நான் -வ.ந.கிரிதரன் - எழுதிய சிறுகதைகளில், புகலிட அனுபங்களை மையமாக வைத்து எழுதப்பட்ட 23 சிறுகதைகளை இங்கு தொகுத்துத்தந்துள்ளேன். இச்சிறுகதைகள் குடிவரவாளர்களின் பல்வகை புகலிட அனுபவங்களை விபரிக்கின்றன. இவற்றில் பெரும்பாலானவை பதிவுகள், திண்ணை ஆகிய இணைய இதழ்களில் வெளியானவை. 'சொந்தக்காரன்' கணையாழி சஞ்சிகையின் கனடாச்சிறப்பிதழில் (2000) வெளியானது. 'வீட்டைக் கட்டிப்பார்' ஜீவநதி (இலங்கை) சஞ்சிகையின் கனடாச்சிறப்பிதழில் வெளியானது. ஏனையவை இசங்கமம், மானசரோவர், தாயகம் (கனடா) மற்றும் தேடல் (கனடா) ஆகியவற்றில் வெளியாகியுள்ளன. 'யன்னல்' உயிர்நிழல் (பாரிஸ்) சஞ்சிகையில் வெளியானது. மேலும் சில சிறுகதைகள் மான்ஹோல் (தேடல் - கனடா), , பொந்துப்பறவைகள் (சுவடுகள் - நோர்வே), 'பூர்வீக இந்தியன்' (தாயகம்) ஆகிய சிறுகதைகளும் புகலிட அனுபவங்களைப் பேசுபவை. அவை கை வசம் தட்டச்சுச் செய்யப்பட்ட நிலையில் இல்லாததால் இங்கு சேர்க்கப்படவில்லை. 'சாவித்திரி ஒரு ஸ்ரீலங்கன் அகதியின் குழந்தை' ஞானம் (இலங்கை) சஞ்சிகையின் புலம்பெயர்தமிழர் சிறப்பிதழ் மற்றும் திண்ணை, பதிவுகள் ஆகிய இணைய இதழ்களில் வெளியாகியுள்ளது. இவற்றில் பல சிறுகதைகள் ஈழநாடு (கனடா), சுதந்திரன் (கனடா) மற்றும் வைகறை (கனடா) ஆகியவற்றில் மீள்பிரசுரமாகியுமுள்ளன. மணிவாணன் என்னும் புனைபெயரிலும் புகலிட அனுபவங்களை மையமாக வைத்துச் சிறுகதைகள் சில எழுதியிருக்கின்றேன். அவையும் கைவசம் தட்டச்சு செய்த நிலையில் இல்லாத காரணத்தால் இங்கு சேர்க்கப்படவில்லை. புகலிட அனுபவங்களை மையமாக வைத்து இரு நாவல்களும் எழுதியுள்ளேன். 'அமெரிக்கா' ஸ்நேகா/ மங்கை பதிப்பக வெளியீடாகவும், 'குடிவரவாளன் ' ஓவியா பதிப்பக வெளியீடாகவும் வெளியாகியுள்ளன. இவற்றைப்பற்றித் தமிழகப்பல்கலைக்கழகங்களில் ஆய்வுகள் செய்யபட்டுள்ளன. ஆய்வுக்கட்டுரைகளும் சமர்ப்பிக்கப்பட்டுள்ளன. தொகுக்கப்பட்ட சிறுகதைகள் விபரங்கள் வருமாறு:
1. சீதாக்கா!
2. ஒரு மா(நா)ட்டுப் பிரச்சினை.
3. நீ எங்கிருந்து வருகிறாய்?'
4. நடுவழியில் ஒரு பயணம்!
5. மனோரஞ்சிதம்!
6. யமேய்க்கனுடன் சில கணங்கள்!
7. கலாநிதியும் வீதி மனிதனும்!
8. சாவித்திரி ஒரு ஸ்ரீலங்கன் அகதியின் குழந்தை!
9. புலம் பெயர்தல்.
10. 'காங்ரீட்' வனத்துக் குருவிகள்!
11. Where are you from?
12. சொந்தக்காரன்!
13. தப்பிப் பிழைத்தல்!
14. வீடற்றவன்...
15. 'ஆபிரிக்க அமெரிக்கக் கனேடியக் குடிவரவாளன்'
16. மனைவி!
17. யன்னல்!
18. சுண்டெலிகள்!
19. கட்டடக் கா(கூ)ட்டு முயல்கள்
20. ஆசிரியரும் மாணவனும்!
21. உடைந்த மனிதனும் 'உடைந்த காலும்'
22. வீட்டைக் கட்டிப்பார்!
23. பிள்ளைக் காதல்
11. சிறுகதை: Where are you from? - - வ.ந.கிரிதரன் -
"டாக்ஸி கிடைக்குமா?"
வார்டன் பாதாள ரயிலிலிருந்து வந்திருந்த அந்தக் கனடிய வெள்ளையினப் பெண்மணி கேட்டபோதுதான் அமைப்பியல் பற்றிய தமிழ் நூலொன்றினை வாசித்துக் கொண்டிருந்த நான் இவ்வுலகிற்கு வந்தேன். "தாராளமாகக் கிடைக்கும். எங்கு போக வேண்டும்?" என்றேன். " பேர்ச்மவுண்ட்/ லாரண்ஸ்" என்று அதற்குப் பதிலிறுத்தபடியே கதவைத் திறந்து டாக்ஸியினுள் ஏறி அமர்ந்தாள் அந்தப் பெண்மணி. வயது முதிர்ந்த, நன்கு பருத்த உடல் வாகுடன் கூடிய தோற்றத்திலிருந்தாள் அவள். முகத்தில் ஒருவித கடுமையுடன் கூடிய பாவம் விரவிக் கிடந்தது. பாதாளரயில் வாகனத் தரிப்பிடத்திலிருந்து வார்டன் வீதிக்கு வந்து கிழக்காக சென்ற்கிளயர் அவென்யுவில் பேர்ச்மவுண்ட் நோக்கித் திரும்பினேன்.
"Where are you from?"
நான் கனடா வந்து பத்து வருடங்களைத் தாண்டி விட்டன. நானொரு பூரண உரிமையுள்ள கனடிய குடிமகன். என்னைப் பார்த்துக் கேட்கின்றாள் இந்த வயோதிப வெள்ளையின மாது எங்கேயிருந்து வந்திருக்கின்றேனென்று. நாளைக்கு இங்கு பிறந்து,வளரும் என் குழந்தைகளைப் பார்த்தும் இது போலொரு வயோதிப வெள்ளையின மாது இதே மாதிரியானதொரு கேள்வியினைக் கேட்கக் கூடும். இவளைச் சீண்டிப் பார்க்க வேண்டுமென்றொரு எண்ணத்தில் " என்னைப் பார்த்தால் நானொரு கனேடியன் மாதிரித் தெரியவில்லையா?" என்றேன். அதற்கு அந்த முதிய வெள்ளையின மாதும் சளைக்காமல் பதிலிறுத்தாள் " அது எனக்குத் தெரிகின்றது. ஆனால் இதற்கு முன் எங்கு வாழ்ந்து வந்தாய்?" என்றாள்.
"அவற்றைச் சொல்ல ஆரம்பித்தால் நேரம் போதாது. வரிசைப் படுத்துக் கூறுகின்றேன். கேட்க உனக்குப் பொறுமை இருக்கிறதா?" என்றேன். "தாராளமாக" என்று காதுகளை நீட்டிக் காத்திருந்தாள் அவள். "இங்கு வருவதற்கு முன் நான் அமெரிக்காவில் சிறிது காலம் வசித்திருக்கின்றேன். அதற்கு முன்னர் பாரிஸில் சிலகாலம், ஜேர்மனியில் சில காலம், சுவிஸில் சில காலம்..." நான் வார்த்தைகளை முடிக்கவில்லை அவள் குறுக்கிட்டாள். " நீ கொடுத்து வைத்த பிறவி. உலகம் முழுவதையும் சுற்றிப் பார்த்திருப்பாய் போலும். உன்னைப் பார்த்தால் எனக்குப் பொறாமையாக இருக்கிறது." என்றவாறே தொடர்ந்தாள் " நான் கேட்டது நீ பிறந்த இடத்தை".
"இந்தியாவை உனக்குத் தெரியுமல்லவா?"
"ஆம்"
"இந்தியாவின் தெற்கு மூலைக்கு அப்பால் விரிந்திருக்கும் இந்து சமுத்திரத்தில் உள்ளதொரு அழகான தீவு என் தாய் வீடு" என்றேன்.
சிறிது நேரம் சிந்தித்தவள் "தெரியவில்லையே" என்றாள்.
" இங்கு பார். நான் சிறுவனாகப் பாடசாலையில் இருந்த பொழுதே புவியலில் உலகின் நீண்ட சாலை யங் வீதி என்று படித்திருக்கின்றேன். உனக்கோ என் பிறந்த மண் பற்றித் தெரியவில்லையே" என்றேன். தொடர்ந்து " சிறிலங்கா பற்றிக் கேள்விப் பட்டிருக்கின்றாயா? அது தான் என் தாய் நாடு" என்றேன். அதற்கு அவள் "ஓ சிறிலங்காவா. நீ சிறி லங்கனா?" என்று வியந்தவள் போல் கேட்டாள். அத்துடன் தொடர்ந்து "ஓ சிலோன். சிலோன் தேநீர் என்றால் எனக்கு நல்ல விருப்பம். அது சரி எப்பொழுது சிலோனை சிறிலங்காவாக மாற்றினார்கள். " என்றாள். "ஸ்ரீலங்காவும் கனடாவைப் போல் தான் முன்பிருந்தது. பொது நலவாய நாடுகளிலொன்றாக. இன்றைய ஜனாதிபதி சந்திரிகாவின் தாய் ஸ்ரீமா பண்டாரநாயக்க காலத்தில் தான் , 1972 இல் குடியரசாக மாற்றினார்கள். அன்றிலிருந்து தான் சிலோன் ஸ்ரீலங்காவாக மாற்றம் அடைந்தது"
பேச்சு வேறு திசைக்கு மாறியது. "இங்கு பார். இன்று நீ எனது பதினைந்தாவது பிரயாணி. இந்தப் பதினைந்தில் 'நீ எங்கிருந்து வந்தாய்?' என்று கேட்ட பத்தாவது ஆள் நீ. நீ தவறாக நினைக்க மாட்டாயென்றால் நான் ஒன்று தாராளமாகக் கேட்கலாமா?"
"கேள். நான் ஒன்றும் தவறாக எடுக்க மாட்டேன். தாராளமாகக் கேள்"
"எதற்காகச் சொல்லி வைத்தது மாதிரி நீங்கள் எல்லோருமே இந்தக் கேள்வியைக் கேட்கின்றீர்கள்? ஒவ்வொருவரின் தோற்றத்தையும் பார்த்ததுமே உங்களுக்குப் புரிந்திருக்குமே. பின்னேன் கேட்கின்றீர்கள்?"
"ஏன் கேட்கக் கூடாதா? நீங்கள் எல்லோரும் வந்தேறு குடிகள். உங்கள் பூர்வீகம் பற்றி அறிய எங்களுக்கு ஆசை இருக்காதா?"
"நீங்களும் தான் வந்தேறு குடிகள். நீங்கள் அன்று வந்தீர்கள். நாங்கள் இன்று வந்திருக்கின்றோம். அவ்வளவு தான் வித்தியாசம்."
" நீ நன்கு பேசப் பழகிக் கொண்டாய்" என்று கூறி அந்த மாது சிரித்தாள்.
" கனேடியக் குடிமகனல்லவா? அது தான்" என்று நானும் சிரித்தேன். அந்த மாதை இறக்க வேண்டிய இடத்தில் இறக்கி விட்டு மீண்டும் வார்டன் பாதாள ரயில் வாகனத் தரிப்பிடத்திற்கு வருவதற்கு முடிவு செய்து வாகனத்தைத் திருப்பினேன். இந்த Where are you from? என்ற கேள்வி இருக்கிறதே. இது மிகவும் சுவாரசியமானது. இங்கு வரும் ஒவ்வொரு குடியேற்றவாசியும் அடிக்கடி எதிர் நோக்கும் கேள்விகளில் ஒன்று. இது கேட்கப் படும் பொழுது, கேட்கும் நபரைப் பொறுத்துப் பல்வேறு அர்த்தங்களில் கேட்கப் படலாம். உண்மையிலேயே அறிய வேண்டுமென்று ஆவலில் கேட்கப் படலாம். அல்லது 'நீ கனடியன் அல்ல' என்னும் ஆழ்மனத்தில் ஒளிந்திருக்கும் துவேஷ உணர்வின் வெளிப்பாட்டினைப் பிரதிபலிப்பதாகவும் இருக்கலாம். ஆனால் இந்தக் கேள்வியினை எதிர் கொள்ளும் நபர் இதனால் அடையும் மன உளைச்சல்களை யாரும் பொருட்படுத்துவதாகத் தெரியவில்லை. ஒவ்வொரு முறைம இதனை எதிர் கொள்ளும் பொழுதும் அவர் அவமானப் படுபவராகவே உணர்ந்து கொள்வதால் அடையும் எரிச்சலினை யாரும் புரிந்து கொள்வதாகத் தெரியவில்லை. என்னைப் பொறுத்தவரையில் பல்வேறு அனுபவங்களிற்கும் என்னைத் தயார் படுத்தி வாழ இயல்பூக்கம் அடைந்து விட்டேன். தொழிலிற்காக முகமூடிகளை அடிக்கடி மாற்றுவதில் எனக்கு எந்த விதச் சிரமமோ அல்லது சமூக உளவியற் பிரச்சினைகளோ இருப்பதில்லை. ஆனால் நம்மவர் பலருக்கு ஊரிலை இருந்த 'கொண்மேந்து' (Government) உத்தியோக மோகம் இன்னும் இருக்கத் தான் செய்கிறது.
அடுத்த சில மணித்தியாலங்கள் வார்டன் பாதாள ரயிலை சுற்றியே கழித்து விட்டு டொராண்டோ உள்நகர் ('Down town') நோக்கி வாகனத்தைத் திருப்பினேன். வழியில் இன்னுமொரு வெள்ளையின வாலிபன் வழியில் மறித்தான். கஞ்சா சற்று முன்பு தான் புகைத்திருப்பான் போலும். அவ்வளவு நாற்றம்.
"எங்கு போக வேண்டும்?" என்றேன்.
"சேர்போன்- டண்டாஸ்' என்றான்.
உள்ளே ஏறி அமர்ந்தவன் " நான் புகை பிடிக்கலாமா?" என்றான். பெரிதாக புகை பிடிக்கக் கூடாது என்ற குறி கார்க் கண்ணாடியிலிருந்ததை அவன் கவனிக்கவில்லை. "இல்லை நண்பனே. இந்த டாக்ஸியில் புகை பிடித்தல் தடை செய்யப் பட்டுள்ளது" என்றேன்.
அவனுக்கு ஆத்திரம் சிறிது வந்தது. "ஆனால் நான் புகை பிடிக்கத் தான் போகின்றேன். யன்னலைத் திறந்து விடுகின்றேன். என்ன சொல்கின்றாய்?" என்றான். நான் திடமாக "மன்னிக்கவேண்டும். அனுமதிப்பதிற்கில்லை" என்றேன். அவனது ஆத்திரம் சற்றே அதிகரித்தது. ஆத்திரத்தை வேறு வழியில் காட்ட எண்ணினான். "நீ மிகவும் மெதுவாகப் போகின்றாய்." என்று முறையிட்டான். " என்னுடைய வேக எல்லையை உனக்காக நான் தாண்ட முடியாது. இது தான் என்னுடைய எல்லை. இது உனக்குப் பிடிக்காவிட்டால் நீ தாராளமாக வேறு டாக்ஸி பிடிக்கலாம். ஆட்சேபனையில்லை" என்றேன். அவனது ஆத்திரம் மேலும் அதிகரித்தது. சிறிது நேரம் இருக்கையில் நெளிந்தவன் "நிறுத்து" என்றான். நான் வாகனத்தை வீதியோரமாக நிறுத்தினேன். இறங்கியவன் கதவை அறைந்து சாத்தினான். அத்துடன் " இது கனடா மனிதா. உன்னுடைய நாட்டுக்கே போய் விடு (Go back to your country)" என்றும் பலமாகச் சத்தத்துடன் கூடிய அறிவுரை கூறி விட்டுச் சென்றான். நானும் பதிலிற்கு "இது என்னுடைய நாடு. எந்த நாட்டிற்குப் போகச் சொல்லுகின்றாய்" என்று கேட்டு ஆத்திரத்தை அடக்கி விட்டு எனது வியாபாரத்தைத் தொடர்ந்தேன். மாதம் ஆயிரம் டொலர்களுக்கு டாக்ஸி 'பிளேட்' (Taxi Plate) குத்தகைக்கு எடுத்து, இருபதினாயிரத்திற்கும் மேல் செலவழித்துப் புதுக்கார் வாங்கி, காப்புறுதி, ரேடியோ என்று மாதாமாதம் செலவழித்துச் சொந்தமாக வியாபாரம் செய்யும் எனக்கு இதுவும் வேண்டும் . இன்னமும் வேண்டும். இடையில் ஒரு டிம் கோர்ட்டன் டோனற் கடை தென்பட்டது. கோப்பி குடித்துச் சிறிது ஆறுதல் அடைந்து விட்டு வியாபாரத்தைத் தொடரலாமெனப் பட்டது. டாக்ஸியைப் நிறுத்தி விட்டு உள்ளே நுழைந்தேன். நம்மவர் ஒருவர் தான் வேலை பார்த்துக் கொண்டிருந்தார். தெரியாதது மாதிரி ஆங்கிலத்தில் ஒரு 'மீடியம் டபுள் டபுள்' என்றேன். ஒருமுறை என்னைக் கூர்ந்து பார்த்தவர் கேட்டார் "நீங்கள் ஸ்ரீலங்காவிலிருந்தா (Are you from Srilanka)?" என்றார். "ஆம்" என்றேன். "அண்ணை தமிழிலையே கதைக்கலாமே" என்றார். "கதைக்கலாம்" என்றேன். அடுத்து அவர் கேட்டார்:
"அண்ணை ஊரிலை எந்த இடம்?"
நன்றி: திண்ணை, பதிவுகள்
12.. சொந்தக்காரன்! - வ.ந.கிரிதரன்
கடந்த இருபத்தி நான்கு மணித்தியாலங்களாக விடாமல் உறை பனி (snow) மழை பொழிந்து கொண்டிருந்தது. வீதிகளெல்லாம் உறை பனி படிந்து, படர்ந்து ..போதாதற்குக் குளிர் வேறு. சோமசுந்தரம் மணியைப் பார்த்தார். இரவு மணி பத்தை நெருங்கிக் கொண்டிருந்தது. அவரிற்கு இந்தக் குளிரிலை, கொட்டுகின்ற உறை பனி மழையில் நனைந்தபடி வேலைக்குச் செல்லவே விருப்பமில்லாமலிருந்தது. ஊரங்கிக் கிடக்கும் இந்தச் சமயத்தில் சாமத்துக் கோழியாக அலைய வேண்டியிருக்கிறதே என்று நொந்து கொள்ளத்தான் முடிந்தது. ஊரிலை அவர் ஒரு பௌதிக ஆசிரியர். அவரிடம் பயின்ற எத்தனை மாணவர்கள் 'டாக்டர்கள்', 'எஞ்சினியர்கள்' என்று வந்திருக்கின்றார்கள்..ஆனால் ..இங்கோ அவரோ ஏழு நாட்களும் வேலை செய்து கனடாவின் பொருளாதாரத்தினைக் கட்டியெழுப்பும் நல்லதொரு 'இமிகிரண்ட்'. வார நாட்களில் தொழிலாளி; வார இறுதி நாட்களில் தொழிலாளியைக் கண்காணிக்கும், முதலாளிக்கு ஏவல் புரியும் ஒரு கடமை தவறாத பாதுகாவலன். சற்று முன்னர் அவரது மேலதிகாரி ஜோ குறோபட் தொலைபேசியில் கூறியது நினைவிற்கு வந்தது.
"சாம். இன்று உனக்கு நகர மண்டபப் பாதாள வாகன தரிப்பிடத்தில் தான் வேலை ( City hall Under ground parking lot).கடந்த ஒரு வாரமாக நிறைய முறைப்பாடுகள் ...பல வாகனங்களிலிருந்து பொருட்கள் பல களவாடப் பட்டிருக்கின்றன... பல 'வீதி மக்கள்' இரவு நேரங்களில் அங்கு படுத்துறங்குவதாகப் பலர் முறைப்பாடுகள் செய்திருக்கின்றார்கள்... எனக்கு உன்னில் நிறைய நம்பிக்கையுண்டு. கடமை தவறாத கண்டிப்பான பாதுகாவலன் நீ...யாரும் அங்கு அத்துமீறிப் பிரவேசிக்காதபடி பார்த்துக் கொள்ள வேண்டியது உனது பொறுப்பு.."
'இந்தப் உறை பனிக்குளிரிற்குள் இந்தப் 'பார்கிங் லொட்டில்' போய் வேலை செய்யச் சொல்லுகிறானே'டென்று ஜோவின் மேல் எரிச்சல் கூடத் தோன்றியது. வழக்கமாக அவர் வேலை பார்ப்பது வாசனைத் திரவியங்கள் செய்யும் தொழிற்சாலையொன்றில் தான். சுகமான வேலை. 'ரிஷப்ஷ'னில் அமர்ந்திருந்து , தொலைபேசி அழைப்புகளிற்கு பதிலிறுப்பது, மணித்தியாலத்திற்கொருமுறை தொழிற்சாலையை, தொழிலாளர்களை ஒருமுறை சுற்றிப் பார்ப்பது....கட்டடத்திற்குள்ளேயே அதன் கணகணப்பில் சுகமாகக் காய்ந்து கொண்டிருக்கலாம். 'என்ன செய்வது ஆட வெளிக்கிட்டாச்சு. ஆடத்தானே வேண்டும்'
வார இறுதி நாட்களிலாவது ஓய்வெடுக்கலாமென்று பார்த்தால் ..முடிகிறதா? அவரது தர்மபத்தினி அகிலாண்டேஸ்வரி குழந்தைகளை அணைத்தபடி ஆனந்தமாகத் தூங்கிக் கொண்டிருந்தாள். அவளைப் பார்க்கப் பார்க்கப் பொறாமையாகவிருந்தது. அவள் கனடா வந்ததிலிருந்து, கடந்த பத்து வருடங்களாக அவர் அவளை வேலைக்குப் போவென்று வாய்திறந்து கூறியது கூடவில்லை. குழந்தைகளைப் பார்க்கிறாளே, வீட்டைக் கவனிக்கிறாளே... பாவமென்று அவள் மேல் பரிதாபம்தான் கொண்டிருந்தார். ஆனால் அவளென்னடாவென்றால்..."நீங்களும்தான் கனடா வந்து இத்தனை வருடமாச்சு..என்னத்தைச் சேர்த்து வைத்தீர்கள்...ஆளிற்காள் வீடு வாசலென்று இருக்கிறார்கள்...நீங்களோ..'வீடு' 'வீடு' என்று உங்கடை வீட்டாருக்கே எல்லாம் செய்து போட்டீங்கள்...என்னைத்தைக் கண்டனீங்கள்....உங்கடை வீட்டாரே இப்ப உங்களை மதிக்கினமா..." அகிலாண்டேஸ்வரி வாயைத் திறந்தால் அவ்வளவுதான்..அவளது தொணதொணப்பை அவரால் தாங்கவே முடியாது. "இஞ்சேரும்..சும்மா வாயைத் தொணதொணகாதேயும்..நீர் இங்கை வந்து இவ்வளவு வருஷமாய் உமக்கு நான் என்ன குறை வைத்தனான்.."என்று இவர் பதிலிற்குக் கேட்டு வைத்தாலோ ..அவ்வளவுதான்."என்னத்தைச் செய்து கிழித்தனீங்கள்...நீங்களில்லையென்றால் நான் 'வெல்வெயர்' எடுத்துச் சுகமாகவாவது இருந்திருப்பேனே...." என்று அவள் இளக்காரமாகப் பதிலிறுப்பதைத்தான் இவரால் தாங்கவே முடிவதில்லை. ஊரில் பாடசாலையொன்றில் உயர்தர வகுப்பிற்கான பௌதிக ஆசிரியராகவிருந்த அவர், இந்த வயதில் நாற்பது மணித்தியாலங்கள் முதுகு முறிய, முறியவென்று ஒரு தொழிற்சாலையில் வேலை செய்து உழைத்துக் கொண்டு வாடுகின்ற அவரது உழைப்பை எவ்வளவு துச்சமாக அவள் மதித்து வைத்திருக்கின்றாள். அதைத் தான் அவரால் தாங்க முடிவதில்லை. பொங்கிவரும் ஆத்திரத்தை வெகுவாகச் சிரமப்பட்டு அவர் அடக்கிக் கொள்வார். அப்பொழுதெல்லாம் எங்காவது கண்காணாத இடத்திற்கு ஓடிப்போய் விடலாமாவாவென்றிருக்கும். குழந்தைகளின் மேல் அவர் வைத்திருக்கின்ற பாசம் அவரைக் கட்டிப் போட்டு விடும். அவளது 'தொணதொண'ப்பிலிருந்து தப்புவதற்காகவே அவராகத் தேடிக்கொண்ட வார இறுதி வேலைதான் இந்தப் 'பாதுகாவலர்' உத்தியோகம்.
"அப்ப நான் போயிட்டு வாறன். கதவை உள்ளுக்குள்ளாலை பூட்டி வையும். என்ன.."என்று மனைவிக்குக் குரல் கொடுத்து விட்டு வெளியில் வந்த பொழுதுதான் சூழலின் யதார்த்தம் அவரிற்கு உறைத்தது. வீதியெல்லாம் மலை போல் உறை பனி குவிந்து கிடந்தது. வாகன நடமாட்டம், ஆள் நடமாட்டமின்றி உறை பனி பொழிந்து கொண்டிருக்கும் அந்த இரவு ஒரு வித மோனத்தில் ஆழ்ந்திருந்தது. ஒரு மாதிரி 'பஸ்' பிடித்து, பாதாள ரயிலேறி வேலைக்கு நேரத்திற்கு வந்து சேர்ந்து விட்டார். கடமை தவறாத பாதுகாவலனல்லவா அவர். மற்றவரென்றால் காலநிலையினைச் சாட்டாக வைத்து ஆறுதலாக ஆடிப் பாடி வருவார்கள். இதனால் தான் ஜோ அவரை அனுப்பி வைத்திருந்தான். சோமசுந்தரத்தை நம்பி அனுப்பலாம் என்று அவனிற்குத் தெரியும்.
தமக்குரிய 'பூத்'தில் 'காஷியர்கள் தங்களது வேலையினை ஆரம்பித்து விட்டார்கள். அவர்களிற்கு முகமன் கூறிவிட்டுத் தன் அறையினுள் நுழைந்தார் சோமசுந்தரம். இரவு 'பார்க்கிங் லொட்'டினைத் துப்புரவு செய்யும் தொழிலாளியான போலந்து நாட்டுக் கிழவன் இவரிற்கு முகமன் கூறினான்.சோமசுந்தரம் இதற்கு முன்னரும் சில தடவைகள் இங்கு தற்காலிகமாக வேலை செய்திருக்கின்றார். அதனால் போலந்து நாட்டுக் கிழவனை அவரிற்குத் தெரியும். வாயில் நுழைய முடியாத நீண்டதொரு பெயர்.நல்லவன். இரண்டாம் உலக மகா யுத்தத்தில் இராணுவத்தில் கடமையாற்றியவன்.அவனது புதல்வர்களிருவரும் நகரில் 'வான்கூவரில்' மருத்துவர்களாகக் கடமை புரிகின்றார்கள். போர்க் காலக் கதைகள் பலவற்றினை அவன் கூறுவான். ஒருமுறை தரைக் கண்ணி வெடியில் சிக்கிப் பல நாட்கள் அவன் அவஸ்த்தைப் பட்டிருந்திருக்கின்றான். நிலத்திற்குக் கீழுள்ள நான்கு தளங்களையும் கூட்டித் துப்புரவு செய்வது தான் அவனது பிரதான கடமை. அவனுடன் கதைத்த படியே சோமசுந்தரத்தின் பொழுது போகும். கிழவனிற்கும் தனிமையில் கிடைத்த துணையாக இவர் விளங்கினார். அத்துடன் அவ்வப்போது யாராவது அத்து மீறி நுழைந்தால் சோமசுந்தரத்திற்குத் தகவல் தந்தும் அவன் உதவி புரிவான்.
"ஏ! நண்பனே! யாராவது எங்காவது படுத்திருப்பதைப் பார்த்தால் தகவல் தர மறந்திடாதே என்ன?" என்று அவனிற்கு ஒருமுறை நினைவூட்டி விட்டுத் தன் வேலையினைத் தொடர்ந்தார் சோமசுந்தரம். ஜோ வேலை தொடங்கியது அழைக்கக் கூறியிருந்தது நினவிற்கு வந்தது. அழைத்தார். ஜோ பெரிதும் மகிழ்ந்து போனான்."சாம்! கூடிய விரைவில் உனக்குச் சம்பள உயர்வு பெற்றுத்தர முயல்கின்றேன்." என்று உறுதியளித்தான். இவ்விதம் பல உறுதிகளை அவர் ஏற்கனவே ஜோவிடமிருந்து அவர் கேட்டிருக்கின்றார்.
ஒரு மாதிரி பாதி நேரத்தினைத் தாண்டியாகி விட்டது. ஒரு குறிப்பிடத்தக்க சம்பவங்களும் நடக்கவில்லை. மணிக்கொருமுறை நான்கு பாதாளத் தளங்களையும் சுற்றிப் பார்ப்பதும், இருபத்து நான்கு மணிநேர தமிழ் வானொலியில் நிகழ்சிகளைச் செவி மடுப்பதுமாகப் பொழுது போய்க் கொண்டிருந்தது. வெளியில் உறைபனி மழை இன்னும் பொழிந்து கொண்டேயிருந்தது. உறைபனி படர்ந்து கிடக்கும் வீதிகளைத் துப்புரவு செய்வதற்காகன கனரக வாகனங்கள் தங்கள் வேலையினைச் செய்யத் தொடங்கிவிட்டிருந்தன. முதியவர்களிர்கான நிகழ்ச்சியொன்றின் மறு ஒலிபரப்பு வானொலியில் சென்று கொண்டிருந்தது. ஒரு வயதான பெண்மணி தனக்கு மிகவும் பிடித்தமான ஆசிரியர் ஒருவரிற்காக ஒரு பாடலைக் கேட்க விரும்பினார். அதற்காக அவர் கேட்க விரும்பிய பாடல்: "எங்கிருந்தாலும் வாழ்க.." அதற்கு அந்நிகழ்ச்சியினை நடாத்திக் கொண்டிருந்த அறிவிப்பாளர் "அம்மா! அந்தப் பாட்டின் முதல் வரி தவிர அதன் அர்த்தமே வேறாச்சே" என்று கூற பதிலிற்கு அந்த அம்மா "அதையே போடுங்கோவென். அந்தப் புண்ணியவான் எங்கிருந்தாலும் வாழ்க.."என்று மிகவும் அப்பாவித்தனமாகக் கூறியதைக் கேட்ட பொழுது சோமசுந்தரத்திற்குச் சிரிப்பாகவிருந்தது. 'வயது ஏற ஏற முதியவர்கள் குழந்தைகளாகித் தான் விடுகின்றார்கள்' என்று தனக்குள் ஒருமுறை நினைத்துக் கொள்ளவும் செய்தார்.
நேரம் மூன்றை நெருங்கிக் கொண்டிருந்தது. போலந்துக் கிழவன் ஓடி வந்தான்.
"என்ன விசயம்.... இப்படி ஓடி வருகிறாய்.."
கிழவன் ஓடி வந்ததில் சிறிது களைத்துப் போயிருந்தான். நின்று சிறிது நிதானித்தான்.
"நான்காவது தளத்திலை ஒருவன் படுத்திருப்பதைப் பார்த்தேன். என்னுடன் வந்தாயென்றால் காட்டுகிறேன்" என்றான். வானொலியினை நிறுத்தி விட்டு சோமசுந்தரம் அவனுடன் நான்காவது தளத்திற்குச் சாய்தளப் பாதை வழியாகக் கீழிறங்கினார். கிழக்கு மூலை வாசலிற்கண்மையில் அவன் படுத்திருந்தான். ஐம்பதை எட்டிய தோற்றம். கந்தல் உடை. அருகில் நெருங்கிய பொழுது 'வைன்' வாசனையுடன் கூடிய பல நாட்கள் குளிக்காத உடம்பு வாசனை, துவைக்காத அழுக்கான கந்தல் வாசனை என்பனவும் மூக்கைத் துளைத்தன.
அவன் ஒரு பூர்வீக இந்தியன். படுத்திருந்த அந்தப் பூர்வீக இந்தியனிற்கு சோமசுந்தரம் வருவது தெரிந்து தானிருந்தது. தெரியாதது போல் படுத்திருந்தான். இவரைப் போல் எததனையோ பாதுகாவலர்களை அவன் பார்த்திருப்பான் போலும். இதற்கிடையில் அவன் எழும்பாமலிருப்பதைக் கண்ட போலந்துக் கிழவன் அவன் தோள்களை உசுப்பி எழுப்பி விட்டான். ஏதோ முணுமுணுத்தபடி அந்தப் பூர்வீக இந்தியன் எழும்பினான். தூக்கத்தினைக் கெடுத்து விட்ட கோபம் முகத்தில் தெரிய அவன் இவர்களைப் பார்த்தான்.
"மகாராஜாவிற்கு வருகின்ற கோபத்தைப் பார்" என்று போலந்துக் கிழவன் கிண்டல் வேறு செய்தான். சோமசுந்தரத்திற்கு வெளியில் கொட்டிக் கொண்டிந்த உறை பனி மழை ஞாபகத்திற்கு வந்தது. பூர்வீக இந்தியன் மேல் சிறிது பரிதாபம் கூட வந்தது. இதற்கிடையில் போலந்துக் கிழவன் "இவர்களால் தான் சரியான தொந்தரவு. படுத்திருப்பார்கள். யாருமில்லையென்றால் வாகனங்களை உடைத்துத் திருடி விடுவார்கள்" என்றான். அவனது மேலதிகாரி ஜோ அவனிடம் யாரையும் அத்து மீறிப் பிரவேசித்து விடாதபடி பணித்திருந்ததும் நினவிற்கு வந்தது. இந்தப் பூர்வீக இந்தியனைப் பார்த்தால் அப்படியொன்றும் திருடுபவனாகத் தெரியவில்லை. இன்னும் சில மணித்தியாலங்களில் அவரது வேலை முடிந்து விடும். பொழுதும் புலர்ந்தும் விடும். ஆனால் அது மட்டும் இவனைத் தங்க அனுமதிக்க அவரிற்கு அனுமதியில்லை. போதாதற்கு இந்தப் போலந்துக் கிழவன் வேறு அருகில் நிற்கிறான். இவனிற்கு இந்தப் பூர்வீக இந்தியர்கள் மேல் அவ்வளவாக நல்ல அபிப்பிராயம் கிடையாது. குடிப்பதும் திருடுவதும் தான் இவர்களது வாழ்க்கை என்று கருதுபவன். வைத்தி வைத்து விடுவான். சோமசுந்தரம் இக்கட்டான நிலையிலிருந்தார். என்ன செய்யலாமென்று சிந்தித்துப் பார்த்தார். முதலில் போலந்துக் கிழவனை அங்கிருந்து அனுப்பினால் நல்லதென்று பட்டது. அவனிற்கு நன்றித் தான் இவனைக் கவனிப்பதாகக் கூறி அனுப்பி வைத்தார்.கிழவனிற்கு நகர விருப்பமேயில்லை. 'விடுப்பு' பார்ப்பதென்றால் யாரிற்குத் தான் ஆசையில்லை.
போலந்துக் கிழவன் சற்று அப்பால் நகர்ந்ததும் அந்தப் பூர்வீக இந்தியன் மீண்டும் படுப்பதற்கு ஆயத்தமானான். சோமசுந்தரம் சிறிது கண்டிப்பை முகத்தில் வைத்துக் கொண்டார்.
"எதற்காக இங்கு வந்து படுத்திருக்கிறாய். இங்கு படுக்க உனக்கு அனுமதியில்லையென்பது உனக்குத் தெரியுமல்லவா. விடுதிகளிலேதாவதொன்றில் போய்ப் படுப்பது தானே " என்றார்.
"எல்லா விடுதிகளும் நிறைந்து விட்டன. இன்னும் சிறிது நேரம் படுக்க அனுமதியளித்தால் போதும். நான் ஒரு பிரச்னையும் உனக்குத் தர மாட்டேன்" என்று அவன் பதிலிறுத்தான். சோமசுந்தரத்திற்கு அவனை இந்த வகையான காலநிலையில் வெளியேற்றுவதும் நல்லதாகப் படவில்லை. ஆனால் அவரது உத்தியோகத்தில் இவற்றையெல்லாம் பார்க்க முடியாது. கண்டிப்பான, கடமை தவறாத அதிகாரி அவர்.
"பூமிப் பந்தின் இன்னுமொரு கோடியிலிருந்து நான், சொந்த மண்ணை விட்டுத் துரத்தப் பட்டு அகதியாக ஓடி வந்திருக்கின்றேன். நீயோ சொந்த மண்ணிலேயே அதனையிழந்த இந்த மண்ணின் சொந்தக்காரன்". சோமசுந்தரத்திற்கு உண்மையில் அந்தப் பூர்வீக இந்தியன் மேல் ஒருவித தோழமை கலந்த உணர்வு தோன்றியது.
"நானோ அன்னிய நாட்டிலொரு அகதி. இவனோ சொந்த நாட்டிலேயே அகதியாகிப் போனவன்."
ஒரு காலத்தில் இவனது இனத்தவர்கள் அமெரிக்கக் கண்டத்தில் கொடி கட்டிப் பறந்தவர்கள். இயற்கையினைப் பேணுவதில் அன்றே பெரிதும் ஆர்வம் காட்டியவர்கள். இவர்கள் சடங்குகள், தத்துவங்களெல்லாம் இயற்கைச் செல்வத்தைப் பேணுவதை முக்கிய நோக்காகக் கொண்டவை.
சோமசுந்தரம் கடமை தவறாத, கண்டிப்பான, நிறுவனத்திற்குப் பெயர் வாங்கித் தரும் பாதுகாவல் அதிகாரிதான். ஆனால் சோமசுந்தரம் மனிதாபிமானத்தை இழந்த பாதுகாவலனல்லவே.
"நான் உன் வார்த்தைகளை நம்புகின்றேன். ஆனால் விடிந்ததும் போய் விட வேண்டும்" என்று கூறி விட்டுத் திரும்பி நடந்தார் சோமசுந்தரம். முதலாவது தளத்தினைத் துப்புரவு செய்து கொண்டிருந்த போலந்துக் கிழவன் சோமசுந்தரத்தைக் கண்டதும் கேட்டான்: " என்ன அவனைத் துரத்தி விட்டாயா?".
"ஒரு மாதிரி அவனைத் துரத்தி விட்டேன். துரத்துவதற்குள் போதும் போதுமென்றாகி விட்டது" என்று பதிலிறுத்தார் சோமசுந்தரம்.
"இந்தக் கொட்டும் உறை பனி மழையிக்குள் அவன் எங்கு போவானோ? பாவம்" என்று இரக்கப் பட்டான் போலந்துக் கிழவன். "பாவம் புண்ணியம் பார்த்தால் இந்த வேலை செய்ய முடியாதே" என்றவாறு சோமசுந்தரம் கடமையில் மூழ்கியவாறு மேலே நடந்தார்.
- நன்றி 'கணையாழி' (கணையாழி டிசம்பர் 2000 'கனடா சிறப்பிதழிலிருந்து..-), பதிவுகள், திண்ணை.
13. தப்பிப் பிழைத்தல்! - வ.ந.கிரிதரன் -
அந்தக் கழிவுகள், குப்பைகளைச் சேகரிப்பதற்கான தாங்கி அல்லது பெட்டி நாங்கள் குடியிருந்த தொடர்மாடிக் கட்டடத்திற்கருகாக சென்று கொண்டிருந்த வீதியில் மாநகராட்சியினால் அவைக்கப் பட்டிருந்தது. இவ்விதமான குப்பை சேகரிக்கும் பெட்டிகளை மேற்கு நாடுகள் பலவற்ற்¢ல் ஆங்காங்கே வைத்திருப்பார்கள். மூன்றாம் உலகத்து நாடுகள் பலவற்றில் இவற்றைக் காண்பதே அரிது. இத்தகைய பெட்டிக்குள் குப்பைகளைக் கழிவுப் பொருட்களைப் போடவேண்டுமென்றால் போடுவதற்கு வசதியாக கைகளால் உட்புறமாகத் தள்ளக் கூடியமூடியுடன் கூடியதொரு துவாரம் வைக்கப் பட்டிருக்கும். மனிதர்களால் மட்டும் தான் குப்பைகளைல் இதற்குள் போட முடியும். ஏனெனில் கைகளைப் பாவித்து மூடியை உட்புறமாகத் தள்ளுவதற்குரிய திறமையுள்ள உயிரினத்தால் தான் இது முடியும். ஒருவேளை நன்கு பழக்கப் பட்ட மனிதக் குரங்கான சிம்பான்ஸி அல்லது கொரில்லாக் குரங்குகளால் முடியக் கூடும்.
இந்தக் கழிவு சேகரிக்கும் பெட்டிக்கு என்ன அவ்வளவு முக்கியத்துவம் என்று கேட்க வருகின்றீர்களா? அவசரப் படாதீர்கள். சிறிது பொறுமையாகத் தான் இருங்களேன். முக்கியத்துவம் இருப்பதால் தானே அது பற்றி இவ்வளவு தூரம் விபரிக்கின்றேன். இந்தப் பெட்டிக்கும் உயிர்களின் முக்கிய்மானதொரு இயல்புக்கும் மிகவும் தொடர்பிருக்கிறது என்பதை நான் கூறினால் ஒருவேளை நீங்கள் சிரிக்கக் கூடும். ஆனால் அவசரப்பட்டுச் சிரித்து விடாதீர்கள். பின்னால் நீங்களே உங்களது அவசரத்துடன் கூடிய அறியாமைக்காக வெட்கித்துக் கொள்ளவேண்டியேற்படலாம். ஜாக்கிரதை.
இந்தத் தொடர்மாடிக் கட்டடத்திற்கு நான் அண்மையில் தான் குடிவந்திருந்தேன். இருள் விலகா அதிகாலைப் பொழுதுகளில், இருள் கவியும் அந்திகளில் என் பெண் குழந்தையுடன் உலாவி விட்டு வருவதற்காக நான் புறப்படுவதுண்டு. அத்தகையதொரு சமயத்தில் தான் என் குழந்தை அந்தப் பெட்டியிலுள்ள அந்த விடயத்தை அவதானித்தாள். அவள் கூறித்தான் நானும் அவதானித்தேன். அவளது அவதானம் எனக்கு வியப்பினையும், பெருமிதத்தினையும் அதிகமாகவே அளித்தது. விளையும் பயிர் முளையில் தெரியுமல்லவா? அவ்விதமானதொரு பெருமை.
விடயம் இதுதான்... கழிவுகளைப் போடுவதற்காக அப்பெட்டியிலிருந்த துவாரத்தின் அருகில் ஒரு ஒழுங்கற்ற வட்டத்தில் இன்னுமொரு துவாரம் காணப்பட்டது. எதற்காக அப்பெட்டியில் அந்தத் துவாரம்? யார் போட்டார்கள்? இவை தான் என் மகளின் வினாக்கள். என்னால் உடனடியாகவே விடை கூறமுடியாமல் போன வினாக்களை என் மகள் கேட்டிருந்தாள். யார் அத்துவாரத்தினை உருவாக்கியிருப்பார்கள்? என்று என் மண்டையினை அதிகமாகவே போட்டுக் குடைந்தேன். உருப்படியான பதில் தெரியவில்லை. அச்சமயம் எனக்குச் சிறுவயதில் படித்த சே.ஐசாக். நியூட்டனின் வாழ்க்கைச் சரிதக் கதையொன்றின் ஞாபகம் வந்தது. நியூட்டன் வீட்டில் ஒரு பூனை இருத்ததாம். அது அவர் அறைக்குள் வருவதற்காக ஒரு துவாரம் சுவரிலிடப்பட்டிருந்ததாம். ஒரு நாள் அந்தப் பெண் பூனை குட்டியொன்றினைப் போட்டு விட்டதாம். அந்தக் குட்டி அவர் அறைக்குள் வரவேண்டுமே. பார்த்தார் நியூட்டன்.உடனடியாக பெரிய பூனை வரும் துளைக்கு அருகிலேயே சிறியதொரு துளையினையும் சுவரில் உருவாக்கி விட்டாராம் சிறிய பூனை வருவதற்காக. இவ்விதமானதொரு அறிஞனொருவரின் அற்புதமானதொரு ஏற்பாடோ இந்தக் கழிவு சேகரிக்கும் பெட்டியிலிருந்த கோணலான வட்ட வடிவத் துவாரமும். கைகளின் வலு குறைந்த குழந்தைகள் குப்பைகளைப் போடுவதற்கானதொரு ஏற்பாடோ?
அதிகாலைகளில், அந்திகளில் இவ்விதமாக உலா வரும் பொழுது நானும் குழந்தையும் ஒவ்வொரு நாளும் அந்தப் பெட்டியினை அவதானித்துக் கொண்டு வரலானோம். யாராவது அந்தத் துவாரத்தினைப் பாவிக்கின்றார்களாவென்று. ஒருவரும் பாவிப்பதாகத் தெரியவில்லை. யாராவது குறும்புக்காரச் சிறார்கள் அதனையிட்டு விட்டு மறந்து விட்டார்கள் போலும் என்றொரு முடிவுக்கு நானும் என் குழந்தையும் வரலானோம்.
இவ்விதமானதொரு பொழுதில் தான், எமது உலாவினை முடித்துக் கொண்டு சிறிது தாமதமாக நாம், நானும், எனது குழந்தையும், இருப்பிடம் நோக்கித் திரும்பிக் கொண்டிருந்த பொழுதுதான் மாநகரசபைத் தொழிலாளியொருவன், ஒரு போர்த்துகேயன், அந்தக் கழிவைச் சேகரிக்கும் பெட்டியிலிருந்த குப்பைகளை கழிவகற்றும் தனது வாகனத்தின் தாங்கியினுள் கொட்டிக் கொண்டிருந்தான்.
"அப்பா! அந்த மாமாவிடம் கேட்டாலென்ன?" என்று என் குழந்தை அந்தத் துவாரம் பற்றி ஞாபகமூட்டவே கேட்டாலென்னவென்று எனக்கு படவே நான் அந்தத் தொழிலாளியிடம் கேட்டேன்.
"ஹாய்! நண்பனே! உன்னிடம் கேட்டால் சிலவேளை இதற்கு விடை கிடைக்கலாம்//"
அதற்கவன் சிறிது வியப்புடன் "எதைப் பற்றிக் கூறுகின்றாய்?" என்று கேட்டான். நான் அந்தத் துவாரத்தினைக் காட்டி "இதுதான். இந்தத் துவாரத்தினை யார் போட்டது என்று உனக்குத் தெரியுமா? என் மகள் என்னைப் போட்டு நச்சரிக்கின்றாள். அவளுக்கு விடை தெரிய வேண்டுமாம்" என்றேன்.
அவன் என் மகளைப் பார்த்து "நல்ல அறிவுள்ள குழந்தை. இந்த வயதிலேயே அதிகமாகக் கேள்விகளைக் கேட்க ஆரம்பித்து விட்டதே" என்று பாராட்டினான். அத்துடன் "உனக்கு இதற்குரிய விடை தெரிய வேண்டுமானால் பகல் முழுவதும் ஒரு நாள் இதனை அவதானித்து வந்தாயானால் புரிந்து விடும். நான் இப்பொழுதே இதற்குரிய விடையினைக் கூறி விட்டால் இதற்குரிய உன் சுவாரசியம் குறைந்து விடலாம். மாறாக நீயே காத்திருந்து அவதானித்து அறிந்து கொண்டால் அது உனக்கொரு மறக்க முடியாத நல்லதொரு அனுபவமாகவிருக்கலாம்." என்று கூறி விட்டுச் சென்று விட்டான். எனக்கு அவன் மேல் ஆத்திரம் ஆத்திரமாக வந்தது. வினாவுக்குரிய விடை தெரிந்தால் அதனைக் கூறவேண்டியது தானே. அடங்கிக் கிடந்த எனதும் என் மகளினதும் ஆவலினை இவ்விதம் பெரிதாக அதிகரிக்கச் செய்து விட்டுச் சென்று விட்ட அந்த மனிதன் மேல் ஆத்திரம் ஆத்திரமாக வந்தது. ஆனால் ஆத்திரப் பட்டு என்ன செய்வது... இந்த விடயத்தில் என் குழந்தை தான் எனக்கு ஆறுதல் கூறினாள்: "அப்பா! நாளை சனிக்கிழமை உனக்கு விடுமுறைதானே. நாம் அந்த மனிதன் கூறியது போல் அவதானித்தாலென்ன?" அவள் கூறியதும் சரியாகப் பட்டது. வேறு வழி?
மறு நாள் காலையிலிருந்து எம் 'பலகணி'யிலிருந்து அந்த பெட்டியினையே நானும் குழந்தையும் அவதானித்துக் கொண்டிருந்தோம். நண்பகல் வரையில் எந்த வித புதிய தகவல்களையும் அறிந்து கொள்ள முடியவில்லை. சரியாக பொழுது நண்பகலை அண்மித்த பொழுது தான் அந்த அற்புதம் அங்கே நிகழ்ந்தது. ஓர் அழகான, புஸ¤புஸ¤வென்று அடர்த்தியான கறுத்த உரோமத்துடன் கூடிய அணிலொன்று (எம் ஊர் மர அணிலின் அளவிலிருந்த அணில். இவ்விதமான கறுத்த உரோமத்துடன் கூடிய அணில்களைத் தாரளமாகவே டொராண்டோ மாநகரில் அதிகமாகக் காணலாம்.) மிகவும் மகிழ்ச்சியுடன் துள்ளிக் குதித்து வந்தது. ஒரு முறை சுற்றும் முற்றும் பார்த்து விட்டு அந்தப் பெட்டியில் காணப்பட்ட அந்தத் துவாரத்தின் வழியாக உள்ளே சென்று மறைந்தது. மிக நீண்ட நேரமாக அந்த அணில் உள்ளேயேயிருந்து ஆனந்தமாக உள்ளே மனிதர்களால் எறியப்பட்ட உணவுக் கழிவுகளை உண்டு தீர்த்தது. அதன் பின் ஆறுதலாக வெளியே வந்து துள்ளிக் குதித்துச் சென்று மறைந்தது. "ஓ! இதுவா விசயம்" என்று என் மகள் ஆச்சரியப் பட்டாள். நானும் தான். அதன் பின் சமயம் கிடைக்கும் போதெல்லாம் அந்த அணிலினை அவதானித்து வந்தோம். அந்த அணிலுக்கோ அந்தக் கழிவு சேகரிக்கும் பெட்டி ஒரு காமதேனு. ஒவ்வொரு நாளும் தனியாகவே வந்து, யாரும் சந்தேகப் படாத விதத்தில், ஆனந்தமாக உண்டு விட்டுச் சென்று வந்தது. யார் கவலைப் ப்படப் போகின்றார்கள். எம்மைப் போன்ற வேலையற்ற முட்டாள்கள் சிலர்தான் கவனித்திருக்கக் கூடும்? ஆனால் முக்கியமாக எம்மைக் கவர்ந்த அம்சம் என்னவென்றால்.. அந்த அணில் இரகசியமாகவே அந்தக் கண்டு பிடிப்பினை வைத்திருந்தது. சக அணில்களுக்குக் கூட அது அந்த இருப்பிடத்தைத் தெரியப்படுத்தவில்லை. ஏனெனில் அது ஒவ்வொரு முறையும் தனியாகவே வந்து சென்று கொண்டிருந்தது. இவை எல்லாவற்றையும் விட மிக ஆச்சர்யமான விடயத்தை என் மகளே ஞாபகப் படுத்தினாள்.
"அப்பா! மிருகங்கள் சிந்திக்குமா?" என்று அவள் கேட்டதற்கு "நம்மைப் போல் அவை சிந்திப்பதில்லை?" என்றேன். அதற்கு அவள் பதில்க் கேள்வி கேட்டாள்:
"அப்படியென்றால்..எப்படி இந்த அணிலுக்கு இதற்குள் உணவு இருக்கிற விடயம் தெரிந்தது?"
"அதுதான் எனக்கும் தெரியவில்லை" என்றேன்.
"அப்படி உள்ளே உணவிருக்கிற விடயம் தெரிந்ததும் எவ்விதம் அதற்கு இவ்விதம் துவாரமொன்றினை ஏற்படுத்தி உள்ளே செல்லவேண்டுமென்ற விடயம் தெரிந்தது? அப்படியென்றால் அது சிந்தித்திருக்கிறது தானே?"
என்று கேட்ட என் மகளுக்கு என்னால் இவ்விதம் தான் பதிலினைக் கூற முடிந்தது:
"மகளே! அற்புதமானவிந்தப் பிரபஞ்சத்தில் நம்மால் அறிந்து கொள்ள முடியாத விடயங்கள் எவ்வளவோயுள்ளன. ஆனால் ஒன்று மட்டும் புரிகிறது உயிரினம் எத்தகைய சிரமமான சூழல்களிலும் தப்பிப் பிழைக்க வழியொன்றினைக் கண்டு பிடித்து விடும் என்பது தான் அது மகளே!"
அதற்கவள் சிரித்துக் கொண்டே "உன்னைப் போல அப்பா" என்றாள். என் மகள் எவ்வளவு சூட்டிகையான குழந்தையென்று தூக்கி அணைத்துக் கொண்டேன்.
நன்றி: திண்ணை, பதிவுகள்.
14. வீடற்றவன்... - வ.ந.கிரிதரன் -
சனிக்கிழமை இரவு. நேரம் நள்ளிரவைத் தாண்டி விட்டிருந்தது. ரொரோண்டோ மாநகரின் உள்நகர்ப் பகுதியின் பொழுது போக்குப் பிரதேசமான ரிச்மண்ட் டங்கன் பிரதேசம் இன்னும் பரபரப்பாகக் காணப்பட்டுக் கொண்டிருந்தது. மூலைக்கு மூலை கிளப்புகள். ஆட்டமும் பாட்டமுமாக யுவன்கள் யுவதிகளால் நிறைந்திருந்தது. 'ஹாட் டாக்' நடைபாதை வியாபாரிகள் பம்பரமாகச் சுழன்று தமது வியாபாரத்தைக் கவனித்துக் கொண்டிருந்தார்கள். டாக்ஸிச் சாரதிகள் பிரயாணிகளை ஏற்றுவதும், காத்திருப்பதுமாகவிருந்தார்கள். சிலர் நேரத்துடனேயே வீடு திரும்பிக் கொண்டிருந்தார்கள். இன்னும் பலர் புதிதாக டாக்சிகளில் கார்களில் வந்து வந்து இறங்கிக் கொண்டிருந்தார்கள். தெரு மூலைகளில் இத்தனைக் களேபரத்திற்குமிடையில் வீடற்றவர்கள் 'மான் ஹால்' மூடிகளைக் கணப்பாக்கி உறக்கத்தில் மூழ்கிக் கிடந்தார்கள். நான் இரவு வேலை முடிந்து திரும்பிக் கொண்டிருந்தேன். என்னைச் சுற்றி நடைபெறும் நிகழ்வுகளை அவதானித்தபடி சென்று கொண்டிருந்தேன். மனிதரை, சூழலை அவதானித்தல் எனக்குப் பிடித்தொரு பிரியமான பொழுது போக்கு. வீதியில் 'சிக்னல்' விளக்கு மாறுவதற்காகக் காத்து நின்ற பொழுது 'சில்லறை ஏதாவது தரமுடியுமா நண்பனே' என்ற குரல் கேட்கத் திரும்பினேன். அருகில் அந்தக் கறுப்பின நடுத்தர வயது மனிதன் நின்றிருந்தான். இலேசான நரையுடன் கூடிய தாடி. அடர்த்தியான மீசை. ஆனந்தமான இளநகையுடன் கூடிய முகம். கையில் ஒரு பிளாஸ்திக்காலுருவாக்கப்பட்ட கொள்கலனொன்று வைத்திருந்தான். அதில் Clarke for Toronto Mayor' என்று ஆங்கிலத்தில் எழுதப் பட்டிருந்தது. இதற்கும் மேலாக எனக்கு ஆச்சர்யத்தைத் தந்தவிடயமென்னவென்றால்..அவன் 'கோர்ட்டும் சூட்டும் டையு'மாக ஒரு கனவானைப் போன்றதொரு தோற்றத்திலிருந்தது தான். அவன் நீட்டிய பிளாஸ்திக் கொள்கலனில் இரண்டு ரூபாக் குத்தியொன்றினைப் போட்டு வைத்தேன். அதற்கவன் "நன்றி" என்று நன்றி தெரிவித்தான். இந்த மாநகர் ஒவ்வொரு நாளும் இத்தனை வருடங்கள் கழிந்த நிலையிலும் எனக்குப் புதுப் புது அனுபவங்களைத் தர மறந்ததேயில்லை. இதனை அறிதலென்பது முடியாத செயல் போன்று பட்டது. கடலின் ஆழத்தை விட இதன் ஆழம் அதிகமாகவிருக்கலாமென்று புதியதொரு பழமொழியினை உருவாக்கும் அளவுக்கு ஆழமானதாக எனக்குப் பட்டது.
அந்த மனிதனே தொடர்ந்தான். என் கைகளைப் பிடித்துக் குலுக்கியவன் 'நண்பனே! என் பெயர் கிளார்க். டொரோண்டோ மேயர் பதவிக்காகப் போட்டியிட இருப்பவன். நானொரு வீடற்றவன்' என்ற அவனது கூற்று எனக்கு ஆச்சர்யத்தை அதிகம் விளைவித்தது. விரைவில் நடைபெறவிருந்த டொரோண்டோ மாநகர மேயர் பதவுக்கான தேர்தலில் பலர் போட்டியிடவிருப்பது நான் ஏற்கனவே அறிந்ததொன்று தான். ஆனால் இவ்விதம் ஒரு வீடற்ற நடைபாதை மனிதனும் போட்டியிடவிருப்பதாக நான் அறிந்திருக்காததால் சிறிது வியப்புற்றேன். அந்த வியப்புடன் 'நான் அறியாத செய்தி' என்றேன். அதற்கவன் 'அதிலேதும் ஆச்சர்யமெதுவுமில்லை. இங்குள்ள பத்திரிகைகள் ஏன் என்னைப் போன்ற ஒருவனைப் பற்றித் தமது நேரத்தை விரயமாக்கவேண்டுமென்று நினைத்திருக்கலாம்' என்றான். எனக்கு சிறுவயதில் கேட்டதொரு கதை ஞாபகத்திற்கு வந்தது. ஒரு முறை அங்கொடைக்கு சிறிலங்காவின் அனறைய ஜனாதிபதியான ஜே.ஆர். விஜயம் செய்திருந்தார். அங்கொடை இலங்கையின் புகழ் பெற்ற மனோவியாதிக்காரருக்கான ஆஸ்பத்திரி. அவ்விதம் விஜயம் செய்தவரை அங்கு சிகிச்சைக்காகத் தங்கியிருந்த நோயாளிகளிலொருவர் பின்வருமாறு வரவேற்றார்.
'வணக்கம். ஐயா யாரோ?'
அதற்கு ஜே.ஆர் ஒரு புன்சிரிப்புடன் 'நான் தான் இந்த நாட்டின் சர்வ வல்லமை பொருந்திய தார்மீக ஜனாதிபதி' என்றார். இதனைக் கேட்டதும் கேள்வி கேட்ட நோயாளி பலமாகச் சிரித்து விட்டு ஜே.ஆருக்குப் பினவருமாறு அறிவுரை கூறினான்: 'ஐயா. நானும் இப்படிச் சொல்லித் தான் இங்கு வந்து மாட்டிக் கொண்டேன். என்னிடம் கூறிய மாதிரி வேறு யாரிடமும் இவ்விதம் கூறாதீர்கள். அப்புறம் உங்கள் பாடும் என் பாடு தான்.' எனக்கொரு யோசனை. இவனும் தான் மேயர் தேர்தலுக்கு நிற்பதாகக் கூறுகின்றானே. வீடற்றவனாகவிருக்கின்றான். கோர்ட்டும் சூட்டும் டையுமாக ஒரு கனவானைப் போல் விளங்குகின்றான். ஒரு வேளை இவனும் அந்த ஜே.ஆரை வரவேற்ற நோயாளியைப் போன்றவனோ? இல்லாவிட்டால் தானொரு வீடற்றவனென்றும், மேயர் தேர்தலில் போட்டியிட இருப்பதாகவும் இவ்வளவு தீவிரமாகக் கூறுவானா? அவனது குரலில் எந்தவிதத் தயக்கமும், கலக்கமும் தெரியவில்லை. அக்குரலிலிருந்து ஒருவரும் அவனது மனநிலையினைச் சிறிதளவாவது சந்தேகிக்கமாட்டார்கள். அவ்வளவுக்குத் தெளிவாக அறிவு பூர்வமாக உரையாடினான்.
"நண்பனே! உன்னிடம் ஒன்று கேட்கலாமா?" என்றேன். "நிச்சயமாக" என்று என் கேள்விகளுக்காகக் காத்திருந்தான். [ இங்கு ஒருவரையொருவர் 'ஹாய் மான்' (Hey Man!), "எனது நண்பனே" (My Friend) என்று அழைப்பதென்பது சர்வசாதாரணமானது.]
"உன்னைப் பார்த்தால் ஒரு கனவானைப் போல் தென்படுகிறாய். அதே சமயம் வீடற்றவனென்றும் கூறுகின்றாய். இந்த உடைகளையெல்லாம் உனக்கு யார் தந்தது?" ஆச்சர்யம் தழும்பும் குரலில் கேட்டேன். அதற்கு அவன் கூறினான்: "நண்பனே! உண்மையைக் கூறினால்.. இவையெல்லாம் தானாகவே என் நலனில் அக்கறையுள்ளவர்களால் கொண்டு வந்து தரப்பட்டது...'அடிலயிற்று'ம் , 'பே'யும் சந்திக்குமிடத்திலுள்ள நடைபாதை தான் என் விலாசம். எப்பொழுதாவது உனக்கு என்னைப் பார்க்க வேண்டுமென்றால் அங்கு வந்து பார்." இலேசானதொரு புன்சிரிப்புடன் "நீயொரு புதிரான மனிதன்" என்றேன். அதற்கு அவனும் இலேசாகச் சிரித்தான். மேலும் தொடர்ந்தேன்:"உனக்கு இவ்விதம் மேயர் தேர்தலில் நிற்க வேண்டுமென்று எவ்விதம் ஆர்வம் வந்தது? ஆட்சேபனயேதுமில்லையென்றால் கூறலாம்..". சிறிது மெளனத்தின் பின் அவன் கூறினான்: "உனக்குத் தெரியாது என் கடந்த கால வாழ்க்கை பற்றி. தெரிந்தால் அதிர்ந்து போவாய்?".என் ஆர்வம் அதிகரித்தது. "நீ உன் கடந்த கால வாழ்வு பற்றிக் கூறாவிட்டால் என் மண்டை உடைந்து விடும் சுக்கு நூறாகி..வேதாளம் விக்கிரமன் கதையில் வருவதைப் போல்" என்றேன். அதற்கு அவன் "வேதாளம்..யாரது..?" என்றான். "அதொன்றும் அவ்வளவு முக்கியமான விடயமில்லை. நீ உன் கதையினைக் கூறத் தொடங்கலாம்." என்றேன். அதற்கு அவன் பின்வருமாறு தொடர்ந்தான்:" நான் ஒரு காலத்தில் மில்லியன் டாலர்கள் வரையில் உழைத்தேன். போதை வஸ்து விநியோகித்தேன்.....பெண்களை வைத்து 'பிம்பாக' (Pimp) இருந்து உழைத்தேன்....அதன் பின் தான் உணர்ந்தேன்..காசு தான் வாழ்க்கை அல்லவென்று..தற்போது என்னுடைய நோக்கமெல்லாம் மக்கள் அனைவரையும் நேசிப்பது தான்..உண்மையாக நேசிப்பது தான்.....உனக்குத் தெரியாது....மேலும்..." என்று நிறுத்தினான். "என்ன நிறுத்தி விட்டாய்...?" ஆர்வம் ததும்பக் கேட்டேன். "நான் இந்த சிக்னலில் பிழையாகக் கடந்தால் நிறுத்தப் படுவேன். அறிவுரைகள் கூறப்படுவேன். காவல் துறையினர் கண்டால் என்னை விடமாட்டார்கள். உன்னையும் தான்..ஆனால் ஒரு வெள்ளையினத்தவருக்கு இவ்விதமானதொரு நிலை ஏற்படுமென்று நீ நினைக்கின்றாயா? வந்தேறு குடிகள், சிறுபான்மையினர் அனைவரும் நன்கு பாதிக்கப் படுகின்றார்கள். அவர்கள் அனைவருக்கும் நான் உதவ வேண்டும். அதற்காகத் தான் நான் இந்தத் தேர்தலில் போட்டியிடவுள்ளேன்...." என்று அதற்கவன் பதிலிறுத்தான். இறுதியில் கதை வேறு வழிக்குத் திரும்பியது.." நண்பனே! நான் ஒரு எழுத்தாளன்..ஒரு மாதாந்த சஞ்சிகை நடத்துபவன்..அதற்காக உன்னைப் பேட்டி காண்பதென்றால்ல் என்ன செய்யலாம்..?" என்றேன். அதற்கவன் " தாராளமாக நீ என்னை என்னுடைய இருப்பிடத்தில், அது தான் அடிலையிற்/பே சந்திப்பில் சந்திக்கலாம்...." என்றவன் "உனக்குக் குழந்தைகள் யாராவது இருக்கிறார்களா?' என்றான்."ஆம். இரு அழகான நல்ல குணமான பெண் குழந்தைகள்" என்றேன். அதைக் கேட்டதும் அவன் இரு இருபத்து ஐந்து சத நாணயங்களை எடுத்துத் தந்தான்..அத்துடன் பின்வருமாறு அறிவுரையொன்றினையும் தந்தான். "எப்பொழுதாவது உன் குழந்தைகள் வெளியே சென்றால்..அவர்களிடம் இந்த நாணயங்களைக் கொடு..எங்கிருந்தாலும் உனக்கு அழைத்துத் தெரிவிக்கக் கூறு.." அதன் பிறகு விடைபெற்றுச் சென்று விட்டான். அவன் செல்வதையே , கண்ணிலிருந்து மறையும் வரையில், சிறிது நேரம் பார்த்துக் கொண்டிருந்தேன். இந்த புதிரான மாநகரைப் போலவே புதிரான மனிதனிவனெனப் பட்டது.
நன்றி: திண்ணை, பதிவுகள்.
15. 'ஆபிரிக்க அமெரிக்கக் கனேடியக் குடிவரவாளன்' - வ.ந.கிரிதரன் -
தற்செயலாகத் தொராண்டோவிலுள்ள நு¡லகக் கிளையொன்றில் தான் அவனைச் சந்தித்திருந்தேன். அவன் ஒரு கறுப்பினத்தைச் சேர்ந்த பாதுகாவல் அதிகாரி. அடிக்கடி நு¡லகத்தில் கண்காணிப்புடன் வலம் வந்து கொண்டிருந்தான். எனது மூத்த மகள் நு¡லகத்தின் சிறுவர் பிரிவில் நடைபெற்றுக் கொண்டிருந்த கதை கேட்கும் நேரத்தில் பங்கு கொள்வதற்காக வந்திருந்தாள். அதன் பொருட்டு நு¡லகத்திற்கு நானும் வந்திருந்தேன். குறைந்தது ஒரு மணித்தியாலமாவது செல்லக் கூடிய நிகழ்ச்சி. அந்த நேர இடைவெளியைப் பயனுள்ளதாகக் கழிப்பதற்காக நு¡லொன்றை எடுத்து அங்கு ஒதுக்குப் புறமாகவிருந்த நாற்காழியொன்றில் அமர்ந்து வாசித்துக் கொண்டிருந்த பொழுது ஒரு முறை என் அருகாக அவன் தன் கடமையினை செய்வதற்காக நடை பயின்றபொழுது எனக்கும் சிறிது கொட்டாவி வந்தது. அவனுக்கும் பெரியதொரு கொட்டாவி வந்தது. விட்டான்.
" என்ன து¡க்கக் கலக்கமா " என்றேன்.
" இல்லை மனிதா! சரியான களைப்பு. வேலைப் பளு" என்று கூறிச் சென்றான்.
சிறிது நேரத்தில் மீண்டுமொருமுறை அவன் வந்த பொழுது அவனுக்கும் எனக்குமிடையில் சிறிது நெருக்கம் ஏற்பட்டிருந்தது.
"என்ன அடிக்கடி இங்கு நு¡ல்கள் திருட்டுப் போகின்றனவா?" என்றேன்.
அதற்கவன் "இந்தப் பாடசாலைக் குழந்தைகள் பொல்லாததுகள். கணினிப் புத்தகங்களிலுள்ள சிடிகளை திருடிச் சென்று விடுவார்கள். சரியான தொல்லை. ஆனால்.." என்றான்.
"என்ன ஆனால்..?" என்றேன்.
"ஆனால்.. நானும் ஒருகாலத்தில் கலிபோர்னியாவில் இதையெல்லாம் செய்து திரிந்தவன் தான்" என்றான்.
"என்ன நீ கலிபோரினியாவிலிருந்தவனா?"
" ஆமாம் மனிதனே! அது ஒரு பெரிய கதை. அது சரி நீ எந்த நாட்டவன்.?"
"நான்..நான் ஒரு கனேடியன்.."
"அது சரி. னால் எந்த நாட்டிலிருந்து வந்தவன். பாகிஸ்தானா..அல்லது இந்தியாவா"
"இரண்டுமில்லை..ஆனால் இரண்டிற்கும் இடைப்பட்ட நாடொன்றிலிருந்து வந்தவன்.."
"அது எந்த நாடு..?"
"சிறிலங்காவைப் பற்றிக் கேள்விப்பட்டிருக்கின்றாயா?"
"ஓ..நீ சிறிலங்கனா?"
"ம் நண்பனே! ஆனால் நாங்கள் எல்லோருமே ஓரினம். உங்களைப் போல். ஆபிரிக்கர்களைப் போல்" என்றேன்.
"ஓ.."
"அது சரி.. நீயென்ன நைஜ"ரியனா"
"நான் நைஜ"ரியன் தான். ஆனால் நைஜ"ரியாவிலிருந்து வந்தவனல்ல"
"புதிரா..?"
"ஒரு புதிருமில்லை. நான் கலிபோரினியாவிலிருந்து கனடா வந்தவன். இதென்ன நாடு? சொன்னால் நம்பமாட்டாய். நான் இங்கு வந்தே முப்பது நாட்கள் கூட முடியவில்லை. ஆனால் இருந்து பார் நான் மே முடிவதற்குள் கலிபோரினியா திரும்பி விடுவேன்.."
"ஏன் அப்படிச் சொல்லுகிறாய். உனக்குக் கனடா பிடிக்கவில்லையா..பின் ஏன் இங்கு வந்தாய்?"
"ஏ! மனிதனே! நான் உன்னைப் போல் கனடா வந்தவனல்ல. நீ சிறிலங்காவிலிருந்து வந்தவன். உனக்கு வேண்டுமானால் கனடா பெரிதாகவிருக்கலாம். ஆனால் நான் அவ்விதம் வந்தவனல்ல. கலிபோர்னியாவிலிருந்து வந்தவன். கலிபோர்னியாவிலிருந்து வந்து பார்த்தாயென்றால் தெரியும் கனடாவின் நிலைமை."
"கலிபோர்னியாவில் வீட்டு வாடகை மிக அதிகமென்று கேள்விப்பட்டிருக்கின்றேன்"
"அது சரி..ஆனால் அங்கு வாழ்க்கைத் தரம் சரியான குறைவு..ஐம்பது சதத்துடன் நாள் முழுக்க பஸ்ஸில் மாறி மாறிப் பயணம் செய்யலாம். இங்கு அப்படிச் செய்ய முடியுமா?. எனக்கு ஏன் வந்தேனென்று §ருக்கின்றது. வேண்டுமானால் பார். யூன் வருவதற்குள் நான் போய் விடத்தான் போகின்றேன். கலிபோரினியா போய் விடத் தான் போகின்றேன்.நான் ஜெனிபரிடம் கூடக் கூறி விட்டேன். அவளுக்காகத் தான் என் அருமைக் கலிபோர்னியாவை விட்டு இந்தப் பாழாய்ப் போன கனடாவிற்கு வந்தேன். ஆனால் இம்முறை அவள் வருகின்றாளோ இல்லையோ நான் போகத் தான் போகின்றேன்."
எனக்கு அவன் கதை மிகவும் ச்சர்யத்தைத் தந்தது. தற்செயலாக எனது குழந்தை பங்கு பற்றும் நிகழ்வொன்றிற்காக நு¡லகம் வந்த இடத்தில் தான் இந்த கலிபோர்னியா நைஜ"ரியனைச் சந்தித்திருந்தேன். அதுவும் சந்தித்துச் சில நிமிடங்கள் தான் ஆகியிருந்தன. அதற்குள் அவன் எவ்வளவு விரைவாகத் தனது மனக் குறைகளை அள்ளிக் கொட்டி விட்டான். உண்மையில் அவன் கனடா வந்து முப்பது நாட்கள் தானா அல்லது முந்நூறு நாட்கள் தானா ஆகி விட்டிருந்தன என்பது எனக்குத் தெரியாது. ஆனால் அதற்குள் அவன் ஏன் என்னிடம் இவ்விதம் தன்னைத் திறந்து காட்டினான். அவன் கதைத்தது கூட மிகப் பலமான குரலில் தான். அவன் கூறுவதைக் கேட்ட அருகில் நு¡ல்களைத் தேடிக் கொண்டிருந்த ஒரு சில வெள்ளையின முதியவர்கள் கூட இலேசாகத் தலைகளை நிமிர்த்தி அவதானிக்கத் தான் செய்தார்கள். ஆனால் அந்த ஆபிரிக்க அமெரிக்கப் பாதுகாவலன் அது பற்றியெல்லாம் அதிகமாகப் பொருட்படுத்தியதாகத் தெரியவில்லை. ஒருவேளை அவனுடன் நட்பாக உரையாடத் தொடங்கிய எனது செயல் இன்னுமொரு மண்ணில் வேரூன்றுவதில் முயன்று தோல்வி கண்டிருந்த இவனுக்கு ஒருவித ஆறுதலையும் தன் மனப்பாரத்தை இறக்க வேண்டிய தேவையினையும் ஏற்படுத்தி விட்டிருக்குமோ என்றும் பட்டது. இதற்கிடையில் என் மகள் தன் நிகழ்ச்சி முடிந்து "டாடி" என்றவண்ணம் வந்து விட்டாள்.
"யார் உன் குழந்தையா? " என்றான்.
"ஆம் நண்பனே! நீ போவதற்குள் முடிந்தால் வந்து சந்திக்க முயல்கின்றேன்" என்றேன்.
"அதற்குச் சாத்தியமில்லை. இன்று மட்டும் தான் தற்காலிகமாக இங்கு எனக்கு வேலை. நாளைக்கு வழமையான இடத்தில் தான். உன்னைப் போன்றவர்களை இங்கு பார்ப்பதே அரிது. கலிபோர்னியாவில் எல்லோருமே நட்புணர்வு மிக்கவர்கள். ஒருமுறை வந்து பார். பின்னர் நீயே புரிந்து கொள்வாய்" என்றபடியே விடை கொடுத்தான். அத்துடன் எனக்கும் அவனுக்குமிடையிலான தற்காலிக உறவில் நிரந்தரப் பிரிவேற்பட்டது. ஆனால் வழக்கம் போல் இந்த உறவின் பிரிவும் இலேசாக மனதை நெருடத் தான் செய்தது போல் பட்டது.
நன்றி: திண்ணை, பதிவுகள்.
16. மனைவி! - வ.ந.கிரிதரன்
இரவு மணி பதினொன்றினை நெருங்கிக் கொண்டிருந்தது. யன்னலினூடி கட்டட முனிகள் தவமியற்றிக் கொண்டிருப்பது தெரிந்தது. ஓட்டியற்ற ஓடமாகப் பிறை நிலவு. பலகணியில் அடைந்திருந்த புறாக்கள் சில அசைந்தன. அடுத்த அப்பார்ட்மென்ட்லிருந்த இதுவரை கத்திக் கத்தி யுத்தம் புரிந்து கொண்டிருந்த யமேய்க்கனும் அவனது வெள்ளைக் காதலியும் சற்று முன்னர் தான் சப்தமிழந்து ஓய்ந்து போனார்கள். மனோரஞ்சிதத்தின் நெஞ்சுப்புற்றிலிருந்து ஞாபகப் பாம்புகளெழுந்து படம்விரித்தாடின. முன்றிலில் சாய்வு நாற்காழியில் சாய்ந்திருக்கும் அப்பாவின் சாறத்தைக் கதிரையாக்கி அப்பாவுடன் சேர்ந்து அவளும் விரிந்து கிடக்கும் விண்ணின் அழகில் மனதொன்றிக் கிடப்பதிலெவ்வளவு சந்தோசம்! நட்சத்திரங்கள் கொட்டிக் கிடக்கும் இரவு வான் அவளது நெஞ்சில எப்பொழுதுமேயொரு வித புதிர் கலந்த பிரமிப்பினை ஏற்படுத்தி விடும். அண்ணாந்து பார்க்கும் போது விரிந்து கிடக்கும் வெளியின் ஒரு பகுதியாக அந்தரத்தில் மிதந்து இயங்கும் இன்னொரு சுடராகத் தன்னையுணர்வாள். அச்சமயங்களில் இளகிக் கிடக்கும் மனது...நீண்ட பல வருடங்களிற்குப் பின்னால் வருகை தந்திருந்த நீண்ட வால் வெள்ளி பார்ப்பதற்காக அப்பாவுடன் ஒவ்வொரு நாள் அதிகாலையும் நேரத்துடன் எழுந்தது இப்பொழுதும் மனதினுள் பசுமையாகவிருக்கிறது.
'அப்பா! சரியான புத்தகப் பூச்சி. அப்பா! ஆறடி தாண்டிய ஆகிருதி. சிந்தனைக் கண்கள். குமிண் சிரிப்பு. நானறிய பார்த்து அப்பா வேலைக்கென்று வெளியெ போனதில்லை. வேலைக்குப் போகாத அப்பா. எந்த நேரமும் சாய்வு நாற்காலியில் சாய்ந்தபடி கிரகாம் கிறீன், டால்ஸ்டாய், வூட் ஹவுஸ், கொன்ராட்,... ஆனந்த விகடன், கல்கி, கலைமகள்,...இதைத் தவிர வேறென்ன செய்தார்? அப்பாவிற்குக் கவலைகள் இருந்ததுண்டா? குடும்பம், குட்டியென்று...எல்லாமே அம்மாதான்.அதிகாலையெழும்பி, அடுக்களை அலுவல் முடித்து, பாடசாலை செல்லும் அம்மா போய்ப் பொழுதுபட வந்தால்.. அம்மா மீண்டும் அடுக்களைதான். அம்மா வரும்வரை அப்பா குட்டி போட்ட நாயாய் அலைவார். அப்பா ஏனப்படியிருந்தார்? அம்மா அதுபற்றி அலட்டிக் கொண்டது கிடையாது. ஏன் அப்பாவும் தான்.
தூங்க மாட்டேனென்று மனம் இன்று அடம் பிடித்துக் கொண்டிருந்தது. அப்பாவின் நினைவுகள் அவள் நெஞ்சில் ஒருவித ஏக்கத்தினைப் பால்யகாலம் பற்றியதொரு ஏக்கத்தினை ஏற்படுத்தின. கவலைகளற்ற சிட்டுக் குருவிகளாகச் சிறகடித்துக் கொண்டிருந்த அந்த நாட்கள். எப்பொழுது நினைத்தாலும் நெஞ்சினை இளக்கி விடும் அந்த நாட்கள். அப்படியே அப்பா, அம்மாவின் அரவணைப்பில் இருந்த்கு விட்டிருக்கக் கூடாதா? வாழ்வு அமைதியாகச் சென்று கொண்டிருந்த அந்தப் பால்ய காலத்துக் கணங்களின் இனிமை எங்கே? தொலைபேசி கணகணத்தது. சோபாவில் சாய்ந்திருந்தபடி தொலைக்காட்சியில் போய்க் கொண்டிருந்த தொலைக்காட்சித் தொடரொன்றை பார்த்தபடி பழைய நினைவுகளில் நனவிடை தோய்ந்தபடியிருந்த மனோரஞ்சிதம் 'யாராகவிருக்கும் இந்த நேரத்தில்' என எண்ணியவாளாக எழுந்து சென்று தொலைபேசியினை எடுத்து "ஹலோ" என்றாள்.
"ஹலோ ரஞ்சிதமா? நான் சந்திரன் கதைக்கிறேன்"
மனோரஞ்சிதத்திற்கு சிறிது திகைப்பாகவும் மகிழ்ச்சியாகவுமிருந்தது. ராமச்சந்திரன். அவளது முன்னாள் கணவன்.
"என்ன சந்திரன் இந்த நேரத்திலை.."
"ரஞ்சிதம், எனக்கு நாளக்கு வேலையில்லை. நீரும் நாளைக்கு வேலைக்குப் போகவில்லையென்று கூறியிருந்தனீர். எங்காவது ரெஸ்றாண்டிற்குப் போய் ஆறுதலாகக் கதைக்கலாமென்று பட்டது. என்ன சொல்லுகிறீர்?"
மனோரஞ்சிதத்திற்கும் போனாலென்னவென்று பட்டது.
"அதுசரி சந்திரன், இந்த நேரத்தில் எந்த ரெஸ்ராண்டிற்குப் போகலாம்..எல்லாரும் கடையைப் பூட்டுகிற நேரத்திலை.."
"அந்தக் கவலையை விடும். எனக்குத் தெரிந்த சீனனுடைய ரெஸ்ராண்டொன்று டவுண் டவுனிலையிருக்கு...சைனா டவுனிலை தான். அவன் விடிய விடிய திறந்திருப்பான்...அங்கு போகலாம்...என்ன சொல்லுறீர்?"
"எனக்கென்றால் சரி.. நீங்கள் இங்கு வந்து போக இன்னும் நேரம் சென்று விடுமே.."
"நான் உமது இடத்திற்குக் கிட்டத் தானிருந்து கதைக்கிறேன். இன்னும் பத்தே பத்து நிமிடங்களில் அங்கு வந்து விடுவேன். ரெடியாய் நில்லும்"
மனோரஞ்சிதம் அவன் வருவதற்குள் முகம் கழுவி தன்னைத் தயார் படுத்தத் தொடங்கினாள். 'இன்னும் எத்தனை நாளைக்கு இப்படியே காலந் தள்ளுவது. இன்னும் இழுத்துக் கொண்டே போகாமல் இன்றைக்கே பேசி இதற்கொரு முடிவு கட்டினாலென்ன?' என்றொரு எண்ணமும் கூடவே எழுந்தது. அதே சமயம் ராமச்சந்திரனின் தன்னையே முதன்மைப் படுத்தி அவளை அடிக்கடி வருத்திய பழைய சம்பவங்களெல்லாம் ஞாபகத்திலெழுந்தன. எவ்வளவு தூரம் அவளை வார்த்தைகளாலேயே குற்றியிருப்பான். எதற்கெடுத்தாலும் அவள் மேல் சந்தேகம். அவள் நேரம் கழித்து வரும் சமயங்களெல்லாம் அவளை வார்த்தைகளால் எவ்வளவு தரம் வாட்டியிருப்பான்? சில சமயங்களில் 'தேவடியா' என்று கூடத் திட்டியிருக்கிறான். அவற்றுடன் ஒப்பிடும் பொழுது இவ்விதம் பிரிந்து சந்தித்து வாழ்வது கூட ஒரு விதத்தில் நன்றாகத் தானே இருக்கிறது. இப்படியே இருந்து விட்டாலென்ன?' பலவிதமான எண்ணங்கள் வளையமிடத் தன்னை அலங்கரிப்பதில் மனோரஞ்சிதம் ஈடுபட்டாள். ராமச்சந்திரன் கூறியமாதிரியே பத்து நிமிடங்களில் வந்து விட்டான். இருவரும் அவனது காரிலேயே டொராண்டோ நகரின் மத்தியிலமைந்திருந்த 'சீனநகர்' நோக்கிப் பயணமானார்கள். அவன் கூறிய படியே அந்தச் சீன உணவகத்தினுணவு வகைகள் சுவையாகவேயிருந்தன. அவன் 'பியர்' எடுத்து அருந்தத் தொடங்கினான்.
"என்ன சந்திரன்! பியர் குடித்தாலெப்படி கார் ஓடுவதாம்" என்று மனோரஞ்சிதம் கேட்டாள்.
"ரஞ்சிதம்! இன்று நீர் தான் டிரைவர். இப்படியொரு சந்தர்ப்பம் இனி எப்பொழுது வருமோ?"
நீண்ட நேரமாக உரையாடியபடி உணவினைச் சுவைக்கத் தொடங்கினார்கள்.
"ரஞ்சிதம், எனக்கென்றால் ஒரு யோசனை.."
"என்ன சந்திரன்.."
"நடந்தது நடந்து விட்டது. அவற்றைப் பழங்கனவாக மறந்து விட்டு ஏன் புது வாழ்க்கையை நாம் தொடங்கக் கூடாது?"
"அப்படியென்றால் ஏற்கனவே விட்ட பிழைகளை நாங்கள் இனியும் விடக் கூடாது. ஒருவரையொருவர் நன்கு புரிந்து மதித்து எந்தவிதச் சந்தேகமுமில்லாமல் வாழ்வதாகவிருந்தால் எனக்கு ஆட்சேபனையில்லை. எதற்கும் இன்னுமொரு நாள் அவகாசம் தாருங்கள். நான் உங்களிற்கு எனது முடிவைச் சொல்லுகிறேன். என்ன சொல்லுகிறீர்கள் சந்திரன்?"
அவனுக்கும் அது சரியென்று பட்டது. 'ஆறப் பொறுத்தவன் ஆக்கப் பொறுக்கக் கூடாதா?' அன்றிரவு அவர்கள் அவ்வுணவகத்திலிருந்து புறப்பட்ட பொழுது ராமச்சந்திரன் தன் நினைவிலேயே இல்லை. அளவிற்கதிகமான மகிழ்ச்சியில் அளவிற்கதிகமாக பியர் அருந்தி விட்டிருந்தான்.
"சந்திரன், இந்த நிலையில் உங்களைத் தனியே விட எனக்கு விருப்பமில்லை.. பேசாமல் என் அபார்ட்மென்றிலேயே இரவு தங்கி விடுங்கள்" என்று மனோரஞ்சிதமே கேட்ட பொழுது ராமச்சந்திரன் மகிழ்ச்சியுடன் சம்மதித்தான். ராமச்சந்திரன் சோபா பெட்டில் படுத்துக் கொள்ள மனோரஞ்சிதம் தனது அறையில் படுத்துக் கொண்டாள். மறு நாள் ராமச்சந்திரனிற்கு முடிவு கூறுவதாகக் கூறியதை எண்ணியள், அது பற்றிய எண்ணங்களில் மூழ்கியவளாகவளாக நெடுநேரம் தூக்கம் வராமல் விழித்திருந்த மனோரஞ்சிதத்தை இறுதியில் தூக்கம் தழுவிக் கொண்டது. அதிகாலை மூன்று மணியிருக்கும். இன்னும் விடிந்திருக்கவில்லை. மனோரஞ்சிதத்திற்குத் தன் மேல யாரோ படுத்திருப்பது போலொரு உணர்வு.மூச்சு முட்டியது. கனவேதாவதுதான் காண்கின்றோமோ என எண்ணியவளாக விழித்துக் கொண்டவளிற்குத் தூக்கி வாரிப் போட்டது. ராமச்சந்திரன் அவள் மேல் பரவியவனாக அவளைத் தழுவ முயன்று கொண்டிருந்தான்.
"என்ன சந்திரன்..உங்களிற்கென்ன பைத்தியமா..." என்று கத்தியவள் அவனைப் பிடித்துத் தள்ளி விட்டாள். அவன் இன்னும் வெறியில் தானிருந்தான். "என்னடி பத்தினி வேசமாய் போடுறாய்? நானென்ன வேறு ஆளா? உன் புருசன்டீ"
இவ்விதம் அவன் கூறவும் அவள் ஆத்திரம் அதிகரித்தது. இதை அவள் எதிர்பார்க்கவேயில்லை. எவ்வளவு இலகுவாக இயல்பாக ஆணவத்துடன் கூறினான் அவன்? இவன் திருந்தவே மாட்டானா? இவளுக்கும் அவனுக்குமிடையிலுள்ள தொடர்பென்ன? ஒரு காலத்தில் அவனுக்கு அவள் மனைவியாகவிருந்தாள். அவன் அவளுக்குக் கணவனாகவிருந்தான். ஆனால் அது ஒரு காலத்தில். தற்காலத்திலல்ல. அந்த ஒரு காலத்துறவைக் காரணமாக வைத்து இன்னும் இவன் இவளை அடக்கலாமென்று இயல்பாகவே இவன் எண்ணிக் கொண்டிருக்கின்றான். வெளியில் இவன் எவ்வளவு கதைத்தாலும் இவனது ஆழ்மனதிலுள்ள எண்ணம் தான் இப்பொழுது இந்தப் போதையில் வெளிப்படுகிறது. என்ன மனுசனிவன்?
"சந்திரன்! நாங்கள் ஒரு காலத்தில் புருசன் மனைவியாக இருந்தவர்கள் தான். அது பழைய கதை. இப்பொழுது எங்களுக்கிடையில் உள்ள தொடர்பு வெறும் நண்பர்களிற்கிடையிலான தொடர்பு மட்டும் தான். நல்ல காலம் இப்பொழுதாவது உங்களுடைய சுயரூபம் தெரிந்ததே. நீர் மாறியிருப்பீரென்று நினைத்தேன். ஆனால் இன்னும் நீர் மாறவேயில்லை. நாய் வாலை நிமிர்த்த முடியுமா? " மனோரஞ்சிதம் இவ்விதம் கத்தவும் ராமச்சந்திரன் சுயநிலைக்கு வந்தான். மனோரஞ்சிததை அவன் நன்கறிவான். இத்தகைய சமயங்களில் அவன் என்ன செய்ய வேண்டுமென்பதையும் உணர்வான்.
"ரஞ்சிதம்! என்னை மன்னிச்சுக் கொள்ளும். நான் செய்தது பிழைதான். அதுக்காக நீர் என்ன தண்டனை கொடுத்தாலும் ஏற்றுக் கொள்ள நான் தயார் தான். ஆண் பெண் உறவென்பது உடற் பசிக்கொரு தீனிதான். என்னுடைய நிலையை நினைச்சுப் பாரும். நான் நினைச்சிருந்தால் என் உடல் தேவைகளுக்காக இங்கு மிகவும் இலகுவாக இன்னொரு பெண்ணின் துணையை நாடியிருக்க முடியும். ஆனால் நான் செய்தேனா? நான் இங்கு என்னை நியாயப் படுத்த முனையவில்லை. நான் செய்தது சரியென்று கூறவில்லை. ஆனால் அதற்காக என் சுயரூபம் அது இதென்று கூறுவதை என்னால் ஏற்றுக் கொள்ள முடியாது. ஆனால் நான் நிச்சயமாக நீர் உணர்வீரென்று நினைக்கின்றேன். ஆனால் நாளைக்கு நீர் கூறப்போகின்ற பதிலுக்கு இந்தச் சம்பவமொரு காரணமாகவிருக்காதென்று நம்புகிறேன்" இவ்விதம் கூறிய சந்திரன் படுக்கையிலிருந்தும் எழுந்து சட்டையை மாற்றியவனாகப் புறப்பட்டான். அவன் செல்வதையே பார்த்தபடி அமைதியாக மனோரஞ்சிதம் நின்றாள்.
நன்றி: திண்ணை, பதிவுகள்
17. யன்னல்! வ.ந.கிரிதரன்
யன்னலினூடு உலகம் எதிரே விரிந்து கிடக்கின்றது. யன்னலினூடு விரிந்து கிடக்கும் உலகைப் பார்ப்பதில் ரசிப்பதில் இருக்கும் திருப்தி இருக்கிறதே.. அது ஒரு அலாதியானதொரு சுகானுபவம். ஒரு சட்டத்தினில் உலகைப் படம் பிடித்து வைத்துப் பார்ப்பதைப் போன்றதொரு ஆனந்தம். 'பேப்' வீதி வழியாகப் போய்க்கொண்டிருக்கும் பல்வேறு விதமான மனிதர்களைப் பார்ப்பதில் ஒரு 'திரில்' இருக்கத்தான் செய்கின்றது. கரிபியன் தீவுகளைச் சேர்ந்த 'யமேய்க்க' மனிதர்கள்; கயானா இந்தியர்கள்; இவர்கள் வெள்ளயர்களால் கூலிவேலைகளிற்காக ஆரம்பத்தில் கொண்டு செல்லப் பட்டவர்களின் சந்ததியினர். 'பேப்' வீதியை அண்மித்துள்ள பகுதி கிரேக்கர்கள் அதிகளவில் வாழும் பகுதி. டொராண்டோ மாநகரில் இது போல் பல பகுதிகளைக் காணலாம். 'சிறு இந்தியா' , 'சிறு இத்தாலி'..இப்படி பல பகுதிகள். அது ஒரு மாலை நேரம். மெல்ல மெல்ல இருள் கவியத் தொடங்கியிருந்த சமயம். இலேசாக மழை வேறு தூறிக்கொண்டிருந்தது. வழக்கம் போல் யன்னலினூடாக எதிரே விரிந்திருந்த உலகைப் பார்த்து ரசித்துக் கொண்டிருக்கின்றேன்.
'யன்னல்'. அன்னியர் வருகையால் தமிழிற்குக் கிடைத்த இன்னுமொரு சொல். 'சப்பாத்து' 'அலுகோசு' போல் போர்த்துக்கேயரின் வருகை பதித்து விட்டுச் சென்றதொரு சொல் 'யன்னல்'. 'யன்னல்' யன்னலாகை நிலைத்து நின்று விட்டது. 'சாளர'த்தை விட எனக்கு 'யன்னல்' என்ற சொல்லே பிடித்து விட்டிருந்தது. 'மின்ன'லிற்கு எதுகையாக நன்கு அமைந்த சொல் யன்னல். யன்னல் என்ற பெயரிற்கு ஒரு மகிமை இருக்கத்தான் செய்கிறது. உலகப் பணக்காரனை உருவாக்கியதும் ஒரு 'யன்னல'ல்லவா! யன்னலின் மறைவில் உலகை ரசிக்கலாம் இணையத்தில். இங்கும் தான். திரும்பிப் பார்த்தாலொழிய யார்தான் கண்டு பிடிக்கக்கூடும்? தனித்தமிழ் தனித்தமிழென்று சொல்லி நின்றிருந்தால் தமிழ் நல்லதொரு சொல்லினை இழந்திருக்கும். வந்தாரை வாழவைக்கும் தமிழ் நாடு என்போம். வந்தாரை வரவேற்று உபசரிப்பது தமிழ்ப் பண்பென்று புளகாங்கிதம் அடைகின்றோம். வந்த சொல்லினை வரவேற்று உள்வாங்குவம் மொழி தமிழ் மொழி என்று இறும்பூதெய்வதிலென்ன தயக்கம்?
'பேப்' வீதியின் தெற்குப் பக்கமாக நோக்கி அவன் வந்து கொண்டிருந்தான். அவன் நிறத்தை வைத்துப் பார்த்தால் அவன் ஒரு கறுப்பு மனிதன். 'யமேய்க்க' நாட்டவனாக இருக்கலாம் போல் பட்டது. ஆனால் அதனையும் நிச்சயமாகச் சொல்வதற்கில்லை. பலரை , நைஜீரியாப் பக்கம் இருந்து வந்த பலரை 'யமேய்க்க'ர்களாக எண்ணி ஏமாந்த அனுபவம் பல உண்டு. அவர்களது உரையாடும் பாங்கினை வைத்துப் பிடித்துக் கொள்ளலாம். நம்மவரிற்கு அவனைக் 'கறுவல்' என்று சொல்வதிலொரு அலாதிப் பிரியம். ஏதோ 'வறுவல்' என்று சொல்வதைப் போல் ஆசையாகக் 'கறுவல்' என்று கூறுவார்கள். 'கறுவல்' என்று சொல்வதில் பெரிய தவறேதுமிருப்பதாகத் தெரியவில்லை. ஆனால் அந்தச் சொல்லினை சொல்லும் போது அவர்களையறியாமலேயே தென்படுகின்றதே அந்த இளக்காரத் தொனி.. அது அவர்களைக் காட்டிக் கொடுத்து விடுகின்றது....ஊரிலை கூறுவார்களே....'வடக்கத்தையான் வருகின்றான்' என்று....அதுமாதிரி இங்கு இந்தக் 'கறுவல்'...
அந்தக் கறுப்பு மனிதன் கறுப்புக் கண்ணாடி அணிந்திருந்தான். பார்ப்பதற்கு
'ரப்' இசை வழங்குமொரு பாட்டுக் காரன் போலொரு தோற்றம்...ஒருவிதமான ஆட்டம் அவன் நடையில் தென்பட்டது. கூடவே ஒரு நாய் வந்து கொண்டிருந்தது. கறுப்பு நாய். எந்த வகையான நாய் என்று சொல்வதற்கில்லை. நான் ஒரு நாய் ஆராய்ச்சியாளனல்ல. எனக்குத் தெரிந்த ஒருசில நாய் வகைகளில் அடங்கிய நாயல்ல அது. சாதாரண ஊர் நாய் வகைகளைப் போன்ற தோற்றம். வாலைக் குழைத்துக் கொண்டு நன்றியுடன் அந்தக் கறுப்பு மனிதனைத் தொடர்ந்து கொண்டிருந்தது அந்த வாயில்லா ஜீவன். நாயென்ன வாயில்லா ஜீவனா? அதெப்படி அதற்கு வாய்தானே இருக்கிறதென்று குதர்க்கமாகக் கேட்டு வைத்து விடாதீர்கள். 'வாய் வங்காளம் மட்டும் போகின்றதே'யென்று நான் உங்களிற்குப் பதிலிறுக்க வேண்டி வந்து விடும். ஏதோ ஒரு பாடலை அவனது வாய் முணுமுணுத்தபடியிருப்பதைப் பார்க்க முடிகின்றது.
இதற்கிடையில் எதிர்த் திசையில் , 'பேப்' வீதியில் வடக்கு நோக்கி இன்னுமொரு மனிதன் வந்து கொண்டிருந்தான். நிறத்தில் இவன் முன்னவனிற்கு முற்றிலும் எதிரானவன். பார்ப்பதற்கு கிரேக்கனைப் போல் தென்பட்டான். இவனைப் போல் அவனுடன் கூடவே ஒரு நாய்.. அதுவும் அவனைப் போலவே ஒரு வெள்ளை நாய்.. இவனுடைய நாயைப் போலவே சாதாரண ஊர் நாயென்றினைப் போன்றதொரு தோற்றம். அவனது கவனம் எதிர்த்திசையில் சென்று கொண்டிந்த மதமதர்த்த மார்புகளுடன் சென்று கொண்டிருந்த பெண்ணொருத்தியின் மேல் திரும்பியிருந்தது. அதே சமயம் நடந்து கொண்டுமிருந்தான். எதிராகச் சென்று கொண்டிருந்த கறுப்பின மனிதனுடன் மோதி விடுவான் போல் பட்டது. கறுப்பு மனிதனும் எதிரே வருபவன் கவனம் திசைமாறி வந்து கொண்டிருப்பதைக் கவனித்ததாகத் தெரியவில்லை. அவன் முணுமுணுத்தபடியிருந்த பாட்டிலேயே ஒன்றியிருந்ததாகப் பட்டது. அவனை எச்சரிக்கலாமாயென்று எண்ணி முடிப்பதற்குள்ளேயே மோதல் நிகழ்ந்து விட்டது. 'சே.. கொஞ்சம் முந்தியிருக்கலாமே' என்று பட்டது. மோதல் நிகழ்விற்கு இருவரிலும் தவறிருந்தது. ஆனால் அவர்கள் அதனையுணரவில்லையென்பதையே தொடர்ந்த சம்பவம் காட்டியது.
வெள்ளைக்காரன் என்ன கூறினான் என்பது தெரியவில்லை. ஆனால் அவனது வாய் அசைப்பிலிருந்தும், அவன் முகத்தில் வெடித்துக் கொண்டிருந்த ஒருவித அசூயை கலந்த சினத்திலிருந்தும் அவன் தன் தவறினை உணர்ந்ததாகத் தெரியவில்லை என்று பட்டது. கறுப்பு மனிதனின் ஆத்திரமும் அதிகரித்து விட்டது. இவனிலும் தவறிருந்தது. மோதலைத் தவிர்ப்பதற்கு இவனுக்கும் ஒரு சந்தர்ப்பமிருந்தது. ஆனால் இவனும் அதனை உணர்ந்ததாகத் தெரியவில்லை. பதிலிற்கு இவனும் பலமாகத் தலையினை அசைத்துக் கத்துவதைப் பார்க்க முடிந்தது. இவர்கள் இருவரிற்குமிடையில் ஏற்பட்ட மோதல் பாதசாரிகள் பலரது கவனத்தினை இழுத்து விட்டது. இவர்களைச் சுற்றி வேடிக்கை பார்க்கத் தொடங்கினார்கள். 'உப்புச் சப்பில்'லாததொன்றிற்காக இவர்கள் மோதுவதாக யன்னலிற்கப்பாலிருந்து வேடிக்கை பார்த்துக் கொண்டிருந்த என்னால் உணர முடிந்தது. ஒருவேளை யன்னலிற்கப்பால் இருந்திருந்தால் நானும் அவர்களைப் போல்தான் மோதியிருப்பேனோ? யன்னலிற்கிப்பாலிருப்பதால் தான் இவ்விதம் எண்ணுகின்றேனோ? இங்கிருந்து பார்க்கும் போது ஏன் தான் அங்கு இவ்விதம் அடிபட்டுச் சாகின்றார்களோ என்று படுவதில்லையா? மிகவும் இலகுவான தீர்விற்கான வழிகள் இருக்கும் போது அவர்கள் ஏன் தான் இவ்விதம் மோதுகின்றார்களோவென்று படுவதில்லையா? அதுபோல் தான் இதுவுமோ?
யன்னலிற்கிப்பாலிருந்து பார்க்கும் போது எல்லாமே தெரிகின்றது. யன்னலிற்கப்பால் ஏன் அவர்களுக்குத் தெரியவில்லை? கறுப்பு மனிதனும் வெள்ளை மனிதனும் முறுகிக் கொண்டிருந்த நிலையில் பெரிதாக மாற்றமேதுமில்லை. அடிபடாத குறைதான். யாரோ ஒருவர் மோதலைத் தவிர்ப்பதற்கு முன்வந்து முயன்று கொண்டிருந்தார். எனக்குச் சற்றே சுவாரசியம் குறைந்தது. கவனம் நாய்களின் மேல் திரும்பியது. அந்தக் கறுப்பு நாயினதும் வெள்ளை நாயினதும் முகங்களில் தான் எவ்வளவு மகிழ்ச்சி ரேகைகள்! வாலை வாலை ஆட்டியபடி ஒன்றினை ஒன்று முகர்ந்தபடி எவ்வளவு சந்தோசம்! யன்னலிற்கப்பால் சந்தோசப்படுவதற்கும் உயிரினங்கள் இருப்பதை யன்னலிற்கிப்பாலிருந்து பார்க்கையில் ஆனந்தமாகத்தானிருக்கின்றது.
- நன்றி: உயிர் நிழல் ஆகஸ்ட் 2000 -
பதிவுகள், திண்ணை
18. சுண்டெலிகள்! -வ.ந.கிரிதரன் -
"...இந்தப் பிரபஞ்சத்தில் படைக்கப்பட்ட ஒவ்வொரு உயிருமே தனது வாழ்நாளில் இயலுமானமட்டும் முயன்றுதான் பார்க்கின்றது சுண்டெலியைப் போல் ஏன் என்னைப் போல் என்றும் வேண்டுமானால் சொல்லிக் கொள்ளலாம். நாட்டில் பிரச்சினை மூண்டுவிட்டதென்று சொந்த மண்ணைவிட்டு வந்ததிலிருந்து இன்றுவரை எத்தனை வழிகளில் எத்தனை முயற்சிகள். ஒன்று சரி வந்தால் இன்னுமொரு முயற்சி. ஒன்று பிழைத்து விட்டாலும் இன்னுமொரு முயற்சி. எத்தனை அதிசயமான பிரமாண்டமான பிரபஞ்சம். புதிர்கள் நிறைந்த பிரபஞ்சம்..."
கரப்பான் தொல்லையைத் தாங்க முடியவில்லை. எல்லா வழிகளிலும் முயன்று பார்த்தாகி விட்டது. சீனாக்காரனின் 'சாக்' தொடக்கம் முயலாத வழிகளில்லை. வெற்றி கரப்பான் பூச்சிக்குத்தான். பேசாமல் தோல்வியை ஒப்புக்கொண்டு 'அப்பார்ட்மென்ற்' விட்டு 'அப்பார்ட்மென்ற்' மாறினால் கிணறு வெட்டப் பூதம் புறப்பட்ட கதைதான். கரப்பான் பூச்சிகளிற்குப் பதில் சுண்டெலிகளின் தொல்லை. கனடாவில் கட்டடங்கள்தான் உயர்ந்தனவே தவிர எலிகளல்ல. கொழுத்துக் கொழுத்து உருண்டு திரிந்த ஊர் எலிகளைப் பார்த்த எனக்கு இந்தச் சுண்டெலிகள் புதுமையாகத் தெரிந்தன. நாட்டுக்கு நாடு மண்ணிற்கு மண் உயிர்கள் பல்வேறு வடிவங்களில் உருமாறி வாழத்தான் செய்கின்றன.
சுண்டெலிகளின்பால் என் கவனம் திரும்பியதற்கு என் தர்மபத்தினியின் ஓயாத கரைச்சலும் புறுபுறுப்பும் இன்னுமொரு காரணம். குழந்தை வேறு ஆங்காங்கே ஓடித்திரியும் பூச்சிகளையும் சுண்டெலிகளையும் வியப்புத் ததும்பப் பார்ப்பதைக் கண்டதும் என்னவளிற்கு நெஞ்சைக் கலக்கத் தொடங்கி விட்டது. 'இஞ்சாருங்கோ.. உந்த சுண்டெலிகளை அடிச்சுத் துரத்தாட்டி ஒரு நிமிஷங் கூட என்னாலை இங்கேயிருக்கேலாது.. தவளுற குழந்தை இருக்கிற வீட்டிலை..' கனடா வந்து ஆறு மாதங்களிலேயே பலரிற்குத் தமிழ் மறந்து போய்விடுகின்றது. என் மனைவியோ கனடா வந்து ஆறு வருடங்கள் ஓடியும் இன்னும் சுத்தமான யாழ்ப்பாணத் தமிழில்தான் கதைத்து வருகின்றாள். தமிழ் மறந்தவர்களைப் பற்றிக் கூறினால் 'இதெல்லாம் சுத்தப் புலுடா;பம்மாத்து;சுத்துமாத்து' என்பாள். எதை வேண்டுமானாலும் பொறுத்துக் கொள்ளலாம். இவளூடைய நச்சரிப்பையும் பொச்சரிப்பையும் தாங்க மட்டும் என்னால் முடியாது. சுண்டெலிகளிற்கு ஒரு முடிவு கட்டாமல் இவளும் விடமாட்டாள். முடிவாகச் சுண்டெலிகளை ஒரு கை பார்ப்பதற்கு முடிவு செய்தேன்.
சுண்டெலிகளை ஒரு வழிக்குக் கொண்டு வருவதற்கு முதல் படி சுண்டெலிகளைப் பற்றி அறிவது. சுண்டெலிகளின் பழக்க வழக்கங்கள் , நடமாட்டம் பற்றிய தகவல்களைப் பற்றிப் போதுமான தகவல்களை எவ்வளவுக்கு எவ்வளவு அதிகமாகப் பெற முடியுமோ அவ்வளவிற்கு அவ்வளவு அவற்றை அடக்குவதும் இழகுவானதாக அமையக் கூடும். சுண்டெலிகளைப் பற்றி ஆரம்பத்தில் நாம் பெரிதாகக் கவனம் எடுக்கவில்லை. ஆனால் அரிசி, மாப் பைகளைப் பதம் பார்க்கத் தொடங்கிய போதுதான் விழித்துக் கொண்டோம். இப்படியே விட்டல் நிலைமை கட்டுக்கடங்காமல் போகலாம். மனையின் நச்சரிப்பிலும் பொச்சரிப்பிலும் நியாயமிருப்பதை உணரக் கூடியதாகவிருந்தது.
ஓரிரவு என் சகதர்மிணியும் குழந்தையும் படுக்கையில் விழுந்த பிறகு சுண்டெலிகளைப் பற்றி உளவு பார்ப்பதற்கு முடிவு செய்தேன்.புதிதாக வாங்கிய எலிப் பொறிகளை வைப்பதற்குப் பொருத்தமான இடங்களைத் தெரிவு செய்வதற்கு இந்த உளவு நடவடிக்கை உதவக் கூடும். அரிசி, மாப்பைகளைக் கொண்டுவந்து சாப்பாட்டு மேசையில் வைத்து விட்டு வந்து 'சோபா'வில் சாய்ந்தபடி, தொலைக்காட்சிப் பெட்டியைத் தட்டி விட்டேன். சுண்டெலிகளின் வரவை எதிர் பார்த்தபடி, ஆவலும் காவலுமாகக் காத்திருந்தேன். இடையிடையே 'டேவிட் லெட்டர்மா'னின் அறுவைகளையும் ரசித்தபடியிருந்தேன். நேரம் ஓடிக்கொண்டேயிருந்தது. சுவர் மூலையில் மெல்லதொரு சத்தம். காதுகளையும் கண்களையும் கூர்மையாக்கிக் கொண்டேன். சாப்பாட்டு மேசைக்கருகாமையில் போடப்பட்டிருந்த சோபாவின் அருகாகச் சிறியதொரு 'குறுணி' என்போமே அப்படியொரு தலை மெல்ல எட்டிப்பார்த்தது. சிறிய கருமணிக் கண்கள். குட்டி சுளகுக் காதுகள். ஒருகணம் எந்த அசைவையும் காணோம். அந்த நேரம் பார்த்துத்தானஇந்தப் பொல்லாத தும்மல் வந்து தொலைக்க வேண்டும். அடக்க முயன்றும் என்னையும் மீறி வெடித்து விட்டது. சுண்டெலியின் வேகத்தைப் பார்க்க வேண்டுமே! கடுகிப் பறந்தது. மறைந்தது என்று வேண்டுமானால் கூறலாம்.
சிறிது நேர அமைதிக்குப் பின்னர் பழையபடி அதே குட்டித்தலை. கருமணிக் கண்கள்.சுளகுக் காதுகள். இம்முறை வெகு அமைதியாகப் பார்த்துக் கொண்டிருந்தேன். சமையலறைப் பகுதியில் வழக்கமானவிடத்தில் அரிசி, மாப்பைகளைத் தேடிப்பார்த்து விட்டுத்தான் அவற்றின் மணம் பிடித்துச் சாப்பாட்டு மேசைப்பக்கம் வந்து விட்டது போலும். எனக்குள் வினோதமானதொரு ஆசை உருவானது. மேசைக்குக் கதிரைகள் மூலம் ஏறாத வண்ணம் கதிரைகளைச் சற்றுத் தள்ளி ஏற்கனவே இழுத்து வைத்து விட்டிருந்தேன். எப்படி அந்தச் சுண்டெலி மேசையில் ஏற முயல்கிறதோ? இயலுமானவரையில் என் அசைவுகளைக் குறைத்துக் கொண்டு அதன் அசைவுகளையே அவதானித்துக் கொண்டிருந்தேன். சிறு அசைவு கூட அதனை உசார் படுத்தி விடுவதை ஏற்கனவே அவதானித்து விட்டிருந்தேன். சிறிது நேரம் அங்குமிங்குமாக அலைந்துதிரிந்து விட்டு மோப்பம் பிடித்தபடி மேசைக்குக் கீழ் வந்து விட்டது அந்தச் சுண்டெலி. சிறிது நேரம் அமைதியாகச் செவிகளை உசார் நிலையில் வைத்தபடி நின்றிருந்தது. பின்னர் அண்ணாந்து ஒருமுறை பார்த்தது. உணவு இருக்குமிடத்தை ஊகித்து விட்டது போலும். அறையினுள் சிணுங்கிய குழந்தையைத் தட்டிச் சீராட்டியபடி என் இல்லத்தரசி மெல்லப் புரண்டு படுப்பதின் அசைவை என்னால் உணரக் கூடியதாகவிருந்தது.
இந்தப் பிரபஞ்சத்தில் படைக்கப்பட்ட ஒவ்வொரு உயிருமே தனது வாழ்நாளில் இயலுமானமட்டும் முயன்றுதான் பார்க்கின்றது சுண்டெலியைப் போல் ஏன் என்னைப் போல் என்றும் வேண்டுமானால் சொல்லிக் கொள்ளலாம். நாட்டில் பிரச்சினை மூண்டுவிட்டதென்று சொந்த மண்ணைவிட்டு வந்ததிலிருந்து இன்றுவரை எத்தனை வழிகளில் எத்தனை முயற்சிகள். ஒன்று சரி வந்தால் இன்னுமொரு முயற்சி. ஒன்று பிழைத்து விட்டாலும் இன்னுமொரு முயற்சி. எத்தனை அதிசயமான பிரமாண்டமான பிரபஞ்சம். புதிர்கள் நிறைந்த பிரபஞ்சம்.
இந்தச்சுண்டெலி இப்பொழுது மேசையின் வழவழப்பான உருக்குக் காலொன்றில் ஏறுவதற்கு மீண்டும் மீண்டும் முயன்று கொண்டிருந்தது. எப்படியும் மேசையின் மேலிருக்கின்ற உணவைஅடைந்துவிட வேண்டுமென்ற அவா பேரார்வம் அதனிடம் தொனிப்பது போல் தென்பட்டது. ஏறுவதும் விழுவதும், ஏறுவதும் விழுவதும், ஏறுவதும் விழுவதுமாக அந்தச் சுண்டெலி முயன்று கொண்டிருந்தது. சிலவேளை அது தன் முயற்சியில் வெற்றியடையலாம். அடையாமற் போகலாம். அதற்காக அது தன் முயற்சியைக் கைவிடும் வகையைச் சேர்ந்தது போல் தென்படவில்லை. இறுதி வெற்றி கிடைக்கும்வரை அல்லது களைத்துச் சோரும்வரை அது தன் முயற்சியைத் தொடரத்தான் போகின்றது. இந்தச் சின்னஞ்சிறு உயிரிற்குள்தான் எத்தனை நூதனமான வைராக்கியம்! முயற்சி! சுண்டெலிகளிற்கு ஒருவழி காணவேண்டுமென்று என்மனைவி நச்சரித்தது இலேசாக நினைவிற்கு வருகின்றது. எடீ விசரி! நம்மைப்போல்தானே இந்தச் சுண்டெலிக்கும் ஒரு குடும்பம் குழந்தையென்று சொந்த பந்தங்கள். இதை நம்பி எத்தனை உயிர்களோ? 'இது ஒரு எப்பன் சாப்பாட்டைத் தின்னுறதாலை எங்களிற்கென்ன குறையவாப் போகுது..?' நித்திரை கண்களைச் சுழற்றுகின்றது. அந்தச் சுண்டெலிமட்டும் தன் முயற்சியைக் கைவிட்டதாகத் தெரியவில்லை. அரைத் தூக்கத்திலும் அதன் சிறு அசைவுகள் கேட்கத்தான் செய்கின்றன.
நன்றி: தாயகம், திண்ணை, பதிவுகள்.
19 .கட்டடக் கா(கூ)ட்டு முயல்கள் - வ.ந.கிரிதரன்
நீண்ட நாட்களின் பின்னால் நண்பன் இருப்பிடம் சென்றிருந்தேன். ஓங்கி உயர்ந்திருந்த கட்டடக் காட்டு மரமொன்றின் உச்சியில் அமைந்திருந்தது அவனது கூடு. டொராண்டோவின் மத்தியில் அமைந்துள்ள இந்தக் கட்டட மரத்திற்கு ஒரு பெருமையுண்டு. இரண்டு வயது முதிர்ந்த ஆண் தமிழர்களும், ஒரு நடுத்தர வயதுத் தமிழ்ப் பெண்ணும் பல்கணியிலிருந்து பாய்ந்து தமது வாழ்வினை முடித்துக் கொண்ட பெருமை இதற்குண்டு. அண்மைக் காலமாகவே இத்தகைய தற்கொலைகள் இங்கு அதிகரிக்கத் தான் தொடங்கி விட்டிருந்தன. இவ்வளவு வசதிகள் இருந்தும் இவர்கள் ஏனிவ்விதம் தற்கொலை செய்து கொள்கின்றார்களோ?
நண்பன் இன்னுமொரு பிரமச்சாரி. வழக்கமாக ஒவ்வொரு முறை அவனது இருப்பிடம் செல்லும் போதெல்லாம் ஏதாவதொரு மாற்றத்தை அவனது உறைவிடத்தில் அவதானிக்கக் கூடியதாகவிருக்கும். இம்முறையும் அவ்வகையிலொரு மாற்றம். நண்பன் ஒரு கூட்டினுள் இரு முயல்கள் வளர்க்கத் தொடங்கியிருந்தான்.
"என்னவிது புதுப் பழக்கம். எத்தனை நாட்களாக இது.."வென்றேன்.
"இரண்டு மாதங்களாகத் தான்" என்றான்.
"இவற்றை எங்கு போய் பிடித்தாய்?"
"நான் வேலை செய்கிற 'ரெஸ்ட்டோரண்ட்' மானேஜரின் முயல்களிவை?"
"உனக்கு அன்பளிப்பாகத் தந்து விட்டானா?"
"அப்படியொன்றுமில்லை. அவனிற்கு இவை அலுத்துப் போய் விட்டன. கறியாக்குவதற்குத் திட்டமிட்டிருந்தான். நான் காப்பாற்றிக் கொண்டு வந்துவிட்டேன்.. விலை கொடுத்துத் தான்.."
"நல்லதொரு ஜ"வகாருண்யவாதி"
"அப்படியெல்லாம் ஒன்றுமில்லை. பார்க்கப் பாவமாகவிருந்தது. அவ்வளவுதான். வீணான அர்த்தங்களைப் போய்த் தேடாதே"
அப்பொழுதுதான் ஒன்றினை அவதானித்தேன். அந்தச் சிறு முயற் கூட்டினுள் இடையில் ஒரு கார்ட்போர்ட் மட்டையினால் தடுப்புப் போட்டு அம்முயல்களிரண்டினையும் அவன் பிரித்து வைத்திருந்தான். அதிசயமாகவிருந்தது.
"எதற்காக இப்படிச் செய்திருக்கிறாய்? முயல்கள் பாவமில்லையா?" என்றேன்.
"பாவம் தான். ஆனால் அவை செய்கிற அநியாயத்தைப் பார்க்கச் சகிக்கவில்லை. அதனால் தான் அப்படிச் செய்து விட்டேன்."
'என்ன பெரிய அநியாயத்தை அவை செய்திருக்க முடியும்?'
"நீ சொல்வது புரியவில்லையே?" யென்றேன்.
"புரியாமலிருப்பதே நல்லது" என்றான்.
"பார்க்கப் பாவமாயிருக்குதடா" வென்றேன்.
"அப்படித் தானிருக்கும். அந்தத் தடுப்பினை எடுத்து விடுகிறேன் என்று வையேன். மறு நிமிடமே அவை ஒன்றையொன்று தழுவிக் கும்மாளமடிக்கத் தொடங்கி விடும்." என்றான்.
அவை கும்மாளமடித்தால் இவனிற்கென்ன? நண்பனிற்கு இன்னும் திருமணம் ஆகியிருக்கவில்லை. ஒருவேளை முயல்களின் காமக் களியாட்டங்கள் இவனிற்கு வெறுப்பினைத் தருகின்றதோ?
"அவை கும்மாளமடித்தால் நல்லது தானே?"யென்றேன்.
"உனக்கு விசயம் தெரிந்தால் நீயும் நான் செய்வது தான் சரியென்று கூறுவாய்"
"அப்படியென்ன விசயம். சொல்லித் தொலையடா."
"டேய் மச்சான். இவையிரண்டும் ஆண் முயல்களடா"
இப்பொழுது விசயம் முழுவதும் விளங்கியது. நண்பன் ஆண் முயல்களிரண்டினையும் கூட்டினுள் போட்டு அடைத்து வைத்திருக்கின்றான். அவையோ இயற்கையின் தேவையினை இருப்பதைக் கொண்டு பூர்த்தி செய்ய முயற்சி செய்திருக்கின்றன. நண்பன் பிரித்து வைத்து விட்டான். எப்பொழுதோ வாசித்திருந்த 'டெஸ்ட்மண்ட் மொரிஸ்'இன் நூலொன்றில் நகரத்து மனிதரைப் பற்றி வாசித்தது நினைவிற்கு வந்தது. கூட்டில் அடைத்து வைக்கப் பட்ட மிருகங்கள் எவ்விதம் இயற்கைக்கு மாறாகத் தமது நடத்தைகளை மாற்றிக் கொள்கின்றனவோ அவ்விதமே காங்கிரீட் கூடுகளிற்குள் அடைத்து வைக்கப் பட்டுள்ள நகரத்து மனிதரும் தமது நடத்தைகளை மாற்றிக் கொள்கின்றனர் என்று வாசித்ததாக ஞாபகம். கூட்டினுள் இருந்த முயல்களைப் பார்த்தேன். பரிதாபத்திற்குரிய ஜ"வன்கள். அவையிரண்டும் ஒன்றையொன்று பார்ப்பதும் தடுப்பினைச் சுரண்டுவதுமாகவிருந்தன.
"நீ வேண்டுமானால் ஒன்று செய்திருக்கலாம்"
"என்ன?" நண்பன் என்னை நோக்கினான்.
"பேசாமல் உன்னுடைய 'ரெஸ்ட்டோரண்ட்' மானேஜரையே இவற்றைக் கறியாக்க விட்டிருக்கலாம். இல்லையென்றால் 'ஹியூமேன் சொசைட்டி'யிடம் கொண்டு போய் விட்டிருக்கலாம். பார்க்கச் சகிக்கவில்லை"யென்றேன்.
"நீ சொல்வதும் ஒரு விதத்தில், சரிதான். ஆனால் அவற்றின் மீதான பாசம் என்னைக் கட்டிப் போட்டு விட்டன."
"உன்னுடைய பாசத்திற்காக அவற்றை வருத்துவதிலென்ன நியாயம்?"
நண்பன் மெளனமாகவிருந்தான்.
"குறைந்தது நாள் முழுக்க அசையக் கூட முடியாதவாறுள்ள இடத்தில் இவற்றை இப்படியே வைத்திருக்காமல் பேசாமல் திறந்து விட்டு விடு. அப்பாற்மெண்ட்டிற்குள்ளாவது அவை ஓடித் திரியலாமல்லவா?"
"நீ சொல்லுவதும் சரிதான்" என்றான்.
நீண்ட நேரமாக நண்பனுடன் உரையாடி, நண்பன் தயாரித்துத் தந்த உணவினையும் உண்டு விட்டு எனது இருப்பிடம் திரும்பிய போது நேரம் நள்ளிரவைத் தாண்டி விட்டிருந்தது. "இவ்வளவு நேரமாக என்ன செய்து கொண்டிருந்தீர்கள். கொஞ்சமாவது குடும்பம் பிள்ளைகளென்று கவனமேதாவதுண்டா? பொறுப்பென்பது உங்களிற்குக் கொஞ்சம் கூட இல்லை" இவ்விதம் எனது சகதர்மிணியிடம் திட்டு வாங்கிக் கொண்டு படுக்கையில் சாய்ந்த போது தொலைபேசி அலறியது.
'இந்த நேரத்தில் யாராகவிருக்கும்'
அழைத்தது நண்பன் தான்.
"என்னடா மச்சான். இந்த நேரத்திலை"
"நீ சொன்னமாதிரியே கூட்டைத் திறந்து விட்டேன்."
"நல்ல விசயமொன்று செய்திருக்கிறாய்"
"ஆனால்...முயல்களிரண்டும் பல்கணியிலிருந்து பாய்ந்து விட்டன மச்சான்."
நண்பனின் குரலில் ஒருவித விம்மலுடன் கூடிய கவலை தொனித்தது.
நன்றி: திண்ணை, பதிவுகள்.
20. சிறுகதை: ஆசிரியரும் மாணவனும்! வ.ந.கிரிதரன்
யன்னலினூடு தெரிந்த அதிகாலை வானத்தைப் பார்த்தார் சுப்ரமணியம் மாஸ்ட்டர். மெல்லிய இருட்போர்வையின் அரவணைப்பில் சுகம் கண்டுகொண்டிருந்த பூமிப் பெண்ணிற்கு உறக்கத்தை விட்டெழுவதற்கு இன்னும் மனம் வராமல் அப்படியே படுக்கையில் புரண்டு படுத்துக் கொண்டிருப்பது போல் பட்டது. விடிவெள்ளி பிரகாசத்துடன் விடிவை கட்டியம் கூறி வரவேற்றுக் கொண்டிருந்தது. ஊரில் இருந்த மட்டும் அவரிற்கு மிகவும் பிடித்தமானவை அதிகாலையில் எழுந்து கல்லுண்டாய் வெளியினூடாக நடந்து வருவதும், விடிவெள்ளியின் அழகில் மெய் மறப்பதும் தான்."மாஸ்ட்டர், மாஸ்ட்டர்" என்று எவ்வளவு பெரிய பெருமை அவரிற்கு."படிப்பிற்கு மாஸ்ட்டரின் பிள்ளைகளைக் கேட்டுத்தான்" என்று கதைப்பார்கள்.'வர மாட்டேன், வர மாட்டேன்' என்றிருந்தவரை மகன் தான் வற்புறுத்தி கனடா வரவழைத்திருந்தான். வந்து ஒரு வருடத்திற்குள்ளேயே அவரிற்கு வாழ்க்கை போதும் போதுமென்றாகி விட்டது. நான்கு சுவர்களிற்குள்ளேயே வாழக்கை அதிகமாகக் கழிகின்றது. இயற்கையை இரசித்து ஆனந்தமாகப் பறந்து கொண்டிருந்த பறவையைப் பிடித்துக் கூட்டினுள் அடைத்து வைத்தால் எப்படியிருக்குமோ அப்படியிருந்தது அவர் நிலை.
ஊரில் நிலவிய அந்த சமூக வாழ்வியற் தொடர்புகள் இங்கு அற்றுத் தான் போய் விட்டன. அங்கு...பொழுது விடிவதிலும் ஒரு அழகு. பொழுது சாய்வதிலும் ஒரு அழகு.இரவெல்லாம் நட்சத்திரப் படுதாவாகக் காட்சியளிக்கும் விண்ணைப் பார்ப்பதிலுள்ள இன்பத்தைப் போன்றதொரு இன்பமுண்டோ? மின்மினிப் பூச்சிகளும் இரவுக்கால நத்துக்களின் விட்டு விட்டுக் கேட்கும் ஓசைகளும் இன்னும் காதில் கேட்கின்றன. மழை பெய்வதென்றால் சுப்ரமணிய வாத்தியாரிற்கு மிகவும் பிடித்ததொரு நிகழ்வு. 'திக்குகள் எட்டும் சிதறி தக்கத் தீம்தரிகிட தோம்' போடுமந்த மழையிருக்கிறதே...'வெட்டியிடிக்கும் மின்னலும்' 'கொட்டியிடிக்கும் மேகமும்' 'விண்ணைக் குடையும் காற்றும்'...வானமே கரை புரண்டு பெய்யும் அந்த மழையின் அழகே தனி அழகு. இங்கு பொழுது புலர்வதும் தெரிவதில்லை. பொழுது சாய்வதும் தெரிவதில்லை. மழை பெய்வதும் இன்பத்தினைத் தருவதில்லை. மூளியாகக் காட்சியளிக்கும் நகரத்து இரவு வானம் இழந்து விட்ட இனபத்தினை நினைவு படுத்தி சோகிக்க வைக்கும். நாள் முழுக்க நாலு பேருடன் கதைத்துக் கொண்டிருந்தவரிற்கு கனடா வாழ்க்கை நாலு
சுவரிற்குள் நரகமாக விளங்கியது. எந்த நேரமும் பம்பரமாகச் சுழன்று கொண்டிருந்தவரிற்கு ஓய்ந்து கிடப்பது கொடிதாகவிருந்தது. 'திக்குத் தெரியாத கட்டடக் காட்டினுள்' வந்து சிக்கி விட்டோமோவென்று பட்டது. அதே சமயம் மகனை நினைத்தாலும் கவலையாகத் தானிருந்தது.
மகன் ஊரில் ஒரு பொறியியலாளனாகக் கடமையாற்றியவன். இங்கோ ஒரு தொழிற்சாலையில் தொழிலாளியாக வேலை பார்க்கின்றான். இங்கு வரும் குடிவரவாளர்கள் பலரும் இப்படித்தான் தமது படிப்பிற்குச் சம்பந்தா சம்பந்தமில்லாத வேலைகளைச் செய்து கொண்டு காலத்தினை ஓட்டிக் கொண்டிருக்கின்றார்கள். மூன்றாம் உலகத்தைச் சேர்ந்த புத்தியீவிகள் பலர் டாக்ஸி ஓட்டுவதோ, 'பிட்சா' 'டெலிவரி' செய்வதோ அல்லது உணவகங்களில் கோப்பை கழுவதோ அப்படியொன்றும் புதிதானதொன்றல்ல. இவ்விதம் அந்தந்த நாடுகளிற்கு உரமாக விளங்க வேண்டிய அந்நாடுகளின் மூளை வளங்களெல்லாம் இங்கே வீணாகிக் கொண்டிருக்கின்றன.அந்த நாள் ஞாபகங்கள் நிழலாடுகின்றன. எவ்வளவு தூரம் சிரமப் பட்டு மகன் படித்துப் பட்டம் வாங்கியிருந்தான்.பல்கலைக் கழகப் புகு முக வகுப்பில் மகன் அதி விசேட சித்திகள் பெற்ற போது ஊரே எவ்விதம் பெருமைப் பட்டுக் கொண்டது. இப்பொழுது நினைக்கும் பொழுது கூடப் பெருமிதமாகவிருந்தது. மனைவி பார்வதி எவ்வளவு தூரம் சந்தோசப் பட்டாள். மனைவியை நினைத்ததும் மாஸ்ட்டரின் கண்கள் இலேசாகப் பனிக்கத் தான் செய்கின்றன.'மகராசி இருந்து இதையெல்லாம் பார்க்காமல் நேரத்தோடு போய்ச் சேர்ந்திட்டா'. ஊரில் மட்டும் பிரச்னையேதுமில்லையென்றால் எவ்வளவு நல்லாயிருக்கும்....ஆனந்தமாக வயலை, வெளியை, விண்ணைக், காற்றை இரசித்தபடி ...'ம்..அதற்கெல்லாம் கொடுத்து வைத்திருக்க வேண்டும்..'
மகனும் மருமகளும் நேரத்துடனேயே வேலைக்குப் போய் விட்டார்கள். மகன் பகல் வேலை முடிந்து அப்படியே இன்னுமோரிடத்தில் பகுதி நேரமாகச் செய்யும் 'பாதுகாவலன்' வேலை செய்து முடிந்து வீடு வர இரவு பத்தாகி விடும். மருமகளும் அப்படித்தான். பகலில் ஒரு வங்கியொன்றில் 'டேட்டா என்றி ஒபரேட்ட'ராகக் கடமையாற்றுகின்றாள். மாலை நேரங்களில் புத்தகக் கடையொன்றில் பகுதி நேரக் காசாளராகக் கடமையாற்றுகின்றாள். பெரும்பாலும் வார இறுதி நாட்களில் தான் சமையலெல்லாம். ஒரு வாரத்திற்குத் தேவையான உணவு வகைகளைத் தயார் செய்து 'ப்ரிட்ஜ்'ஜில் வைத்து விடுவார்கள். தேவையான போது எடுத்தி 'மைக்ரோவேவ்'இல் சூடு காட்டிச் சாப்பிட வேண்டியதுதான். அவ்வப்போது வேலை முடிந்து வரும் போது தமிழ் உணவகங்களிலிருந்து இடியப்பம் வாங்கி வருவார்கள். அவரிற்கு வந்த புதிதில் ஏன் இவர்கள் இப்படி உடம்பை வருத்தி உழைக்கிறார்கலென்பது விளங்கவில்லை. பிறகு தான் விளங்கியது. வீடு அவர்களிற்குத் தான் சொந்தம். ஆனால் அதற்கு 'மோட்கேஜ்' மாதாமாதம் கட்ட வேண்டும். அது தவிர வீட்டு வரி, 'யுடிலிட்டி' பில் அது இதென்று பல வகையான செலவுகள். ஈடு கட்டத்தான் இவ்வளவு உழைப்பும் களைப்பும். தேவைதானாவென்று பட்டது....வீடு வாங்குவதென்பது இங்கு பலரிற்குத் தன்மானப் பிரச்னையாகி விட்டது. தங்களால் மாதாமாதம் 'மோட்கேஜ்; ஒழுங்காகக் கட்ட முடியுமாவென்றெல்லாம் பார்ப்பதில்லை. போட்டி போட்டு வீடு வாங்குவதும், வாங்கிய வீட்டிற்கு 'மோட்கேஜ்' கட்டுவதற்காக மாய்ந்து மாய்ந்து உழைத்து ஒடாகிப் போவதுமே வாழ்க்கையாகிப் போயிற்றோ என்று பட்டது.
சுப்ரமணியம் மாஸ்ட்டர் டொராண்டோ வந்து ஒரு வருடமாகி விட்டது. இங்கு நேரம் விரைவாகச் செல்வதாகப் பட்டது.அவர்களிருந்த பகுதியில் அதிகமாகச் சீனர்களே இருந்தார்கள். சீனர்களைப் பொறுத்த வரையில் முதியவர்கள் கூட வாழ்க்கையைச் சந்தோசமாகக் கழிப்பதாகப் பட்டது. அதிகாலைகளில் அருகிலிருந்த பூங்காவில் பல சீன முதியவர்கள் ஆண்களும் பெண்களுமாக தேகப்பயிற்சி செய்து கொண்டிருப்பதை இவர் அவதானித்திருக்கின்றார்.பார்ப்பதற்கு 'பாலே' நடனமாடுவதைப் போன்றிருக்கும். அடுத்த வீட்டுக்கார முதியவரான டோனி பொங் சில வேளைகளில் இவருடன் கதைப்பதுண்டு. அப்பொழுதெல்லாம் இவரையும் அதிகாலையில் தேகப் பயிற்சி செய்ய அழைத்திருக்கின்றார். இவரிற்கு வெட்கமாகவிருக்கும். மறுத்து விடுவார். அதே சமயம் பெரும்பாலும் வீட்டிற்குள்ளேயே அடைந்து கிடப்பதும் கஷ்ட்டமாகவிருந்தது.'போர'டித்தது. ஏதாவது பிரயோசனமாகச் செய்தாலென்னவென்றும் பட்டது.அண்மைக் காலமாகவே அவரிற்கு இந்த யோசனை பலமாகவே ஆட்கொள்ளத் தொடங்கியிருந்தது. ஏதாவது தொழிற்சாலையொன்றில் வேலை தேடிப் பார்த்தாலென்னவென்று பட்டது. மகனிற்குத் தெரிந்தால் விட மாட்டான். துடித்துப் போய் விடுவான். வேலை செய்தால் அவரும் தன்னால் முடிந்த உதவி செய்யலாமேயென்றும் தோன்றியது. மகனும் மருமகளும் சுமக்கும் பாரத்தில் சிறிதளவாவது அவரும் சுமக்கலாமே.
இன்று எப்படியும் வேலை தேடிப் பார்க்க வேண்டுமென்று முடிவு செய்தவராகப் படுக்கையை விட்டெழுந்தார் சுப்ரமணியம் மாஸ்ட்டர். காலைக் கடன்களை முடித்து புறப்பட்ட பொழுது மணி பத்தை நெருங்கி விட்டது. அவர்களிருந்த பகுதிக்கண்மையிலேயே தொழிற்சாலைகளடங்கிய பகுதியொன்றிருந்தது. அப்பகுதியில் பல தொழிற்சாலைகளிருந்தன. ஒவ்வொரு தொழிற்சாலையாகச் சென்று விண்ணப்பித்துப் பார்க்க முடிவு செய்தார். என்ன வேலையென்றாலும் செய்து பார்ப்பதாக முடிவு செய்தார். அவ்வாறு செய்வதன் மூலம் நாட்களைப் பிரயோசனமாகவும் அதே சமயம் நான்கு சுவர்களிற்குள் வளைய வரும் தனிமையிலிருந்து விடுதலை பெற்றதாகவும் கழிக்க முடியும். நினைவே அவரிற்கு ஒரு வித மகிழ்ச்சியினையும் தென்பினையுமூட்டின.வேலையொன்று எடுத்த பின் தான் மகனிடம் கூற வேண்டும். ஆரம்பத்தில் அவன் எதிர்க்கத்தான் செய்வான். ஆனால் அதன் பின் அவனை எப்படியும் சம்மதிக்க வைக்கலாமென்றும் பட்டது.
நகர் காலைக்குரிய பரபரப்பில் மூழ்கி விட்டிருந்தது. பல வேறு பட்ட மனிதர்கள்..பல்வேறு பட்ட பண்பாடுகளின் சங்கமமாக விளங்கியது டொராண்டோ நகரம். ஒரு சில மொழிகளேயுள்ள நாடுகளே பல்வேறு பட்ட பிரிவுகளால் இரத்தக் களரிகளாகக் காட்சியளிக்கும் போது இது எவ்விதம் சாத்தியமாயிற்று? வியப்பாகவிருந்தது. இங்கும் பல்வேறு பட்ட பிரிவுகள் இருக்கத் தான் செய்கின்றன. ஆனால் அதற்காக ஆளையாள் வெட்டிச் சாய்த்து இரத்த ஆறுகள் ஓடவில்லையே? நிறவெறி இன்னும் அடியோடு அழிந்து விடவில்லை தான். ஆனால் அதனை எதிர்த்துப் போராடக் கூடிய வசதியிருக்கிறதே....இவர்களது சமுதாயம் சிறிது முன்னேறி விட்டது போல் பட்டது. ஆனால் பொதுவாக இந்த மேற்கு நாட்டுச் சமுதாயங்கள் தத்தமது நலன்களிற்காக எதுவும் செய்யத் தயங்காதவர்களென்பதும் உண்மைதான்...
நடந்து கொண்டிருந்தவர் தொழிற்சாலைகள் அடங்கிய பகுதிக்கு வந்து வந்து விட்டிருந்ததை உணர்ந்தார். முதலாவது தொழிற்சாலைக்குச் சென்று விண்ணப்பிக்கலாமாவென்று நினைத்தார். அவரிற்குச் சிறிது தயக்கமாகவும் வெட்கமாகவுமிருந்தது. அவ்விதமே சில தொழிற்சாலைகளைத் தாண்டி நடந்தார்.இவ்விதமாக மனது போராடிக்கொண்டிருந்தது. வேலை செய்யவும் விருப்பமாகவிருந்தது. என்ன வேலையென்றாலும் செய்யத் தயாராகவுமிருந்தார்.அதே சமயம் அவ்விதம் சிறிய வேலைகளிற்கு விண்ணப்பிக்க மனது கூசவும் செய்தது. ஆசிரியராகவிருந்து பல பொறியியலாளர்களையும் மருத்துவர்களையும் உருவாக்கிய பெருமைக்குரிய சுப்ரமணிய மாஸ்ட்டரல்லவா! வயது போன் நேரத்தில் சந்தோஷமாகப் பேரக் குழந்தைகளுடன் கொஞ்சி மகிழ வேண்டிய சமயத்தில் இவ்விதம் அன்னிய நாடொன்றில் தொழிற்சாலை தொழிற்சாலையாக வேலை தேடிச் செல்ல வேண்டுமேயென்று மனம் கூசுகின்றதோ? சிறு வயதில் படித்த கதையொன்று ஞாபகத்திற்கு வந்தது. 'சாகப் போனவன் வழியிலெதிர்பட்ட பாம்பைக் கண்டு பயந்த கதை மாதிரியல்லவாயிருக்கிறது' என்று எண்ணியபோது சிரிப்பு வந்தது. எந்த வேலையும் செய்யத் துணிந்து புறப்பட்ட பிறகு இப்படித் தயங்கலாமா? வெட்கப் படலாமா?
"யாரது... மாஸ்ட்டரா..."
குரல் கேட்கவே எதிரே நோக்குகின்றார். தமிழ்க் குரல்...யாராகவிருக்கும்? ஆச்சர்யமாகவிருக்கின்றது..
"யாரது..." கண்களைச் சுருக்கியவராக எதிரே பார்க்கின்றார் சுப்ரமணிய மாஸ்ட்டர். வர வர இப்பொழுதெல்லாம் கண் வேறு அவ்வளவாகத் தெரிவதில்லை. டாக்டரிடம் காட்டத்தான் வேண்டும்...
"நான் தான் மாஸ்ட்டர்...ரகுநாதன்....ஞாபகமிருக்குதோ.."
"ரகுநாதன்....ம்.." சிந்தனையில் மூழ்கினார்.
"கார்க்காரச் சண்முகத்தின்ற மகன் ரகுநாதன்..."
"ஓ சண்முகத்தின்ற மோனே"
இப்பொழுது அவரிற்கு நினைவிற்கு வருகின்றது. கார்க்காரச் சண்முகத்தின் மகன் ரகுநாதன். இவரது அபிமானத்திற்குரிய மாணவன். சண்முகம் குடியும் அடியுமென்று காலத்தைக் ஓட்டிக் கொண்டிருந்தான். குடும்பச் சூழல் காரணமாக அவனது மகன் ரகுநாதனால் மேலே படிக்க முடியாமலிருந்தது. படிப்பை நிறுதத இருந்தவனை மாஸ்ட்டர்தான் தன் செலவிலேயே படிக்க வைத்தார். நல்லதொரு திறமைசாலியின் திறமை வீணாகக் கூடாதென்று விரும்பினார். ரகுநாதன் படிப்பில் எப்பொழுதுமே முதல் தான். அதன் பின் அவன் பல்கலைக் கழகம் சென்று பொறியியலாளனாகத் திரும்பி திரும்பியபோது அவர் எவ்வளவு தூரம் பெருமைப் பட்டார். அந்த ரகுநாதனா இவன்?
நாடிருந்த நிலையில் நீண்ட காலம் அவனுடன் தொடர்பேதுமிருக்கவில்லை. கடைசியாக அவன் மகாவலித் திட்டத்தில் பொறியியலாளனாக வேலை பார்த்துக் கொண்டிருந்தது நினைவிற்கு வந்தது. அவன் ஊரிற்கு வரும் சமயங்களிலெல்லாம் மாஸ்ட்டரிற்கேதாவது வாங்கி வருவான். இப்பொழுது நினைத்தாலும் எவ்வளவு பெருமையாகவிருக்கிறது.. 'அது சரி இவன் எப்பொழுது கனடா வந்தான்?'
"மாஸ்ட்டர் எப்ப நீங்கள் கனடா வந்தனீங்கள்? "
"நான் வந்து ஒரு வருஷமாச்சு. நீயெப்ப வந்தனீ ரகுநாதா"
"மாஸ்ட்டர் நான் வந்து கிட்டத்தட்ட இரண்டு வருசமாவதிருக்கும்..என்ன இந்தப் பக்கம்...மாஸ்ட்டர்.."
மாஸ்ட்டரிற்குத் திகைப்பாகவிருந்தது. இவனிடம் போய் எப்படிச் சொல்வது? மாஸ்டர் மாஸ்டரென்று வாய்க்கு வாய் அழைத்து எவ்விதம் இவன் பெருமைப் படுகின்றான். மேலே படிக்க முடியாமல் அவனிருந்த பொழுது எவ்வளவு தூரம் புத்திமதிகள் கூறி அவனை உற்சாகப் படுத்திருத்தியிருப்பார்? எத்தனையோ வெற்றிகரமான மாணவர்களை அவர் உருவாக்கியிருக்கிறார் அவர். எத்தனையோ மாணவர்களின் இலட்சிய ஆசிரியர் அவர்.அவனிடம் போய்த் தான் தொழிற்சாலை வேலை தேடுவதை எவ்விதம் கூறுவது? அவனது மனம் வருந்தி விடாதா?
"அதோ பார்.. அந்தப் பக்கத்திலை தான் மகனின்ற வீடிருக்கு.. மகனோடைதான் இருக்கிறன்.. . எந்த நேரமும் வீட்டிலை அடைந்து கிடந்தாலும் அலுத்து விடும்...அதுதான் சும்மா காலாற நடக்கலாமேயென்றுதான். நடந்தாலென்றாலாவது உடம்பிற்கு நல்லதாகயிருக்கும் தானே."
"அதுவும் சரிதான் மாஸ்ட்டர்.. நீங்கள் இப்பவும் அப்ப மாதிரியே 'பாசிட்டிவ்'வாகத் தான் இருக்கிறீங்கள். மாஸ்ட்டர் நீங்கள் கட்டாயம் ஒரு நாளைக்கு எங்களுடைய வீட்டிற்கு வர வேண்டும். நான் ஸ்காபரோவிலையிருக்கிறன்..."
"கட்டாயம் வருவேன். போன் நம்பர் தாறன். ஒரு நாளைக்கு 'கோல்' பண்ணேன். அது சரி நீயென்ன இந்தப் பக்கம்.."
"மாஸ்ட்டர். என்னுடைய நண்பனொருவன் அண்மையில் தானிருக்கிறான். அவனைச் சந்திப்பதற்காகத் தான் வந்தனான். வந்த வழியிலை கடவுள் அருளாலை உங்களையும் சந்திக்க முடிந்தது.. கன நாளைக்குப் பிறகு சந்தித்திருக்கிறம்... வாங்கோவென் மாஸ்ட்டர் 'கோப்பி' குடித்துக் கொண்டே கதைப்போம்..."
அருகிலிருந்த 'டிம் கோர்ட்டன் டோனட்' கடைக்குச் சென்றார்கள். ஊரில் மூலைக்கு மூலை தேநீர்க் கடைகளிருப்பது போல் இங்கு இந்த 'டோனட்' கடைகள். அங்கு தேநீர் அருந்தியபடியே வடை சாப்பிடுவது போல் இங்கு தேநீர் அல்லது கோப்பி அருந்தியபடியே 'டோண்ட்' கடிக்கலாம். மாஸ்ட்டரிற்கு நீண்ட நாட்களின் பின்னால் சந்தோஷமாகவிருந்தது. அவரால் உருவாக்கப் பட்ட பல மாணவர்களில் முதன்மையானவன் இந்த ரகுநாதன். இவனது வளர்ச்சியில் அவர் பெரிதும் பங்கெடுத்திருந்தார். அவன் பொறியியலாளனாக வெளி வந்த போது ஊரே திரண்டு அவனை வரவேற்றதோடு அதற்குக் காரணமான அவரையும் கெளரவித்தது. இப்பொழுது நினைக்கும் போது கூட எவ்வளவு மகிழ்ச்சியாகவிருக்கிறது.
வேலை தேடும் படலத்தை அத்துடன் நிறுத்தி விட்டு 'இன்னொரு நாள் பார்க்கலாமே'யென்று வீடு திரும்பினார். மாஸ்ட்டரின் மனது மகிழ்ச்சியில் மிதந்தது. ரகுநாதனையெண்ணப் பெருமையாகவிருந்தது. அதே சமயம் வீடு நோக்கிச் சென்று கொண்டிருந்த ரகுநாதனோ வேறு வகையான எண்ணங்களில் மூழ்கிக் கிடந்தான். அப்பகுதியிலிருந்த தொழிற்சாலையொன்றில் தான் அவன் தொழிற்சாலையைக் கூட்டிக் கழுவும் ஒரு தொழிலாளியாக வேலை பார்க்கின்றான். அவன் பொறியியலாளனாக வருவதற்காக எவ்வளவு உதவிகளை மாஸ்ட்டர் செய்திருப்பார்? அவன் படிக்க முடியாது பாதியிலேயே படிப்பை நிறுத்த எண்ணியிருந்த சமயத்தில் அவர் எவ்வளவு தூரம் அவனிற்குக் கல்வியின் பயன்களைக் கூறி ஊக்குவித்திருப்பார். பொறியியலாளனாக அவனைப் பார்த்து ஆனந்தப் பட்ட மாஸ்ட்டர் இவ்விதம் இவன் வேலை பார்ப்பதை அறிந்தால் எவ்வளவு வேதனைப் படுவார்? யுத்தம் எவ்வளவு கொடியதாக இருந்து விடுகிறது. மனித உறவுகளை எவ்விதம் சின்னபின்னப் படுத்தி விட்டது. இவ்விதமாக எண்ண அலைகளில் மூழ்கியவனாக ரகுநாதன் சென்று கொண்டிருந்தான். அதே சமயம் நீண்ட நாட்களின் பின்னால் சந்தித்திருந்த ஆசிரியருடனான சந்திப்பும் அந்த மாணவனின் நெஞ்சில் இன்ப அலைகளை எழுப்பாமலுமில்லை.
நன்றி: பதிவுகள், திண்ணை. யாழ் இந்துக்கல்லூரி (கனடா) கலையரசி மலர்
21. உடைந்த மனிதனும் 'உடைந்த காலும்' - வ.ந.கிரிதரன் -
அதிகம் நடமாட்டமில்லாமலிருந்தது அந்த 'பார்'. வியாழன் வெள்ளியென்றால் களை கட்டி விடும். திங்களென்றபடியால் அமைதியில் மூழ்கிக் கிடந்தது. ஓரிருவர்களேயிருந்தார்கள். 'சிக்கன் விங்ஸ்'உம் 'பட்வைசர்' பியரையும் கொண்டுவரும்படி 'வெயிட்டரிடம்' கூறிவிட்டுச் சிந்தனையில் மூழ்கிக் கிடந்தேன். நினைவெல்லாம் வசுந்தராவே வந்து வந்து சிரித்துக் கொண்டிருந்தாள். என் பால்ய காலத்திலிருந்து என் உயிருடன் ஒன்றாகக் கலந்து தொடர்ந்திருந்த பந்தம். இருபது வருடத் தீவிரக் காதல். எனக்குத் தெரிந்த முகவன் ஒருவன் மூலம் அண்மையில் தான் கனடா அழைத்திருந்தேன். அவ்விதம் அழைத்ததற்காகத் தற்போது கவலைப் பட்டேன். அவளது வாழ்க்கையை மட்டுமல்ல என் வாழ்க்கையையுமே சீரழித்து விட்டேனா? இவ்வளவு நாள் பொறுத்திருந்தவன் இன்னும் சில வருடங்கள் பொறுத்திருக்கக் கூடாதா? எனக்குக் கனடா நாட்டு நிரந்தரக் குடியுரிமை கிடைத்ததும் முறையாக அவளை அழைத்திருக்கலாமே. ஒரு விதத்தில் அவளுக்கேற்பட்ட இந்த நிலைக்கு நானும் ஒருவிதத்தில் காரணமாக இருந்து விட்டேனே. இது போன்ற பல சம்பவங்களைப் பற்றி ஏற்கனவே அறிந்திருந்தேன். ஆனால் எனக்கு இவ்விதம் ஏற்படுமென்று நான் கனவிலும் நினைத்திருக்கவில்லையே.
அந்த முகவன் திருமணமானவன். பார்த்தால் மரியாதை வரும்படியான தோற்றம். அதனை நம்பி ஏமாந்து விட்டேன். வசுந்தராவின் பயணத்தில் வழியில் சிங்கப்பூரில் மட்டும் தான் ஒரு தரிப்பிடம். தனது மனைவியென்று அவளை அவன் அழைத்து வருவதாகத் திட்டம். பொதுவாக இவ்விதம் பெண்களை அழைத்து வரும் சில முகவர்கள் சூழலைப் பயன்படுத்தி, ஒன்றாகத் தங்கும் விடுதிகளில் வைத்துப் பல பெண்களைப் பாலியல் பலாத்காரம் செய்திருப்பதாகக் கதைகள் பல கேள்விப்பட்டிருக்கின்றேன். ஆனால் எனக்கே இவ்விதமேற்படுமென்று நான் நினைத்துப் பார்த்தேயிருக்கவில்லை. கனடா வந்ததும் வசுந்தரா கூறியதும் என்னால் நம்பவே முடியவில்லை. இவர்கள் இருவரும் ஒன்றாகத் தங்கியிருந்திருக்கின்றார்கள். அருந்தும் பாணத்தில் அவன் போதை மருந்தொன்றினைக் கலந்து கொடுத்து இவள் மேல் பாலியல் வல்லுறவு வைத்திருக்கின்றான். மறுநாள் தான் இவளுக்கே தெரிந்திருக்கின்றது. அது மட்டுமல்ல. இவள் விரும்பினால் இவளைத் தொடர்ந்து 'வைத்திருப்பதாக'க் கூடக் கூறியிருக்கின்றான். இவன் இது போல் ஏற்கனவே வேறு சில பெண்களுடனும் இவ்விதம் நடந்திருக்கின்றான். அவர்களிலொருத்தி இங்கு புகார் செய்து தற்போது சிறையிலிருக்கின்றான்.
இப்போது என் முன் உள்ள பிரச்சினை......வசுந்தராவை ஏற்பதா இல்லையா என்பது தான். ஐந்து வயதிலிருந்தே இவளை எனக்குத் தெரியும். ஒன்றாகப் பாடசாலை சென்று, படித்து, வளர்ந்து உறவாடியவர்கள். இவளில்லாமல் என்னாலொரு வாழ்வையே நினைத்துப் பார்க்க முடியாது. ஆனால்...இவளது இன்றைய நிலை என் மனதில் ஒரு தடுமாற்றத்தை ஏற்படுத்தி விட்டதென்னவோ உண்மைதான். தத்துவம் வேறு நடைமுறை என்பதை உணர வைத்தது இவளுக்கேற்பட்ட இந்தச் சம்பவம். பார்க்கப் போனால் தவறு இவளுடையதல்லவே. ஒரு விதத்தில் நானும் காரணமாகவல்லவா இருந்து விட்டேன்....
'நண்பனே. நான் உன் தனிமையைப் பகிர்ந்து கொள்ளலாமா?"
எதிரே கனேடிய பூர்வீக இந்தியணைப் போன்ற தோற்றமுள்ள ஒருவன் நின்றிருந்தான்.
"தாராளமாக நண்பனே!" என்றேன்.
வெயிட்டரிடம் அவனுக்கும் சேர்ந்த்துக் கொண்டு வரும்படி கூறினேன்.
"நன்றி நண்பனே!" என்று அருகில் அமர்ந்தான்.
"என் பெயர் ஜோ உடைந்த கால் ( Joe Brokenleg) ). உன்னைச் சந்தித்ததில் மகிழ்ச்சி நண்பனே. இன்றைய பொழுதை எவ்விதம் கழிப்பேனோ என்றிருந்தேன். நல்லதொரு துணையாக நீ" என்று தனது கைகளை நீட்டினான். வித்தியாசமான பெயர். ஆனால் இவர்களது சமூகத்தில் இது போன்ற பல வித்தியாசமான பெயர்கள் சர்வசாதாரணம்.
"என் பெயர் ஆனந்தன். எனக்கும் உன்னைச் சந்தித்ததில் மகிழ்ச்சிதான் நண்பனே!" என்று அவன் கைகளைப் பற்றிக் குலுக்கினேன்.
ஜோ உடைந்த கால் உண்மையிலேயே வித்தியாசமானவன் தான். அவனுடன் கதைத்த பொழுதுதான் தெரிந்தது அவன் உடைந்த கால் மட்டுமல்ல உடைந்த மனிதன் என்பதும். எல்லாவற்றையும் தன்னுள் போட்டு மூடி வைத்திருக்கின்றானென்பதும்.
"என்னைப் பற்றி என்ன நினைக்கின்றாய்?" என்றான்.
"நீ மிகவும் நல்லவனைப் போல் தென்படுகின்றாய்" என்றேன்.
அதற்கவன் இதழ்களில் புன்னகை கோடு கிழித்தது.
"உண்மைதான். எல்லோரும் அவ்விதம் தான் கூறுகின்றார்கள். ஆனால் எனக்கு நல்லவனாக இருந்து அலுத்து விட்டது. லிசா விண்டகர் கூட அவ்விதம் தான் கூறினாள். ஆனால் எனக்கு நல்லவனாக இருந்து அலுத்தே போய் விட்டது. கெட்டவனாக மாறலாமா என்று கூட யோசிக்கின்றேன்."
எனக்கு அவன் கூறியது வித்தியாசமாகவிருந்தது. இதற்கிடையில் வெயிட்டர் 'சிக்கன் விங்ஸ்'சையும் 'பட்வைசர்'உம் கொண்டு வந்து வைத்தகன்றான். சிக்கனைச் சுவைத்தபடி பியரை அருந்தியபடி உரையாடலைத் தொடர்ந்தோம்.
"நீ ஒரு புதிர் போல் படுகின்றாய். யாரது லிசா விண்டகர். அவள் பெயரைக் கூறும் பொழுதே கனவுலகில் சஞ்சரிக்க ஆரம்பித்து விடுகின்றாயே? உன் காதலியா?" என்றேன். அவளது பெயரைக் கேட்டதுமே அவன் முகத்தில் மகிழ்சி படர்ந்தது.
"நண்பனே. நீ கூறுவது சரிதான். அவள் என் காதலிதான். அவள் இல்லையென்றால் எனக்கு வாழ்வே இல்லை என்று தானிருந்தேன். ஆனால்..."
"ஆனால்..என்ன நண்பனே!:"
அவன் தொடர்ந்தான். "அவள் இப்பொழுது இந்த உலகிலேயே இல்லை. ஆனால் நான் மட்டும் இன்னும் உயிருடன் இருக்கின்றேன்"
அவன் குரலில் கவலையின் தொனி.
"என்னை மன்னித்துக் கொள். தேவையில்லாமல் உன் மனதை வருத்தி விட்டேனோ"
"பரவாயில்லை. அவளைப் பற்றிப் பேசாமல் யாரைப் பற்றிப் பேசப் போகின்றேன். இந்த உலைல் இருக்கும் வரையில் அவளைப் பற்றி நினைத்து, பேசியே என் வாழ்வு போகட்டும். அதனைத் தான் நானும் விரும்புகின்றேன். பாவம். பரிதாபத்திற்குரிய பெண். கடவுள் அவளை நன்கு வருத்தி விட்டார். அவள் ஆன்மா சாந்தியடையட்டும்"
அவனே தொடர்ந்தான். "நண்பனே. அவளுக்காக நான் எதனையுமே கொடுப்பேன். உனக்குத் தெரியாது அவளுக்கும் எனக்கும் இடையிலிருந்த உறவின் ஆழம்"
"உன்னைப் பார்த்தாலே தெரிகிறதே" என்றேன்.
"ஐந்து வயதிலிருந்து நாங்கள் இருவரும் இணை பிரியாத பறவைகள் போல் தான் வாழ்ந்து வந்தோம். அந்தச் சிறுவயதில் அவள் அடைந்த துன்பத்தை நினைத்தால் எனக்கு இப்பொழுதும் குலை நடுங்குகின்றது."
எனக்கு அவனது உரையாடலில் சுவாரசியம் ஏற்பட்டது.
"அவளை அவளது வளர்ப்புத் தந்தை படாதபாடு படுத்தி விட்டான். அந்தச் சிறுவயதில் அவளது பன்னிரண்டாம் வயது வரையில் அவன் அவளைப் பாலியல் பலாத்காரம் செய்து வந்திருக்கின்றான். அவள் வயதின் அறியாமையாலும் பயத்தினாலும் அதனை வெளியில் கூறாமல் பொத்திப் பொத்தி வைத்திருந்தாள். எனக்கே அவள் பன்னிரண்டு வயதான போது தான் கூறினாள். கடவுள் அந்தச் சிறுவயதிலேயே என் லிசாவை மிகவும் கொடுமைப் படுத்தி விட்டார்."
அவனது குரல் உடைந்து கண்களில் நீர் கோர்த்தது.
"அப்பொழுது எனக்குப் பதினான்கு வயது. அவள் அதனை எனக்குக் கூறிய பொழுது என்னால் தாளவே முடியவில்லை. அவளை எவ்விதமாவது அந்தக் கொடியவனிடமிருந்து விடுவிக்க வேண்டுமென்று தீர்மானித்தேன். ஓரிரவு அவன் குடி மயக்கத்தில் படுக்கையில் புரண்டு கிடந்தான். அந்தச் சந்தர்ப்பத்தைப் பாவித்து அவனைக் கத்தியால் குத்திக் கொலை செய்து விட்டேன். இளம் குற்றவாளியென்னும் அடிப்படையிலும் , லிசாவிற்கேற்பட்ட நிலைமையின் அடிப்படையிலும் மூன்று வருடங்கள் சிறைத்தண்டனை கிடைத்தது. லிசா எனக்காகவே காத்திருந்தாள். ஆனால் இன்று அவளில்லை."
அவனது கதை எனக்குப் பெரிதும் ஆச்சர்யத்தையும், வியப்பினையும், மதிப்பினையும் கூடவே அநுதாபத்தினையும் ஏற்படுத்தியது.
தொடர்ந்து நடந்ததை அறியும் ஆவலில் "அவளுக்கு என்ன நடந்தது?" என்றேன்.
"அதன் பிறகு சுமார் பதினைந்து வருடங்களாக நாங்கள் ஒன்றாக இணைபிரியாமல் வாழ்ந்து வந்தோம். கடந்த வருடம் தான் அவளைப் புற்று நோயில்,இழந்தேன். லிசா நன்கு புகை பிடிப்பாள். ஆரம்பத்த்லேயே அவளைப் பலமுறை தடுத்தேன். ஆனால் அவள் கேட்கவில்லை. இறுதியில் அதுவே அவள் உயிரைக் குடித்து விட்டது. இறுதி வரை அவள் நினைவுடனேயே வாழ்ந்து விட வேண்டும். அது தான் என் எண்ணம். நண்பனே! தேவையில்லாமல் என் கதையைக் கூறி உன் நேரத்தை வீணடித்து விட்டேனா? இப்பொழுது சொல். நான் நல்லவனா?" என்றான்.
"அதிலென்ன சந்தேகம். நீ நல்லவன் தான். நிரம்பவும் நல்லவன் தான். உன் காதலிக்காக காதலுக்காக எவ்வளவு பெரிய தியாகம் செய்திருக்கின்றாய். உன்னை நினைக்க எவ்வளவு பெருமையாகவிருக்கிறது"
அன்று நேரங்கழித்து வீடு திரும்பியபொழுது நல்லதொரு நண்பனை அடைந்த திருப்தி. அதே சமயம் ஜோ உடைந்த காலை நினைக்க நினைக்க அவன் மேல் என் மதிப்பு அதிகரித்துக் கொண்டே போனது. பாலியல் வல்லுறவால் பாதிக்கப் பட்டிருந்த தன் லிசாவைக் காப்பதற்காகச் சிறை சென்று, மீண்டு, அவளுடன் வாழ்ந்து இன்று அவள் நினைவுகளே வாழ்வாக வாழ்ந்து கொண்டிருக்கும் அவன் முன்னால் நான் எம்மாத்திரம். சந்தர்ப்ப சூழ்நிலைகளால் பாதிக்கப் பட்ட என் வசுந்தராவை ஏற்பதா இல்லையா என்று மண்டையைப் போட்டு உடைத்துக் கொண்டிருக்கின்றேன்.
நன்றி: திண்ணை, பதிவுகள்.
[ யாழ்ப்பாணத்திலிருந்து வெளிவரும் 'ஜீவநதி' சஞ்சிகையின் கனடாச் சிறப்பிதழில் வெளிவந்த சிறுகதை. புலம்பெயர்ந்த தமிழ்க் குடும்பமொன்றின் வீடு வாங்கிய அனுபவத்தை விபரிக்கும் கதையிது. ]
22. வீட்டைக் கட்டிப்பார்' - வ.ந.கிரிதரன் -
என் பெயர் கனகசபை. நான் ஒரு ஈழத்துத் தமிழ் அகதி. கனடாக் குடிமகன். கறுப்பு ஜூலையைத் தொடர்ந்து அகதியாகக் கனடா வந்து கடந்த இருபது வருடங்களாகக் கன்டாவின் முக்கிய நகரான டொராண்டோவில் மனைவி, குழந்தைகளென்று வசித்து வருகின்றேன். நான் எனது வீடு வாங்கிய அனுபவத்தை உங்களுடன் இப்பொழுது பகிர்ந்து கொள்ளப்போகின்றேன். இதில் நான் உங்களது அபிப்பிராயத்தைக் கேட்கப்போவதில்லை. ஆனால் மனப்பாரத்தை இறக்கி வைத்தால் ஓரளவுக்கு ஆறுதல்தானே. அதுதான் கூறலாமென்று நினைக்கின்றேன். மக்கள் ஊரில் அகதிகளாக அலைகின்றார்கள். சொந்த மண்ணிழந்து வாழ்கின்றார்கள். இந்த நிலையில் 'இவர் பெரிய மசிரு. வீடு வாங்கின கதையினைக் கூற வந்திட்டாராக்குமென்று' நினைக்கிறீர்கள் போலை. இருந்தாலும் என் கதையினைக் கூறாவிட்டால் என் மண்டையே வெடித்துவிடும் போலையிருப்பதால் அதனை உங்களுடன் பகிர்ந்துகொள்கின்றேன். அது தவிர என் அனுபவம் ஒரு சிலருக்குப் படிப்பினையாகவிருக்குமல்லவா? என் வீடு வாங்கிய அனுபவத்தை மட்டும் வைத்து வீடு வாங்குவதுபற்றி ஒரு முடிவுக்கு வந்து விடாதீர்கள். ஒவ்வொருவருக்கும் ஒவ்வொருவிதமான அனுபவம். என் அனுபவம் இது. மேலே படியுங்கள்.
1. அன்று....
செல் போன் 'ரிங்'காரமிட்டது. அழைத்தது இந்திரகுமார். 'ரியல் எஸ்டேட்' முகவராகத் 'டொராண்டோவில்' பணிபுரியும் ஆயிரக்கணக்கானவர்களிலொருவன். சென்றமுறை நண்பன் கந்தரட்னத்தின் இல்லத்தில் சந்தித்திருந்தேன். கந்தரட்னம் என்னுடன்தான் கனடா வந்தவன். இன்று வீடும், வாசலுமென்று பொருளியல்ரீதியில் மிகவும் உச்சநிலையிலிருப்பவன். முதலீடுகள் மூலம் பணத்தைப் பெருக்குவதில் வல்லவன். செல்வத்தின் உச்சநிலையில் இருந்தபோதும் நட்பை இன்னும் மதிப்பவன். இலங்கையில் படித்துக்கொண்டிருந்த காலத்திலிருந்து தொடரும் நட்பு. அவ்வப்போது சந்தித்துக்கொள்வதுண்டு. இயற்கை, அறிவியல், அரசியல், தத்துவம், இறையியலென்று அனைத்து விடயங்களையும் பற்றிக் கதைப்பதில் ஆர்வமுண்டு. வானியல் பற்றியும் மிகவும் ஆர்வமுள்ளவன். அதற்காக இரவுச் சுடர்களைத் தெளிவாகப் பார்க்கும் வகையிலான தொலைக்காட்டியொன்றையும் அண்மையில் வாங்கி வைத்திருந்தான். வானம் தெளிவாக இருக்கும் சமயங்களில் இரவுச்சுடர்களை, தண்நிலவுப் பெண்ணை அத்தொலைகாட்டியினூடு பார்ப்பதுண்டு. அவ்விதமாக ஒருநாள் பார்ப்பதற்காக அவனில்லத்திற்கு வந்தபோதுதான் எனக்கும் இந்திரகுமாருக்குமிடையிலான முதற்சந்திப்பு நடைபெற்றது. அப்பொழுது அவன் என்னைப் பற்றி விசாரிப்பதில் ஆர்வம் காட்டினான்.
"அண்ணை, எங்கை இருக்கிறீங்கள்? 'மார்க்கத்'திலையா"
எதற்கெடுத்தாலும் 'அண்ணை' போட்டுக் கதைப்பது எம்மவர் பலரின் பழக்கம்.
"ஸ்கார்பரோவிலைதான்"
"இன்னும் ஸ்கார்பரோவிலையா?"
இந்திரகுமாரின் குரலில் வியப்பு சிறிது தொனித்தது.
"ஓமோம். அதுதான் குழந்தைகளின்ற் படிப்புக்கெல்லாம் நல்ல வசதி" என்றேன்.
இந்திரகுமார்: "இப்பதானே எங்கடை ஆக்கள் எல்லாரும் ஸ்கார்பரோவிலையிருந்து வீட்டை வித்திட்டு, மார்க்கம் , பிராம்டன், ஏஜக்ஸ் என்று மூவ் பண்ணுகினம். மூவ் பண்ண வேண்டியதுதானே"
இவ்விதம் இந்திரகுமார் கூறுவதை அருகில் நண்பனின் மனைவியுடன் உரையாடிக்கொண்டிருந்த என் தர்மபத்தினி கேட்டுக்கொண்டிருந்தவள் இடையில் புகுந்தாள்: "நல்லாச் சொல்லுங்கள். இவருடைய மண்டையிலை ஏறுகிறமாதிரிச் சொல்லுங்கள். எல்லாரும் வீடு, வாசலென்று இருக்கேக்கை இந்த மனுசனுக்கு இதைப்பற்றி ஒன்றுமே கவலையில்லை. கனடாவுக்கு வந்ததிலை இருந்து இன்னமும் அபார்ட்மென்ட்டுக்குள்ளை வாழ்வேண்டுமென்றிருக்கு"
இந்திரகுமாருக்கு நல்லதொரு பிடி கிடைத்துவிட்டது. உற்சாகமுற்றான். அத்துடன் அந்த உற்சாகம் குரலில் தொனிக்கக் கூறினான்: "அண்ணை, அக்கா சொல்லுறதும் சரிதானே. இன்னமும் அபார்ட்ட்மென்டிலையா இருக்கிறியள். என்னைக் கேட்டால் நீங்கள் வீணாக 'ரென்ட்' கட்டுறியள். கட்டுகிற 'ரென்ட்'டுக்குப் பதிலாக இன்னும் கொஞ்சம் சேர்த்து, இப்ப கிடைக்கிற மோட்கேஜிற்கு ஒரு வீட்டையே வாங்கிப் போட்டிங்களென்றால் விலைக்கு விலை. 'சேவிங்க்'சுக்கு சேவிங்ஸ்."
"அப்படிச் சோல்லுங்கோ. நீங்கள் சொல்லியாவது இந்த மனுசன் கேட்கிறாரா என்று பார்ப்போம்" இது என்னவள்.
அன்றிரவு நண்பனின் வீட்டிலிருந்து வந்ததிலிருந்து ஆரம்பித்த என் மனைவியின் தொணதொணப்பு நின்றபாடில்லை. இந்தச் சமயத்தில்தான் இந்திரகுமாரின் இந்தத் தொலைபேசி அழைப்பு வந்திருக்கிறது.
"அண்ணை, என்ன பிஸியோ"
அன்றைக்கு ஞாயிற்றுக்கிழமை. பெரிதாக வேலையெதுவுமிருக்கவில்லை.
"அப்படியொன்றும் பெரிய பிசி இல்லை. என்ன விசயம்?"
"அண்ணை, எனக்கு ஒரு அரை மணித்தியாலம் காணும். மார்க்கமும், டொராண்டோவும் சந்திக்கிற இடத்திலை, ஸ்கார்பரோவிலை நல்லதொரு வீடு நல்ல விலைக்கு வந்திருக்கு. உங்களுக்குப் பிடிச்சுதென்றால் அமுக்கிப் போடலாம். என்ன சொல்லுறியள்?"
இதற்கிடையில் மோப்பம் பிடித்துக்கொண்டு என் மனைவி வந்துவிட்டாள்: "என்னங்கள், யாரது போனிலை?"
"அன்றைக்குச் சந்தித்தமே அந்த ரியல் எஸ்டேட் ஏஜன்ட்தான்"
இனி இவள் இதற்கொரு முடிவு காணாமல் விடமாட்டாளென்று பட்டது. முகவனிடம் "வீட்டைப்பற்றி என்னுடைய மனுசியுடன் கதையும். அவவுக்குத்தான் இதுபற்றி நல்லா விளங்கும்" என்று கூறிவிட்டு மனுசியிடம் போனைக் கொடுத்தேன்.
அவர்களுக்கிடையிலான தொலைபேசி உரையாடல் மேலும் சிறிது நேரம் தொடர்ந்தது.
இந்திரகுமார் (ரியல் எஸ்டேட் முகவன்): "அக்கா, இப்பத்தான் அண்ணையிடம் கூறிக்கொண்டிருந்தன். நல்ல விலைக்கு, நல்ல லொகேசனிலை வீடொன்று விலைக்கு வந்திருக்கு.வீட்டுச் சொந்தக்காரன் அமெரிக்காவுக்கு மூவ் பண்ணுகிறானாம். அதுதான் குறைந்த விலைக்கு வித்துப்போட வேண்டுமென்று நிக்கிறான். என்ன சொல்லுறியள்? போய்ப்பார்ப்பமே. இப்ப உங்களுக்கு டைம் இருந்தால் இப்பவே போய்ப்பார்க்கலாம். அக்கா, அண்ணையுடன் கதைச்சுப் போட்டுச் சொல்லுறியளே. நான் லைனிலை நிற்கிறன்"
இதைக்கேட்டு விட்டு என்னிடம் திரும்பிய என் மனைவி "ஏஜன்ட் சொல்லுறார் நல்ல விலைக்கு வீடொன்று வந்திருக்காம். போய்த்தான் பார்ப்பமே. என்ன சொல்லுறியள்?"
இனி என்ன சொல்ல இருக்கு. இவள் அந்த வீட்டைப் போய்ப் பார்க்காமல் இனி நித்திரை கொள்ளவே போக மாட்டாள். அவளுடைய பிடிவாதம் அப்படி. அவளுடைய பிடிவாதத்தை என் சொந்த அனுபவத்திலை நன்கு அறிந்தவன். எங்களது திருமணம் கூட ஒருவகையான காதல் திருமணம்தான். முதலிலை அவள்தான் எனக்குக் கடிதம் போட்டாள். காதல் கடிதம். "என்னைப் பார்த்த முதல் நாளிலேயே என்னைப் பிடித்துவிட்டதென்று" எழுதியிருந்தாள். "எல்லாம் பருவக்கோளாறு" என்று பதிலெழுதினேன்."இல்லை உண்மைக் காதல். காதல் காதல் காதல் போயில் சாதல் சாதல் சாதல்' என்று பாரதியைத் துணைக்கழைத்துப் பதிலளித்திருந்தாள். "நாடிருக்கிற நிலையிலை என்னாலை எப்ப கல்யாணம் செய்ய முடியுமென்று தெரியவில்லை. வெளிநாடு வந்து இப்பத்தான் ஒரு வருசம். இன்னும் இங்கை எனக்குப் பேப்பரும் கிடைக்கவில்லை. அது கிடைத்தபிறகுதான் ஸ்பான்சரே பண்ணலாம்" என்று மீண்டும் பதிலளித்தேன். "எத்தனை வருசமென்றாலும் சரி. வாழ்ந்தால் உங்களோடுதான்" என்றாள். சொன்னவள் எட்டு வருடங்களாகக் காத்திருந்தாள். இந்திய அமைதிப்படையும் வந்து நாட்டை விட்டும் போனபிறுகுதான் அவளை ஸ்பான்சர் செய்ய முடிந்தது. அதன்பிறகு தன்னந்தனியாக டொராண்டோ வந்திறங்கினாள். அப்படி வந்தவள் அவ்வப்போது எமக்கிடையில் வரும் வாக்குவாதங்களின்போது 'நீங்கள் இப்படி பொறுப்பில்லாமலிருப்பவரென்று தெரிந்திருந்தால் இப்படி வந்து மாட்டுப்பட்டிருக்க மாட்டேனே" என்று புலம்புகின்றாள். அதற்கு நான் கூறுவது:" பேய்க்கு வாழ்க்கைப்பட்டால் முருங்கை மரம் ஏறத்தான் வேண்டும். இது நீயாக வந்து விழுந்த வாழ்க்கை."
வீடு விற்பனை முகவன் 'ஓடு மீன் ஓடி , உறு மீன் வரும்வரையில் வாடி நிற்கும் கொக்கா'க, பொறுமையாகத் தொலைபேசியில் காத்திருந்தான். மனைவி என்னிடம் போனைத் தந்தாள். நான் காத்திருந்த வீடு விற்பனை முகவனிடம் கூறினேன்: "தம்பி. அப்ப வாருமென். போய்த்தான் பார்ப்பமே"
அடுத்த அரை மணித்தியால நேரத்தில் அந்த முகவன் எனது இருப்பிடத்திலிருந்தான்.
அவனே எங்களைத் தனது காரில் விற்பனைக்காகவிருந்த அந்த வீட்டைக் காட்டுவதற்குக் கூட்டிச் சென்றான். மார்க்கம் நகருக்கும், டொராண்டோ நகரும் சந்திக்கும் ஸ்டீல் சாலையும், மார்க்கம் சாலையும் சந்திக்குமிடத்தில் இருந்த , நான்கு பெரிய அறைகளைக்கொண்ட வீடு. அந்த விலையில் அப்படியொரு வீட்டைப் பார்ப்பது அவ்வள்வு சுலபமல்ல. அந்த வீட்டைப் பார்த்துவிட்டு வந்ததிலிருந்து என் மனைவி எப்படியாவது அந்த வீட்டை வாங்கிவிடவேண்டுமென்று ஒற்றைக்காலில் நின்றாள். அவளுக்குத் துணையாக அந்த வீடு விற்பனை முகவனும் ஒத்தூதினான்.
இறுதியில் அந்த வீட்டை வாங்குவதற்கு முடிவு செய்தோம். அதற்கு முன் சில நிபந்தனைகளை விதித்தேன். வீடு வாங்குவதென்றால் மோட்கேஜ் கட்ட வசதியில்லையென்று 'பேஸ்மென்ட்'டை வாடகைக்கு விடுவதில்லை. 'பிரைவசி' இல்லையென்றால் வீடு வாங்கி என்ன பிரயோசனம். ஐந்து வருடங்கள் மட்டும்தான் வீட்டை வைத்திருப்பது. அதற்குப் பிறகு விற்றுவிட வேண்டும். அதன் பின் இலாபத்தில் விற்றால் இன்னுமொரு வீடு வாங்குவதுபற்றி யோசிக்கலாம். இல்லையென்றால் மீண்டும் அபார்ட்மென்ட் சென்றுவிட வேண்டியதுதான். வீட்டை வாங்கிவிட்டு இருபத்தைந்து வருடங்கள் மாட்டைப்போல் உழைத்துக் கட்டிவிடுவதற்குள், குழந்தைகள் படித்து முடித்து நல்ல வேலையுமெடுத்து விடுவார்கள். அதற்குள் எங்களது காலம் முடிந்துவிடும். இதற்கெல்லாம் ஓமென்றால் நான் வீடு வாங்கத் தயாரென்றேன். மனைவியும் உடனடியாகவே அதற்குச் சம்மதித்தாள். ஒருமாதிரி இருவருமாகச் சேர்த்து வைத்திருந்த ஐம்பதினாயிரம் டொலர்களை முற்பணமாகப் போட்டு (வீட்டு விலையில் அது பதினைந்து சதவீதம் வரையில் வந்தது) வீட்டை வாங்கிக் குடிபுகுந்தோம்.
2. இடையில் ....
ஐந்து வருடங்கள் கடந்து விட்டன. இந்த ஐந்து வருடங்களும் மாடு மாதிரி உழைத்தோம். மாதாமாதம் மோட்கேஜ் கட்டினோம். மேலதிகமாக ஒவ்வொரு வருடமும் மோட்கேஜ் கட்டி முடிப்பதாகத்தான் முதலில் திட்டம் போட்டிருந்தோம். ஆனால் மாதச் செலவுக்களுக்கே வரும் சம்பளம் போதுமானதாகவிருக்கவில்லை. அபார்ட்மென்டில் இருந்தபொழுது மாத வாடகை ஆயிரம் டொலர்கள். ஆனால் வீட்டு மாதச் செலவுகளோ... மோட்கேஜ் இரண்டாயிரம் டாலர்கள். மேலதிகமாக தண்ணீர் வரி, மின்சாரம், இயற்கை வாயு என்று ஐநூறு டாலர்களுக்குக் குறையாது. இரண்டாயிரத்து ஐநூறு டாலர்கள். தவிர வீட்டுச் செலவுகள், கார்ச் செலவு, கார் காப்புறுதிச் செலவு , வீட்டுக் காப்புறுதிச் செலவு அது இதென்று இன்னும் ஆயிரத்தைந்நூறு டொலர்களுக்குக் குறையாது. நாலாயிரம் டொலர்கள் வரையில் மாதச் செலவு வரும். அபார்ட்மென்டிலிருந்தால் ஆயிரம் டொலர்கள் வாடகை, இன்னும் ஆயிரத்தி இருநூறு வரையில்தான் செலவு. மொத்தம் இரண்டாயிரத்தி இருநூறு டாலர்கள். வீட்டில் இருந்ததற்காக மாதம் ஆயிரத்தி எண்ணூறென்று ஐந்துவருடங்கள் கட்டிய தொகையினைப் பார்த்தால்.. வருடத்திற்கு இருபத்தியோராயிரம்படி பார்த்தாலும், ஐந்து வருடங்களுக்கு நூறாயிரம் டாலர்களைத் தாண்டி விட்டிருந்தது. அப்பார்ட்மென்டிலிருந்திருந்தால் அந்தக் காசு மிச்சம். வைத்திருந்த முதலும் மிச்சம். இது தவிர 'பேஸ்மென்ட்', கூரை, 'டிரைவ் வே'யென்று மேலுமொரு முப்பதினாயிரம் டாலர்கள் செலவு. அதனையும் சேர்க்க வேண்டும்.இதற்கிடையில் அவ்வப்போது வீட்டுச் செலவுகளுக்குக் கஷ்ட்டமாகவிருக்கும்போது கடனட்டைகளிலிருந்து வேறு கடனெடுத்து, ஒழுங்காகக் குறித்த தவணைக்குள் கட்டாமல் , 'கிறடிட் ரேட்டிங்'வேறு பழுதாகிவிட்டிருந்தது. இதற்கிடையில் கிறடிட் கார்ட் கொம்பனியொன்று அவன் அடிக்கடி தாமதமாக மாதாந்தக் கட்டுப்பணம் கட்டவே , உயர்நீதிமன்றத்திற்குச் சென்று அறிவித்தலொன்றை அனுப்பியிருந்தது. அப்பொழுது என்ன செய்யலாமென்று ஒரு யோசனை எழுந்தது. தமிழர்களால் வெளியிடப்படும் வர்த்தக் கையேடுகளிலொன்றில் திரு. சு.க.வின் விபரங்களைப் பெற்றுக்கொண்டேன். சுப்பிரமணியம் கந்தையாவின் சுருக்கம்தானது. அவர் தான் கடன் பிரச்சினைகளால் வாடுவோரின் பிரச்சினைகளைத் தீர்த்து வைப்பதில் வல்லவரென்று அறிவித்திருந்தார். அவருடன் தொடர்புகொண்டபொழுது மனைவியையும் அழைத்துக்கொண்டு, அந்த நீதிமன்றக் கடிதத்தையும் கொண்டுவரும்படி கூறியிருந்தார். ஒரு நாள் அவருடன் சந்திப்பதற்கு போனில் ஏற்பாடு செய்துவிட்டு அவருடைய காரியாலயத்திற்குச் சென்றோம். திரு. சு.க எங்களைக் கண்டதும் அட்டகாசமாகச் சிரித்துக்கொண்டே வந்து கதவைத் திறந்து வரவேற்றார். அப்பொழுது கூட கைகளில் தடித்த சட்டப்புத்தகமொன்றினை வைத்திருந்தார். ஊரில் பத்தாம் வகுப்பு வரையில் படித்திருந்தவர், இங்கு வந்ததும் கடன் ஆலோசகராகப் பணியாற்றத் தொடங்கியிருந்தார். எங்களிடமிருந்து நீதிமன்றக் கடிதத்தினை எடுத்து வாசித்தார். சிறிது நேரம் சிந்தனையில் ஆழ்ந்தார். அவருடனான எமது உரையாடலின் விபரம் வருமாறு:
நான்: "எப்படியும் இதற்கொரு நல்லதொரு வழியை நீங்கள்தான் செய்ய வேண்டும்?"
திரு. சு.க: "இதற்கு நல்லதொரு வழி 'வாடிக்கையாளருக்கான பிரேரணை' (Consumer Proposal)). இது சட்டரீதியிலான வழி."
இவ்விதம் கூறியவர் வாடிக்கையாளுருக்கான பிரேரணை பற்றி விபரித்தார். இதற்காக 'ட்ரஸ்டிகள்' இருக்கிறார்கள். அவர்களே இப்பிரேரணயைத் தயாரிப்பார்கள். அதன் பிறகு ஐந்து வருடங்கள் உங்கள் கடனில் குறிப்பிட்ட தொகையினைச் செலுத்த வேண்டும். அவ்வளவுதான். அதன்பிறகு நீங்கள் உங்கள் கடன்பிரச்சினையிலிருந்து விடுபட்டு விடுவீர்கள்' என்றார்.
நான்: "இருவரும் ஒரே நேரத்தில் செய்யாமல் ஒருவர் முதலில் செய்யலாமா?"
திரு. சு.க: "முதலிலை உங்களுடைய வைப் செய்யட்டும். அதன்பிறகு இப்பொழுது ஆரம்பிக்கப்பட்ட இக்கடன் மீதான சட்டநடவடிக்கை நிறுத்தப்பட்டு விடும். அதன் பிறகு உங்களுக்கு அவர்கள் இன்னுமொரு நோட்டிஸ் இதுபோல் அனுப்புவார்கள். அப்பொழுது நீங்களும் வேண்டுமானால் உங்களுக்கும் வாடிக்கையாளர் பிரேரணை செய்யலாம்"
இறுதியில் அவர் கூறியதுபோலவே மனைவிக்கு மட்டும் முதலில் வாடிக்கையாளர் பிரேரணையினைச் செய்தோம். அவருக்கும் எழுநூறு டாலர்கள் கொடுத்தோம். அதன்பிறகு நான் கிறடிக் கார்ட் நிறுவனத்திடமிருந்து எனக்கு வரவேண்டிய கடிதத்தை எதிர்பார்த்துக் காத்திருந்தேன். ஆனால் வந்ததோ இன்னுமொரு நீதிமன்றக் கடிதமல்ல. வந்த கடிதம் எமது வீட்டின் மேல் லீன் போடப்பட்ட விடயத்தைக் கூறிய கடிதம். அத்துடன் கிறடிக் கார்ட் நிறுவனம் முழுக் கடனையும் என்னைப் போடும்படி நீதிமன்றத்திடமிருந்து தீர்ப்பு வேறு பெற்றிருந்தது. அதன்மூலம்தான் அவர்களால் வீட்டின்மேல் லீனைப் போட முடிந்தது. 'பாவி போன இடமெல்லாம் பள்ளமும் திட்டி என்று ஆச்சி அடிக்கடி கூறுவதுண்டு. என் விடயத்தில் அது மிகவும் சரிதான் போலையிருக்குது.'
கடன் அலோசகர் திரு. சு.க.வின் ஆலோசனையின் விளைவு. மனைவி கட்ட வேண்டிய கடனுக்கு வாடிக்கையாளர் பிரேரணை செய்யதிருக்கும் நிலையில், அதே கடன் முழுவதையும் அக்கடனின் ஒரு பங்குதாரர் நானென்ற முறையில் நான் கட்டும்படி நீதிமன்றத்திடமிருந்து தீர்ப்புப் பெற்று, அதன் மூலம் வீட்டிற்கும் சொத்தில் பங்குரிமையினை , 'லீன்' , பதிவு செய்திருந்தார்கள். 'கிறடிட்கார்ட்' நிறுவனத்தினர். உண்மையில் முதலில் எமக்கு வந்திருந்த நீதிமன்றக் கடிதத்தில் இருபது நாட்களுக்குள் அதற்கு எதிரான என் எதிர்வாதத்தினைச் சமர்ப்பித்திருக்க வேண்டும். திரு சு.க.வின் ஆலோசனையின்படி நான் கிறடிக் கார்ட் நிறுவனத்தினமிருந்து இன்னுமொரு கடிதத்தினை எதிர்பார்த்திருந்த நிலையில், அவர்கள் ஏற்கனவே அனுப்பியிருந்த கடிதத்திற்கு நான் எதிர்வாதத்தினைக் குறித்த காலகட்டத்தில் சமர்ப்பிக்காத காரணத்தைக் காட்டி அந்தத் தவறுக்கான தீர்ப்பினைப் பெற்றிருக்கின்றார்கள். எழுநூறு டாலர்களை எம்மிடமிருந்து பெற்றுக்கொண்ட கடன் ஆலோசகரான திரு. சு.கவின் ஆலோசனையின் விளைவு இந்நிலையினை எமக்கு ஏற்படுத்தியிருந்தது. அவர் ஒருபோதுமே மனைவிக்கு மட்டும் வாடிக்கையாளர் பிரேரணையினைச் சமர்ப்பித்திருக்கக்கூடாது. இருவரையும் ஒன்றாகச் செய்யும்படி கூறியிருக்க வேண்டும். இல்லாதுவிடத்து இருபது நாட்களுக்குள் இருவரையும் எதிர்த்தரப்பு வாதத்தினைச் சமர்ப்பித்திருக்க ஆலோசனை கூறியிருக்க வேண்டும். ஆனால் அவரோ தனது கட்டணத்தையும் , ட்ரஸ்டியின் கட்டணத்தையும் எடுப்பதில் மட்டுமே குறியாயிருந்ததன் விளைவுதான் எமக்கு இந்த நிலையினை ஏற்படுத்தி விட்டிருந்தது.
வீட்டைக் காட்டி கடன் பெற்று ஏனைய கடன்களையும் அடைக்கலாமென்று பார்த்தால், வீட்டின்மீதிருந்த 'லீன்' காரணமாக இரண்டாவது மோட்கேஜ் எடுப்பதென்றால் அதற்கும் சேர்த்து எடுக்க வேண்டும். வட்டியும் கிறடிட் ரேட்டிங் பழுதாகியிருந்த காரணத்தால் மிகவும் அதிகம். மாதாமாதம் முதலாவது மோட்கேஜுடன் இரண்டாவது மோட்கேஜின் வட்டியும் சேர்ந்தால்.. பிரச்சினை இன்னும் அதிகமாகிவிடும். இதற்கிடையில் பங்குச் சநதையில் நான் போட்டு வைத்திருந்த சேமிப்புப் பணம், அந்தப் புகழ்பெற்ற தொழில்நுட்ப நிறுவனமான 'நோட்டல்' திவாலாகிவிடவே, கரைந்து மறைந்து போனது. இவ்விதமானதொரு சூழலில் வீட்டை விற்றபொழுது வீடு விற்பனை முகவர்களுக்கான செலவு, கிறடிட் கார்ட் செலவு அது இதென்று எல்லாச் செலவுகளும் போக, போட்ட காசுடன், மேலுல் சில ஆயிரங்கள்தாம் மிஞ்சின. இதற்குப் பேசாமல் அபார்ட்மென்டிலேயே இருந்து தொலைத்திருக்கலாமென்ற ஞானோதயம் அப்பொழுதுதான் ஏற்பட்டது. இதற்கிடையில் இயற்கை வாயு மாதாந்த கட்டணம் கட்டுவதற்குக் காலதாமதமாகும் சமயங்களில் என்பிரிட்ஜ் நிறுவனத்தினர் வாயுவை நிறுத்தி விடுவார்கள். மீண்டும் பணம் கட்டி, வாயு கிடைக்கும் மட்டும் ஊரிலை இருந்த மாதிரி தண்ணீரைக் கொதிக்க வைத்துக் குளிக்க , முகம் கழுவப் பாவிக்க வேண்டியதுதான். சீயென்று போய் விடும். இந்த ஐந்து வருடங்களில் வீட்டுச் செலவுகளுக்காகவே உழைத்ததில் கண்ட பலன். ஒரு நாளாவது ஓய்வாக இருந்ததில்லை. குழந்தைகளுடன் சுற்றுலா அது இதென்று போனதில்லை. நண்பர்களுடன் கதைப்பதற்கு நேரம் கிடைப்பதில்லை. வேலை! வேலை! வேலை. மோட்கேஜ் , மின்சாரம், நீர்வரி, இயற்கை வாயு , வீட்டுக் காப்புறுதி, கார்க் காப்புறுதி அது இதென்று மாதாந்த 'பில்'களைக் கட்டுவதே வாழ்க்கையாகவிருந்தது. இப்படியொரு வாழ்க்கைக்காக வீடு தேவைதானா? வீடு தேவைதான். அதுவே வாழ்வின் அடிப்படை இயல்புகளையெல்லாம் இல்லாதொழித்து விடுகின்றதென்றால்... என்ன வாழ்க்கையென்று பட்டது. அப்பொழுதுதான் வீட்டை விற்பதற்கு முடிவு செய்தோம். கனவுகளுடன் வாங்கிய வீட்டினை விற்பதற்கு முடிவு செய்தோம்.
3. இன்று....
தொடர்மாடிக் கட்டடமொன்றிலுள்ள 'அபார்ட்மென்'டொன்றில் எங்களது வாழ்க்கை மீண்டும் தொடர்கிறது. மனைவி இப்பொழுது என்னுடன் வாக்குவாதப்படும் போதெல்லாம் "கனடாவிலை ஒரு வீட்டை வைத்திருக்கத் தெரியாது. வெட்கக்கேடு. பேசாமல் பேஸ்மனடை யாருக்காவது வாடகைக்குக் கொடுத்திருந்தால் இப்படி வித்திருக்கத்தேவையில்லை. வீடு வாங்கினால் கடைசி மட்டும் வைத்திருக்க வேண்டும். அப்பத்தான் இலாபம் வரும். இப்படி இடையிலேயே வித்தால் எப்படி இலாபம் வரும்?" வீடென்பது ஆறுதலாகக் குடும்பத்தவர்களுடன் மகிழ்ச்சியுடனிருப்பதற்கு. அதனை வேறு பலருடன் பகிர்ந்துகொண்டு வாழுவதெல்லாம் என்னைப் பொறுத்தவரையில் சரி வராதது. இதனை வீடு வாங்குவதற்கு முன் கூறி , அவள் சம்மதித்துத்தானே வீடு வாங்கவே சம்மதித்திருந்தேன். ஆனாலும் அதனைக் கூறி மேலும் அவள் மனதைப் புண்படுத்த விரும்பவில்லை. அப்பொழுதெல்லாம் நான் கூறுவேன்: "வாழ்க்கை இன்னும் முடியவில்லையே. அடுத்த ஐந்தாண்டுத் திட்டத்தைப் போட வேண்டியதுதான். இந்த முறை நாங்கள் தோற்கவில்லையே. அடுத்த முறை இந்த முறை விட்ட பிழையை விடக் கூடாது. இன்னும் முன்னெச்சரிக்கையாக இருக்க வேண்டும். காசிருந்தால் கூடுதலாக முதல் போட்டு வீடு வாங்கவேண்டும். அதற்கு வழியில்லாவிட்டால் வீட்டை வாங்கி, வாழ்க்கைக்காக வீடென்ற நிலை போய் , வீட்டுக்காக வாழ்க்கை என்று வாழுற வாழ்க்கையை மட்டும் வாழவே கூடாது. நீங்கள் ஒன்றுக்கும் பயப்பட வேண்டியதில்லை. நான் மண்டையைப் போட்டு விட்டால், கொஞ்சமாவது லைவ் இன்சுரன்ஸ் இருக்கு. நீங்களொன்றும் ரோட்டிலை நிற்க மாட்டியள்தானே"
அதற்கவள் கூறுகின்றாள்: "இப்படியே சொல்லிக்கொண்டேயிருங்கள். அதுக்குள்ளை எங்கடை காலம் போய்விடும்."
அவளது கூற்றுக்கு நான் பதிலேதுமிறுக்காமல் மெளனமாயிருக்கிறேன். 'எல்லாரும் போனாற்போலை நானும் போனேன் சாமி மலையென்று' , எல்லாரும் வீடு வாங்கிறார்களென்று நானும் வாங்கினேன். வீட்டைக் கட்டிப்பார் என்பார்கள். உண்மையில் வீட்டின் மோட்கேஜ் போன்றவற்றின் மாதாந்தச் செலவுகளைக் கட்டிப்பார் என்பதன் அர்த்தமோ அதுவென்று சிந்தித்துப் பார்க்கின்றேன். ஆனாலொன்று... இப்பொழுது வாழ்க்கை முன்போல் அமைதியாகச் செல்கின்றது. குழந்தைகளுடன் நேரம் கழிப்பதற்கு, சுற்றுலாக்கள் செல்வதற்கு, தேவையான செலவுகளைச் செய்வதற்கு, நண்பர்களுடன் அவ்வப்போது நேரத்தைக் கழிப்பதற்கென்று நேரமிருக்கிறது. மாதச் செலவுகளை உரிய நேரத்தில் கட்ட வேண்டுமேயென்ற மன அழுத்தம் இல்லை. மேலே ஆகாயம். கீழே பூமி. வாழ்க்கைதான் எவ்வளவு இனிமையாக விளங்குகின்றது. அகதிக்கு ஆகாயமே துணையென்று சும்மாவா சொன்னார்கள்.
நன்றி: ஜீவநதி கனடாச் சிறப்பிதழ்.
23. ‘பிள்ளைக்காதல்’ - வ.ந.கிரிதரன்
1.ஸ்கார்பரோ நூலகக் கிளையொன்றில் பன்மொழிப் பிரிவினில் தமிழ் நூல்களைத் தேடிக்கொண்டிருந்த பானுமதியின் கவனத்தை “பானு” என்ற வியப்புடன் கூடிய ஆண் குரலொன்று கலைத்துவிடவே குரல் வந்த திசையினை நோக்கித் திரும்பினாள். அவளால் நம்பவே முடியவேயில்லை. எதிரிலிருந்தவன் சேகரனேதான். எத்தனை வருடங்களுக்குப் பிறகு அவனை அவள் சந்திக்கின்றாள். குறைந்தது இருபத்தைந்து வருடங்களாகவாவதிருக்கும். காலம்தான் எவ்வளவு விரைவாக ஓடி விட்டது. நாட்டு நிலைமை காரணமாகப் புலம்பெயர்ந்து வந்தது நேற்றுத்தான் போலிருக்கிறது. அதற்குள் இத்தனை வருடங்கள் கழிந்தோடி விட்டனவா! வியப்பு நீங்காதவளாக அவனை நோக்கிச் சில கணங்கள் பேச்சற்று நின்றாள் பானுமதி.
சேகரன்தான் மீண்டும் அவளது கவனத்தைத் திருப்பினான்: ” என்ன பானு. அப்படியே சிலையாய் நின்று விட்டீர். நம்ப முடியவில்லையா?”
அதற்கு அவள் “நம்பத்தான் முடியவில்லை சேகரன். நம்பத்தான் முடியவில்லை. பதினெட்டு வயதிலை கடைசியாகச் சந்தித்தபோது நீங்கள் எப்படியிருந்தீர்களோ அந்த உருவம்தான் இன்னும் என்ற நினைவிலை இருக்குது. ஆனால் இங்கை பார்த்தால் நாற்பது வயதிலை சத்தியராஜைப் போல ஒரு தோற்றத்திலை இருக்கிறியள்” என்றாள்.
அதைக் கேட்டதும் அவன் பலமாக ஒருமுறை சத்தம்போட்டுச் சிரித்தான். நூலகத்திலிருந்த ஒரு சிலர் அவர்களைத் திரும்பிப் பார்த்தனர். தனது தொனியினைச் சிறிது குறைத்தவனாக “நீர் மட்டுமென்னவாம். நமபவே முடியவில்லை. மாமிமார் மாதிரியொரு தோற்றத்திலை. ஆனால் அந்த அழகு மட்டும் இன்னும் குறைந்து விடவேயில்லை” என்றவன் “வாரும் வெளியிலை போய்க் கதைப்போம். ‘லைப்ரரி’க்குள்ளையிருந்து கதைப்பது சரியில்லை” என்றான்.
அவளுக்கும் அவன் கூறுவது சரியாகப் பட்டது. “அருகிலைதான் ‘டிம் ஹோர்ட்டன்’ இருக்குது. கோப்பி குடித்துக்கொண்டு கதைக்கலாம்” இருவருமாக நூலகத்தை விட்டு வெளியில் வந்தவர்களாக அருகிலிருந்த ‘டிம் ஹோர்ட்டனு’க்குள் நுழைந்தார்கள். கோப்பி வாங்கிக்கொண்டு இருவரும் ஒரு மூலையில், சிறிது அமைதியிலாழ்ந்திருந்த திக்கில் சென்றமர்ந்தனர்.
2.
சேகரனே பேச்சினை ஆரம்பித்தான்: ” நான் கனவிலைக் கூட எதிர்பார்க்கவேயில்லை இப்பிடி இங்கை சந்திப்பேனென்று” அதற்கு அவளும் “நானும்தான் சேகரன்” என்று கூறிவிட்டு அமைதியிலாழ்ந்தாள்.
இருவரும் சிறிது நேரம் அமைதியிலாழ்ந்தனர். இவ்விதமான சந்தர்ப்பங்களில் இவ்விதமானதோர் அமைதியும் தேவையாகத்தானிருக்கிறது. இருவரது நினைவுகளும் அவர்களது அன்றைய காலகட்டத்தைநோக்கி விரைந்தன. பழைய ஞாபகங்களை இருவரது உள்ளங்களும் சிறிது அசைபோட்டன.
கனவுகளே வாழ்க்கையாக ஓடிக்கொண்டிருந்த ‘டீன் ஏஜ்’ வயதுப் பருவம். யாழ் இந்துக் கல்லூரியில் படித்துக் கொண்டிருந்தான். அவளோ யாழ் இந்து மகளிர் கல்லூரியில் படித்துக் கொண்டிருந்தாள். தினமும் அவன் பாடசாலை செல்லும் சமயங்களில் அவள் எதிர்ப்படுவாள்.
இரட்டைப் பின்னல்கள் மார்பிலாடிக்கொண்டிருக்க, தலை நிலம் பார்க்க, ஆடி அசைந்து அவள் செல்லும் காலைகள் அவன் வாழ்க்கையின் இனிமையைக் கூட்டின. மாநிறம். ஆனால் அழகான கரு விழிகள் அவளுக்கு. இவ்விதமாக காலைப் பொழுதுகளில் ஒருவரையொருவர் பார்த்துக் கொண்டிருந்தபடியே காலமும் கழிந்து கொண்டிருந்தது. வீதியில் அவளுடன் கதைப்பதைக் கண்டால் கதை கட்டிவிடும் சமூகம்.
அவளுடன் கதைப்பதற்கு மனது விரும்பினாலும் அதற்குத் தடைபோட்டுக்கொண்டான். அவளும் அவனைக் காணும் சமயங்கள் ஒருமுறையாவது அவனைப் பார்க்கத் தவறுவதேயில்லை. பார்த்த அந்த ஒரு கணத்திற்குள்ளேயே முழுமையாக அவனை உள்வாங்கிக் கொண்டவளைப்போல் அடுத்தகணமே தலையைக் குனிந்துகொண்டு நடந்துவிடுவாள். ஆடி அசைந்து ஒருவித ஒயிலுடன் அவள் செல்வதைப் பார்த்துக்கொண்டே பாடசாலை செல்வான் அவன்.
அன்றைய காலகட்டத்தில் அவனுக்கு மிகவும் பிடித்தமான பாடலொன்றிருந்தது. ‘வாழ்க்கைப் படகு’ படத்தில் வரும் பி.பி. ஸ்ரீனிவாசின் குரலிலொழிக்கும் பாடலது.
“நேற்றுவரை நீ யாரோ? நான் யாரோ? இன்று முதல் நீ வேறோ? நான் வேறோ?” இந்த வரிகளும் தொடர்ந்து வரும்
“உன்னை நான் பார்க்கும்போது
மண்ணை நீ பார்க்கின்றாயே.
விண்ணை நான் பார்க்கும்போது
என்னை நீ பார்க்கின்றாயே”
என்னும் வரிகளும் அவனுக்கு மிகவும் பிடித்தவையாகவிருந்தன. அந்தப் பதின்ம வயதுப் பருவத்தை அவனது நண்பர்கள் கோழி கூவும் பருவம் என்று அடிக்கடி கூறிச் சிரித்துக்கொள்வார்கள். உண்மையில் இந்தப் பிறப்பின் ஒவ்வொருவரது வாழ்விலும் இந்தப் பதின்ம வயதுப் பருவமும் , அப்பருவத்தில் விளையும் முதற்காதலும் மிகவும் முக்கியமானவை. பெரும்பாலும் இந்த முதற்காதல் வெற்றியில் முடிவதில்லை. ஆனால் அந்த அனுபவம் முக்கியமானது. காதலின் மகத்துவத்தை உணர்த்தும் மகத்தான அனுபவம். மாகவி பாரதியையும் இந்த முதற்காதல் விட்டுவைக்கவில்லை. இந்தவிடயத்தில் அவன் ஒரு படி மேல். ஒன்பது வயதிலேயே பிள்ளைக்காதல் வயப்பட்டவனவன். அவனைப்பொறுத்தவரையில் பிள்ளைக்காதல் மகத்தானது. வயது முற்றிய பின்னர் உருவாகும் காதல்தான் மாசுடையது. அதனால்தான் அவன் ‘வயது முற்றிய பின்னுறு காதலே மாசுடைத்தது, தெய்விக மன்றுகாண்’ என்று பாடுகிறான். இந்த முதற்காதலைப் பொறுத்தவரையில் வெற்றி தோல்வி முக்கியமில்லை. அந்த அனுபவம்தான் முக்கியமானது. வாழ்க்கை முழுவதும் கூடவே வந்து அவ்வப்போது தலைகாட்டுவது. உண்மையில் மாசு மறுவற்ற பருவத்தில் தோன்றுவதால் மாசுமறுவற்றது.
இவ்விதமாக ஒருவரையொருவர் ஓரக்கண்களால் பார்த்து, ஏங்கி, கனவு கண்டு , வெந்து, வதங்கிக்கொண்டு காலம் கடந்து கொண்டிருக்கையில் அவர்களது வாழ்க்கையில் நல்லதொரு சந்தர்ப்பம் தோன்றியது. பத்தாவது வகுப்பு படித்துக்கொண்டிருக்கும் சமயம் இருவருமே சுந்தரமூர்த்தி வாத்தியாரிடம் ஆங்கிலப் பாடம் டியூசன் எடுக்கும் சந்தர்ப்பம் ஏற்பட்டது. இருவருக்குமே இந்தச் சந்தர்ப்பம் மிகவும் வாய்ப்பாக அமைந்துவிட்டது. அதிகாலையில் ஐந்து மணிக்கு ஆரம்பமாகும் டியூசன். தொலைவில் காற்றில் பெருமாள் கோவிலிலிருந்து கேட்கும் எம்.எஸ்.சின் சுப்பிரதபாதத்தைக் கேட்டபடியே அவன் நேரத்துடனேயே டியூசன் வகுப்புக்குச் செல்வான். அவளும் நேரத்துடனேயே வந்துவிடுவாள். மற்றவர்கள் வருவதற்கிடையில் கிடைக்கும் சந்தர்ப்பத்தை இருவருமே நன்கு பயன்படுத்திக் கொண்டார்கள். மனம் விட்டும் கதைத்துக் கொள்வார்கள். இவ்விதமாகச் சென்று கொண்டிருந்த அவர்களது வாழ்க்கையில் திடீரென ஒரு முறிவு. அவளது தந்தையார் ஸ்டேசன் மாஸ்ட்டராகப் பணியாற்றிக் கொண்டிருந்தார். வவுனியாவுக்கு மாற்றலாகிப் போகவே அவளும் சென்று விட்டாள். சிறிது காலம் வாடிக் கிடந்தான். தாடி கூட வளர்க்க ஆரம்பித்தான். அதன் பின்னர் சிறிது சிறிதாகத் தன்னை தேற்றிக் கொண்டு தன் வாழ்க்கையில் கவனம் செலுத்ததொடங்கி விட்டான். அதன் பின்னர் காலம்தான் எவ்வளவு விரைவாகச் சென்று விட்டது. அதன் பிறகு அவனுக்கு அவளைக் காணும் சந்தர்ப்பமே ஏற்படவில்லை. அவனது வாழ்க்கையிலும் பல மாற்றங்கள். அவளது வாழ்க்கையிலும்தான். நாட்டு நிலைமைகளும் சதி செய்து விடவே இருவருக்கும் சந்திக்கும் வாய்ப்பே ஏற்படவில்லை. இருந்த போதும் அவனால் ஒருபோதுமே அவளை நினைவிலிருந்து அகற்ற முடியவில்லை. இத்தனை வருடங்களுக்குப் பின்னர் இன்னுமொரு மண்ணில் இவ்விதமாகச் சந்திக்கும் சந்தர்ப்பம் ஏற்பட்டிருக்கிறது. எவ்வளவு மகிழ்ச்சியாகவிருக்கிறது.
3.
அவனே மீண்டும் அமைதியைக் கலைத்தபடி உரையாடலைத் தொடர்ந்தான்: “பானு எப்படியிருக்கிறீர்? ”
அதற்கு அவள் “நான் நல்லாய்த்தானிருக்கிறன். எனக்குக் கிடைத்த புருஷனும் என்னை நல்லாய்ப் புரிஞ்சு கொண்ட நல்ல மனுசன். அது சரி நீங்களெப்படி? கல்யாணமெல்லாம் எப்படி?” என்றாள்.
“என் நிலையும் அப்படித்தான். என் மனதை நன்கு புரிந்துகொண்ட மனைவி. பத்து வயசிலை ஒரு மகள். வாழ்க்கை நல்லாத்தான் ஓடிக்கொண்டிருக்கு பானு”
அவளுக்கு அவனது பதில் மகிழ்ச்சியைத் தந்தது. அந்த மகிழ்ச்சி குரலிலும் தொனிக்க ” சேகரன். உண்மையிலேயே உங்களுடைய நிலைமையினனைக் கேட்கச் சந்தோசமாகத்தானிருக்கு. ஒரு நாள் நீங்கள் உங்கள் குடும்பத்துடன் எங்களுடைய வீட்டுக்கு வரவேண்டும். வருவீங்களா சேகரன்?” என்று கேட்டாள்.
“கட்டாயம் வருகிறன். அதே மாதிரி ஒரு நாளைக்கு நீரும் உம்முடைய ஹஸ்பண்டைக் கூட்டிக்கொண்டு எங்களுடைய வீட்டுக்கும் வரவேண்டும். என்ன சொல்லுகிறீர் பானு?” என்று அவனும் பதிலுக்குக் கேட்டான்.
அதற்கு பானு “கட்டாயம் சேகரன். கட்டாயம்” என்றாள்.
சிறிது நேரம் அவர்களுக்கிடையில் ஒருவித மெளனம் நிலவியது. சேகரனே அந்த தற்காலிக மெளனத்தைக் கலைத்தான்.
“பானு. உம்மிடம் ஒரு விசயம் கேட்க வேண்டுமென்றி கனகாலமாக நினைத்துக் கொண்டிருந்தேன். . இப்ப அதுக்குச் சந்தர்ப்பம் வந்திருக்கு. உமக்கு இப்பவும் அந்தக் காலம் ஞாபகத்திலை இருக்குதுதானே.. அல்லது மறந்து விட்டீரா?”
அதைக் கேட்டதும் ஒருகணம் பானு சிரித்து விட்டாள். அத்துடன் “என்ன சேகரன். அதை எப்படி மறக்க முடியும். எந்தவிதக் கள்ளங் கரவுமில்லாத பருவமல்லவா?” என்று கூறவும் செய்தாள்.
“எவ்வளவு இனிமையாகக் காலம் போய்க்கொண்டிருந்தது. அப்ப நீர் மட்டும் திடீரென்று இடம் மாறிப் போயிருக்காவிட்டால்..”
“நீங்கள் சொல்லுறதும் சரிதான். திடீரென்று அப்பாவுக்கு வவுனியாவுக்கு ட்ரான்ஸ்பர் வந்து போயிருக்காவிட்டால் எங்களுடைய வாழ்க்கை எப்படியெல்லாம் போயிருக்குமோ?”
“உண்மைதான் பானு. அது சரி பானு. அதுக்குப் பிறகு ஒருமுறையாவது உமக்கு என்னைச் சந்திக்க வேண்டுமென்று நினைப்பே வரவேயில்லையா?”
“முதலிலை கொஞ்ச காலத்துக்குக் கஷ்ட்டமாகத்தானிருதிச்சுது. பிறகு கால ஓட்டத்திலை வளர வளர எல்லாமே ‘நார்மலு’க்கு வந்திட்டுது. இப்பிடி எல்லோருக்குமே பால்ய காலத்திலை அனுபவங்கள் வாறது பொதுவான விசயம் என்று பட்டது. சேகரன் சேரனின் ‘ஆட்டோகிராப்’ படம் பார்த்தீர்கள்தானே. அதைப் பார்த்தபோது மீண்டும் பழைய சம்பவங்களெல்லாம் ஞாபகத்திலை வந்தது. நீங்கள் அந்தப் படம் பார்த்தனீங்கள்தானே.. ”
“ஓமோம். நானும் பார்த்தனான்தான். ஒவ்வொருத்தருடைய வாழ்க்கையிலையும் நடக்கிறதைத்தானே அவரும் அப்படியே படத்திலை காட்டியிருக்கிறார். அதனாலைதான் அந்தப் படம் அந்த மாதிரி வெற்றி அடைஞ்சிருக்க வேண்டும்”
இவ்விதமாக அவர்களுக்கிடையில் அன்றைய உரையாடல் அமைந்திருந்தது. அதன் பிறகு மீண்டும் விரைவில் அவரவர் குடும்பத்தவருடன் சந்திப்பதாக முடிவு செய்து பிரிந்தார்கள். அவ்விதம் பிரிந்தபொழுது ஒருவருக்கொருவர் தங்களது மின்னஞ்சல்முகவரிகளையும் மாற்றிக் கொண்டார்கள். அப்பொழுது அவன் அவளிடம் கூறினான்: “பானு. அன்றைக்கு மட்டும் இப்ப இருக்கிறதைப் போலை இண்டர்நெட் மட்டும் இருந்திருந்தால் எங்களுக்கிடையில் ஏற்பட்ட பிரிவு ஏற்பட்டிருக்காதல்லவா?”
அவனது குரலில் தொனித்த ஏக்கத்தைக் கண்டு அவளது மனம் ஒருகணம் சங்கடப்பட்டது. “அப்பிடி நடந்ததும் ஒரு விதத்திலை நல்லதுதானே. இல்லா விட்டால் உங்களுக்கோ அல்லது எனக்கோ இப்பிடியொரு நல்ல துணை அமைந்திருக்குமா?”
என்று பதிலுக்கு அவ்ள கூறிச் சமாளித்தாள்.
4.
அன்றிரவு படுக்கையில் கணவன் ராமச்சந்திரனுடன் தனித்திருந்தபோது பானுவுக்கு அன்று சேகரனைச் சந்தித்தது ஞாபகத்திற்கு வந்தது. “ராம். ஒரு விசயம் தெரியுமே. இன்றைக்கு நான் சேகரனைச் சந்தித்தனான்”
“யாரு? உம்முடைய பால்யகாலத்து சிநேகிதன் சேகரனா?”
“ஓம் . அந்த சேகரன் தான். அவரும் இப்ப இங்கை கனடாவிலைதான் இருக்கிறார். மனுசி பிள்ளையுமாக நல்லாத்தானிருக்கிறார். நான் கனவிலை கூட நினைக்கவில்லை அவரை இங்கை இப்படி சந்திப்பேனென்று.”
“கன காலத்துக்குப் பிறகு சந்தித்திருக்கிறீர். ஒரு நாளைக்கு அவரைக் குடும்பமாகக் கூட்டி வாறதுதானே”
“அவரும் எங்களை தங்களது வீட்டிற்கு குடும்பமாக வரச்சொல்லி அழைப்பு விட்டிருக்கின்றார்?”
அவளது கணவன் ராமசந்திரன் தகவற் தொழில் நுட்பத் துறையில் புராஜக்ட் மானேஜராக பிரபல நிறுவனமொன்றில் பணி புரிந்து கொண்டிருந்தான். மிகுந்த பரந்த மனப்பான்மையும், அறிவும் வாய்ந்தவன. அதிகமாக வாசிப்பதில் ஆர்வமுள்ளவன். அவனது வாசிப்பும் அவனது விசாலமான பரந்த மனப்பான்மைக்கொரு காரணம். மனைவி தனது பால்யகாலத்து சிநேகிதனைச் சந்தித்த விசயத்தைக் கூறியபோது எந்தவிதத் தவறாகவும் அவனால் எடுத்துக்கொள்ள முடியவில்லை. அதனையிட்டு மிகவும் மகிழ்ச்சியே அடைந்தான். அவள் ஏற்கனவே திருமணமான புதிதில் தனது கடந்த காலக் கனவுகள் பற்றியெல்லாம் அவனுக்குக் கூறியிருந்தாள். அவளது அந்த ஒளிவு மறைவற்ற தன்மை அவனுக்கு மிகவும் பிடித்திருந்தது. ஒவ்வொருவருடைய வாழ்க்கையிலும் இதுபோன்ற சம்பவங்கள் நடைபெறுவது வாழ்க்கையின் தவிர்க்க முடியாத விடயம்தானென்பது அவனது கருத்து.
5.
நாட்கள் சில ஓடி மறைந்தன. பானு வேலை தேடுவதில் நேரத்தைச் செலவிட்டுக் கொண்டிருந்தாள். ஏற்கனவே செய்து கொண்டிருந்த வேலை போய் வேலையின்மைக்கான ஊதியத்தைப் பெற்றுக் கொண்டிருக்கின்றாள். இன்னும் சில வாரங்களில் அதுவும் நின்று விடும். அதற்கிடையில் இன்னுமொரு வேலையை எடுக்க வேண்டும். ஏற்கனவே செய்து கொண்டிருந்த ‘டாடா என்ரி’ வேலையைத்தான்தேடிக்கொண்டிருந்தாள். அன்றும் ஒரு காலைப் பொழுது. ராமச்சந்திரன் வேலைக்குச் சென்று விட்டான். பானு இணையத்தில் வேலை தேடிக் கொண்டிருந்தாள்.
அப்பொழுதுதான் ஓரதிசயம் நிகழ்ந்தது. வழக்கம்போல் அன்று வந்திருந்த மின்னஞ்சல்களை ஒவ்வொன்றாக வாசித்துக் கொண்டிருந்தவளுக்கு வந்திருந்த மின்னஞ்சலொன்று ஆச்சரியத்தைத் தந்தது. சேகரனின் மின்னஞ்சல்தான். அதில் அவன் பின்வருமாறு எழுதியிருந்தான்:
- பானு. நான் நினைக்கவேயில்லை உம்மை மீண்டும் சந்திப்பேனென்று. உம்மை அனறைக்குப் பார்த்தபோது எப்படி சந்தோசமாக இருந்தது தெரியுமா? அதை வார்த்தைகளாலை விபரிக்கவே முடியாது. உண்மையைக் கூறப்போனால் அந்த வயதிலை நீர் பிரிஞ்சு போனபோது நான் எப்படியெல்லாம் கஷ்ட்டப்பட்டேன் தெரியுமா? என்னாலை நித்திரை கொள்ளக் கூட முடியவில்லை. தாடியும், மீசையுமாக எவ்வளவு காலம் திரிந்திருப்பேன் தெரியுமா? எப்படியாவது நீர் என்னை ஒருமுறையாவது தொடர்பு கொள்வீரென்று நினைத்துக் கொண்டேயிருந்தன். அந்த அளவுக்கு உம்மை நான் ஆழமாக விரும்பிக் கொண்டிருந்தேன். இத்தனை வருசமாக உம்மை எண்ணாமல் ஒரு நாளையும் நான் கழித்ததேயில்லை தெரியுமா? நான் மனதின் வலிமையை அதிகமாக நம்புறவன். என்னையும் மீறி உம்முடைய நினைவு ஒவ்வொரு நாளும் வந்ததிலிருந்து நீரும் அப்படித்தான் நினைத்துக் கொண்டடிருந்தீரென்று நான் நினைக்கிறன். இல்லாவிட்டால் இவ்வளவு தூரத்துக்கு உமது நினைவு அடிக்கடி வந்து வந்து என்னைக் கஷ்டப்படுத்தியிருக்க முடியாதென்று நினைக்கிறன். உண்மையைச் சொல்லும். இவ்வளவு காலத்திலை என்னைப்போல்தானே நீரும் என்னை ஒவ்வொருநாளும் நினைத்துக் கொண்டிருந்தீர்? –
இவ்விதமாக அவனது மின்னஞ்சல் அமைந்திருந்தது. அவளுக்கு அவனை நினைக்க நினைக்க பாவமாகவிருந்தது. அவள் சில கணங்கள் தன் கடந்த கால வாழ்வை எண்ணிப் பார்த்தாள். அவளது இளமைப் பருவத்தில் அவனைப் பிரிந்து போன சமயத்தில் சில காலம் அவனது நினைவு மனதில் அவ்வப்போது வந்து வந்து போய்க்கொண்டிருந்தது. காலப்போக்கில் அதுவும் மங்கி மறைந்து விட்டது. அதன்பிறகு அவள் வாழ்க்கையோட்டத்தில் அவனை மறந்தே போய் விட்டாள். எல்லோருடைய வாழ்க்கையிலும் நடக்கும் சாதாரணமானதொரு சம்பவமாக மட்டுமே அவள் அதனைக் கருதினாள். அதைவிட அதற்கு அவள் எதுவுமே முக்கியத்துவம் கொடுத்திருக்கவில்லை. ஆனால் அவனது இந்த மின்னஞ்சலைப் பார்த்தால் அவன் அவளது நினைவால் இவ்வளவு காலமும் வருந்திக் கொண்டிருப்பதாக அல்லவா தெரிகிறது. ஒரு நாளைக் கூட தன்னைப் பற்றி நினைக்காமல் கழிக்க முடியவில்லை என்றல்லவா எழுதியிருக்கின்றான். இவ்வளவு தூரமா அவன் தன்னை விரும்பிக் கொண்டிருக்கின்றான்? அது மட்டுமா , நானும் அவனைப் போல் ஒவ்வொரு நாளும் அவனை நினைத்துக் கொண்டிருந்தேன் என்றல்லவா நினைத்துக் கொண்டிருக்கிறான். அவன் தன்னை விரும்பிய அளவுக்குத் தான் அவனை விரும்பவில்லையோ என்று தனக்குள் எண்ணிக் கொண்டாள். அவ்விதம் விரும்பியிருந்தால் அவளும் அல்லவா அவனைப்போல் அவனை அடிக்கடி நினைத்துக் கொண்டிருக்க வேண்டும். இந்நிலையில் சேகரனின் மின்னஞ்சலுக்குப் பதிலாகத் தான் அவனை அவ்வாறு நினைக்கவில்லையென்று எழுதினால் எப்படியிருக்கும்? அவன் எவ்வளவுக்கு வேதனை படக்கூடும். இந்த நினைவு தோன்றியதும் அவள் ஒரு முடிவு செய்து கொண்டாள். அதாவது உடனே சேகரனது மின்னஞ்சலுக்குப் பதிலேதும் எழுதுவதில்லை. அன்றிரவு கணவனுடன் இதுபற்றிக் கதைத்து விட்டே பதிலெழுதுவதாகவும் முடிவு செய்தாள். அதன்பிறகே அவளுக்கு நிம்மதியாகவிருந்தது. அதே சமயம் இந்த முதற் காதல் சேகரனை எவ்வளவு தூரம் ஆட்டிப்படைத்து விட்டிருக்கிறது என்றும் பட்டது.
6.
அன்றிரவு வேலை முடிந்து அவளது கணவன் ராமச்சந்திரன் வீடு திரும்பியதும் சந்தர்ப்பத்திற்காக அவள் காத்திருந்தாள். அவன் குளித்து, சாப்பிட்டு, ஓய்வாக இருந்த சமயமாகப் பார்த்து அவனை அணுகினாள்.
“என்னங்க. உங்களைத்தான்..” என்று நிறுத்தியவளை ஏறெடுத்து நோக்கினான் ராமச்சந்திரன். ‘இதென்ன புதுப்பழக்கம்’ என்றெண்ணியவனாக “என்ன பானு. என்ன விசயம். வழக்கத்திற்கு மாறாக இதென்ன புதுப் பழக்கம்” என்றான்.
அதற்குச் சிறிது நேரம் மெளனமாக நின்ற பானுமதி “உங்களுடன் சில விசயங்களைப் பற்றி மனம் விட்டுக் கதைக்க வேண்டும்” என்றாள்.
அதற்கவன் “தாராளமாகக் கதைக்கலாமே” என்றான். “இதுக்கென்ன தயக்கம்” என்றும் மேலும் கூறினான்.
“சந்திரன், இன்றைக்கு எனக்கு ஒரு இமெயில் சேகரனிடமிருந்து வந்திருந்தது?”
“என்னவாம், குடும்பத்தோடை வீட்டுக்கு விருந்துக்கு வரும்படி அழைப்பு விடுத்திருக்கின்றாரா?”
“அப்படியெல்லாம் ஒன்றூமில்லை. வேண்டுமானால் ஒருமுறை நீங்கள் அவரது கடித்தத்தைப் படித்துப் பாருங்களேன்.”
“நல்லாயிருக்கு. உமக்கு வந்த கடிதத்தை நான் வாசிக்கிறதோ. எனக்கு அதை வாசிக்க வேண்டிய தேவையேயில்லை. நீரே சொல்லும். என்ன விசயம்?”
“சந்திரன், அவரது கடிதத்தைப் பார்த்தால், இவ்வளவு காலமாக அவர் என்னையே நினைத்துக் கொண்டிருருந்திருக்கின்றார் போலிருக்குது. ஒவ்வொரு நாளும் தான் என்னை நினைக்காமல் இருந்ததில்லையாம். நானும் அவரைப் போல் அவரை நினைத்திருக்கிறேனா என்று கேட்டிருக்கின்றார். என்ன பதிலை எழுதுவதென்றுதான் யோசனையாகவிருக்கு, நீங்கள் என்ன சொல்லுகிறீர்கள்?”
இவ்விதம் தன் கணவனிடம் பானு கேள்வியொன்றைக் கேட்டுவிட்டு அவனது அதற்கான பதிலுக்காகக் காத்துரின்றாள்.
சிறுது நேர மெளனத்திற்குப் பிறகு ராமச்சந்திரன் பின்வருமாறு பதிலளித்தான்:
“நீரும் அப்படி அவரை நினைச்சிருக்கிறீரா?”
பானுவுக்கு அவனது அந்தக் கேள்வி சிறிது ஆத்திரத்தை ஏற்படுத்தியது. அந்த ஆத்திரம் குரலில் தொனிக்க “இதென்ன கேள்வி சந்திரன். இவ்வளவு காலமாக என்னோடை வாழ்ந்திருக்கிறியள்.. இப்படியொரு கேள்வியைக் கேட்க உங்களாலை எப்படி முடியிறது?” அடுத்த கணமே தன் ஆத்திரத்தை எண்ணி சிறிது வியந்து கொண்டாள். கணவனின் கேள்வியில் ஆத்திரப்பட என்ன இருக்கிறதென்று பட்டது.
“அப்ப்டியென்றால் பேசாமல் நீர் அப்படி நினைக்கவில்லையென்று எழுதிவிடுவதுதானே.. பிறகென்ன கேள்வி.
“என்ன சந்திரன். உங்களிடம் போய் ‘அட்வைஸ்’ கேட்டேனே?. அவருக்கு அப்படி எழுதினால் அவர் மனது கஷ்ட்டப்படாதா? இத்தனை வருசத்திற்குப் பிறகு சந்தித்திருக்கிறம். அதுதான் யோசிக்கிறன்”
“அப்படியென்றால்.. அதைப் பற்றியே பெரிதாகப் பொருட்படுத்தாத மாதிரி அவரைக் குடும்பத்தினருடன் ஒரு நாளைக்கு எங்கட வீட்டிற்கு வரச்சொல்லி அழைப்பு விடுக்கிறதுதானே?
இவ்விதம் ராமச்சந்திரன் கூறவும் பானுமதிக்கும் அது நல்லதொரு ஆலோசனையாகவே பட்டது. அவ்விதமே சேகரனுக்குப் பதிலுமிட்டாள்.
7.
இன்னுமொரு நாள் வழக்கம்போல் பானு நண்பகற்பொழுதில் இணையத்தின் வாயிலாக வேலை தேடிக்கொண்டிருந்தாள். அப்பொழுது மீண்டும் சேகரன் இணையத்தினூடு எதிர்ப்பட்டான். இம்முறை மைக்ரோசாப்ட்டின் மெசஞ்சர் புறோகிறாமினூடு வந்தான். அவள் அதனை எதிர்ப்பார்க்கவில்லை. ஆனால் அவனைத் தவிர்க்கவும் முடியவில்லை. அதனைத் தொடர்ந்து அவனுடன் உரையாட ஆரம்பித்தாள்.
இருவருக்குமிடையில் ஆங்கிலத்தில் நடைபெற்ற உரையாடலின் தமிழ் வடிவம் பின்வருமாறு அமைந்திருந்தது:
பானு: “என்ன சேகரன். நம்பவே முடியவில்லை. நாள் முழுக்க கம்யூட்டரே கதிதானா?”
சேகரன்: “பானு, உண்மையைச் சொன்னால்… உம்மைக் கண்ட நாளிலிருந்து ஒரு விதத்தில் நான் நானாகவில்லையென்றுதான் சொல்ல வேண்டும்.”
பானு: “சேகரன், நான் ஒன்று சொல்லுவேன் தவறாக நினைச்சுக்கொள்ளக் கூடாது.அப்பிடி நீங்கள் பிராமிஸ் பண்ணினால் நான் ஒன்று சொல்லுவன்.”
சேகரன்: “என்ன பானு சொல்ல வாறீர்?”
பானு: “நாங்கள் இன்னமும் சின்னப் பிள்ளைகளில்லை. ஒவ்வொரு காலகட்டத்திலும் ஒவ்வொரு மாதிரியான அனுபவங்கள் வாழ்க்கையில் வருவது சாதாரண விசயம்தானே. அதையெல்லாம் பெரிதாக எடுத்துக்கொள்ளக் கூடாது.”
சேகரன்: ” நீர் சொல்லுவது சரிதான். ஆனால் உம்மை இன்னமும் என்னாலை மறக்கவே முடியவில்லை. நான் ஒன்று சொல்லுவன் நீர் கேட்பீரா?”
பானு என்ன சொல்லப்போகின்றானோ என்று எண்ணியவனாக “ம், சொல்லுங்கள்”
சேகரன்: “உண்மையில் நான் ஒரு பெரிய பிழையைச் செய்து போட்டேன். எனக்கும் என் மனுசிக்குமிடையிலை நீர் நினைக்கிறது மாதிரி பெரிய ஒட்டென்று எதுவுமில்லை.”
பானு: “நீர் என்ன சொல்லுறீர் சேகரன்?”
சேகரன்: ” உண்மைதான், நான் ஒரு பெரிய பிழையை விட்டிட்டேன். என்னைத்தான் கட்டுவேனென்று ஒற்றக்காலிலை நின்றுதான் கட்டினவள். அப்படி வந்தவளிடம் முதலிரவிலையே நான் உம்மை விரும்பின விசயத்தையும், உம்மை மறக்க முடியாமலிருக்கிற விசயத்தையும் சொல்லிப் போட்டேன். அன்றிலிருந்து இன்று வரையில் அடிக்கடி எங்களிருவருக்குமிடையில் சண்டை வராமலில்லை”
பானுவுக்கு அது பெரிய அதிர்ச்சியாகவிருந்தது: “சேகரன் நீர் செய்தது பெரிய மட வேலை. நீர் ஏன் அப்படி உம்முடைய மனைவியிடம் சொன்னனீர்? அவவுடைய மனசு எவ்வவு கஷ்ட்டப்பட்டிருக்கும். சே, என்ன ஆளப்பா நீர்?
சேகரன்: “என்ன நான் செய்தது பிழையென்றா நினைக்கிறீர் பானு?”
பானு சிறிது ஆத்திரத்துடன் “பின்னே, நீர் அப்படிச் சொல்லியிருக்கவே கூடாது.”
சேகரன்: “அப்பிடிச் சொல்லுவதன் மூலம் நான் அவளுக்கு உண்மையாக இருக்கத்தான் முயற்சி செய்தேன். அது பிழையா? எழுத்தாளர் டால்ஸ்டாய் கூட அப்படித்தான் தன்னுடைய மனைவியிடம் கூறினவராம்.. ”
பானு: “அப்படிச் சொன்னதால் டால்ஸ்டாய் சாதித்ததுதான் என்ன? கடைசி வரைக்கும் அவரது மனைவி அவரை அதற்காக மன்னிக்கவேயில்லையாம். தெரியுமா? கடைசியில் வயது போன காலத்தில் வீட்டை விட்டே ஓடிப்போய் எங்கோ தொலைவிலை புகைவண்டி நிலையமொன்றின் முன்னால் விழுந்து கிடந்து செத்துப்போனாராம் தெரியுமா?” அடுத்தது எங்களுக்கிடையிலை அப்ப இருந்தது முழுமையான காதலே இல்லை.. அதன் ஆரம்ப கட்டம்தானே. உண்மையான காதலாகவிருந்தால் நான் அவ்வளவு இலேசாக உம்மை மறந்திருப்பேனா?”
சேகரன் சிறிது மெளனத்திற்குப் பிறகு பதிலெழுதினான்: ” பானு நீர் வேண்டுமானால் மறந்திருக்கலாம். ஆனால் .. என்னால் அப்படி இலேசாக மறக்க முடியவில்லையே… இவ்வளவு காலமாக உம்மை ஒவ்வொரு நாளும் நினைத்திருக்கிறேனென்றால் .. அதை நீர் நம்புகிறீரா? இல்லையா?”
பானுவுக்கு அவன் நிலை சிறிது சங்கடத்துடன் கூடிய கவலையினைத் தந்தது.
சேகரன்: “பானு, எனக்கு நீர் ஒரு பிராமிஸ் செய்து தரவேண்டும்..”
பானு: “என்ன ..?”
சேகரன்: “இவ்வளவு காலம் கழிச்சு உம்மை சந்தித்திருக்கிறேன். எங்கடை இருவரது வாழ்க்கையும் வேறு திசைகளில் போய் விட்டது.. இந்த நிலையிலை எங்களுக்கு எங்கட குடும்பம்தான் முதலிலை முக்கியம்..”
பானுவுக்கு அவன் அவ்விதம் எழுதவும் உண்மையிலேயே பெருமிதமாகவிருந்தது: “சேகரன், உங்களை நினைக்கையிலை உண்மையிலை எனக்குப் பெருமையாகத்தான் இருக்குது. யூ ஆர் கிரேட் சேகரன்”
சேகரன்: “தாங்க் யூ பானு. தாங்க் யூ . ஆனா.. ”
பானு: ” என்ன ஆனா.. ”
சேகரன்: “உம்மை நான் இனியும் சந்திக்காமல் கூட இருப்பேன். எத்தனை வருசமென்றாலும். ஆனா.. உம்மை மறந்து மட்டும் என்னால் இருக்க முடியாது. அவ்வளவு தூரத்துக்கு நாளும் பொழுதுமாக உம்மையே நினைத்து, நினைத்து உருகி, கனவு கண்டு என் ஆழ் மனதுக்குள்ளை நீர் போய் குடியிருந்து விட்டீர். இவ்வளவு நாளும் இருந்ததைப் போலை இனியும் நீர் அப்படியே இருந்தி விடுவதாலை யாருக்குமே எந்தவிதப் பாதிப்பும் இல்லையல்லவா?”
பானு அவன் கூறுவதை வாசித்தபடியே அவன் தொடர்ந்தும் என்ன கூறப்போகின்றானோ என்று கணினித் திரையினையே பார்த்துக் கொண்டிருந்தாள்.
அவனே தனது ‘சாட்’ உரையாடலை தொடர்ந்துகொண்டிருந்தான்: “இந்தப் பிறப்பில்தான் உம்முடன் சேருவதுக்கு எனக்கு கொடுத்து வைக்கவில்லை. நான் கனவிலை கூட உம்மை திரும்பவும் சந்திப்பனென்று நினைச்சது கூட இல்லை. ஆனால் அப்படியொரு சந்தர்ப்பம் கிடைத்திருக்கிறதுக்கு எங்களைப் படைத்த சக்திக்குத்தான் நன்றி சொல்ல வேண்டும். அதனால்….”
பானு: “அதனால் ..”
சேகரன்: “வாராது வந்த மாமணி போலை நீர் திரும்பவும் என்ற வாழ்க்கையிலை எதிர்ப்பட்டிருக்கிறீர். உம்மை திரும்பவும் இழக்க நான் விரும்பவில்லை.. அதனால்…..”
பானு: “அதனால்….. ”
சேகரன்: “மாததிற்கு ஒருமுறையோ இல்லை வருசத்துக்கு ஒருமுறையோ நான் உம்முடன் இதைப் போலை உரையாடவேண்டும். நீர் உம்முடைய வாழ்க்கையிலை சந்தோசமாக இருக்க வேண்டும். அதுதான் என் ஆசை. விருப்பம். வேண்டுதலெல்லாம். அதே சமயம்.. உம்முடன் அவ்வப்போது இப்பிடிக் கதைப்பதால் எனக்கும் கொஞ்சம் ஆறுதலாக இருக்கும். நீர் தான் எனக்கு இந்தப் பிறப்பிலை கிடைக்கவில்லை. இருந்தாலும் இப்பிடியொரு சந்தர்ப்பமாவது உம்முடன் கதைக்க ஏற்படுகிறதே..”
இந்தச் சமயம் பார்த்து ‘பவர் கட்’டாகியது. கணினியும் ‘பவர்’ இழந்து மீண்டும் ‘ஆன்’ ஆகி வலுப்பெற ஆரம்பித்தது.
8.
அன்றிரவு கணவன் ராமச்சந்திரனிடம் தனக்கும், சேகரனுக்குமிடையில் நடைபெற்ற ‘சாட்’ உரையாடல் பற்றியும், அவனது விருப்பம் பற்றியும் குறிப்பிட்டாள் பானுமதி. அதற்குக் கணவன் என்ன கூறப்போகின்றானோ என்று அவனையே ஆவலுடன் நோக்கி நின்றாள்.
ஆனால் ராமச்சந்திரன் உடனே பதிலெதனையும் கூறவில்லை. சிறிது நேரம் மெளனமாகவிருந்தான். வழக்கமாக உடனேயே தன் கருத்துகளைக் கூறும் பழக்கமுள்ள தன் கணவனின் மெளனம் அவளுக்கு சிறிது வியப்பினையும் கூடவே ஒருவித அதிர்ச்சிகரமான உணர்வினையும் தந்தது. அந்த உணர்வுகளுடன் அவள் தன் கணவனைப் பார்த்து “என்ன சந்திரன். பதிலைக் காணோமே” என்று கேட்டாள்.
அதற்கும் சிறிது நேரம் மெளனம் காத்த ராமச்சந்திரன் “பானு, நான் கூறுவதைக் கேட்டு என்னைத் தவறாக எண்ணிவிட மாட்டீரென்று எண்ணுகின்றேன்…” என்றான்.
“என்ன சந்திரன், இவ்வளவு காலம் என்னுடன் வாழ்ந்தபிறகு இப்படியொரு கேள்வியா?”
“எனக்கென்னவோ சேகரன் நடத்தை வரம்பு மீறிப் போவதுபோல் படுகிறது. இளம்பருவத்து உணர்வுகள் இவ்வளவுதூரம் அவனை ஆட்டிப்படைக்கிறது அவ்வளவு நல்லதாக எனக்குப்படவில்லை. இளம்பருவத்துணர்வுகளை இன்னும் அவன் இவ்வளவுதூரம் பீடித்திருப்பது எனக்கு நல்லதாகத்தெரியவில்லை. இந்த நிலையில் தொடர்ந்தும் நீர் சேகரனுடன் பழகுவதைத் தவிர்ப்பதே நல்லதுபோல்படுகிறது”
அவன் இவ்விதம் கூறவும் பானுமதிக்குச் சிறிது ஆத்திரமேற்பட்டது. “என்ன சந்திரன், உங்களுக்கு என்னிடம் நம்பிக்கையில்லையா? என்னை நீங்கள் அறிந்துகொண்டது இவ்வளவுதானா?” என்றவள் அவனுடன் தொடர்ந்தும் பேசப்பிடிக்காமல் போய்த் தனியாகப் படுக்கையில் சாய்ந்துகொண்டாள். அவளைத்தொடர்ந்து வந்த ராமச்சந்திரன் எவ்வளவு கூறியும் அவளால் அவன்மீதான தன் ஊடலைக் கைவிட முடியவில்லை.
இவ்விதம் ஆரம்பித்த அவளுக்கும் அவள் கணவனுக்குமிடையிலான ஊடல் மேலும் சில நாட்களாகத் தொடர ஆரம்பித்தது.
ராமச்சந்திரன் எவ்வளவோ முயற்சி செய்தும் அவள் தன் கோபத்தை மாற்றவேயில்லை. அவனுக்கு பானுவைப் பற்றித் தெரியும். அவளொரு முடிவை எடுத்துக்கொண்டால் அவ்வளவுதான். உடும்புப் பிடியாக அதனைப் பிடித்துக்கொள்வாள். தானாக அந்த முடிவு தவறென்று உணர்ந்துகொள்ளும்வரையில் அவள் தன் முடிவை மாற்றிக்கொள்ள மாட்டாள். அதுவரையில் விட்டுப் பிடிப்பதைத்தவிர வேறு வழியில்லை.
9.
நாட்கள் மேலும் சில ஓடி மறைந்தன. பானுமதி கணனிப் பக்கமே செல்லவில்லை. இணையத்தின் வாயிலாக மீண்டும் சேகரன் வந்துவிடுவானேயென்பதும் முக்கியமானதொரு காரணம். இருந்தாலும் ராமச்சந்திரன் தன்மேல் சந்தேகம் கொள்வதுபோன்றதொரு தொனியில் அவ்விதம் கூறியிருக்கக் கூடாதென்று பட்டது. என்னிடம் உண்மையிலேயே சந்தேகம் இல்லாமலிருந்தால் அவன் சேகரனுடன் பழகுவதைத் தவிர்க்க வேண்டுமென்று கூறியிருப்பானா? சேகரன் என்ன நினைத்தாலும் என்ன? என்னை அவை ஒருபோதுமே பாதிக்கப்போவதில்லையென்பதை ஏன் அவரால் உணர்ந்து கொள்ள முடியாமல் போய்விட்டது. அதனைத்தான் அவளால் தாங்கிக்கொள்ள முடியவில்லை. தான் சேகரனின் மின்னஞ்சல், ‘சாட்’ பற்றியெல்லாம் எந்தவித ஒளிவு மறைவில்லாமல் அவனிடம் கூறிய பின்னரும் கூட அவனாலேன் அவளைப் புரிந்துகொள்ள முடியவில்லை. உண்மையில் அவன் “பானு, சேகரனின் நிலை தவறானதென்பதை அவனுக்கு விளக்கிப் பிரிவதுதான் நல்லது. அல்லது பிரிவதென்பதுகூட தேவையற்ற ஒன்று. இளம்பருவது உணர்வுகளைப் பெரிதாக எடுத்து வாழ்க்கையைப் பாழாக்கிக்கொள்ளக்கூடாதென்பதை அவனுக்கு உணர்த்தவேண்டும்” என்று கூறியிருந்தால் அவள் எவ்வளவுதூரம் மகிழ்ந்திருப்பாள்.
10.
அன்று வழக்கம்போல் ராமச்சந்திரன் வேலைக்குப் போய்விட்டிருந்தான். அவர்களுக்கிடையிலான ஊடல் ஆரம்பித்து வாரம் ஒன்றினைக் கடந்து விட்டிருந்தது. அன்று நண்பகல் நீண்ட நாட்களுக்குப் பின் அவளது சிநேகிதி வசந்தா வந்திருந்தாள். அவளுக்கும் அவள் கணவனுக்குமிடையில் இவ்விதமானதொரு ஊடல் ஆரம்பித்திருக்குமிந்த சமயத்தில் வசந்தா வந்திருந்ததும் நல்லதாகவே பட்டது. அவளிடம் மனம் விட்டு தன் நிலைமையினை விபரித்தாள்.
“வசந்தா, எனக்கென்னவென்றால் சந்திரன் இப்படி என்னைச் சந்தேகப்பட்டிருக்கவே கூடாது. அப்படி அவர் சந்தேகம் கொண்டிருப்பதுபோன்ற தொனியில் என்னிடம் அவர் அவ்விதம் கூறியிருக்கக் கூடாது.”
“பானு, எனக்கென்னவென்றால் நீ சொல்வது சரியாகப் படவில்லை. நீ சந்திரனை இவ்வளவு குறைவாக எடை போடுவது அவ்வளவு சரியில்லை.”
“உண்மையிலேயே என்னை அவர் நம்புபவராகவிருந்தால் , நான் அவரிடம் எந்தவித சம்பவங்களையும் மறைக்காமல் கூறியிருந்தும்கூட, அவர் என்னைச் சேகரனுடன் பழகுவதைத் தவிர்க்கும்படி கூறியிருப்பாரா? அதனைத்தான் என்னால் தாங்கமுடியவில்லை. உண்மையில் சேகரன் கூட என்னுடன் இதுவரையில் எல்லைமீறிப் பழகவில்லை. என்னை அவனால் மறக்கமுடியவில்லை என்பதை எந்தவிதத் தயக்கமும் இல்லாமல் வெளிப்படுத்தியிருந்தான். இவ்வளவு காலமாக என்னை நினைக்காமல் ஒரு நாளைக் கூட அவன் கழித்ததில்லையென்று கூறியிருந்தான். ‘மாததிற்கு ஒருமுறையோ இல்லை வருசத்துக்கு ஒருமுறையோ நான் உம்முடன் இதைப் போலை உரையாடவேண்டும். நீர் உம்முடைய வாழ்க்கையிலை சந்தோசமாக இருக்க வேண்டும். அதுதான் என் ஆசை. விருப்பம். வேண்டுதலெல்லாம். அதே சமயம்.. உம்முடன் அவ்வப்போது இப்பிடிக் கதைப்பதால் எனக்கும் கொஞ்சம் ஆறுதலாக இருக்கும். நீர் தான் எனக்கு இந்தப் பிறப்பிலை கிடைக்கவில்லை. இருந்தாலும் இப்பிடியொரு சந்தர்ப்பமாவது உம்முடன் கதைக்க ஏற்படுகிறதே..’ என்றுதான்
கேட்டிருந்தான். இது பெரிய தவறாக எனக்குப் படவில்லை”
இவ்விதம் பானு கூறவும் அதனைக் கேட்டவண்ணமிருந்த வசந்தா மேலும் சிறிது நேரம் மெளனம் காத்தாள்; பின் கூறினாள்: “நீர் சொல்வது ஒருவிதத்தில் தர்க்கத்திற்குச் சரியாக இருக்கலாம். ஆனால் சேகரனை நினைத்துப் பாரும். அவனை நம்பி அவனது மனைவி, மகள் எல்லோரும் இருக்கிறார்கள். போதாதற்கு சேகரனும் தன் மனைவியிடம் உம்மை விரும்பியதைப் பற்றிக் கூறியிருக்கின்றான். அதன் காரணமாகவே இவ்வளவு வருடங்களாக மனைவியுடன் அவ்வப்போது சண்டை போடுவதாக அவனது வாழ்க்கை போவதாகக் கூறியிருந்தீர். இந்த நிலையில் இந்த நட்பை விட உங்கள் இருவரும் வாழும் திருமண வாழ்க்கைதான் என்னைப் பொறுத்தவரையில் முக்கியமாக எனக்குப் படுகிறது. திருமணம் என்பது அடிப்படையில் ஒருவித சட்டரீதியான ஒப்பந்தமும்கூடத்தான். அந்த ஒப்பந்தம் முறிந்துவிடாமல் இருக்கவேண்டுமானால் இத்தகைய உணர்வுகளின் தாக்கத்திலிருந்தும் சிலநேரங்களில் மீளத்தான் வேண்டும். சேகரன் உம்மை விரும்புவது அவனது உரிமை. அவனது நல்ல வாழ்வுக்காக வேண்டுவது உமது உரிமை. ஆனால் அதே சமயம் சந்திரன் கூறுவதுபோல் இருவரும் பழைய ஞாபகங்களுடன் பழகுவதென்பது எனக்கும் நல்லதாகப் படவில்லை. இருவரும் நண்பர்களாக இருக்கவேண்டுமென்று சேகரன் விரும்பியிருந்தால் ஓரளவுக்கு ஏற்றுக்கொள்ளலாம். ஆனால் அவன் உம்முடன் கதைப்பதால் ஆறுதலாக இருக்குமென்று வேண்டுகின்றான். பழைய உறவின் அடிப்படையில் அந்த வேண்டுகோளை அவன் விடுக்கிறான். அதை என்னால் ஏற்றுக் கொள்ள முடியாது. நான் ஒன்று கேட்கிறேன். ஒளிவு மறைவில்லாமல் பதில் கூறுவீரா?”
பானு அதற்குச் சம்மதத்திற்கடையாளமாகத் தலையாட்டினாள். வசந்தாவே தொடர்ந்தாள்: “சந்திரன் திடீரென ஒருநாள் வந்து இதே மாதிரியொரு கதையினைக் கூறி, அவரது முன்னாள் காதலியுடன் தொடர்ந்து உறவினைப் பேணப்போவதாகக் கூறினால் ஏற்றுக்கொள்வீரா?”
வசந்தாவின் இந்தக் கேள்வி பானுவைப் பலமாகவே தாக்கியது. ஒருபோதுமே தன்னால் அதனை ஏற்றுக்கொள்ள முடியாதென்றுபட்டது. இதுவரை தான் ஏன் அந்தக் கோணதில் சிந்திக்காமல் போய் விட்டோமென்று பட்டது. மனம் இந்த விடயத்தில் தெளிவொன்றை அடைந்ததுபோன்றதொரு உணர்வு ஏற்பட்டது. இணையத் தொழில்நுட்பம் மனிதர்களுக்கிடையிலான எல்லைகளைக் குறுக்கி விட்ட அதே சமயம், உறவுகளுக்கிடையிலும் பல்வேறு வகைகளில் இது போன்ற உறவுச் சிக்கல்களையும் உருவாக்கி விடுவதாகவே அவள் உணர்ந்தாள்.
வசந்தா கூறினாள்: “பானு, பிள்ளைக்காதலென்பது பிள்ளைக்காதலாகவே இருந்து விடவேண்டும். பால்ய காலத்து சம்பவங்களை இன்றைய காலகட்டத்திலிருந்து நினைத்து மகிழ்வதைப்போல், பிள்ளைக் காதலையும் எண்ணி மகிழ்வதுடன் நிறுத்திக்கொள்ளவேண்டும். அந்த காலகட்டத்தில் இதுபோன்ற உறவுகள், உணர்வுகள் ஏற்படுவதெல்லாம் மனிதர்களின் வாழ்க்கை வளர்ச்சியின் பரிணாமப் படிக்கட்டுக்களாகத்தான் கருத வேண்டும்.”
இவ்விதமாக தோழிகளிருவருக்குமிடையில் உரையாடல் நெடுநேரமாக நடந்தது. வசந்தா போய் நெடுநேரமாகியும் பானுவின் சிந்தையில் அவள் கூறிய விடயங்களே ஞாபகத்திற்கு வந்தவண்ணமிருந்தன. ‘பிள்ளைக் காதலை’ப்பற்றி எவ்வளவு இலகுவாக அவள் விளக்கிவிட்டாள். கடந்த ஒரு வாரமாகவே கணவனுடன் ஊடியிருந்ததை எண்ணிப் பார்த்தபோது அது சிறுபிள்ளைத்தனமாகவே பட்டது. அன்று வேலை முடிந்து வரும் கணவனை நினைத்து மனம் ஏங்கத் தொடங்கியது. ஊடலிற்குப் பின் கூடுவதிலிருக்கும் இன்பத்தை எண்ணியவளாகக் காத்திருப்பதிலும் எல்லையற்றதோரின்பம் இருப்பதாகவே பட்டது. முதிர்ந்த காதலின் வெற்றியது.
நன்றி: பதிவுகள்
- யாவும் கற்பனை -
•This e-mail address is being protected from spambots. You need JavaScript enabled to view it•
•<• •Prev• | •Next• •>• |
---|