பாடசாலை காலத்து நினைவலைகள் எம் நெஞ்சுக்குள் அலையாக அடிக்கும் போது ஏற்படும் பரவச நிலை வார்த்தைகளில் சொல்ல முடியாதவொன்று. அக்காலத்தில் நம்முடனிருந்த நண்பர்கள், நம் ஆசிரியர்கள், சக மாணவர்கள் என எல்லோருமே எம் இதயத்தின் மூலையில் வாழ்ந்துகொண்டுதான் இருப்பார்கள். நினைத்தாலும் மீண்டும் பாடசாலை வாழ்க்கைக்கு மீண்டுவிட முடியாத யதார்த்தம் நம் எல்லோருக்கும் தெரிந்திருந்தாலும், ஆசிரியர்கள் அந்த அதிர்ஷ்டத்தை அடைந்து விடுகின்றார்கள் என்பதுதான் நிதர்சனம்.
மாணவர்களுடனேயே நேரகாலம் போவதும், அவர்களின் கற்றல் செயற்பாடுகளுக்கு துணை புரிவதும், அவர்களது வளர்ச்சிக்காக உழைப்பதும் ஆசிரியர்களின் தலையாய கடமையாகவே மாறிவிடுகின்றது எனலாம். அவ்வாறு மாணவர்கள் மீது அதிக கரிசனை கொண்ட ஆசிரியர்கள் படைப்பிலக்கியத் துறையில் ஈடுபடும்போது ஒவ்வொரு மாணவரினதும் ஒவ்வொரு போக்குகளையும் கதையின் கருக்களாக மாற்ற முடியும். அவை வாசிக்கின்ற ஏனையவர்களின் மனதில் சிறிய அதிர்வலைகளை ஏற்படுத்த முடியும்.
குருநாகலை மாவட்டத்தைச் சேர்ந்த சியம்பலகஸ்கொட்டுவையைப் பிறப்பிடமாகவும், இஹல கினியமயைப் வசிப்பிடமாகவும் கொண்ட பஸீலா அமீர் என்ற ஓய்வுபெற்ற ஆசிரியர் இளந்தளிர் எனும் பெயரில் சிறுவர் கதை நூலை வெளியிட்டிருக்கின்றார். இவர் ஏற்கனவே அமுது என்ற சிறுவர் உருவகக் கதை நூலொன்றை வெளியிட்டிருப்பது குறிப்பிடத்தக்கது. ஈரமுள்ள நெஞ்சம், மனித நேயம், முயன்றால் முடியும், நழுவிய சந்தர்ப்பம், ஒழிந்தது பிடிவாதம், பெருநாள் வந்தது, பிறந்தநாள் பரிசு, ரவியின் ஆசை, திருந்திய உள்ளம், தோழியர் மூவர் ஆகிய 10 கதைகளை உள்ளடக்கி 44 பக்கங்களில் அமைந்துள்ள இளந்தளிர் எனும் இந்த நூலுக்கு ஆசியுரை வழங்கியிருக்கும் சட்டத்தரணி ஏ.எஸ்.எம். மின்வர் நூலாசிரியர் பற்றி கீழுள்ளவாறு குறிப்பிடுகின்றார்.
தனது சிறுவயது முதற்கொண்டு கல்வியோடு கலைத் துறையிலும் ஆர்வம் காட்டி வரும் இந்நூலாசிரியை தனது திறமைகளை தன்னில் முடக்கிக்கொள்ளாது வளரும் சிறார்களின் திறன்களை மேலோங்கச் செய்ய வேண்டும் என்ற பரந்த நோக்குடன் செயற்படுபவர். பிறந்து வளர்ந்து, வாழ்ந்து, வெறுமனே மறைந்து போவதை விரும்பாது தன்னால் தன் சமூகம் நலன்பெற வேண்டும் என்ற நன்நோக்கில் இவ்வாசிரியை மேற்கொண்டு வரும் பணிகள், முயற்சிகள் பாராட்டத்தக்கதே.
தனது சூழலில் அன்றாடம் நிகழ்பவற்றையும், சந்திப்பவைகளையும், தன் மனதில் ஆழப் பதிந்து தடம் பதித்த ஞாபகங்களையும் சிறுவர் விரும்பத்தக்க வகையில் இரசனையுடனும் சுவாரஷ்யமாகவும் குட்டிக் கதைகளாக சிறப்பாக வடிவமைத்துள்ளார். தன் வாழ்நாளில் பல வருடங்களைப் பள்ளிச் சிறார்களுக்காக அர்ப்பணித்து அவர்களுக்கு அன்பு காட்டி ஆதரவு வழங்கி அழகிய முறையில் தன்னுள்ளம் திருப்தி காண அறிவமுதமூட்டி நல்லதொரு வழிகாட்டியாகத் திகழ்ந்து ஓய்வு பெற்றவர். என்றாலும் தனது மெய்வருத்தம் பாராது நேரம் பொன்னெனக் கருதி சிறுவர் கதை நூல்களை எழுதி வருவது பாராட்டுக்குரியது.
ஈரமுள்ள நெஞ்சம் (பக்கம் 01) எனும் கதை உதவி செய்ய வேண்டும் என்பதை வலியுறுத்துகின்றது. பாடசாலைகளை எடுத்துக்கொண்டால் ஒருசில மாணவர்கள்தான் போட்டிக்கு படிப்பார்கள். பெரும்பாலானவர்கள் நன்றாக படிப்பவர்கள் மீது பொறாமை கொண்டவர்களாகவும், அவர்களை ஆசிரியரிடம் மாட்டி விடுவதற்கான சந்தர்ப்பம் பார்த்துக் கொண்டிருப்பவர்களாகவும்தான் காணப்படுவார்கள். இது மாணவர்களின் இயல்பு. தான் செய்வதே சரி என்ற ஆதிக்கத்தில் சிலர் இருப்பார்கள். மற்றவர்களை பற்றி சதாவும் குறைகூறியபடி இருக்கும் மாணவர்கள் இருப்பார்கள். இவற்றையெல்லாம் ஆசிரியர்கள் தம் கழுகுப் பார்வையாலே உணர்ந்து கொள்வதுண்டு. இக்கதையிலும் அவ்வாறான மனநிலை கொண்ட சில மாணவிகளதும், அன்புள்ளம் கொண்ட ஒரு மாணவியினதும் செயற்பாடுகள் சித்திரித்துக் காட்டப்பட்டுள்ளன.
மலர் என்ற மாணவி பாடசாலைக்கு வர தாமதமாகிறது. மாணவிகள் எல்லோரும் மலர் இன்று வகுப்பறையை சுத்தம் செய்யவிருப்பதால் நேரம் பிந்தி வருவாள் என்று ஆசிரியரிடம் சொல்லுகின்றனர். வகுப்பறை குப்பைகள் நிறைந்து அழுக்காக காணப்படுகின்றது. சிறிது நேரத்தில் வகுப்புக்கு தாமதமாக வரும் மாணவி மலரிடம் ஏன் தாமதம் என ஆசிரியர் கேட்கின்றார். அதற்கு மலர் அழுதவாறே கால் இழந்த ஒரு மனிதருக்கு தன் சாப்பாட்டைக் கொடுத்துவிட்டு தண்ணீர் அருந்தச் செய்த பின் வருவதற்கு சற்று சுணங்கிவிட்டதாகக் கூறுகின்றாள்.
அதற்கு ஆசிரியர், நீ நல்ல பிள்ளையம்மா. நல்ல காரியம் ஒன்றை செஞ்சிட்டு வந்து ஏம்மா அழுரே? உன்னப் போல எல்லாப் பிள்ளைகளுக்கும் இந்த இரக்கம், பாசம், உதவி செய்யும் உள்ளம் இருந்தால் இண்டக்கி வகுப்பறை இப்படி இருந்திருக்குமா? என்று கேட்கின்றார்.
ஆசிரியர் இவ்வாறு சொன்னதும் மற்ற மாணவிகளுக்கு தாம் செய்த தவறு விளங்குகின்றது. உடனே அவர்கள் அனைவரும் ஒன்றிணைந்து வகுப்பறையைச் சுத்தம் செய்வதாகவும், மலரோடு அன்பாக இருப்பதாகவும் கதை நிறைவடைகின்றது.
மனித நேயம் (பக்கம் 06) எனும் கதை பெரியவர்களுக்கு மரியாதை கொடுக்க வேண்டும் என்பதை வலியுறுத்துகின்றது. இன்று பஸ்களில் பயணம் செய்பவர்களைப் பார்க்கும்போது மனிதநேயம் மரணித்துவிட்டதோ என்று எண்ணத் தோன்றுகின்றது.
வயதானவர்கள் வந்தால் இடம் கொடுக்க விருப்பமின்றி அசட்டையாக அப்பால் திரும்பிக்கொள்வது, தூங்குவது போல நடிப்பது அல்லது கர்ப்பிணித் தாய்மார்கள் வந்தால் வேறு யாராவது இடம் கொடுக்க மாட்டார்களா என்று சுற்று முற்றும் பார்ப்பது, அல்லது பொதிகளை வைத்திருப்பவர்களின் முகத்தைக் கூட பார்க்காமல் தெரியாதது போல பாவனை பண்ணுவது போன்றவற்றை நாம் அன்றாடம் பார்த்துக் கொண்டிருக்கின்றோம். இனி இல்லை என்றால் சிலர் அவ்வாறு எழுந்து இடம்கொடுப்பதும், பொதிகளை வாங்கி உதவி செய்வதும் அத்தி பூத்தாற்போல காணக் கிடைக்கின்ற காட்சிகளாகும்.
இக்கதையில் வருகின்ற அருண் என்ற மாணவன் பஸ்ஸில் பயணித்துக் கொண்டிருந்தபோது அவனருகில் நின்றுகொண்டு வந்த பெரியவரின் தோற்றமும், உடையும் அவர் மீது அவனுக்கு மிகுந்த மரியாதையை வரவழைக்கின்றது. எனவே அவருக்கு இருக்க இடம்கொடுத்துவிட்டு அவன் நின்றபடி வருகின்றான். மற்ற நண்பர்கள் அவனைப் பார்த்து கேலி செய்கின்றனர்.
அருண் படிக்கும் பாடசாலையில் அன்று இலக்கிய விழா. அதில் பேச்சுப் போட்டியில் மனித நேயம் என்ற தலைப்பில் பேசி முதலாமிடம் பெற்ற அருணுக்கு பரிசில்களை வழங்கி வைத்தவர் காலையின் அருண் பஸ்ஸில் கண்ட அந்தப் பெரியவர். அவர் அருணுக்கு பரிசிலை வழங்கியதுடன் ஷஇந்தச் சிறுவன் மனித நேயம் என்ற தலைப்பில் பேசியவன். பேச்சில் கூறப்பட்டது போல் செயலிலும் காட்டியவன். அருணுக்கு எனது அன்பளிப்பாக ஆயிரம் ரூபாய் வழங்கி அவனை கௌரவிக்கிறேன்| என்கின்றார். வாய்ப் பேச்சால் மட்டும் உலகை வெல்ல முடியாது. உண்மையான செயற்பாடு மூலமே உயர்வடையலாம் என்று கதாசிரியர் இறுதியில் கூறியிருக்கும் கூற்று நிதர்சனமானது.
நழுவிய சந்தர்ப்பம் (பக்கம் 13) என்ற கதையில் கல்வியின் சிறப்பு எடுத்தாளப்பட்டுள்ளது. சாதாரண பரீட்சையில் சித்தியடைந்த நபீஸ் உயர் தரத்தில் கணிதப் பிரிவில் கற்க முடிவெடுக்கின்றான். ஹரூஸின் பெறுபேறுகள் போதாமல் இருப்பதால் அவன் மிகவும் கவலையடைகின்றான். ஷநானும் இன்னும் கவனமாகப் படித்திருந்தால் உன்னைப் போல உயர்தரத்தில் கணிதப் பிரிவில் கற்க முடிந்திருக்குமே. இனி அதைப்பற்றி எவ்வளவு சிந்தித்தும், அழுதும் பயனில்லை. நீயாவது படித்து ஊரில் உயர்ந்த அந்தஸ்திற்கு வா. நான் கலைப் பிரிவில் படித்து ஏதோ ஒரு சிறு தொழிலையாவது செய்ய முயற்சிக்கிறேன்| என்று ஹரூஸ் கூறும் கூற்றில்
''ஏதோ ஒரு சிறு தொழிலையாவது'' என்ற சொல்லாடல் ஏற்றுக்கொள்ளத்தக்கதாக அமையவில்லை. ஏனெனில் கலைப்பிரிவில் கற்றவர்கள் படிக்க முடியாதவர்கள் என்று அர்த்தமாகிவிடாது. கலைப் பிரிவில் கற்ற எத்தனையோ பேர் ஆசிரியர்களாக, பேராசிரியர்களாக, கலாநிதிகளாக, பிரபல எழுத்தாளர்களாக ஏன் சட்டத்தரணிகளாகக்கூட உருவாகி இருக்கின்றார்கள். எனவே கலைப் பிரிவு என்பதை தாழ்வாக சித்திரிப்பது தவிர்க்கப்பட வேண்டும்.
ஒழிந்தது பிடிவாதம் (பக்கம் 16) என்ற கதை சிறுவர்கள் அடம்பிடித்து தம் காரியங்களை செய்து கொள்வதில் வல்லவர்கள் என்பதையும் அதனால் பெற்றோர்கள் மனக் கவலைக்கு ஆளாகிவிடுகின்றனர் என்பதையும் திறம்பட சொல்லியிருக்கின்றது. இக்கதையில் வரும் சிறுமியான பாத்திமா தன் பிறந்த நாளுக்கு தங்கச் சங்கிலி வேண்டும் என்று அடம்பிடிக்கின்றாள். ஆனால் அதைச் செய்து கொடுக்குமளவுக்கு பாத்திமாவின் பெற்றோர் வசதியானவர்கள் கிடையாது. ஒருநாள் பாத்திமா பாடசாலை விட்டு வரும்போது மழை பெய்த காரணத்தால் ஒரு குடிசையருகில் ஒதுங்குகின்றாள். அந்தக் குடிசையில் இருந்த சிறுமியின் அப்பாவுக்கு சுகமில்லை. அதனால் அம்மா வேலைக்குச் சென்று காசு சம்பாதித்து தன் மகளை சுற்றுலாவுக்கு அனுப்ப காசு தருகிறேன் என்று மகளிடம் கூறுகின்றாள். அதற்கு அந்தச் சிறுமி நீங்கள் இருவரும் கஷ்டப்பட வேண்டம். நான் அடுத்த வருடம் சுற்றுலா போகிறேன் என்று நிலைமையுணர்ந்து கூறுகின்றாள். இதைக் கேட்டுக்கொண்டிருந்த பாத்திமாவின் உள்ளம் தெளிவாகின்றது. தானும் இனிமேல் தன் பெற்றோருக்கு சிரமம் கொடுக்கக் கூடாது என்று உணர்ந்து திருந்துகின்றாள். அருமையானதொரு கதை இது.
பிறந்த நாள் பரிசு (பக்கம் 25) என்ற கதையும் மாணவர்களுக்கு படிப்பினையான ஒரு கதையாகும். பிறந்த நாளுக்காக இன்று ஆடம்பரமாக செலவு செய்யும் வழக்கம் காணப்படுகின்றது. இதைத் தவிர்த்து இக்கதையில் வரும் சிவா என்ற சிறுவன் பாடசாலை வாசிகசாலைக்கு புத்தகங்களைப் பரிசளிக்கின்றான். அவனது செயலைப் பாராட்டி பாடசாலையில் அவனையும், அவனது பெற்றோரையும் கௌரவிக்கின்றார்கள். நாம் வாழ்வதில் அர்த்தம் இருக்க வேண்டும். இவ்வாறான காரியங்கள் எம்மை எமக்கும் மற்றவர்களுக்கும் பறைசாற்றும். இவ்வாறான நல்லவற்றை நாமும் செய்து பிறரையும் செய்யத் தூண்ட வேண்டும். ஏனையவர்களுக்கு முன்மாதிரியாக இருக்க வேண்டும்.
இவ்வாறான பயன்மிகு கதைகள் சிறுவர்கள் மட்டுமல்லாது பெரியவர்களும் வாசிப்பதற்கு ஏற்றன. அவ்வாறான கதைகளை ஒரு தொகுதியாக்கி வெளியிடும் வெளியிட்டிருக்கும் நூலாசிரியர் பஸீலா அமீர் அவர்களுக்கு வாழ்த்துக்கள்!!!
நூல் - இளந்தளிர்
நூலின் வகை - சிறுவர் கதைகள்
நூலாசிரியர் - பஸீலா அமீர்
விலை - 140 ரூபாய்
•This e-mail address is being protected from spambots. You need JavaScript enabled to view it•
•<• •Prev• | •Next• •>• |
---|