தனக்குக் கொடுக்கப்பட்ட வாழ்வைப் பூரணமாக வாழ்ந்த பூரணி அம்மாள் தன் நூறாவது ஆண்டில் அடியெடுத்து வைத்தது கூட தெரியாது மறைந்து விட்டார்கள். அமைதியாக. 1913-ம் ஆண்டு தமிழ் நாட்டின் ஒரு பிராமண குடும்பத்தில் பிறந்த, ஒன்பது பேரில் ஒருவராகப் பிறந்த ஒரு பெண்ணின் வாழ்க்கை எப்படி இருந்திருக்கும்? ஆனால், இப்போது அவரைப் பற்றி எண்ணும் போது, தெரிந்த ஒரு சில தகவல்களோடு தெரியாதவற்றையும் சேர்த்துப் பார்க்கும் போது தன்னை மீறி, தன் சூழலை மீறி, தன் காலத்திய வாழ்க்கைக் கட்டுப்பாடுகளோடு வாழ்ந்தே அவற்றை மீறி தன்னை விகசித்துக்கொண்டு தன் இரண்டு தலமுறை சந்ததிகளுக்கும் வாழ்ந்து காட்டிய ஆதர்சமாக இருந்தவர் தன் நூறாவது ஆண்டு பிறந்த தினத்தில் மறைந்த செய்தி கேட்டு 40 ஆண்டுகளூக்கு முன், தற்செயலாக சற்று நேரம், ஒரு இரவுச் சாப்பாட்டு நேரம் கொடுத்த ஒரு தற்செயலான அறிமுகம் தொடர்ந்த சந்திப்பு என வளர்க்கப்படாவிட்டாலும் அடிக்கடி நினைவு படுத்தி வியந்து, மனதுக்குள் சந்தோஷப்படும் கணங்கள் வந்து சென்றனதான். அது ஒரு எதிர்பாராத சந்திப்பு, அறிமுகம். 1973 என்றுதான் நினைவு. அது அப்போது உருவாகி வந்த ஒரு இலக்கியச் சிறு பத்திரிகைச் சூழலில், உருவாகி வந்த சிறுபான்மை இலக்கியச் சூழலில், நான் அனேகமாக எல்லோருடைய வெறுப்புக்கும் ஆளாகியிருந்த நாட்கள் அவை. என் இயல்பில் எனக்கு மனதில் தோன்றியவற்றை தயக்கமில்லாது எழுதி சம்பாதித்துக்கொண்ட பகை நிறையவே. மனதில் பட்டதை எழுதாது வேறு என்ன எழுதுவதாம் என்ற சாதாரண பொது அறிவின்பால், தர்மத்தின்பால் பட்ட விஷயங்கள் அவை. தாக்கப்பட்டது ஒரு சிலரே என்றாலும் அவர்களுக்கு வேண்டியவர்களும் எனக்கு பகையானார்கள். ஏதோ ஒரு அரசியல் கட்சியின் செயல்பாடு போலத் தான் இருந்தது. ராஜதர்பாரில் ஒரு குழுவின் ஒருத்தரை ஏதும் சொல்லிவிட்டால் தர்பார் முழுதுமே மேலே விழுந்து புடுங்கும் இல்லையா? கடைசியில் அது ராஜத்வேஷமாக வேறு பிரசாரப்படுத்தப்பட்டது. நிறையவே எழுத்திலும் காதோடு காதாகப் பேச்சுப் பரவலிலும் எனக்கு எதிராக நிறைய பிரசாரம் நடந்தாலும், என் கருத்துக்கு மாற்றுக் கருத்து வைக்கப்படாமலேயே, தனி மனித உறவுகள் துண்டிக்கப்பட்டன. இன்னமும் என் கருத்துக்கள் அப்படியே தொடர்ந்தாலும், எனக்கு எதிரான பகைகள் கூர் அற்றுப் போனாலும் அவை தொடர்கின்றன தான், இன்னும் பரவலாகின்றனதான்.
எனக்கும் கொஞ்சம் சார்பாகப் பேசுகிறவர்கள் இடம் கொடுத்து கருத்து கேட்பவர்கள் இருப்பார்கள் தானே. இருந்தார்கள். அதில் ஒருவர் ஞானரதம் என்னும் ஒரு மாதப்பத்திரிகை நடத்திவந்த இப்ராஹீம். ஜெயகாந்தனின் அத்யந்த ரசிகர், பக்தர். நான் விடுமுறையில் வந்திருந்தவன். சில நாட்கள் சென்னையில் கழிக்க வந்திருந்தேன். அந்த பதினைந்து இருபது நாட்கள் நான் பழகியிராத நட்புகள், நிக்ழ்ச்சிகள், சம்பவங்கள் நிறைந்த நாட்கள். புதிய நட்புக்கள். இறுகி அறுந்து விழும் பிணைப்புகள். தளர்ந்து மெலிந்து விட்டு பிரியும் சினேகங்கள் இவை எல்லாவற்றிற்கும் மையமான இருந்தது இலக்கிய பகையும் ஜன்ம விரோதம் போன்ற புகைச்சலும். அந்த மாதிரியான புதிய நிகழ்வுகள் உறவுகள் என்பதில் இப்ராஹீமின் நட்பும் ஞானரத மேடையில் இடமும். இப்ராஹீமின் பத்திரிகைக்கு அதன் மூன்று விட்டு விட்டுத் தோன்றிய அவதாரங்களிலும் பெயர் ஞானரதம்தான். கண்ணன் சாரதியாக தேர் ஓட்டும் சித்திரம்தான் அதன் அடையாளம். இது 1970 களில். இன்று சாத்தியமில்லை. இப்ராஹீமுக்கு ஒரு ஃபட்வா பிறந்திருக்கும். மீறினால் இருக்குமிடம் தெரியாது போயிருப்பார். அன்று அவர் எனக்கு அவர் மிக உறுதுணையாக இருந்தார். அடையாறுவில் ஏதோ ஒரு மையின் ரோடின் ஓரத்தில் இருந்த ஒரு தன் வீட்டுக்கு என்னையும் சிவராமுவையும் அழைத்து காலை விருந்து அளித்தார். நிறைய இட்லி சாப்பிட்டோம். அப்போது நான் மௌபரீஸ் ரோடில் ஒரு உறவினர் வீட்டில் கொஞ்சநாளும், திருமலைப் பிள்ளை ரோடில் சாரங்கன் என்னும் ஓவியரின் வீட்டில் கொஞ்ச நாளுமாக இருந்தேன். சாரங்கன் வீட்டில் இருந்தது தனிமை வேண்டி. ஜான் ஆபிரஹாமின் அக்கிரஹாரத்தில் கழுதை படத்திற்கு ஸ்க்ரிப்ட் எழுத வேண்டி.
இப்ராஹீம் ஞானரதத்துக்கான ஒரு நேர்காணல் என்று நண்பர்கள் எல்லோரையும் சந்திக்கலாம், காந்தி மண்டப புல்வெளியில் என்றார். சந்தித்தோம். இப்ராஹீமையும் என்னையும் சேர்த்து சுமார் பத்துப் பேர் இருப்போம் என்று நினைவு. எனக்கு புல்வெளியில் சந்தித்தவர்களில் சுப்ரமண்ய ராஜூ, கே.வி. ராமசாமி, நா. ஜெயராமன் என்று ஒரு சிலரைத் தான் நினைவில் இருக்கிறது. எல்லோரையும் புதிதாக அன்று தான் பார்க்கிறேன். அன்று நான் சச்சரவான மனிதன் ஆனதால் கேள்விகள் நிறைய கேட்கப் படும். பொறி பறக்கும். என்று தோன்றலாம்,.அப்படியெல்லாம் ஏதும் நடக்கவில்லை. மிக தோழமையோடு, சகஜ பாவத்தில்தான் அந்த பரிமாறல் நடந்தது. ஞானரதம் கொணர்ந்த அன்பர்கள் என்பதால் வெட்டுக்குத்து இல்லாமல் போயிற்று எனக் கொள்ளலாம். இருட்டிவரும் நேரத்தில், கூட்டம் கலைந்தது. கே.வி. ராமசாமி சொன்னார். ”வாங்க இங்கே பக்கத்தில்தான் வீடு. அங்கே சாப்பிடலாம் என்றார். சென்றோம். அவர் வீடு பட்டினப் பாக்கத்தில் இருப்பதாகச் சொன்னார்கள்.
பேசிக் கொண்டே நடந்து தான் சென்றோம் என்று நினைவு. நடப்பதற்குச் சலிக்காத நாட்கள். விரும்பிய நாட்கள். அப்போது கே.வி. ராமசாமி ஞானரதம் மூலம் அறிமுகமான பெயர். ரமணன் என்று அவ்வப்போது கவிதைகள் எழுதிய பெயரும் பழக்கமானதுதான். பின்னர்தான் இருவரும் சகோதரர்கள் எனத் தெரிந்தது. கே.வி. ராமசாமியின் வீடு அடைந்ததும், நாங்கள் ஒரு நாலைந்து பேர் இருக்கும். நான் முதலில் உள்ளே நுழைந்ததும், என் முன் நின்றது ஒரு ஒரு வயதான அம்மையார், ராமசாமி, என்னிடம் “இது அம்மா” என்றார். பின் தன், அம்மாவிடம் இவர் தான் சாமிநாதன்” என்றும் அறிமுகப்படுத்தினார். உடனே அவர் சிரித்துக்கொண்டே “நீங்க என்ன எழுத உக்காந்தா, பச்சை மிளகாயைக் கடிச்சிண்டேதான் எழுதுவேளோ” என்றார் இப்படியும் இருக்கலாம். அல்லது “கையிலே ஒரு மிளகாயை வச்சிண்டேதான் எழுதுவேளா?” என்றும் இருக்கலாம். எப்படியானால் என்ன? மைய பாத்திரம் வகித்தது ஒரு பச்சை மிளகாய். எல்லோரும் சிரித்து விட்டோம். இப்படி ஒரு வரவேற்பா? ஒரு குடும்பத்தில் இருக்கும் அறுபது வயது மூதாட்டி, கே.வி. ராமசாமியின் அம்மாவாகவே இருக்கட்டும். சுற்றி இலக்கிய உலகில் நடப்பதில் அவருக்கு ஈடுபாடு இருக்கும். தொடர்ந்து படித்து வருவார். அது பற்றிய அபிப்ராயமும் அவருக்கு இருக்கும் என்று எப்படி எதிர்பார்த்திருக்க முடியும்? அதிலும், என் கடுமையான அபிப்ராயம் கொண்ட எழுத்துக்களில் விருப்பமும் சாதகமான எண்ணமும் இருக்கும் என்று எதிர்பார்க்க முடியுமா? ஆச்சரியம் அப்படித்தான் இருந்தது என்பது அந்த ஒரு கேள்வியிலும் அதோடு வந்த அவருடைய மெல்லிய சிரிப்பும் சினேக பாவமும் அதேசமயம் இப்படி ஒரு கேள்வி. இது கேள்வி அல்ல. நான் சண்டைக்காரன் என்ற தீர்மானத்தோடு அது அவர் விரும்பிய சண்டை, சுவாரஸ்யமான சண்டை என்ற அபிப்ராயமோ முடிவோ அதன் பின்னிருப்பது. எனக்கு இம்மாதிரியான முதல் அறிமுகம் ஆச்சரியமாக இருந்தது. வீட்டின் நான்கு சுவர்களுக்கும் அடைந்து இருக்கும் ஒரு அறுபது வயது மூதாட்டியிடமிருந்து. சுற்றியிருந்த எழுத்தாளர் சமூகத்தின் பெரும்பாலோர் விரோதிக்க, இப்படி ஒரு ஆதரவுக் குரல் வீட்டினுள்ளிருந்து. அவர் பெறுவதற்கோ இழப்பதற்கோ ஏதுமில்லை. அந்த சிக்கல்கள் எழுத்தாளர்களுக்குத் தான் இருந்தது. ஒரு மிகப் புகழ் பெற்ற எழுத்தாளர் எழுதினார், “ நாங்கள் மௌனமாக இருந்தோம். அந்த மௌனமே உங்களுக்கு பலம் “ என்று. வேடிக்கையாக இல்லை? அந்த அம்மையார் தான் பூரணி இந்த அம்மையார் நம் மதிப்புக்குரியவரா, இல்லை எங்கள் மௌனம்தான் உங்களுக்கு பலம் என்று மௌனித்து யாரையும் விரோதித்துக் கொள்ள பயந்து தன் காரியத்தைச் சாதித்துக்கொள்ள விரும்பிய எழுத்தாளரா? இன்னொரு முக்கியமானதும் சுவாரஸ்யமானதுமான விவரம். அன்று 1972- ல் ஒரு நாள் இரவு பட்டினப்பாக்கம் வீட்டில் ஒரு வயதான மூதாட்டி, எனக்கு அந்த மாதிரியான ஒரு பாராட்டை, வியப்பை வெளிப்படுத்தியது எந்த டெஹல்கா ஸ்டிங் ஆபரேஷனில் பதிவாகியிருக்கப் போகிறது? சட்ட சபையில் நடந்த அவலங்களே எப்படியெல்லாமோ மூடி மறைக்கப்பட்டுத்தான் ஏதோ அரசியல் நாகரீகத்தின் உச்ச உருவாக்கம் போல பேசப்படுகிறது. அப்போது இருந்தவர் அனேகர் இப்போது இல்லை. இருந்தாலும் யார் நினைவிலும் இருக்கப் போவதில்லை. எனக்கே என் நினைவிலிருந்து அனேகமாக நழுவிய விஷயம் தான். அது திரும்ப எங்கோ ஆழ்மனதில் முழ்கியிருந்ததை மேலெழுப்பி நினைவூட்டியது அன்று இதையெல்லாம் எங்கோ பின்னால் உட்கார்ந்து கேட்டுக்கொண்டிருந்த ஒரு 20 வயதுப் பையன். கே.வி. ரமணனின் தோழன். அதை நினைவுக்குக் கொண்டு வந்து என்னை ஆச்சரியப்படுத்தியது கிட்டத்தட்ட 34 வருடங்களுக்குப் பின். அந்த நிகழ்வுக்கு சாட்சி பூதமாக இருந்தது இப்போதைய பங்களூர் வாசியும் அன்று பூரணி அம்மாளுக்கு வேண்டிய செல்லப் பிள்ளையுமாக இருந்த ஹரி கிருஷ்ணன். அந்த பூரணி அம்மாள் ஒரு ஆலவிருக்ஷம் அந்த விருக்ஷத்தின் நிழலுக்குத் தான் தான் அவரும் அன்று இருந்த தலைமுறையும் பின்னர் வரவிருந்த தலைமுறையினரும் பாரம்பரியம் என்ற பொருளில், வாழையடி வாழை என்போமே அந்த அர்த்ததில் தொடர்ந்தனர் என்பதை நான் பின்னர் வெகு காலம் பின்னர்தான் உணர்ந்து கொண்டேன்.
சரி இதெல்லாம் போகட்டும். அன்று இரவு சாப்பாடு முடிந்து திரும்பும் போது வெகு நேரமாகிவிட்டது. என்னுடன் பஸ் ஸ்டாண்ட் வரை வந்திருந்து “இது தி.நகர் போகும் பஸ். இடையில் மௌபரீஸ் ரோடில் இறங்கிக் கொள்ளுங்கள்” என்று ஏற்றி விட்டனர். அது தான் கடைசி பஸ். எனக்கு மௌபரீஸ் ரோடில் இறங்கும் பஸ் ஸ்டாப் எது என்று தெரியவில்லை. ”நீங்க சொல்லியிருக்கக் கூடாது? என்று கண்டக்டர் முறைக்க, கடைசியில் தி.நகர் பஸ் ஸ்டாண்ட் வரை சென்று அங்கு ஒரு சிமெண்ட் பெஞ்சில் படுத்து இரவைக் கழிப்பது என்று தீர்மானித்தேன். பஸ் ஸ்டாண்டுக்கு வெளியே இருந்த கடையில் இந்தியா டுடே பத்திரிகை ஒன்று வாங்கிக்கொண்டு படிக்கத் தொடங்கி…உறங்கி காலை எழுந்து மறுபடியும் பஸ் பிடித்து மௌபரீஸ் ரோடில் இறக்கி விட கண்டக்டரிடம் சொல்லி பக்கத்து இருக்கையிலேயே உட்கார்ந்து கொண்டேன். வீடு போய்ச் சேர்ந்ததும், “ஏன் ராத்திரி வரலை? என்ன ஆச்சு? என்ற கேள்விக்கு என்ன பதில் சொல்லி அசடு வழிந்திருப்பேன் என்று இங்கு எழுதுவது அவசியமா என்ன? முக்கிய வரலாற்றுச் சிறப்பு வாய்ந்த தகவல் இது: 1973-ல் தி.நகர் பஸ்டாண்டில் வீடு திரும்ப முடியாத ஒருவன் அங்குள்ள செமெண்ட் பெஞ்சில் படுத்து உறங்கி இரவைக் கழிக்க முடியும். யாரும் ”யோவ், எந்திரி, யாரு நீ, இங்கே என்ன செய்யிறே” என்று விரட்ட மாட்டார்கள்.
கே.வி. ராமசாமியுடன் அன்றிலிருந்து பழக்கம் அவ்வப்போது தொடர்ந்தது. ஞானரதம் நின்று விட்ட பிறகும். 1991-ல் ஹைதராபாதில், தில்லி சங்கீத நாடக அகாடமி நடத்திய தென்னிந்திய நாடக விழாவில். நாங்கள் போய் இறங்கிய தினம் தான் பாப்ரி மசூதி சமாசாரம் நடந்தது. ஹைதராபாதில் ஊரடங்கு சட்டம். இரவில் நாடகம் நடத்த முடியாது. பகலில் நடத்திக்கொள்ளுங்கள் என்று நிர்ப்பந்தம். இரவில் ஹோட்டலில் ஒரு சந்திப்புக்கு சங்கீத நாடக அகாடமியின் விழா பொறுப்பாளரான கே.எஸ் ராஜேந்திரன் ஒரு ஸ்வாதந்திரமான, அதிகார பூர்வமற்ற கருத்துப் பரிமாறல் வைத்துக்கொள்ளலாம் என்றார். அதில் பங்கேற்றது இந்திரா பார்த்தசாரதி, ந முத்துசாமி, செ.ரவீந்திரன், எஸ் ராமானுஜத்தின் வெறியாட்டத்தில் மைய பாத்திரம் ஏற்ற காந்தி மேரி பின் மிக முக்கியமாக கே.வி. ராமசாமி. இதன் பதிவுகள் வெளி ரங்கராஜனின் வெளி பத்திரிகையில் பிரசுரமானது.
கே வி ராமசாமியுடனான அடுத்த என் சந்திப்பு சில வருடங்களுக்குப் பின் கே.எஸ் ராஜேந்திரன் சென்னை மாக்ஸ்ம்யூல்லர் உதவியுடன் நடத்திய உதபல்தத் விழாவில் என்று நினைவு. அந்நாட்களில் கே.எஸ் ராஜேந்திரனுடனான என் நட்பு இறுகும் பிரியும். ஆனால் எல்லாவற்றிலும் ஒரு பங்கேற்பு இருக்கும். அதற்கு முதற் காரணம் கே.எஸ் ராஜேந்திரன் தான். நாங்கள் இருவரும் சென்னை வந்ததும் அப்போது மடிப்பாக்கத்தில் ஒரு ஏரிக்கரையை ஒட்டிய ஷீலா நகரில். அங்கு பூரணி அம்மையாரைப் பார்க்கவில்லை. அவர் வேறு யாருடனோ இருந்தார். வயது ஆகிக்கொண்டிருந்தது. ராமசாமியின் ஒரு மகன், இரு பெண்கள். இளையவள் அர்ச்சனா, மிக துடிப்பும் விளையாடும் நிறைந்த பெண். மூத்தவள் சட்டம் படித்துக்கொண்டிருந்தாள் என்று நினைவு. இளையவள் அப்பாவோடு எப்போதும் வாதாடிக்கொண்டிருப்பாள். 15/16 வயது செல்லப் பெண்ணுக்கு ”அப்பாவுக்கு ஒண்ணுமே தெரியாது” என்று வாதாடுவதில்தான் சந்தோஷம். அப்போதுதான் ராமசாமி நாடகங்களில் மிக ஈடுபாடு கொண்டிருந்தது தெரிந்தது. கே.எஸ் ராஜேந்திரனோடு அந்தக் குடும்பத்துக்கு மிக நெருங்கிய பிணைப்பு இருந்தது. தன் நாடக ஈடுபாடுகளில் கே.எஸ் ராஜேந்திரன் என்னையும் இணைத்துக்கொள்வது போல ராமசாமியையும் இணைத்துக் கொள்வதில் ஆர்வமாக இருந்தார். எனக்கும் கே.வி.யோடு நெருக்கம் உருவானது.
அடுத்த சந்திப்பை நான் எதிர்பார்த்து வந்தது சென்னையில் ஒரு நாடகப் பட்டறையை தேசிய நாடகப் பள்ளியின் சார்பில், மறுபடியும் கே.எஸ் ராஜேந்திரனின் பொறுப்பில்தான், நடந்தபோது. சென்னை செண்ட்ரலில் வந்து இறங்கியதும் எங்களைச் சந்தித்தது உலக தமிழ் ஆராய்ச்சி மன்றத்தைச் சேர்ந்த துளசி. அவர் சொன்ன செய்தி கே.வி. ராமசாமி இறந்து விட்டார். என்னென்னமோ கனவுகளோடு வந்தது சட்டென எல்லாம் சரிந்தது.
எப்போதோ சந்தித்த போதும் அன்போடும் ஆதரவோடும் பழகிய ஒரு நட்பை இழந்தாச்சு. மடிப்பாக்கம் தான் மறுபடியும். முன்பு பார்த்த போது ஒரே விளையாட்டும் சகோதரப்பூசலும் அப்பாவைக் காலைவாறுதலுமாக இரைச்சல் நிறைந்த இடம் இப்போது அமைதி அடைந்து கிடந்தது. பூரணி அம்மாள் வந்திருந்தார். எல்லோரும் ஒவ்வொரு மூலையில் எதையோ வெறித்து நோக்கிக் கிடந்தனர். அப்போது தான் முதன் முறையாக, கே.வி. ராமசாமியின் தங்கை கிருஷாங்கினியைப் பார்த்தேன். வாசலில் அவர் கணவர் நாகராஜன் உட்கார்ந்திருந்தார். ஏதோ பாங்கில் வேலை. ஆர்ட் ஸ்கூலில் பயின்றவர். ஓவியமும் அவர் ஆளுமையின் ஒரு முக்கிய அங்கமாக இருந்தது என்று தெரிந்தது,
இடையில் அர்ச்சனா சென்னையில் நாடகங்களில் பங்கு பெற்று வருவது பற்றியும் நடனம் பயில்வது பற்றியும் செய்திகள் வந்தன. மூத்த பெண் வக்கீலாக ஹைகோர்ட்டில் யாருக்கோ உதவியாக இருக்கிறாள். அர்ச்சனாவை புரிசை சம்பந்தம் பங்கு பெற்ற ப்ரெக்ட் நாடகம் ஒன்றில் (Caucasian Chalk circle – இதற்கு தமிழில் என்ன பெயர் என்று நினைவில் இல்லை) நடித்திருந்தாள், என்றும் தகவல் வந்தது. கே.வி. ராமஸாமியின் நாடக ஈடுபாடும், அர்ச்சனாவின் துறுதுறுப்பும் தான் கே.வி. ராமசாமி தன்னோடு அர்ச்சனாவையும் நாடகங்களில் நடிககத் துண்டியது என்று நினைக்கிறேன். அந்த ஈடுபாடு பல வருடங்களாகத் தொடர்ந்துள்ளது பல ரூபங்களில் என்று நினைக்கத் தோன்றுகிறது. மணிரத்தினத்தின் ஆயுத எழுத்தோ என்னவோ, ஒரு படத்தில் அர்ச்சனா நடித்திருந்ததில் குறுந்தகட்டில் பார்த்தபோது யாரும் தகவல் சொல்லாமல் எனக்குத் தெரிந்தது.
அடுத்த கட்ட நகர்வு என்று அடுத்த சென்னை வருகை மறுபடியும் தேசீய நாடகப் பள்ளியின் நாடகப் பட்டறை, கே.எஸ் ராஜேந்திரனின் பொறுப்பில் நிகழ்ந்த போது. இம்முறை அது இந்திரா பார்த்த சாரதியின் ராமானுஜரா இல்லை. எஸ் ராமானுஜத்தின் காளியா செம்பவளக் எது என்று சரியாக நினைவில் இல்லை. அப்போது கூட இருந்தது எஸ் கே எஸ் மணி அதாவது பாரதிமணி. நாங்கள் தங்கியிருந்தது தரமணியின் தங்குமிடம் ஒன்றில். வந்திறங்கிய ஒன்றிரண்டு நாட்களுக்குள் நானும் ராஜேந்திரனும் தங்கியிருந்த அறைக்கு வந்தது கிருஷாங்கிணி நாகராஜன் தம்பதியினர். கூட ஒரு பையில் எல்லோருக்கும் மசால் தோஸை. இப்படியல்லவா இருக்கவேண்டும் தங்கியிருக்கும் இடம் வந்து உபசாரம். மிக கலகலப்பான பொழுது. மசால் தோசை காரணமாக மட்டுமல்ல. அடுத்த பட்டறைப் பயிற்சிக்கோ என்னவோ ப்ரெக்டின் mother courage நாடகத்தைத் தமிழில் மொழிபெயர்த்துத் தரும்படி கே எஸ் ராஜேந்திரன் கேட்க. அவர் அடுத்த முறைவரும்போது மொழிபெயர்த்த சில பக்கங்களுடன் வந்திருந்தார். அடுத்து நடந்தது நானும் மணியும் கிருஷாங்கினி வீட்டுக்குப் போய்ச் சேர்ந்தோம். எனக்குப் பணிக்கப்பட்டது, இரண்டு பேரும் சேர்ந்து மொழிபெயர்ப்பு வேலையை முடித்து வாருங்கள் அது வரைக்கும் பட்டறையில் உங்களுக்கு வேலை இல்லை” என்பதாகும். இது எப்படி நிகழ்ந்தது என்று எனக்கு சரியாக நினைவில் இல்லை. கிருஷாங்கினி அழைத்தா, இல்லை அடிக்கடி வந்து போவதை விட இரண்டு பேரும் சேர்ந்து மொழிபெயர்த்தால் எளிதாகும் என்றா, தெரியவில்லை.
அடுத்து நானும் மணியும் கிண்டி வந்து மின்சார ரயில் ஏறி சிட்ல பாக்கம் போனோம். கிருஷாங்கினி வீட்டுக்கு. பத்து நாட்களோ என்னவோ அங்கு அவர்கள் விருந்தினராக இருந்தோம். கிருஷாங்கினி, நாகராஜன் இருவரோடும் மிக நெருங்கி பழகும் வாய்ப்பு இப்படிக்கிடைத்தது. சிட்ல பாக்கதில் ஒரு மெயின் ரோடில் மாடி வீட்டில் இருந்தனர். இப்போது அதே இடத்தில் கீழ்த் தளத்துக்கு மாறிவிட்டதாகச் சொன்னார்கள்.
அங்கு கிருஷாங்கினி- நாகராஜன் தம்பதிகளுடன் கழித்த நாட்கள் சந்தோஷமான நாட்கள். அங்கு போய்ச் சேர்ந்த ஒரு சில நாட்களுக்குள் எனக்கு சுரமோ என்னவோ நினைவில் இல்லை, உடல் சரியில்லாமல் போய்விட்டது. இடையில் ஒரு நாள் ராஜேந்திரன் வந்து என்னை அழைத்த போது நாகராஜன், “அவர் உடல் சரியாகும் வரை நான் அனுப்பமாட்டேன்” என்று நிர்தாக்ஷண்யத்துடன் மறுத்துவிட்டார். அங்கு ஒரு நாய் கூட வளர்ந்து வந்தது. அதனுடன் கொஞ்சம் ஜாக்கிரதையோடேயே ஒதுங்கி வந்தேன். என்ன இருந்தாலும் அதன் கண்களுக்கு நான் அந்நியன். அப்போது நான் சாஹித்ய அகாடமியின் என்ஸைக்ளோபீடியாவுக்கும் தமிழ் ஆலோசகராக, கட்டுரைகள் பல எழுதி வந்தேன். அந்த வேலையும் அவர்களது வீட்டு டெலிபோன் மூலமே நடந்தது. இதற்கெல்லாம் மேலாக, நாகராஜனின் ஓவிய ஈடுபாடு பற்றியும் சங்கீதத்தில் இருந்த அபார ஈர்ப்பைப் பற்றியும் உடன் இருந்தே தெரிந்து கொள்ள முடிந்தது. சிட்ல பாக்கத்தில் இருந்த டாக்டரிடம் தான் மருந்து சாப்பிட்டு வந்தேன். என் சுகக்கேடு அவர் சிகித்சைக்குள் முடிந்து விட்டது அன்றைய வரலாற்று அதிசயம்தான். திரும்ப தரமணிக்குச் சென்றேன். அங்கு பட்டறைக்கான அலுவலகம் உலகத் தமிழ் ஆராய்ச்சி மையத்தின் மேல் மாடியில் இருந்தது. அங்கு கிருஷாங்கினியின் மொழிபெயர்ப்பு வந்தது. அந்த மொழிபெயர்ப்பு “வீரத் தாய்” (Mother Courage) என்ன ஆயிற்று என்று தெரியவில்லை. ஒரு போனஸாக, அங்கு இருந்த ஆராய்ச்சியாளர் துளசியின் நட்பு கிடைத்தது.
இந்த சமயத்தில் தான் அவர்களின் பெண், நீரஜா பரத நாட்டியம் பயின்று வருவது தெரிந்தது. ஒரு நாள் நான் தரமணி அலுவலகத்தில் இருந்த போது திடீரென நீரஜாவை அழைத்து வந்திருந்தார் கிருஷாங்கினி. ரொம்பவும் மகிழ்ச்சியாக இருந்தது. பின்னர் மலேசியாவில் நீரஜா ஒரு நாட்டியப் பள்ளி தொடங்கி அதில் நடனம் பயிற்றுவிப்பதாகவும் சொன்னார். தில்லியில் இருந்த கடைசி பத்துக்களில் சாஹித்ய சங்கீத அகாடமிகளுடன் நெருங்கி உறவாடும் வாய்ப்பு கிடைத்தது. எதுவும் தமிழ் நாட்டுத் தமிழர்களின் காரணமாக அல்ல. தில்லியில் இந்த அகாடமிகளில் இருந்தவர்களுடன் ஏற்பட்ட ஒருவருடன் ஒருவர் பழகிப் பிறந்த புரிதலால். ஹிந்திலும் ஆங்கிலத்திலும் அகாடமி வெளியிட்ட பத்திரிகைகளில் தமிழ் கவிதை, நாவல் சிறுகதை பற்றியெல்லாம் சிறப்பிதழ்கள் கொணர முடிந்தது. முற்றிலும் என் தேர்வில். அந்த இதழ்களில் தமிழ் நாட்டு ஓவியர்கள், சிற்பிகளையும் பிரதிநிதித்வப்படுத்த முயன்றேன். ட்ராஸ்கி மருது, ஆதிமூலம், இலங்கை த. சனாதனன், போன்றோருடன், எனக்குப் புதிதாக அறிமுகமான நாகராஜனையும் அதில் சேர்க்க முடிந்தது. அகாடமியில் இருந்த ஹிந்தி இலக்கியவாதிகள் யாருக்கும் ஏதும் மறுப்பு இருந்ததில்லை. மறுபடியும் இன்னொரு வருகை, ராஜேந்திரனது. இம்முறை நாடகப்பயிற்சி முகாம் எடுத்துக்கொண்டது மராத்திய நாடகாசிரியர் சதீஷ் ஆலேகரின் மகா நிர்வாண். அது எப்போது கே.வி. ராமசாமியால் மொழிபெயர்க்கப்பட்டது என்பது தெரியவில்லை. மொழி பெயர்த்திருக்கிறார் அது நான் சென்னை வந்த பிறகு தான் மொழிபெயர்ப்புப் பிரதியைப் பார்த்தேன். கிருஷாங்கினி தான் கொண்டு வந்தார். நாகராஜன், கிருஷாங்கினி நான் மூவரும் தமிழினி வசந்த குமாரிடம் கொடுத்தோம். அவரும் மிக ஆர்வத்துடன் அதைப் பிரசுரித்தார்.
இதற்குள் நான் கோயில் மணி கேட்டு விழித்தெழும், வாசல் தெளிக்கும் ஒலி கேட்டு வாசலில் காணும் கோலங்களையும் கோலமிடும் சிறு பெண்களின் தொங்கும் சடைகளையும் பளிச்சிடும் கால் கொலுசுகளையும் அந்த அதிகாலையில் தரிசனம் பெறும் ஆசை துளிர்த்தது. தமிழ் நாடு தனது என்றளிக்க வேறு என்ன இருக்கிறது? பக்கத்தில் இருந்த ஐயப்பன் அதற்குக் குறை வைக்கவில்லை. வந்த உடனேயே அல்லது அதற்குச் சற்றுப் பின்னோ, க்ரிஷாங்கினியின் சிறுகதைத் தொகுப்பு ஒன்று வந்தது. 1982 லிருந்து 1999 வரையிலான 17 வருடங்களில் எழுதிய 17 கதைகள். வருடத்திற்கு ஒன்று. அது வரை அவர் என்னிடம் தான் சிறுகதை எழுதுபவராகக் காட்டிக்கொண்டதே இல்லை. ஓவியராக, சங்கீத ரசிகராக நெருங்கிப் பழகிய பின்னரே தன்னைக் காட்டிக் கொண்ட நாகராஜனைப் போல். அது மட்டுமல்ல. கிருஷாங்கினியை ஒரு கவிஞராக, பெண்ணியவாதியாக அறிந்து கொண்டது இங்கு வந்து சந்திப்புகள் கொஞ்சம் கூடியதும் தான். பல இலக்கியச் சந்திப்புகளில் அவரை கவிஞராக மேடையிலும். ஒரு பெண்ணிய கவிதைகளின் தொகுப்பு மாற்றுக்குரல் என்ற தலைப்பில், கிருஷாங்கினியும் இன்னொரு கவிதாயினி, பெயர் மறந்து விட்டது) வந்தது. அது ஒரு முக்கியமான கவிதைத் தொகுப்பு. பெண்ணிய குரலின் பல வண்ணங்களையும் அதில் காணலாம். தன் கையெழுத்திலேயே அச்சிட்ட கவிதைத் தொகுப்பு ஒன்றையும் கிருஷாங்கினி வெளியிட்டிருக்கிறார்.
நான் இங்கு குடிபெயர்ந்த ஆரம்ப வருஷங்களில் நாகராஜனை சென்னை ஒவியக கலைக் கண்காட்சிகளில் சந்தித்ததுண்டு. பின்னர் அவரே சொல்வனத்தில் மேற்குலக சர்த்திரம் முழுதையும் ஒவ்வொரு மாற்றத்தையும் அதற்குக் காரணமாக இருந்த ஒவியர்கள் சிற்பிகளைப் பற்றியும் விரிவாக எழுதியுமிருக்கிறார். தம் சதுரம் பதிப்பகம் மூலம் இருபதாம் நூற்றாண்டின் ஒவிய நிகழ்வுகள் என்று புத்தகமும் வெளிவந்துள்ளது. இதை ஒவியர்களோ, சிற்பிகளோ எழுதுவதே சிறப்பானது. . இவையெல்லாம் தமிழுக்கு வருவதில்லை. இதற்கிடையில் கிருஷாங்கினி தொகுத்த பரத நாட்டியப் பாடல்கள், எனக்கு மிகவும் மகிழ்ச்சியும் சில ஆச்சர்யங்களயும் தந்த பாடல் தொகுப்பு. இன்னம் ஒரு சிறுகதைத் தொகுப்பு நாட்டியம் பற்றிய நேர்காணல்கள் கொண்ட ஒன்று. இசைக்கலைஞர்களுடன் கொண்ட நேர்காணகள் கொண்ட தொகுப்பு ஒன்று இப்படி சதுரம் என்று தாம் தொடங்கிய பதிப்பகம் மூலம் வெளிவந்தன. நான் தில்லியிலிருந்து சென்னைக்கு குடிபெயர்ந்த பின் இம்மாதிரியான நிகழ்வுகள் அடிக்கடி வரத் தொடங்கின.
இதெல்லாம் வருவதற்கு முன்னால் பூரணி அம்மாளின் சுயவரலாறு, நினைவலைகள் என்ற தலைப்பில் கிடைத்தது. அதைப் பார்த்ததும் தான், அதன் பல விவரங்கள் எனக்கு மறந்து விட்டன, அவர் ஒரு பெரிய குடும்பத்தில், அக்காலத்தில் ஏழையோ வசதி உண்டோ இல்லையோ எல்லாம் பெரிய குடும்பங்கள் தான். அவையெல்லாம் செல்வங்கள் எனத் தான் சொல்வார்கள். ஆனாலும் வாழ்வது அதற்கேற்ப எளிமையாகத் தான் இருக்கும். இருப்பினும் கசப்பில்லை. சுகம் துக்கம் எல்லாம் தான். ஆயினும் அவ்வளவுக்கிடையிலும் அந்த அம்மையார் வளர்ந்து மணம் செய்து குடும்பம் நடத்தி, ஒரு பெரிய குடும்பத்துக்கு தானும் தாயாகி, எல்லாம் சரிதான். இப்படி வாழ்ந்து காட்டுவதே ஒரு பெரிய சாதனையாகச் சொல்வார்கள். சாதனை தான். சந்தேகமில்லை. இப்போது ஒரு தலைமுறை, திட்டமிட்ட குடும்பமாக சந்தோஷமாக வாழ்வதாக, பரஸ்பர அன்போடு மரியாதையோடு வாழ்வதாகக் காண்பது கிடைக்கக் கூடும் தான்.
இவ்வ்ளவு வாழும் அவஸ்தைகளுக்கும் இடையில், இடைப்பட்ட சந்தோஷங்களுக்கும் இடையில் தன்னை ஒரு லக்ஷிய குடும்பஸ்த்ரீ என்பதற்கும் மேலாக தன் வாழ்வினை, தன் அனுபவங்களை, தன் வாழ்வின் ஆதார ஸ்ருதியின் விகாசங்களைப் பதிய வேண்டும். அதில் சாரமுண்டு, அதை தனக்குத் தோன்றும் மொழியில் வடிவில் சொல்லவேண்டும், யாரையும் பின்பற்ற வேண்டியதில்லை. யாரிடமும் வடிவு, மொழி, பற்றி ஆலோசனை தேவையில்லை, தன் மொழிக்கும், அந்த பதிவு பெறும் வடிவத்திற்கும் ஒரு நியாயம் உண்டு என்று தனக்குள் முடிவு செய்து எழுதியது செய்லாற்றியது ஒரு முதல் தர எழுத்தாளனின், சிந்தனை. இது இன்னும் பல புகழ் பெற்ற எழுத்தாளர்களுக்கு கிடைத்திராத சிந்தனை. அந்த சுய சிந்தனை தான், வேறு பாதிப்புகளோ, அக்கறைகளோ, செல்வாக்கோ அற்று தன் மனதுக்குப் பட்டதைச் சொல்லும் சிந்தனை வயப்பட்ட மனது தானே, அன்று எல்லோராலும் சுயநலத்துக்காக வசைபாடப்பட்ட எழுத்தையும் கண்டு ஆச்சரியப்பட்டு, “நீங்க என்ன ஒரு பச்சை மிள்காயைக் கடித்துக்கொண்டே தான் எழுதுவேளோ?” என்று கேட்கத் துணிந்தது? ஆமாம் காரம் தான். ஆனால் அது வேண்டிய காரம் என்று. மௌனம் தான் (தனக்கு) பலம் என்று சுயநலம் சொல்லத் தூண்டியது.
சுயவரலாறு, கவிதை, கதைகள், மொழிபெயர்ப்புகள் என எத்தனை. இது ஒரு பாரம்பரிய குடும்பப் பெண்ணின் ஆளுமையின் விகாசம் அல்லாமல் வேறு என்ன? அந்த ஆலவிருக்ஷத்தின் விழுதுகள் ஒவ்வொரு தலைமுறைக்கும், நாடகம், சங்கீதம், நடனம், கவிதை, சிறுகதை ஒவியம் நடிப்பு என தன் விழுதுகள் ஒவ்வொன்றும் விகாசித்து நிழல் பரப்பி இருக்கின்றன. இதை நான் அன்று நினைத்துப் பார்த்தவனில்லை. முடிந்தும் இராது. சென்னை வந்த பிறகு, 2004-ல் கம்ப்யூட்டர் ஒன்று வாங்கினேன். கொஞ்சம் கொஞ்சமாக என் மகனிடமிருந்தும் வரும் நண்பர்களைத் தொந்திரவு செய்தும் ஒரு டைப்ரைட்டர் மாதிரி உபயோகிக்கக் கற்றுக்கொண்டேன். பிறகு வந்த நண்பர்களில் ஒருவர், யாராக இருக்கும், அரவிந்தன் நீலகண்டன்? நேசகுமார்,? ராஜன் சடகோபன்? தெரியவில்லை. என்னை சிந்தனை என்ற ஒரு இணையக் குழுமத்தில் சேர்த்துவிட்டார். எனக்கே தெரியாது எப்படி இந்த குழுமத்தில் என் பெயர் சேர்ந்தது என்று. அப்போது அந்த குழுமத்தில் ஒருவராக எனக்கு அறிய வந்தவர் தான் ஹரி கிருஷ்ணன். அவர் தான் ஏதோ ஒரு சந்தர்ப்பத்தில் தன் இழை ஒன்றில் 1973 பட்டினப்பாக்கம் கே.வி. ராமசாமி வீட்டில் எனக்கு நடந்த பச்சை மிளகாய் சாத்துபடியைச் சொல்லி எல்லோரையும் குதூகலப் படுத்தினார். அப்போது தான் எனக்கே அது நினைவுக்கு வந்தது. நினைவின் ஆழ்கடல் தோண்டி எடுத்த முத்து. முத்தோ அரிய வகை மீனோ அல்லது வேறு எதோ. ஆச்சரியத்துடன் கேட்டேன் அவரை. அப்போது தான் அவர் முழுவிவரத்தையும் தான் அங்கிருந்ததும், ஒரு சிறுவனாக வியப்புடன் பார்த்திருந்ததையும் சொன்னார். இப்படி இருவரும் மறுபடியும் அறிமுகம் செய்து கொள்வோம் என்று யார் கண்டார்? ஆழ்கடல் தோண்டி எடுத்தது ஏதோ, ஒரு ஆலவிருக்ஷமாக இருந்து தன்னை மீறி எழுந்து விகாசித்த பூரணி அம்மையாருக்கும் அஞ்சலி. ஒரு நூற்றாண்டு சரியாக. 17.10.1913 – 17,11. 2013.
•This e-mail address is being protected from spambots. You need JavaScript enabled to view it•
•<• •Prev• | •Next• •>• |
---|