பிலோ இருதயநாத் எழுதிய ‘நாய் கற்பித்த பாடம்’ என்ற கட்டுரை பதிவுகளில் பதியப்பட்டிருந்ததை வாசிக்கச் சந்தர்ப்பம் கிடைத்தது. கட்டுரை மிகவும் சிறப்பாக இருந்தது. மாணவப்பருவமாக இருந்தபோது விகடன் தீபாவளி மலரில் இவரது கட்டுரைகள் அடிக்கடி வெளிவரும். மிகவும் ஆர்வத்தோடு வாசிப்பேன். பதிவுகளில் வெளிவந்த இந்தக் கட்டுரையை வாசித்த போது, இதே போலத்தான கெனத் அனடர்சனின் (Kenneth Anderson) ‘சீவனப்பள்ளியின் கருஞ்சிறுத்தை’ என்ற நூல் பற்றிய எனது நினைவலைகளை மீண்டும் மீட்டுக் கொண்டு வந்ததில் மகிழ்ச்சியாக இருக்கின்றது. வேட்டையின் போது உதவியாக இருந்த நாய் குஷ்ஷி பற்றியும் கெனத் அண்டர்சனும் தனது நூலில் குறிப்பிட்டிருந்தார். ஆட்கொல்லியாக மாறும் விலங்குகளை மட்டுமே வேட்டையாடிய அவர், ஆட்கொல்லியாக விலங்குகள் ஏன் மாறுகின்றன என்பதைத் தெளிவாக அந்த நூலில் எடுத்துச் சொல்லியிருந்தது குறிப்பிடத் தக்கது.
மாணவப்பருவத்தில் எதையாவது வாசிக்க வேண்டும் என்ற ஆர்வம் எழுவதுண்டு. ஒவ்வொரு காலக்கட்டத்திலும் ஒவ்வொரு துறைகள் சம்பந்தப்பட்ட விடையங்களில் திடீரென ஆர்வம் ஏற்படுவதுண்டு. அப்படி ஒரு நிலை எனக்கு மகாஜனாக்கல்லூரியில் படிக்கும் போது ஏற்பட்டது. காரணம் கல்லூரியின் நூலகத்திற்குப் புதிதாக வந்த ஒரு நூல் கருஞ்சிறுத்தைகள் பற்றிய தலைப்பைக் கொண்டிருந்தது. அப்போது நூலகத்திற்குப் பொறுப்பாக இருந்த ரி. பத்மநாதன் அவர்களிடம் பதிவுக்காக நூலை நீட்டியபோது, ‘மனுசரை வாசிக்கிறதை விட்டு இப்ப விலங்குகளைப் பற்றி வாசிக்கப் போறியா?’ என்பது போல ஒரு பார்வை பார்த்தார். இயற்கைச் சூழலில் விலங்கினங்களின் வாழக்கை முறையை அவறறற்றின் பழக்க வழக்கங்களை அறிந்து கொள்ள மிகவும் உதவியாக அந்தப் புத்தகம் இருந்தது.
இந்த நூலை மிகவும் சுவாரஸ்யமாக எழுதியவர் கென்னத் அன்டர்சன் என்ற எழுத்தாளர். இதைத் தமிழில் எஸ். சங்கரன் என்பவர் மொழி பெயர்த்திருந்தார். புலி என்றால் வரிகள் இருக்கும், சிறுத்தை என்றால் புள்ளிகள் இருக்கும் என்றுதான் நான் சிறுவயதில் நம்பியிருந்தேன். ஆனால் கருஞ்சிறுத்தை என்றதும் என் ஆர்வத்தை அந்து நுர்ல் தூண்டிவிட்டது. சிங்கப்பூரில் வெள்ளை நிறப் புலிகளைக் காப்பகத்தில் கண்டபோதும் எனக்கு ஆச்சரியமாகNவு இருந்தது.
ஒவ்வொரு துறையிலும் எங்களுக்கு யாராவது ஒருவர் வழிகாட்டியாக இருந்திருக்கிறார்கள். அவர்கள் வீட்டிலும் சரி அல்லது வெளியிலும் சரி ஏதோ ஒரு வகையில் வழிகாட்டியிருப்பார்கள். அந்த வகையில் முதல் வழிகாட்டியாகப் பெற்றோரும், அதன் பின் உடன் பிறப்புகளும், ஆசிரியர்களும் முன் உதாரணமாக இருப்பார்கள். சிறுவனாக இருந்தபோது இருட்டில் நடமாடுவதைத் தவிர்ப்பதற்காகப் போய் பிசாசு என்றெல்லாம் பயங்காட்டுவார்கள். அப்படி ஒன்றுமில்லை என்பதை அறிவு பூர்வமாக அக்கால கட்டத்தில் எடுத்துச் சொன்னவர் ஆப்ரஹாம் கோவூர் என்பவர். தண்ணீரில் இறங்கப் பயந்த எங்களுக்குக் கடல்கடந்து நீந்திக் காட்டியவர்கள் நவரட்ணசாமி, ஆனந்தன் போன்றவர்கள். எமக்கு ஆங்கில அறிவு முக்கியம் தேவை என்பதை உணர்ந்து அதை ஊட்டிவிட்டவர் மகாஜனா முன்னாள் அதிபர் து. ஜெயரட்ணம் அவர்கள். என்னைக் கதை எழுதத் தூண்டியவர் எழுத்தாளர் சுஜாதா அவர்கள். எப்படியோ ஒவ்வொரு துறையிலும் யாரோ ஒருவர் விழகாட்டியாக, முன்னோடியாக இருந்திருக்கிறார்கள்.
சிறுத்தைகள் பற்றி அன்டர்சன் குறிப்பிடும் போது அவை இரை தேடக் கிளம்பும் நேரம், எந்த வழியாக அவை தங்கள் இரையைத் தேடிச் செல்லும், அவை தங்கள் இரைக்காக எந்தெந்த இடங்களில் காத்திருக்கும் என்பன போன்றவற்றைத் தனது அனுபவம் மூலம் எடுத்துச் சொல்கின்றார். எந்த ஒரு விலங்கையும் எதிர் கொள்ளுமுன் அதன் பழக்க வழக்கங்களை அறிந்து கொள்வது நல்லது என்று ஆசிரியர் அண்டர்சன் ஓரிடத்தில் குறிப்பிடுகின்றார். பொதுவாகச் சிறுத்தை மனிதர்களை கண்டால் பின்வாங்கிச் செல்லும் தன்மை கொண்டவை என்றும், அப்படி இல்லாமல் மனிதர்களைத் தாக்குவது அசாதரணமான சூழ்நிலையின் காரணமாகவே என்றும் தனது அனுபவத்தைப் பகிர்ந்து கொள்ளும் அன்டர்சன், உணவு கிடைக்காவிட்டால், அல்லது அவை காயம் பட்டிருந்தால் ஆட்கொல்லியாக மாறலாம் என்பதையும், காட்டிற்கு அருகே அமைந்திருக்கும் சீவனப்பள்ளி என்ற கிராமமொன்றில் தனது உணவுக்காகக் கால்நடைகளை தாக்கி உண்ணும் கருஞ்சிறுத்தை ஒன்று எப்படிப் படிப்படியாக மனிதனைக் கொல்லும் விலங்காக மாறியது என்பதை மிகவும் விறுவிறுப்பாக அந்த நூலில் குறிப்பிட்டிருக்கின்றார்.
•This e-mail address is being protected from spambots. You need JavaScript enabled to view it•
•<• •Prev• | •Next• •>• |
---|