காலை வானம் வெளிறிப் போயிருந்தது. நிலவு எங்கோ சென்று தொலைந்து போய்விட்டிருந்தது. மேகங்களின் கூட்டணி ராட்சத உருவங்களைக் கலைத்துப் போட்டுப் போனது. இப்படி காலை நேரத்து வானத்தை வேடிக்கை பார்த்து ரொம்ப நாளாகி விட்டது முத்து லட்சுமிக்கு.புறாக்கூண்டை விட்டு ரெண்டு நாள் விடுமுறை என்று பெனாசிர் சொல்லியிருந்தாள். புறாக்கூண்டு இப்படி நெருக்கமாக இருக்குமா. அலைந்து திரிய இடமில்லாமல் போய் விடலாம். ஆனால் நின்று கொண்டுத் தூங்குவதற்கு இடம் கிடைத்து விடும். புறாகூண்டு வீடு என்பதற்கு பதிலாக லைன் வீடு என்று சுலபமாகச் சொல்லிவிடலாம் என்று முத்துலட்சுமி நினைப்பாள்.
பெனாசிர் ஊருக்குப் போகிறாள். காலைப் பயணம் சுலபமாக இருக்கும் என்பதால் கிளம்பிவிட்டாள். பனிரண்டு மணி நேரப் பயணம். அவசரமாய் வரச் சொல்லி தகவல் வந்திருந்தது. சின்ன சீட்டு ஒன்று எடுத்த பணமும் பெனாசீர் கைவசம் இருந்தது.
“என்னமோ ரகசியம் மாதிரி வா. வான்னு கூப்புடறாங்க. அப்பா, அம்மா யாராச்சுக்கும் உடம்பு செரியில்லாமப் போயிருக்கும்.”
“இல்லே வேற விசேசம்ன்னு இருக்கலாமில்லே”
“அப்பிடி ஒன்றும் தெரியலெ”
“ஊருக்குப் போன தெரிஞ்சிடப் போகுது”
ரேஷன் கடைக்குப் போய் அவமானப்பட்டதைப் பற்றி சற்று உரக்கவே பேசி சண்டை இட வேண்டும் என்று நினைத்திருந்தாள் முத்துலட்சுமி. ஆனால் இரவில் தாமதமாக வந்த அவள் ஊருக்குப் போகவிருப்பதைச் சொன்னபின் அதைப்பற்றி விரிவாய் பேசவில்லை.ரேஷன் கடையில் பார்வையில் பட்ட அந்த இளைஞனை அவனின் புது உடையை முன்னிட்டு வெறித்துப் பார்த்திருக்கக் கூடாது என்று பட்டது. முத்து லட்சுமிக்கு, அவன் ஜீன்ஸ் கீழ் உடையில் கிழிசல்கள் இருந்தன. சட்டையிலும் ஓட்டைகள் இருந்தன. காதில் கடுக்கன் போட்டிருந்தான். தலையில் இருந்த கறுத்த மயிர்களைப் பிரித்தெடுத்தமாதிரி பிரவுன் வர்ணம் போடப்பட்டிருந்தது.
“உங்களுக்குன்னு தனி க்யூ இல்லே”
“தெரியும்”
“உங்களுக்குன்னு தனி இரண்டாவது கியூ இல்லெ”
“தெரியும்னேன்”
“அது.... ஊனம் சார்ந்த கியூ”
“அதுவும் தெரியும்ன்னேன்”
“புரிஞ்சுகிட்டா சரி”
“செரி போ”
“ரேசன் கார்டுலெ இன்னொரு சீட் ஒட்ட வந்திருக்கீங்க, உங்க கையிலயும் இன்னொன்னே ஒட்டிக்கலாம்”
“பேச்சு எல்லை மீறுது”
“யோசனையாத்தா சொன்னேன்”
“என்ன யோசனை”
“ யோசிக்கறதுதா “
“செயற்கை கை வெச்சுக்கிறது”
“செரிப்பட்டு வருமா தெரியலே”
“ஒரு கையோட வாழ்க்கை முழுக்க இருக்க முடியுமா, ஒரு கை ஓசை ஆகுமா”
“எல்லாம் செரிதா, ரெண்டு கை வெச்சிட்டுப் பண்றதை ஒரு கையில் பண்ணிக்க வேண்டியதுதா”
“ரொம்பவும் சரியான்னு தோணலே”
“ஏதோ க்யூ வரிசையில நிற்கிறோம். முன்னால நிக்கிறீங்கன்னு நீங்க சொல்றத கேட்டுக்க வேண்டியிருக்கு”
“யாராச்சும் சொல்ல வேண்டியெதெ நான் சொல்றன்”
“அதுக்காக எது வேண்ணாலும் சொல்ல்லாமா,,,”
“பட்டதைச் சொன்னேன்”
“பரவாயில்லெ”
அதற்குள் வரிசை நகர்ந்து ரேசன் கடைக்காரர் முன் வந்து நிறுத்திவிட்டது.பக்கத்தில் இருப்பவர் நீள மஞ்சள் அட்டையை வைத்திருந்தார்.சில வெள்ளை அட்டைகளும் தென்பட்டன. சர்க்கரைக்கென்று தனி அட்டை இருக்குமா. அட்டை என்று எதிலும் பேர் இல்லை. அப்பா பெயரில் ஒட்டிக் கொண்டிருந்த்து இப்போது நீக்கப்ப்பட்டிருக்கலாம்.உள் தாள்கள் எல்லாவற்றிலும் ஏகதேசம் துருத்திக் கொண்டிருந்தன.
“என்ன கார்டுலெ ஆம்பள பேர் இருக்குது”
“ஆமாங்க”
“நீங்க ஆம்பளையா”
“வீட்டு ஓனர் கார்டு”
“பொம்பளைதானே நீங்க”
“செரி.... இதுக்கு ஆராய்ச்சி வேணுமா”
“நீங்க நிக்கிறதப் பாத்தா ஆராய்ச்சி பண்ணனும்னு தோனுது”
“என்னன்னு”
“திருநங்கையோன்னு”
“அய்யோ போதும்”
“செரிம்மா, எதுக்கு அனாவசியப் பேச்சு, வீட்டுக்காரரை வரச் சொல்லு”
“அதுதா ”
“வீட்டு ஓனரை”
“வரச் சொல்றன்”
வீட்டு சொந்தக்கார்ர் சென்னப்பன் மீது எரிச்சலும் கோபமும் வந்தது. முன்னால் நின்று கேள்வி கேட்டவனின் மேல் எரிச்சலும் கோபமும் வந்தது. தன்னை எங்கோ கொண்டு போய் தள்ளிவிட்ட பெனாசிர் மீது கோபம் வந்தது. வேலையில்லாமல் சும்மா இருப்பவள் என்று எங்காவது துரத்தி விடுகிறார்கள்.
“ஒண்ணு கேக்கறம்ன்னு தப்பா நெனைக்காதீங்க அக்கா”
“செரி சொல்லு. எங்க குடும்பத்தைப் பத்திக் கேக்காதே”
“என்னைப் பத்திதா அக்கா”
“உங்க வீட்டுக்கு வந்து தங்கினன், என்னை மில்லுக்கு அனுப்பனும்னு உங்களுக்கு எப்பிடித் தோணிச்சு”
“என்னோட பனியன் கம்பனிக்குக் கூட்டிட்டுப் போலாமுன்னுதா நெனச்சன். அவங்க மொதல்ல கூட்டற பொறுக்கற வேலைதா குடுப்பாங்க. செக்கிங்ன்னு வர்றதுக்கு மாசக் கணக்காயிடும். என்ன செய்யறதுன்னு பசீர்கிட்ட கேட்டன். நம்ம ஒத்த லைன்ல ஆறாவது வீட்லெ இருக்கறவர், அவர் மில் புரோக்கர், ஸ்டீபன்னு ஒருத்தர்கிட்ட வேண்ணா சொல்றன்னார்”
“இல்லே, நீங்களே புரோக்கர்ன்னு திடீர்ன்னு சந்தேகம் வந்துச்சு”
“நான் புரோக்கரா இருந்தா எதுக்கு பனியன் கம்பனியில கெடக்குறன். அந்த வருமானமே போதுமே. ஆனா சங்கடமால்லே இருக்கும் ”
“புரோக்கர் ஆக ஆசையா”
“வேண்டா, எங்க, என்ன நடக்குமோ, அது பின்னே என் தலைமேல வந்து விழுந்திரும். புரோக்கர் வேலை பண்றதெக்கல்லாம் மன தைரியம் வேணும், பொய்யும் சுலபமா சொல்லணும், அல்லா குடுத்த இந்த வகை நிம்மதி போதும். ஆயிரம் ரூபா கெடைக்குதுன்னு யாரை எங்க தள்ளறம்னு வெவஸ்தையில்லாமத் தள்ளிருவாங்க. பாவம் எங்கெங்கையோ போய்ச் சேரும்.”
“என்னமோ ஒரு சந்தேகம் வந்துச்சக்கா”
“நிவர்த்தி பண்ணிட்டையே, நல்லதுதா”
ஆனாலும் பெனாசீர் மீது ஏன் கோபம் வருகிறது. எரிச்சல் வருகிறது. தெரிந்த முகத்தின் மீதே காறித் துப்ப முடியும். தெரிந்தவர்கள் மீதே எரிச்சல் வருகிறதா, இந்த எரிச்சலை அவள் புரிந்து கொண்டால் என்ன நடக்கும். இனி யாருக்கும் உதவி செய்ய வேண்டாம் என்ற தீர்மானம் வரும்.
இரவே முத்து லட்சுமி புளிச்சாதம் தயார் செய்திருந்தாள். காலை முழிப்பில் அவசரமாய் எழுந்து தேங்காய் சாதமும் செய்துவிட்டாள்.சாதங்களின் மணங்களில் அறை கமகமத்துக் கொண்டிருந்தௌ. பட்டினியும், போதாத சோறும் கிடைக்கிற இடத்தில்தான் இந்த அபூர்வ மணம் தெரிய வரும்.
“புளிச் சோறு ஊருல இருக்கறவங்களுக்கும் சேத்து செஞ்சிருக்கே போல”
புளிச் சோறின் மணம் கமகமவென அறை முழுக்க நிரம்பி இருந்தது. கொஞ்சம் வேர்க்கடலையைச் சேர்த்து கலவையாக்கியிருந்தாள். அது வானத்து வெளிறிய நட்சத்திரங்கள் போல் மின்னின.
“ஒரு வா சாப்புடு அக்கா”
பெனாசீர் ஒவ்வொரு வேளை சாப்பாட்டிற்கு முன்பு ஒரு சிறு வெங்காயம், ஒரு துண்டு நெல்லிக்காய், பனை வெல்லம் ஒரு துண்டு என்று சாப்பிடுவாள். யாரோ சொல்லி வைத்திருக்கிறார்கள். புளிப்பு, இனிப்பு வெங்காயம் என்று ஒவ்வொரு வேளைக்கு முன்பும் சாப்பிட்டு வழக்கமான சாப்பாட்டிற்குப் போனால் அதுவே உடம்பிற்கு எதிர்ப்புச் சக்தி தரும் என்று. அதைத் தவறாமல் கடைபிடிப்பாள்.
“இந்த சாக்கடை ஊர்ல கொஞ்சம் நோய் இல்லாமெ வாழறதுதா பெரிய போனஸ்”
மில்லில் வேலை செய்கிறவர்களுக்கு மில் நிர்வாகமே வெல்லம் தரும். வாயுள் போகும் பஞ்சு கரைந்து போகப் பனைவெல்லம் நல்ல மருந்து என்று கேள்விப்பட்டிருக்கிறாள். முத்துலட்சுமி சுமங்கலித் திட்டத்தில் வேலை செய்த மில்லில் அதெல்லாம் தரவில்லை. முகமூடி போன்று தந்தார்கள். மூக்கை மூடிக் கொள்ளலாம். இன்னும் கொஞ்சம் இறுக்கிக் கொண்டால் மூச்சுத் திணறுவது போல் இருக்கும்.
அது நாலு நாளில் நாற்றமடிக்கும் என்று பலர் அணிந்து கொள்வதில்லை. பெனாசீர் செய்வதைப் போன்று தானும் செய்ய நினைப்பாள். “நெல்லிக்காய் கெடைக்கும். இதை நம்ம லைன் வீட்ல இருந்த ஒருத்தர் சொன்னார். அவர் நெல்லிக்காய்க்குப் பதிலா சின்ன தேங்காய்த் துண்டு சாப்பிடுவார். ஒடம்பை ஜாக்கிரதையா வெச்சிட்டா மரியாதையா இருக்கும்.”
மாலை நேரத்தில் லைன் வீட்டுப் பெண்கள் கோலம் போட வாசலில் இருப்பார்கள். மற்றபடி தொலைக்காட்சியைப் பார்த்தபடி வீட்டினுள்ளேயே கிடந்தார்கள். கணவர்களை வரவேற்க யாரும் வீட்டு வாசலில் வந்து உட்காருவதில்லை.
“இது பெரிய ஆபீஸ் வேலையா என்ன. கரெக்டானா டைமுக்கு வந்து போறதுக்கு. எப்ப வேண்ணா வருவாங்க. போவாங்க. பனியன் கம்பெனி வேலை அப்படி”
ஐந்தாம் வீட்டு கோபண்ணன் வீட்டில் இருக்கிறாரா என்று கண்டுபிடிக்க முடியாது. இரவில் தாறுமாறான நேரத்தில் வருவார். வரும்போதே தள்ளாடின போதையில் இருப்பார். தள்ளாடாமல் அவர் வந்த நாளை எண்னி விடலாம் என்று அவன் மனைவியும் சொல்லியிருக்கிறாள்.
கதவு அடைத்தால் அவ்வளவுதான். யாரும் திறக்கமாட்டார்கள். காலையில் சாப்பாட்டுப் பையை எடுத்துக் கொண்டு கிளம்பினால் இரவுதான் வருவார். பெரும்பாலும் எல்லா வீட்டு ஆண்களும் இங்கு இப்படித்தான் என்று பெனாசீர் சொல்லியிருக்கிறாள்.
“வெந்ததைத் தின்னு விதி வந்தா செத்தும் போறதுக்கு உதாரணம் இந்த காம்பவுண்ட் ஜனங்க. இந்த ஒத்த வீட்டு ஜனங்க ”
“தீபாவளிக்குன்னு வந்து ஒண்ணா பட்டாசு வெடிப்பாங்களா”
“எல்லாருமே வெளியூர்க்காரங்க. தீபாவளி வந்தா மூணு நாள் முந்தியே ஊருக்குப் போற அவசரத்திலேயே இருப்பாங்க. திருவண்ணாமலை தீபம் வர்றப்போ தீபாவளியை நெனச்சிட்டுப் பட்டாசு வெடிச்சுக்குவாங்க. இப்பதா வெளியூர்க்காரங்கன்னா ஆந்திரா, கேரளம்ன்னு இல்லாமெ, நேபாள், ஒரிசா, பெங்கால்காரங்கன்னு ஆகிப்போச்சே”
“யார் யாருக்கு வாடகைக்குத் தர்ரதுன்னு எல்லையே கெடையாது. யார் வந்து கேட்டாலும், அட்வான்ஸ் குடுக்கத் தயாராக இருந்தால் வீடு கெடச்சிடும். வர்றவங்க எப்பிடி இருந்தாலும் செரி”
வீட்டுக்காரர் தென்னம்பாளையத்தில் இருந்தார். வாடகை முதல் வார ஞாயிறில் வசூலிக்க வருவார். இல்லாவிட்டால் இரண்டாம் வீட்டில் இருக்கும் கோவிந்த் வாங்கி வைத்துக் கொள்வார். இருக்கும் மூன்று கழிவறைகள், மூன்று குளியலறைகளைப் பயன்படுத்துவதில் சிரமங்களோ, பிரச்சினைகளோ இருந்தால் சென்னப்பனே பார்த்துக் கொள்வார். சாக்கடை அடைத்துவிட்டது, தண்ணீர் போகவில்லை இரண்டு நல்ல தண்ணீர் குழாய் தண்ணீரைப் பிரித்துக் கொள்வதில் எல்லாவற்றுக்கும் ஒரு நாயகமாக சென்னப்பன் இருப்பார். இது சம்பந்தமாய் அவர் மனைவியிடம் ஆலோசனை சொல்வார். அதை மட்டும் கன்னடத்தில் சொல்வார்.அப்போது கன்னடம் அதிகாரத்தில் வந்து நிற்கும்.
லைன் வீடுகளில் நடக்கும் சிரமங்கள் பற்றி அவர் நேரம் கிடைக்கையில் சொல்வார். பத்மாவதிபுரம் லைன் வீட்டொன்றில் ஒருவன் புதிதாக குடி வந்திருக்கிறான். அவன் சாயப்பட்டறையில் வேலை செய்யும் சக தொழிலாளயின் மனைவியைக் கூட்டி வந்து குடித்தனம் நடத்தி இருக்கிறான். ஒரு நாள் பழைய கணவன் சாயப்பட்டறை அமில பாட்டிலுடன் வந்து வீசி ஊற்றியிருக்கிறான். ஆணின் உடை போடாத இடமெல்லாம் வெந்துவிட்டன. முகம் கொப்பளித்துவிட்டது. ஆடை மூடின பகுதிகள் ஒட்டிக் கொண்டுவிட்டன. முப்பது சதவீதம் தீக்காயம் போலாகிவிட்டது. லைன் வீட்டிலேயே இது நடந்ததால் பெரும் பிரச்சினையாகி காவல்துறையினர் வந்து சிரமப்படுத்தியிருக்கிறார்கள்.
“இங்க எல்லாரும் குடிகாரப் பயல்களா இருக்கிறதுனாலே குடிச்சிட்டு பிளாட் ஆகிறதுக்கே நேரம் இல்லாம இருக்கு. இது சௌகரியந்தா”
“என்னங்க சௌக்கியம், குடிச்சிட்டு கெடக்கிறதா”
“இல்லீன்னா ஊர் வம்பை வெலைக்கு வாங்குவாங்க. யார் பின்னாலேயாச்சும் திரிஞ்சு பிரச்சினையில மாட்டிக்குவாங்க”
அப்படிக் குடித்துவிட்டு ஆட்டம் போட்ட நேபாளிகள் இருவரைப் பற்றி சென்னப்பன் பெனாசிரிடம் சொல்லிக் கொண்டிருந்தார்” சாயப்பட்டறையில் அந்த நேபாளிகளுக்கு வேலை. ரெண்டு பேரும் சின்ன வயது. குடி மயக்கத்தில் என்ன பண்றாங்கன்னு தெரியாமெ கம்பரசர் காத்து டியூப்பை எடுத்து ஒருத்தன் இன்னொருத்தன் ஆசன வாயில் வெச்சிட்டான். அவன் வயிறு உப்பி வெடிச்சு செத்துப் போயிட்டான். ஏழு வருசம் ஜெயில். நாலு பேர் வாழ்க்கை போச்சு”
“ரெண்டு பேர்தானே”
“ஆமா, செத்துப் போனவன் ஒருத்தன். காத்து பைப் வைச்சவன் ஒருத்தன். அவனுகளுக்கு பொண்டாட்டின்னு ரெண்டு பேரும் இருக்காங்கில்லயா, அதுதா நாலு பேரு”
பேருந்து நிறுத்தம் வரை கூட வருவதாய் கிளம்பினாள் முத்துலட்சுமி.எதிலும் அவசரமில்லாத பொழுதுதான் அங்கும் எல்லோரையும் விரட்டிக் கொண்டிருப்பதாகத் தோன்றியது.
“சாப்பாட்டுப் பைன்னு ஒண்ணு தனியா இருக்கேக்கா”
“வீட்லே சமையலுக்குன்னு நீ வந்தப்துபுறம் சாப்பாடு கொஞ்சம் அதிகமாய் போச்சு. ரெண்டு வாய் அதிகமா எறங்குது. ருசியா வெவ்வேறயா சமச்சும் போடற, இன்னிக்கு மட்டன் எடுக்கிறா வேற சொன்னேன்”
“வந்தப்புறம் எடுத்தர்லாம். காடை கெடச்சாலும் செரி”
சண்டே மார்க்கெட் என்று புதியதாய் ஒன்று கிளம்பியிருந்தது. அங்கு சிக்கன் வாங்கப் போன முத்து லட்சுமிக்கு ஒரு புதுத் தகவல் கிடைத்தது. ஜனதா சிக்கன் என்று ஒரு வகை சண்டே மார்க்கெட்டில் கொடி கட்டிப் பறந்தது. ஒரியாக்காரர்கள் அதில் ஜனதா சிக்கனுக்குக் காத்திருந்தார்கள். மிச்சமாகிற எலும்பில்கொஞ்சம் சதைத் துணுக்குகள் ஒட்டிக் கொண்டிருக்கும். கொஞ்சம் சதையும், எலும்பும் கலந்திருக்கும் அதை பிரிசரில் போட்டு வைத்திருக்கிறார்கள். வழக்கமான விலையை விடக் குறைவு. சூப்புப் போலக் குடிக்கலாம். மசாலா பொடி போட்டுக் குழம்பாக்கிக் கொள்ளலாம்.
ஒருவாரம் ஜனதா சிக்கன் போட்டாள்.ருசி பார்க்கலாம் என்று சொன்னாள்.
“அதுக்கு பெரிய டிமாண்ட் அக்கா, க்யூ நிக்கிறாங்க. பாவப்பட்ட ஜனங்களாத்தா இருக்கணும்”
காடை கவுதாரின்னு போயி கெடைக்காத போது ஜனதா சிக்கன் ஒரு நா வாங்கிட்டு வந்த்தான் ஸ்வர்ணவேல்.
சாப்பாட்டுப் பையை முத்துலட்சுமி எடுத்துக் கொண்டாள். துணிப்பையை பெனாசிர் தோளில் மாட்டிக் கொண்டாள்.கனமான இறக்கைகள் முளைத்தது போலிருந்தது.
“துணிப்பையைப் பாக்கிறப்போ, அக்கா நீ வர ரொம்ப நாளாகுமோன்னு பயமா இருக்கு”
“அதெல்லா இல்லடி”
“நீ உடுத்தியிருக்கிற புதுப் புடவையைப் பாக்கறப்போ ஏதோ விசேசம்ன்னு தோணுதுக்“ ஊர்லே ஏதாச்சும் விசேசமாக்கா.. சொல்லக்கா “
“ தெரியலே. வா வான்னு வாப்பா கூப்புட்டே இருக்கார். போயிட்டுதா வர்றதுன்னு கெளம்பிட்டேன்.”
“ என்னமோ சந்தேகம் வந்துச்சு “
“அதெல்லா ஒண்ணுமில்ல. எதை வுடுத்தினாலும் வெளுத்துப் போன மாதிரி இருக்குது. அதனால் போன மாசம் எடுத்த புதிசெ உடுத்திட்டேன்”
பெனாசிர் முகத்தில் தெரிந்த தெளிவு ஏதோ விசேசம் போல் எண்ணத் தோன்றியது முத்து லட்சுமிக்கு . அப்படி அவள் ஊரிலேயே ஒதுங்கிக் கொண்டு விட்டால் தன் நிலைமை என்ன வாகும். இன்னொரு அறை தேட வேண்டும். நாலைந்து பெண்கள் இருக்கும் அறைதான் அவள் மனதில் இருந்தன. பெனாசிரிருடன் இருப்பது போல் இரண்டு பேர் இருக்கும் அறை கிடைப்பது சிரமம்தான். அதற்குள் இன்னொரு வேலை தேட வேண்டும். வேலை கேட்கப் போகிற இடங்களிலெல்லாம் இடது கையை விலக்கி காட்டவேண்டியிருக்கிறது. நடந்த விபத்து பற்றி விரிவாய் சொல்ல வேண்டியிருக்கிறது.
மில் நிர்வாகம் தந்த பணத்தை அவளை மில் வேலையில் சேர்த்து விட்ட புரோக்கர் ஸ்டீபனிடம் தந்து விட்டதாகச் சொன்னார்கள். “ நீ வந்து சேர்ரப்போ நீ குடுத்த லெட்டர்லெ நீ அவனுக்கு பொதுவா ஆதரைஸ் பண்ணித் தந்ததும் இருந்துச்சே , அதனாலதா தந்தம். வெளிப்படையா தர முடியாத நஷ்ட ஈட்டுத் தொகைன்னாலே அவனே வாங்கிட்டுத் தந்தர்ன்னு போனான்” . ஸ்வரணவேலுவுடன் ஸ்டீபனின் ஊருக்கு அவனைத் தேடி போகத் திட்டமிட்டிருந்தாள். ஸ்வர்ணவேலுவைப் பார்ப்பது அபூர்வமாகி விட்டது பின்னர்.
காலை நேரத்துக் குளுமையை அனுபவிக்கிறவர்கள் மாதிரி நடந்து கொண்டிருந்தார்கள். பேருந்து நிறுத்த நிழல் குடையில் படுத்துக் கொண்டிருந்தவர்கள் மரக் கட்டைகளை சேர்த்து வைத்த மாதிரி கிடந்தார்கள். உயரமான நியான் விளக்கின் கீழ் நிழல் விழுந்து கிடந்தது. அதன் உச்சி வானத்து நீலத்தைக் கரைத்திருந்த்து.
“திரும்பி தனியா நடந்து போவே”
“பரவாயில்லேக்கா”
“காலையில இப்பிடி நடந்து எவ்வளவு நாளாச்சு முத்து. ஆசைப்பட்டு நடக்கக் கூட நேரம் வாய்க்கறதில்லே. ஆசைப்பட்டாலும் நடக்க முடியுமான்னு தோணலே. ஜாக்கிரதையா இரு. பொழுது போகலீன்னா, செல்வி அக்காகிட்ட துணி வாங்கிப் பிரிச்சிட்டுக் கெட. பொழுது போகும். அடுத்து என்னன்னு ரெண்டு பேரும் யோசிக்கணும் போலிருக்கு”
ஏர் பேக்கிலிருந்து பாலிதீன் பை சுற்றப்பட்டதை எடுத்துத் தந்தாள் பெனாசீர். “புதுப் புடவை”
“இங்க வந்து தர்றியா” ஒற்றைக் கையை நீட்டி வாங்கிக் கொண்டாள்.
“ ஒத்தக்கயிலெ வாங்கிக்கறது அபசகுணமில்லைதானே..”
“ இல்லே..”
“ இருக்கற கையிலதானே வாங்க முடியும்.. “ மில் வேலையில் அவளின் கை துண்டாகியிருந்தது. தொடர்ந்து மூன்று ஷிப்ட் செய்த ஒரு நாள் காலையில் தான் அவளின் கை கோண் வையிண்டிங் இயந்திரத்தில் சிக்கி சிதைந்தது. அதன் பின் எங்காவது அடைக்கலம் கிடைக்குமா என்று தேடி பெனாசிரின் அறையைப் பகிர்ந்து கொண்டிருக்கிறாள்.. ஒரு மாதத்திற்கு மேலாகி விட்டது. ஒற்றைக் கையை வைத்துக் கொண்டு எந்த வேலைக்குப் போவது என்று தீர்மானமாகவில்லை. பார்க்கலாம் பார்க்கலாம் என்று பெனாசிர் பல தரம் சொல்லி ஆறுதல் தந்திருக்கிறாள்.
“வித்தியாசமா இருக்கட்டுமேன்னுதா, வீட்லெ குடுத்தா சாதாரணமா இருக்கும். போறப்போ குடுக்கலாமுன்னு வெச்சிருந்தன்.”
வலது புறத்தில் அன்னலட்சுமி பேக்கரியிலிருந்து மருதமலை மாமணியே பாடல் ஒலித்துக் கொண்டிருந்தது. கண்ணாடிகள் பலவகைக் கேக்குகளை வெளிச்சம் போட்டுக் காட்டின .
“எங்க ஊர் டெண்ட் கொட்டாய் ஞாபக்மே வருது முத்து. இந்தப் பாட்டுச் சத்தத்தைக் கேட்கறப்போ”
“எல்லார் ஊர் டெண்ட் கொட்டாய் ஞாபகமும் வரும், அந்தப் பாட்டைக் கேட்டா, ”
” டீசாப்புடலாமா”
“பஸ் வந்துருமே”
“அடுத்து வர்ற பஸ்லெ போலாம். பஸ்தா நெறைய கெடக்குதே”
“டீக்கடையில டீக் குடிச்சு ரொம்ப நாளாச்சு. மாசக் கணக்கில் இருக்கும்”
“நல்ல சமையல்காரிக வெளியெல்லா சாப்புட மாட்டாங்க”
பாலித்தீன் பையின் சலசலப்புடன் அவள் திரும்ப நடந்து கொண்டிருந்தாள். கோபாலன் பூக்கடை அருகில் இருவர் நிற்பது தெரிந்தது. அதில் ஒருவன் ஸ்வர்ணவேலு, அவன் பேசிக் கொண்டிருக்கும் பெண்ணை மாரியம்மன் கோவில் வாசலில் கூட அவனுடன் ஒரு தரம் நெருக்கமாகவே பார்த்திருக்கிறாள். இப்போதும் அவர்கள் நெருக்கமாகவே நின்று கொண்டிருந்தார்கள். ஸ்வர்ணவேலு முதுகைத் திருப்பி வைத்துக் கொண்டு பேசிக் கொண்டிருந்தான். அந்தப் பெண்ணின் முகம் இருட்டும் வெளிச்சமுமாய்த் தெரிந்தது. நல்ல களையான முகம்தான். களையான முகங்கள் அவளுக்கு எப்போதும் பொறாமையைத் தரும்.
நடையை விரைசலாக்கிக் கொண்டு பரபரத்தாள் முத்துலட்சுமி. வெள்ளிரிக்காய் போன்ற அவளின் இடது கையிலிருந்து சேலை இருந்த பாலித்தீன் பை நழுவப் பார்த்தது. மாரியம்மன் கோவில் கதவு திறந்து இருக்க உச்ச ஸ்தாயியில் மாரியம்மனைப் பற்றிய பாடல் ஒலிக்க ஆரம்பித்தது.
குமரன் வீதி முக்கில் களிமண் பொம்மைகள் பரவிக்கிடந்தன. தொந்தி பெருத்த விநாயகர்கள் ஏகமாய் இருந்தார்கள். தொந்தியைக் காட்டிக்கொண்டு திருஷ்டி பொம்மைகள் தென்பட்டன. பொம்மை வாங்கி நாளாகி விட்டது ஏதாவது வாங்க வேண்டும் என்பது மனதிலிருந்தது. ஆனால் இவை தண்ணிர் பட்டால் குழைந்து உருவம் காணாமல் போய் விடும். வீட்டு ஓட்டிலிருந்து சொட்டும் மழை நீர் கரைத்து விட்டு விடும். ” இதெல்லாம் களிமண் பொம்மையா “
“ பிளாஸ்டர் ஆப் பாரீஸ்.. அப்புற காகிதக்கூழ் “
“ தண்ணி பட்டா கரஞ்சு போயிருமா ” பதில் சொன்ன பெண்ணின் உடையில் வடநாட்டுத்தனம் இருந்தது.பாசிகளை கழுத்தில் கனமான மாலையாகியிருந்தாள்.கையிலும் பாசிகளை வளையல்கள் போல் போட்டிருந்தாள். ஒரு நிமிசம் வினோதமானப் பார்வையாய் முத்துலட்சுமி அவளை அளந்தாள். தன் உருவத்திற்கு வினோதமான ஆடைகளைப் போட்டு விட்டமாதிரி இருந்தது.
பேருந்து பெனாசிரை ஏற்றிப் போனபின் முத்துலட்சுமி தெற்கு முக்கு வந்துத் திரும்பிப் பார்த்தாள். ஸ்வர்ணவேலு தென்படவில்லை. அவனுடன் இது போல் வீதி முக்குகளில் பல தரம் அவள் நின்று பேசியிருக்கிறாள்.இன்று அவனுக்கு முழுக்கைகள் உள்ள பெண் தேவைப்பட்டிருக்கிறாள். ஊனமான தன் கை அவளை தெருவின் ஓரத்தில் கொண்டு வந்து விட்டதாக நினைப்பு வந்தது..சேலையைத் தாழ்த்தி ஊனமான இடது கையை மூடிக் கொண்டாள்.
தூரத்தில் பேருந்து புள்ளியாய் மறையும் வரை வீதி நீண்டிருப்பது ஆச்சர்யம் அளிப்பது போல் பார்த்தாள்.
•This e-mail address is being protected from spambots. You need JavaScript enabled to view it•
•<• •Prev• | •Next• •>• |
---|