நாவலின் பின்னணியாகப் பின் வரும் விஷயங்கள் இருந்தன : அருந்ததிராயின் அம்மா மேரி ராய் கேரள சிறியன் கிறிஸ்தவர். அப்பா ராய் வங்காளி. மேரி விவாகரத்தானவர். அருந்ததியின் சகோதரர் லலித். அருந்ததியும் லலித்தும் இரட்டைப் பிறவிகள் அல்ல. கோட்டயம் நகரத்திலிருந்து சில கிலோமீட்டர்கள் தள்ளியிருக்கும் அயமனம் கிராமம் இவர்களது சொந்த ஊர். அருந்ததியின் மாமா ஜியார்ஜ் ஐஸக். அருந்ததியின் தாத்தா ஜான் குரியன். தலைமைப் பொறியியலாளராக இருந்து பாதிரியாக ஆனவர். ஐஸக்கின் விவாகரத்துப் பெற்ற மனைவி ஸிஸிலியா பிலிப்ஸன். பாரடைஸ் ஊறுகாய் பேக்டரி ஐஸக் தொடங்கியதுதான். ஐஸக் இப்போதும் தாயுடன்-அம்மாச்சியுடன் தான் வாழ்கிறார். புள்ளியம்பல்லின் வயல்களுக்கு அப்பால் மிருச்சல் நதியோடுகிறது. அருந்ததி கட்டிடக்கலை பயில்கிறார். கோவாவில் திரிகிறார். குகா என்னும் மார்க்ஸிட்டோடு வாழ்கிறார். பிற்பாடு கிருஷ்ணன் என்பவரை மணக்கிறார். கிருஷ்ணன் ஏற்கனவே மனமானவர். இரண்டு குழந்தைகள் அவரது முதல் மனைவிக்குப் பிறந்தவர்கள். அருந்ததி, இரு பெண் குழந்தைகள், கிருஷ்ணன் ஆகியோர் குடும்பமாக வாழ்கிறார்கள். ராய் பிறந்தது ஷில்லாங்கில். பிற்பாடு அயமனம் வந்தவர். மேரி வழக்கு மன்றம் சென்று தன் சொத்துரிமையை நிலைநாட்டியவர்.
கதையில் வரும் ராஜல் எனும் பெண் குழந்தையும் எஸ்கா எனும் ஆண் குழந்தையும் ரெட்டையர்கள். கிறிஸ்தவ மலையாளி வங்காள பெற்றோர்க்குப் பிறந்தவர்கள். விவாகரத்துப் பெற்ற மலையாளித்தாய் அம்மு சிரியன் கிறிஸ்தவ ஆண்வழி மரபுகளால் துன்புறுத்தப்படுகிறார். அம்முவுக்கும் வெளுத்தா என்கிற பரவனுக்கும் காதல் ஏற்படுகிறது. காம்ரேட் எம்.கே.பிள்ளை, போலீஸ், காங்கிரஸ் என அனைத்து அரசியலாளரும் வெளுத்தா கொல்லப்பட காரணமாகிறார்கள். வெளுத்தா மார்க்சிஸ்ட் கட்சியிலிருந்து நக்ஸலைட் கட்சிக்கும் போனதாகச் சொல்லப்படுகிறது. அம்மு காசநோய்க்கும் பலியாகிறார். குட்டி முதலாளி சாக்கோ அம்முவின் சகோதரன். அத்தை கொச்சம்மா அம்முவைக் களங்கப்படுத்துபவள்.மம்மாச்சி அம்முவின் தாய். குழந்தைகள் பாலியல் சுரண்டலுக்கு ஆளாகின்றனர். நாவலில் ஆணாதிக்கம், சாதியம், நவகாலனியம், நிலப்பிரபுத்துவம், உலகமயமாதலின் பின்னணியில் வளர்ந்த குழந்தைகளின் நினைவு மீட்புகளாக சம்பவங்கள் இடம் பெறுகின்றன. மிருச்சல் ஆறு கதையின் ஜீவனுள்ள அடித்தளமாக ஓடிக்கொண்டிருக்கிறது. குழந்தைக்கு சாவு, காதல், அன்பு பயம் போன்றன அதன் கரையில்தான் அறிமுகமாகிறது.
மார்க்ஸிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சி, மார்க்ஸிஸ்ட் லெனினிஸ்ட் கட்சி போன்றவற்றுக்கு இடையிலான பிழைகள் பிரச்சினைகள் ஸ்தூலமானவை. இ.எம்.எஸ். நம்பூதிரிபாத் ஸ்தூலமான பாத்திரம். அன்றைய வரலாற்றுக் காலகட்டமும், இடம் பெறும் மனிதர்களும் ஸ்தூலமானவர்கள். எழுபதுகளின் சம்பவங்களுக்கிடையில் நாவல் இயங்குகிறது. கொச்சம்மா பாத்திரம் புனைவு. அப்படி எவரும் இல்லை. அம்மாச்சி பாத்திரமும் சாக்கோ பாத்திரமும் நிஜம். சாக்கோ தான் ஜேக்கப். தன்னில் 25 சதவீதம்தான் எஸ்தா 75 சதவீதம் வேறு யாரோ புனைவு என்கிறார் லலித். மேரிக்கு வெளுத்தா மாதிரியான உறவு இருந்ததில்லை. அது புனைவு. ஆயினும் சாதிவிட்டு சாதி கட்டுவது இன்றும் அயமனம் பிரதேசத்தில் பிரச்சினைக்கு உரியதுதான். சோபிமோல் எனும் குழந்தையின் மரணம் புனைவு. அப்படியான சிறுமி இல்லை.
மார்க்ஸிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சியின் கோட்பாட்டாளர் அய்ஜஸ் அகமது, தலித் விமர்சகர் விஜயகுமார், மார்க்ஸிய லெனினிஸ்ட் கட்சியின் கல்பனா வில்ஸன் போன்றோர் சின்ன விஷயங்களின் கடவுளைத் தத்தமது கொள்கைத் திட்டங்களில் இருந்து அரசியல் வாசிப்பு செய்திருக்கிறார்கள். இலக்கியம், அரசியல், காலனித்துவம், ஜாதியம், கேரள கம்யூனிஸம் போன்றன விவாதங்களின் மையமாக அமைந்திருக்கிறது. பெண்ணிலைவாதம், ஆண்மைய எதிர்ப்பு, பொருள் முதல்வாத இயங்கியல் பார்வை, பின் நவீனத்துவம் போன்ற கோட்பாடுகளினடிப்படைகள் விவாதத்துக்குள்ளாகி இருக்கின்றன.
நாவலின் சில குறிப்பிட்ட சம்பவங்கள், சில குறிப்பிட்ட வர்ணனைகள், சில குறிப்பிட்ட பாத்திரப் படைப்புக்கள் அனேகமாக அனைத்து விமர்சனங்களிலும் திரும்பத் திரும்ப இடம் பெறுகின்றன. காம்ரேட் பிள்ளை, இ.எம்.எஸ். நம்பூதிரி பாட் போன்றோரைச் சுற்றிய பிரச்சினைகள், அம்மு வெளுத்தா இருவருக்குமிடையிலான பாலுறவு நிகழ்வுகள், சக்கோவின் ஆண்மையப் பார்வை, அம்முவின் செயல்பட இயலாநிலை, சிரியன் கிறிஸ்தவ சமூகமும் கேரள இடதுசாரி இயக்கமும் பார்ப்பனீய மையப்பட்டமை, முழுச்சமூக அமைவுக்கும் அரசு நிறுவனங்களுக்கும் ஆதாரமாகியிருக்கும் சாதிய அமைப்பு போன்ற இப்பிரச்சினைகளே அநேகமாக இந்தியாவிலிருந்தும் தமிழ்ச்சூழலிலிருந்துமான விமர்சனங்களில் ஆதிக்கம் செலுத்தியிருந்தன.
மேற்கத்திய விமர்சனங்கள் அநேகமாக மூன்று அம்சங்கள் பற்றியதாகவே இருந்தன. தீண்டத்தகாத பரவனுக்கும் கிறிஸ்தவ மணவிலக்கு பெற்ற பெண்ணுக்குமான காதல், குழந்தைகளின் சிதறுண்ட நிராதரவான அன்பற்ற உலகம், இலக்கியத் தரத்தைத் தீர்மானிப்பவர்கள் நிறுவனம் சார்ந்த பேராசிரியர்களா அல்லது பரந்துபட்ட வாசகர்களா எனும் விவாதம், தரம் என்றால் என்ன என்பது பற்றிய விவாதம், அருந்ததி புக்கர் பரிசு பெற்ற சந்தர்ப்பத்தைத் தொடர்ந்தததாக இதுவன்றி ஸல்மான் ருஸ்டியின் இந்திய எழுத்து தொகுப்பு நூலை முன்வைத்தும், நோபல் பரிசு, புக்கர் பரிசு போன்றவற்றை ஏன் இந்தியாவின் மிகச்சிறந்த பிராந்திய எழுத்தாளர்கள் பெறவில்லை என்கிற பிரச்சினையை முன்வைத்தும், ஆங்கில மொழி ஆதிக்கம்.காலனிய இலக்கியத்தர மதிப்பீடுகள் மீது காட்டமான தாக்குதல்களும் தொடுக்கப்பட்டன.
ஆங்கிலத்தில் மட்டுமே எழுதும் இந்திய படைப்பாளிகளை இரண்டு வகைகளில் பிரிக்கலாம். இந்தியாவுக்கு உள்ளேயே இருந்து கொண்டு ஆங்கிலத்தில் எழுதுகிறார்கள். இந்தியாவுக்கு வெளியே இருந்துகொண்டு ஆங்கிலத்தில் எழுதும் இந்தியர்கள். இந்தியாவுக்கு உள்ளேயிருந்து கொண்டு ஆங்கிலத்தில் எழுதும் படைப்பாளிகள் வெளியேயிருக்கும் படைப்பாளிகள் போல சர்ச்சைகளில் சிக்குவதில்லை. அவர்களது பதிப்பாளர்கள், வாசகர்கள், கதை மாந்தர்கள் அனைவருமே இந்திய சூழலுக்குள் அடங்குவார்கள். முல்க்ராஜ் ஆனந்த, ராஜாராவ், ஆர்.கே.நாராயணன், குஷ்வந்த் சிங், கமலா தாஸ் போன்றவர்களை இவ்வாறு குறிப்பிடலாம். இவர்களது எழுத்துக்கள் பற்றிய விமர்சனங்களில் நவகாலனித்துவ அணுகுமுறை மேற்கத்திய மதிப்பீடுகள் குறித்த விமர்சன அணுகுமுறை இடம் பெறுவதில்லை. மேற்கிலிருந்து எழுதும் எழுத்தாளர்களுக்கு எப்போதுமே இந்தப் பிரச்சினைகள் இருக்கின்றன.
ஸல்மான் ருஸ்டி, விக்ரம் சேத், அமிதவ் கோஸ் போன்று மேற்கிலிருந்து எழுதும் எழுத்தாளர்களின் வாசகர் பரப்பு இந்தியாவில் மட்டுமல்ல உலகம் தழுவியதாக இருக்கிறது. பதிப்பாளர்கள், வாசகர்கள், கதைமாந்தர்கள் போன்றோரும் இந்திய சமூகத்துள் மட்டுமே அடங்குபவர் அல்ல. பிரிட்டிஷ் ராஜ்யத்தின் ஆட்சி நாட்களோடு தொடர்பு கொண்ட மனிதர்களும் அவர்களது வழித் தோன்றல்களும் புலம் பெயர்ந்தவர்களும் பிரிட்டிஷ் பாத்திரங்களும் இவர்களது படைப்புக்களில் இடம்பெறுகிறார்கள். இவர்களது எழுத்துக்கள் பற்றிய விமர்சனம் நிச்சயமாக நவகாலனிய ஊடுருவலாலும், கலாச்சார ஆதிபத்தியம், மேற்கத்திய மதிப்பீடுகளின் ஊடுருவல் போன்றவற்றின் பின்னணியில்தான் பார்க்கப்பட முடியும்.
இன்னும் மேற்கத்திய பதிப்பாளர்களும் வாசகர்களும் உலகின் பிற்பகுதி எழுத்தாளர்களை நாடிப்போவதற்கு நிறைய காரணங்கள் இருக்கிறது. தமது மொழி நீர்த்துப் போய்விட்டபோது அதற்கு புதிய ஜீவனையும் புதிய உள்ளடக்கத்தையும் தருபவர்களாக ஆங்கிலத்தில் எழுதும் ருஸ்டி, ரொமேச் சந்திரா,மைக்கேல் ஒண்டாஜி போன்ற எழுத்தாளர்கள் இருக்கிறார்கள் என்ற ஆங்கில விமர்சகர்கள் குறிப்பிடுகிறார்கள். மேற்கத்திய தத்துவமரபு,அரசியல் நம்பிக்கைகள் இன்று நெருக்கடிக்கு உள்ளாகியிருக்கிறது. ஒரு ஆன்மீக வெற்றிடம் ஐரோப்பிய மனிதனுக்குள் நிலவுகிறது. போப் ஜான்பால் மட்டுமல்ல டோனிபிளேயரும் பில்கிளிண்டனும் கூட மூன்றாவது பாதை பற்றிப் பேச வேண்டியிருக்கிறது.
பன்முகத்துவத்தை அவர்கள் போற்றுகிறார்கள். பன்முகத்தைத் தழுவியதாகவே தமது ஆதிக்கம் நிலைநாட்டப்பட முடியும் என்பதை மேற்கத்தியர்கள் உணர்ந்திருக்கிறார்கள். தகவல் தொழில்நுட்பமும் உலகமயமாதலும் உலகத்தின் எக்கோடி மனிதனும் எக்கோடி மனிதனுடனும் ஒப்பிட்டுப்பார்த்துக் கொள்ளக்கூடிய சூழல் இன்று உருவாகிவிட்டது. அவ்வகையில் உலகம் மனிதர்களுக்கிடையில் மிகவும் குறுகலானதாகிவிட்டது. ஜாதீயப் பிரச்சினைகளையும் கறுப்பின மக்கள் பிரச்சினையும் ஒரே தளத்தில்தான் இயங்குகின்றன. மேற்கின் சிங்கிள் மதரின் பிரச்சினையும் இந்தியாவில் முதிர் கன்னிகளின் பிரச்சினையும் ஒன்றுதான். குழந்தைகள் எல்லா சமூகங்களிலும் சுரண்டப்படுகிறார்கள். அவர்களது ஆளுமை நசுக்கப்படுகிறது. மேற்கின் ஜிப்ஸிகள் பிரச்சினையும் ஒன்றுதான்.
கம்யூனிஸம் உலகெங்கிலும் நெருக்கடிக்கு உள்ளாகிறது. போலந்திலிருப்பவனுக்கு கேரள கம்யூனிஸம் பற்றிய பிரச்சினைப் புரிந்து கொள்வதில் சிக்கலில்லை. பிரச்சினைகள் உலகமயமாகி வருவதையும் உலகில் எங்குவாழும் வாசகனும் பிற படைப்பாளிகளைப் புரிந்து அனுபவிக்கும் சூழல் உருவாகி வருவதையும் இடதுசாரி அரசியல்வாதிகளை விடவும் சர்வதேசிய பதிப்பாளர்கள் மிக நன்றாக அறிந்து வைத்திருக்கிறார்கள். நவகாலனியம்,மேற்கத்திய மதிப்பீடுகள், ஏகாதிபத்தியம் என்று விமர்சனக் கண்ணோட்டத்தை அமைத்துக் கொள்கிறவர்கள் இந்த அம்சத்தை நிர்ணயித்துக் கொள்வதில்லை.
அநேகமாக மார்க்ஸிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சி சார்ந்த விமர்சகர்கள் எல்லாருமே அருந்ததியின் நாவலை அரசு சாரா இயக்க நடவடிக்கையாகவே கணிக்கிறார்கள். இது யதார்த்தத்தைக் கணக்கிலெடுக்காத அணுகுமுறை ஆகும். பொதுவாக மேற்கத்திய பரிசுகள் என்றாலே ஏகாதிபத்திய அரசியல் சதி என்றுதான் பார்த்து நாம் பழக்கப்பட்டிருக்கிறோம். நோபல் பரிசு, பாஸ்டர்நாக், ஸால்ஸெனித்ஸன் போன்ற பிரச்சினைகளின் பின்னணியிலும், புலிட்சர் பரிசு, ஸ்டாலின் பரிசு போன்றவற்றின் பின்னணியிலும்தான் மேற்கத்திய பரிசுகள் பற்றிய நமது மதிப்பீடுகள் உருவாகியிருந்தன. கெடுபிடிப் போர் காலகட்டத்தில் உலகத்தில் இது உண்மையாகத்தான் இருந்தது. மூன்றாவது பாதை பேசும் காலகட்டமான இன்று தாராளவாதம் தனது இறுதிக் காலத்தை அன்மித்துவிட்டது. கெடுபிடிப்போர் அநேகமாக முடிந்துவிட்டது.
ஆங்கிலத்தில் எழுதும் பிற இந்திய எழுத்தாளர்களிலிருந்து மிக வித்தியாசமான தாகவே அருந்ததிராயின் எழுத்து பார்க்கப்படுகிறது. அருந்ததிராயின் தனித்துவப் பண்புகள்தான் என்ன? பிற நாவலாசிரியர்களின் நிகழ்களம் மேற்கத்திய இந்திய பெருநகர்ப்புறமாக இருக்கும். ராயின் கதை நிகழ்களம் கலங்கலான கிராமமாக இருக்கிறது. நதி முக்கியமான நிகழிடமாக இருக்கிறது. அருந்ததி ராய் மற்ற நாவலாசிரியர்கள் போல் அல்லாத ஸ்தூலமான வர்க்கப் போராட்டத்தையும் கேரள இடதுசாரி இயக்கத்தையும் தனது படைப்பில் கையாளுகிறார். தனிப்பட்ட பிரச்சினைகளான காதல், நினைவு இழப்பு போன்றவை ஆண்வழிச் சமூகக் கொடுமையின் பின்னணியில் அரை நிலபிரபுத்துவ பிற்பட்ட முதலாளித்துவ சமூக அமைப்பின் பின்னணியில் சொல்லப்படுகிறது என்கிறார் கல்பனா வில்லன்.
அருந்ததி ராயும் தனது இயல்புணர்வுதான் தன் எழுத்தாகியிருக்கிறது, எழுத்து முறையும் இயல்புமே நாவலாகியிருக்கிறது என்கிறார். நான் அதிகம் படித்தவள் இல்லை, ஆங்கிலப் பல்கலைக்கழகங்களில் படித்தவள் இல்லை என்கிறார். தன்னை இன்னொன்றாக்கிப் பார்க்கும் மாஜிக் ரியாலிஸ்ட் எழுத்தாளராக தன்னால் முடியாது என்கிறார். இன்னொரு நாவல் தன்னால் எழுத முடிவுமென்று தோன்றவில்லை என்கிறார். நிஜவாழ்வுதான் நாவல் என்கிறார். குழந்தைகளின் விளையாட்டு, மூன்று காலங்களை இல்லாததாக்கி விளையாடுவதுதான் நாவலாகியிருக்கிறது என்கிறார். ஆங்கிலத்தில் எழுதும் பிற இந்திய எழுத்தாளர்களை ஒப்பிட ஆங்கிலத்தில் எழுதப்பட்டாலும் கூட இந்நாவல் அதிகமும் இந்தியத்தன்மை கொண்ட நாவல்.
இந்த நாவல் பற்றிய விசேசமான விமர்சனங்கள் மார்க்ஸிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சி தரப்பிலிருந்தும் தலித் தரப்பிலிருந்தும் வந்திருக்கிறது. ராயின் நாவல் கம்யூனிஸ எதிர்ப்பு நாவல், லிங்க மையமாக பாலுறவு நாவல், மேற்கத்திய மதிப்பீடுகளை தூக்கிப் பிடிக்கும் நாவல் என்கிறது மார்க்ஸிஸ்ட் கட்சியினரின் விமர்சனம். மார்க்ஸிஸ்ட் கம்யூனிஸ்ட் மேல் வருண சாதி எதிர்ப்பு நாவல் – சாதியமைப்பு அகமண எதிர்ப்பு நாவல் – இந்துமயமாக்கப்பட்ட சிறியன் கிஸ்தவ எதிர்ப்பு நாவல் என்கிறார் தலித் விமர்சகர் விஜயகுமார். இன்னும் பரவச நிலைக்குச் சென்று இந்த நாவலின் நாயகன் வெளுதா ஒரு தலித் பரவன் ‘சிறிய விசயங்களின் கடவுள்’ என்று தலித் பாத்திரமொன்றை முழுமுதற்கடவுள் ஸ்தானத்துக்கும் உயர்த்தி விடுகிறார்.
நாவலில் வரும் அம்மு பாத்திரம் ஓரளவு அவள் தாய்தான் என்கிறார் அருந்ததி ராய். வெளுத்தாவுடனான உறவு கற்பனை என்கிறார். தகப்பன் வங்காளி தாய் விவாகரத்தான மலையாளி. கிழக்கத்திய கம்யூனிஸம் – ஆச்சார இந்துமதம் – ஜனநாயக மாதிரி – கேரள கம்யூனிஸம் என்கிறார். அருந்ததி தன் கல்லூரி நாட்களிலும் கோவாவில் இருந்த வேளையிலும் இவரோடு சேர்ந்து வாழ்ந்தவர் குகா என்பவர். மார்க்சிஸ்ட் டெல்லி மனிதர்கள் வேஷதாரிகள் எனும் அருந்ததி, கேரள மார்க்ஸியம் மனிதனுக்கு பெருமித உணர்வு தந்தது முக்கியமானது என்கிறார். 100 சதவீதம் கல்வியறிவு தந்தது சாதனை என்கிறார். மார்க்ஸிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சியின் பல்வேறு சாதனைகள் மீது தனக்கு மரியாதை இருக்கிறது என்கிறார். இ.எம்.எஸ். மீதும் தனிப்பட்ட முறையில் மரியாதை கொண்டவள் என்கிறார்.
நாவலில் கடவுள் என்று எவரும் இல்லை. கடவுள்களை உருவாக்குவதும் நாவலின் நோக்கம் இல்லை. சின்ன விஷயங்களின் கடவுள் எனும் கருத்தமைவு இழப்புக்களின் குறிப்பாக, தத்துவார்த்தமாகவே நாவலில் கையாளப்படுகிறது. இரண்டு உயிர்கள். இரண்டு குழந்தைகளின் குழந்தைப் பருவம், துன்புறச் செய்யும் எதிர்கால மனிதர்களுக்கான ஒரு வரலாற்றுப் பாடம்,(பக்கம்.338) இதுதான் நாவலின் செய்தி. நிறையக் கடவுள்களை எதிர்பார்த்து நிறைய சின்ன விசயங்கள் நாவலில் உள்ளது. ஆண்வழி ஆதிக்கம், நிலப்பிரபுத்துவம், முதலாளித்துவம், சாதீயம் எல்லாமுடம் இங்கு பெரிய கடவுள்கள் கொண்ட பெரிய விஷயங்களாக இருக்கிறது.
பாலியல் ரீதியில் குழந்தைகள் சினிமா தியேட்டரில் அழிக்கப்படுகிறார்கள். அவர்களுக்கான எதிர்காலம் அழிக்கப்படுகிறது. மணவிலக்குப் பெற்ற பெண்ணின் பிரச்சினைகள் இருக்கிறது. எல்லாவற்றுக்கும் ஜாதீய சாயம் பூசி ஒரே ஒரு சாவியை மந்திரச் சொல்லாக உதிர்ப்பதை நாவல் நிராகரிக்கிறது. அருந்ததி, விஜயகுமார் சொல்வதுபோல முழுமையாக இந்துமத நீக்கம் செய்யப்பட்ட அறிவு ஜீவி, எந்த மதத்தீவிர வாதத்தினிலும் தன்னை விலக்கிக்கொண்டவர். இந்துமத நீக்கம் என்று பேசிக்கொண்டு இஸ்லாமிய பெண்ணடிமைத்தனம் பற்றியோ கிறித்தவ காலணியாதிக்கம் பற்றியோ வாய் திறக்காமல் தழுவிக் கொண்டிருப்பவர் அல்ல அருந்ததி. அரசு சாரா அமைப்புக்களில் இருக்கும் ஏகாதிபத்திய,கிறிஸ்தவ நலன்களை விஜயகுமார் போன்றவர்கள் கேள்விக்குட்படுத்த வேண்டும்.
நாவலில் பிற ஆங்கில இந்திய படைப்புக்களில் இல்லாத அளவில் உணர்ச்சிமயமான பாலுறவுச் சித்தரிப்புக்கள் உள்ளன. சாபு தாமல் என்பவர் நாவல் ஆபாசம் என்று பதனம் திட்டா வழக்குமன்றத்தில் வழக்கு கூட தொடுத்திருக்கிறார். நாவலில் அம்மு வெளுத்தா இவர்களுக்கிடையிலான கறுப்பு வெளுப்பு உடல்களின் கலப்பும் உள்வாங்குதலும் மயக்கமும் அதிர்ச்சிகரமான பிம்பங்களை எழுப்புகிறது. (பக்கம் 338) நாவலில் அப்பிம்பங்களைத் தமது நினைவில் எழுப்பிக் கொண்டு அதிர்ந்து போகிறார்கள் பேபி கொச்சம்மாவும் அம்முவின் பிற உறவினப் பெண்களும். மேலும் லிங்கமையப் புணர்ச்சி அச்சந்தர்ப்பங்களில் விவரிக்கப்படுவதுமில்லை. நாவலின் தர்க்கத்திற்கு மிக மிக அவசியமானவை கலவிச் சித்தரிப்புக்கள்.
கடவுள் அதிகாரமுள்ளவர்களுக்கும் பலம் வாய்ந்தவர்களுக்கும் ஆனவராகத்தான் இருக்கிறார். பெரிய விஷயங்களைக் காப்பாற்றுவதற்காகத்தான் கடவுள் இருக்கிறார். விதிகளைச் சட்டங்களை மரபுகளைக் காப்பாற்றும் கடவுள்தான் இருக்கிறார். அறவியல் கல்வி, செல்வம், வீரம், ஒழுக்கம் போன்றவற்றுக்கான கடவுள்கள், அழகுக்கு உள்ள கடவுள் ஏன் அழுக்குக்கு இல்லை? ஒழுக்கமின்மைக்கு ஏன் கடவுள் இல்லை? சமூகத்தின் மைய மனிதர்க்கு உள்ள கடவுள் ஏன் விளிம்புநிலை மனிதர்களுக்கான கடவுளாக இல்லை? குழந்தைப்பருவம் கொலை செய்யப்படுகிறது. குழந்தைகள் பிரிந்துபோகின்றன. அடையாளமற்றுத் தவிக்கிற இந்த நான்கு ஜீவன்களின் வாழ்வை பெரிய கடவுள்கள் துன்பத்தில் ஆழ்த்துகிறார்கள்.
இந்த நாவல் உள்வாங்கப்பட்டதற்கான மேற்கத்திய சமூகத்தின் காரணங்கள் வேறு. இந்திய சமூகத்தில் காரணங்கள் வேறு. மேற்கத்திய சமூகத்தில் விவாகரத்தான பெண்களுக்கும் அவர்களின் இடையிலான மனோவியல் ரீதியான பிரச்சினைகள் மிகுந்த சர்ச்சைக்குரியவையாக ஆகிவருகின்றன. வீட்டை விட்டு ஓடிப்போகின்ற இளம் பெண்களின் பிரச்சினை போதை மருந்து பழக்கத்துக்கு ஆளாகும் பிரச்சினைகள் தனித்துவாழும் தாய்களுக்கு இங்கு மிகப்பெரிய பிரச்சினையாக ஆகியிருக்கிறது. அமெரிக்காவிலும் இங்கிலாந்திலும் தனி தாய்மார்களுக்கு இதுவரை கொடுக்கப்பட்டு வந்த பணச்சலுகைகள் நிறுத்தப்பட்டு அவர்கள் வேலைக்குப் போக நிர்ப்பந்தப்படுகிறார்கள். கறுப்பு-வெள்ளை கலப்பின உறவுகளில் பிறந்த குழந்தைகள் அடையாளமற்றுத் தவிக்கின்றன. ஆப்ரிக்க மையவாதிகள் அக்குழந்தைகளை அங்கீகரிப்பதில்லை. வெள்ளை இனவாதிகளும் அக்குழந்தைகளை விலக்கி வைக்கிறார்கள். இச்சூழலில் நாவல் வெளியாகிறது. குழந்தைகளின் துயரமயமான உலகம் அவர்களின் பார்வையிலே விரிகிறது. நாவல் உடனடியாக மேற்கத்திய-அமெரிக்க சமூகங்களை பற்றிப் பிடிக்கிறது.
குழந்தைகளின் மனநிலை வளர்ச்சி பற்றி மிகுந்த அக்கறை கொண்ட சமூகமாக இச்சமூகம் வளர்ந்திருக்கிறது. குழந்தைகள் மனோரீதியில் பாலியல் ரீதியில் அவர்களது கையறு நிலையில் சுரண்டப்படுவது பற்றிய உணர்வு இங்கு சமூகவிலாயளர்களையும் உளவியலாளர்களையும் பற்றிப் பிடித்திருக்கிறது. குழந்தைகள் மனோவியலை ஆய்வு செய்வதற்கென்றே பல்கலைக்கழகங்களில் தனித்துறைகள் உள்ளன. குழந்தைகள் இலக்கியம் இங்கு ஒரு தனிப்பிரிவாக வளர்ச்சியுற்றிருக்கிறது. மேலும் குழந்தைகளின் சொல் விளையாட்டு வேடிக்கை பார்க்கும் பண்பு விட்டு விலகும் அப்பாவித்தனம், துயரம் போன்றவைதான் நாவலில் கட்டமைப்பாக உருப்பெற்றிருக்கிறது. நாவலில் மேற்கத்திய சமூகத்தினரிடம் மிகப்பெரிய பாதிப்பை உருவாக்குவதற்கான சமூக உளவியல் கலாச்சாரக் காரணங்கள் இவைதான்.
இந்தியாவில் இந்நாவல் ஆங்கில ஆதிக்கத்தின் இன்னொரு வடிவாகவே பார்க்கப்பட்டிருக்கிறது. மார்க்சிஸத்தின் மீதான என்.ஜி.ஓ. தாக்குதலாகவே பார்க்கப்பட்டிருக்கிறது. அருந்ததியின் நேர்முகங்களை வாசிப்பவர்க்கும், கேரளத்தில் அன்று நிலவிய சூழலை கவனத்தில் எடுத்துக் கொள்பவர்களும் சாதி பற்றிய மார்க்சியவாதிகளின் ஆழ்ந்த அக்கறையின்மையையும் நினைவு கூர்பவர்களும் வேறு முடிவுகளுக்கே வந்து சேர முடியும். மேலும் நாவல் முழுக்கவும் ஆணாதிக்கம் நக்கலுக்கு உரியதாகவே நோக்கப்பட்டிருக்கிறது. ஆணாதிக்க நிலைகளை கட்டிக் காக்கிறவர்களாகவே இங்கு காம்ரேட் பிள்ளையும் மார்க்சிஸ்ட் கட்சியினரும், இ.எம்.எஸ். நம்பூதிரி பாடும் விமர்சிக்கப்பட்டிருக்கிறார்கள். சாதிக்கும் கிழக்கத்திய மார்க்சிஸம் என்று பேசப்படுவதற்கும், இந்து சனாதனத்துக்கும் இருக்கும் உறவையும் நாவல் பரிசீலனைக்கு உள்ளாக்குகிறது. இவைகளை வரலாற்று ரீதியில் வைத்துத்தான் பார்க்கலாமே அல்லாது குறிப்பிட்ட இயக்கத்தின் மீதான திட்டமிட்ட தாக்குதலாகப் பார்ப்பதில் கொஞ்சமே நியாயமுள்ளது.
நாவலில் பாவிக்கப்பட்ட மொழி சம்பந்தமாகவே மேற்கத்திய மரபு விமர்சகர்கள் கவலை தெரிவித்திருக்கிறார்கள். ஆங்கில மொழி ஆதார மொழியாகக் கொண்ட பண்டிதர்கள் அதன் ஆசாரத் தன்மையைக் காத்துக் கொள்ளவே முயல்வார்கள். அருந்ததியின் மொழியாளுமை அனாசாரத் தன்மை சார்ந்தது. எல்லாவிதமான நிலைபெற்ற மொழி ஆசாரங்களையும் இலக்கணங்களையும் அவரது கதைமொழி உடைத்துவிடுகிறது. ஆங்கில விமர்சகர்களின் கோபம் இதனாலேயே எழுகிறது என்று குறிப்பிடுகிறார் அருந்ததி. ஆங்கிலத்தில் ஏற்கனவே எழுதிக் கொண்டிருக்கும் அனிதா தேசாய் போன்றவர்கள் அருந்ததியின் இந்த அனாசார மொழிபற்றி அதிர்ச்சி தெரிவிக்கும் அதே வேளை இந்த புதிய மொழியை வரவேற்கவும் செய்கிறார்கள். ஒ.வி.விஜயன் போன்றவர்கள் தமது இலக்கியம் பிராந்திய இலக்கியம் என்று சொல்லப்படுவதை மறுக்கிறார்கள். இந்தோ ஆங்கில இலக்கியத்தை அவர் கிழக்கிந்திய கம்பெனியின் மறுவடிவம் என்றே பார்க்கிறார்.
உலகமயமாதல் பற்றி நக்கலுடன் நாவலில் கையாளும் அருந்ததியின் நாவல் அதே உலகமயமாதலின் விளைவாக இந்தியாவுக்கு வெளியில் பதிப்பிக்கப் பெற்றது ஒரு முரண் நகை என்றார் சுப்ரியா சௌத்ரி. புக்கர் பரிசு நாவல்களிலேயே அதிகம் விற்பனையாகி அதிக மொழிகளில் மொழி பெயர்க்கப்பட்ட நாவலாகவும் இதுவே இருக்கிறது. இந்நாவல் பரிசுபெற்றதால் ருஸ்டிக்கு அவ்வளவு சந்தோசம் இல்லையென்று சொல்லப்படுகிறது. பரிசளிப்பு விழாவில் இருண்ட முகத்துடன் காணப்பட்ட ருஸ்டி அருந்ததி ராயை அனைவரும் பாராட்டியபோதும் கூட எதுவும் வாழ்த்துச் சொல் கூட சொல்லவில்லை என்கிறார்கள் விழாவில் பங்கு பெற்றவர்கள். அருந்ததி இந்திய எழுத்தாளர்களுக்கு உலக அளவில் அங்கீகாரம் பெற்றுத் தந்ததில் முதலாமானவர் ருஸ்டிதான் என்று குறிப்பிடுகிறார். தனது எழுத்துக்களையும் தன்னையும் ருஸ்டியோடு வைத்து மதிப்பீடுவதை காட்டமாக மறுத்துவிடுகிறார். நான் ஆய்வு செய்து எழுதுபவள் இல்லை. என் வாழ்வை எழுதுபவள் என்கிறார் அருந்ததி.
இவ்வாறான வாதப் பிரதிவாதங்களுக்கும் தத்தமது கொள்கைகக் கோட்பாடுகளைத் தேடும் அரசியல்வாசிப்புக்களுக்கும் ஆளாகியிருக்கும் இந்நாவலை எவ்வாறு நாம் அணுகுவது சாத்தியமாக இருக்கும்? இந்நாவலை எந்த இடத்தில் பொருத்தி வைத்து நாம் இதன் முக்கியத்துவத்தைப் புரிந்து கொள்வது?
ஒரு புனைக்கதையின் மீதான அரசியல் வாசிப்பென்பது சில குறிப்பிட்ட அரசியல் கட்சிகளின்பாலான ஆசிரியரின் அரசியல் பார்வைகளின் மீதான மதிப்பீடுகள் அடிப்படையில் மட்டும் உருவாக முடியாது. பிரதானமான சமூகப் பொருளாதார சக்திகள் மற்றும் சமகால கருத்தியல் போக்குகளில் அந்த நாவல் எங்கு நிலை கொண்டிருக்கிறது எனப் பார்க்க வேண்டும் என்றார் கல்பனா வில்ஸன். அவ்வகையில் இந்நாவல் இந்திய சமூகத்தின் இன்றைய தீமைகளான மதவாதம், சாதீயம், பெண்ணடிமைத்தனம், வலதுசாரி அரசியல் போன்றவற்றுக்கு எதிரான மிகத் தெளிவான நிலைபாட்டை மேற்கொள்கிறது. இதற்கு மேலும் இந்திய சமூகத்தவர்கள் அதிகம் கவலைப்படாத மணவிலக்குப் பெற்ற பெண்ணின் பாலியல் தேர்வு, நிராதரவான குழந்தைகளின் துயரம் போன்றவற்றையும் இந்நாவலில் விரிவான பார்வைக்கு முன் வைத்திருக்கிறது. இச்சூழலில், இந்நாவல் மீதான எவ்வகையிலுமான எதிர்மறையிலான விமர்சனங்கள் இடதுசாரி அரசியலை முன்னெடுத்துச் செல்லாது என்பது மட்டும் நிச்சயம். உலக இலக்கிய அரசியலில் அக்கறையுள்ளவர்களுக்கு மட்டுமல்ல, இந்திய இலக்கிய அரசியலில் அக்கறை உள்ளவர்களுக்கும் இது பொருந்தும் என்பதும் நிச்சயம்
நன்றி: http://yamunarajendran.com/?p=1228
•Next• •>• |
---|