அறிமுகம்
தமிழர்தம் பண்பாட்டில் நாட்டுப்புறக் கலைகள் உயிர்துடிப்புள்ளவை. உடலையும் உள்ளத்தையும் ஆரோக்கியமாக வைத்திருப்பதற்கும் மக்களின் ஒருமைப்பாட்டுக்கும் பண்பாட்டுப் பேணுகைக்கும் ஆதாரமானவை. நாட்டாரியல் என்ற பெருந்துறையினுள் பெரிதும் பேசப்படாத ஆய்வுக்கு உட்படுத்தப்படாத கலை வடிவமாக நாட்டுப்புற விளையாட்டுக்கள் உள்ளன.
நாட்டுப்புறவியலை இலக்கிய வகைகள் எனவும் கலை வகைகள் எனவும் இரண்டு பிரிவாக நோக்கலாம். பாடல்கள், பழமொழிகள், விடுகதைகள், கதைப்பாடல்கள் “இலக்கிய வகை” என்ற பகுப்பில் அடங்குகின்றன. நாட்டுப்புற நடனங்கள், நடையுடை பாவனைகள், விளையாட்டுக்கள், கைவினைக் கலைகள், நம்பிக்கைகள், பழக்க வழக்கங்கள் ஆகியன “கலைவகை” என்ற பகுப்பில் அடங்குகின்றன.
கிராமிய விளையாட்டுக்கலை
இன்றைய உலகப்போக்கில் தமிழரின் பாரம்பரிய விளையாட்டுக்கள் மறக்கடிக்கப்பட்டவையாகவோ அல்லது மடைமாற்றப்பட்டனவாகவோ (வழிமாற்றப்பட்டதாக) உள்ளன என்று கூறுவதில் மிகையில்லை. கிராமம் தழுவிய பண்பாட்டிலிருந்து நகர்ப்புறப் பண்பாட்டிற்கு மக்களின் வாழ்வு மெல்ல மெல்ல மாறிக்கொண்டிருப்பதால் பாரம்பரீயக் கலைகளும் பாரம்பரீய விளையாட்டுக்களும்கூட அருகிப்போகின்றன. சர்வதேசியம் தழுவிய ஆதிக்கத்திற்கும் ஆராதனைக்கும் உட்பட்டு கிராமியம் சார்ந்த கலைகள் தட்டிக்கழிக்கப்படுகின்றன. கால் பந்தாட்டம் துடுப்பாட்டம் போன்ற உலகப்பொதுவாக்கப்பட்ட விளையாட்டுக்களால் தமிழரின் பாரம்பரிய கிராமிய விளையாட்டுக்கள் மெல்ல மெல்ல கைவிடப்படுகின்றன. அவற்றை மீட்டுப்பார்ப்பதும் எஞ்சியுள்ள விளையாட்டுக்கள் பற்றிய தேடலை நிகழ்த்துவதற்கும் ஓர் அறிமுகமாக இக்கட்டுரை வரையப்பட்டுள்ளது.
தமிழர் வாழ்வில் இரண்டறக் கலந்த பல விளையாட்டுக்கள் தமிழ்மக்கள் வாழும் பல பிரதேசங்களிலும் விளையாடப்படுவனவெனினும் ஈழத்தின் வடபகுதி விளையாட்டுக்கள் குறித்தே இக்கட்டுரையில் நோக்கப்படுகிறது. கிராமிய விளையாட்டுக்கள் எல்லாப் பிரதேசங்களிலும் ஒரேமாதிரியாக அமைவனவல்ல. ஒவ்வொரு பிரதேசத்திற்கும் இருக்கக்கூடிய சமூக பண்பாட்டு வேறுபாடுகளுக்கு ஏற்ப சிறிய மாற்றங்களுடன் அமைந்துள்ளன.
கிராமிய விளையாட்டுக்களின் முதன்மையான இயல்பு ஒன்றினை இங்கு சுட்டிக்காட்டலாம். அதாவது அதிகமான விளையாட்டுக்கள் பாடலுடன் இணைந்தவையாகவே அமைந்துள்ளன. அவை பாடலுடன் உடல் அசைவையும் உள்ளத்தில் ஈடுபாட்டையும் ஏற்படுத்துவனவாக உள்ளன. குழந்;தைப்பருவம், இளமைப்பருவம், விடலைப்பருவம், முதுமைப்பருவம் என ஒவ்வொரு பருவத்திற்கும் ஏற்ற விளையாட்டுக்கள் கிராமிய விளையாட்டுக்களில் காணக்கிடைக்கின்றன. அத்துடன் பால் வேறுபாட்டுக்கு ஏற்பவும் இவ்விளையாட்டுக்களைப் பிரித்து நோக்கலாம்.
குழந்தைகள் விளையாட்டு அதிகமும் சொற்களை உச்சரிக்கவும், வினாவிடை வடிவிலும் அமைந்திருக்கும். இவை அவர்களின் சொல்லாற்றலையும் நினைவாற்றலையும் மேம்படுத்த உதவுவனவாக அமைந்துள்ளன. சிறுவர் தனியாகவும் சிறுமியர் தனியாகவும் சிறுவர் சிறுமியர் சேர்ந்து விளையாடும் விளையாட்டுக்களும் உள்ளன. கிட்டியடித்தல், பம்பரம், காற்றாடி, வண்டியுருட்டுதல் முதலானவை சிறுவர் அதிகம் விளையாடக்கூடியவை. எவடம் எவடம், எலியும் பூனையும், குலைகுலையாய் முந்திரிக்காய், குழைபோடுதல், ஒளிச்சு விளையாடுதல் முதலானவை சிறுவர் சிறுமியர் சேர்ந்து விளையாடக்கூடியவை.
தாயம், பாண்டி, கிந்தித்தொடுதல், கொக்கான் வெட்டுதல், ஊஞ்சல், கோலம், கும்மி, மஞ்சள் நீர் தெளித்தல், கயிறடித்தல் முதலான விளையாட்டுக்கள் சிறுமிகளும் வளர்ந்த பெண்பிள்ளைகளும் விளையாடக்கூடியவை. அக்காலச் சமூகநிலையில் பெண்கள் வீட்டுக்கு வெளியே சென்று விளையாடுவதில் கட்டுப்பாடுகள் இருந்த காரணத்தினால் பெண்களுக்குரிய விளையாட்டுக்கள் அதிகமும் வீட்டிலோ அல்லது வளவின் உள்ளேயோ விளையாடக்கூடிய உள்ளக விளையாட்டுக்களாகவே அமைந்துள்ளன.
ஆண்களுக்குரிய விளையாட்டுக்கள் அதிகமும் வெளியே சென்று விளையாடக்கூடிய வெளியக விளையாட்டுக்களாகவே அமைந்துள்ளன. இவற்றில் தற்காப்புக் கலை சார்ந்த விளையாட்டுக்களில் சிலம்பாட்டம், மல்யுத்தம் குத்துச்சண்டை. ஆகியவை தனித்துவமானவை. ஏனைய விளையாட்டுக்கள் பலவும் ஆண்களின் வீரதீரத்தையும் பொழுதுபோக்கு அம்சத்தையும் வெளிப்படுத்தக்கூடியவையாக அமைந்திருந்தன. குறிப்பாக, போர்த்தேங்காய் அடித்தல், மாட்டுவண்டில் சவாரி, கபடி, கயிறிழுத்தல், தலையணைச்சண்டை, சறுக்குமரம் ஏறுதல் முதலானவை முக்கியமானவை. மேலும் முதியவர்கள் விளையாடக்கூடிய தாயக்கட்டை உருட்டுதல், கடதாசி விளையாட்டு, ஏணியும் பாம்பும் போன்றன பொழுதுபோக்கு விளையாட்டாகவும் களைப்பை ஏற்படுத்தாக விளையாட்டுக்களாகவும் அமைந்திருந்தன. மேற்குறித்த ஒவ்வொரு பருவத்தினரின் உடல் உள பக்குவத்திற்கு ஏற்ப அவ்விளையாட்டுக்கள் அமைந்திருந்தமை அவதானிக்கத்தக்கவை.
தமிழர் பாரம்பரிய கிராமிய விளையாட்டுக்களில் தமிழ்நாட்டிலும், இலங்கையில் தமிழ் முஸ்லிம் மக்களிடையேயும் விளையாடப்படும் நூற்றுக்கணக்கான விளையாட்டுக்கள் உள்ளன. அவற்றில் இலங்கையின் வடபகுதியில் இதுவரை இனங்காணப்பட்ட கிராமிய விளையாட்டுக்களில் ஒரு பகுதியை இங்கு எடுத்துக்காட்டலாம்.
இலங்கையின் வடபகுதியில் விளையாடப்படும் கிராமிய விளையாட்டுக்கள்
ஆடு புலி ஆட்டம்
உச்சரிப்பு விளையாட்டு
ஊஞ்சல் ஆடுதல்
எட்டுக்கோடு
எல்லே
எலியும் பூனையும்
எவடம் எவடம் புளியடி
ஏணியும் பாம்பும்
ஒப்பு, உப்புப்பிடித்தல்
ஒளிச்சு விளையாடுதல் (கல்லுக்குத்தி)
கட்டையடித்தல் (தாயக்கட்டை)
கடதாசி விளையாட்டு
கண்மூடி விளையாடுதல் (கண்ணாமூச்சி)
கயிறிழுத்தல்
கயிறடித்தல்
காசடித்தல்
காசு சுண்டுதல்
காற்றாடி
கிட்டிப்புள்
கிள்ளுப்பிராண்டி
கிளித்தட்டு (கிளிக்கோடு பாய்தல்)ஃதாச்சி
கீச்சு மாச்சுத் தம்பலம்
குத்துச்சண்டை
கும்மி
குலை குலையாய் முந்திரிக்காய்
குழைபோடுதல்
கெந்தித் தொடுதல்
கொக்கான் வெட்டுதல்
கோலாட்டம்
சடுகுடு (கபடி)
சலசலக்கோல்
சறுக்கு மரம் ஏறுதல்
சிலம்பாட்டம்
சொக்கட்டான்
தலையணைச் சண்டை
தாயம்
பசுவும் புலியும்
பட்டம் விடுதல்
பந்தடித்தல்
பம்பரம்
பாண்டி (பல்லாங்குழி)
பேணிப்பந்து
போர்த்தேங்காய் உடைத்தல்
மஞ்சள் நீர் தெளித்தல்
மணல்வீடு கட்டுதல்
மல்யுத்தம் செய்தல்
மாபிள் அடித்தல்
முட்டி உடைத்தல்
யுhடி மறித்தல்
வண்டிச் சவாரி
வண்டியுருட்டுதல்
வளையம் உருட்டுதல்
வாரோட்டம்
மேற்குறித்தவற்றில் சில விளையாட்டுக்கள் அவரவர் வாழும் சூழலில் அரிதாக விளையாடப்படுவனவாகவும் அதிகம் மறக்கடிக்கப்பட்டனவும் உள்ளன. மேலும் இங்கு எடுத்துக்காட்டத்தவறிய விளையாட்டுக்களும் இருக்கக்கூடும். அவை பற்றி துறை சார்ந்தவர்கள் தொடர்ந்து எழுதுவதற்கு இது ஓர் ஆரம்பமாக அமையும்.
இலக்கியப் பதிவு
இலங்கைக் கல்வித்திணைக்களம் 1976 ஆம் ஆண்டு கலாநிதி சு. சுசீந்திரராசா கலாநிதி அ.சண்முகதாஸ், எம்.ஏ நுஃமான், செ. வேலாயுதபிள்ளை ஆகியோரைப் பதிப்பாசிரியர்களாகக் கொண்டு “ நாட்டார் பாடல்கள்” என்ற பாடநூல் தொகுப்பை வெளியிட்டது. அதில் சாய்ந்தாடு பாவா, கிட்டியடித்தல், கும்மி, கோலாட்டம், கொம்பு விளையாட்டு ஊஞ்சற்பாட்டு ஆகியன “விளையாட்டுப் பாடல்கள்” என்ற பிரிவினுள் தொகுக்கப்பட்டுள்ளன. ஈழத்தில் கிராமிய விளையாட்டுக்களில் பாடல்கள் பாடப்பட்டவற்றை எடுத்துக்காட்ட இது ஆதாரமாக அமைந்துள்ளது. அத்தோடு தொகுப்பில் அடங்கியுள்ள பாடல்கள் அனைத்தும் இலங்கை தமிழ் முஸ்லிம் சமூகத்தின் மத்தியில் வழங்கிவந்த கிராமியப் பாடல்களைக் கொண்டனவாகவும் அமைந்துள்ளன.
கிராமிய விளையாட்டின் பயன்கள்
இவ்விளையாட்டுக்களால் ஏற்படும் நன்மைகள் பல. மேற்குறித்த கிராமிய விளையாட்டுக்களில் அதிகமானவை பாடலை அடிப்படையாகக் கொண்டவையாக அமைந்துள்ளமையினால் இயல்பாகவே உற்சாகத்தை வரவழைக்கக் கூடியவையாக உள்ளன. பரவசம், மனத்தடையில் இருந்து விடுதலை பெறும் உணர்வு, திருப்தி, ஒற்றுமை மனப்பாங்கு, சகிப்புத்தன்மை போன்றன இவ்விளையாட்டுக்களால் பெறக்கூடியவையாக உள்ளன.மற்றும் பண்பாட்டு மரபுடன் தொடர்புபட்டவையாக அமைந்திருப்பது மிக முக்கியமான அம்சமாகும்.
கிராமிய விளையாட்டுக்களில் சில….
குழந்தைகள் விளையாடிக்கூடிய உச்சரிப்பு விளையாட்டில் இருந்து பெரியவர்கள் விளையாடக்கூடிய கிளித்தட்டுவரை அதிகமான விளையாட்டுக்கள் பாடல்களுடன் இணைந்தே அமைந்துள்ளன. போர்த்தேங்காய் அடித்தல் - இது ஒரு வீரவிளையாட்டாக இடம்பெறுவதுண்டு. தமிழர் பண்டிகைகளில் குறிப்பாக, சித்திரை வருடப்பிறப்புக் கொண்டாட்டத்தில் வீடுகளில் அல்லது பொது இடங்களில் இது அதிகம் விளையாடப்படும். இரண்டு நபர்கள் அல்லது இரண்டு குழுக்களுக்கு இடையில் விளையாடப்படும் இவ்விளையாட்டுப் பற்றி எழுத்தாளர் எஸ்.பொ தனது “நனவிடை தேய்தல்” நாவலிலும் பதிவு செய்துள்ளார். போர்த்தேங்காய்களைத் தேர்;ந்தெடுத்தல், உருட்டுதல், அடித்தல் என்ற வரண்முறையில் இடம்பெறும் இவ்விளையாட்டை யாழ்ப்பாணத்தில் அதிகமும் பெரியவர்களும் கிழக்குப்பிரதேசத்தில் அதிகம் சிறுவர்களும் விளையாடுகின்றனர்.
கிட்டிப்புள் -
இது யாழ்ப்பாணக் கிராமங்களில் இன்றும் சிறுவர்களால் அதிகம் விளையாடப்படும் பழமைவாய்ந்த விளையாட்டாகும். இதற்கு சிறுவர்கள் இரண்டு தடிகளைப் பயன்படுத்துவர். கிட்டி என்பது ஒரு முழம் நீளமுடையது. அதன் ஒருமுனை கூராக்கப்பட்டிருக்கும். புள்ளு எனப்படும் மற்றைய தடியானது கிட்டியின் மூன்றில் ஒரு பகுதி நீளமுடையதாக இருக்கும். அதன் இருமுனைகளும் கூராக்கப்பட்டிருக்கும். இரண்டு அணிகளும் தமக்குரிய எல்லையை நிர்ணயித்தல், வெற்றி தோல்வியை தீர்மானித்தல் என்ற வரண்முறையுடன் கிட்டியால் புள்ளை அடித்தவர் பாடல் ஒன்றைப் பாடியபடி ஓடுவார். ஓவ்வொரு பாட்டிலும் கடைசிச் சொல்லை மீண்டும் மீண்டும் சொல்லிக்கொண்டே ஓட வேண்டும். ஓடுபவன் மூச்சுவிடுகின்றானோ என்று கவனிக்க அவனுக்குப் பக்கத்தில் மற்றொருவனும் ஒடுவான். சிறுவர் விளையாட்டுப் பாடல்களில் ஒன்று இந்த விளையாட்டை அழகாக கண்முன் கொண்டு வருகிறது.
கவடியடிக்கக் கவடியடிக்கக்
கைகால் முறியக் கைகால் முறியக்
காலுக்கு மருந்து தேடிக்கட்டு தேடிக்கட்டு
மாம்பட்டை மருதம்பட்டை வெளவாலோடிய தென்னம்பட்டை
பூம்பட்டை புளியம்பட்டை பட்டணம் பட்டணம் பட்டணம்
ஆலையிலே சோலையிலே ஆலங்காடிச் சந்தையிலே
கிட்டிப் புள்ளும் பம்பரமும் கிறுக்கியடிக்கப் பாலாறு
பாலாறு பாலாறு பாலாறு
ஆலஞ்சருகு மடமடவெனவே அங்கொருவண்டி லுருண்டுவரக்
காலாடிவரப் பொழுதேறிவரத் தெந்தட்ட தெருத்தட்ட
தெருவெங்கும் பொறித்தட்ட பூம்பட்டை புளியம்பட்டை
வெளவாலோடிய தென்னம்பட்டை கவடிக் கவடிக் கவடிக்.
இவ்விளையாட்டு சிறுவர்களுக்கு உடல் உறுதியையும் சுறுசுறுப்பையும் மூச்சுப் பயிற்சியையும் கொடுக்கக்கூடியதாக அமைந்திருக்கிறது. ஆனால் இன்று மிக அரிதாகவே சில குக்கிராமங்களில் இவ்விளையாட்டு சிறுவர்களால் விளையாடப்படுகிறது. கவடியடிக்க.. என்ற பாடல் அடிகள் கபடி விளையாட்டிலும் பயன்படுத்தப்படுவதுண்டு.
தற்காப்புக்கலை விளையாட்டுக்கள்
கம்படி சிலம்படி என்று அழைக்கப்படும் சிலம்பாட்டம், மற்றும் மல்யுத்தம், குத்துச்சண்டை ஆகியன தற்காப்புக்கலை சார்ந்த விளையாட்டுக்களாகும். இன்று மல்யுத்தம், குத்துச்சண்டை ஆகியன சர்வதேச அரங்கில் பிரபலமான விளையாட்டுக்களாக உள்ளன. சிலம்பாட்டம் போர் முறையில் அமைந்த ஒரு விளையாட்டாகும். பண்டிகைக்காலங்கள் மற்றும் போட்டி நிகழ்வுகளில் பாரம்பரிய விளையாட்டுக்களாக மிக அரிதாக சிலம்பாட்டம் நிகழ்த்தப்பட்டு வருகிறது. வடபிரதேசத்தின் பல பகுதிகளில் இக்கலைகள் அரிதாகப் பயிலப்பட்டு வருவதும் தற்காலத்தில் மேலைத்தேய விளையாட்டான கராத்தேக் கலையை அதிகம் இளைஞர்கள் விரும்பிப் பயில்வதும் நாம் அறிந்ததே.
உச்சரிப்பு விளையாட்டு
இது சிறுவர் சிறுமியருக்கான விளையாட்டாகும். வட்டமாக இருந்து பாடல்களைத் திரும்பத் திரும்ப உச்சரித்து விளையாடுவர்.
கடற்கரையிலே உரல் உருளுது பிரளுது
தத்தளிக்குது தாளம் போடுது உத்தரிக்குது ஓடிவா
ஒரு சிறு நரியிலே ஒரு நரி சிறு நரி
சிறு நரி முதுகிலே ஒரு பிடி நரை மயிர்
எவடம் எவடம் இந்த விளையாட்டு சிறுவர் சிறுமியருக்குரிய விருப்பமான விளையாட்டாகும். ஒரு சிறுவரின் இரண்டு கைகளையும் ஒன்றாகக்கூட்டி அதில் மண்ணை அள்ளிவைத்து அதன் மேல் அடையாளமாக ஒரு குச்சி அல்லது ஈர்க்கு வைப்பர். மண்ணை வைத்திருக்கும் சிறுவரின் இரண்டு கண்களையும் ஒருவர் பின்னால் நின்று பொத்தியபடி அவரை முன்னும் பின்னும் சுற்றி வளைத்துக்கொண்டும் நடப்பார். நடக்கும்போது “எவடம் எவடம்” என்று கண்ணைப் பொத்தியவர் கேட்க ஏனைய சிறுவர்கள் “புளியடி புளியடி” என்று சொல்லிக்கொண்டு பின்னால் செல்வர். ஓரிடத்தில் மண்ணைக்கொட்டி விட்டு மீளவும் சுற்றிவந்து வேறு ஓரிடத்தில் நிறுத்துவர். இறுதியில் அவர் கையில் கொண்டு வந்த மண்ணைக் கண்டுபிடிக்கவேண்டும். இவ்விளையாட்டை சிறுவர்கள் மாறிமாறி விளையாடுவர்.
கும்மி, கோலாட்டம், ஊஞ்சல்
கும்மி, கோலட்டம் ஆகியனவும் பெண்கள் விளையாடும் விளையாட்டுக்களாக உள்ளன. இவை ஆடல் கலைமரபுடனும் இறைவணக்கத்துடனும் தொடர்புபட்டவை.
கும்மியடித்தல் பெண்களுக்கே உரிய விளையாட்டாகும். பண்டிகை நாள்களிலும் திருவிழாக் காலங்களிலும் கிராமியச் சூழலில் பெண்கள் கும்மியடித்துப் பாடுவது வழக்கம். குத்துவிளக்கு, கண்ணன் சிலை, பூக்கூடை ஆகியவற்றில் ஏதாவது ஒன்றை நடுவில் வைத்து சுற்றிநின்று வட்டமாகக் குனிந்தும் நிமிர்ந்தும் கைகொட்டிப் பாடுவர். ஆடலும் பாடலும் இணைந்த ஒரு விளையாட்டாக இது அமைந்துள்ளது. இதேபோல கோலாட்டத்திலும் கைகொட்டிப் பாடுவதற்குப் பதிலாக இரண்டு கோல்களால் தட்டிப் பாடுவர். இந்த இரண்டு விளையாட்டுக்களும் இன்று அருகி, கலை நிகழ்வுகளில் நிகழ்த்தப்படும் ஆடற்;கலைகளாக மாறியுள்ளன.
ஊஞ்சல் ஆடுதல் சிறுவர் முதல் பெரியோர்வரை விரும்பும் ஒரு வகை விளையாட்டு. ஆனால் கீழே வரும் ஊஞ்சற்பாடல் சிவராத்திரி விரத காலத்தில் ஊஞ்சல் கட்டி ஆடும் வழக்கம் இருந்தமையை எடுத்துக்காட்டுகிறது. எனவே இப்பாடலும் கோலாட்டம் கும்மி போல வழிபாட்டுடன் தொடர்புபட்டதாகவும் சிறுமிகளுக்கு உரிய விளையாட்டாக இருந்தமையும் பதிவுசெய்யப்பட்டுள்ளது.
தந்தன தனாதன தனாதன தனானே
தானா தனாதந்த னாதந்த னானே.
“வாருமடி தோழியரே நாங்களிரு பேரும்
வந்த சிவராத்திரியை சிந்தையுடன் நோற்போம்
கடற்கரையில் மணல்பரவி நடக்கமுடியாது
கானலிலும் வெய்யிலிலும் ஓட முடியாது
கச்சாயிற் புளியிலே ஊஞ்சாலுங் கட்டி
கனகனா தெருவிலே கூத்துமொன்றாடி
காவோலை சரசரக்க வண்டென்றிருந்தேன்
காக்கொத்து மச்சாளைப் பெண்டென் றிருந்தேன்
ஓடோடு புளியம்பழம் உடைந்துடைந்து விழுவானேன்.
ஒரு கிண்ணம் சந்தனம் ஒழுகொழுகப் பூசுவானேன்
கண்டபிணி கொண்டவலி கால்மாறி ஓட
கண்டசிவ ராத்திரியை காதலுடன் நோற்பாய்
ஏறுமயி லேறிவிளை யாடிமலை தோழி
இரணியனைக் கொன்றமலை தெரியுதடி தோழி
விளையாட வெகுதுயரம் வருகுதடி தோழி
மெதுவாக ஊஞ்சலைத் தணியுமடி தோழி
பட்டம் விடுதல்
“பட்டம் விடுவோம் பட்டம் விடுவோம் பாலா ஓடி வா
பாடிப் பாடிப் பட்டம் விடுவோம் பாலா ஓடி வா”
என்ற பழைய பாடநூலில் இடம்பெற்ற பட்டம் விடும் பாடல் மிகப் பிரபலமானது. பட்டம் விடும் கலை உலகப் பொதுவானது. எனினும் இது ஒரு பாரம்பரியக் கலையாகவும் பொழுதுபோக்கு விளையாட்டாகவும் உள்ளது. பட்டம் கட்டுதலே ஒரு கலைதான். கொக்குப் பட்டம், பருந்துப் பட்டம், பெட்டிப்பட்டம், கட்டுக்கொடி, எட்டுமூலை ஆகியன முதல் இன்று அவரவர் கற்பனைக்கும் பட்டம் கட்டும் கலைக்கும் ஏற்ப பல வடிவங்களில் கட்டி ஏற்றப்படுகின்றன.
தமிழர் தைத்திருநாள் பண்டிகை இதற்கு மிகப் பொருத்தமான காலமாக நோக்கப்படுகின்றது. இதற்கு மார்கழி, தை மாதங்களில் வீசும் வாடைக்காற்றும் ஏற்ற பருவகாலமாக அமைந்துள்ளது. கமுகஞ்சலாகை, ஈர்க்கு, மூங்கில் என்பன பட்டம் கட்டுதற்கு ஏற்றவையாக அமைந்துள்ளன. விண் பூட்டுதல், லைற்போடுதல், இராக்கொடி விடுதல் ஆகிய சொற்றொடர்கள் பட்டம்விடுவோரின் முதன்மையான பதங்களாக அமைந்துள்ளன. நாவலாசிரியர் செங்கை ஆழியான் தனது “முற்றத்து ஒற்றைப்பனை” என்ற குறுநாவலில் பட்டம்விடும் கலை பற்றியும் பதிவுசெய்துள்ளார். நகர்ப்புறத்தில் வாழுகின்ற சிறுவர்கள் தங்கள் பொழுதுபோக்காக சுற்றுலாத்தலங்களிலும் கடற்கரையோரங்களிலும் பட்டம் ஏற்றி மகிழ்கின்றனர். தமிழர் பாரம்பரிய விளையாட்டுக்களில் இன்றுவரையும் திருப்திப்படக்கூடிய அளவுக்கு பட்டம்விடுதல் விளையாட்டு பேணப்பட்டு வருகின்றது.
முடிவுரை
தமிழர் கிராமிய வாழ்வும் படிப்படியாக மறைந்து கொண்டு வருகின்ற காலமாற்றத்தினால் கிராமிய விளையாட்டுக்களும் படிப்படியாக மறக்கடிக்கப்பட்டு வருகின்றன. ஆனால் எமது நாட்டில் விளையாட்டுத்துறையில் பாரம்பரிய விளையாட்டாகிய சடுகுடு என்றழைக்கப்படும் கபடி மற்றும் எல்லே ஆகியவை தற்காலத்தில் தேசிய அளவில் விளையாடப்பட்டும் வருகிறது. அதேபோல இன்றைய ஆரம்பக்கல்விப்பாடத்திட்டத்திலும் சிறுவர் விளையாட்டுக்கு அதிக முக்கியத்துவம் அளிக்கப்பட்டுள்ளது. பாடவிதானத்தில் அதற்குரிய இடம் ஒதுக்கப்பட்டு ஆரம்பக்கல்வி ஆசிரியர்கள் மறைந்துபோன பல விளையாட்டுக்களை சிறுவர்களுக்குப் பயிற்றுவித்து அவர்களின் உடல் உள ஆற்றலை மேம்படுத்துவதும் வரவேற்கத்தக்கதாக உள்ளது. நாயும் இறைச்சித்துண்டும், பாண்டு, பசுவும் புலியும், குழைபோடுதல், உச்சரிப்பு விளையாட்டு, கிந்தித் தொடுதல், பட்டம் விடுதல், கயிறடித்தல், பந்தடித்தல் ஆகியன அவற்றில் சிலவாகும்.
எனவே, கிராமிய விளையாட்டுக்களில் பல இன்று இருந்த இடந்தெரியாமல் மறைந்து போன நிலையில் அவற்றை மீள்கண்டுபிடிப்புச் செய்து அவற்றை எமது எதிர்காலச் சந்ததிகளிடம் கையளிக்கவேண்டியுள்ளது. கிராமிய விளையாட்டுக்கள் தனியே விளையாட்டாக மட்டுமல்லாமல் அவை எமது பண்பாட்டுக் கருவூலங்களாகவும் மிளிர்ந்துள்ளமையை அவர்களுக்கு ஊட்டவேண்டும். இவ்விளையாட்டுக்களில் உடல் ஆரோக்கியம் பேணப்பட்டுள்ளது. உள ஆரோக்கியம் விருத்தி செய்யப்பட்டுள்ளது. கூட்டு மனப்பாண்மையும் சகிப்புத் தன்மையும் வளர்க்கப்பட்டுள்ளன. எனவே, தமிழரின் பாரம்பரிய வாழ்வுடனும் வழிபாட்டு மரபுகளுடனும் இரண்டறக் கலந்துள்ள கிராமியக் விளையாட்டுக்களுக்கு புத்துயிரளிக்கவும் பண்பாட்டின் வேர்களைத் தேடவும் எம்மையும் கொஞ்சம் கொஞ்சமாகத் தயார்ப்படுத்துவோம்.
•This e-mail address is being protected from spambots. You need JavaScript enabled to view it•
•<• •Prev• | •Next• •>• |
---|