முப்பதாண்டு காலம் ஆயுதப் போராட்டம் நிகழ்த்திய போராளித் தலைவனின் மரணம் அங்கீகரிக்கப்படாத தமிழகப் புகலிட அரசியல் சூழலில், இலங்கையில் அமைதி நிலவுகிறது அபிவிருத்தி கொழிக்கிறது எனப் பிரச்சாரம் செய்யப்படும் காலத்தில், தாயின் கல்லறையில் அழுது ஆற்றுப்படுத்திக் கொள்வது என்பது கவிஞர் வ.ஐ ச.ஜெயபாலனுக்கு ஒரு பெரும் அரசியல் போராட்டமாக ஆகிவிட்ட காலத்தில் நாம் வாழ்கிறோம். தருணத்திற்குப் பொருத்தமாக மீராபாரதி மரணமும் ஆற்றுப்படுத்தலும் குறித்து மரணம் இழப்பு மலர்தல் எனும் தலைப்பில் அவசியமான முன்னோடி நூல் ஒன்றினை எழுதியிருக்கிறார்.. மரணங்கள் இரு வகையிலானவை@ இயல்பாக நிகழும் மரணங்கள் மற்றும் சுமத்தப்பட்ட மரணங்கள். இயல்பாக நிகழும் மரணங்கள் குறித்த ஆற்றப்படுத்துதல் எந்தச் சமூகத்திலும் இயல்பாகவே அனுமதிக்கப்பட்டிருக்கிறது. எந்தச் சமூகமும் அதற்கென மரபான சடங்குகளையும் கொண்டிருக்கிறது. ஆற்றுப்படுத்தலின் வழியில் மனிதர்கள் தம்மை எதிர்கால வாழ்வுக்கு மீட்டுக் கொள்கிறார்கள். சுமத்தப்பட்ட மரணங்களில் இதற்கான வாய்ப்பு அதனோடு சம்பந்தப்பட்ட மனிதர்களுக்கு இல்லாது போகிறது. சுமத்தப்பட்ட மரணங்கள் எனும்போது அவற்றைத் தற்கொலை படுகொலை வெகுமக்கள் மரணங்கள் என நாம் வகைப்படுத்துகிறோம். இயக்க உட்படுகொலைகள் மறைக்கப்பட வேண்டிய காரணங்களால் நிகழும் தற்கொலைகள் அரசினால் ஏவப்படும் வெகுமக்கள் படுகொலைகள் என இவற்றை வகைப்படுத்துகிறோம். பெரும்பாலுமான சமயங்களில் இத்தகைய மரணங்களை உறுதிப்படுத்திக் கொள்ள முடிவதில்லை. இந்த மரணங்களுக்கு எவரும் பொறுப்பேற்பது இல்லை. இந்த மரணங்கள் குறித்து வெளிப்படையாகப் பேசுவது பேசுபவரின் மரணத்திற்கும் இட்டுச் செல்வதாக இருக்கிறது.
செல்வி அல்லது ரஜனி திரணகமா எந்தச் சூழலில் கொல்லப்பட்டனர்? சிவரமணியை தற்கொலை நோக்கி இட்டுச் சென்ற குறிப்பான சூழல் எது? கோவிந்தனைக் கொலை செய்த மனிதர்களின் தனிப்பட்ட அடையாளம் என்ன? பாலச்சந்திரனை அல்லது இசைப்பிரியாவை எப்படிக் கொன்றர்கள்? காணாமல் போன கவிஞர் புதவை இரத்தினதுரை இன்னும் உயிருடன் இருக்கிறரா இல்லையா? யுத்தத் தவிர்ப்பு வலயங்களில் கொல்லப்பட்ட குழந்தைகளின் எண்ணிக்கை என்ன? இவர்களை நினைவு கூறும் சூழல் அன்றன்று ஆயுத அதிகாரம் கொண்டவர்களால் மறுக்கப்படும்போது அவர்களின் உறவுகள் எவ்வாறு தம்மை ஆற்றுப்படுத்திக் கொள்வதும் தமது இழப்புக்களில் இருந்து மீள்வதும் சாத்தியம்? போருக்குப் பின்னான நிலைமையில் இலங்கையில் புகலிட நாடுகளில் இதற்கான சாத்தியங்கள் குறித்துப் பேசுகிறது மீராவின் மரணம் இழப்பு மலர்தல் நூல்.
இரண்டு பகுதிகளாலான இந்த நூலின் முதல் பகுதி மரணமும் இழப்பும் ஆற்றுதலும் அதிலிருந்து மீளுதலும் ஆன சூழல் குறித்து வரலாற்றில் நடந்த ஆய்வுகளை யூதர்கள் நாசிகள் போன்றவர்களின் அனுபவங்களை முன்நிறுத்திப் பேசுகிறது. இரண்டாவது பகுதி மீரா பாரதியின் தந்தையாரின் படுகொலை குறித்த அவரது துயரத்தைக் கடந்து போதலாக ஆத்மரீதியான பயணமாக இருக்கிறது. தனது சொந்தத் தந்தையின் இழப்பிலிருந்தான சுய தேடலில் இருந்து வரலாற்று ஆய்வுகளின் வழி ஈழ நிலைமைக்குத் தக்கபடி ஆற்றுதல் குறித்த கோட்பாடுகளை அதன் வழி உகந்த நடைமுறைகளை எட்ட நினைக்கிறார் மீரா.
இயக்க அரசியல் கருத்தியல் கொண்டிராதபோது அது வெறும் வெறுப்பு அரசியலாகவே எஞ்சும்@ அதனது தேவைகள் மறைந்த பின்பும் வெறுப்பு அரசியலாகவே இயக்க அரசியல் இன்றும் ஈழ நிலைமையில் எஞ்சி நிற்கிறது. இயக்கம் தாண்டிய அளவில் நடந்து முடிந்த படுகொலைகள் உள்கொலைகள் வெகுமக்கள் கொலைகள் அணுகப்படவில்லை. வன்மம் மிக்க இயக்க அரசியல் இங்கு ஆற்றப்படுத்தலுக்கான மிகப்பெரும் தடையாக இருக்கிறது. இது நிறைவேறும்போது அற மொழியில் இதனை ஆற்றுதல் எனவும் அரசியல் மொழியில் மக்கள்நேய உணர்வு எனவும் சொல்லலாம். துரதிருஷ்டவசமாக இன்றளவிலும் வன்மமே இங்கு அரசியல் உரையாடலாக இருக்கிறது. சபிப்பதும் வெறுத்தலும் அவதூறும் பழிவாங்கும் உணர்வும் துவேஷமும் தூஷணமும் ஒரு போதும் ஆற்றுதலை உருவாக்க முடியாது. மீராபாரதி இந்த வெளியில்தான் மிகச் சிக்கலான தவிர்க்கமுடியாத ஒரு உரையாடலைத் துவங்கி வைக்கிறார்.
மீரா ஓஷோவினால் அதிகம் பாதிப்பப் பெற்றிருக்கிறர். ஓஷோவுக்கு காமத்தைக் கடத்;தலும் வன்முறையைக் கடத்தலும் அன்பு செய்வதற்கான முன்நிபந்தனைகள். அவரைப் பொருத்து தான் எனும் அகந்தையைக் கடத்தலும் அன்பு செய்வதற்கான பிறிதொரு நிபந்தனை. இதன் அடிப்படையில் மரணத்தை ஒப்புதல் சடங்குகள் மற்றும் நினவு கூறுதலின் வழி மரணத்தைக் கடந்து செல்லுதல் பற்றி மீரா பேசுகிறார். கொலைகளுக்குக் காரணமானவர்களை அடையாளம் தெரிந்தவர்கள் சந்தேகத்தக்குரியவர்கள் உறுதிபடச் சொல்ல முடியாதவர்கள் என அனைவரையம் மன்னித்தல் எனும் வழியை சுமத்தப்பட்ட மரணமெனும் துயரிலிருந்து மீளுவதற்கான வழிமுறையாக மீரா முன்வைக்கிறார். எதிரியை மன்னித்தல் எனும்போது எதிரியின் குடும்பம் இலங்கை ராணுவத்தினர்; அவர்களது குழந்தைகள் குறித்தும் மீரா பேசுகிறார்.
இலங்கை ராணுவத்தின் இழப்புக்களைக் கவனிக்கவும் அவர்களது உளவியல் மேம்பாட்டுக்காகவும் இலங்கை அரசு மற்றும் படை அமைப்பின் நிர்வாகப் பொறிமுறை மருத்துவ மனைகள் மனநலக் காப்பகங்கள் இவற்றிற்கான பொருளாதார வளம் என அனைத்தும் அவர்களுக்கு இருக்கிறது. ஒடுக்கப்பட்ட சமூகமொன்று இது குறித்துக் கவலைப்பட வேண்டிய அவசியமில்லை. அது தனது மக்களின் துயர் குறித்துக் கவலபை;பட்டால் மட்டும் போதும். சித்திரவiயாளனின் உளவியல் சிதைவு பற்றி சித்திரவதைக்கு உள்ளான மக்கள் கூட்டம் கவலைப்பட வேண்டிய அவசியமி;ல்லை. இதனையே கொலை செய்ததால் உளச்சிதைவுக்கு ஆட்படும் இஸ்ரேலிய ராணுவத்தின் பற்றி நான் கவலைப்பட வேண்டிய அவசியில்லை கொல்லப்பட்ட எமது சந்ததிகள் பற்றித்தான் நான் கவலைப்பட வேண்டும் என்கிறார் பாலஸ்தீனக் கோட்பாட்டாளரும் கவிஞருமான ஹனன் அஸ்ராவி. ஈழ நிலைமையில் தமிழர்களை இலங்கை அரசு அடிப்படை உயிரிகளாகவே கருதாத சூழலில் இது குறித்த அக்கறை உடனடியில் ஈழத்தமிழ் மக்களிடம் சாத்தியமில்லை
மீராவின் தந்தையாரது படுகொலையை முன்வைத்த அவரது அனுபவம் சார்ந்த மூன்று கட்டுரைகள்தான் இந்நூலின் மையமான பகுதி. சொந்த அனுபவத்தை மக்கள்நேய உணர்விலிருந்து பொது அனுபவமாக மாற்றும் உன்னதமான மனத்தை மீரா பெற்றிருக்கிறார். தனது தந்தையைப் படுகொலை செய்தார்கள் என எந்தக் குறிப்பிட்ட மனிதரையும் குறிப்பிட்ட இயக்கத்தையும் அவர் குற்றம் சுமத்தவில்லை. இந்தப் படுகொலை எனும் நிகழ்வை ஈழ சமூகத்தில் கடும்பனியாகி உறைந்துபோன அரசியல் கலாச்சாரத்தின் பகுதியாக அவர் பார்க்கிறார். இந்தக் கலாச்சாரம் எவ்வாறு உருவாகியது அதனை எவ்வாறு முழு சமூகமும் அங்கீகரித்து மௌனித்தது என்பது குறித்து அந்த சமூகம் மறுபரிசீலனை செய்ய வேண்டும் அதற்கான நேரம் இதுவே எனவும் அவர் கோருகிறார்.
ஈழ நிலைமையில் ஆற்றுதல் என்பது நடைமுறையில் எவ்வாறெல்லாம் நிகழ முடியும் என்கிற கேள்வியை எழுப்பிக் கொள்ளும் மீரா பாரதி இலக்கியம் சுய நினைவு கூறல்கள் துயர்களை எழுத்தில் பதிவு செய்தல் கோட்பாட்டு உருவாக்கம் உளவியல் ஆய்வுகள் என்றெல்லாம் நிகழ முடியும் என்கிறார். துரதிருஷ்டவசமான இதை எழுதுபவனின் வாசிப்பு அனுபவத்தில் யுத்த காலம் குறித்த ஈழ இலக்கியம் குறிப்பிட்ட அளவில் மேலும் பிளவுன்ட மனிதர்களுக்கடையில் வெறுப்பையும் வன்மத்தையும் விதைப்பதாகவே இருக்கிறது. பெர்னார்ட் ஸ்லிங்கின் ரீடர் போன்ற ஒரு நாவல் கோவிந்தனினது புதியதோர் உலகம் நாவலை அடுத்து அதனை மீறின போராட்டம் குறித்த இருளும் ஒளியும் பற்றிய இலக்கியம் எதுவும் இங்கு உருவாகவில்லை.
மீராவின் நூல் இந்த இடைவெளியில் முகிழ்த்திருக்கும் புனைவல்லாத ஒரு முன்னோடி நூல். படைப்பமைதி கொண்ட நூல். ஆய்வு நோக்கு கோட்பாட்டு உருவாக்கம் அனுபவத்திலிருந்து மீளுதல் நோக்கிய பயணம் என எல்லா வகையிலும் மீராபாரதியின் மரணம் இழப்பு மலர்தல் எனும் இந்த நூல் ஈழப்பரப்பில் ஒரு முன்னோடி நூல். ஆற்றுதல் என்பதன் முதல்படி மரணங்களைச் சுமத்தியவர்கள் அதனை ஒப்பி அதற்குப் பொறுப்புக் கூறுதலாகும். தனிமனிதர்கள். இயக்கங்கள் படையினர் இலங்கை அரசு என அனைவரும் இதனைச் செய்ய வேண்டியிருக்கிறது. மீரா பாரதியின்; நூலைத் தொடர்ந்து விவாதிப்பதன் வழி இந்தப் பிரம்மாண்டமான கேள்விகளுக்கு நியாயமாக நாம் விடை காண முயலலாம். அதற்கான நடைமுறைகளையும் உருவாக்க முயலலாம். தமது சொந்தத் துயரை சமூகத் துயராக பிரபஞ்சத் துயராகக் காணும் மீராபாரதி தனது சுயதேடலில் ஒரு பாய்ச்சலை நிகழ்த்தியிருக்கிறார். இது ஈழ சமூகத்திலும் இலங்கையின் தெற்கிலும் எப்போது நேரும் எனும் ஆற்றாமை இந்த நூலை வாசித்து முடிக்கையில் மனதைப் பாரமாக அழுத்திக்கொண்டிருக்கிறது.
•This e-mail address is being protected from spambots. You need JavaScript enabled to view it•
•<• •Prev• | •Next• •>• |
---|