இலங்கைத் தமிழ் இலக்கியத்தில் எழுத்தாளர் சுதாராஜின் படைப்புகள் முக்கியத்துவம் மிக்கவை. 2010 ஜுனில் நியு செஞ்சுரி புக் ஹவுஸ் வெளியிட்ட உயிர்க்கசிவு எனும் 60 சிறுகதைகளின் தொகுப்பு நூலுக்கு, எம்.ஏ.நுஃமான் அவர்களும் பொன்னீலன் அவர்களும் எழுதிய முன்னுரைகள் அவரது சிறுகதைகள் பற்றிய விரிவான பார்வையினை அளிப்பதாலும், 'பதிவுகள்' இணைய இதழில் சுதாராஜின் சிறுகதைகள் தொடர்ச்சியாக வெளிவருவதாலும், பதிவுகள் வாசகர்களுக்கு எழுத்தாளர் சுதாராஜ் பற்றிய மேலதிக விளக்கங்களை இவை அளிப்பதாலும், பதிவுகளில் இம்முன்னுரைகளை மீளப்பிரசுரிப்பது பொருத்தமானதே. இவற்றை எமக்கு அனுப்பி வைத்த சுதாராஜுக்கு நன்றி. - -பதிவுகள் -
சுதாராஜ் சிறுகதைகள்
எம். ஏ. நுஃமான்
1970களில் எழுதத் தொடங்கிய சுதாராஜ், இலங்கையின் முக்கியமான சிறுகதை எழுத்தாளர்களுள் ஒருவராகத் தன்னை நிலைநிறுத்திக்கொண்டவர். கடந்த சுமார் நாற்பது ஆண்டுகால ஈழத்து வாழ்வின் அசைவியக்கத்தை, அதன் வரலாற்றுத் திருப்பங்களை, தனிமனித வாழ்வில், மன உணர்வுகளில் அவை ஏற்படுத்திய தாக்கங்களைத் தன் கதைகளில் அவர் பதிவுசெய்திருக்கிறார். இந்தப் பதிவுகள் உணர்வு சார்ந்த, அனுபவம் சார்ந்த பதிவுகளாக அமைகின்றன. அவற்றில் பொதிந்திருக்கும் அரசியலும் அழகியலும் அவரை சமூகப் பொறுப்புடைய ஒரு கலைஞராக இனங்காட்டுகின்றன.
தனது “சிறுகதைகளின் அடிநாதமாக அமைவது நேசிப்பு” என சுதாராஜ் ‘காற்றோடு போதல்’ என்ற தன் சிறுகதைத் தொகுப்புக்கு எழுதிய முன்னுரையில் குறிப்பிடுகிறார். “நேயம் என்பது மனிதர்கள்பால் மட்டுமன்றி சகல உயிரினங்கள் மீதும் இரங்குதல் ஆகும். எங்களைச் சூழ உள்ள இயற்கை ஓர் அற்புதமான விஷயம். மரம், செடி, பூக்கள் ஆகியவற்றின் வனப்புகள் பிரமிப்பையும் இதமான சுகானுபவங்களையும் தருகின்றன. வானத்தில் பறவைகள் பறக்காத ஒரு நாளைக் கற்பனைசெய்து பாருங்கள். எவ்வளவு சோகமாயிருக்கிறது. அந்தப் பறவைகளும் அவற்றின் வனப்பும் எங்கள் மனங்களை இதமாக வருடிக்கொண்டிருப்பதற்காகவே படைப்பெடுத்துள்ளனபோல் எண்ணத் தோன்றுகின்றது. இவற்றையெல்லாம் என் கதைகளில் பதியவைத்திருக்கிறேன்.” என்று எழுதுகிறார் அவர். மனிதர்கள் மீதும் இயற்கையின் மீதும் கொண்ட இந்த நேயம் ஒரு நல்ல கலைஞனுக்குரிய முக்கியமான குணாம்சம் என்று சொல்லவேண்டும்.
நேயம் என்ற தலைப்பில் சுதாராஜ் ஒரு கதை எழுதியிருக்கிறார். இது 2001ல் மல்லிகையில் வெளிவந்தது. இன முரண்பாடும் யுத்தமும் மேலோங்கிய சூழலில் அவற்றை மீறிய மனித உறவின், மனித நேயத்தின் முகிழ்ப்பைச் சித்திரிக்கும் ஒரு நல்ல கதையாக நான் அதைக் கருதுகிறேன். நானும் ஆஸிலி ஹல்பே, ரஞ்சினி ஒபயசேகர ஆகியோரும் தொகுத்து ‘லங்கன் மொஸைய்க்’ என்ற தலைப்பில் ஆங்கிலத்தில் வெளியிட்ட ஈழத்துத் தமிழ், சிங்கள சிறுகதைக் தொகுப்பில் அந்தக் கதையையும் சேர்த்துக்கொண்டோம். பின்னர் ‘அசல்வெசி அப்பி’ (நாம் அயலவர்) என்ற தலைப்பில் நானும் காமன் விக்கரம கமகேயும் தொகுத்து வெளியிட்ட ஈழத்துத் தமிழ்ச் சிறுகதைகளின் சிங்கள மொழிபெயர்ப்புத் தொகுதியிலும் அக்கதையைச் சேர்த்துக்கொண்டோம்.
இன வெறுப்பின் மத்தியில் இன நல்லுறவின் மலர்ச்சியை அக்கதை இயல்பாக வெளிப்படுத்துகின்றது. வேவ்வேறு வகையில் யுத்தத்தால் பாதிக்கப்பட்ட நால்வரைப்பற்றிய கதை அது. யுத்த சூழலில் மனைவியையும் பிள்ளைகளையும் யாழ்ப்பாணத்தில் விட்டுவிட்டு தொழிலுக்காக கொழும்பிலிருந்து கிறீஸ் செல்லும் வழியில் கராச்சி விமான நிலையத்தில் அடுத்த விமானத்துக்காகக் காத்திருக்கும் தமிழ் இளைஞன் கதையின் மையப் பாத்திரம். தன் குடும்பத்தைப் பற்றிய கவலையும் பரிதவிப்பும் அவனுக்கு. அதே விமானத்தில் வந்த மூன்று சிங்களவர்கள் - இரண்டு இளைஞர்களும் ஒரு யுவதியும் - அவனுடன் உறவு கொள்ள முயல்கின்றனர். இளைஞர்கள் இருவரும் ராணுவத்திலிருந்து தப்பிவந்தவர்கள். ஒரு முகவருக்கு நிறையப் பணம் கொடுத்து கிறீஸிற்கு வேலை தேடிச் செல்கின்றனர். அந்தப் பெண்ணின் கணவன் ஒரு ராணுவ வீரன். வடக்கில் யுத்தமுனையில் இருக்கிறான். அவனை மீண்டும் சந்திக்கலாம் என்ற நம்பிக்கை அவளுக்கு இல்லை. தன் குழந்தையைத் தாயின் பராமரிப்பில் விட்டுவிட்டு வீட்டுப் பணிப்பெண்ணாக கிறீஸ{க்குச் செல்கிறாள். அவர்கள் மூவரும் இவனுக்கு உதவவும், இவனுடன் உறவு கொள்ளவும், இவனது தனிமையைப் போக்கவும் முயல்கின்றனர். இவன் அவர்களைத் தவிர்த்து தனிமையையே விரும்புகிறான். அவர்கள் மீது எரிச்சலும் வெறுப்பும் கூட ஏற்படுகின்றது. எனினும் அவர்களது விடா முயற்சியால் இறுதியில் அவர்களுக்கிடையே நட்பு மலர்கிறது. ‘ஒரு மத்தாப்பு வெடித்ததுபோல் அவனிடத்திலும் சிரிப்பு மலர்ந்தது’ என்று கதை முடிகின்றது.
சுதாராஜின் அனுபவ வலயமும் சமூக அரசியல் பார்வையும் விசாலமானவை. அல்ஜீரியா, இத்தாலி, இந்தோனேசியா, ஈராக், எகிப்து, ஏமன், குவைத், பாகிஸ்தான் முதலிய பல நாடுகளில் இவர் பணிபுரிந்திருக்கிறார். தன் வெளிநாட்டு வாழ்க்கை அனுபவங்கள் பலவற்றை இவர் தமிழ்ச் சிறுகதைக்குள் கொண்டுவந்து தமிழ்ச் சிறுகதையின் அனுபவ வலயத்தையும் சற்று அகலப்படுத்தியிருக்கிறார். அவ்வகையில் அ. முத்துலிங்கத்துடன் ஒப்புநோக்கத்தக்கவர் இவர். ஒரு நாளில் மறைந்த இரு மாலைப் பொழுதுகள், பாலைவனத்திலும் புல் முளைக்கும், ஏகபத்தினி விரதம், இளமையின் ரகசியம் போன்றவை சுதாராஜின் வெளிநாட்டு அனுபவங்களின் வெளிப்பாடுகள்.
சுதாராஜ் எழுதத் தொடங்கிய எழுபதுகளில் இலங்கை அரசியலில் இடதுசாரிச் சிந்தனையும், இலக்கியத்தில் முற்போக்குவாதமும் முன்னணியில் இருந்தன. சுதாராஜின் ஆரம்பகாலக் கதைகளில் இவற்றின் தாக்கத்தைக் காணமுடிகிறது. இத்தொகுப்பில் முதலாவதாக இடம்பெறும் நாணயக் கயிறு (1979) இவ்வகையில் குறிப்பிடத்தகுந்த ஒரு கதை. கொழும்பில் வாழும் யாழ்ப்பாணத்து நடுத்தர வர்க்கத்தினர் தங்கள் நலனுக்காக வறுமைப்பட்ட மலையகச் சிறுவர்களைத் தொழிலுக்கமர்த்தி கொடுமைப்படுத்துவதைப் பற்றியது கதை. இக்கதையில் வீட்டு எஜமானியால் கொடுமைப்படுத்தப்படும் சிறுவன் கொடுமையின் உச்சத்தில் எதிர்புணர்வுடன் அவர்களைவிட்டும் திமிறிச் செல்கிறான். வறுமை, இனத்துவ மேலாண்மை, வர்க்க ஆதிக்கம் என்பனவற்றுக்கு எதிரான ஆசிரியரின் உணர்வு இக்கதையில் இழையோடுகின்றது. இத்தகைய இடதுசாரி முற்போக்குவாதக் கருத்துநிலை அவரது பிற்காலக் கதைகள் பலவற்றிலும் உட்புதைந்திருப்பதை நாம் காணமுடியும்.
1980க்குப் பின்னர் சுதாராஜ் எழுதிய பெரும்பாலான கதைகள் இனமுரண்பாடு, யுத்தம், குடும்பங்களையும் தனிமனிதர்களையும் அவை பாதித்த விதம் என்பவற்றைப் பதிவுசெய்கின்றன. இனமுரண்பாட்டுச் சூழலிலும் இன வெறுப்புக்குப் பதிலாக மனித உறவுகளையும் மனிதத்துவத்தையும் குவிமையப்படுத்துகின்ற நல்ல கதைகளை சுதாராஜ் எழுதியிருப்பது மன நிறைவைத் தருகிறது. நான் முதலில் குறிப்பிட்ட நேயம் அத்தகைய ஒரு கதைதான். ‘மனிதர்கள் இருக்கும் இடம்’ இது தொடர்பாகக் குறிப்பிட்டுச் சொல்லக் கூடிய இன்னும் ஒரு முக்கியமான கதை. சிங்களவரான சோமையா மனதில் நிற்கும் பாத்திரமாக இக்கதையில் உருவாகியிருக்கிறார்.
சோபாசக்தி, சக்கரவர்த்தி ஆகிய புலம் பெயர்ந்த எழுத்தாளர்கள்போல் யுத்த சூழலில் விடுதலை இயக்கங்களின் வன்முறை, மனித உரிமை மீறல் போன்ற கருப்பொருட்களை மையமாகக் கொண்ட கதைகளை எழுதியவர்களை ஈழத்தில் மிக அரிதாகவே காணமுடியும். அதற்கான சுதந்திரம் அவர்களுக்கு இருக்கவில்லை. கோவிந்தன் என்ற புனைபெயரில் இயக்கங்களின் வன்முறையை அம்பலப்படுத்தி புதியதோர் உலகம் நாவலை எழுதிய நோபேட் விடுதலை இயக்கங்களால் பின்னர் கொல்லப்பட்டார். செல்வி அவ்வாறு கொல்லப்பட்ட ஒரு பெண் கவிஞர். இப்பின்னணியில் சுதாராஜ் போன்றவர்களின் மௌனத்தை நாம் புரிந்துகொள்ள முடியும். யுத்தத்துக்குப் பிந்திய சூழலில் இந்த மௌனத்துக்கு விடுதலை கிடைக்கும் என்று நாம் எதிர்பார்க்கலாம்.
சுதாராஜ் வடிவ பரிசோதனையில் அதிக அக்கறை காட்டுபவரல்ல. பாரம்பரியமான சிறுகதை வடிவத்தில் வாழ்க்கையின் பல கோணங்களை, மனிதர்களின் பல முகங்களை ஆழ்ந்த சமூக அக்கறையுடனும் மனித நேயத்துடனும் பதிவு செய்வதிலேயே அவர் அக்கறை காட்டியிருக்கிறார். புனைவு தரும் போதைக்கு அவரது இலக்கியக் கொள்கையில் இடம் இல்லை எனலாம். இலக்கியத்தின் சமூகக் கடப்பாட்டுக்கு முதன்மை கொடுப்பவர்களுள் சுதாராஜுக்கும் ஒரு முக்கிய இடம் உண்டு. சுதாராஜின் சில கதைகளைப் படிக்கும்போது அவர் இன்னும் சற்றுச் சொற் சிக்கனத்தைக் கடைப்பிடித்திருக்கலாமே என்று எனக்குத் தோன்றுவதுண்டு. எனினும் அது அவரது கதைசொல்லும் பாணியின் ஒரு அம்சம் என்று நாம் அமைதிகாணலாம்.
கடந்த நாற்பது ஆண்டுகளில் சுதாராஜ் சுமார் நூறு கதைகளாவது எழுதியிருப்பார் என்று நினைக்கிறேன். அவற்றுள் அறுபது கதைகளை ஒன்றாகப் படிக்கும் வாய்ப்பை இத்தொகுப்பு நமக்குத் தருகிறது. கதைகள் கால வரிசையில் தொகுக்கப்பட்டிருப்பதால் ஆசிரியரின் எழுத்தாளுமை வளர்ச்சியையும் இலங்கையின் சமூக வரலாற்றையும் ஒன்றிணைத்துப் பார்க்கும் வாய்ப்பும் நமக்கும் கிடைக்கின்றது. நாணயக் கயிறு என்ற முதல் கதையில் தொடங்கி, உயிர்க்கசிவு என்ற கடைசிக் கதைவரை படித்துமுடிக்கும் போது, வாழ்க்கை – மனிதர்கள் பற்றிய சுதாராஜின் பார்வையின் அடிச்சரடாக ஒரு மனிதாபிமான நோக்கு தொடர்ச்சியாக இழையோடியிருப்பதைக் காணமுடிகின்றது. இது அவரது படைப்பாளுமையின் வெற்றி எனக் கூறலாம்.
ஈழத்தின் ஈரம்
- பொன்னீலன் -
எழுபதுகளின் தொடக்கத்திலிருந்து இலங்கை இலக்கியத்தோடு எனக்கு உறவு ஏற்பட்டது. கலாநிதி கைலாசபதி அவர்களின் 'தமிழ் நாவல் இலக்கியம்" நூல் என்னைக் கவர்ந்த இலங்கைத் தமிழ் நூல்களில் முதன்மையான ஒன்று. கைலாசதியைத் தொடர்ந்து சிவத்தம்பி அவர்களிடமும் எனக்கு ஆழ்ந்த ஈடுபாடு ஏற்பட்டது. கைலாசபதியும் சிவத்தம்பியும் தொ.மு.சி.ரகுநாதன் என்னும் மாபெரும் ஆளுமையால் தொடக்கக் காலத்தில் செழுமைப்படுத்தப்பட்டவர்கள் என்ற செய்தி அவர்கள் மீதிருந்த ஈடுபாட்டை மேலும் அதிகப்படுத்தியது. கணேசலிங்கனின் செவ்வானம், டேனியலின் பஞ்சமர்கள் எனத் தொடங்கி யோகநாதன், செங்கை ஆழியான்… என இன்றுவரை இலங்கை நாவல்களை விரும்பிப் படித்து வருகின்றேன்.
1996 இல் இலங்கை முற்போக்கு எழுத்தாளர் சங்கத்தின் 40 ஆம் ஆண்டு விழாவில் கலந்துகொள்ள வல்லிக்கண்ணன், சி.மகேந்திரன் ஆகியோரோடு நானும் அழைக்கப்பட்டிருந்தேன். இனக் கலவரம் உச்சத்தை நோக்கி எழும்பிக்கொண்டிருந்த நேரம், எங்களை இலங்கைக்கு வரும்படி முற்போக்கு எழுத்தாளர் சங்கத்தோடு, அன்றைய இலங்கை அரசும் அழைத்திருந்தது. ஈழத்து தமிழ் மாணவர்களிடமும், மக்களிடமும் எங்கள் உரைகளின் மூலம் இன இணக்கச் சூழலை உருவாக்குவதே அன்று அவர்களின் நோக்கமாக இருந்தது.
இலங்கை புறப்படவேண்டிய நிலை ஏற்பட்டதும் இலங்கை இலக்கியம் பற்றிய என் அறிவைப் புதுப்பித்துக்கொள்ள முயன்றேன். அருமைத் தோழர்கள் டொமினிக் ஜீவா, அந்தனி ஜீவா, செ.யோகநாதன், சோமகாந்தன், வரதர் முதலியவர்களின் படைப்புகளை நான் ஏற்கெனவே விரிவாகப் படித்திருந்தேன். அந்நேரத்தில் தோழர் யோகநாதன் சென்னையில் என்னோடு தங்கியிருந்ததால், இலங்கை இலக்கியம் பற்றி அவரோடு உரையாடும் அரிய வாய்ப்புகள் தொடர்ந்து கிடைத்தன. அவர் 'வெள்ளிப்பாதரசம்", 'ஒரு கூடைக்கொழுந்து" ஆகிய சிறுகதை நூல்களை அந்தநேரம் தொகுத்துக்கொண்டிருந்தார். அவற்றின் பல கதைகள் என்னை வியப்பில் ஆழ்த்தின. கிட்டத்தட்ட எல்லாக் கதைகளுமே இலங்கை சமூக வாழ்வின் உணர்ச்சி மிக்க காட்சிப் பதிவுகளாக அமைந்திருந்தன. இலங்கையில் ஈழ எழுத்தாளர்கள், அறிஞர்கள் பலரைச் சந்திக்கும் வாய்ப்புகள் கிடைத்தன.
பல எழுத்தாளர்கள் தங்கள் படைப்புகளைப் பரிசளித்தனர். அவற்றைப் படிக்கப் படிக்க, ஈழத் தமிழ் மக்களோடு பழகப்பழக, எனக்குள் ஒரு பேருணர்வு எழுத்தது. என் ஆதி மண்ணுக்குத் திரும்பிய பேருணர்வு அது. நான் பிறந்த குமரி மாவட்டத்துக்கும் ஈழத் தமிழ்ப்பகுதிக்கும் இடையிலான ஒற்றுமைகளை கணந்தோறும் உணர்ந்து, மேலும் மேலும் அந்த உணர்வில் கரைந்தேன். அவர்கள் உணவும் எங்கள் உணவும், அவர்கள் உடையும் எங்கள் உடையும், அவர்கள் மொழியும் எங்கள் மொழியும், பனையும் தென்னையும் அடர்ந்த அவர்கள் நிலமும் எங்கள் நிலமும் ஒன்றாக எனக்குள் விரிந்துகொண்டிருந்தது. இடையிலே ஒரு கடல் புகுந்து எங்களைப் பிரித்திருப்பதை நினைத்து வியந்தேன். இந்தப் பெருவியப்பு எழுத்தாளர் சுதாராஜ் அவர்களின் கதைகளை இன்று படிக்கும்போது மீண்டும் ஊற்றெடுப்பதை என்னால் கட்டுப்படுத்த இயலவில்லை. என் மண்ணின் கதையாகவே இவையும் எனக்குள் விரிகின்றன.
இன்று தமிழ்நாட்டுத் தமிழ் மண்ணில் உருவாகும் கதைகளுக்கும், ஈழத்தமிழ் மண்ணில் உருவாகும் கதைகளுக்கும் இடையே ஏகப்பட்ட வேறுபாடுகள். உணர்வின்மை எனும் உள் அழுகல் எங்களை மக்க வைத்துக்கொண்டிருக்க, இனமோதல் என்னும் கோரப்புயல் அவர்களை அடியோடு பிடுங்கியெறிந்து அழிக்கிறது. இந்த அழிவில் வலியில்லாமல், இழப்புகளின் துயரில்லாமல், ஏக்கங்கள் இல்லாமல், பெருமூச்சும் கண்ணீருமில்லாமல், எங்கெங்கோ தூக்கி வீசப்பட்டும் மண் மறவா மக்களின் துயர ஓலங்கள் இல்லாமல் ஈழத்துப் படைப்பிலக்கியங்கள் இல்லை. ஈழத்துப் படைப்புகள் ரத்தக் கசிவுகள் நிறைந்தவை. ஒடிவுகளும், சிதைவுகளும் கொண்டவை. பாம்பர்களின் ஷெல்களாலும், துப்பாக்கிக் குண்டுகளாலும் கத்தி முனைகளாலும் துளைத்துக் கிழித்துக் குதறப்பட்டவை. அதிசயம் என்னவென்றால், இவ்வளவு இழப்புக்களுக்குள்ளும் தம் மனித மாண்பை, பாரம்பரியப் பண்பாட்டுச் செழுமையைப் பேணத் துடிக்கும் அவர்கள் மன வைரம். 'ஒரு நாளில் மறைந்த இருமாலைப் பொழுதுகள்" என்றொரு கதை. மென்மையான உணர்வைச் சொல்லும் மென்மையான கதை. கதைநாயகி புனிதா ஒரு முதிர் கன்னி. இந்தத் தொகுப்பில் ஏராளமான முதிர் கன்னியரைச் சந்திக்க முடிகிறது. வறுமையால் முதிர்ந்துபோனவர்கள், சீதனப் பிரச்சினையால் முதிர்ந்துபோனவர்கள், சாதித் திமிரால் முதிர்ந்துபோனவர்கள் அவர்கள். 32 வயதான புனிதா வறுமை தாங்காமல் கடல் கடந்து அயல்நாட்டுக்கு ஆயா வேலைக்கு வந்தவள். வந்த இடத்தில் தன்னைப்போலப் பெண்களும், ஆண்களுமாகப் பல ஆசியர்கள் வேலை செய்வதை அவள் கவனிக்கிறாள். ஓய்வு நாட்களில், இப்படிப்பட்டவர்கள் தங்களுடைய பாலியல் பசியைத் தீர்த்துக் கொள்ள இணக்கமான பேரைத் தேடிச் சேர்வதையும் கவனிக்கிறாள். பத்மா என்னும் அவளுடைய தோழி இந்த வழியில் அவளை வற்புறுத்தக்கூடச் செய்கிறாள். அதைவிட மேலாக, அவளுக்கு அறிமுகமான கம்பீரமான ஆசிய இளைஞன் அவளை வெளிப்படையாக அழைக்கவும் செய்கிறான். ஆனாலும் அவளால் இணங்க முடியவில்லை. கதையை ஆசிரியர் இவ்வாறு முடிக்கிறார். 'அவனது கம்பீரமும், அழகும், இளமையும் தனது காலடியில் சிதறியது போலிருந்தது. இன்னொரு முறை அவனது முகத்தைப் பார்க்கத் தேவை இல்லாமலும் இருந்தது. குழந்தையை உருட்டியவாறு நடக்கத் தொடங்கினாள் புனிதா. இன்றைய பொழுதில் இன்னொரு மாலை மறைந்தது போன்ற சுகமும், வேதனையும் மனதில்..” தொடர்ந்து யோசிக்கத் தூண்டும் இதுபோன்ற வரிகளை சக்ரவர்த்தி பீட்டர் நாவலில் அலக்ஸிபிதல்ஸ்தோய் எழுதியிருப்பதாக நினைவு.
இந்தத்தொகுப்பின் பல கதைகள் வறுமையின் பிடியில் சிக்கும் மனிதர்களைப் பற்றியவை. தமிழ்ச் சமூகத்தைச் சீரழிக்கும் சீதனம் என்னும் கொடுமையின் கோரைப் பல்லுக்குள் சிக்கி அரைபடும் முதிர்கன்னிகள் பற்றியவை. சுயகௌரவத்தை விட்டுக்கொடுக்க முடியாமல் திண்டாடும் உழைப்பாளிகள் பற்றியவை. குடும்பத்தைப் பிரிந்து வாழும் தனி மனிதர்களின் மனத் துயரங்கள் பற்றியவை. கீழ் நிலைத் தொழிலாளிகளின் இரண்டும்கெட்டான் நிலை பற்றியவை. புறக்கணிப்புக்குள்ளான குழந்தைகள் பற்றியவை. இந்தக் கதைகள் வெறும் கதைகளல்ல. உயிரும் உணர்வும் ததும்பும் வாழ்க்கை அனுபவச் சித்திரங்கள். வாசகருடன் அவை பேசும், மகிழ்ந்து சிரிக்க வைக்கும். வெம்பி அழவைக்கும், கோபத்தில் சீறவைக்கும், வெறுப்பில் திரும்ப வைக்கும். இன்றைய அக இருட்டில் வழி காட்டித் தெம்பூட்டும். தடுமாறும் இன்றையத் தமிழர்களைத் தோளோடு தோள் சேர்த்து வருங்காலத்துக்குள் அழைத்துச் செல்லும் நம்பிக்கை விரல்களும் அவை.
எல்லாக் கதைகளும் கிட்டத்தட்ட எதார்த்த பாணியில் அமைந்தவை. சொல்லப்படும் முறையில் ஒவ்வொன்றும் வித்தியாசமானவை. ஓய்வுபெற்ற உத்தியோகத்தர் ஒருவரைப்பற்றிய கதை, 'நன்றியுள்ள மிருகங்கள்". கதை சொல்லும் முறையில் லேசான சுய எள்ளல்… கேலி… பகிடி… இந்தக் கிண்டல், கேலி, பகடிகளுக்கு அடியில் வாழ்க்கையின் அதல பாதாளங்கள் எத்தனை எத்தனை ஒழிந்து கிடக்கின்றன என உற்றுப்பார்க்கும்போது, மனம் நடுங்குகிறது. நலிந்தவர்கள், புறக்கணிக்கப்பட்டவர்கள், வறியவர்கள், சிறுவர்கள், அனாதைகள் - உற்றுப்பார்க்கப் பார்க்க தலை சுற்றுகிறது. மரத்துப்போகாத இதயமுடைய இவர்கள் ஏற்கெனவே அறிமுகமானவர்கள்தான். திரும்ப அறிய நேரும்போது மனம் தவிக்கிறது, தடுமாறுகிறது…
சுதாராஜின் கதைகளில் நாம் சந்திக்கும் வலுவான புள்ளிகள் பல. ஆண்களும், பெண்களும், குழந்தைகளுமான குடும்ப வாழ்க்கை, பல சமூகத்தினர் கூடிவாழும் ஜனநாயக வாழ்க்கை, வறுமையும், புறக்கணிப்பும் நசுக்குதலுமில்லாத அற வாழ்க்கை, எல்லாரும் எல்லாம் பெறுகின்ற சம வாழ்க்கை… இப்படி இப்படி… குடும்ப வாழ்க்கையில் துணை தேவை என்பதைப் பல கதைகள் வற்புறுத்துகின்றன. சேமிப்புக்களிலெல்லாம் உயர் சேமிப்பு அன்புச் சேமிப்பே. இந்தச் சேமிப்பு குடும்பத்தினுள் நடக்கும்போது, அது படிப்படியாகத் திரளும். திரண்டு காலப்போக்கில் பொங்கி எழுவதைக் கலை நயத்தோடு பல இடங்களில் சித்திரப்படுத்தியிருக்கிறார். வாழுமிடத்துக்கும், வாழும் உயிருக்கும் உள்ள உயிரோட்டமான உறவும், இடம் இழக்கும் நிலையில் உயிரில் ஏற்படும் பதைப்பும் ஒரு நாயின் மரணம் மூலம் மிக அழகாகச் சொல்லப்படுகிறது. இச்சித்திரம் இன்றைய இலங்கைச் சித்திரமாக மனதில் விரியும்போது வாசகன் பெறும் அதிர்ச்சி மிகப் பெரியது.
எல்லாக் கதைகளின் பின்னணியாகவும் பரவி நிற்பது இலங்கையின் பேரினப் பகைச் சூழல், அதன் வெளிப்பாடான பேரினவாதத் திமிர்ச் சொற்கள். அத்துமீறிய தள்ளுமுள்ளுகள், அதன் உச்சமாக அரசு பயங்கரவாதத்தின் இரக்கமற்ற அழிப்புகள், இலக்குகளை நோக்கி இரைந்து வட்டமிடும் பாம்பர்கள், அஞ்சி நெருங்கிக் கிடக்கும் மனிதக் குடியிருப்புகள் மீது விழுந்து நெருப்பைக் கக்கியவாறு உடைந்து சிதறும் செல்கள், கிழிந்து சிதறி அலறி ஒடுங்கும் மனித உயிர்கள், இந்தச் சூழல்களுக்கிடையேயும் வாழ்க்கையை முன்கொண்டு செல்லும் மனிதர்கள்களின் சுவடுகளாக இந்தக் கதைகள். சுற்றுச் சூழல்களின் இறுக்கங்களாhல் ஒவ்வொரு கதையும் ஆழமும் வீரியமும் பயங்கரமும் பெறுகிறது.
'மீட்சி" அருமையான ஒரு கதை இலங்கையின் இனப்படுகொலைச் சூழலைக் காட்சிகளாகப் பதிய வைக்கிற கதை. வானில் விமானம் எழுப்பும் ஒலி மகிழ்ச்சியும், ஈர்ப்பையும் தந்த ஒரு காலம் இருந்தது. இன்று அதே விமான ஒலி நெஞ்சை நொறுக்கி உறைய வைக்கிறது. தெருவில் விளையாடிக்கொண்டிருக்கும் குழந்தைகள் அண்ணாந்து பார்த்துவிட்டு, வீறிட்டு அலறி வீட்டுக்குள் பாய்கிறார்கள். நடந்து வரும் ஆர்மிக்காரர்களோ கையில் அகப்படும் இளைஞர்களின் கைகளையும், கண்களையும் கட்டி திரம்பி வர முடியாத இடத்துக்கு அழைத்துக்கொண்டு போகிறார்கள். திடீரென்று ஒரு விமானம் பயங்கரமாகக் குண்டு வீசுகிறது. வீடுகள் நொறுங்கித் தரையில் விழுகின்றன. இடிந்து கிடக்கும் அருணாசலத்தின் வீட்டின் நிலையை இப்படி விளக்குகிறார் ஆசிரியர்.
'இந்தத் தள்ளாத வயதிலும் மேலதிக நேரம் வேலை செய்து, பாங் லோன் எடுத்து அண்மையில்தான் அவ்வீட்டைக் கட்டி முடித்திருந்தார். மூத்தவளுக்கு வயசு 35 ஆகுது… இந்த இந்த வீட்டைக் காட்டியாவது ஒரு கல்யாணத்தை ஒப்பேத்திவிடலாம் என அருணாச்சலம் சொன்னது நேற்றுபோல் இருக்கிறது…. ஆனால் காட்டுவதற்கு இப்போது அந்த வீடு இல்லை. கூரை தரையில் கிடக்கிறது. வீடு கட்டுவதற்குப் பட்ட கடன் தலை மேல் கிடக்கிறது…"
இந்த அழிவைக் கண்டு மக்கள் கவலைப்பட்டுச் சோர்ந்து நிற்கும் வேளையில், 14 - 15 வயது மதிக்கத்தக்க அருணாச்சலத்தின் மகன் வெடிக்கும் வேட்டுப்போல இப்படிச் சொல்லுகிறான். 'ஏரோபிளேனையும், குண்டுகளையும் கண்டுபிடித்த மனிதன்தான் குண்டு போடுகிற பிளேனை வீழ்த்திறதுக்கும் ஒரு கருவியைக் கண்டுபிடித்திருக்கிறான்."
இதைவிட வலுவான கதையின் முடிவு 'உரமேறிய கால்களைத் தரையில் ஊன்றி அணிவகுத்து நின்ற பனைமரங்களிற்கூட ஒன்றிரண்டு குண்டு வீச்சில் மடிந்து வீழ்ந்திருந்தன. ஆனால், பக்கத்திலேயே கடுந்தரையை கற்பாறைகளின் அழுத்தத்தை உடைத்தெறிந்து செழித்து வளரும் பனை வடலிகள்."
மனிதத் தன்மையின் மீட்சியில், வாழ்வின் வளர்ச்சியில் நம்பிக்கையூட்டும் இம்மாதிரியான வைர வரிகள் தொகுப்பு முழுவதிலும் பரக்கக் காணக் கிடக்கின்றன.
இத்தொகுப்பில் குறியீட்டுத் தன்மை கொண்ட கதைகள் பல உள்ளன. ஒன்றை சொல்லுவதுபோல இன்னொன்றைச் சொல்லி விளங்கவைக்கும் அபூர்வமான உத்தி சுதாராஜுவுக்கு அற்புதமாக வாய்த்திருக்கிறது. 'பாம்பு" என்னும் கதை சிறப்பித்துச் சொல்லத்தக்க ஒன்று. இதை விடச் சிறப்பித்துச் சொல்லத்தக்கது 'தொங்கல்." கொழும்பில் உத்தியோகத்திலிருக்கும் அண்ணன்காரன் விடுமுறையைக் கழிக்க ஊருக்கு வருகிறான். அவனுக்கு நல்ல உணவு சமைத்துக் கொடுப்பதற்காக வீட்டுச் சேவலை விரட்டிப் பிடிக்கிறான் தம்பி. எடுப்பான கம்பீரமான வெள்ளைச் சேவல் அது. சுற்றுப்புறச் சேவல்களையெல்லாம் எதிர்த்து நிற்கிற ஆற்றல் மிக்கது. ஆனால் குடும்பமே திரண்டு அந்தத் தன்னந்தனியான வெள்ளைச் சேவலைப் பிடித்துக் கொன்று சமைத்துவிடுகிறது. கதையினுள் பொங்கித் ததும்பும் சாரம், கோழியைப் பிடித்த குட்டிப்பையனின் நெஞ்சை அறுக்கும் ஓலமாகக், கதை வாசகன் மனதில் பளீரெனப் புதுவடிவம் கொள்கிறது. படித்துணரவேண்டிய பிரமாண்டமான கதை.
இப்படி இன்னும் நிறையக் கதைகளைச் சொல்லமுடியும். தமிழகச் சூழலில் பீறிட்டுக் கிளம்பிக்கொண்டிருக்கும் தலித்தியக் கதைகளாகவோ, பெண்ணியக் கதைகளாகவோ, எந்தக் கதையையும் காண முடியவில்லை என்பது குறிப்பிட்டுச் சொல்ல வேண்டிய செய்தி. பேரினவாத அத்துமீறலுக்கு எதிரான கதைகளே பெரும்பாலான கதைகள். முதலாளித்துவ மேலாதிக்கக் கதைகளும் அவற்றுக்குச் சமமாக உள்ளன.
இந்தக் கதைகளில் ரசிக்கத் தகுந்த முக்கியமான அம்சம் ஈழத் தமிழ் மொழி. அந்தப் பேச்சுவழக்கும் மனதைக் கவ்விப் பிடிக்கிறது. பெரும்பாலான அந்த வழக்குகள் மேற்குக் குமரி மாவட்டத்தில் இன்றும் பயின்று வருவதால் அதன் ஈர்ப்பு கூடுதலாக இருக்கிறது. குமரி மாவட்டத் தமிழுக்கும் ஈழத் தமிழுக்கும் ஏராளமான பொதுச் சொற்கள் இருப்பதை இந்தத் தொகுப்பின் ஊடாகக் காணமுடிகிறது. தருவினம், கொண்ணன், அறவட்டி, இஞ்சேரும், கொண்டு (சுண்டு) லோரி, கொப்பர், முண்டு, தட்டு (மாடி), ஒருகண் உறக்கம், நாண்டுக்கிட்டு நின்னா, கடகம், மைமல் என ஏராளமான சொற்கள் இந்த இரண்டு பக்கத்து மக்களையும் கடலைத் தாண்டி இணைத்துக் கிடக்கின்றன. எல்லாக் கதைகளும் ஒரே கதையாக, எந்தக் கதையும் இன்னொன்றைப் போல் இல்லாத தனிக்கதையாக, தமிழர்களுக்குரிய விழுமியங்கள் பொங்கும் அழகிய மலர்களாக, எல்லா நெருக்கடிகளிலும் அந்த விழுமியங்களைப் பேணிக் காக்கும் வலுமிக்க அரண்களாக, அருமை அருமையாக அமைந்திருக்கின்றன.
இலங்கையினுள்ளும், இலங்கைக்கு வெளியிலுமாகக் கடந்த 39ஆண்டுகளுக்கு அதிகமாக வாழ்ந்துகொண்டிருக்கும் வாழ்வார்வம் மிக்க தமிழ் மக்களின் பிரச்சினைகளையும், சோகங்களையும், சோகங்களினிடையே சுடர்விடும் அவர்களின் நம்பிக்கைகளையும் நுட்பமாகவும், நேர்த்தியாகவும் பத்திரப்படுத்தி வைத்திருக்கும் அருமையான சிறுகதைகள் இவை. கால வரிசைப்படி இவற்றைத் தொகுத்து அருமையாகத் தந்திருக்கிறார் ஆசிரியர் சுதாராஜ். மொத்தக் கதைகளையும் இணைக்கும் மையச் சுடராக உயிர்கசிவு என்னும் சொற்றொடர் கதைகளினுள் ஊடுருவிப் பாய்ந்திருக்கிறது. ஆசிரியர் சுதாராஜ் அவர்களையும் நூலை வெளியிடும் தமிழகத்தின் ஞானரதம் நியூ செஞ்சுரி புத்தக நிறுவனத்தையும் மனமாரப் பாராட்டுகிறேன்.
•This e-mail address is being protected from spambots. You need JavaScript enabled to view it•
•<• •Prev• | •Next• •>• |
---|