2012 ஆம் ஆண்டு டிசம்பர் மாதம் 16 ஆம் திகதி முன்னிரவில் இந்தியத் தலைநகர் தில்லியில் ஓடும் பேருந்தில் 23 வயதேயான மருத்துவப் படிப்பு மாணவி ஐவர் கும்பலால் வன்பாலுறவுக்கு உள்ளாக்கப்பட்டதனையடுத்து இங்கிலாந்தின் த கார்டியன் அமெரிக்காவின் நியூயார்க் டைம்ஸ் பிரான்சின் லெமான்டே டிப்ளமேடிக் உள்ளிட்ட உலக ஊடகங்கள் அனைத்திலும் அச்செய்தி மிகுந்த முக்கியத்துவம் கொடுக்கப்பட்டுப் பிரசுரமானது. தில்லியில் எழுந்த மக்கள் திரள் போராட்டங்கள் அரபுப் புரட்சியின் மக்கள் திரள் எழுச்சியை ஞாபகப்படுத்தின. மிருகத்தனமான வல்லுறவுக்கு ஆளானாதால் உள்ளுறுப்புகள் சிதைந்த நிலையில் இரண்டு வாரங்கள் தனது உயிருக்குப் போராடிய மாணவி சிங்கப்பூர் மருத்துவ மனையில் மரணமுற்றதனையடுத்து ஐக்கியநாடுகள் சபைச் செயலாளர் பான் கீ மூன் தனது அஞ்சலியைத் தெரிவித்துக்கொண்டார். இந்தியப் பிரதமர் மன்மோகன் சிங், இந்திரா காங்கிரஸ் தலைவி சோனியா காந்தி, பாரதீய ஜனதாக் கட்சித் தலைவி சுஸ்மா ஸ்வராஜ் போன்றவர்களுக்கு இடையில் இதனை முன்வைத்து அரசியல் உரசல்கள் இடம்பெற்றன. தமிழக முதல்வர் ஜெயலலிதா வன்பாலுறவில் ஈடுபடுபடுபவர்களுக்கு இரசாயணமுறையில் ஆண்மைநீக்கம் செய்யும் தண்டனையைப் பரிந்துரைத்தார். ஆர்ப்பாட்டக்காரர்களில் சிலரும், அரசியல்வாதிகளான பிஜேபியினரும் வன்பாலுறவுக் குற்றவாளிகளுக்கு மரணதண்டனையைப் பரிந்துரைத்தனர். வன்பாலுறவுக்கு ஆளாகி மரணமுற்ற பெண்ணின் தந்தை வல்லுறவில் மிக வன்முறையாகவும் வக்கிரமாகவும் ஈடுபட்ட '17 வயது மைனருக்குத்தான் முதலில் மரணதண்டனை வழங்க வேண்டும்' எனக் கோரினார். மத்திய அரசுக்கும் மாநில அரசுகளுக்குமிடையிலான பேச்சுவார்த்தையை அடுத்து தண்டனையின் வயது வரம்பு 17 ஆகக் குறைக்கப்பட்டது.
வன்பாலுறவுக்கு மரணதண்டனை வழங்கும் யோசனையை பெரும்பாலுமான மாநில அரசுகள் நிராகரித்தன.
பாலிவுட் நடிக நடிகையர் கொதித்தெழுந்து வன்பாலுறவுக்கு எதிராக அறிக்கைகள் வெளியிட்டனர். தமிழகத்தில் நடிகைகள் சுஹாசினி, ரோகினி ஆகியோர் சென்னைக் கடற்கரையில் கண்டனக் கூட்டம் ஒன்றை நடத்தினார்கள். வன்முறைக்கு திரைப்படத்துறையினைக் குற்றம் சாட்டக் கூடாது என்றார் நடிகை குஷ்பு. இது சுஹாசினினி-ரோகினி-குஷ்பு வகையிலான பெண்ணிலைவாதம். வன்பாலுறவுக்கு உள்ளான பெண்ணாக நடிக்கத் தனது விருப்பத்தைத் தெரிவித்தார் லக்சுமி ராய். சம்பவம் உடனடியாகப் பாலிவுட் திரைப்படமாகவும் உருவாகிவிட்டது. இது பாலிவுட் சினிமா முன்வைக்கும் பெண்நிலைவாதம்.
வன்பாலுறவு நடைபெற்ற நாள் துவங்கி சம்பந்தப்பட்ட மாணவி சிங்கப்பூர் மருத்துவ மனையில் மரணமுற்ற டிசம்பர் 29 வரையிலும் இந்திய ஊடகங்களும் பொதுச் சமூகமும் உச்சபட்டசமான கோபத்திலும் துயரத்திலும் கையறுநிலையிலும் உணர்ச்சிப் பெருக்குடனும் இருந்தன. சம்பவம் நடந்து முடிந்து, உணர்ச்சிவசமான மனநிலை வடிந்து, தில்லி விரைவு நீதிமன்றில் வழக்கு நடந்து கொண்டிருக்கிறது. வன்பாலுறுவில் ஈடுபட்ட சிலர் அரசுசாட்சிகளாக ஆகியிருக்கிறார்கள். சிலர் தாம் குற்றமற்றவர்கள் எனக் கோரிக் கொண்டிருக்கிறார்கள்.
நிகழ்வு நடந்து மாணவி மரணமுறும் வரையிலான காலம் வரையிலும் இரண்டு தரவுகள் உலகமெங்கிலும் இருந்த மக்களுக்குத் தெரியவந்தன. வன்பாலுறவில் ஈடுபட்டவர்கள் பேருந்து ஓட்டுனர்கள், பேருந்து கிளீனர், உடற்பயிற்சி நிலையப் பயிற்சியாளர், பழ வியாபாரி என இவர்களோடு பதினேழு வயது இளைஞர். இவர்கள் அனைவரும் 'உதிரிப் பாட்டாளி' வர்க்கத்தைச் சேர்ந்த குற்றவாளிகள் என்பது தெளிவாக இருந்தது. ‘உதிரிப் பாட்டாளி’ என்பதனை நாம் இங்கு ஒரு பாராட்டுச் சொல்லாக அல்லாமல் அதனைச் சமூகவியல் அர்த்தத்திலேயே பாவிக்கிறோம்.
பாதிக்கப்பட்டவர் எனும் வகையில் வன்பாலுறுவுக்கு உள்ளாக்கப்பட்ட மாணவி 23 வயதேயுடைய மருத்துவக்கல்லூரி மாணவி (குறிப்பாக பிசியோதெரபி மாணவி) என்பதும் அவரது சக தோழரான மாணவருடன் அவர் வன்முறைக்கு உள்ளாக்கப்பட்டார் என்பதுமே எவருக்கும் முதலாவதாகத் தெரியவந்த தரவாக இருந்தது. மாணவியின் வர்க்கம், சாதி, இனம் போன்ற எந்த அடையாளங்களும் எவருக்கும் தெரியவரவில்லை. காவல்துறை விதிகளின் அடிப்படையில் பாதிக்கப்பட்டவரின் அடையாளங்கள் வெளிப்படத்தப்படக்கூடாது எனும் அடிப்படையில் இது புரிந்துகொள்ளப்படக் கூடியதுதான்.
அன்றைய நிலையில் மருத்துவப் படிப்பு மாணவியும் அவரது கல்லூரித் தோழரும் ‘உதிரிப் பாட்டாளி’ சமூக வகுப்பைச் சேர்ந்த சில குற்றவாளிகளால் வன்பாலுறவுக்கு உள்ளாக்கப்பட்டார்கள் எனும் தரவே நிதர்சனமாக ஊடகங்களில் பிரதானமாக முன்வைக்கப்பட்டது.
மருத்துவப் படிப்பு, பொறியியல் படிப்பு, கணினிப் படிப்பு போன்றன எந்த மத, சாதியைச் சார்ந்தவர்களாயினும் அது மத்தியதர வர்க்கத்தினரோடு வைத்துப் பார்க்கத் தக்கதாகத்தான் உலகப் பொதுமனத்தில் பதிந்திருக்கிறது. இந்த ஆர்ப்பாட்டங்களில் கலந்து கொண்டவர்கள், கோபமுற்றவர்கள் பெருநகர்க் கலாச்சாரம் சார்ந்தவர்கள்தான். மக்கள் திரள் ஆர்ப்பாட்டங்களில் கலந்து கொண்டவர்களில் பெரும்பான்மையோர் கல்லூரி மாணவிகளும் அலுவலர்களும் 'மத்தியதர வர்க்க' குடும்பத் தலைவர்களும் தலைவியரும்தான். இங்கு ‘மத்தியதர வர்க்கம்’ என்பதனை ஒரு இழிசொல்லாகப் பாவிக்கவில்லை. சமூகவியல் அர்த்தத்திலேயே அதனைப் பாவிக்கிறோம்.
'மத்தியதர வர்க்கம்' என்பது தமது வாழ்வு குறித்த பிரக்ஞை கொண்ட வர்க்கம். சமூகத்தில் மாணவர்கள் பகுதி என்பது ஒரு உணர்ச்சிவசமான, கோபம் கொண்ட மக்கள் பகுதி. தமது வாழ்பனுபவங்களில் இருந்து தம்மைப் பாதுகாத்துக் கொள்ளும் பிரக்ஞையிலிருந்தே இவர்கள் வன்பாலுறவுக்கு எதிராக உணர்ச்சிவசமாகக் கிளர்ந்தார்கள் என நம்மால் புரிந்து கொள்ள முடியும்.
வன்பாலுறுவு மேற்கொள்ளப்பட்ட முறை, மாணவியின் உடல் அடைந்த வதை, அவரது மரணம் போன்றன இந்திய சமூகத்தையும் உலக சமூகத்தையும் உணர்ச்சிவசமான நிலையில் வைத்திருந்தன. இந்த நிலைமையில்தான் இங்கிலாந்தின் சேனல் நான்கு தொலைக் காட்சித் தொகுப்பாளர் ஜோன் ஸ்நோ இந்திய நாவலாசிரியரும் நடவடிக்கையாளருமான அருந்ததி ராயுடன் ஒரு உரையாடலை மேற்கொண்டார்(1). மூன்று நிமிடங்களே வரும் அந்த உரையாடல் மிகப்பெரும் விவாதங்களை இந்திய ஊடகங்களில் தூண்டிவிட்டது.
அருந்ததி ராய் இந்திய தேசத்தின் விரோதி எனச் சித்தரிக்கப்பட்டார். அருந்ததி ராய் பிரச்சினையை சாதியமயப்படுத்துகிறார் எனவும், அதனை வர்க்கப் பிரச்சினையாக ஆக்கி திசைதிருப்புகிறார் எனவும், இந்திய ராணுவத்துக்கும் காவல்துறைக்கும் எதிராக அதனைப் பாவிக்கிறார் எனவும் இதன் மூலம் வன்பாலுறவு புரிந்தவர்களுக்கு அணுசரணையான பார்வையை அருந்ததி ராய் முன்வைக்கிறார் எனவும் அவர் கடுமையான விமர்சனங்களுக்கு உள்ளாக்கப்பட்டார்.
அருந்ததிராய் என்ன பேசினார் எனப் பார்ப்பதற்கு முன்னால், வன்பாலுறவு மற்றும் உடலுக்கு எதிரான வன்முறை மற்றும் சித்திரவதை தொடர்பாக இந்திய அரசு-காவல்துறை- இராணுவம் என்ன பார்வையையும் நடத்தைகளையும் கொண்டிருக்கிறது என நாம் தரவுகளைத் திரட்டிக் கொள்வோம்.
இதே வன்பாலுறவு, உடலுக்கு எதிரான வன்முறை, சித்திரவதை குறித்து பகாசுர ஊடகங்கள் என்ன பார்வை கொண்டிருக்கின்றன எனப் பார்த்துக் கொள்வோம். இதே வன்பாலுறவு, உடலுக்கு எதிரான வன்முறை, சித்திரவதை தொடர்பாக பாலிவுட், மாலிவுட், கோலிவுட் திரைப்பட நடிக-நடிகையர்-இயக்குனர்கள் என்ன பார்வையைக் கொண்டிருக்கிறார்கள் எனவும் பார்த்துக் கொள்வோம். இதனோடு சாதி, இனம்,வர்க்கம் போன்றன வன்பாலுறவு, உடலுக்கு எதிரான வன்முறை, சித்திரவதை போன்றவற்றில் வகிக்கும் பாத்திரத்தினையும் நாம் புரிந்து கொள்ள முயலுவோம்.
கயர்லாஞ்சி தலித் பெண்களின் மீதான வன்பாலுறவு முதல் தமிழகத்தில் நடைபெற்ற பழங்குடியினப் பெண்களின் மீதான மேல் சாதிய மற்றும் காவல்துறை வன்பாலுறவு தொடர்பான இந்திய அரசு- திரைத்துறை- இந்திய மத்தியதர வர்க்கத்தின் பார்வை என்ன? இந்தச் சம்பங்கள் ஏன் நாடு தழுவிய எழுச்சியை, விவாதங்களை, ஊடகக் கவனத்தை உருவாக்காது போயின? காஷ்மீர், ஈழம் போன்ற நிலப்பரப்புக்களில் இந்திய ராணுவத்தினர் வன்பாலுறவை மேற்கொண்டது குறித்து ஏன் நாடு தழுவிய மக்கள் எழுச்சி, ஊடக விவாதங்கள் தோன்றவில்லை? வன்பாலுறவை பணிந்து போகச் செய்வதற்கான ஒரு ஆயுதமாக இந்தியக் காவல்துறையும் இராணுவமும் பாவிப்பது பற்றிய பொதுவிவாதமும் கோபமும் ஏன் இந்திய ஊடகங்களிலும் நடிக-நடிகையரிடமும் தோன்றவில்லை? தோன்றவில்லை எனில், இதில் சாதி, வர்க்கம், மதம், இனம், அரசு, காவல்துறை, இராணுவம் போன்றவற்றுக்குப் பாத்திரம் இல்லை என எவர்தான் மறுக்க முடியும்?
வன்பாலுறவு, இரத்தம் தெறிக்கும் கொலைவெறியாட்டம் என்பதை குத்தாட்டம், டூயட், குரூப் சாங் கொண்டாட்டம் போன்றவற்றை ஓத்ததாக திரைப்படத்தில் சித்தரிக்க திரைப்பட இயக்குனர்களை, தயாரிப்பாளர்களை ஊக்குவித்த மனநிலை என்ன? இந்த மனநிலையைக் கேள்விக்கு உட்படுத்தாமல் அதனது பகுதியாக இருக்கிற நடிக-நடிகையரின் ஆர்ப்பாட்ட அறிக்கைகளில் என்ன தார்மீக அறம் இருக்க முடியும்? பிஜேபியும் இந்திய தமிழ் சினிமா நடிகர்களும் நடிகையரும் கோருகிற மாதிரி பிரச்சினை வன்பாலுறவுக்கு மரணதண்டனை வழங்குவதா இல்லையா என்பது அல்ல, மாறாக வேறுபட்ட பாலினங்களுக்கு இடையிலான சமஉரிமையை நிலைநாட்டுவதுதான் பிரச்சினை.
பெண்களின் உரிமைக்கு மிகப் பெரிய சவாலாக இங்கு இந்துத்துவமும் பிஜேபியும் ஆர்எஸ்எஸ்சும் இருக்கின்றன. பெங்களுர் வன்முறை அதற்குச் சாட்சி. வன்பாலுறவை அமைப்பாக்கியதாக இந்தியக் காவல்துறையும் இராணுவமும் இருக்கிறது.
பூமிக்குக் கிழிருக்கும் அனைத்தையும் அறத்தின் கீழ் நிரல்படுத்துகிற எழுத்தாளர் ஈழத்தில் இந்திய ராணுவம் பாலியல் வன்பாலுறவு நிகழ்த்தவில்லை என தேசபக்தி தோன்ற உணர்ச்சிவசப்படுகிறார். அரைநூற்றாண்டைத் தாண்டிய ஒரு முதியருக்கு 13 வயதுப் பெண் பாலுறவு அனுபவத்தைப் போதிக்கும் கதையை இன்னொரு எழுத்தாளர் எழுதுகிறார். இவற்றுக்கு தத்துவம் மற்றும் கலை விளக்கம் தர ஒரு கூட்டமும் திரண்டு நிற்கிறது. பள்ளிப் பருவ மாணவ மாணவியர் வீட்டை விட்டு ஓடிப்போவதையும் 15 வயதுச் சிறுவனும் சிறுமியும் உதட்டு முத்தம் தருவதையும் காதல் காவியம் எனப் படமெடுக்க இயக்குனர் இமயங்களும் மகா இந்திய இயக்குனர்களும் இருக்கிறார்கள்.
இலங்கைச் சூழலில் ஒரு விவாதம் நடந்தேறியிருக்கிறது. இந்த விவாதத்தில் மாவோயிஸ்ட்டாகத் தம்மைக் கோரிக் கொள்பவரும் பெண்ணிலைவாதியாகத் தம்மை இனங்காட்டிக் கொள்பவரும் கலந்து கொண்டார்கள். இவர்களும் பெண்நிலைவாதம் தான் பேசினார்கள். அருந்ததிராயின் பார்வைக்கு முற்றிலும் எதிர்நிலையில் இவர்கள் வந்து நின்றார்கள்.
இலங்கைச் சூழலில் சில தரவுகளை நாம் தொகுத்துக் கொள்வோம் : விடுதலைப் புலிகளுக்கும் இலங்கை இராணுவத்துக்கும் போர் நடந்து கொண்டிருந்த காலங்களிலும் சரி, போரின் இறுதிக் கட்டத்திலும் சரி, இலங்கை இராணுவம் வன்பாலுறவில் ஈடுபட்டதற்கான சான்றுகள் கிருஷாந்தி, கோணேஸ்வரி. இசைப்பிரியா போன்றோரது மரணங்களை முன்வைத்துப் பதிவு செய்யப்பட்டிருக்கிறது. போர் முடிவு பெற்ற பின்னாட்களிலும் கிறீஸ்பூதம் எனும் பெயரில் பெண்களின் மீதான பாலியல் அத்துமீறல்கள் இலங்கை இராணுவத்தினால் மேற்கொள்ளப்பட்டன. இவ்வாறான ‘கீர்த்தி வாய்ந்த’ இலங்கை இராணுவம் தமது ஆயுதப் பிரிவுக்கு அல்லாமல் சேவைப் பிரிவுக்கென முறைசாரா முறையில் ஈழத்தமிழ்ப் பெண்களை இராணுவப் பயிற்சிக்கு எடுத்துக் கொண்டது. இலங்கை இராணுவம் இலங்கை அரசின் அரசியல் முடிவுக்குத்தக மேற்கொண்ட ஒரு தந்திரோபாய நிகழ்வு இது.
இதனை தமிழ் தேசியக் கூட்டமைப்பின் நாடாளுமன்ற உறுப்பினரொருருவர் வன்பாலுறவுப் பிரச்சினையாக முன்வைத்தார். தமிழ் உளவியலாளர் ஒருவர் தமது தொழில்சார் அறத்துக்கு அப்பால் சென்று இந்த நியமனத்தின் அரசியல் குறித்தும் அபிப்பிராயம் சொன்னார். தமிழ் அரசியலின் வலதுசாரி சனாதன முகம் இதனை வைதீக மரபுபுபடி அணுக, உளவியலாளர் அரச சார்பு அரசியலை முன்வைத்தார். 'பொருளாதார ஆசைகாட்டி இராணுவத்தில் சேர்க்கப்பட்ட பெண்கள் இப்போது விருப்பப்பட்டுத்தான் இராணுவத்தில் இருக்கிறார்கள்' என அவர் ‘அரசியல்’ அறிக்கை வெளியிட்டார். உளவியலாளராக அவருக்குக் கொடுக்கப்பட்ட பணி அவர்களுக்கு 'சாமியாட்டம் - சன்னதம்' வந்திருக்கிறதா எனக் கண்டு அதனை அகற்றி நிவர்த்தி செய்வதுதான். இதில் மாற்றுக் கருத்து - மாவோயிசம் - பெண்நிலைவாதம் என அனைத்துத் தரப்பினரும் இலங்கை இராணுவத்தின் அரசியலையும் அதனது கடந்த கால பாலியல் வன்பாலுறவு அவமரபையும் முற்றிலும் காணாததுபோல் மறுலித்து இதனைக் ‘கற்பு’ தொடர்பான விவாதமாக மாற்றி, தமிழ்தேசியக் கூட்டமைப்பைக் காயந்து கொண்டிருந்தார்கள்.
முன்பாக ஒரு புகலிடப் பெண்நிலைவாதி சிங்கள ராணுவத்தினரின் வன்பாலுறவைக் குறித்துப் பேசும்போது, அவர்கள் பாலுறவு வறுமையில் இருக்கிறார்கள் என்பதனைப் பரிவுடன் பரிசீலிக்க வேண்டும் எனவும் எழுதினார். சின்மயிக்கு ஆதரவாகக் கிளர்தெழுந்த பெண்ணுரிமை இலக்கியவாதிகள் இதில் கள்ள மௌனம் காத்தார்கள்.
பெண்களின் உதடுகளிலிருந்து வருகிற அனைத்துச் சொற்களும் பெண் விடுதலையை நோக்கம் கொண்ட பெண்ணிலைவாதம் அல்ல எனும் தெளிவு இப்போது பெண்ணிலைவாத விவாதங்களைக் கவனித்து வந்திருப்பவர்களுக்குச் சாதாரணமாகவே புரியவந்திருக்கிறது.
சாதி, வர்க்கம், மதம், இனம், அரசு (காவல்துறை-இராணுவம்) என அனைத்தும் ஊடுறுவிச் செல்வதாகத்தான் இன்று பெண்ணிலைவாதம் இருக்கிறது. குமாரி ஜெயவர்த்தனா மூன்றாம் உலகப் பெண்ணிலைவாதம் எனவும், கேட் மில்லட் மற்றும் ஷீலா ரோபாத்தம் போன்றவர்கள் மார்க்சியப் பெண்ணிலைவாதம் எனவும், பாமா மற்றும் மாலதி மைத்ரி போன்றவர்கள் தலித்தியப் பெண்ணிலைவாதம் எனவும் பேசுகிறார்கள். சாதி, வர்க்கம், இனம் போன்றவற்றை முன்வைத்த பெண்நிலைவாதத்திற்கு இருக்கிற முற்போக்குப் பாத்திரம் என்பது மதத்தை அடிப்படையாக வைத்த பெண்நிலைவாதத்துக்கு இல்லை. ஏனெனில், அனைத்து மதங்களும் அதனது அற அடிப்படைகளையும் பண்பாட்டு அளவுகோல்களையும் பெண் ஒடுக்குமுறையின் மீதுதான் கட்டமைத்திருக்கின்றன. இந்துமதம், இஸ்லாம், கிறித்தவம், யூதமதம் என இவற்றுக்கிடையில் பெண் ஒடுக்குமுறையைப் பொறுத்து பெரிய வித்தியாசங்கள் ஏதும் இல்லை.
மீளவும் நாம் வல்லுறவுக்கு உள்ளாக்கப்பட்ட மாணவி குறித்த தரவுகளுக்கு வருவோம்.
இப்போது அவருடைய பெயரும் குடும்பமும் குறித்த அடையாளங்களை அப்பெண்ணின் தகப்பனார் வெளிப்படுத்தியிருக்கிறார். இங்கிலாந்தின் டெய்லி மிரர் பத்திரிக்கையின் ஞாயிறு பதிப்பான சன்டே மிரர் பத்திரிகைக்கு அவர் அளித்த பிரத்தியேகமான நேர்காணல்(2) ஒன்றில் தமது குடும்ப அடையாளத்தை அவர் தெரிவித்திருக்கிறார். வன்பாலுறவுக்கு ஆளாகி மரணமுற்ற பெண்ணின் பெயர் ஜோதி சிங். குடும்பத்தின் மூத்த பெண். தந்தையின் பெயர் பத்ரி. தாயாரது பெயர் ஆஷா. ஜோதிக்கு இரு சகோதரர்கள் இருக்கிறார்கள். வன்முறைக்கு உள்ளாகி ஜோதியைக் காப்பாற்ற முயன்ற அவரது நண்பரது பெயர் அவிந்த்ரா. ஜோதிக்கும் அவிந்த்ராவுக்கும் நட்பு தவிர எந்தவிதமான உறவும் இல்லை. ‘இருவரும் வேறு வேறு சாதி சார்ந்தவர்கள் என்பதால் அவர்களுக்குள் திருமணம் என்ற பேச்சுக்கே இடமில்லை’ என்கிறார் மரணமுற்ற பெண்ணின் தந்தையான பத்ரி.
உத்தரப் பிரதேசத்தைச் சேர்ந்த பத்ரி சிறு விவசாயி. எண்பதுகளில் தில்லிக்குப் பெயர்ந்த அவரது மாத வருமானம் 5,700 ரூபாய்கள் மட்டுமே என்கிறார் அவர். உத்தரப்பிரதேசத்திலுள்ள தனக்கு இருந்த நிலத்தை விற்றே தனது மகளைப் படிக்க வைத்ததாகச் சொல்கிறார் அவர். ‘எனது மகள் மீது எந்தத் தவறும் இல்லை. அவரது பெயரை வெளியிடவும் எனக்கு ஆட்சேபமில்லை. தன்னைக் காத்துக் கொள்ளப் போராடிய மறப்பெண் அவள்’ என்கிறார் பத்ரி.
பத்ரியின் தரவுகளின்படி வன்பாலுறவுக்கு உள்ளான மாணவி மத்தியதரவர்க்கப் பெண் எனச் சொல்ல முடியாது. ஒரு வறிய, எளிய விவசாயியின் மகள் அவள். அந்தக் குடும்பத்தின் வருமானம் ஒரு வறிய குடும்பத்தினுடையதாகவே இருக்கிறது. மிகுந்த சிரமத்தினிடையில் பிசியோதெரபி இறுதியாண்டு படித்துக் கொண்டிருந்த ஜோதி சிங், குடும்ப வருமானத்திற்காக தற்காலிகமாக வேலையும் செய்து கொண்டிருந்தார். முழுமையான மருத்துவராகி வெளிநாடு செல்வதும் ஜோதியின் கனவாக இருந்தது என்கிறார் அவரது தந்தையான பத்ரி.
இந்தத் தரவுகள் அனைத்தும் 2013 ஜனவரி 5 ஆம் நாள் இலண்டன் டெய்லி மிரர் பத்திரிக்கை நேர்முகத்தின் பின்பு வெளியான தரவுகளாகும்.
அருந்ததி ராய் தனது சேனல் நான்கு நேர்முகத்தில் (21, டிசம்பர் 2012) அப்படி என்னதான் சொன்னார்? அருந்ததிராயின் நேர்காணலில் அவர் சொன்ன விஷயங்கள் பின்வருவன :
(1). இந்தக் குற்றம் மட்டும் ஏன் இவ்வளவு ஆத்திரத்தை உருவாக்கி இருக்கிறது? மத்தியதர வர்க்கப் பெண்ணின் மீதான. ஏழைக்குற்றவாளிகளின் தாக்குதல் எனும் கருத்து நிலையே இவ்வளவு பெரிய கொந்தளிப்புக்குக் காரணமாக இருக்கிறது. இதே வேளை மேல்சாதியினரதும் காவல்துறை, இராணுவம் போன்றவர்களினதும் வன்பாலுறுவுகள் தண்டிக்கப்படுவது என்பது இல்லை.
(2). இந்தப் போராட்டங்கள் மேலதிகமான கண்காணிப்பு கொண்ட சட்டங்களுக்கு வழிவகுக்கலாம்; நான் ஏற்கனவே சொபன்னபடி இதுவும் மத்தியதரவர்க்கப் பெண்களின் பாதுகாப்புக்கானதே ஆகும். காவல்துறையினர் கிராமங்களை எரிக்கும்போதும், கும்பலாக வன்பாலுறவில் ஈடுபடும்போதும் சட்டங்கள் ஏதும் செய்வதில்லை. நேரடியாக பெண்களின் வாய்மொழிகளில் இதனை நான் கேட்டிருக்கிறேன். பெண்கள் இத்தகைய வன்முறைகளில் கொல்லப்பட்டும் இருக்கிறார்கள்
(3). இந்தியாவை ஊதிப் பெருக்கிக் காட்டும் திரைப்படக்காரர்களும் இசைத் தொழிற்துறை சார்ந்தவர்களும் காண்பிப்பது ஒரு வகையில் நீலப்பட வகை உற்பத்திகளாகும். கொலைவெறித் தாக்குதல்கள், பெண்களின் மீதான வன்முறை, கொண்டாட்டம் போன்ற சேற்றுச் சண்டைகளால் நிறைந்தது இந்தியத் திரைப்படங்கள். ஏழ்மையிலுள்ளவர்கள் குற்றவாளிகள் எனும் கருத்தையே இவர்களும் உருவாக்குகிறார்கள்
(4). நிலப்பிரபுத்துவ இந்தியாவானது பெண்களின் மீதான அவமரியாதையும் வன்முறையும் கொண்ட மரபைக் கொண்டது. இப்போது காவல்துறையும் இராணுவமும் சட்டிஸ்கார், மணிப்பூர், காஷ்மீர் போன்ற இடங்களில் வன்பாலுறவை ஒரு ஆயுதமாகக் கைக்கொள்கிறது. இதை இவர்கள் அதிகாரபூர்மாகச் செய்கிறார்கள். இவர்களைக் காப்பதற்குச் சட்டங்களும் இருக்கின்றன. ஏழைகளுக்கும் பணக்காரர்களுக்குமான இடைவெளி அதிகரித்து வருகிறது. பெண்களின் மீதான வன்முறை ஊடகங்கள் உள்பட அதிகரித்து வருகிறது. மத்தியதர வர்க்கத்தவரோ அல்லது விளிம்புநிலையிலுள்ளவர்களோ அனைவரும் பாதிப்புக்கு உள்ளாகிறார்கள். தலித் பெண்களே அதிகமும் பாதிப்புக்கு உள்ளாகிறார்கள். அவர்கள்தான் மிகவும் நிர்க்கதியாக விடப்பட்டிருக்கிறார்கள். அவர்கள் மனத்தளவில் மிகுந்த ஆத்திரம் கொண்டிருக்கிறார்கள்.
அருந்ததிராய் மிக நிதானமாக, உணர்ச்சிவசப்படுதலுக்கு ஆளாகாமல் இந்தப் பிரச்சினையை அணுகியிருக்கிறார். தில்லி வன்பாலுறுவு ஒரு குற்றநடவடிக்கை என வலியுறுத்தியபடியே இப்பிரச்சினையிலுள்ள தொடர்புபட்ட அம்சங்கள் அனைத்தும் குறித்து அவர் பேசுகிறார். இந்திய பொதுச் சமூகமும் ஊடகங்களும் திரைப்படம் சார்ந்தவர்களும் உருவாக்கும் பெண்களின் மீதான வன்முறை உளவியல் கட்டமைப்பை அவர் பேசுகிறார். வறிய மனிதர்களை இயல்பாகவே குற்றவாளிகள் எனக் கட்டமைப்பது குறித்துச் சுட்டிக் காட்டுகிறார். மத்தியதர வர்க்கப் பெண்கள், விளிம்பு நிலைப் பெண்கள், தலித் பெண்கள் என அனைவரிடமும் உருவாகியிருக்கும் ஆத்திரமும் கோபமும் குறித்துப் பேசுகிறார். வன்பாலுறவு தம்மைச் சுற்றிலும் நிலவும்போது, அது அரசு நிறுவனங்களின் திட்டமிட்ட ஆயுதமாக இருக்கும்போது, அவை குறித்துப் பேசாமல், அவை குறித்த விவாதங்களும் கொந்தளிப்புகளும் எழாமல், குறிப்பிட்ட இப்பிரச்சினை மட்டும் நாடுதழுவிய பிரச்சினையாக, உலகு தழுவிய பிரச்சினையாக எவ்வாறு ஆனது, இதனது வர்க்க-சாதிய கருத்துநிலை என்ன என்பது குறித்துத்தான் அருந்ததிராய் பேசுகிறார். அருந்ததிராய் பேசுகிற அனைத்தும் தரவுகளை ஆதாரமாகக் கொண்டது. உலக மனித உரிமை அமைப்புக்களான அம்னஸ்டியும், சர்வதேச மனித உரிமை கண்காணிப்புச் சபையும் இவைகளை ஆவணப்படுத்தியிருக்கின்றன. பழங்குடிப் பெண்கள், தலித் பெண்கள், காஷ்மீர் பெண்கள் மீதான காவல்துறை மற்றும் இராணுவ வன்பாலுறவுகள் குறித்த ஆவணப்படங்கள் இருக்கின்றன. தேசபக்த வெறிக் கூச்சல் எழுபுபுகிற சிலரைத் தவிர மனசாட்சியுள்ள எவரும் இதனை ஏற்கவேண்டும்.
அருந்ததிராய், ஜோதி எனும் தனித்த பெண் குறித்ததாக இப்பிரச்சினையை அணுகவில்லை.
ஜோதி பிரச்சினையில் இந்திய அரசினது நடவடிக்கைகள் விதிவிலக்கானது. அவர் சிங்கப்பூருக்குச் சிகிச்சைக்குத் தனி விமானத்தில் கொண்டு செல்லப்பட்டதும் விதிவிலக்கானது. இந்தியாவுக்கு இந்தச் சம்பவம் உலக அளவில் தேசிய அவமானத்தைக் கொண்டுசேர்த்தது. இந்தியத் தலைநகரின் நிலையே இதுவாயின் குக்கிராமங்களில் பெண்களின் நிலை என்னவாயிருக்கும் எனும் அவமானத்தை இது இந்திய அரசுக்குத் தந்தது.
தில்லி சம்பவத்தின் பின்னான ‘தில்லி எழுச்சியின் பின்னிருந்த கருத்துநிலை’ என்பது குறித்துத்தான் அருந்ததிராய் பேசுகிறார். அந்தக் கருத்து நிலையின் விடுபட்ட தொடர் கண்ணிகள் குறித்துத்தான் அருந்ததிராய் பேசுகிறார். வன்பாலுறவு குறித்த தேசிய விவாதம், பாலின சமத்துவம் குறித்த தேசியவிவாதம், இந்தியப் பெண்நிலைவாதம் குறித்த தேசிய விவாதம் அருந்ததிராய் முன்வைக்கும் கருத்துநிலையில் இருந்துதான் வளர்ச்சி பெறமுடியும்.
இந்தியப் பெண்நிலைவாதத்தின் மிகச்சரியான அடிப்படைகளே அருந்ததிராயின் சொற்களில் வெளிப்பட்டிருக்கிறது. உலக அளவில் இதனைக் கொண்டு சேர்த்ததற்காக இந்தியர்கள் எவரும் அருந்ததிராய்க்கு இதற்காக நன்றி சொல்ல வேண்டும்.
ஆதாரங்கள் :
(1). Arundhati Roy speaks out against Indian rape culture : Channel 4 Interview : London : 21 December 2012.
(2). I want the world to know my daughter's name is Jyoti Singh : Sunday Mirror : London : 5 January 2013.
•This e-mail address is being protected from spambots. You need JavaScript enabled to view it•
•<• •Prev• | •Next• •>• |
---|