- 2015மார்ச்14 அன்று நடைபெற்ற மேற்படி விருது விழாவில் நிகழ்த்தப்பட்ட உரை -
மதிப்புயர்; தலைவர் அவர்களுக்கும் கனடா எழுத்தாளர் இணையத் தோழர்களுக்கும் கனடாத் தமிழ்ழ் எழுத்தாளர் இணையம் வழங்கவுள்ள வாழ்நாள் சாதனையாளர் விருதின் தகுதியாளர்களாக இங்கு எமது அழைப்பை ஏற்று வருகை தந்து எமைக் கௌரவித்துள்ள விழா நாயகர்களில் ஒருவரான கவிநாயகர் வி. கந்தவனம் ஐயா அவர்களுக்கும், அவருடைய துணைவியாருக்கும் எமது அழைப்பை ஏற்றுக்கொண்டு ஒப்புதலளித்த பின்னர் எம்மை விட்டகன்று தேகாந்த நிலையில விண்ணிலிருந்தே எமது விருதுக் கௌரவத்தை ஏற்றுக்கொள்ள இருக்கும் அதிபர் பொ.கனகசபாபதி ஐயா அவர்களுக்கும், எமது இந்த விருது நிகழ்ச்சியைச் சிறப்பிக்கும் நோக்கில் இங்கு வருகைதந்துள்ள பிரதம விருந்தினர், சிறப்பு விருந்தினர், பாராளுமன்ற உறுப்பினர் மற்றும் மாநகரசபை உறுப்பினர் ஆகிய ஆட்சித்துறைசார் நண்பர்களுக்கும் பெருந்தொகையாக வருகைதந்து சிறப்பித்துள்ள அவையோருக்கும் மனமுவந்த வணக்கத்தைத் தெரிவித்துக்கொண்டு இவ்விருதுச் சான்றுரையை இங்கு முன்வைக்கிறேன் பெரியோர்களே! இவ் விருது நிகழ்வானது மானுடத்தைப் போற்றும் நன்றிக் கடப்பாட்டுணர்வின் வெளிப்பாடாகும்.
“ நயனொடு நன்றி புரிந்த பயனுடையார்
பண்பு பாராட்டும் உலகு”
என்ற திருக்குறள்(குறள்:994) இதனை அறிவுறுத்தி நிற்கிறது. நீதியையும் அறத்தையும் சார்ந்துநின்று சமூகநிலையில் பங்காற்றிய பண்பாளரை உலகம் பாராட்டும் என்பது இதன் தெளிபொருளாகும்.
இவ்வாறாகத் தமிழர் மத்தியில் பல்லாண்டு;களாகப் பேணப்பட்டுவந்துள்ளதான ‘பண்பு பாராட்டும் உயர்மர’பின் வரலாற்றின் தொடர்ச்சியாக இந்நிகழ்வு இன்று இங்கு நடைபெறுகின்றது. இங்கு ‘நயனொடு நன்றி புரிந்த பயனுடையார்’ என்ற வகையிலே, வாழ்நாள் சாதனையாளர் விருதுக்குரியவர்கள் என்ற கணிப்பைப் பெற்றிருக்கும் மூதறிஞர்களான இரு பெரியார்களின் ஆளுமையம்சங்களை விரித்துப் பேசுவதற்கும் அவர்களுக்குரிய கௌரவங்களை வழங்குவதற்குமான தமக்குரிய சந்தர்ப்பங்களை எதிர்நோக்கி எமது இணையத் தோழர்களும் ஆட்சித்துறை சார் நண்பர்களும் ஆவலுடன் காத்துள்ளனர். இங்கு எனது பணி இவ்விருது நிகழ்வின் நோக்கம் மற்றும் மேற்படி விருதாளர்களைத் தேர்ந்துகொள்வதற்கு அடிப்படைகளாக அமைந்த அம்சங்கள் என்பன தொடர்பான முக்கிய குறிப்புகளை முன்வைப்பது மட்டுமேயாகும்.
1993இல் உருவாகி, இருபதாண்டுகளுக்கு மேலாகத் தொடர்ந்து உயர்த்துடிப்படன் இயங்கி வந்துள்ள எமது கனடாத் தமிழ் எழுத்தாளர் இணையமானது 22ஆம் ஆண்டிலே அடியெடுத்துவைத்த காலப்பகுதியில் அதன் அடுத்த கட்ட வளர்ச்சியை ஒட்டிப் பல்வேறு செயல்திட்டங்களை மேற்கொள்ள முற்;பட்டது. அந்நிலையில், இணையத்தின் ஆலோசகரான என்னால் முன்மொழியப்பட்ட பல்வேறு செயல்திட்டங்கள் இணையத்தினரால் ஏற்றுக்கொள்ளப்பட்டன. அத்திட்டங்களில் முதலாவதாக அமைந்தது, ‘கனடாவிலே தமிழ் எழுத்துத் துறையில் சாதனை புரிந்தோரை விருது வழங்கிக் கௌரவித்தல்’ என்ற திட்டமாகும். அத்தொடர்பில் மேற்கொள்ளப்படும் முதலாவது நிகழ்வு, இது.
மேற்படி கௌரவத்தை முதலில் யாருக்கு வழங்கலாம் எனச் சிந்தித்தவேளை இணைய உறுப்பினர் அனைவரது மனக்கண்ணிலும் ஒரேசமயத்தில் தோற்றம் தந்த இரு பெருமக்கள் ‘கவி நாயகர்’ என்ற சிறப்புப் பெயரால் அழைக்கப்படும் திருவாளர் வி. கந்தவனம் (1933 -) அவர்களும், ‘அதிபர்’ என்ற சிறப்புப் பெயரால் அழைக்கப்படும் திருவாளர் பொ. கனகசபாபதி(1935-2014) அவர்களுமாவர். மேற்சுட்டிய இருவரையும் இணையத்தினர் முதலில் தேர்வுசெய்ததற்கான அடிப்படைகளாக அமைந்த அம்சங்களுள் ஒன்று, அவர்களுடைய ‘சாதனைநிலை’கள் சார்ந்தது. இன்னொன்று, அச்சாதனைகளுக்குக் களமாகவுள்ள அவர்களது ‘சமூகத் தொடர்புநிலை’ சார்ந்ததாகும்.‘சாதனை’ என்ற சொல்லானது குறித்த ஒருதுறை சார்ந்து (அல்லது ஒன்றுக்கு மேற்பட்ட துறைகள் சார்ந்து) நிகழ்த்தப்படும் ‘சூழல்சார்ந்த சராசரி நிலைக்கு மேலான செயற்பாடுகளை’ச் சுட்டிநிற்பதாகும். குறித்த ஒரு துறைசார் செயற்பாட்டாளர் அவருடைய சூழலின் அத்துறைசார்ந்த ஏனைய செயற்பாட்டாளர்களை விடப் பல படிகள் மேலான தரத்திற் செயலாற்றும்போது அவர் அத் துறைசார்ந்த சாதனையாளர் என்பதான சிறப்புக் கவனிப்பையும் கணிப்பையும் பெற்றுவிடுகிறார். அவர் அத்துறைசார் செயற்பாடுகளை ஒரு காலகட்டத்துடன் நிறுத்திவிடாமல் குறித்த தரம் குறையாத வகையில் பல்லாண்டுகள் தொடரும் நிலையில் அவர், வாழ்நாள் சாதனையாளர் என்ற கணிப்பையும் அதற்கான சமூகக் கௌரவத்தையும் பெற்றுவிடுகிறார்.
‘இவ்வாறு சாதனை புரிபவர்கள் தாம் வாழும் சமூகத்துடன் கொண்டிருக்கக்கூடிய ஊடாட்டமே ‘சமூகத் தொடர்பு நிலை’ எனப்படுகிறது. சாதனைகள் புரிவோருள் ஒரு சாரார் தமது சாதனைத் துறை சார்ந்த உள்வட்டத்துக்குள் மட்டுமே தம்முடைய வாழ்நிலையை எல்லைப்படுத்திக்கொள்பவர்கள். சாதனையாளருள் இன்னொரு சாரார் தம்மைச் சூழவுள்ள சமூகத்தின் அனைத்துப் பகுதியினருடனும் தம்மை இணைத்துக்கொள்பவராகவும் அவர்களது வாழ்வியல் மற்றும் பண்பாடுசார் அநுபவங்கள் அனைத்திலும் பங்குகொள்பவர்களாகவும் திகழ்வர்.
மேற்சுட்டிய இருசாராரும் சாதனையாளர்களேயெனினும் ஒப்புநோக்கிலே முதலாவது வகையினரைவிட இரண்டாவது வகையினரே சமூகநோக்கிலே உயர்வானவர்கள். தாம் வாழும் சமூகத்தின்; நிறைவான அங்கீகாரத்தையும் அத்தொடர்பிலான பெருங் கௌரவங்களையும் பெறும் வாய்ப்புகள் இவ்விரண்டாவது வகையினருக்கே பெரிதும் கிடைக்கின்றன. எனவே, குறித்த துறைசாரந்த சாதனைகளை மேற்கொள்வோர் அதற்குரிய சமூக அங்கீகாரத்தையும் கௌரவங்களையும் ஈட்டிக்கொள்வதற்கு, அச்சாதனைகளுக்குக் களமாகவுள்ள சமூகச் சூழலின் சராசரி மாந்தரின் பொது வாழ்வியல் மற்றும் பண்பாடு என்பவற்றோடு இயன்ற வரையில் தம்மைப் பின்னிப் பிணைத்துக் கொள்ள முயலவேண்டும். அநுபவம் நமக்கு அளித்துள்ள பாடம் இது.
இங்கு எமது கௌரவத்தைப் பெறவுள்ள கவிநாயகர் மற்றும் அதிபர் ஆகிய இருவரும் மேற்படி சாதனை நிலை மற்றும் சமூகத் தொடர்புநிலை ஆகிய இரண்டிலும் உயர் கணிப்புக்குரியவர்களாகத் திகழ்பவர்களாவர். இவ்விருவரும் தாயகமான ஈழத்திலே கல்வித்துறையிலே ஆசிரியர், அதிபர் ஆகிய பணிகளைச் சிறப்புற ஆற்றியபின் 1980களில் கனடிய மண்ணுக்குப் புலம்பெயர்ந்தவர்கள். வந்தநாள் முதல் இந்த மண்ணின் தமிழர் வாழ்வியலோடு தம்மை இணைத்துக் கொண்டவர்களான இவர்கள். குறிப்பாக, கனடா உட்படத் தமிழர்கள் புலம்பெயர்ந்து வாழும் நாடுகள் பலவற்றிலும் அவ்வச் சூழல்களுக்கேற்ப தமிழரின் மொழி, இலக்கியம் கலை முதலான பண்பாட்டுக் கூறுகளும் வாழ்வியல் அம்சங்களும் உரிய தரத்தில் பேணப்படவேண்டும் என்பதில் முனைப்பான கவனம் செலுத்தி வந்துள்ளோருமாவர்.
இவர்களுள் மூத்தவரான கவிநாயகர் வி.கந்தவனம் அவர்கள், ஈழத்தில் வாழ்ந்த காலத்திலேயே எழுத்துத் துறையில் ஆழமாகக் கால்பதித்துச் செயற்பட்டவர்;. அத்தொடர்பிற் சமூகத்துடன் நெருக்கமான உறவுநிலையைப் பேணிநின்றவர். மாத்தளை இலக்கியவட்டம், யாழ். இலக்கியவட்டம் ஆகிய இலக்கிய நிறுவனங்களின் உருவாக்கத்தில் முக்கிய பங்காற்றியவர் என்பதான சிறப்பும் இவருக்கு உரியது.
கனடிய மண்ணில் கால்பதித்த பின்னரும் அவர் தமது மேற்படி இலக்கியநிலைச் செயற்பாடுகளை முனைப்புடன் முன்னெடுத்துவந்துள்ளார். கவிதை, புனைகதை முதலான படைப்புத்துறைகளிலும் கட்டுரை, சொற்பொழிவு, புராணவிளக்க நூலாக்கம், வானொலி மற்றும் தொலைக்காட்சி நிகழ்வுகள், கலை-இலக்கிய விமர்சனம் முதலான இலக்கியத்தொடர்பிலான ஏனைய செயற்பாடுகளிலும் தீவிர ஈடுபாடு காட்டிவரும் இவர் பண்பாட்டு நிறுவனங்கள் பலவற்றை உருவாக்கியதோடு அவற்றை வெற்றிகரமாக வழிநடத்தி வந்துள்ளவருமாவார். நமது கனடாத் தமிழ் எழுத்தாளர் இணையத்தின் உருவாக்கத்திலும் வளர்ச்சியிலுங்கூட இவர் பெரும் பங்களிப்பை வழங்கிவந்துள்ளவர் என்பதையும் இங்கு நான் நன்றியுடன் நினைவுகூருகிறேன்.
படைப்பிலக்கியத்தின் பல்வேறு துறைகளிலும் இவர்; செயற்பட்டுவந்துள்ளாரெனினும் கவிதைத் துறையிலேயே தனிக்கவனம் செலுத்தியவராவார். இதனால் இலக்கிய உலகிலே ‘கவிஞர்’ என்பதே இவரது தனி அடையாளமாக அமைந்துள்ளது. ‘கவிநாயகர்’ என அவர் பெற்றுள்ள சிறப்புப் பெயரும் இதனை உணர்த்தும். இவர் தமது கவிதையாக்கத்துக்கு மரபுசார் பாவடிவங்களான வெண்பா மற்றும் விருத்தம் என்பவற்றையே மிகுதியாகக் கையாள்பவர்.
வெண்பா என்பது இலக்கண வரையறைகள் மிக்க ஒரு பாவடிவமாகும். ‘தமிழை முறையாகக் கற்ற அறிஞர்களுக்குக் கூட வெண்பா பாடுவது என்பது மிகச் சவாலான ஒரு செயல் ஆகும். ‘புலவர்க்கு வெண்பா புலி’- என்ற கருத்து தமிழ்ப் புலைமை மரபில் பல்லாண்டுகளாக நிலவிவருகிறது. இவ்வாறு சவாலான இந்த பாவடிவத்தைச் சிறப்பாகக் கையாண்டு, சமயம் மற்றும் சமூகம் சார் பொருண்மைகளில் பெருந்தொகையான வெண்பாக்களை இவர் பாடிவந்துள்ளார் - பாடிவருகிறார். இவற்றுட்பல நூலுருவும் பெற்றுள்ளன.
விருத்தப்பாவிலே இவர் படைத்துள்ள பாவாரம்(2007) என்ற பக்திப் பாடல் தொகுப்பானது இவருடைய சைவ இறையுணர்வுசார் கவித்துவத்தின் ‘தேற’லாகத் திகழ்வதாகும். சைவசமயம் சார்ந்த வையான தேவாரப்பாடல்களை அடியொற்றியமைந்த இப்பாடல் தொகுப்பானது, ‘சைவத் திருமுறை மரபின் மீது நமதுகாலகட்டக் கவியுள்ளம் புலப்படுத்தி நிற்கும் நன்றியுணர்வாகவும் அஞ்சலியாகவுங்கூட கணிக்கப்படக் கூடியது’ எனவும் ‘இவருடைய வாழ்நாட்;பணி என்பதான கணிப்புக்குரியது’ எனவும் அந்நூலின் ‘அணிந்துரை’யிலே நான் சுட்டியிருந்ததை இச்சந்தர்ப்பத்தில் நினைவில் மீட்கிறேன். எழுத்துத் துறையிலே 1950களில் கால்பதிக்கத் தொடங்கிய இவர், அறுபதாண்டுகளுக்கு மேலாகத் தொடர்ந்து இயங்கிவருகிறார் என்பதும் இதுவரை 82நூலாக்கங்களைத் தந்துள்ளார் என்பதுமான தகவல்களும் இங்கு பதிவுசெய்யப்படவேண்டிய முக்கியத்துவமுடையனவாகும்.
அதிபர் பொ. கனகசபாபதி அவர்களின் எழுத்துத் துறைப் பிரவேசம் கனடா மண்ணில் கால்பதித்த பின்னரே நிகழ்ந்ததாகும். ஒரு கல்வியாளர் என்றவகையில் ஈழத்தில் தன்னை அடையாளப்படுத்தி நின்ற அவர் கனடாவில் கால்பதித்த பின்னர் தமது கல்வித்துறைசார் ஆளுமையம்சங்களைச் சூழலின் தேவைக்கேற்ப இலக்கியத்துறை நோக்கியும் விரிவுபடுத்திக்கொண்டவராவார். இயற்கை, உயிர், உடல், குடும்பம், சமூகம் என்பன தொடர்பான ஆழமான வாசிப்பறிவைக் கொண்டிருந்த அவர், அவை தொடர்பிலான சிந்தனைகளை 1990களிலே கட்டுரைகளாக வடிக்கத் தொடங்கினார். தொடர்ந்து, அறிவியல் சார்ந்த அம்சங்களையும் சமூகநிலை அநுபவங்களையும் சிறுவர் கதைகளாகவும் புனைகதைகளாகவும் தருவதில் கவனம் செலுத்தினார்.
மேற்சுட்டிய வகைகளிலான அவருடைய எழுத்துச் செயற்பாடுகளுக்காக அவர் தேர்ந்துகொண்ட உள்ளடக்க அம்சங்களும் பயன்படுத்திய உத்திகள் மற்றும் மொழிநடை என்பனவும் வாசகர் மத்தியிற் பெருவரவேற்பைப் பெற்றன. கனடாவிலும் ஏனைய புலம்பெயர் சூழல்களிலும் வெளிவந்த தமிழ் ஊடகங்கள் இவ்வாறான அவருடைய எழுத்தாக்கங்களை ஆர்வமுடன் வரவேற்றுப் பதிவுசெய்ததன் மூலம் அவரை அத்துறையில் தொடர்ந்து ஈடுபடத் தூண்டின. அதிபர் பொ. கனகசபாபதி என்ற கல்வியாளர் ஒரு எழுத்தாளராகவும் பரிணாமம் எய்திய வரலாறு இதுதான்.
கனடாத் தமிழ்ச் சூழலின் ‘குடும்ப - சமூக’ நிகழ்வுகள், இசை, நடனம், நாடகம் முதலான கலைநிகழ்வுகள், இலக்கிய வெளியீடுகள் மற்றும் அனைத்துலக நிலையிலான விளையாட்டுபோட்டிகள் முதலியவற்றில் பெரிதும் ஈடுபாடு கொண்டிருந்த இவர் அவை தொடர்பிலான தமது கண்ணோட்டங்களை விமர்சனப் பாங்கில் உடனுக்குடன் எழுத்துநிலையிற் பதிவுசெய்யவும் முற்பட்டார். அத்துடன் ஈழத்தமிழர்; சமூகத்தின் கல்விவரலாற்றுக்கு முக்கிய பங்களிப்பு செய்தோர் தொடர்பான வரலாற்றுத் தகவல்களையும் ஒழுங்குபடுத்திக் கட்டுரைகளாக வடித்தார். இவ்வாறாகத் தொடங்கித் தொடர்ந்த அவருடைய எழுத்துத் துறைச் செயற்பாடானது 2014ஆம் ஆண்டிறுதியில் அவர் இயற்கை எய்தும்வரை ஒரே சீரான தீவிர கதியில் தொடர்ந்தது.
தாம் நோயுற்றநிலையில் தீவிர மருத்துவ சிகிச்சைகளை மேற்கொண்டிருந்த வேளைகளிலும் மெய்வருத்தம் நோக்காது மேற்படி சிகிச்சைகள் தொடர்பிலான அநுபவங்களை மருத்துவ அறிவியல் சார்ந்த விளக்கங்களுடனும் புனைகதைக்குரிய உத்தி முறைகளுடனும் உடனுக்குடன் தாய்வீடு இதழில்; கட்டுரைகளாக இவர் பதிவுசெய்துள்ளார். எழுத்துத் துறையில் இவர்கொண்டிருந்த ஆழ்ந்த ஈடுபாட்டின் முக்கியசான்றாதாரம், இது.
இவருடைய ஏழுத்துகளில் ஒருபகுதியின பெற்றோர் பிள்ளைகள் உளவியல்(1998), ஓர் அதிபரின் கூரிய பார்வையில்()மாறன் மணிக்கதைகள் 1,2(2000,2008), மனம் எங்கே போகிறது(2008), திறவுகோல்(2008), மரம் - மாந்தர் - மிருகம்(2012) எம்மை வாழவைத்தவர்கள்(1912) ஆகிய தலைப்புகளில் நூலுருப் பெற்றுள்ளன. இறுதிக்காலத்தில் தாய்வீடு இதழில் இவர் எழுதிய மருத்துவ அநுபவக் கட்டுரைகளும் இவரது நிறைவின் பின் நூல்வடிவில் 2015இல் தொகுக்கப்பட்டுள்ளன.
இவற்றுள் எம்மை வாழவைத்தவர்கள் என்ற நூலானது ஈழத்தின் தமிழ்ச் சூழ்லின் கல்வி வளர்ச் சிக்குப் பெரும்பங்காற்றிய அதிபர்கள் பலரின் ஆளுமையம்சங்களையும் அவர்கள் தமது கல்லூரிச் சூழல்களில் இயங்கிநின்ற முறைமைகளையும் பற்றிய பதிவாக அமைந்ததாகும். 19-20ஆம் நூற்றாண்டுப்பகுதிகளின் ஈழத் தமிழரின் - குறிப்பாக யாழ்குடாநாட்டை மையப்படுத்திய வட பகுதித் தமிழரின் - கல்விசார் இயங்குநிலையை கோடிட்டுக் காட்டும் வகையிலமைந்த இப்பதிவானது ஈழத்தமிழர் சிறந்த கல்விப் பாரம்பரியம் கொண்டவர்கள் என்பதை உறுதிசெய்வதற்கான முக்கியமான வரலாற்றாவணமாகத் திகழ்வது. அவ்வகையில் சமுதாய வரலாற்று முக்கியத்துவமுடைய இவ்வாக்கம் கனடாவில் எழுந்த புனைவுசாராத(ழேn குiஉவழைn)வகையிலான தமிழ் எழுத்தாக்கங்களில் முதல்வரிசைக் கணிப்புக்குரியதாகவும் திகழ்வதாகும். இவ்வகையிலே, எழுத்துத் துறையில் அதிபரவர்களின் வாழ்நாள் சாதனை எனத்தக்க நூலாக்கம், இது.
கவிநாயகர் கந்தவனம் மற்றும் அதிபர் பொ. கனகசபாபதி ஆகிய மேற்படி இருவரும் எழுத்துத்துறையிலே வாழ்நாள் சாதனை யாளர்கள் என்ற கணிப்புக்குரியவர்கள் என்பதற்கு மேற்சுட்டிய சான்றுகளே போதுமானவை. எனினும் அவர்களுடைய தகைமைகளை மேலும் மெருகூட்டும் வகையிலான ஒரு குறிப்பையும் இங்கு சுட்டுவது இச்சான்றுரையை மேலும் வலுவுறுத்துவதாக அமையும் எனக் கருதுகிறேன். அது, இவர்களது எழுத்தாளுமைக்கும் பண்பாடுசார் பங்களிப்புகளுக்கும் ‘அனைத்துலக மட்டத்தில கிடைத்த அங்கீகாரம்’ ஆகும்.
கனடா, ஈழம் ஆகியவற்றில் வாழும் தமிழர்களிடத்து மட்டுமன்றி தமிழகம், ஐக்கியஇராச்சியம், பிரான்ஸ், ஜெர்மனி உட்படத் தமிழர்வாழும் பல்வேறு உலக நாடுகளில் இவ்விருவரும் நன்கறியப்பட்டவர்கள். அவ்வந்நாடுகளின் இலக்கியம் மற்றும் பண்பாடுசார் நிகழ்வுகள் பலவற்றில் கலந்துகொண்டு பெருமை சேர்த்துள்ளவர்கள், இவர்கள். இன்னொருவகையில் கூறுவதானால், ‘தமிழர்கள் வாழும் நாடுகள் பலவற்றுக்குமான கனடாத் தமிழரின் ‘கலாசாரத் தூதுவர்’களாக இவர்கள் திகழ்ந்துள்ளனர்’ எனலாம்.
இவ்வகைத் தொடர்பால் இவர்களது எழுத்துக்கள் மேற்குறித்த நாடுகளில் பெரிதும் விரும்பி வரவேற்கப்பட்டுள்ளன. அவ்வகையில் உலகு தழுவிய நிலையில் பரந்த வாசகர்வட்டத்தை இவர்கள் பெற்றுள்ளனர.; ‘தமிழகத்தில் 2010இல் நடைபெற்ற உலகத் தமிழ்ச் செம்மொழி மாநாடு நிகழ்வுகளில் கனடாவின் சார்பில் சிறப்பு அழைப்பாளராகக் கலந்துகொண்டு ஆய்வுக்கட்டுரைகள் வழங்கியவர்களில் அதிபரும் ஒருவர்’ என்பதும், ‘சுவிற்சலாந்து வாழ் தமிழர்கள் 2012ஆம் ஆண்டிலே கவிநாயகரவர்களின் பாவாரம் நூலாக்கத்துக்காக அவருக்குப் பாவரசர் என்ற பட்டத்தை அளித்ததோடு 1001பிராங்குகள் பொற்கிழி வழங்கியும் கௌரவித்துள்ளனர்’ என்பதுமான தகவல்கள் இங்கு பதிவுபெறவேண்டிய முக்கியத்துவமுடையனவாகும்.
இவ்வாறான இவர்களது உலகம் தழுவிய நிலையிலான சாதனைப் பெருமைகள் பலவற்றுக்கும் அடிப்படையாக அமைந்தது, தமிழர் சமூகத்தின் வாழ்வியலுடன் தம்மை நெருக்கமாகப் பிணைத்துக்கொள்ள முற்பட்டதான இவர்களின் ‘மனிதநேய மனப்பாங்கு’ ஆகும். இதுவே நாம் முன்னரே நோக்கிய சாதனையாளர்களின் சமூகத் தொடர்புநிலை என்ற அம்சமாகும். இவ்வாறான சமூகத் தொடர்புநிலையை ஒரு கோட்பாடு என்றநிலையில் மட்டும் கொண்டிராமல், சமூகமாந்தரின் வாழ்வியல் மற்றும் பண்பாட்டு அம்சங்களுடன் நேரடியாகப் பங்கு கொள்ளுதல் மற்றும் அவற்றின் தகுதிப்பாடுகளை எடுத்துரைத்தல்(பாராட்டுதல் மற்றும் விமர்சித்தல்) என்றவகையில் செயற்பாடாகவும் நிகழ்திக்காட்டியவர்கள், இவர்கள். இவ்வகையில் இவ்விருவரும் கனடா உட்பட்ட புலம்பெயர் தமிச் சூழல்களின் தமிழ்ப் பண்பாட்டுச் செயற்பாட்டாளர்களுட் பலருக்கும் திசையறிகருவிகளாக - இலக்கிய மொழியிற் கூறுவதானால் துருவநட்சத்திரங்களாக – விளங்கியவர்களாவர்
இவ்விரு பெருமக்களும் நாமளிக்கும் இக் கௌரவத்தைப்பெற ஒப்புதல் தந்ததன் மூலம் எம்மைக் கௌரவித்துள்ளனர். மேலே கவிநாயகருக்கும் இணையத்துக்கும் உள்ள தொடர்பிiனைச் சுட்டியிருந்தேன். அதிபருக்கும்;கூட இணையத்துடன் ஒரு தொடர்பு உளது. இணையத்தின் புரவரலராக இவர் சில காலம் பங்களிப்புச் செய்துள்ளார் என்பதே அத் தொடர்பாகும். இதனை இங்கு நன்றியுடன் நினைவு கூருகிறேன்.
இவ்விருவருக்கும் இந்த வாழ்நாள் சாதனை விருதுகளை வழங்குவதன் மூலம் கனடாத் தமிழ் எழுத்தாளர் இணையம் தன்னைத்தானே கௌரவித்துக்கொள்கிறது என்பதைச் சுட்டுவதோடு இச்சான்றுரையை வழங்க எனக்கு இவ்வாய்ப்பை அளித்த எழுத்தாளர் இணையத்தினருக்கு மீண்டுமொருமுறை எனது நன்றியைத் தெரிவித்துக் கொண்டு எனது உரையை நிறைவுசெய்கிறேன். நன்றி.
•This e-mail address is being protected from spambots. You need JavaScript enabled to view it•
•<• •Prev• | •Next• •>• |
---|