புது வருடப்பிறப்புக்கு நாட்கள் நெருங்கிக்கொண்டிருக்கின்றன என்பது அவருக்குப் பயமாயிருந்தது. இன்னும் மூன்று கிழமைகளே இருக்கும் நிலையில் நாட்கள் ஒவ்வொன்றாகக் கடந்து போகப் போகப் பயம் அதிகரித்துக்கொண்டிருந்தது. எப்படிச் சமாளிக்கப்போகிறேனோ என்ற முளுசாட்டம். பிள்ளைகளுக்கு புத்தாடை உடுதுணிகள் வாங்கவேண்டும். ஐந்து பேருக்கும் வாங்குவதானால் எவ்வளவு தேவைப்படும்? அதற்கு எங்கே போவது?
போன வருடத்தைப்போல இந்த வருடமும் கடத்திவிடமுடியாது போலிருந்தது. மூத்த மகன் பிரகாஸ் ஏற்கனவே அவருக்குச் சொல்லிவிட்டான்.
'அப்பா…! எனக்கு இந்தமுறை வருடப்பிறப்புக்கு நீல சேர்ட் வாங்கித் தாங்கோ…! ஸ்கூலுக்கும் போடக்கூடியதாய் இருக்கும்!"
வருடப்பிறப்பு என்பது ஒரு சாட்டுத்தான். பிள்ளைகளுக்கு ஸ்கூலுக்குப் போடுவதற்கு உடை தேவைப்படுகிறது. மனைவி சரசுகூட அவருக்கு அவ்வப்போது சொல்லுவதுண்டு.
'ஒரு ஆமான உடுப்பில்லாமல் அதுகள் எப்படி ஸ்கூலுக்குப் போறது?"
அவர் அப்போது மனைவியைச் சினந்து பேசுவார்.
'என்ன சரசு?... நிலைமை தெரியாதமாதிரி கதைக்கிறீர்…என்னை என்ன செய்யச் சொல்லுறீர்?"
அவளுக்கு நிலைமை தெரியும் என்பது அவருக்குத் தெரியும். ஆனால் அவளும்தான் என்ன செய்வாள்? வேறு யாருக்குப் போய் முறையிடுவாள்? எனினும் அப்படிச் சத்தம் போட்டால் அவள் திரும்பவும் அந்தக் கதையை எடுக்கமாட்டாள்.
உள்ளது இரண்டு சோடி உடுப்புகள்தான். பாடசாலையால் பிள்ளைகள் வந்ததும் அதைத் தோய்த்துலர்த்தி அடுத்த நாளுக்காக ரெடிபண்ணி வைத்துவிடுவாள். உடைகளில் கிழிசல்களுக்குத் தையல் போட்டே அவளுக்கு அலுத்துப் போயிற்று.
அவரது மகள் மீரா இரண்டு நாளுக்கு முன்னர் கூறியது நினைவில் வந்தது..
'அப்பா! பார்த்தீங்களா… கிழிஞ்சுபோயிருக்கு!... பிள்ளையள் எல்லாம் பகிடி பண்ணுதுகள்…இது என்ன போஸ்ட் பொக்ஸா…என்று!" - மீரா தபால் பெட்டி வாயைப்போலிருந்த சட்டைக் கிழியலில் கைவிரலை விட்டு அவருக்குக் காட்டியபோது அது இன்னும் கொஞ்சம் 'சர்ர்" எனக் கிழிந்தது.
'ஆ… ஆ… கவனமம்மா…கவனம்!" அவர் பதறிப்போனார்.
'பிள்ளைக்கு இந்தச் சட்டைக் கிழியலைத் தைத்துக் குடும்!" - மனைவிக்கு உத்தரவு போட்டார்.
'அப்பா வருடப்பிறப்புக்கு எனக்கு ரெண்டு யூனிஃபோம் எடுத்துத் தந்தீங்களெண்டாலே போதும்!"
குமர்ப்பிள்ளை… ஒரு நல்ல உடுப்பில்லாமல் இந்தமாதிரிப் போய் வருகிறாளே என்ற கவலை அவரது மனதை வருத்தியது. ஆனால் என்ன செய்வதென்றுதான் புரியவில்லை.
யாழ்ப்பாணத்துக்கு எதிரான இராணுவ நடவடிக்கையின் போது இடம் பெயரவேண்டி வந்தபோது எடுத்தது பாதி எடுக்காதது பாதியாக ஓடியது.. திரும்ப வந்து பார்க்கையில்….பறிபோயிருந்த பொருட்களுடன் உடுதுணிகளும் போய்விட்டன.
யாழ்ப்பாணத்துக்குள் ஆமி மூவ்பண்ணி வந்தபோது சாவகச்சேரிப் பக்கம் போய்த் தெரிந்த ஒருவரின் வீட்டில் ஒதுங்கினார். ஐந்து பிள்ளைகளுடன் பல குடும்பங்கள் தங்கியிருந்த வீட்டில் படாதபாடு படவேண்டியிருந்தது. பிறகு கிளாலிக்கூடாக கிளிநொச்சிப் பக்கம் பயணமாகி நண்பரொருவரின் காணியில் குடிசை (மாதிரி) ஒன்றை அமைத்துக் குடியேறினார்.
'சரியான மறைப்புமின்றிக் குமர்ப்பிள்ளையையும் வைச்சுக்கொண்டு…இது என்ன சீவியம்" என அவருக்குச் சினமாயிருந்தது. சாப்பாட்டுக்கும் ஒரு வழியுமில்லை. நிவாரணம் அது இது என ஒவ்வொரு தேவைக்கும் மற்றவனின் கையை எதிர்பார்த்து அலைந்து திரிவது என்ன வாழ்க்கை? ஏன் இப்படி ஓடித்திரிகிறோம்? உயிரைத் தக்கவைத்துக் கொள்வதற்கா? எப்படியாவது வாழ்ந்து முடிப்பதற்கா? அவரது மனம் குழம்பிப்போகும். அப்போது அவருக்குப் பிள்ளைகளின் நினைவு வரும்.. இந்த இளம் பிள்ளைகளை வைத்துக்கொண்டு எத்தனை கொடுமைகளுக்குப் பயப்பட வேண்டியுள்ளது.
ஆமி மூவ் பண்ணி வருகிறது என்றதுமே அவர் நடுங்கிப்போவார். பிரகாஸையும் மீராவையும் நினைத்துத்தான் அந்தப் பயமெல்லாம். 'இந்தப் பிள்ளைகள் அவங்களின் கையில் அகப்பட்டால், அதுகளின் வயசு காரணமாகவே ஒரு கேள்வி நியாயம் இருக்குமா? கடவுளே இந்தப் பிள்ளைகளுக்கு ஒன்றும் நேர்ந்திடக்கூடாது. இதுகளை எங்காவது கொண்டு தப்பிப் போய் விடவேண்டும்."
கிளிநொச்சியிலிருந்தபோது பிள்ளைகள் ஒன்று மாறி ஒன்று காய்ச்சலில் விழுந்தன. மழை… குளிர்.. நுளம்பு.. மலேரியா! கடைக்குட்டிக்கு காய்ச்சல் கடுமையாகி மூச்செடுக்கவும் அவஸ்த்தைப் பட்டுக்கொண்டு கிடந்தான். மருந்து மாயங்கள்கூடச் சரியாக இல்லை.
பிள்ளைகள் பட்ட வேதனையை அவரால் தாங்க முடியவில்லை. எதையும் தாங்கிக்கொள்வார். பிள்ளைகளுக்கு ஒன்றென்றால் தாங்கமாட்டார். துடித்துப்போவார்.
யாழ்ப்பாணத்துக்கு ஆட்கள் திரும்பிப் போகிறார்களாம்.. என்ற கதைகள் அடிபட்டதும் 'போய்விடலாமா" எனத் தனக்குள்ளே கேள்விகள் கேட்டுக்கொண்டிருந்தார். முடிவெடுக்கும் தைரியம் இல்லாதிருந்தது.
'நடக்கிறது நடக்கட்டும்… வீட்டுக்கே போயிடுவம் வாங்கோ!... இந்தப் பிள்ளைகள் இப்படிக் கிடந்து கஸ்டப்படுகிறதை என்னால் பார்த்துக்கொண்டிருக்கேலாது!" - சரசு அழுதாள்.
மனைவியின் அழுகை அவரது நெஞ்சைத் தொட்டு உருக்கியது.
பிள்ளைகளும் நச்சரித்துக்கொண்டிருந்தார்கள்.. 'அப்பா வாங்கோ…வீட்டுக்குப் போவம்!...எக்ஸாமும் வருகுது!... கஸ்டப்பட்டுப் படிச்சதெல்லாம் வீணாய்ப்போயிடும்..” – மகன் அடம் பிடித்துக்கொண்டிருந்தான்.
பிள்ளைகளின் கல்வி பாழாகிக் கொண்டிருக்கிறதே என்ற கவலை அவரைப் போட்டு மாய்த்துக் கொண்டிருந்தது. திரும்பவும் யாழ்ப்பாணம் போய்விடலாம் என முடிவைடுத்தார். ஆனால் திரும்பப் போவதை நினைக்கும் போதெல்லாம் நெஞ்சிடித்தான்.. என்ன நடக்குமோ?"
இராணுவச் சாவடிகளைத் தாண்டும்போதெல்லாம் அவருக்கு பிறசர் அதிகரிக்கும். பிரகாஸையும் மீராவையும் அவர் தன் கைகளுக்குள்ளேயே பொத்திப் பொத்திக்கொண்டு வந்தார். சில சோதனைச் சாவடிகளில் பிரகாஸையோ மீராவையோ தடுத்து விடுவார்கள். விசாரணையாம்! அவர் அந்த இடத்தை விட்டு நகரமாட்டார்.
'நீங்க அந்தப் பக்கத்துக்கு போங்க!" மிரட்டுவார்கள். அவர் போகமாட்டார்.
'அதுகள் என்ர பிள்ளையள் ஐயா! எப்படி விட்டிட்டுப் போறது? ஒரு சோலி சுறட்டுக்கும் போகாத பிள்ளையள்! உங்களை கையெடுத்துக் கும்பிட்டன்… ஒண்டும் செய்யாமல் விட்டிடுங்கோ!" அவர்கள் முன்னிலையில் அழுதேவிடுவார். பிள்ளைகளுக்காகக் கண்டவன் நிண்டவனையெல்லாம் கையெடுத்துக் கும்பிட வேண்டியுள்ளது. இந்த பிள்ளைகளுக்காகத்தான் உயிரை வைத்துக்கொண்டிருக்கவேண்டும் போலிருக்கிறது. ‘கடவுளே… நானும் இல்லையென்றால் இதுகளை யார் பார்ப்பார்கள்? இந்த யுத்தமும் பிரச்சினைகளும் எப்ப தீரப்போகிறது? இதுகள் எப்ப நிம்மதியாக வாழுமுடியும்?’ - எப்போதும் அவருக்கு மனதுக்குள் இதுதான் பிரார்த்தனை.
வருகிற வழிகளிலெல்லாம் பல வீடுகள் இடியுண்டு, உடைந்து, சிதறி, கூரை பிரிந்து… பலவிதமான கோலங்களிற் கிடந்தன. அவற்றையெல்லாம் பார்த்துப் பார்த்துப் பயந்துகொண்டே வந்தார்: 'எங்கட வீட்டுக்கு என்ன கதியோ?
தடைகளைத் தாண்டித் தாண்டி வந்து பார்த்தால்… வீடு இடிந்துபோய் கூரை நிலத்தைத் தொட்டுக்கொண்டு கிடக்கிறது.
சிறிய வீடுதான். இரண்டு சிறிய அறைகள். முன் விறாந்தை. ஒரு பக்கம் குசினி. அவரது தகுதிக்கேற்றபடி கட்டியிருந்தார். அதில் நிம்மதியாகப் படுத்தெழும்பினார். ஐந்து குஞ்சுகளையும் அந்த வீட்டிலேயே பெற்றெடுத்தார். இடம்பெயர்ந்து பல இடங்களில் இருந்தபோதெல்லாம் இந்த வீடு அவருக்குக் கனவுகளில் வந்திருக்கிறது. காதலித்துக் கட்டிய மனைவியைக் கானகத்தில் கைவிட்டு வந்ததுபோன்ற சோகம். அந்தத் திண்ணையில் படுத்தெழும்பும் சுகம் தனக்கு வேறேதும் இல்லையென்றே நினைப்பார்.
சரசு கதறியேவிட்டாள். 'இதைப் பார்க்கவா இஞ்ச திரும்பி வந்தம்?" பிள்ளைகள் திகைத்துப்போய் நின்றார்கள். 'அம்மா!...அழாதையுங்கோ…!" எனச் சொல்லி மீராவும் விம்மலெடுத்து அழத் தொடங்கினாள். அவர் அசையவில்லை. இப்படி எத்தனையோ இழப்புக்களையும் இழப்புக்களிலிருந்து எழுச்சியையும் கண்ட மனத்தைரியம் வாய்க்கப் பெற்றவர் போல நின்றார்.
'ஏனம்மா?... ஏன் அழுறீங்கள்? இப்ப என்ன நடந்திட்டுது? யோசிச்சுப் பாருங்கோ…நாங்கள் போகாமலே இங்க இருந்திருந்தால் என்ன கதி? எங்கட தலையில விழவேண்டிய குண்டை எங்கட வீடு தாங்கியிருக்குது! அழாதையுங்கோ! வர்ற வழியெல்லாம் பார்த்தனீங்கள்தானே? எத்தனை சனங்களுக்கு எத்தனை விதமான இழப்புக்கள்!... அழுது என்ன செய்யிறது?"
இடிபாடுகளை அள்ளி ஒரு பக்கம் போட்டார். பிள்ளைகளும் கைகொடுத்தார்கள். பொறிந்து விழுந்துபோய்க் கிடந்த கூரையைக் கழற்றி எடுத்துச் செப்பனிட்டார். தெரிந்தவர்களிடம் வாங்கிவந்த தென்னங் கிடுகுகளால் வீட்டை வேய்ந்தார்.. 'நாங்கள் வெட்ட வெட்டத் தழைப்போம்!" எனப் பிள்ளைகளுக்கு உற்சாகமூட்டினார்.
அவர் குடும்பத்துடன் திரும்பவும் யாழ்ப்பாணம் வந்துவிட்ட செய்தியறிந்து மாணிக்கம் மாஸ்ட்டர் பார்க்க வந்திருந்தார். மாணிக்கம் மாஸ்டர் முன்னர் ஸ்கூலில் அவருக்குப் படிப்பித்தவர். பிள்ளைகளுக்கும் வீட்டுக்கு வந்து பாடம் சொல்லிக் கொடுப்பதுண்டு.
'இஞ்ச…வராமல் வன்னிப்பக்கம் போயிடுவீங்களோ என்றுகூட யோசிச்சன்!. இந்த வீட்டை எப்படிக் கோயிலைப்போல வைச்சிருந்தனீங்கள்! அது இடிஞ்சு கிடக்கிறதைப் பார்க்க எனக்கே பொறுக்கயில்லை. அடிக்கடி வந்து பார்த்துவிட்டுப் போவன்… வேற என்னத்தைச் செய்யிறது… இப்ப நீங்கள் வந்து சேர்ந்திட்டீங்கள் என்றதும் ஆறுதலாயிருக்கு!"
மாணிக்கம் மாஸ்டர் ஏதாவது பேச ஆரம்பித்தாலே கேட்டுக்கொண்டிருக்கவேண்டும் போலிருக்கும். குறுக்கே பேச மனம் வராது.
'தமிழ்ச்சனங்கள் இந்த நாட்டில் எத்தனைவிதமாய் வதைபட்டிட்டுதுகள்!... நாங்கள் இதையெல்லாம் பார்த்துப் பயந்திடக்கூடாது. சலித்துப் போயிடக்கூடாது. இந்த இடத்தை விட்டு ஒரேயடியாய் ஓடியிடக்கூடாது. இது எங்கட மண். எங்கட மூதாதையர் பரம்பரை பரம்பரயாய் வாழ்ந்த மண்"
மாணிக்கம் மாஸ்டர் சொல்வதைக் கேட்க மனது தெம்படைவது போலுமிருந்தது. ஆற்றாமையோ அல்லது காரணம் புரியாததொரு கவலையோ உள்ளே புகுந்து நெஞ்சையடைப்பது போலவும் ஓர் உணர்வு.
'ஐம்பத்தெட்டில… எழுபத்தேழுல… எண்பத்து மூன்றில… எல்லாம் தெற்குப் பக்கமிருந்த தமிழ்ச் சனங்களுக்கு எவ்வளவு கொடுமைகள் நடந்தது?... பெண் பிரசுகளைக் கேவலப்படுத்தி… உயிர்களைக் குடிச்சு… தமிழருக்குச் சொந்தமான வீடு வாசல்கள்… வியாபாரத் தலங்கள்… பக்டரிகள் எல்லாம் கொளுத்தி எரிக்கப்பட்டது… அப்ப, அடிச்சுக் கலைச்சபோது எங்கட சனங்களெல்லாம்… இஞ்சால ஓடி வந்ததுகள்… பாதுகாப்பாய் இருக்க.. வடக்கு கிழக்குப் பகுதிகள் இருந்திச்சுது…
…இப்ப என்ன நடக்குது? வடக்கு கிழக்கிலையும் எங்களுக்குப் பாதுகாப்பு இல்லை. எத்தனை நாட்கள் பதுங்கு குழிகளுக்குள்ள கிடந்தம்… எத்தனை உயிர்களைப் பறிகொடுத்திட்டம். சமாதானத்துக்கான யுத்தம் என்ற பேரிலே… இந்தப் பக்கம் இருக்கிற வீடு வாசல்கள்… பொருளாதார வசதிகள் எல்லாம் அழிக்கப்படுகுது… யுத்தம் ஏற்படக்கூடிய நிலைமையை உருவாக்கினது ஆர்...? ஒரு உதாரணத்துக்குச் சொல்லுறன்…எங்கட பிள்ளையளின்ரை படிப்பில கையை வைச்சு முளையிலேயே கிள்ளி எறியலாம் என்று திட்டம் வகுத்தது ஆர்?"
பிரகாஸ் ஓ.எல். பரீட்சையில் எல்லாப் பாடங்களிலையும் சிறப்புச் சித்தியடைந்தான். அவர் பூரித்துப் போனார். திரும்ப யாழ்ப்பாணம் வந்தது நல்லதுக்குத்தான் என்று தோன்றியது. குப்பி விளக்கில் கண்கள் பூந்திப் பூந்திப் பார்த்து அவன் படிக்கும் போது அவர் ஏசியும் இருக்கிறார்.
'காணுமடா!... இனிக் காணும்…! போய்ப் படு!... இந்த மங்கல் வெளிச்சத்தில் படிச்சால்… கண் பழுதாய்ப்போயிடும்…!"
அவன் படுக்கமாட்டான். அவரும், அவன் படித்து முடித்துப் படுக்கப் போகும்வரை விழித்துக் கொண்டிருப்பார்.
இந்த டியூசனுக்குப் போகவேணும்… அந்த டியூசனுக்குப் போகவேணும்… என்று பிரகாஸ் சொன்னபோதுகளில் சினந்து விழுந்திருக்கிறார்.
'பள்ளிக் கூடத்தில் ஒழுங்காய்ப் படிக்காதவங்களுக்குத்தான் டியூசன்! அங்க விளையாடித் திரிஞ்சால்… ரியூசன் தேவைதான்!" என ஒரு நக்கல்போலச் சொல்லியிருக்கிறார்.
அவன் அதற்கு மறுகதை பேசாமல் தலையைக் குனிந்துகொண்டு போயிடுவான். ஆனால் ரியூசனுக்குத் தருவதற்கு அவரிடம் பணமில்லை என்று அவனுக்குத் தெரியும். ரியூசனுக்குப் போய் வரும் நண்பர்களின் வீடுகளுக்குப் போய்ப் போய்க் கேட்டுப் படிப்பான். அவன் படிக்கத்தான் போகிறானா அல்லது வேறு ஏதாவது இயக்க நடவடிக்கைகளில் ஈடுபடுகிறானா என அவருக்குச் சந்தேகம் வந்ததும் உண்டு. அசுகை தெரியாமல் சில நாட்களில் பிறகால் போய்ப் பார்த்துமிருக்கிறார்.
படிப்பு, படிப்பு, என்று நடந்தே திரிவான். 'அப்பா!... ஒரு சைக்கிள் இருந்தால் நல்லது… எவ்வளவு தூரம் நடக்கிறது?... நடந்து நடந்து… இரவில் படுக்கேலாமல் கால் உளையுது… சைக்கிள் ஒன்று வாங்கித் தாங்கோ!"
'அந்தக் காலத்தில் நான் எப்படிப் பள்ளிக்குப் போய் வந்தவனென்று தெரியுமா? எவ்வளவு தூரம் நடந்து திரிஞ்சிருக்கிறன்!... உங்களுக்கு இப்ப சொகுசு தேவைப்படுகுது…! கஸ்டப்பட்டுப் படிச்சால்தான் முன்னுக்கு வரலாம்!" என எதையாவது சம்பந்தமில்லாமலும், தன்னை ஒரு சாதனை வீரனைப்போலவும் குறிப்பிட்டு மகனது வாயை மூடிவிடுவார்.
தின்னவேலியிலிருந்து ஹின்டு கொலிச்சுக்கு நடந்தே போய் வருவது அவர் நினைவில் வரும். பலபலத்து விடியும் முன்னரே தோட்டத்துக்குத் தண்ணீர் இறைக்கவேண்டும். தம்பி தண்ணீர் கோல, அவர் துலா மிதிப்பார். ஐயா மரவள்ளிக்கும், மிளகாய் கன்றுகளுக்கும் தண்ணீர் கட்டுவார். பிறகு வெளிக்கிட்டு பள்ளிக்கூடத்துக்கு ஓட்டமும் நடையுமாகப் போனாலும், நேரம் கடந்துவிடும். பிறேயர் தொடங்கிவிடும். இப்போதுள்ள ஆமிக்காரரைப்போல அப்போது பள்ளிக்கூடத்தில் பிறிஃபெக்ட்மார், லேட்டாக வருபவர்களையெல்லாம் வாசலில் தடுத்து வைத்திருப்பார்கள். பிறேயர் முடிந்து கேனுடன் வரும் பிறின்சிபலிடம் கை நீட்டி அடி வாங்கவேண்டும். 'அம்மா!" என உறைக்கும்.
'நாங்களெல்லாம் அப்ப… எவ்வளவு கஸ்டப்பட்டுப் படிச்சம்… இப்ப உங்களுக்கு வசதிகள் கூடிப் போச்சுது…!" மகனுக்கு ஒரே போடாகப் போடுவார். பிரகாஸ் அதற்கு எதுவும் பேசாமல் போய்விடுவான்.
எல்லாம் பொருளாதாரப் பிரச்சினைதான். சீமெந்துத் தொழிற்சாலையில் வேலை செய்தவர். யுத்தம் தொடங்கிய பிறகு தொழிற்சாலை இயங்காமல் போய்விட்டது. சில காலம் சம்பளமும் இல்லாமல் ஒன்றுமில்லாமல் இழுபறியாய் இருந்தது. பின்னர் ஏதோ கொஞ்சம் கையிற் தரத் தொடங்கினார்கள். தொழிற்சாலை இயங்கிக்கொண்டிருந்தபோதே ஓவர்டைம் வேலை செய்து கைநிறைய உழைத்தாலும் அப்படி இப்படித்தான் சமாளிக்கக்கூடியதாயிருந்தது. இப்போது இந்தப் பிச்சைக்காசை எடுத்து என்ன செய்வது? ஆனால் கிளிநொச்சியிலிருந்து யாழ்ப்பாணம் வந்ததே அந்தக் காசையும் நினைவிற் கொண்டுதான்.
இப்போது பிரகாஸ் சிறப்பாகப் பரீட்சையில் சித்தியடைந்திருப்பது அவருக்குப் பெருமையளித்தது. தனது கவலைகளையெல்லாம் ஆற்றிவிட்டது மாதிரி ஒரு உற்சாகமும் தோன்றியது.
'என்ன பாடு பட்டும் என்ர பிள்ளையைப் படிப்பிச்சுப் போடவேணும்!" மனதில் ஒரு வைராக்கியம்போல நினைத்துக் கொண்டார். 'நான் சாப்பிடாமல் கிடந்தாலும்… பரவாயில்லை… பிள்ளையைப் படிப்பிச்சுப்போடவேணும்!"
‘படிப்பித்துவிட்டால்?... பிறகு?... அவருக்கு சற்றுக் குழப்பமாயிருந்தது. பிறகு அந்தக் குஞ்சு பறந்து போய்விடுமே…? இப்போது யாழ்ப்பாணத்திலிருந்து படித்தவர்கள் அநேகர் பறந்து போய்விட்டார்களே! படிப்பு ஒரு காரணமாயிருந்து தன் பிள்ளையைத் தன்னிடமிருந்து பிரித்துவிடுமோ…?’ என்றும் அவருக்குக் கலக்கமாயிருந்தது. பிரகாஸ் தன்னை விட்டுப் போய் விடுவானா? 'அப்பா!... அப்பா…!" என்று ஒரு நாய்க்குட்டியைப்போல கால்களுக்குள் சுற்றி வரும் பிள்ளை ஒரு நாளைக்குத் தன்னைப் பிரிந்து போயேவிடுவானா?
அவருக்குத் தனது தம்பியவர்களின் நினைவு வந்தது. அவர்களெல்லாம் படித்து ஆளாகியதும் பறந்துவிட்டார்களே! அவுஸ்திரேலியாவிற்கு ஒருவன், கனடாவுக்கு ஒருவன் என்று மைகிரேசன் விசா கிடைத்துப் போய்விட்டார்கள்.
கொழும்பில் இன்னமும் இருக்கும் தம்பிகூட வெளிநாட்டில் இருப்பவன்போல இந்தப் பக்கம் வருவதுமில்லை. அவனும், அவுஸ்திரேலியாவுக்கோ கனடாவுக்கோ மைகிரேசன் விசாவுக்கு முயற்சிப்பதாகவும், கிடைத்ததும் போய்விடுவேன் என்றும் சொல்லிக்கொண்டிருக்கிறான்.
போனவர்கள் இனித் திரும்ப வருவார்களா? எப்போது வருவார்கள்? அவர்களுக்குப் பெயர் சூட்டியது நினைவிருக்கிறது. அவர்களைத் தூக்கி விளையாடியது நினைவிருக்கிறது. அவர்கள் மேற்படிப்புக்கு வந்து யூனிவர்சிற்டி என்ரர் பண்ணியபோது சந்தோஷப்பட்டது நினைவிருக்கிறது. இப்போது அவர்களெல்லாம் கண்காணாத தேசங்களில்… எங்கோ ஒரு திக்கில்.
அப்போது அவரது தந்தையின் சம்பாத்தியம் அவர்களது படிப்புச் செலவுக்கு ஈடுகொடுக்குமளவுக்குப் போதாது. அதனாற்தான் அவரும் படிப்பை இடைநடுவில் நிறுத்திக் கொண்டு சீமென்ற் பக்டரியில் வேலைக்குச் சேர்ந்திருந்தார்.
தம்பியவர்கள் பாஸாகியதும் 'நீங்கள் படியுங்கோ!... செலவைப் பற்றி யோசிக்க வேண்டாம்!" என உற்சாகமூட்டினார். அவர்களை எப்படியாவது படிப்பித்து ஆளாக்கிவிடவேண்டும் எனக் கனவு கண்டார். இராப்பகலாக ஓவர்டைம் வேலை செய்து உழைத்தார்.
தம்பியவர்களிடமிருந்து கடிதங்கள் வரும்… அவர்களது தேவைகளைக் குறிப்பிட்டு எழுதியிருப்பார்கள். 'காசு கொஞ்சம் அனுப்பி வையுங்கோ!"
கொஞ்சமென்றால் எவ்வளவு? அது இருநூறா? இரண்டாயிரமா? அவருக்குப் புரியாது. ஆனால், தம்பியவர்கள் அந்தரித்துப் போய்விடக்கூடாதே என்று கவலையாயிருக்கும். தன் கையில் இல்லா விட்டாலும், யாரிடமாவது மாறிவிடுவார். சிலவேளைகளில் பணம் கைக்குக் கிடைக்கத் தாமதமாகிவிடும். தபாலில் அனுப்பச் சுணங்கிவிடுமோ என றெயினில் பயணமாகி நேரிலேயே கொடுத்துவிட்டு வருவார். அப்படிப் போவதற்கு தம்பியவர்களை நேரிலே பார்த்த ஆறுதல் ஏற்படும் என்பதும் ஒரு காரணம்.
சம்பளமெடுத்ததும் பட்ட கடனெல்லாம் அடைக்கவேண்டும். கை வெறுமையாகிவிடும். அக்காவின் திருமணத்துக்குப் பட்ட கடன்… மற்றும் வீட்டுச் செலவுகள் என்று ஐயா ஏற்கனவே கடனாளியாகியிருந்தார். அதையும் ஈடுகட்டவேண்டும். அக்கா திருமணம் முடித்துப் போய்விட்டாலும்… அவளுக்கும் அன்றாட கஸ்டங்கள், வசதிக்குறைவு இருந்தது. 'வீட்டுக்குச் சொல்லவேண்டாம்… ஏதாவது தந்து உதவி செய்… தம்பி!" என அவளும் எழுதியிருப்பாள். இவற்றையெல்லாம் சமாளித்துக்கொண்டு அடுத்து வரும் மாதத்தையும் எதிர்கொள்ளவேண்டும்!
வேலைக்கு வந்தால்… மத்தியான சாப்பாட்டையும் தவிர்த்துக்கொள்ளப் பழகியிருந்தார். பக்டரிக்கு முன்னுள்ள கடையில் அவர் மற்றைய தொழிலாளர்களைப்போல 'எக்கவுன்ட்" வைத்திருக்கமாட்டார். அது செலவு அதிகரிப்பதற்கு ஒரு வழி என்ற பயம் அவருக்கிருக்கிறது. நண்பர்களோடு போய் ரீ… சிகரட் (நண்பர்களுக்கு) அது இது என்று எடுத்துக்கொண்டு கொப்பியில் பதிந்துவிட்டு வந்தால்… பின்னர் மாத முடிவில் முழிக்கவேண்டி வரும்.
கடையில் எக்கவுண்ட் இல்லை. கையில் காசுமில்லை. ஆனால் பசிக்கும். பல நாட்களில் பசியோடு எப்படியோ நேரத்தைக் கடத்திவிடுவார். ஆனால் பசி தாங்க முடியாத அளவுக்கு அவரைப் பல தடவைகள் வாட்டியதுண்டு. கால்களில் ஒரு நடுக்கம் ஏற்படும். நடக்க முடியாமல் தடுமாறும். உடல் சோர்ந்துபோகும்.
அது மணியண்ணனுக்குத் தெரிந்துவிடும். மணியண்ணை அவரது செக்சனில் அவருக்குக் கீழே வேலை செய்த ஒரு மூத்த மெக்கானிக்.
'ஏன் சேர்?... முகம் வாடிக்கிடக்கு சாப்பிடயில்லையா?"
அதற்கு அவர் சமாளிப்பாக ஏதாவது கூற முயலுவார். ஆனால் மணியண்ணை விடாப்பிடியாக கேட்டுக்கொண்டிருப்பார்.
'சொல்லுங்கோ!... சாப்பிட்டனீங்களா…? சாப்பிட்டனீங்களா?"
மணியண்ணையிடம் கடைசியாக சரணடையவேண்டி வரும். தனது கஸ்ட நஸ்டங்களை அவர் அவ்வப்போது மணியண்ணையுடன் கதைத்துக்கொள்வதுண்டு. அவரது நிலைமையைத் தெரிந்து வைத்திருந்ததால்போலும், மணியண்ணைக்கு அவர்மேல் ஒருவித இரக்கமும், கரிசனையும் இருந்தது. சில வேளைகளில் மணியண்ணை கேட்காமலே… தானாகச் சென்று வாய்விட்டுக் கேட்டிருக்கிறார்.
'மணியண்ணை… பசிக்குது!... இனியும் தாக்குப் பிடிக்கேலாது…! என்ன செய்வம்?" ஒரு பகிடிபோல இந்த விடயத்தை மணியண்ணைக்குத் தெரிவித்தாலும் என்ன செய்வது என்பது மணியண்ணைக்குத் தெரியும். இரண்டு பேருமாக முன் கடைக்குப் போவார்கள். முன் கடையில் மணியண்ணைக்கு 'எக்கவுண்ட்" இருந்தது. அங்கு அவர் பாணும் பருப்புக் கறியும் சாப்பிடுவார். அந்தக் கணக்குகளையெல்லாம் குறித்துவைத்து மாதம் முடிய சம்பளமெடுத்ததும் மணியண்ணையிடம் கொடுத்துவிடுவார்.
தம்பியவர்கள் யுனிவர்சிட்டியில் பட்டமெடுத்ததும், தான் பட்ட கஸ்டமெல்லாம் வீண் போகவில்லை என்று சந்தோஷமாயிருக்கும். ஆனால்… அவர்களெல்லாம் இந்த மண்ணில் இல்லையே! ஒவ்வொருவராக அவுஸ்திரேலியாவுக்கும் கனடாவுக்கும் குடி பெயர்ந்தபோது அவருக்குச் சந்தோஷமாக இருந்ததா? கவலையாக இருந்ததா? அவருக்குப் புரியவில்லை. 'எங்கையாவது போய் நல்லாயிருக்கட்டும்.!" என்று மனதார வாழ்த்தினார். இங்கயும் இந்த நாட்டில இருந்து என்னதான் செய்யிறது?
ஒரே வீட்டிலிருந்து ஒன்றாக விளையாடி, ஒருவருக்குக் காய்ச்சல் துன்பம் வந்தால் துடித்துப்போய்… அம்மா தந்த சாப்பாட்டை வயிறு நிறைய உண்டு, ஐயாவைக் கண்டதும் ஒதுங்கி வாழ்ந்த வாழ்க்கை இல்லையென்றாகிவிட்டது. அந்த ரம்மியமான நினைவுகள் மட்டும் மனதில் உண்டு. இந்த நாட்டில் இனப் பாகுபாடும் யுத்தப் பிரச்சினையும் இல்லாமலிருந்தால்… இப்படித் திக்குத் திக்காகச் சிதறிப் போகாமல் இங்கேயே இருந்திருப்பார்களோ? எப்படியோ, இங்கிருந்து சீரழியாமல் போன இடங்களிலாவது நிம்மதியாக இருக்கட்டும் என மன ஆறுதலடைய முனைவார். ஆனால் அவர்களை இனி எப்போது காண்போம்? இனி எப்போது வருவார்கள்? எப்போதாவது வருவார்களா? என்ற கேள்விகள் பிறக்கும்.
ஷெல் விழுந்து வீடு உடைந்துபோன விஷயத்தை எழுதியபோது திருத்த வேலைக்கென பணம் அனுப்பியிருந்தார்கள். 'காலமெல்லாம் உழைத்துக் கட்டிய வீட்டை நீங்கள் இழந்து நிற்கிறீர்கள், இங்கு நாங்கள் எங்கள் எதிர்கால உழைப்பையெல்லாம் இட்டு (வங்கியில் கடனெடுத்து) வீடு வாங்கியிருக்கிறோம்" என எழுதியிருந்தார்கள்.
சென்ற இடங்களிலெல்லாம் காலூன்றி விழுது விடுவது கண்டு மகிழ்ச்சிதான். தமிழ் விழாக்கள்கூட நடத்துகிறார்களாம். சென்ற இடங்களிலெல்லாம் சிறக்கும் அவர்களின் செயலை அறிய உள்ளம் பூரித்து உணர்ச்சி வசப்படுகிறது. ஆனால் பிறகு அதே பயம்… இந்த மண்ணையும்; மண்ணடி வேர்களையும் மறந்தே போய்விடுவார்களா? அவருக்குப் புரியவில்லை. தம்பி! நீங்களெல்லாம் ஒரு நாளைக்கு இங்கு வரவேண்டும். (அல்லது வந்து போகவேண்டும்.) இந்த மண்ணை மறக்கக்கூடாது. உங்களை வளர்த்தெடுத்த வேர்கள் இங்குதான் இருக்கின்றன.
கனடாவிலும் அவுஸ்திரேலியாவிலும் தம்பியவர்கள் சொந்தமாக வீடு வாங்கிவிட்டார்கள் என்றதும் ஒருவித சந்தோஷமா… கவலையா? இவர்களெல்லாம் அங்கே வீடு வாங்கிவிட்டார்கள். குடும்பத்துடன் நிலைத்துவிட்டார்கள். திரும்ப இங்கு வருவார்களா? இங்கு அச்சுவேலியிலும், தின்னவேலியிலும் இருந்துகொண்டே ஒரு நல்ல நாள் பெருநாளுக்குக்கூட ஒருவரை ஒருவர் சந்திப்பது கஸ்டமாயிருக்கிறது. அவுஸ்திரேலியாவிலும் கனடாவிலும் இருந்து பிள்ளைகளின் போட்டோக்கள் வருகின்றன. சில வேளைகளில் வீடியோவிலும் பதிவு செய்து அனுப்புவார்கள். 'பேர்த்டே பார்ட்டி" அது இது என்று. டெக் வாடகைக்கு எடுத்து வந்து தன் பிள்ளையோடு கூட இருந்து பார்ப்பார். அந்தப் பிள்ளைகளைக் காணமுதலே காலம் வந்து போய்ச் சேர்ந்துவிடுவேனோ? அவர்கள் பெரியவர்களானதும் ஒருவேளை இந்தப் பக்கம் வருவார்களோ? வரும்போது இந்த நாடு அமைதியாக இருக்குமா? வந்தாலும் அவர்களுக்குத் தன்னை ஞாபகமிருக்குமா? பாசமிருக்குமா? 'பெரியப்பா… தஸ்… புஸ்… கிஸ்…" என ஏதாவது ஆங்கிலத்தனமாக தங்களது கடமையை முடித்துக்கொண்டு போய்விடுவார்களோ…? ஐயோ!... அப்படி இருக்கக்கூடாது.
புpரகாஸ் பரீட்சையில் சிறப்பாக சித்தியடைந்த விடயத்தை எழுதியதும் அவர்களுக்குப் பரம சந்தோஷம். அவர்களது கைப்பட பிரகாஸிற்குக் கடிதம் எழுதினார்கள். படிப்புச் செலவுக்கு என்று பணமும் அனுப்பியிருந்தார்கள். 'நீ படிச்சு ஒரு டொக்டராக வரவேணும்… அப்பாவின் கஸ்டங்களை நீதான் தீர்க்கவேணும்.!"
அவருக்கு அது வருத்தமாயிருந்தது. இந்தச் சிறுவனின் மனசுக்கு சுமையை ஏற்றுவதுபோல அந்த வாக்கியம் அமைந்திருந்தது. அதை அவர் விரும்பவில்லை.
'மகன்!... என்ர கஸ்டங்களை நீ யோசிக்கவேண்டாம் அப்பன்! நீ படிச்சு நல்ல நிலமைக்கு வந்தால்... அதே போதும் எனக்கு…!"
யுத்தம் தொடங்கிய காலத்திலிருந்தே அவர் வேலையுமின்றி வேறு எந்த பிழைப்புக்கும் வழியுமின்றி இருந்தபோது தம்பியவர்கள் அவ்வப்போது பணம் அனுப்பிவைப்பார்கள். வாழ்க்கை கட்டையிலேறிவிடாமல் ஓரளவேனும் ஓடிக்கொண்டிருப்பதற்கு அவர்கள்தான் காரணம். தாங்க முடியாத காலகட்டங்களிலெல்லாம் அவர்கள் விழுதுகள்போலத் தாங்கி நின்றதை நன்றியுடன் நினைத்துக்கொள்வார் இப்போது அவர்களிடம் கேட்டுப்பார்த்தால் என்ன? 'வருடப் பிறப்பும் வருகிறது. பிள்ளைகளுக்கு சரியான உடுதுணிகூட இல்லை. ஏதாவது பார்த்து அனுப்பி வையுங்கோ" என எழுதிப் பார்க்கலாமா?
அவருக்கு கூச்சமாயுமிருந்தது. தம்பியவர்கள் தானென்றாலும் ஒரு அளவு இல்லையா? எப்போதும் கையேந்திக்கொண்டு போனால் அவர்கள் என்ன செய்வது? அவர்களும் குடும்பம், பிள்ளை குட்டிகள் என்று ஆகிவிட்டவர்கள். செலவுகள் அதிகரித்திருக்கும். அவர்களைக் கஸ்டப்படுத்தக்கூடாது. தன் இயலாமையில் எப்போதாவது எழுதிவிடுவதுண்டு. அவர்களும் எந்த அளவுக்குத்தான் உதவி செய்துகொண்டிருக்க முடியும். வேறு யாரிடமாவது கடனாகக் கேட்டுப் பார்க்கலாம். யாரிடம் கேட்பது? கேட்கக் கூடியவர்களிடமெல்லாம் ஏற்கனவே வேண்டியவை இன்னும் திருப்பிக் கொடுக்கவில்லை. இப்போது, ‘இவர் கடன் கேட்டுவிடுவாரோ..’ என முன்னெச்சரிக்கையாக அவர்களெல்லாம் ஒதுங்கிவிட்டார்கள் என்றே அவருக்குத் தோன்றுகிறது!
தனக்கு இது ஒரு ராசியோ என எண்ணிப் பார்த்திருக்கிறார். உழைக்கத் தொடங்கிய காலத்திலிருந்தே தன்னிறைவு கண்டதில்லை. ஏதாவது ஒரு தேவைக்காக கடன்படவேண்டி வந்துவிடும். கை நிறைய உழைத்திருக்கிறார். ஆனால் அதையும் மீறிய தேவைகள். அதனால் கடன் பட்டு…கடனைச் செலுத்த இங்கு பட்டு அங்கு செலுத்தி…அங்கு பட்டு இங்கு செலுத்தி, கடனாளியாக இல்லாது நிம்மதியாக இருக்கிற ஒரு நாள் வருமா என ஏங்கியிருக்கிறார். வேண்டாம் தம்பியர்களிடமே கேட்கலாம். 'எப்பவாவது என்ர மகன் பிரகாஸ் நல்லாய் வந்தால் நீங்கள் செய்த உதவிகளையெல்லாம் மறக்கமாட்டான். வருடப்பிறப்பும் வருது… கொஞ்சம் அனுப்பிவையுங்கோ."
தேவராசா அண்ணன் கொழும்புக்குப் போவதாகச் சொன்னவர். அவரிடமே கொழும்பிலிருக்கும் தம்பியிடம் கொடுக்கும்படி கடிதத்தைக் கொடுத்துவிடலாம். அவன் மற்றவர்களுடன் ரெலிபோனில் கதைப்பான். அவர்களது காசு வரச் சுணங்குமானால் இவனையே அனுப்பிவைக்கும்படி எழுதலாம். பின்னர் அவர்களது காசு வந்ததும் எடுத்துக்கொள்ளட்டும்.
'விடிஞ்ச நேரமுதல்… என்ன இதிலையிருந்து யோசிச்சுக்கொண்டிருக்கிறியள்…? எந்தக் கோட்டையைப் பிடிக்கிறதுக்கு? எழும்புங்கோ! எழும்பிப் பார்க்கிற அலுவலைப் பாருங்கோ!"
சரசு அதட்டுவதுபோலத்தான் பேசுவாள். ஆனால் அதட்டலல்ல. அன்புக்கட்டளை என்று எடுத்துக்கொள்ளலாம். தான் ஒரேயடியாக இருந்து யோசிப்பது அவளுக்குச் சங்கடமாயிருக்கிறது. இந்த மனுசனுக்கு இப்படி இருந்து யோசித்து யோசித்தே ஏதாவது ஆகிவிடுமோ என்ற பயம் அவளுக்கு என்பது அவருக்குத் தெரியும்.
இருந்த இடத்தை விட்டு எழுந்தார். குளித்துவிட்டு வந்து சாமி படத்துக்கு முன்னால் போய் நின்று திருநீறு பூசினார். 'கடவுளே.." என மனமுருகி வேண்டினார். தனது தந்தையையும் தாயையும் நினைத்தார்.
மனைவியை, பின்னைகளை, தம்பியவர்களை, அவர்களது குடும்பம் பிள்ளைகளை.. எல்லோரையும் நினைத்து எல்லோருக்காகவும் பிரார்த்தனை செய்தார். ‘எல்லாரும் ஒரு தொல்லையுமில்லாமல் இருக்கவேணும்...’ இன்றைய பிரார்த்தனையில் ஒரு விஷேட அம்சத்தையும் வேண்டுகோளாக விடுத்தார். ‘கைக்கு எப்படியாவது பணம் வந்து சேரவேணும்.. பிள்ளைகளுக்குப் புது வருடத்துக்குப் புத்தாடை வாங்கக்கூடிய வழி பிறக்கவேணும்..’
தன்னால் இயலாது என்ற கட்டம் வந்ததும் கடவுளிடம் விட்டுவிடுவார். இலகுவாக தப்பிக்க இது ஒரு வழியாயுமிருந்தது. கடவுளிடம் அபார நம்பிக்கையுமிருந்தது. கடவுளும் ஏதோ ஒரு வழியில் இவரது பிரார்த்தனைகளுக்கு செவி சாய்ப்பதுண்டு. இல்லாவிட்டால் எப்படி அவருக்குத் தனது தந்தையின் கடன்தனிகளைத் தீர்த்திருக்க முடியும்? தம்பியவர்களைப் படிக்க வைத்திருக்க முடியும்? கடவுளும் அவரது பிரச்சினைகளைத் தீர்த்துவைக்காத நேரங்களில் அல்லது கடவுளுக்கும் இயலாமற்போன தருணங்களில் அதற்கொரு நியாயம் கற்பித்து அஜஸ்ட் பண்ணிக்கொள்ள பழகியிருந்தார். ‘இப்ப காலம் சரியில்லை… நல்ல காலம் வந்தால் எல்லாம் நல்லதாய் நடக்கும்..!’
நல்லகாலம் எப்போது வரும் என அவருக்கு ஏக்கமாயிருக்கும். இந்த நாடு எப்போது சீரடையும்? எப்போது எங்களுடைய பிள்ளைகள் சுதந்திரமாக நடமாட முடியும்? பிள்ளைகளை வெளியிலே விடுவதானால், பெண் பிள்ளைகளுக்கு மட்டுமன்றி ஆண் பிள்ளைகளுக்கும் துணைபோக வேண்டியுள்ளது. வெளியே போன பிள்ளைகள் திரும்ப உருப்படியாக வந்து சேர்வார்களா என்ற பயம் உலுக்கிக்கொண்டிருக்கிறது. ஒவ்வொரு நாளும் ஒவ்வொரு விதமான செய்திகள் வருகின்றன. சீருடையில் வந்தவர்கள் வானில் ஏற்றிக் கொண்டுபோனார்களாம். பிறகு பிள்ளை எந்த இடமென்று இல்லை. பெற்றவர்கள் நெஞ்சு குமுற அலைந்து திரிகிறார்கள். இது என்ன சீர்? பொழுதுபட்டால் எப்போது விடியுமென்று நெஞ்சிடிக்கிறது. மூச்சு விடுவதற்கே பயந்து பயந்து சீவிக்கவேண்டியுள்ளது. பிள்ளைகள் தும்மினால் இருமினால்கூட சரசு பதற்றமடைகிறாள். 'மெல்ல… மெல்ல… சத்தம் போடாதேயுங்கோ!" இது ஊரடங்குச் சட்டமா அல்லது வீடடங்குச் சட்டமா?
கொலைகள் ஒரு புறம். கொள்ளையர் பற்றிய பயம் இன்னொரு புறம். மூலைக்கு மூலை தொடங்கப்படும் கேடுகெட்ட சினிமாக்கள், கசிப்பு வியாபாரம்… இப்போது மற்றவித போதை வஸ்துக்களும் புளங்கத் தொடங்குகின்றன என்ற கதைகளும் அடிபடுகின்றன. மாணிக்கம் மாஸ்டர் சொல்வதுபோல திட்டமிட்டு எங்களுடைய கலாசாரம் சீரழிக்கப்படுகிறதா? இதிலெல்லாம் எங்களுடைய பிள்ளைகள் சிக்கித் தொலைந்துவிடுவார்களோ என்று பயமாயிருக்கிறது. இங்கு திரும்ப வந்தது சரியா என அவருள் கேள்விகள் பிறக்கின்றன. இங்கு வராமல் வேறு எங்கு போவது? ஏன் போகவேண்டும்.. தப்பிப் பிழைப்பதற்கா? வாழ்க்கை என்பது தப்பிப் பிழைத்து உயிர்வாழ்வது மட்டுமா? எத்தனை இடர்வரினும் இந்த மண்ணை விட்டு ஓடாது, இதில் வேர் பாய்ச்சி, எங்களுடைய பிள்ளைகளிடம் ஒப்படைத்துவிட்டுப் போவது உன்னதமான வாழ்க்கை ஆகாதா?
சரசு சொல்லுவாள்: 'நாங்களும் எங்கையாவது ஒரு நாட்டுக்குப் போயிருக்கலாம். இந்த தலையிடியள் இல்லாமல் நிம்மதியாக சீவிக்கலாம். இந்தப் பிள்ளையளின்ர எதிர்காலமாவது நல்லாய் வந்திருக்கும்." அவர் அதற்குப் பதில் பேசமாட்டார். சரசுக்கு விசர் என நினைத்துக் கொள்வார். பின்னர் மனைவியை சமாதானமடையச் செய்யவேண்டுமென எண்ணிக்கொண்டு 'வசதியுள்ள ஆட்கள் போகினம்… நாங்கள் எங்க போறது?" என ஒரு எதிர்க் கேள்வியைப் போடுவார்.
அவருக்குத் தெரியும். பிள்ளைகளின் எதிர்காலத்தை எண்ணிக்கொண்டே ஒவ்வொருவரும் தங்களுடைய புத்திக்கு எட்டியவாறு ஒவ்வொரு இடங்களிலும் போய் தஞ்சமடைகிறார்கள். போகமுடியாதவர்கள் யாழ்ப்பாணத்திலேயே தங்கிவிடுகிறார்கள்.
மீரா பாடசாலைக்குப் போக ஆயத்தமாகி வந்து நின்றாள். 'அப்பா ரெடி… வாங்கோ போகலாம்!"
பிரகாஸையும் அழைத்துக்கொண்டு அவர் புறப்பட்டார். அவரவர் பாடசாலைகளில் அவர்களை விட்டு விட்டு அவர் கையெழுத்திடப் போகவேண்டும். சீமெந்து தொழிற்சாலை அலுவலகம் தற்காலிகமாக ஓரிடத்தில் இயங்குகின்றது. கையெழுத்திட்டுப் பெறும் (சம்பளப்) பணத்தில் தான் சாப்பாட்டுப் பிரச்சினை ஒருவாறு சரிக்கட்டப்படுகிறது. இதுகூட சரியா என அவரை யோசிக்கத் தூண்டியிருக்கிறது. ஆனால் வேறு வழியில்லை. அப்போது மாணிக்கம் மாஸ்ட்டரின் ஞாயங்கள் தான் நினைவில் வரும். 'மறைமுகமாக நாங்கள் இப்படியொரு நிலைமைக்குள் தள்ளி விடப்பட்டிருக்கிறம். உலருணவு… நிவாரணம் என்று எல்லாத்துக்கும் வேற கையைத்தான் எதிர்பார்த்து நிக்கவேண்டியிருக்கு… பார்த்தியளே!"
கையெழுத்திட வந்த ஏனைய நண்பர்கள் சிலரைக் கண்டபோது மனதில் சபலம் தட்டியது. சற்று பேதலித்தது.. இவர்கள் யாரிடமாவது கேட்டுப்பார்த்தால் என்ன? அவருடைய நிலைமை தெரிந்த நல்ல மனம் கொண்ட நண்பர்கள் சிலர் உள்ளனர். பல தடவை உதவி செய்தவர்கள். கேட்டுப் பார்க்கலாம். தந்தாலும் தரக்கூடும். இப்போது பணம் கிடைத்தாலும் பிள்ளைகளுக்கு தேவைப்படும் உடைகளைப் பார்த்து வாங்குவதற்கு அவகாசமிருக்கும். பின்னர் தம்பியவர்களிடமிருந்து காசு வந்ததும் இதைத் திருப்பிவிடலாம்.
காசு கிடைத்து பிள்ளைகளுக்கு புத்தாடை வாங்கிக் கொடுத்து அவர்கள் குதூகலிப்பதை மனதில் நினைத்துப் பார்த்தார். அவரது உள்ளமும் குதூகலித்தது. புதிய ஆடையென்றால் யாருக்குத்தான் சந்தோஷமிருக்காது? அவருக்குக்கூட புதிதாக ஒரு சேர்ட் போட்டுப் பார்க்க ஆசைதான். மணமுடித்த ஆரம்ப காலங்களில் திருமணநாள் நினைவாக, மற்றும் அவரது பிறந்தநாள் என்று சரசு அவருக்கு புதிய சேர்ட் வாங்கித் தருவாள். சேர்ட் கைக்கு வந்த உடனேயே அதைப் போட்டுக் கண்ணாடியில் அழகு பார்த்துவிடுவார். கொஞ்சக் காலம்தான் இதெல்லாம் தடல்புடலாக நடந்தது. அதன் பிறகு சரசுவுக்கும்
அலுத்துப்போயிருக்கக்கூடும்! அல்லது அவளது தலையையும் அழுத்திய பொருளாதாரப் பிரச்சினை காரணமாயிருக்கலாம். இப்போது மணநிறைவு நாளும் பிறந்த நாளும் வருவதும் தெரியாமல் போவதும் தெரியாமல் போய்விடும்.
காசு கிடைத்தால், இந்த வருடப்பிறப்புக்கு தனக்கும் ஒரு சேர்ட் வேண்டினாலென்ன என்று அவருக்கு ஆசையாயிருந்தது. 'கந்தலைக் கசக்கிக் கட்டு" என எங்கேயோ ஒரு பாடல் பார்த்த ஞாபகம் இருக்கிறது. அதுபோலத்தான் தனது நிலைமையும் போய்க்கொண்டிருக்கிறது. வருடப்பிறப்புக்கு புத்தாடை அணிந்து அயலிலுள்ள பிள்ளைகளின் உடைகளுடன் ஒப்பிட்டு மகிழ்ந்த காலம் இன்னும் நினைவிருக்கிறது. தனது பிள்ளைகளுக்கும் அதுபோலத்தானே ஆசை இருக்கும்? புத்தாடையைக் கண்டு பிள்ளைகள் துள்ளிக் குதிப்பதை நினைக்கும்போதே நெஞ்சில் ஒருவித இதம் வருடியது.
அந்த ஆர்வத்தில் ஒரு சில நண்பர்களிடம் அணுகிக் கேட்டுப்பார்த்தார்.
“உங்களுக்கு இதொரு விளையாட்டாய்ப் போச்சுது! நெடுகலும் கடன்… கடன் என்றால் நாங்கள் எங்க போறது? உங்களைப் போலத்தான் எங்களுக்கும் கஸ்டம்" என்பது போன்ற பதில்கள்தான் கிடைத்தன.
சுமாரான வருமானம் உள்ளவர்களுக்கும் இங்கு வாழ்க்கையைக் கொண்டு நடத்துவது கஸ்டம் என்பது உண்மைதான். பொருட்கள் எதைக் கேட்டாலும் தடை… தட்டுப்பாடு. கிடைக்கக்கூடியதாயிருந்தால் கொடுக்கமுடியாத விலை. இந்த விசித்திரத்தில் அன்றாடம் சீவியத்தைக் கொண்டு நடத்துவது எப்படி?
சரி, தம்பியவர்களிடமிருந்து பணம் வரும்வரை பொறுமையாயிருக்கலாம் என மனதைக் கட்டுப்படுத்த முயன்றார். எனினும் சிலவேளைகளில் மனம் கேட்க மறுக்கிறது. கொழும்புக்குப் போன தேவராசா அண்ணன் பத்து நாட்களில் வருவதாகச் சொல்லியிருந்தார். எப்போது அந்த நாள் வரும் என எண்ணிக் கொண்டிருந்தார்.
விற்கக்கூடியதாக ஏதாவது இருக்கிறதா என்றும் அவரது சிந்தனை ஓடியது. நகை நட்டு என்று ஒன்றும் இல்லை. வீட்டில் சமையல் பாத்திரங்களையும் சாப்பாட்டுக் கோப்பைகளையும்கூட சரசு அவர் கண்ணில் பட விடுவதில்லை!
நாலைந்து கோழிகள் வீட்டில் நிற்கின்றன. அவற்றை விற்று விட்டால் என்ன? அந்தக் கதையைக் கேட்டதும் சரசு அடிப்பதுபோல வந்துவிட்டாள்.
'அதுகள் நிற்கிறதும்… உங்கடை கண்ணுக்கை குத்திப்போட்டுதா?... அதுகள் நிக்கிற புண்ணியத்திலதானே… பிள்ளையள் இடைசுகம் முட்டை சாப்பிடுதுகள்? பிள்ளைகளுக்கு வேறு என்ன சத்தான சாப்பாடு குடுக்கிறம்?"
பிள்ளைகளுக்குப் போஷாக்கான சாப்பாடு இல்லை என்ற கவலை அவருக்கும் உண்டு. மினுக்கென்று இருக்கவேண்டிய பருவத்தில் எலும்பும் தோலுமாகிக்கொண்டிருக்கிறார்கள்.
தேவராசா அண்ணன் வந்திருப்பாரா என இடையிடையே அவரது வீட்டுப்பக்கம் போய்ப் பார்த்து வந்தார்.
'போனவரை இன்னும் காணயில்லை… அதுதான் கவலைப்பட்டுக் கொண்டிருக்கிறன்…"
'வந்திடுவார்!... யோசியாதையுங்கோ! தெரியாதே… கொழும்புப் பயணம்… அலையவேண்டியிருக்கும்." தேவராசா அண்ணனின் மனைவிக்கு அவர் ஆறுதல் கூறிவிட்டு வருவார். ஆனால் வருடப்பிறப்புக்கு முன் அண்ணன் வந்துவிடவேண்டுமே என்ற ஏக்கம் இவருக்கிருக்கும்.
வருடப்பிறப்புக்கு இன்னும் ஒரே ஒரு நாள் மட்டும் உள்ளது என்ற நிலையில் அவருக்கு காய்ச்சலே பிடித்துவிடும் போலிருந்தது. இன்றைக்கும் தேவராசா அண்ணன் வரவில்லையென்றால் என்ன செய்வது? பிள்ளைகளிடமென்றால் இன்னும் எதிர்பார்ப்பு இருக்கிறது. இன்றைக்கு காசு வந்துவிடும் என்று சொல்லிக்கொண்டிருக்கிறார்கள். தேவராசா அண்ணனின் வீட்டுக்கு ஒருமுறை போய்ப் பார்த்து வரலாம் என்று தோன்றினாலும், நெடுகலும் போய் அலைவதை அவர்கள் எப்படிக் கருதுவார்களோ என ஒருவித சுயகௌரவம் தடுத்தது. மாலை வரை தாமதித்துப் பார்த்துவிட்டுப் போகலாம்.
00
ஆனால், ஒர் அற்புதம் நிகழ்வதைப் போல தேவராசா அண்ணன் வீடு தேடி வந்தார். தம்பி கொடுத்துவிட்டதாக அந்த என்வலப்பையும் தந்தார். பிரகாஷ_ம், மீராவும் அவருக்குப் பக்கத்தில் ஓடி வந்துவிட்டனர். அவர் வந்தவரோடு கதைத்துக்கொண்டிருக்க பிள்ளைகள் அவர் கையிலிருந்த என்வலப்பை பிடித்துப் பிடித்துப் பார்த்தார்கள். அவருக்கு அதை அந்தக்கணமே உடைக்கவேண்டும் என்ற ஆவல். ஆனால் தேவராசா அண்ணன் தனது கொழும்புப் பயணத்தில் ஏற்பட்ட சமாச்சாரங்களை வாய் ஓயாது சொல்லிக்கொண்டிருந்தார். அவர் போன பிறகு உடைக்கலாம் என பொறுமையைக் கடைப்பிடித்தார். தனது கை விரலால் மெதுவாக என்வலப்பின் உள்ளடக்கத்தை உணர்ந்து பார்த்தார். தடிப்பாகத்தான் இருக்கிறது… எவ்வளவு அனுப்பியிருப்பார்கள்?
என்வலப்பை உடைத்தபோது ஐந்தாறு தாள்களில் பக்கம் பக்கமாக எழுதப்பட்ட கடிதம்! பணம் இல்லை! சரியாகக் கவனிக்கவில்லையோ எனத் தாள்களை ஒவ்வொன்றாக ஒற்றையாகத் திருப்பித் திருப்பிப் பார்த்தார். இல்லை, பணம் இல்லை! கலவரத்துடன் கடிதத்தைப் பார்த்தார். சாராம்சம் இதுதான்..
‘நீங்கள் எழுதியிருந்த பண விடயமாக அவர்களுடன் ரெலிபோனில் கதைத்தேன். உடனடியாக அனுப்புவதற்கு வசதியில்லையாம். பின்னர் அனுப்புவதாகச் சொல்லச் சொன்னார்கள். தங்களுக்கும் குடும்பப் பொறுப்புகள் இருக்கிறது. இப்படி நெடுக அண்ணைக்கு அனுப்பிக்கொண்டிருக்கேலுமா? தன்னுடைய குடும்பத்தைக் கவனிக்கிற பொறுப்புணர்வு அண்ணைக்கு இருக்கவேணும்… நெடுகலும் தங்களுடைய கையை எதிர்பார்த்துக்கொண்டிருக்கக்கூடாதாம்! அவையள் எப்ப அனுப்புவினமோ தெரியாது… அதை நம்பி என்ர சேவிங்சில உள்ள கொஞ்ச நஞ்சக் காசையும் உங்களுக்கு அனுப்பிவிட்டு நான் என்ன செய்யிறது? கொழும்புச் சீவியத்தைப் பற்றி தெரியும்தானே…?’
இந்த விடயத்தை நோகாமல் சொல்வதற்காக ஆறோ ஏழோ தாள்கள் செலவழிக்கப்பட்டிருந்தன. ஆனால் அவருக்கு நொந்தது.
தம்பியவர்கள் எப்படியானாலும் பரவாயில்லை என்று, தானும் தன் பாட்டையும் தனது சேவிங்ஸையும் மட்டும் பார்த்துக்கொண்டு இருந்திருந்தால் அவர்களது நிலைமைகள் எப்படி ஆகியிருக்கும் என்ற நினைவும் ஏனோ ஒருகணம் மனதிலடித்தது. கைகளை அகல விரித்துத் தழைத்த மரமொன்றின் அடி வேரை வெட்டிவிட்டதுபோல சதுரமெங்கும் ஆடியது.
பக்கத்தில் நின்ற மீரா கேட்டாள்.
'காசு அனுப்பவில்லையா அப்பா?"
'இல்லை அம்மா!"
'ஏன்"
அவர் பதிலளிக்கவில்லை. சில கேள்விகளுக்கு பதில் சொல்ல முடியாது. அல்லது பதில் தெரியாது. வாழ்க்கையில் பதில் சொல்லப்படாத, பதில் அறிய முடியாத நிறையக் கேள்விகள் இருக்கின்றன. அந்தக் கேள்விகள் நினைவில் வந்தால் அவரை இராப்பகலாய் வருத்துவதுண்டு.
கடிதத்தை மீராவின் கையில் கொடுத்தார் அதிலிருந்த வாக்கியங்கள் திரும்பத் திரும்ப நினைவில் வந்து அவரை அடித்துப்போடுவது போன்றிருந்தது. மனதை ஒருநிலைப்படுத்தி நிதானிக்க முயன்றார். தனது இயலாத் தன்மையால் தம்பியவர்களையும் கஸ்டப்படுத்திவிட்டேனோ என்ற குற்ற மனப்பான்மைக்கு உட்பட்டவர் போலானார். நீண்ட நேரம் யாருடனும் எதுவும் போசாமல் இருந்தார். மனைவி ஆறுதல் படுத்தினாள்.
'அதுக்கேன் கவலைப்படுறீங்கள்… அவையளுக்கும் என்ன கஸ்டமோ…? ஆருக்குத் தெரியும்? கடவுள் விட்ட வழி!"
இருள் வந்து மெல்ல மெல்லப் பொழுதை மூடிக்கொண்டிருந்தது. வேளைக்கே படுக்கைக்குப் போனார். ஆனால் உறக்கம் வரவில்லை. சரசு வந்து பக்கத்திலே படுத்து.. அடித்துப் போட்டதுபோல உறங்கிவிட்டாள். பகல் முழுதும் மாய்ச்சல் படுகிற தேகம்போலும்.. படுத்ததும் உறங்கிவிடுவாள். அது அவளுக்கு ஒரு கொடையென நினைத்திருக்கிறார். அதுவும் நல்லதுதானே? மனக் கவலைகளுக்கு தூக்கத்தைவிட வேறு மருந்து ஏது? ஆனால் அவர் எத்தனையோ இரவுகள், எத்தனையோ கவலைகளில் தூங்காமலே கிடந்து உழன்றிருக்கிறார்.
000
இந்தா… இந்தா என்று சொல்லிக்கொண்டு புதுவருடம் வந்துவிட்டது! அது அவருக்குத் தெரியவில்லை. இன்னும் படுக்கையை விட்டு எழாமலே கிடந்தார்.
'வருடப்பிறப்பு நாளும் அதுவுமாய்… இப்பிடிப் படுத்திருக்கிறார்." மனைவி சத்தமிட்டு சொல்லிக் கொண்டிருக்கும் சத்தம்கூட அவருக்கு கேட்கவில்லை. மீரா ஓடிவந்து அப்பாவை எழுப்ப முயன்றாள். அவர் அசையாமல் கிடந்தார். அவரைத் தொட்டு அசைத்தாள். 'அப்பா!... எழும்புங்கோ! எழும்புங்கோ!..."
அவர் துடித்துப் பதைத்துக்கொண்டு எழுந்தார்.. 'விடிஞ்சிட்டுதாம்மா!"
'ஓமப்பா!"
எவ்வளவு அருமையான வார்த்தை! விடியல்! இந்தப் புதுவருடம் இங்கு எல்லோருடைய வாழ்க்கையிலும் அந்த விடியலைக் கொண்டு வராதா? இந்த வருடமாவது அமைதி வந்து சேராதா?
மகளைத் திரும்பிப் பார்த்தார். அவள் நின்ற கோலம் அவருக்கு அழுகையைக் கொண்டுவந்தது.
வருடப்பிறப்பு எவ்வளவு சந்தோஷமான நாள். அதிகாலையில் எழுந்து குளித்து கோயிலுக்குப் போய் வந்து அறுசுவை உணவருந்தி…
பிள்ளைகளுக்கு இன்றைக்கு விசேடமாக சாப்பாடு செய்து கொடுக்கக்கூட ஒரு வழியும் இல்லையே! அவ்வளவு ஏன்… இன்றைய வயிற்றுப் பாட்டுக்கே என்ன வழியோ தெரியாது. சரசுவுக்குத்தான் அந்தப் புதிருக்கு விடை தெரியும். சாமான் சக்கட்டு வேண்டும் கனகு கடையில் கடனுக்கு மேல் கடன் ஏறிவிட்டது. மாதாந்தம் எடுக்கிற சொற்ப சம்பளத்தில் சுமாரான தொகையை கனகு கடைக்குக் கொடுத்தாலும் கடனை முற்றாகத் தீர்த்துச் சரிக்கட்ட முடிந்ததில்லை. ஏதாவது சாமான் கேட்டுப் போனால் 'இல்லை"… 'முடிஞ்சு போச்சு" என ஏதாவது சொல்லித் திருப்பி விடுகிறான். நின்று மன்றாட்டமாகக் கேட்டுப் பார்த்தால், 'இருக்கிற கடனைக் கொடுத்திட்டு பிறகு சாமான் வேண்ட வாங்கோ!" என முகத்திலடிக்கிறான்.
'என்னப்பா யோசிக்கிறீங்கள்…?"
'ஒன்றுமில்லையம்மா!... ராவு முழுக்க நித்திரையில்லை… விடியப்புறமாய் அயர்ந்திட்டன்போல… அதுதான் எழும்பாமல் கிடந்திட்டன்..!"
'கவலைப்படுறீங்களா… அப்பா? எங்களுக்கு புது உடுப்பு வேண்டாம்… இருக்கிறது போதும்!... நீங்கள் கவலைப்படாதையுங்க..!"
அவர் தன் கைக்குள் மீராவை அணைத்துக்கொண்டு நெஞ்சுக்குள் விம்மினார்.
எழுந்து வெளியே வந்தார். குளிக்கும்போதும் யோசனை ஓடிக்கொண்டே இருந்தது. கொஞ்சக் காசாவது கையில் கிடைக்குமானால்? இப்படியொரு நல்ல நாள் பெருநாளிலாவது பிள்ளைகள் வாய்க்கு ருசியாக ஏதாவது சாப்பிட வேண்டாமா?
வாழை மரங்களைப் பார்த்தார். புதிதாக விரிந்திருக்கும் இலைகளைக் கணக்கிட்டுப் பார்த்தார். ஓரளவு ரூபா தேறினாலும் பரவாயில்லை. அவற்றை வெட்டி எடுத்துக்கொண்டு சந்தைக்குப் போனார்.
தின்னவேலிச் சந்தையில் சனங்கள் குறைவாயிருந்தனர். இலைகளை அப்படியே ஒரு வியாபாரிக்கு விலை பேசிக்கொடுத்தார். பணம் கைக்கு வந்ததும் சற்றுத் தெம்பு. புறப்படலாம் எனத் திரும்பிய போது… சற்றுத் தொலைவில் மணியண்ணை!
சுமார் இருபது வருடங்களுக்கு முன் பெக்டரியிலிருந்து ஓய்வு பெற்றவர் மணியண்ணை. இப்போது வயோதிபம் வந்துவிட்டது. மட்டுக்கட்ட முடியவில்லை. வயோதிபம் எல்லோருக்கும்தான் வருகிறது. எவ்வளவு திடகாத்திரமாக இருந்த மனுசன்.. இப்படித் தளர்ந்து போய்விட்டாரே! வயோதிபம் காலத்தோடு வருகிறதா? கஸ்டத்தோடு வருகிறதா?
ஓய்வு பெற்ற பிறகு மணியண்ணையை இரண்டொருமுறை காண நேர்ந்திருக்கிறது. ஓய்வுபெற்றபோது பெற்ற பணத்தில் தனது மகளுக்கு மணமுடித்துக் கொடுத்தாராம். அவரது மகளும் இரண்டு மகன்களும் ஐரோப்பிய நாடுகளில் குடிபோய்விட்டார்களாம். 'செலவுக்கு காசு அனுப்பி வைப்பார்கள்… இப்படியே காலத்தைக் கடத்திக் கொண்டிருக்கிறன்.!" என முன்னர் கண்டபோது மணியண்ணை சொன்னது ஞாபகம் வந்தது.
அவரது மனதில் பளிச்சென ஒரு வெளிச்சம். மணியண்ணையிடம் கேட்டுப் பார்க்கலாம். நிச்சயம் உதவி செய்வார்.
அவரது மனம் ஒரு துள்ளு துள்ளியது. மணியண்ணையை நோக்கி நடந்தார். மணியண்ணையும் அவரை அடையாளம் கண்டுகொண்டு வந்தார்.
'மணியண்ணை!"
கையைப் பிடித்தார். மணியண்ணை கை நடுங்கி நடுங்கி அவரைத் தழுவிக்கொண்டார். கண்ணீர் முந்திக்கொண்டு வந்தது.
'மணியண்ணை எப்படியிருக்கிறீங்கள்…?"
'காலையிலிருந்து ஒரு தேத்தண்ணிகூடக் குடிக்கயில்லை… வயிறு புகையுது…கையில ஏதாவது இருந்தா.. தாங்கோ!"
வாழையிலை விற்ற காசு கையிலிருந்தது. அதை அவர் அப்படியே மணியண்ணையின் கையில் கொடுத்தார்.
000
(மல்லிகை சஞ்சிகையிற் பிரசுரமானது - 1999)
'பதிவுகள்' இணைய இதழுக்கு அனுப்பியவர்: சுதாராஜ்
•This e-mail address is being protected from spambots. You need JavaScript enabled to view it•
•<• •Prev• | •Next• •>• |
---|