தகத்தில் உள்ள மற்றைய ஒரு விடயத்தையும் இங்கு சொல்லவேண்டும். இருப்பினும் குறையாகவில்லை ஆனாலும் குறிப்பிடுதல் அவசியம். பல சம்பவங்கள் பல அத்தியாங்களில் ஒன்று இரண்டு எனக் காட்டில் மலர்ந்த மலராகச் சிதறியுள்ளன. அவற்றில் சம்பவங்கள் ஒவ்வொன்றையும் காட்சி -கதை ( Scene and Summary) என்ற தொடரில் எழுதியிருந்தால் புத்தகத்தை முடிக்கும்வரை கீழே வைக்கமுடியாததாக மாற்றியிருக்கலாம்.
எனது கூற்றைச் சிறிது விவரிக்கலாம். அத்தியாயமாக எழுதியபோது ஒவ்வொரு அத்தியாத்தின் ஆரம்பத்தில் ஒரு கதை சொல்வதற்கான 'நரேற்றிவ் ஆர்க்' (Narrative Arc)வைத்துச் சொல்லியிருக்கலாம். அதைவிட ஒவ்வொரு அத்தியாயத்திலும் முக்கியமான சம்பவங்கள் வரும்போது அதை எங்களுக்கு மேலும் காட்சிப்படுத்தியிருக்கலாம் (Dramatic) அத்துடன் அடுத்த அத்தியாயத்தில் வரும் சம்பவத்தை( Foreshadowing)) கொஞ்சம் பெண்ணின் பாவாடைக்கரைபோல் காட்டியிருந்தால் புத்தகத்தை மேலே கொண்டு சென்றிருக்கும்
டாக்சி விடயங்கள் முக்கியமாக அலைபேசி விடயங்கள் பெர்லினில் டாக்சியோடும் நோக்கமற்ற சாதாரண வாசகர்களுக்குக் கொஞ்சம் அதிகமாகி விட்டதோ என எண்ணினேன். தனது வாழ்க்கையின் கடினமான பகுதியை எமக்குக் கூறியதுடன் அதில் நகைச்சுவையைத்தூவிக் கடந்துவிடுவது கருணாகரமூர்த்தியால் மட்டும் முடிந்த காரியம்.
புதிப்பாளர்- காலச்சுவடு பதிப்பகம்
•This e-mail address is being protected from spambots. You need JavaScript enabled to view it•
•<• •Prev• | •Next• •>• |
---|