டாக்டரின் பெயர் யுக்ஸியி. அந்தப் பெயர் யாருக்கும் தெரியாது. எல்லோரும் அவரை தங்கப் புத்தகம் என்று செல்லமாக அழைத்தார்கள். தங்கத்திற்கு நிகரான நற்குணங்களை அவர் கொண்டிருந்தார் என்பதற்காகத் தான் அவருக்கு அந்தப் பெயரைச் சூடியிருந்தார்கள் என்றால் அது தவறு. யுக்ஸியின் மேசையிலே தங்க நிறத்தில் பைண்டு செய்யப்பட்ட ஒரு புத்தகம் இருந்தது. பார்ப்போரின் கண்ணைக் கவரும் விதத்தில் அசல் தங்கப்பாளம் போல் நேர்த்தியாக வடிவமைக்கப் பட்டிருந்தது அந்தப் புத்தகம். அந்தப் புத்தகத்தை அழகிய கண்ணாடிப் பேழையிலே பத்திரப்படுத்தி வைத்திருந்த குறும்புக்காரான அவர் கண்ணாடிப் பேழை மீது ‘இது தங்கம்’ என்று செதுக்கியும் விட்டார். அதன் பிறகு தங்கப் புத்தகமாகி விட்டார் யுக்ஸியி.
புதியவர்கள் யாரும் அந்தப் பேழையைச் சுட்டிக்காட்டி ‘இது என்ன டாக்டர்?’ என்று கேட்டு விட்டால் போதும் ‘அது தங்கம் தொடாதீர்கள்’ என்று சீரியசாகச் சொல்லுவார் யுக்ஸியி. சுவாரஷ்யம் என்னவென்றால் சிகிச்சைக்காக வந்த திருடனொருத்தன் அந்தப் புத்தகத்தை உண்மையிலே தங்கமென நம்பி களவாடிப் போனான். ஒருசில நாட்களில் ‘மன்னிக்கவும்’ என்ற கடித்தோடு புத்தகப்பேழை திரும்பி வந்து விட்டது.
சிறிய அந்தப் புத்தகம் Hutchison’s clinical methods என்ற ஆங்கில மருத்துவ நூல் ஆகும். மருத்துவக் கல்லூரி மாணவர்களுக்கு இந்நூலின் பெறுமதி நன்றாகத் தெரியும். நோயாளியொருவரோடு எப்படி உரையாடுவது, நோய் அறிகுறிகள், நோய் திருஷ்டாந்தத்தை எப்படி அறிந்து கொள்வது, வயிற்றை, கால்களை, இதயத்தை, நுரையீரலை, தலையை, தோலை எப்படிப் பரிசோதிப்பது என்று அந்நூலில் விலாவாரியாகப் போட்டிருப்பார்கள். அந்நூலிலுள்ள தாற்பரியங்களைக்; கற்றுத் தேறாமல் யாரும் டாக்டராகி விடமுடியாது. அற்புதமான அப்புத்தகம் யுக்ஸியி மருத்துவக் கல்லூரியில் கற்றுக் கொண்டிருந்தபோது செய்த சாதனைகளுக்காக கிடைத்ததா என்றால் அப்படி இல்லை.
யுக்ஸியி ஓய்வாக இருக்கும் வேளையில் படிக்கும்போது செய்த முட்டாள் தனங்களை நினைத்து தன்னுடைய தலையிலே தானே குட்டிக் கொள்வார்; சிலவேளை குபீரென்று சிரித்தும் விடுவார். அப்படிச் செய்த முட்டாள்தனத்திற்கு கிடைத்த பரிசுதான் அந்தத் தங்க பைண்டு தங்க புத்தகம்.
மருத்துவப் படிப்பின் மூன்றாவது ஆண்டின் முதல் நாளன்று அந்த முட்டாள்தனம் நிகழ்ந்தது. எல்லா மாணவர்களும் வெள்ளை ஓவர்கோட் அணிந்து ஸ்டெதஸ்கோப்பை கழுத்தில் சுற்றிப் போட்டுக் கொண்டு ஜாலியாக வந்திருந்தார்கள். ஜாலிக்கு காரணம் இருந்தது. அன்றுதான் முதன் முதலாக டாக்டர்களின் அடையாளச் சின்னமான ஸ்டெதஸ்கோப்பை தொட்டிருக்கிறார்கள். அன்றுதான் உண்மையான நோயாளிகளோடு உரையாடப் போகின்ற அவர்களுடைய ஆஸ்பத்திரிப் பயிற்சிகள் ஆரம்பிக்கின்றன. தமக்கென ஒதுக்கீடு செய்யப்பட்ட நோயாளிகளோடு உரையாட ஆரம்பித்தார்கள் மருத்துவ மாணவர்கள்.
யுக்ஸியி நீலநிற டை அணிந்து கம்பீரமாக இருந்தார். அவருடைய சட்டைப்பையில் Pen torch, Measuring Tape, Knee Hammer என்பன துருத்திக் கொண்டிருந்தன. புன்னகையே இல்லாத கர்ணகடூர முகத்தோடு மருத்துவப் பேராசிரியர் வாட்டுக்குள் நுழைந்ததும் அத்தனை பேரும் முகங்கள் வாடிப்போய் அச்சத்தோடு அவரைப் பார்த்தார்கள். அவருடைய கண்களில் முதன்முதலில் பட்டது யுக்ஸியி தான். எல்லோரும் குட்மோனிங் சேர் என்று சொல்ல அவர் அதனைக் கவனியாதது போல் யுக்ஸியியை நோக்கி ‘எங்கே உன் நோயாளியின் திருஷ்டாந்தத்தை சொல்லு’ என்றதும் யுக்ஸியி கதிகலங்கிப் போனhன். அவனுக்கென்று ஒதுக்கப்பட்ட நோயாளிக்கு காய்ச்சல், தொடர்ச்சியான வாந்தியுடன் வயிற்று நோவும் இருந்தது. நெருப்புக் காய்ச்சலாக இருக்க கூடும் என்ற சந்தேகத்தில் அனுமதிக்கப்பட்டிருந்தார் நோயாளி.
யுக்ஸியி நாக்குழறியபடியே ஆரம்பித்தான்.
“வாந்தியும் காய்ச்சலும்”
“மேலே சொல்லு”
“வாந்தியும் காய்ச்சலும் மூன்று நாட்கள்”
“மேலே சொல்லு”
“வாந்தி மூன்று நாட்கள், காய்ச்சல் மூன்று நாட்கள்”
பேராசிரியர் முகம் ஜிவ்வென்று சிவந்தவராக “இவ்வளவு தானா நீயெடுத்த விவரங்களின் இலட்சணம்?” என்று கேட்டார்.
“ஆம் சேர்”
“வேறு ஒன்றும் எடுக்கவில்லை”
“ஆமாம், சேர்” கோபம் தலைக்கேறிய பேராசிரியர் அங்கே நின்ற ஏழு மாணவர்களையும் கொலை செய்யும் முனைப்போடு பார்க்க எல்லோரும் வெடவெடுத்துப் போய் அவரைப் பார்க்க “வெட்கங் கெட்ட கோவேறு கழுதைகளா, ஏன் முகத்தைப் பார்த்துக்கொண்டு நிற்கிறீர்கள்? இப்போதே வாட்டைவிட்டு வெளியேறி விடுங்கள்” என்று பொரிந்து தள்ளினார் பேராசிரியர். அடுத்தகணமே தலையைத் தொங்கப் போட்டுக் கொண்டு ஏழு மாணவர்களும் ஒருவர் பின் ஒருவராக வெளியேறினார்கள். வெளியே வந்த யுக்ஸியிக்கு நிறைய கசப்பு மருந்துகளும், ஊசிமருந்துகளும் காத்திருந்ததோடு அவனைப் பின்னி எடுத்த மற்றைய ஆறு மாணவர்களும் பிரபஞ்சத்திலுள்ள அத்தனை மிருகங்களினதும் பெயரைச் சொல்லி அவனைத் திட்டினார்கள்.
மருத்துவப் படிப்பை விட்டு விடுவோமா என்று யோசித்தான் யுக்ஸியி. யுக்ஸியி மேனியிலிருந்து சுரந்த வியர்வையெல்லாம் வடிந்தோடிய பின், உலர்ந்த நாவு ஈரலிப்பாகிய பின், படபடத்த இதயம் சாதாரண நிலைமைக்குத் திரும்பிய பின் இரக்கமுள்ள சக மாணவாகள் அவனருகிலே வந்து நோயாளியிடமிருந்து திருஷ்டாந்தம் எடுக்கும் பகுதியை வாசித்துக் காட்டினார்கள். நோயாளியின் பெயரிலிருந்து ஆரம்பித்து ஆணா பெண்ணா, வயது, தொழில் போன்ற விபரங்களோடு தொடர்ந்த அந்தப் பகுதி அதன் அடுத்த கட்டமாக நோயாளி சொல்லும் அறிகுறிகள், எப்போது அறிகுறி ஆரம்பித்தது, தொடர்ந்து இருக்கின்றதா? இடைக்கிடை வருகின்றதா? எந்தக் காரணத்தால் அறிகுறி உக்கிரமடைகின்றது? எக்காரணியால் இலேசாகின்றது என்று அழகாக கோர்வைப்படுத்தி புரிய வைத்தான் ஒரு மாணவன்.
அடுத்த நாள் மருத்துவப் பேராசிரியர் விடுதிக்குள் நுழைந்து எல்லா மாணவர்களும் “குட்மோனிங் சேர்” என்று காலை வந்தனம் சொல்லிய பின் முந்தைய நாள் நடந்த தவறுக்காக அத்தனை மாணவர்களும் அவரிடம் மன்னிப்புக் கேட்க பேராசிரியரும் ‘ம்……ம் சரி சரி’ என்று தலையசைத்து விட்டு யுக்ஸியிடம் புதியதொரு நோயாளியை சுட்டிக்காட்டி திருஷ்டாந்தம் எடுக்கும்படி உத்தரவிட்டார். யுக்ஸியி ஆரம்பித்தான். “உங்கள் பெயர் என்ன?” நோயாளி பெயரைச் சொன்னான். “வயது என்ன?” நோயாளி வயதைச் சொன்னான். “நீங்கள் ஆணா? பெண்ணா?” யுக்ஸியி இந்தக் கேள்வியை நோயாளியிடம் தொடுத்த அதே நிமிடம் விடுதி முழுவதும் வெடிச் சிரிப்பு பரவ என்றுமே சிரித்தறியாத மருத்துவப் பேராசிரியர் கூட சிரித்து விட்டார்.
அடுத்த ஒரு வாரத்திற்கு யுக்ஸியி விரிவுரைகளுக்குகோ, ஆஸ்பத்திரிக்கோ செல்லாமல் தன்னுடைய அறைக்குள்ளேயே முடங்கிக் கிடந்தான். எதுவுமே சாப்பிடவில்லை; தண்ணீர்கூட இல்லை. தொண்டைக் குழியில் எதுவும் இறங்க மறுத்தது. ஏழாவது நாள் காலையிலே அழைப்புமணிச் சத்தம் கேட்டு கதவைத் திறந்தவன் அப்படியே திகைத்து விட்டான். அங்கே பேராசிரியர் கையிலே பார்சலோடு நின்று கொண்டிருந்தார். அந்தப் பார்சலை அவர் யுக்ஸியிடம் நீட்ட அவன் தயக்கத்தோடு அதனை வாங்கிக் கொண்டான். இப்போது அவருடைய மேசையிலே அழகிய பேழைக்குள் வீற்றிருப்பது இருபது வருடங்களுக்கு முன் அவர் தங்க பைண்டு செய்து கொடுத்த அந்தப் புத்தகம் தான்.
“இலக்கம் இருபது” என்று தாதி கூப்பிட்;டதும் ஜெல் தேய்த்து, நடுவில் வகிடு எடுக்கப்பட்டு, கேசம் பின்னால் வாரப்பட்டு கம்பீரமாகக் காட்சியளித்த அழகான வாலிபன் உள்ளே நுழைந்தான். அவனின் முகத்திலும், கைக்கடிகாரத்திலும், ஆடையிலும், சப்பாத்துக்களிலும் செல்வச் செழிப்பின் சாயல் டாண்டாண் என்று ஜொலித்தது.
“குட்ஆப்டநூன் டாக்டர் யுக்ஸியி”
“குட்ஆப்டநூன்”
“உங்களைப் பற்றி நிறையக் கேள்விப்பட்டிருக்கிறேன். எல்லோரும் உங்களைப் புகழ்ந்து பேசுகிறார்கள். என்னுடைய நண்பன் உங்களைச் சிபார்சு செய்ததால் வந்தேன்”
“உங்கள் பாராட்டுரைக்கு நன்றி. வந்த விஷயத்தைச் செல்லுங்கள்”
“நான் ஜூவன் வயது 25”
“மேலே சொல்லுங்கள்”
சிறிது நேரம் தயங்கிய ஜூவன் பேச ஆரம்பித்தான். “டாக்டர் என் விரல் நகக்கண்களில் யாரோ ஊசியை ஏற்றுவது போல் ஒருவலி. என்னால் தாங்க முடியவில்லை. சிலவேளை விரல்கள் எல்லாம் மரத்துப் போவது போலவும் ஓருணர்வு” என்றான் நோயாளி.
“எத்தனை நாட்களாக உங்களுக்கு இந்தப் பிரச்சினை இருக்கிறது?”
“இரண்டு வாரங்கள் இருககும்;”
“வலி விட்டு விட்டு வருகிறதா, தொடர்ச்சியாக வருகிறதா?”
“இடைக்கிடை வந்து போய்கொண்டிருக்கிறது, டாக்டர்”
“காய்ச்சல், தலையிடி ஒன்றுமில்லை?”
“இல்லை”
“நீரிழிவு பிரஷர் என்று எதுவுமில்லை?”
“இல்லை”
ஜூவனின் இதயம், நுரையிரல், நாடித்துடிப்பு, நரம்புகள், கண்கள், காது, வயிறு, ஈரல் என்று முழுப் பரிசோதனையை செய்து முடித்த டாக்டர் யுக்ஸியி பிறகு நோயாளியைப் பார்த்து “ஜூவன் நீங்கள் பயப்படக்கூடிய நோய் எதுவுமில்லை. இது சாதாரண விற்றமின் குறைபாடுதான். நல்ல விற்றமின் ஒன்று எழுதித் தருகிறேன். தொடர்ந்து இரண்டு வாரங்கள் சாப்பிட்டு வந்தால் எல்லாம் சரியாகி விடும்” என்றார்.
“டாக்டர், நான் நன்றாகத் தான் சாப்பிடுகிறேன். எனக்கெப்படி விற்றமின் குறைபாடு ஏற்பட்டது, நம்ப முடியவில்லையே” என்று ஆச்சரியப்பட்டான் ஜூவன்.
“திரு ஜூவன் புரிந்து கொள்ளுங்கள், எவ்வளவு சாப்பிடுகிறோம் என்பதல்ல முக்கியம். எதனைச் சாப்பிடுகிறோம் என்பதில்தான் சிக்கல் இருக்கின்றது. உடம்புக்கு அத்தியாவசியமான விற்றமின் ஓன்றை நீங்கள் தவிர்ந்து வந்திருக்கிறீர்கள். அதுதான் உங்களுக்கு ஏற்பட்ட விற்றமின் குறைபாடு” என்று விளக்கமளித்தார் யுக்ஸியி.
இரண்டு வாரங்கள் கழிந்த பின் ஜூவன் மீண்டும் வந்தான். இப்போது நோயாளியின் முகத்திலிருந்த ஜொலிப்பும் குறைந்து போய் கம்பீரமான நடையில் தளர்வையும் அவதானித்தார் யுக்ஸியி.
“டாக்டர் நீங்கள் எழுதித்தந்த மாத்திரைகள் முடிந்து விட்டன. என்னுடைய நோய் குறைந்தபாடில்லை” என்றான் நோயாளி.
யுக்ஸியி மற்ற டாக்டர்களைப் போல் ஒருவர் அல்லர். எந்த நோயாளிக்கும் ஒருமுறை தான் மாத்திரை எழுதிக் கொடுப்பார். அதற்குப் குணமடையவில்லையென்றால் விஷேட வைத்திய நிபுணரிடம் அனுப்பி விடுவார். அதற்கென்று அவரிடம் பதிவுப் புத்தகம் இருந்தது. அந்த பதிவுப் புத்தகத்தை எடுத்து மூக்குக் கண்ணாடியூடாக நோட்டமிட்ட டாக்டர் யுக்ஸியி “திரு ஜூவன் கவலைப்பட வேண்டாம். எனக்குத் தெரிந்த Neurologist இருக்கிறார். கடிதம் ஒன்று எழுதித் தருகிறேன். அவரிடம் கொண்டுபோய் காட்டினீர்கள் என்றால் எல்லாம் சரியாகி விடும்” என்றார் யுக்ஸியி.
“Neurologist என்றால் என்ன அர்த்தம் டாக்டர்?”
“நரம்பு சம்பந்தமான விஷேட நிபுணர்”
“எனக்கு நரம்பு வியாதியா உண்டாயிருக்கிறது டாக்டர்?”
“நான் அப்படிச் சொல்ல வரவில்லை. அதுவா இல்லையா என்பதை முடிவு செய்வதற்கத்;தான் நான் உங்களை அனுப்புகிறேன்” என்றார் யுக்ஸியி.
சரியென்ற ஜூவன் ஒரு மாதம் கழித்து திரும்பி வந்தான்.
“நரம்பியல் நிபுணரைச் சந்தித்தீர்களா?” என்று கேட்டார் யுக்ஸியி.
ஆமென்று தலையாட்டிய நோயாளி பைல்கட்டைத் தூக்கி டாக்டரின் மேசையிலே போட்டான். EEG, EMG, MRI, CATS SCAN என்று நிறைய பரிசோதனை அறிக்கைகள்.
“உங்கள் நோய் இப்போது குணமாகி விட்டதா?”
“எனக்கு எந்த விதமான நரம்பு வியாதியுமில்லை என்று டாக்டர் சொல்லி விட்டார்”
“நல்லது இப்போது எதற்காக வந்திருக்கிறீர்கள்?”
“புதுப் பிரச்சினை டாக்டர். அடிவயிற்றிலிருந்து மேல் நெஞ்சை நோக்கி ஏதோ உருண்டு திரண்டு வருவது போல் உணர்வு. இரண்டு நாட்களாக மிகவும் அவதிப்படுகிறேன் டாக்டர்”
“மேல் வயிற்றினுள் நெருப்புச் சுடுவது போல் ஓர் எரிவுக் குணம் உண்டாகிறதா?”
“ஆம்”
“இரவு நடுநிசியிலும் நெஞ்சுக்குள் எரிவு ஏற்படுகின்றதா?”
“ஆம்”
“பசியிருக்கின்ற வேளைகளில் எரிவுக்குணம் கூடுவது போல் உணர்கின்றீர்களா?”
“ஆமாம் டாக்டர்”
“பயப்பட வேண்டாம், இது சின்ன விடயம். உங்களுக்கு கொஞ்சம் அல்சர் குணம் இருக்கிறது. ஆரம்பக் கட்டம் தான், சுகப்படுத்திவிடலாம். நான் மாத்திரைகள் எழுதித் தருகிறேன். உறைப்புச் சேர்ந்த எண்ணெய்ப் பட்சணங்கiளை தவிர்த்து கொள்வது நல்லது. இரண்டு வாரங்களில் என்னை வந்து பாருங்கள்” என்றார் டாக்டர்.
“டாக்டர் கொஞ்சம் கூடக் குறையவில்லையே” என்று சொல்லிக்கொண்டே இரண்டு வாரங்கள் கழித்து மீண்டும் நோயாளி வந்ததும் நிபுணர்களின் பதிவுப் புத்தகத்தை எடுத்து பெயர்களை வாசித்துக் கொண்டே வந்த யுக்ஸியி “கண்டுபிடித்து விட்டேன். எனக்கு தெரிந்த Gastroenterologist இருக்கிறார். அவரைப் போய்ச் சந்தியுங்கள். உங்கள் நோய் விரைவில் குணமடைந்து விடும்” என்றார்.
“Gastroenterologist என்றால் யார்?” என்று கேட்டான் ஜுவன்.
“இரப்பை குடல் சம்பந்தமான விஷேட நிபுணர்”
ஒருமாதம் கழித்து நோயாளி மீண்டும் வர “நான் சொன்ன டாக்டரைப் சந்தித்தீர்களா?” என்று கேட்டார் யுக்ஸியி.
ஜூவன் ஒன்றும் பேசாமல் ஒரு கற்றை தஸ்தாவேஜூகளை யுக்ஸியிடம் கையளித்தான். Enzyme Studies, Ba Meal, US Scan, Biopsy Report, Endoscopy Reports இத்தியாதி இத்தியாதி.
“உங்கள் வயிற்றிலுள்ள எரிவுக்குணம் குறைந்து விட்டதா, ஜுவன்?”
“ஓரளவு நன்றாகத்தான் இருக்கி;றேன். இப்போது வேறொரு பிரச்சினை முளைத்துள்ளது”
“சொல்லுங்கள்”
“அதிக நேரம் நின்றால் பாதத்திலிருந்து இடுப்புவரை ஏதோ ஊர்ந்து செய்வது போல் உணர்கிறேன். நடப்பதும் சிரமமாக இருக்கிறது”
“நிற்பதைக் குறைத்துக் கொள்ளுங்கள்”
“அப்படியும் செய்து பார்த்தேன் டாக்டர். குறைந்;தபாடாகத் தெரியவில்லை. அத்தோடு கால்வலி வேறு”
“திரு ஜூவன் நீங்கள் யோசிக்க வேண்டாம். இது சின்னப் பிரச்சினை தான். நல்ல வலி நிவாரணியொன்று எழுதித் தருகிறேன். வாங்கிப் பாவித்து விட்டு இரண்டு வாரத்தில் சொல்லுங்கள்” என்று மாத்திரைகளை எழுதிக் கொடுத்தார் டாக்டர் யுக்ஸியி.
இரண்டு வாரங்கள் கழித்து மீண்டும் திரும்பி வந்த நோயாளியின் முகம் கவலையில் ஆழ்ந்திருந்தது.
“டாக்டர் நீங்கள் தந்த மருந்துகளால் எந்தப் பிரயோசனமும் இல்லையே. திமிர்வும் வலியும் அப்படியேதான் இருக்கிறது”
“கவலைப்படாதீர்கள்” என்று சொன்ன யுக்ஸியி மீண்டும் நிபுணர்களின் பதிவுப் புத்தகத்தை புரட்டினார்.
“எனக்குத் தெரிந்த Vascular Surgeon இருக்கிறார். மிகவும் கெட்டிக்காரர். உங்கள் நோயை பூ என்று சொல்வதற்கிடையில் குணப்படுத்தி விடுவார்”
“Vascular Surgeon என்றால் யார்?”
“நாடி, நாளம், இரத்தவோட்டம் சம்பந்தமான விஷேட நிபுணர்”
ஒருமாதம் கழித்து மீண்டும் வந்த நோயாளியிடம் “ஜூவன், உங்கள் கால் நோய் சுகமடைந்து விட்டதா?” என்று யுக்ஸியி கேட்க பைல்கட்டை டாக்டரின்; மேசை மீது தூக்கிப் போட்ட நோயாளி
“Vascular Surgeon எனக்கு எந்தப் பிரச்சினையுமில்லை என்று கூறி விட்டார்” என்றான்.
“எல்லா பரிசோதனைகளும் செய்தாரா?”
“ம்……. நிறையச் செய்து என்னைத் திக்குமுக்காடச் செய்துவிட்டார்”
“இப்போது ஏன் வந்தீர்கள் திரு ஜூவன்?”
“இப்போது பெரிய நோயொன்றால் அவதிப்படுகிறேன் டாக்டர்”
“சொல்லுங்கள்”
”ஏதாவது வேலையைச் செய்ய ஆரம்பித்தால் இதயம் நின்றுவிட்டதோ என்று பயப்படுமளவுக்கு உடம்பு படபடக்கிறது. அதனால் எந்த வேலையையும் இஷ்டப்படி செய்ய முடியாமல் அவதிப்படுகிறேன் டாக்டர்”
“இந்தச் சின்ன பிரச்சினைக்காகவா இவ்வளவு கவலைப்படுகிறீர்கள்? கொஞ்சம் relax ஆக இருக்க வேண்டும். Tension ஆவதைக் குறைத்துக் கொள்ளாவிட்டல் அது மன அழுத்தத்தில் கொண்டு போய்விடும். நான் மாத்திரை எழுதித் தருகிறேன். இரவில் ஒவ்வொன்று விழுங்க வேண்டும். காலையில் உடற்பயிற்சி செய்யுங்கள். நிறையக் காய்கறிகள், பழங்கள் சாப்பிடுங்கள், எல்லாம் சரியாகி விடும்”
“இரண்டு வாரங்கள் கழித்து மீண்டும் வரவேண்டுமா டாக்டர்?”
“குறைந்தால் வரவேண்டிய தேவையில்லை”
இரண்டு வாரங்களில் மீண்டும் வந்த நோயாளி “வருத்தம் குறையவில்லை டாக்டர், உங்களுக்கு தெரிந்த நல்ல டாக்டர் இருந்தால் கடிதமொன்று எழுதித் தாருங்கள், போய்க் காட்டிவிட்டு வருகிறேன்” என்று கேட்க “கெட்டிக்கார endocrinologist ஒருவர் இருக்கிறார், இன்றோடு பிரச்சினை தீர்ந்துவிட்டதென்று நினைத்துக் கொள்ளுங்கள்” என்றார் யுக்ஸியி.
“endocrinologist என்றால் யார் டாக்டர்?”
“endocrinologist என்றால் ஹோர்மோன்கள், உடற்றோழிலியல் தொடர்பான விஷேட நிபுணர். உங்களுக்கு ஏற்பட்டிருக்கின்ற இந்த படபடப்பு, பதைபதைப்பு எல்லாவற்றிக்கும் காரணம் ஹோர்மோன்களில் ஏற்பட்டுள்ள சமச்சீரின்மை ஆகும்” என்றார் யுக்ஸியி. நோயாளியும் விளங்கியும் விளங்காததுமாக தலையை ஆட்டினான்.
நோயாளி ஜூவன் இப்படியே போவதும் வருவதுமாக இருக்க யுக்ஸியிக்கு ஜுவனைக்; கண்டாலே எரிச்சலாக வந்தது. மருத்துவ நிலைய தாதியருக்கும் அலுத்து விட்டது. ஏனைய ஊழியர்களும் அலுத்துப் போனார்கள். நோயாளி தங்களையெல்லாம் ஏமாற்றிப் போக்குக் காட்டுவது போல் அவர்களுக்குத் தோன்றிற்று. ஒவ்வொரு முறையும் ஒவ்வொரு குணங்குறிகளோடு போய் டாக்டர்களை ஏமாற்றும் Münchausen syndrome என்றொரு நோய் இருக்கிறது. யுக்ஸியி முடிவு செய்தார். இவனுக்கும் இந்தப் பொல்லாத நோய்தான் பீடித்திருக்கிறது. அடுத்த முறை நோயாளி வந்தால் நோயாளிக்கு நல்லதொரு பாடம் படிப்பிக்க வேண்டும் என்று ஆவலோடு காத்திருந்தார் டாக்டர் யுக்ஸியி.
எதிர்பார்த்த படியே நீண்ட நாட்களின் பின் ஜூவன் திரும்பி வந்தான். வாலிபனான அவன் இப்போது வயது முதிர்ந்த கிழவனைப்போல் தோற்றமளித்தான்; அழகான கன்னங்கள் சுருங்கிப் போய் கேசம் பரட்டையாகி அவலட்சணமாக இருந்தான்; அங்குமிங்கும் வியர்வை திட்டுகள் அப்பி காணப்பட்டான்; அவனுடைய கால்கள் தள்ளாடின; கைகள் சூம்பிப் போயிருந்தன. உண்மையில் அவனுக்கு ஏதாவது நோயிருக்கக் கூடுமோ என்று டாக்டருக்கே சந்தேகம் வந்தது.
“Good Afternoon டாக்டர்”
“Good Afternoon”
நோயாளி இந்த முறை பைல்கட்டு எதுவுமே கொண்டு வரவில்லை. அதற்குப் பதிலாக அவனுடைய கரங்களிலே அழகான டயறி இருந்தது. மூக்குக் கண்ணாடி அணிந்து நோயாளியைப் பரிசோதிக்கும் டாக்டர் ஒருவரின் படத்தைப் அதிலே போட்டிருந்தார்கள்.
“என்னப்பா புதுசா டயறி, என்ன விஷேசம்?”
அவன் டயறியை டாக்டரிடம் நீட்டினான்.
“டாக்டர் நான் கொஞ்சம் காலம் வராமல் இந்த டயறியைத் தான் படித்துக் கொண்டிருந்தேன். இந்த டயறியிலே எல்லா விஷேட நிபுணர்களின் பெயர் விபரங்களைப் போட்டிருக்கிறார்கள்”
“ஆமாம் அதற்கென்ன இப்போது?”
“ஒருவிடயம் எனக்குப் புரியாமல் இருக்கிறது டாக்டர்”
“தாராளமாகக் கேளுங்கள்”
“நீங்கள் இந்த டயறியில் இருக்கக் கூடிய எல்லா வைத்திய நிபுணர்களிடமும் என்னை அனுப்பியிருக்கிறீர்கள். ஆனால் ஒருவருமே எனக்கு இன்ன வியாதிதான் என்று இதுவரை கண்டு பிடிக்கவில்லை. ஆனால் நீங்கள் ஒருவரைத் தவறவிட்டு விட்டீர்கள் டாக்டர். அவரிடம் என்னை அனுப்பினால் என்ன?” என்று பேசிவிட்டு நிறுத்தினான் நோயாளி.
“தவறவிட்டு விட்டேனா யார் அது?” என்று யுக்ஸியி கண்களை அகல விரித்தபடி கேட்க “Gynaecologist” என்று பதிலளித்தான் நோயாளி.
அதைக் கேட்டதும் மருத்துவ நிலையத்தில் பணியாற்றும் ஊழியர்கள் மட்டுமல்ல வந்திருந்த நோயாளிகள் அனைவருமே சிரிக்க வெட்கித்த நோயாளி “ஏன் டாக்டர் எல்லோரும் சிரிக்கிறார்கள்?” என்று கேட்டான்.
“Gynaecologist” பெண் நோயியல் சம்பந்தப்பட்ட நிபுணர். உன்னை எப்படி அவரிடம் அனுப்புவது?” என்று கேட்டார் யுக்ஸியி.
நோயாளி சற்று யோசித்தவாறு “அதற்கேன் சிரிக்க வேண்டும் டாக்டர்? நீங்கள் என் மனைவியை அவரிடம் அனுப்பி நோயைக் கண்டுபிடிக்கலாம் தானே” என்றான்.
யுக்ஸியி கடுஞ்சினத்துடன் “என்னுடன் என்ன விளையாடுகிறாயா?” என்று கேட்டார்.
“டாக்டர் நான் சொல்வதைக் கொஞ்சம் கேளுங்கள்”
“நீ எதுவும் சொல்ல வேண்டியதில்லை. நான் உன்னை விட மெத்தப் படித்தவன், அதைத் தெரிந்து கொள்”
“டாக்டர் தயவுசெய்து நான் சொல்வதைக் கேளுங்கள்”
“என் கண்முன்னே நிற்காதே, இங்கிருந்து ஓடிப் போய்விடும்” என்று யுக்ஸியி பொரிய காலில் பிடறி அடிபட அடிபட நோயாளியும் அங்கிருந்து ஓடிப்போனான்.
இத்துடன் நோயாளி தொலைந்து போனான் என்று மருத்துவ நிலையத்தில் இருந்த அத்தனை பேரும் நிம்மதிப் பெருமூச்சு விட்டு கொண்டிருந்த வேளையில் கொஞ்ச நாள் கழித்து நோயாளி மீண்டும் திரும்பி வந்தான்.
“போன தடவை நடந்;த சம்பவத்திற்காக என்னை மன்னித்துக் கொள்ளுங்கள் டாக்டர். என் மனைவியோடு கதைத்துச் சிலவேளை நோயைக் கண்டுபிடித்து விடலாமென்று நான் முட்டாள்தனமாக நினைத்து விட்டேன்”
“பரவாயில்லை, மனிதன் தவறுவிடுவது இயல்பு. நீ உன் தவறை ஓப்புக் கொண்டாயே, அதுவே பெரிய விஷயம்” என்றார் யுக்ஸியி.
“கேட்கிறேனென்று கோபிக்க வேண்டாம் டாக்டர், எனக்கிருக்கின்ற உண்மையான வியாதியைச் சொல்லி விட்டீர்களென்றால் நிம்மதியாக வீட்டுக்குப் போய் விடுவேன்”
வெடிக்கப் புறப்பட்ட கோபத்தைச் சிரமத்துடன் அடக்கிய யுக்ஸியி “ஜூவன் அவர்களே, உங்களுக்கு ஏற்பட்டுள்ள நோயை நான் சொன்னால் பயந்துவிடுவீர்கள் என்று நினைத்துத் தான் நான் இவ்வளவு நாளும் உங்களிடம் சொல்லவில்லை” என்றார்.
“நீங்கள் பயப்படாமல் சொல்லுங்கள் டாக்டர். நோயைக் கண்டுபிடித்து விட்டீர்களே அந்தச் சந்தோஷத்திலேயே போய்விடுகிறேன்” என்றான் நோயாளி.
“அந்த நோயின் பெயர் அதிதுடிஇமை குணாம்சம்” என்றார் யுக்ஸியி.
அவன் குழப்பத்துடன் டாக்டரைப் பார்த்து “டாக்டர் இப்படி ஒரு நோயை நான் கேள்விப்பட்டதில்லையே” என்றான்.
“நீ நிச்சயமாக கேள்விப்பட்டிருக்க மாட்டாய். ஏனென்றால் காய்ச்சல் போல், வயிற்று வலியைப் போல் எல்லோரையும் பீடிக்காத இது அபூர்வமான ஓர் நோய்” என்று சொன்ன யுக்ஸியி நோயாளியை அழைத்துப் போய் அங்கிருந்த நிலைக்கண்ணாடி முன்னால் நிறுத்தினார்.
“ஜூவன் கண்ணாடியில் உங்கள் முகத்தைப் பாருங்கள்”
“என் முகம் தெரிகிறது. வேறொன்றும் காணவில்லையே”
“நன்றாகப் பாருங்கள்”
“தெரியவில்லையே”
“உங்கள் கண்களை நன்றாகப் உற்றுப் பாருங்கள்”
“கண்கள் நன்றாகத்தானே இருக்கிறது”
“கண் இமைகள் மின்னிமின்னி மூடுவதும் திறப்பதும் தெரியவில்லையா?”
“தெரிகிறது. ஆனால் அது நோயில்லையே டாக்டர்”
“அது நோயில்லை என்றாலும் உங்கள் இமைகள் அளவுக்கு மீறி மூடுகின்றனஇ திறக்கின்றன”
“ஆ..ஆமாம்…”
‘இந்த நோயின் பெயர் தான் அதிதுடிஇமை குணாம்சம்”
“சந்தேகமில்லாமல் இது நோய்தானே”
“நான் டாக்டர் சொல்லுகிறேன். சந்தேகம் வேண்டாம், இது நோய்தான்”
“டாக்டர் கடைசியில் என்னுடைய நோயைக் கண்டுபிடித்து விட்டீர்கள். உங்களுக்கு எப்படி நன்றி சொல்வதென்றே தெரியவில்லை. இந்த நோயை குணப்படுத்த முடியுமா டாக்டர்?”
“நிச்சயமாக அதற்கென்று நிறைய நல்ல மாத்திரைகள் இருக்கின்றன”
“நீங்கள் எத்தனையோ வைத்திய நிபுணர்களிடம் அனுப்பினீர்கள் அல்லவா, அவர்களால் ஏன் என்னுடைய நோயைக் கண்டுபிடிக்க முடியாமல் போயிற்று?”
“ஜூவன்இ நீங்கள் சரியான மையத்திற்கு வந்துவிட்டீர்கள். இரத்தப் பரிசோதனையை செய்தோ ஸ்கேன் பண்ணியோ இதனைக் கண்டுபிடிக்க முடியாது. டாக்டர் என்றால் மிகத் துல்லியமான முறையில் நோய் நிர்ணயம் செய்யும் ஆற்றல் இருக்க வேண்டும். மருத்துவ மொழியில் clinical acumen என்று சொல்லுவார்கள்” என்று மிக நீளமாகப் பேசிய யுக்ஸியி மிக நீளமான மருத்துவ சிட்டை ஒன்றையும் நோயாளியிடம் கையளித்தார்.
“இத்தனை மாத்திரைகளும் விழுங்க வேண்டுமா டாக்டர்?”
“விழுங்காவிட்டால் நோய் எப்படிக் குணமடையும்? நீங்கள் இந்த மாத்திரைகளை; மூன்று மாதங்கள் ஒழுங்காக எடுத்து வந்தால் வியாதியென்ற பேச்சுக்கே இடமிருக்காது” என்றார் யுக்ஸியி உறுதியான குரலில்.
நோயாளி மருத்துவ நிலையத்தை விட்டு வெளியேறியபின் “டாக்டர் அது என்ன புது வியாதி, இத்தனை வருடங்களாக நான் உங்களுடன் வேலை செய்து கொண்டிருக்கிறேன். இப்படியொரு நோயைக் கேள்விப்பட்டது இல்லையே” என்று கேட்டாள் தாதி.
“சில நோயாளிகள் இருக்கிறார்கள், அவர்கள் எப்படிப்பட்டவர்களென்றால் தங்களுக்கு நோயிருப்பதாக எண்ணிக் கொண்டு மருந்து தேடி அலைவார்கள். ஆங்கிலத்தில் அதனை hypochondriasis என்று அழைக்கிறோம். இவனும் அப்படிப்பட்ட நோயாளி தான். அவனுக்காகத்தான் இந்நோயை நான் கண்டுபிடித்தேன்”
“நீங்கள் சொல்வது புரியவில்லையே, டாக்டர்”
“அதி என்றால் விரைவான, இமை என்றால் கண் இமைகள், துடி என்றால் துடித்தல், குணாம்சம் என்றால் நோய்க்குறிகளின் தொகுப்பு. எல்லாம் சேரும்போது அதிதுடிஇமைகுணாம்சம்” என்று சிரித்தார் புக்ஸியி.
“ஆகவே இந்தநோயாளி இனிமேல் டhக்டர் நோயைக் கண்டுபிடித்து விட்டார் என்ற சந்தோஷத்திலேயே வாழ்ந்து கொண்டிருப்பான்” என்றார் யுக்ஸியி.
ஒரு விடியற்காலை யாருமே எதிர்பாராத சம்பவம் நடந்தது. ஓடிவந்து மருத்துவ நிலையத்திற்குள் பிரவேசித்த ஓர் அழகான இளம்பெண் “டாக்டர், என் கணவரை காப்பாற்றுங்கள்” என்று கதறியவளாக யுக்ஸியியின் அறைக்குள்ளே அடாத்தாக நுழைந்தாள்.
“யார் நீ, இங்கே வந்து ஏன் காட்டுக்கூச்சல் போடுகிறாய்? நோயாளிகள் வரக்கூடிய இந்த இடத்தில் நீ அமைதியாகப் பேச வேண்டும்” என்று அதட்டும் தொனியில் கூறினார் யுக்ஸியி.
“என்னை மன்னித்து விடுங்கள், டாக்டர். விஷயம் மிகமிக அவசரம் என்பதால் அப்படிப் புலம்பினேன். தயவுசெய்து என்னோடு கொஞ்சம் வாருங்கள். தூக்குக் கயிற்றை கூரையிலே மாட்டிக் கொண்டு என் கணவர் தற்கொலை செய்துகொள்ளப் போவதாக மிரட்டுகிறார்” என்றாள் இளம் பெண்.
“அதற்கு டாக்டராகிய நான் என்ன செய்வது? பொலிஸுக்கல்லவா நீங்கள் போகவேண்டும். அவர்களால் தான் உன் கணவரைக் காப்பாற்ற முடியும்” என்றார் யுக்ஸியி.
“டாக்டர் என்னோடு வாருங்கள் பிளீஸ். இது சிக்கலான பிரச்சினை. அங்கே வந்தால் எல்லாம் விளங்கிவிடும்” என்று சொன்ன இளம்பெண் பதிலை எதிர்பார்க்காமல் டாக்டரின் கையைப் பிடித்து தரதரவென்று இழுத்துக் கொண்டு ஓடினாள்.
அங்கு போனபோது எல்லாம் முடிந்திருந்தது. தூக்குக் கயிற்றில் கழுத்தை மாட்டி சாகப்போன அவனை அயலவர்கள் வந்து காப்பாற்றி ஆஸ்பத்திரியில் அனுமதித்திருந்தார்கள். அதிதீவிரசிகிச்சைப் பிரிவில் படுத்திருந்த அவனின் முகத்தைப் பார்த்தும் டாக்டருக்கு தூக்கிவாரியது, அவன் ஜூவன்.
“இவன் உன் கணவனா? ”
“ஆம் டாக்டர், கொஞ்சக்காலம் இவர் பாலியல் பலவீனத்தால் பாதிக்கப்பட்டிருந்தார். எங்கள் விவாகம் கிட்டத்தட்ட முறியும் நிலைக்கு வந்துவிட்டது. விவாகரத்தை எதிர்கொள்ள முடியாமல் அவர் மனமொடிந்து போயிருந்தார். இன்று நீதிமன்றம் இறுதித்தீர்ப்பு அளிக்க இருந்தது” என்று தேம்பினாள் இளம்பெண்.
“இது நிறையப்பேருக்கு ஏற்படக்கூடிய சின்னப் பிரச்சினைதானே. டாக்டர் ஒருவரிடம் கலந்தாலோசித்து நல்லதொரு சிகிச்சை முறையைப் பின்பற்றியிருந்தால் எல்லாம் சரியாகி இருக்கும்” என்றார் டாக்டர் யுக்ஸியி.
‘இவருக்கு கொஞ்சம் கூச்சசுபாவம் உண்டு. உங்களிடம் பத்துத் தடவைகளுக்கு மேல் வந்திருக்கிறார். நீங்களும் நிறைய வைத்திய நிபுணர்களிடம் அனுப்பி வைத்திருக்கிறீர்கள். ஆனால் யாருமே அவருடைய விவாக வாழ்க்கையைப் பற்றியும் மனைவியைப் பற்றியும் எந்தக் கேள்வியுமே கேட்கவில்லை” என்று இளம்பெண் சொல்லிக் கொண்டு போக யுக்ஸியியிக்கு வியர்த்தது. எத்தனை பெரிய தப்பைச் செய்துவிட்டோம். அவள் சொல்வதெல்லாம் உண்மை தானே. அவனுடைய விவாக வாழ்க்கையைப் பற்றி நாம் இதுவரை ஒரு வார்த்தை கேட்டது கிடையாதே.
மருத்துவப் பேராசிரியர் தள்ளாடித் தள்ளாடி யுக்ஸியின் அருகில் வந்தார்.
“டியர் student, என்னை இங்கே எதிர்பார்க்கவில்லை தானே?”
“இல்லை சேர்”
“எங்கே நான் தந்த தங்கப்பேழை, அதைக் கொஞ்சம் போய்ப் பார்க்கலாமா?”
யுக்ஸியி ஓன்றும் புரியாதவராக “தாராளமாகப் பார்க்கலாம் சேர்” என்றார்.
“நீ அந்த நோயாளியிடம் இருந்து நோய் திருஷ்டாந்தம் எடுத்தாய், ஆனால் விவாக திருஷ்டாந்தம் எடுக்கவில்லை”
“ஆமாம்”
“அந்த நோயாளி இப்போது உயிருக்குப் போராடிக் கொண்டிருக்கிறான்”
“ஆம்”
“இந்தப் புத்தகத்தை இருபது வருடங்களாக நீ திறந்து பார்க்கவேயில்லை” யுக்ஸியி திடுக்குற்றுப் போனார்;.
“எப்படி சேர், இப்படி அச்சொட்டாகக் கண்டுபிடித்தீர்கள்?”
“விவாக திருஷ்டாந்த பக்கங்களை நான் பிரித்தெடுத்து என்னுடன் வைத்திருந்தேன். நீ இதுவரை என்னைத் தேடிவரவே இல்லையே” என்று சொன்ன பேராசிரியர் தன்னுடைய சட்டைப் பையிலிருந்த அந்தப் பிரித்தெடுத்த பக்கங்களை மேசையிலே போட்டார்.
“ஒன்று சொல்கிறேன், நீ சரியான டாக்டர் கிடையாது. நோயாளி மரணித்து விட்டால் நீயும் தற்கொலை செய்துகொள்வது தான் நல்லது”
*நூல்; சொர்க்கபுரிச் சங்கதி
•This e-mail address is being protected from spambots. You need JavaScript enabled to view it•
•<• •Prev• | •Next• •>• |
---|