சில உறவுகள், சந்திப்புகள், நிகழ்வுகள் எப்படியெல்லாம் நேர்ந்து விடுகின்றன என்று பின்னர் நினைவுக்கு வரும்போது எண்ணிப் பார்த்தால் ஆச்சரியமாக இருக்கிறது. பின்னர் என்று சொன்னேன். அதுவும் இரண்டு தலைமுறைகளுக்குப் பின் எண்ணிப்பார்க்க சந்தர்ப்பங்கள் நிகழ்ந்தாலோ, வியப்புதான். இரண்டு நாட்களாக இப்படித்தான் மனம் ஒரு சுழலுக்குள் ஆட்பட்டு சலித்து வருகிறது. அது எந்த நி்கழ்வு பற்றி, யாரைப் பற்றி என்பதைப் பின்னர் சொல்கிறேன். இந்த சமயத்திய சந்தர்ப்பத்தில், இப்போதே சொல்லிவிட்டால், ஏதும் சொல்ல இருப்பவர்கள் எல்லாம் தனக்குத் தெரிந்ததைச் சொல்வதை ஒரு வழக்கமாகவோ, கடமையாற்றலாகவோ சொல்வதாக வாசிப்பவர் களுக்குத் தோன்றிவிடும். எனக்கு அந்த தகுதி இல்லாததால், என் விஷயத்தில் அப்படி அல்ல இது. இதில் என் சுபாவமும், அன்றைய என் கோபமும், அன்று சற்றுப் பொறுமை காத்திருந்தால் நன்றாக இருந்திருக்குமே என்றும் தோன்றினாலும், இதன் விளைவு இப்படி இருக்கும் என்று யாருக்குத் தெரிந்திருக்கும்? என்றும், ஒரு வேளை என் எதிர்வினை வேறு எப்படியாக இருந்திருக்கக் கூடும், நான் நானாகத் தானே இருந்திருக்க முடியும் என்றும் தோன்றுகிறது. மனம் இப்படியெல்லாம் சலனிப்பதையும் இப்போது தவிர்க்க முடியாது தான். ஆனாலும் என் மனத்தில் கொஞ்சம் வருத்தம் இருந்தது தான். லாபிரிந்த் என்பார்களே அப்படித்தான். இது ஒன்றும் அப்படி எண்ணற்ற சிக்கலான பாதைகள் கொண்டதல்ல. ஆனால் இது எங்கு இட்டுச் செல்லும் என்று தெரியாத இடத்திற்கு இட்டுச் சென்றது அதிக சிக்கல் இல்லாமல்.
எனக்கும் க.நா.சுக்கும் அடிக்கடி சந்தித்துக்கொள்ள் இருந்த இடங்கள் தில்லியின் மண்டி ஹவுஸைச் சுற்றியிருந்த இடங்கள் தான். சேர்ந்தே போவோம். அல்லது அங்கு போய் எதிர்பாராது சந்திப்புகள் நிகழும். அப்படித்தான் க.நா.சு போன்று மலையாளத்தில், இளம் எழுத்தாளர்கள், ஒவியர்கள், கவிஞர்கள் எல்லாம் வெகுவாக மதிக்கும் மரியாதை செய்யும் எழுத்தாளர் எம். கோவிந்தன். எம்.என். ராயைத் தன் அரசியல் குருவாகக் கொண்டவர். எனக்கு க.நா.சு.வோடான நட்பில் அறிமுகமானார். பெங்காளி மார்க்கெட்டில் வழக்கமாகச் செல்லும் சிற்றுண்டிக் கடையொன்றில்,. க.நா.சு. சாஹித்ய அகாடமி செயலாளர் ப்ரபாகர் மாச்வே பின்னர் மூன்றாவதாக நான் எல்லோரும் டீ சாப்பிட்டுக்கொண்டிருக்கும் போது எம். கோவிந்தனும் வந்து சேர்ந்து கொண்டார். அங்கே அகாடமியில் இங்கே போயிருப்பதாகச் சொன்னார்கள்” என்று சொல்லிக்கொண்டே வந்தார் கோவிந்தன். எவ்வித அகாடமி விருதுகளோ சிறப்புகளோ அற்ற க.நா.சு. எம். கோவிந்தன் போன்றவர்களுக்கு மாச்வேயின் வட்டத்தில் ஒரு தனி நெருக்கமான இடம் உண்டு. ஆகவே அந்த கூட்டத்தில் எனக்கும் ஒரு சிறிய இடம் வழங்கப் பட்டிருந்தது. அகிலனுக்கு ஞானபீடப் பரிசு வழங்கப்பட்ட விக்யான் பவனில் உள்ளே நுழைந்ததும் வாசலில் காத்திருந்த மாச்வேக்கு வணக்கம் சொன்னேன். “இதில் நாங்க ஒன்றும் செய்வதற்கில்லை. எல்லாம் உங்கள் ஆட்களின் சிபாரிசுதான்” என்று தான் அவர் சம்பாஷணையை ஆரம்பித்தார், ஏதோ நான். “ஏன் இப்படி?” என்று கேள்வி கேட்டது போலவும் அதற்கு அவர் சமாதானம் சொல்வது போலவும். அத்தகைய மனம் திறந்த பேச்சுக்கும் சொல்லாமலேயே ஒரு புரிதலுக்கும் அங்கு இடம் இருந்தது
.
பெங்காளி மார்க்கெட் சிற்றுண்டிக் கடையில் தான் கோவிந்தனை எனக்கு க.நா.சு. அறிமுகம் செய்து வைத்தார். அறுபதுகளின் கடைசி வருடம் ஒன்றில். பின்னர் கோவிந்தன், இளம் மலையாள எழுத்தாளர்களுக்கெல்லாம் பீஷ்மர் மாதிரியான குரு ஸ்தானத்தில் இருந்தவர் என்று தெரிய வந்தது. க.நா.சு. அறிமுகம் என்ற சிறப்பினாலோ என்னவோ, கோவிந்தன் என்னிடம் கொஞ்சம் நெருக்கமாகவே பழகினார். மனம் திறந்தே பேசிக்கொண்டோம். பின்னாட்களில் கோவிந்தன் மலையாளம் மட்டுமல்ல, அன்றைய இளம் தமிழ் எழுத்தாளர்களிடமும் அதே நெருக்கம் கொண்டிருந்தார் என்பதும் தெரிய வந்தது. குறிப்பாக கி.அ. சச்சிதானந்தத்தின் மூலம் தான் அது நிகழ்ந்தது என்றும் தெரிந்தது. அது பின்னர்.
தில்லியில் கோவிந்தனோடு எங்கள் சந்திப்பு அவர் தில்லி வரும்போதெல்லாம் நிகழ்ந்தது என்று சொல்ல வேண்டும். அடுத்த ஒன்றிரண்டு சந்திப்புகளில் அவர் என்னை அவர் அவ்வப்போது பிரசுரித்துவரும் சமீக்ஷா பத்திரிகைக்கு எழுதும்படி கேட்பார். அப்போது தான் மௌனி கதைகள் எல்லாம் திரட்டப்பட்டு, தர்மூ சிவராமு க.நா.சு. இருவரின் முன்னுரையோடு வெளிவந்து ஒரு சிறிய இலக்கிய வட்டத்துள் ஒரு பரபரப்பை உருவாக்கியிருந்தது. அதற்கே மௌனி வழிபாடு என்று பெயர் சூட்டப்பட்டு எதிர்ப்பு கோஷங்கள் கிளம்பின, இலங்கையிலும் அது சார்ந்த தமிழ் வட்டாரங்களிலும். இது தெரிந்து தானோ என்னவோ கோவிந்தன் என்னை மௌனி பற்றி ஒரு கட்டுரையும் அத்தோடு மௌனி கதை ஒன்றின் மொழி பெயர்ப்பையும் சமீக்ஷாவுக்கு எழுதித் தரச்சொன்னார். எனக்கு வேறு என்ன வேண்டும்?. சந்தோஷமாக இருந்தது. எழுதிக் கொடுத்தேன். மௌனியின் “பிரக்ஞை வெளியில்” என்ற கதையின் ஆங்கில மொழிபெயர்ப்போடு (In the Expanse of Consciousness) மௌனி பற்றிய Mowni and his world of Articulated Silence என்ற என் கட்டுரையும் Sameeksha Special Number on “Accent on the Young” 1971 –ல் பிரசுரமானது. (இந்தக் கட்டுரை தமிழில் “மௌனி: மௌன வெளிப்பாடு என்ற தலைப்பில் காவ்யா வெளியிட்ட சில இலக்கிய ஆளுமைகள் (தொகுப்பில் சேர்க்கப்பட்டுள்ளது ப. 129-154) அந்தச் சிறப்பிதழில், தமிழிலிருந்து சச்சிதானந்தம், சி.மணி, யின் எழுத்துக்களும் பிரசுராமாயிருந்தன. அப்போதே தெரிய வந்த ஆனந்த் என்னும் இளம் எழுத்தாளரின் ஆட்கூட்டம் என்ற நாவலின் சில பகுதிகள் அதில் பிரசுரமாகியிருந்தது. இன்னம் சிலர் உண்டு. இப்போது அவர்கள் என் நினைவுக்கு வரவில்லை. பொதுவாக அதில் தமிழின் இளம் எழுத்தாளர்கள், கவிஞர்கள், மலையாள ஓவியர்கள், எழுத்தாளர்கள் நிறைந்திருந்தனர். என் நினைவில் சிறுவயதில் இறந்துவிட்ட பத்மினியின் சித்திரங்கள் அதில் இருந்தன.
இதற்கு அடுத்தும் வந்த சமீக்ஷா இதழ்களில் நான் தமிழின் சிறுபத்திரிகைகள் பற்றியும், கோவிந்தனே கொடுத்து மதிப்புரை எழுதச் சொன்ன கஷ்மீரி இலக்கியம் பற்றிய ஒரு புத்தகம் பற்றியும் எழுதியிருக்கிறேன். கோவிந்தனின் சமீக்ஷா இதழ்கள் ஒரு பரபரப்பையும் சலனத்தையும் எழுப்பும். அத்தோடு சரி.
ஒரு பத்திரிகை எப்போது ஒரு சலசலப்பை எழுப்பத் தவறுகிறதோ அப்போதே அந்தப் பத்திரிகை தன் ஜீவித நியாயத்தை இழந்துவிட்டது என்று தெரிந்துகொள்ளவேண்டும். பின்னும், அதை தொடர்ந்து நடத்துவதில் அர்த்தமில்லை என்று நம்புகிறவர் கோவிந்தன் என்று க.நா.சு. சொல்லி நினைவு இருக்கிறது. க.நா.சுவும் இதே பார்வையைக் கொண்டவர் தான் என்பதை அவர் தான் தொடங்கிய எந்த பத்திரிகையையும் இரண்டு மூன்று வருடங்களுக்கு மேல் தொடர்ந்தவர் இல்லை என்பதிலிருந்து தெரிந்து கொள்ளலாம்.
இதெல்லாம் போகட்டும். இப்போது கவனத்தில் இருக்க வேண்டியது கோவிந்தன் வெளியிட்ட சிறப்பு இதழ், மௌனி பற்றிய கட்டுரை கொண்டது
.
சமீக்ஷா வெளிவந்த கொஞ்ச நாட்களுக்குப் பிறகு, Illustrated Weekly of Inndia விலிருந்து எனக்கு ஒரு கடிதம் முதலில் சமீக்ஷாவுக்குப் போய் அங்கிருந்து என் விலாசமிட்டு எனக்கு வந்து சேர்ந்தது. வீக்லியின் ஆசிரியர் குஷ்வந்த் சிங்கிடமிருந்து. சமீபத்தில் தமிழுக்கான சாஹித்ய அகாடமி விருது பெற்றுள்ள பாரதி தாசன் பற்றி வீக்லிக்கு எழுதித் தருமாறும் இன்ன தேதிக்குள் அனுப்பி வைக்கும்படியும் கடிதத்தில் எழுதியிருந்தது. விருது 1969- வருஷத்துக்கான சிறந்த இலக்கிய படைப்புக்கு. பாரதி தாசன் 1964-ல் காலமாகி ஐந்து வருடங்களாகி விட்டிருந்தன அப்போது. ஆயினும் வழக்கம் போல, 1969-ல் சாஹித்ய அகாடமியின் ஆலோசனைக் குழுவுக்கு அப்போது தான் பாரதி தாஸனுக்கு பரிசு கொடுக்க வேண்டும் என்று தோன்றியிருக்கிறது. அதற்கு வசதியாக, பாரதி தாஸனின் பிசிராந்தையார் என்னும் நாடகம் ஒன்று விருது கொடுக்க பாரதி தாசனைத் தகுதிப்படுத்தும் கால கட்டத்துக்குள் வெளிவந்திருந்தது. அது அவர் மறைவுக்குப் பிறகு வெளி வந்திருக்க பிசிராந்தையார் நாடகத்துக்கு அந்த பரிசைக் கொடுத்து, தனக்குத் தெரிந்ததும் தம் சௌகரியத்துக்கு உருவாக்கிக் கொண்டதுமானதுமான ஒரு மரபை மறுபடியும் ஸ்திரப்படுத்திக்கொண்டது அந்த குழு.
அது எப்படியானால் என்ன, இந்தியா முழுதும் தெரிந்த ஒரு பிரபல ஆங்கிலப் பத்திரிகையில் பாரதி தாஸனைப் பற்றியும் சாஹித்ய அகாடமி பற்றியும் நமது கருத்தைச் சொல்ல இடம் கிடைக்கிறதே. கோவிந்தனுடன் அடுத்து தில்லியில் சந்திப்பு நிகழ்ந்தபோது அவர் சொன்னார், “இது ஒரு நல்ல நிகழ்வு. சமீக்ஷாவுக்குள்ள செல்வாக்கை இது நிரூபிக்கிறது. சமீக்ஷாவிலிருந்து தெரியவரும் எழுத்தாளர்களை வீக்லி மதித்து எழுதச் சொல்கிறது. இன்னும் நிறைய பேருக்கு சமீக்ஷா மூலம் இந்த அறிமுகம் கிடைத்துள்ளது நல்லது தானே என்றார்.
எனக்கும் சந்தோஷம் தான். எழுதினேன். ஆரம்பத்தில் பாரதிதாசனின் கவித்வ முயற்சிகள், அவரது தமிழ்ப் புலமை, பாரதியின் செல்வாக்கு எனத் தொடங்கிய அவரது பயணம் திராவிட இயக்கத்தின் செல்வாக்கில் பின்னர் அவர் கடைசியில் அவர் திராவிட இயக்க பிரசாரகராகவே மாறி கவிஞராகவே வாழ முடியாது போய்விட்டது பற்றியும் கடைசியில் சாஹித்ய அகாடமி அவரது நாடகமேயில்லாத ஒரு நாடக நூலுக்கு பரிசு கொடுத்து கவிஞராக சிறப்பிக்கப் படும் வேடிக்கை பற்றி எழுதி, ஆனாலும், கவிஞராக மலர்ந்திருக்க வேண்டியவர் ஒருவருக்கு பரிசு கிடைத்துள்ளது சந்தோஷம் தரும் விஷயம் தான்.
கோவைப் பழமும் சிவக்கும்,
கோதை இதழும் சிவக்கும்
பச்சைக் கிளியும் கொஞ்சும்
பாவை உதடும் கொஞ்சும்
…………….
…………
நீலவான் ஆடைக்குள் உடல் மறைத்து நிலாவென்று காட்டுகிறாய் ஒளிமுகத்தை,
கோலமுழுதும் காட்டி விட்டால்………..
என்று அவ்வப்போது எழுதுகிறவருக்கு கவித்வம் இல்லயென்று சொல்லிவிட முடியுமா என்ன?
இதுகாறும், எந்த சிறப்புமே இல்லாதவருக்கு பரிசு போய்க்கொண்டிருந்த மரபில் ஏதோ தன் தமிழ்ப் புலமையால் ஆரம்ப கட்டத்திலாவது கொஞ்சம் கவித்வ வீச்சு காட்டியவருக்கு கிடைத்துள்ளதே.
கோவிந்தன் சொன்னது போலவே, மற்ற மொழிகளில் சாஹித்ய அகாடமி விருது பெற்றவர்கள் பற்றிய கட்டுரைகள் ஒரு வீக்லி இதழில் வெளிவந்தது. பத்து பன்னிரண்டு மொழிகள் பற்றியது இருக்கும். ஆனால் தமிழ் விருது பற்றி நான் எழுதி அனுப்பியது வரவில்லை. வந்துள்ளது, பத்து பன்னிரண்டு தானே இன்னம் மிகுந்த மொழிகள் இருக்கின்றனவே. எல்லாவற்றையும் ஒரே இதழில் போட முடியவில்லை போலும். அடுத்த இதழில் வரலாம். என்று காத்திருந்தேன். அடுத்த இதழிலும் வரவில்லை. அதற்கடுத்தும் வரவில்லை. சாஹித்ய அகாடமி பரிசு பெற்றவர்கள் பற்றிய கட்டுரைகள் இனி வருவதற்கில்லை என்று தெரிந்தது. பின்னரும் கொஞ்ச காலம் காத்திருந்து இனி வருவதற்கில்லை என்று நிச்சயமானதும், நான் எழுதியது பிரசுரத்துக்கு மறுக்கப் பட்டுள்ளது ஏன்? விருது பெற்றவரைப் பற்றி புகழ்ந்து எழுதாததா? என்றெல்லாம் எண்ணத்தோன்றியது.
எனக்கு மிகுந்த கோபம். கேட்டுப் பெற்றதைப் போடவில்லை, திருப்பி அனுப்பவும் இல்லை, போடாததற்குக் காரணமும் சொல்லவில்லை என்றால்…..? தமிழில் தான் இந்த நடைமுறை என்றால், இங்குமா?
கடைசியில் குஷ்வந்த் சிங்குக்கு ஒரு கடிதம் எழுதினேன். இந்தக் கடிதங்கள் வெகுகாலம் என்னிடம் இருந்தன. ஆனால் இந்த நீண்ட காலத்தில், அடிக்கடி நிகழ்ந்த இடமாற்றத்தில் தொலைந்துவிட்டன.
எழுதியது முழுதும் நினைவில் இல்லை. கிட்டத் தட்ட அதன் சாராம்சத்தை நினைவிலிருந்து எழுதலாம். இதோ:
“நீங்கள் என்னிடம் கட்டுரை கேட்டு எழுதியதால் தான் நான் எழுதினேன். வீக்லி அலுவலக வாசலில் நான் நிற்கவில்லை. என்னை நீங்கள் எழுதச் சொன்னது, சமீக்ஷாவில் என் எழுத்தைப் பார்த்து என்னைப் பற்றி ஒரு தீர்மானத்துக்கு வந்து, தான் நீங்கள் என்னை வீக்லிக்கு எழுதக் கேட்டிருக்க வேண்டும். அப்படி இருக்க, மற்ற எல்லோரின் எழுத்துக்களையும் பிரசுரித்துவிட்டு என் கட்டுரையை மாத்திரம் ஒதுக்கிய காரணம் என்ன? ஏதும் காரணங்கள் இருப்பின் அது எனக்குச் சொல்லப் படவும் இல்லை. மறுத்தது பற்றி எனக்குத் தகவலும் இல்லை. ஸாகித்ய அகாடமி விருதுகள் பற்றிய கட்டுரைகள் கொண்ட இதழ் பிரசுரமாகி முடிந்தும் வெகு நாட்கள் ஆகிவிட்டன. இவ்வளவு நாட்கள் காத்திருந்தும் ஒரு செய்தியும் உங்களிடமிருந்து வரவில்லை.
ஒரு பத்திரிகை ஆசிரியத்வத்தின் தர்மத்திலிருந்து நீங்கள் தவறியிருக்கிறீர்கள். அது போக, கட்டுரை கேட்டு பின் அதை உங்கள் இஷ்டத்திற்கு உதறி எறிந்திருப்பது வாக்குத் தவறிய காரியமேயாகும். ஒரு சீக்கியர் தன் வாக்குத் தவறினால் அது எவ்வளவு பெரிய குற்றம் தெரியுமல்லவா உங்களுக்கு?. அகாலி தள தலைவரேயான மாஸ்டர் தாரா சிங் கூட வாக்குத் தவறியதற்கு குருத்வாராவில் பாத்திரங்கள் கழுவும் தண்டனை பெற்றது மறந்து விட்டதா, உங்களுக்கு? உலகம் முழுதும் பிரசித்தி பெற்ற. சீக்கிய வரலாறு எழுதிய உங்களுக்கு சீக்கியர்கள் தங்கள் வாக்கைக் காப்பாற்ற எவ்வளவு தியாகங்கள் செய்திருக்கிறார்கள் என்று நான் சொல்லவேண்டுமா?
இப்போதாகிலும் பதில் அளிப்பீர்கள் என்று நம்புகிறேன். இந்த வாய்ப்பையும் நீங்கள் நழுவ விட்டால், நீங்கள் வாக்குத் தவறி நடந்துள்ளது பற்றியும் உங்கள் அலட்சிய மனோபாவம் பற்றியும் அம்ருத்சரில் இருக்கும் பஞ்ச் ப்யாரேக்களிடம் புகார் செய்வதைத் தவிர எனக்கு வேறு வழி இல்லை. நீங்களும் அம்ரித்சர் பொற்கோயிலில் பாத்திரங்கள் கழுவத் தயாராகுங்கள்”.
கடிதம் எழுதி அனுப்பிய பிறகு தான் மனம் ஒருவாறாக சமாதானம் அடைந்தது. இதற்கும் பதில் வரும் என்று நான் எதிர்பார்க்கவில்லை. அவருக்கு முன் இருந்த எந்த ஆசிரியரும் சாதிக்காத வெற்றியை குஷ்வந்த் சிங் வீக்லிக்கு சாதித்துக் கொடுத்தவர். ஆகவே, அனேகமாக, குஷ்வந்த் சிங் இதை முழுக்கக் கூட படிக்காமல் குப்பைக் கூடையில் கசக்கிப் போடக் கூடும். ஆனால் இதையெல்லாம் பார்த்துக்கொண்டு அமைதியாக இருக்க என்னால் முடியவில்லை. இது மாதிரியான நிகழ்வுகள் எனக்கு நிறையவே தமிழ் இலக்கிய சூழலில் நேர இருந்தன. என்னால் முடிந்த எதிர்ப்பை முடிந்த அளவில் காட்டுவதைத் தவிர வேறு என்ன செய்ய முடியும்?
ஆனால் ஆச்சரியம் உடனே எனக்கு குஷ்வந்த் சிங் பதில் அளித்திருந்தார்: மூன்றே வரிகள் தான் அதில் இருந்தன:
“உங்கள் கட்டுரை சீக்கிரம் அடுத்து வரும் ஒன்றிரண்டு வாரங்களுக்குள் பிரசுரமாகும்’
அவ்வளவே தான். முதலில் மற்றவையோடு அது பிரசுரமாகாததன் காரணமும் தெரியவில்லை. அதை யூகிக்கவும் முடியவில்லை. ஆனால் உடன் இரண்டு வாரங்களுக்குள் பாரதி தாஸன் பற்றிய கட்டுரை வீக்லியில் (Illustrated Weekly of India, Jan 9, 1972) பிரசுரமானது. முழுவதும் எழுதிய படியே. மற்றவற்றோடு, பதினைந்தோடு பதினாறாக வராமல், தனித்து வந்ததும் கூட எனக்கு மகிழ்ச்சியாக இருந்தது. அது வெளிவந்த சமயம் நான் சென்னையில் இருந்திருக்க வேண்டும்,. கசடதபறவினர் கூடும் ஞானக் கூத்தன் அறையில். ஏனெனில், “வரும்னு சொன்னீங்களே, வரலையேன்னு பார்த்தேன். இப்போத்தான் வந்திருக்கு. நல்லா எழுதியிருக்கீங்க. போட்டுட்டாங்களே” என்று ஞானக் கூத்தன் சொல்லிக் கேட்ட நினைவு.
பின்னர் எனக்கு இன்னொரு செய்தியும் சொல்லப்பட்டது. ஆங்கிலத்தில் பாரதி தாஸன் பற்றி வீக்லி போன்ற ஒரு பிரபல பத்திரிகையில் அப்படி ஒரு விமர்சனம் வந்தது திமுக வினரைக் கோபப் படுத்தியிருக்க வேண்டும். முரசொலி மாறன் அதற்கு ஒரு காட்டமான பதில் தந்திருந்தார் என்று சொன்னார்கள். வீக்லியில் அது மாதிரி எதுவும் வந்ததாக எனக்குத் தெரியவில்லை. திமுகவினரின் கட்சிப் பத்திரிகை ஒன்றில் அது. வந்திருக்க வேண்டும். அது ஒன்றில் தான் அவர்கள் விரும்பும் காட்டத்தில், சொற்களில் தாக்குவதும் பாரதி தாசனை மதிக்காத இந்த பார்ப்பன கும்பலுக்கு சவுக்கடி கொடுப்பதும் சாத்தியம்.
பாரதி தாசன் பற்றி எழுதிய அந்த கட்டுரை எனி இந்தியன் வெளியிட்டுள்ள இன்னும் சில ஆளுமைகள் தொகுப்பில் தமிழ் மொழிபெயர்ப்பில் சேர்க்கப்பட்டுள்ளது. (ப. 9 – 17)
இதில் எனக்கு வெற்றிப் பெருமிதம் ஏதும் இருக்கவில்லை.எழுதியது வீணாகாது வெளிவந்ததே. அத்தோடு கொஞ்சம் காசும் வந்ததே.
ஆனால் குஷ்வந்த் சிங் பற்றிய என் அபிப்ராயங்கள் அப்போதே அல்ல, சில வருஷங்கள் பின்னாலிருந்து மாறத் தொடங்கின. வீக்லி என் ஆரம்ப வருஷங்களில், ஹிராகுட்டிலிருந்த 1950 களிலிருந்து, சி.ஆர். மண்டி என்பவர் ஆசிரியப் பொறுப்பில் இருந்த காலத்திலிருந்து, பிடித்த பரிச்சயமான, தவறாது வாரா வாரம் காசு கொடுத்து வாங்கிய பத்திரிகை தான். காரணம் அக்காலங்களில் அது எனக்கு இந்தியாவின் பிரபல புகழ் பெற்ற முன்னணி ஓவியர்கள் படைப்புக்களை அறிமுகப்படுத்தியது. பின்னர் ஏ.எஸ் ராமன் என்பவர் ஆசிரியப் பொறுப்பு ஏற்றதிலிருந்து என் பார்வையில் அதன் தரம் மிக உயர்ந்து விட்டது. ஹெர்மன் ஹெஸ்ஸியையும் ஆர்.கே. நாராயணனையும் அதன் பக்ககங்களில் முழுதுமாகப் படிக்கலாம். இந்தியாவின் சிறந்த ஓவியர்கள், நடன கலைஞர்கள், ஹிந்துஸ்தானி, கர்நாடக சங்கீத கலைஞர்கள் பற்றியெல்லாம், அது சிறப்பாக தன் பக்கங்களில் விரிவாகப் பேசியது. அக்காலங்களில் வீக்லியை ஒரு collectors’ item என்று சொல்ல வேண்டும். ஆனால் இந்த தரம் பற்றிய சமாசாரங்கள் எல்லாம் விற்பனைக்கு உதவாத காரியங்கள். வெகு சீக்கிரம் ஏ.எஸ் ராமன் தூக்கப்பட்டு யார் யாரோ வந்தார்கள். அப்போது தான் ஆசிரியத்வம் என்கிற ஒரு சமாசாரம் இருக்கிறது. அதைப் பொறுத்துத் தான் ஒரு பத்திரிகை தன் குணமும் வண்ணமும பெறுகிறது என்று தெரிந்து கொண்டேன். அப்படி வந்து சேர்ந்த குஷ்வந்த் சிங் தான் அதை வெற்றிகரமான வியாபாரப் பொருளாக்கினார். மிக முக்கியமாக, அவரது சர்தார்ஜி ஜோக்ஸ், செக்ஸி சமாசாரங்கள், அவ்வப்போது தன்னையே கேலி செய்துகொள்ளுதல், மிக முக்கிய மாற்றமாக, அப்போதைய இந்தியாவின் அனேக துறைகளின் வளர்ச்சி பற்றி செய்திகளும் புகைப்படங்களும் நிறைய வரத் தொடங்கின. அவரது சர்தார்ஜி கேலிகளும், பாலியல் சாய்வும், நான் அப்போது என்னைச் சுற்றியிருந்த பஞ்சாபிகளின் இரைச்சலிட்டு, செக்ஸியாகப் பேசி, ஆபாசமாகத் திட்டிக் கொண்டு –
(இந்த ஆபாச வசைகள் பெண்கள் நிறைந்த பஞ்சாபிள் வீட்டினுள்ளும் தாராளமாக புழங்கும் என்பது நான் நேர்முக அனுபவத்தில் அறிந்தவன். முதல் அனுபவத்தில் தான் அதிர்ச்சி. பின்னர் பழகிப் போய்விட்டது) - வாழ்க்கையை அனுபவிப்பதாக கொண்ட குணத்தின் வெளிப்பாடு பெரிய அளவில் அச்சில் நடப்பதாக நினைத்தேன். ஏ.எஸ் ராமன் விலகிய காலத்திலிருந்தே வீக்லியை தவறாது படிப்பதை நிறுத்தி விட்டேன். குஷ்வந்த் சிங் வந்த பிறகு தமாஷுக்காக அவ்வப்போது பார்ப்பதோடு சரி.
ஆனால் வெகு சீக்கிரம் நாலைந்து வருடங்களுக்குள் அவரது வெளிப்படையான தைரியமும், கபடமற்ற எண்ணங்களும், மனதில் பட்டது எதையும் அதன் சாதக பாதகங்களைப் பற்றிச் சிறிதும் யோசிக்காது வெளிப்படுத்துவதும் என்னை மிகக் கவர்ந்தன. அவரிடம் எனக்கு மரியாதையும் மதிப்பும் ஏற்பட்டன. பெரிய செல்வந்தரான குடும்பத்தில் பிறந்தவர் தில்லி தலைநகரமாக நிர்மாணிக்கப்படும் கால கட்டத்தில் கட்டிட குத்தகைகாரராக சம்பாதித்தவர் அவருடைய தந்தை. குஷ்வந்த் சிங் அந்தச் செல்வத்தின் படாடோபம் சற்றும் இல்லாதவர். அவர் உடுத்தும் உடையும் பேச்சும் மிக இயல்பானதும், தேவைக்கு ஏற்ப, சாதாரணமானதும் பகட்டற்றதுமாக இருக்கும். இங்கிலாந்தில் என்ன செய்து கொண்டிருந்தீர்கள்? என்று கேட்டதற்கு, wine and women என்ற பதில் அவரைக் குடிகாரராக, பெண் காமுகனாகக் காட்டாது. வாழ்க்கையின் அழகுகளை ரசிக்கும், அனுபவிக்கும் இயல்பையே காட்டும். பெண்களின் அழகை, உடல் செழிப்பை அங்கங்களின் வாளிப்பை, ரசிப்பதாக வெளிப்படையாகச் சொல்லிக் கொள்பவரை பெண்கள் சூழந்து கொண்டு அட்டகாசமாகப் பேசிச் சிரித்து கபடமற்று பொழுதைக் கழிப்பதற்கு விரும்பியதாக சொல்லப் படுகிறது.
ஒரு முறை அக்காலத்திய முன்னணி நக்ஷத்திர நடிகை நர்கிஸ் இடமற்றுத்தவித்த போது, தன் இடத்தை அவர் கொடுக்க முன் வந்தார், ஒரு நிபந்தனையோடு. “நர்கிஸின் அன்றைய இரவு குஷ்வந்த் சிங்கின் படுக்கையில் கழிந்தது” என்று குஷ்வந்த்சிங்க் சொல்லிக்கொள்ள அனுமதி தரவேண்டும் என்றாராம். நர்கிஸ் அதைக் கேட்டு அடக்க முடியாது பலமாகச் சிரித்தாராம். குஷ்வந்த் சிங்கின் பலவீனங்களில் wine and women தவிர உருது, பாரசீக கவிதைகளும் பிரதானமாக இடம் பெறும் ரொம்ப சந்தோஷத்துடன் நண்பரை அழைத்தால், ”விஸ்கி தரப்படும். ஆனால் ஒரு நிபந்தனை, புத்தம் புதிதான செக்ஸி ஜோக்ஸ் சொல்ல வேண்டும்” என்பாராம்.
தன் கருத்துக்கள் எதுவும் பின்னால் தவறாகிப் போனதைக் கூட அவர் ஒத்துக்கொள்வதில் தயங்குவதில்லை. அரசியல் காரணங்களுக்காக பிந்தரன் வாலேயை ஒரு ராக்ஷஸனாக உருவாக்கியது இந்திரா காந்தி. பிந்தரன் வாலேயை பற்றி எதுவும் பேச எல்லோரும் பயந்து கொண்டிருந்த காலத்தில் இந்திரா காந்தி செய்வது தவறு என்று உரக்கச் சொன்னது குஷ்வந்த் சிங், பின்னர் பிந்தரன் வாலேயை ஒழிக்க அமிரித்சர் பொற்கோவிலுக்குள் இந்திய ரானுவத்தை அனுப்பியதும் தவறு என்று சொன்னதும் குஷ்வந்த் சிங்க். அவசரகால சட்டத்தை வெளிப்படையாக எதிர்த்ததும், காலிஸ்தான் இயக்கத்தை தொடக்கம் முதலே எதிர்த்ததும் குஷ்வந்த் சிங் தான். மற்றவர்கள் வாயைத் திறக்க பயந்து கொண்டிருந்த காலத்தில் தன் கருத்துக்களை உரக்க வெளிப்படுத்த அவர் தயங்கியதில்லை. தன் உயிருக்கே உலை வைத்துக்கொள்ளும் காரியம் அது.
இப்படி எத்தனை எழுத்தாளர்களை, பிரமுகர்களை, அரசியல் வாதிகளை நாம் காணமுடியும்? அவரது இரண்டு பாகங்கள் கொண்ட சீக்கியர் வரலாறு பல வருஷங்கள் உழைத்து, பல நாடுகள் சுற்றி, வாசகசாலைகள் சென்று முதல் கட்ட, முதல் தர தகவல்கள் சேகரித்து எழுதப் பட்டவை. அது வெளிவந்த பிறகு உலகம் முழுதும் சீக்கியர் பற்றிப் பேச அழைக்கப்பட்டவர். அவர் தன்னைப் பற்றி தன் மறைவுக்குப் பிறகு எழுதப்பட வேண்டிய எபிடாஃபை அவரே எழுதியது ஒரு க்ளாஸிக், அவரது ஆளுமையின் குணத்தைச் சொல்லும் என்று எனக்குத் தோன்றுகிறது. Outlook பத்திரிகையில் வந்தது. இருப்பினும் அதைத் திரும்பச் சொல்கிறேன்.
Here lies one who spared neither man or God,
Waste not your tears on him, he was a sod,
Writing nasty things he regarded as great fun,
Thank the Lord he is dead, this son of a gun.
குஷ்வந்த் சிங் தன் வாழ்க்கையை முழுதுமாக ரசித்து அனுபவித்து வாழ்ந்த மனிதன். உலகம் காண வெளிப்படையாக, எத்தகைய பூச்சும் அற்று, வாழ்ந்த மனிதன் யாருடைய எந்த குர்றத்தையும் பற்றி மூடி மறைவின்றி தெளிவாகப் பேசிய மனிதன். இத்தகைய மனிதனுக்கு கடவுள் தேவை இல்லை. அவன் நிச்சயமாக ஒரு sod இல்லை. இப்படிப் பட்ட மனிதர்களைப் பார்ப்பது மிக அரிதாகி வருகிறது. வேறு யாரோ ஏதோ சந்தர்ப்பத்தில் சொன்னது, தெய்வம் இந்த மாதிரி மனிதர்களைப் படைப்பதை நிறுத்தி வெகு காலம் ஆய்விட்டது.
•This e-mail address is being protected from spambots. You need JavaScript enabled to view it•
•<• •Prev• | •Next• •>• |
---|