ஆய்வெழுத்தின் வரையறை மற்றும் வடிவு ஒழுங்கினைக் குலைத்து தேடலைத் தூண்டும் முனைப்புடன் வெளிவந்திருப்பதுதான் “உள்ளும் வெளியும்” கொண்டிருக்கும் தனித்துவமாகிறது. புலம்பெயர் இலக்கியம் குறித்தான உரையாடலில் தவிர்த்துவிடமுடியாமல் நமக்குமுன் தோன்றுவது குணேஸ்வரனின் விம்பம்தான். அந்தளவிற்கு தாடனம் வந்துவிட்டது அவருக்கு. எந்த வகைப்பாட்டிலும் அவரால் தேய்ந்தெழுதமுடிகிறது. எனது வாசிப்பனுபவத்தில் குறிப்பிடுவதானால் அவர் தன்னையோர் ஆய்வாளனாக முன்னிலைப்படுத்தாமல் வாசகனாகவே தொடர்ந்தும் முன்னிலைப்படுத்தி வருகிறார். உள்ளும் வெளியும் பிரதியில் நேர்ந்திருப்பதுமிதுதான். உள்ளடக்க ரீதியில் வகைப்படுத்தினால் நான்கு உள்ளும் ஐந்து வெளியுமாக ஒன்பது கட்டுரைகள் இடம்பெற்றுள்ளன. இதிலும் இரு கட்டுரைகள் ஆய்வு நோக்கற்றவை. எவ்வாறாயினும் எல்லாக் கட்டுரைகளுமே பொதுநிலைப்பட்ட வாசிப்புக்கேற்றதாகவே எழுதப்பட்டுள்ளன. ஒவ்வொரு பக்கத்திலும் குணேஸ்வரனின் மெய்யான ஈடுபாட்டையும் அர்ப்பணிப்பையும் உணர முடிகிறது. ஓவ்வொரு கட்டுரையையும் ஓர் ஆய்வாக மட்டும் அணுகாமல் தனது வாசிப்பனுபவத்தில் கிளர்ந்த பரவசத்தையும் திளைப்பையும் வாசகனிடத்தில் தொற்றவைத்துவிடும் முனைப்புடனும் அணுகுகிறார். ஓர் எளிமையானதும் நுட்பமானதுமான புனைவுத் தன்மை கொண்ட மொழியைக் கையாள்கிறார். இம்மொழியானது வாசகனை முழு ஈடுபாட்டுடன் அணுகச் செய்வதில் பெரும்பாங்காற்றுகிறது என்பதுடன் புதிய தளங்களுக்கும் இட்டுச் செல்கிறது.
இங்கே முக்கியமாகக் குறிப்பிடவேண்டியது ஆதவனின் ‘மண்மனம்’ நாவல் ஒரு பார்வை - இதுவரை வெறும் மேலோட்டமான தகவலாகத் தெரிந்திருந்த மண்மனம் என்ற நாவல் பற்றிய இக்கட்டுரையும் உள்ளடக்கமாக வரும் நாவலின் பக்க எடுத்துக்காட்டுக்களும் முக்கியமானவை. இன்றைக்கு நவீன புலம்பெயர் இலக்கிய வெளியில் அ. முத்துலிங்கம், ஷோபாசக்தி, கலாமோகன், பார்த்தீபன், சக்கரவர்த்தி போன்றோர் தவிர்க்கவியலாத முக்கியத்துவமுடையோராகிவிட்டனர். இவர்களையெல்லாம் ஈழத்தில் முறையாக அறிமுகம் செய்து வைத்து வாசிக்கத் தூண்டியவர்களுள் குணேஸ்வரனுக்கு முக்கிய பங்கிருப்பதை இங்கே குறிப்பிட்டாக வேண்டும். இதேபோல் அம்;மா, எக்ஸில், உயிர்நிழல், தூண்டில், கூர் எனப் பெரும்பாலான புலம்பெயர் சிற்றிதழ்களை எமக்குப் பரிச்சயப்படுத்தியவரும் இவர் என்பது கவனிப்புக்குரியது.
பொதுவாக வாசகனை இருவகைப்படுத்தலாம். ஓன்று தூண்டல் அவசியமற்ற வாசகன். இரண்டாவது தூண்டல் அவசியமான வாசகன். தூண்டல் அவசியமற்ற வாசகன் இயல்பாகவே எவரது தூண்டுதலுமின்றித் தேடலில் ஈடுபட்டு வாசிப்பவன். தூண்டல் அவசியமான வாசகன் எவராவது தூண்டிக் கொண்டிருந்தால் மட்டுமே தேடலில் ஈடுபட்டு வாசிப்பவன். இந்தவகை வாசகனைத் தூண்டுவதற்கு ஏதுவாயமைவதுதான் புனைவுசாராத ஆய்வு நிலைப்பட்ட பிரதியாகும். இந்த வகையில் குணேஸ்வரனின் உள்ளும் வெளியும் முக்கியத்துவம் பெறுமொன்றாகும்.
“ஈழத்து இலக்கியமும் இரசனையும் - நாவல்”, “அண்மைக்கால இலங்கைப் படைப்புக்களில் எஸ். ஏ உதயனின் நாவல்கள்” எனுமிரு கட்டுரைகளும் நன்கு பகுப்பாய்வு செய்யப்பட்டு ஆரம்பநிலை வாசகனுக்கு ஏற்றவிதத்தில் மிக எளிமையாக வரையப்பட்டுள்ளன. புனைவியல்பாங்கான மொழிப்பிரயோகத்திற்கான சாத்தியம் குறைவாக உள்ளபோதிலும் அதை இயன்றளவுக்குச் சாத்தியமாக்கியெழுதியுள்ளமை குணேஸ்வரனைப் பிற ஆய்வாளர்களின் அணுகுமுறைகளிலிருந்து வேறுபடுத்தித் தனித்துவமுடையவராக எடுத்துக்காட்டப் போதுமானது.
‘கூடாரநிழல்’ கவிதைத் தொகுதி குறித்தும் “உயிரின் வாசம் - பெயரிடப்படாத நட்சத்திரங்கள்” கவிதைத் தொகுதி குறித்தும் எழுதப்பட்டுள்ள இரு கட்டுரைகளும் ஆய்வெழுத்துக்களல்லவென்றபோதிலும் துயரம், வலி, வேதனையைக் கவியச்செய்யும் விதத்தில் உணர்வு தோய்ந்து எழுதப்பட்டுள்ளன.
அ. முத்துலிங்கம், ஷோபாசக்தி, ஆதவன் முதலானோரின் நாவல்ககளிலிருந்து உயிர்த்துடிப்பான பக்கங்களைத் தேர்வுசெய்து இணைத்துள்ள விதம் வெகு நேர்த்தியானதென்பதும் குறிப்பிடத்தக்கது.
“ஈழத்தமிழர் புலம்பெயர்ந்துள்ள நாடுகளில் தமிழ்க்கல்வி” செம்மையான எதிர்வுகூறலோடும் முறையான வகைப்பாட்டுடனும் நோக்கப்பட்டிருப்பது அதன் இயங்குதிசைக்கு வலுச்சேர்த்துள்ளது.
பொதுவில் ஆய்வெழுத்துக்கும் ஆரம்பநிலை வாசகனுக்குமிடையில் ஓர் இடைவெளியிருக்கும். உள்ளும் வெளியும் அந்த இடைவெளியை நீக்கியுள்ளது. இந்த நீக்கம் ஓர் ஆய்வாளனாக மட்டுமன்றி ஒரு படைப்பாளியாகவும் குணேஸ்வரன் அடைந்துள்ள வெற்றி என்றே சொல்லவேண்டும். இந்நூலின் உள்ளடக்கத்திற்கு ஒத்திசைவாக அமையும் கைலாசநாதனின் முகப்போவியமும் குறிப்பிடத்தக்கதொன்று.
'பதிவுகள்' இதழுக்கு அனுப்பியவர்: சு.குணேஸ்வரன் •This e-mail address is being protected from spambots. You need JavaScript enabled to view it•
•<• •Prev• | •Next• •>• |
---|