மார்கெஸ்: மகாகவி, மாமுனிவர், ஒப்பற்ற ரசவாதி
புனைகதை ஒன்றில் ‘நம்பத்தக்க’ வடிவில் கதை சொல்லி வருபவரிடையே அல்லது இடையிடையே மிகையான அல்லது அறிவுக்குப் பொருந்தாத நிகழ்வுகளைச் சேர்த்து வழங்குதல், புத்திலக்கிய மரபு ஒன்றை உருவாக்கியுள்ளது. இருபதாம் நூற்றாண்டின் ஐம்பதுகளில் ஜெர்மானியப் புதினங்களில் இப்போக்கு காணப்பட்டது. ஆனால் இன்று மத்திய அல்லது லத்தீன் அமெரிக்க இலக்கியத்தின் பொற்காலத்தைச் சேர்ந்த புகழ்பூத்த நாவலாசிரியர்கள், குறிப்பாக, ஆஸ்துரியாஸ் (Miguel Angel Asturias), கார்பென்டியர் (Alejo Carpentier), மார்கெஸ் (Gabriel Garcia Marquez) ஆகியோரின் படைப்புகளில்தான் இந்த அடையாளங்கள் சிறப்பாக, பாங்குடன் காணப்படுகின்றன. மார்கெஸின் ஒரு நூறாண்டுத் தனிமை (Cien anos de soledad)யில் மாயப் புறவாய்மை (Magic அல்லது Magical realism) சிறப்பிடம் பெறுகிறது. சான்றாக, இந்தப் புதினத்தில் ஒரு பாத்திரம், தோய்த்தெடுத்த துணியை வரிசையில் உலர்த்தும்போது வானுலகம் நோக்கிப் புறப்படும்! இந்த ‘மாயப் புற வாய்மை’ எனும் சொல் அல்லது தொடர், வேறுபட்ட பண்பாடுகளைப் புலப்படுத்தும் படைப்புகளைத் தொட்டு விரிகிறது. அதாவது, ‘எதார்த்தம்’ (புறவாய்மை) எனும் கூட்டை உடைத்து வெளியே வந்து பழங்கதை (Fable), மக்கள் மரபுக்கதை (Folktale) இல்பொருட் கற்பனை (Myth) ஆகியவற்றின் உயிராற்றல்களிலிருந்து ஆக்கம் பெற்று அதே பொழுதில் நிகழ்காலச் சமூகத்துக்கு இயைந்ததொரு கூற்றை உள்ளார்ந்த கருவாக இறுத்துதல் ஆகும்.
‘ஒரு நூறாண்டுத் தனிமை’ வெளிவந்த நாளிலிருந்து (1967) இன்றுவரை உலகெங்கும் பரவலாக அறியப்பட்ட, பல மொழிகளில் ஆக்கம் பெற்ற புதினம். (அண்மையில் இந்தி மொழியில் வெளிவந்துள்ளது.) அறிவார்ந்த வாசகர்களால் மட்டுமின்றித் தேர்ந்த திறனாய்வாளர்களாலும் போற்றப்படும் பெருமை பெற்றது இந்த நூல். விவிலியத்தில் உலகத் தோற்றம் பற்றிக் கூறும் முதற்பிரிவு(Genesis)க்குப் பிறகு மனிதகுலமனைத்தும் படிக்க வேண்டிய நூல் இதுவென ஓர் ஆய்வாளர் கூறுகிறார். ஹோமரின் ஒடிஸியுடன் ஒப்பிடுகிறார் மற்றொருவர். கற்பனையின் உச்சத்தைத் தொடும் இந்நூலில் எதார்த்தமும் மாயத் தன்மையும் பின்னிப்பிணைந்துள்ளதை வியக்கிறார் இன்னொருவர். களிக்கூத்தும் வரலாறாகும் இப் புனைகதையின் காவியத் தன்மையை வியக்கிறார் வேறொருவர். ஆம் மார்கெஸ் ஒரு மகாகவி, மாமுனிவர், ஒப்பற்ற ரசவாதி.
மகொந்தோ எனும் சிற்றூரில் கதை தொடங்குகிறது. ‘ஒரு நூறாண்டுத் தனிமை’ இந்த ஊரின் வரலாற்றைக் கூறுகிறது. அங்கு ஒரு குடும்பம். அதன் தலைவர் புயெந்தியா. வெளியுலகத்துடன் தொடர்பேதுமின்றி வாழும் இந்த ஊருக்கு அவ்வப்போது வருகைதரும் நாடோடிகள், புதியன கொண்டு வருவோர் ஆகின்றனர். அவர்கள்தாம் பனிக்கட்டி, தொலைநோக்கி போன்றவற்றை இங்கு அறிமுகப்படுத்துகின்றனர். புதியனவற்றின் மீது புயெந்தியாவுக்கு ஆர்வம் அதிகம். அவர் தனிமை நாட்டம் உடையவர். ஆயினும் பலவற்றையும், குறிப்பாக விளங்காதவற்றை, புதிர்களை ஆராய்ந்தறிவதில் ஈடுபாடுகொண்டவர். இப்பண்புகள் அவருடைய வழித்தோன்றல்களையும் தொற்றிக்கொள்கின்றன. அவருடைய முதல் மகன், அவரைப் போன்றே உறுதியான உடற்கட்டு வாய்ந்தவர். சிந்திக்காமல் செயலாற்றும் பண்பும் அவரிடமிருந்து பெற்றதுதான். இரண்டாவது மகன், தீவிரத்தன்மையும் விசித்திரப் போக்கும் உடையவர். இவையும் தந்தை அளித்த கொடைகள்தாம். நாளடைவில் அந்தச் சிற்றூர் தன் எளிய தன்மையை, தனிமையை இழக்கிறது; அப்பகுதியிலுள்ள பிற ஊர்களுடன் தொடர்பு ஏற்படுகிறது. ஊர்கள் சேர்ந்து நாடு உருப்பெறுதல்; உள்நாட்டுக் கலகங்கள். அமைதியாக இருந்த மகொந்தோ முன்பு அறியாத வன்முறைகளையும் சாவுகளையும் எதிர்கொள்கிறது. புயெந்தியாவின் இரண்டாவது மகன், தகாதவழி செல்கிறார். வசைப்பழி ஏற்கிறார். உள்ளாட்சி அரசுகள் அடிக்கடி கைமாறுகின்றன. ஒரு கட்டத்தில், அக்குடும்பத்தின் மிகக் கொடியவர் எனத்தக்க ஒருவர் சர்வாதிகாரியாகச் செயல்படுகிறார். விளைவாக அவருக்கு மரண தண்டனை கிடைக்கிறது. அடுத்து ஒரு மேயர் நியமிக்கப்படுகிறார். அவருடைய நிர்வாகம் அமைதியாகச் செல்கிறது. ஆயினும் மற்றொரு கலகம் வெடிக்கிறது; அவர் கொல்லப்படுகிறார். அவருக்குப் பின் கலகம் முடிவுக்கு வருகிறது; சமாதான உடன்பாடு கையெழுத்தாகிறது.
நூறாண்டுக்கு மேற்பட்ட காலத்தைத் தொட்டுச் செல்லும் இக்கதையில் புயெந்தியாக்களின் வாழ்க்கை நிகழ்வுகள், பிறப்புகள், திருமணங்கள், சாவுகள், காதல் அல்லது காமக் களியாட்டங்கள் அனைத்தும் இடம்பெறுகின்றன. அந்தக் குடும்பத்தில் சிலர் மூர்க்கர்கள். சிலர் கொள்ளையர்கள். வேசைகளைத் தேடிச் செல்வோர் சிலர். காமக் களியாட்டங்களில் திளைப்போர் சிலர். அமைதியாக வாழ்வோர் எனச் சிலர். தனிமையில் நாட்டமுடையோர் எனச் சிலர். அறைக்குள் முடங்கிக்கிடப்போர் எனச் சிலர். பழைய சுவடிகளைப் படிப்பதில் ஆழ்ந்திருப்போர் எனச் சிலர். கதையில் வரும் பெண் மக்களிலும் சிலர் வேடிக்கையானவர்கள். சிலருக்கு ஆரவார வாழ்க்கையில் ஈடுபாடு. உடன்பயிலும் மாணவிகளில் எழுபத்திரண்டு பேரை வீட்டுக்கு அழைத்து வரும் பெண் ஒருத்தி. கணவனுடன் சுகித்திருக்க விரும்பும் ஒருத்தி, தனக்கென உருவாக்கும் இரவு உடையில் ஒரு துளை-காற்சுவடு பிரியும் இடத்தில்-வைத்துத் தைத்து அணிந்துகொள்கிறாள்.
பெருவாழ்வு வாழப் பிறந்தவர்கள் என அக்குடும்பத்தினர் நம்புகின்றனர். அந்த இல்லத்தின் தலைவி மிகுந்த திறமையானவர். வேறுபாடுகள் இருப்பினும் குடும்பத்தின் ஒற்றுமையைக் கட்டிக்காப்பதில் கவனமாயிருப்பவர். ஆயினும் ஊரையே புதுமைகள் சூழ்ந்து தழுவும்போது சீர்குலைவு ஏற்படுகிறது. பெரும் வாழைத் தோட்டங்கள் உருவாகின்றன. உடன் விளைவாக ஏகாதிபத்திய முதலாளித்துவம் அப்பகுதியை விழுங்குகிறது. அத்தோட்டங்களின் முதலாளிகளாக அமெரிக்கர்கள் வருகின்றனர். தமக்கென வேலியிட்ட குடியிருப்புகளை அமைத்துக்கொள்கின்றனர். தோட்டங்களில் வேலைசெய்வோரை மனிதாபிமானமற்ற முறையில் நடத்துகின்றனர். விளைவாக, வேலைநிறுத்தப் போராட்டங்கள். வழக்கம்போல ராணுவம், முதலாளிகளுக்கு ஆதரவாகக் களமிறங்குகிறது. ஆயிரக்கணக்கில் தொழிலாளர்கள் கொல்லப்படுகின்றனர். உடல்கள் கடலுக்குள் வீசப்படுகின்றன. உடனே ஓயாத மழை பொழிகிறது. ஐந்தாண்டுகள் நிற்காத மழை, வெள்ளப்பெருக்கு. மகொந்தோ உருக்குலைகிறது. வன்முறை ஒருபுறம். போலியான முன்னேற்றம் மற்றொரு புறம். ஊர் அழியத் தொடங்குகிறது. புயெந்தியாவின் குடும்பமும்தான். அழிவின் இறுதி. பழையனவற்றை அந்தக் குடும்பம் நினைத்துப் பார்க்கிறது. அது பழங் கனவு. நூல் நிறைவுறும்போது . . . கதை, தொடங்கிய இடத்துக்கே மீள்கிறது. அந்த ஊர் மீண்டும் ஒதுங்குண்டு நிற்கிறது. அந்தக் குடும்பத்தில் சிலர் முறையற்ற புணர்ச்சிவெறியில் திளைக்கின்றனர். வெளியுலகத்திலிருந்து தனிமைப்பட்டு தவித்தல் முழுமையாகிறது. நூலின் இறுதிக் காட்சி: புயெந்தியா குடும்பத்தில் எஞ்சிய ஒருவர், பழைய சுவடிகளை ஆராய்வதில் மூழ்கியிருக்கிறார். நிகழ்வுகள் அனைத்தும் முற்குறிக்கப்பட்டுள்ளதைக் காண்கிறார். அது ஒரு வட்டம். அந்தச் சுழலில் வருவன, நிகழ்ந்தன அனைத்தும் விதிக்கப்பட்டவை. ஆனால் அவை அனைத்தின் ஊடாக மாபெரும் ஓர் அழகு, ஒரு அவலம், ஒரு துயர் பின்னிப்பிணைந்து . . .
கதையின் காவியத் தன்மை, அதன் ஊடாக வரும் தொடர் உருவகங்கள் மூலம் சிறக்கிறது. அந்தக் குடும்பத்தின் இல்லம், அதன் வண்ணம், அதன் செல்வாக்கு, அந்த நாள் கொலம்பியாவின் அரசியல், பொருளாதார நிலையின் உருவகம். அது ஒரு மாளிகையாக உருப்பெறுதல் அங்கே குடியிருப்புகள் அமைவதையும் ஒரு நாடு பிறப்பதையும் உருவகப்படுத்துகிறது. அந்தப் பழைய நிழற்படம் (புகைப்படம்) முதலில் புனிதமானதாகக் கருதப்படுகிறது. நாளடைவில் அதன் பொருள் மாறுகிறது. அந்த நாடோடிகள், படைப்பாற்றலையும் முன்னேற்றத்தையும் அறிவியல் அற்புதங்களையும் உருவகப்படுத்துகின்றனர். அந்த அழிக்கவியலாச் சிவப்பெறும்புகள், கால வெளியை உணர்த்தக் கூடும்!
“அந்தரத்தில் எழச் செய்தல், பறத்தல், புலத் தொடர்பு இன்றியே தொலைவில் உள்ள பொருளை இயக்கும் திறன் இவையெல்லாம் இருபதாம் நூறாண்டின் ‘அரசியல்’ எதார்த்தங்களின் கூறுகளோ? ஏன், மார்கெஸின் செல்வாக்கு, The Satanic Verses (1988)இல் இழையோடுகிறதோ”.
ஒரு நூறாண்டுத் தனிமை
இயல் ஒன்று
பல ஆண்டுகளுக்குப் பிறகு, சுட்டுக் கொல்வதற்காகவே அனுப்பப்பட்ட படைக்குழுவினரை எதிர்கண்டபோது கர்னல் அவ்ரேலியானோ புயெந்தியா அந்தத் தொலை தூரப் பிற்பகலை நினைத்துக்கொண்டார். அன்றுதான் பனிக் கட்டியைக் கண்டுபிடிக்க அவருடைய தந்தை அவரை அழைத்துச் சென்றிருந்தார். அந்தக் காலத்தில் மகொந்தோ ஒரு சிற்றூர். தெளிந்த நீரோடும் ஓர் ஆற்றின்மீது வெயிலில் உலர்த்திய செங்கற்களைக்கொண்டு கட்டப்பட்டிருந்த இருபதே வீடுகள். ஆற்று நீரின் படுகை நெடுகிலும் வெண்ணிறக் கூழாங்கற்கள். அவை வரலாற்றுக் காலத்துக்கு முற்பட்ட முட்டைகளைப் போன்று காட்சியளித்தன. அந்த உலகு புதியது. பல பண்டங்களுக்குப் பெயர்கள் இடப்படவில்லை. அவற்றை அடையாளப்படுத்திக்காட்ட வேண்டிய நிலை. ஒவ்வோராண்டும் மார்ச் மாதத்தில் அலங்கோல ஆடைகள் அணிந்த நாடோடிகள் வந்து அந்தக் கிராமத்துக்கருகில் கூடாரங்கள் அமைத்துத் தங்குவர். குழலிசையும் மேளமுமாக ஆரவாரத்துடன் தமது புதிய கண்டுபிடிப்புகளைக் காண்பிப்பர். முதலில் காந்தக் கல்லைக் கொண்டுவந்தனர். தடித்த தோற்றமுடைய ஒரு நாடோடி வந்தான். தன் பெயர் மெல்குயாடெஸ் என அறிமுகப்படுத்திக்கொண்டான். கட்டுக்குள் கொண்டுவரப்படாத தாடி, துருதுருத்த கைகள், மாசிடோனியாவின் தேர்ந்த ரசவாதிகளின் எட்டாவது அதிசயம் தன்னிடம் இருப்பதாகத் துணிச்சலுடன் அறிவித்தான், செயல் விளக்கம் தந்தான். உலோக வார்ப்புப் பாளங்கள் இரண்டை இழுத்துக்கொண்டு வீடுவீடாகச் சென்றான். பானைகள், சட்டிகள், குறடுகள், கனல் தட்டுகள் என அவை வைக்கப்பட்டிருந்த இடங்களை விட்டுப் பெயர்ந்து உருண்டுவந்ததைக் கண்டு அனைவரும் வியந்தனர். ஆணிகள் கழன்றன, கீல்கள் ஆடின, உத்தரங்கள் கிரீச்சிட்டன. திருகாணிகள் துருத்தி வெளிவந்தன. நீண்ட காலத்துக்கு முன்பு தேடப்பட்டு தொலைந்துவிட்டதாகக் கருதப்பட்ட பொருள்கள் பொத்துக்கொண்டு வந்து விழுந்தன. எங்கும் பரபரப்பு, கொந்தளிப்பு. இவை மெல்குயாடெஸின் அந்த இரும்புத் துண்டுகள் செய்த மாயம். “பண்டங்களுக்கும் அவற்றுக்கே உரிய உயிர் உண்டு. அவற்றின் ஆன்மாக்களைத் தட்டி விழிக்கச் செய்ய வேண்டும். அவ்வளவுதான்” என்று அந்த நாடோடி கூறினான். அவன் மொழி கரடுமுரடாக, அழுத்த உச்சரிப்புடன் இருந்தது. ஹோஸே ஆர்காடியோ புயெந்தியாவின் கட்டற்ற கற்பனை எப்போதுமே இயற்கை அறிவுக்கும் அப்பால் செல்லும்; அற்புதங்கள், மாயாஜாலத்தைத் தாண்டி விரியும். இந்தப் பயனற்ற கண்டுபிடிப்பைப் பயன்படுத்திப் பூமியின் அடி ஆழத்திலிருந்து தங்கத்தை ஈர்த்துப் பிரித்தெடுக்க முடியுமென அவர் நினைத்தார். மெல்குயாடெஸ் நேர்மையான மனிதன். “அதற்கெல்லாம் இது பயன்படாது” என்று எச்சரித்தான். ஆனால் அந்தக்காலத்தில் ஹோஸே ஆர்காடியோ புயெந்தியா நாடோடிகளின் நேர்மையில் நம்பிக்கை இல்லாதவராயிருந்தார். எனவே தன்னுடைய கோவேறு கழுதையையும் இரண்டு வெள்ளாடுகளையும் தந்து இரண்டு காந்தக் கட்டிகளை வாங்கிக் கொண்டார். அவர்களுடைய எளிய வீட்டுவசதிகளை ஓரளவு அதிகரிக்க இந்தப் பிராணிகளை நம்பியிருந்த அவருடைய மனைவி உர்சுலா ஈகுவாரோன் அறிவுரை வீணாயிற்று. “வெகுவிரைவில் நம்மிடம் ஏராளமான தங்கம் இருக்கும். வீட்டுத் தரைகளைத் தங்கத்தால் தளவரிசை செய்வோம். அதற்கு மேலும் தங்கம் இருக்கும்” என்று அவர் பதிலளித்தார். தன் கருத்தை மெய்ப்பிக்கப் பல மாதங்கள் அவர் கடுமையாக உழைத்தார். அப்பகுதியில் ஒவ்வோர் அங்குலத்தையும் ஆராய்ந்தார். ஆற்றுப்படுகையையும் விட்டுவைக்கவில்லை. அந்த இரு காந்தக் கட்டிகளையும் இழுத்துக்கொண்டு அலைந்தார்; அந்த நாடோடியின் சொற்களை மந்திரம் போல் உரக்க உச்சரித்தவண்ணம் திரிந்தார். இவ்வாறு தேடித் தவித்ததில் கிடைத்த ஒரே வெற்றி, பதினைந்தாம் நூற்றாண்டையக் கவசம் மட்டுமே; பற்றவைக்கப்பட்ட அதன் துண்டுகள் துருவேறி ஒட்டிக் கொண்டிருந்தன. அதனுள்ளே ஓட்டை. அது விளைவித்த அதிர் வலை. அந்த ஓட்டைக்குள் ஒரு குடுக்கை. ஹோஸே ஆர்காடியோ புயெந்தியாவும் அவருடன் இந்தத் தனிநோக்குப் பயணத்தில் பங்கு கொண்ட நால்வரும் அந்தக் கவசத்தை மிகச் சிரமப்பட்டுப் பிரித்தெடுத்த னர்; சுண்ணக உப்புப்படிவத்தில் தோய்ந்த ஓர் எலும்புக்கூடு இருந்ததைக் கண்டனர். அத்துடன் ஒரு செப்புப் பேழை. அதன் கழுத்தைச் சுற்றி ஒரு பெண்ணின் முடி.
மார்ச் மாதத்தில் நாடோடிகள் திரும்பவும் வந்தனர். இந்தத் தடவை ஒரு தொலைநோக்காடி, அத்துடன் ஒரு உருப்பெருக்கி ஆகியவற்றைக் கொண்டுவந்தனர். அந்த உருப்பெருக்கி ஒரு தட்டு அளவில் இருந்தது. ஆம்ஸ்டர்டாம் யூதர்கள் அண்மையில் கண்டுபிடித்தவை எனக் காட்டினர். கிராமத்தின் ஒரு கோடியில் ஒரு நாடோடிப் பெண்ணை நிற்க வைத்து அந்தத் தொலைநோக்காடியைக் கூடாரத்தின் வாயிலில் நிறுத்தினர். ஐந்து வெள்ளி நாணயங்கள் தந்து தொலை நோக்காடி வழியாக அந்த நாடோடிப் பெண்ணைத் தொட்டுவிடும் தூரத்தில் காணலாம் என்றனர். “அறிவியல், தூரத்தை அகற்றிவிட்டது” என்று மெல் குயாடெஸ் அறிவித் தான். “உலகின் எந்த இடத்திலும் என்ன நடக்கிறது என்பதை வீட்டில் இருந்தவாறே காண இயலும், விரைவில்.” நண்பகல் வேளை. வெயில் தகித்தது. அந்தப் பிரமாண்டமான உருப்பெருக்கியை விளக்கிக்காட்ட அதுவே சரியான நேரம். தெருவின் நடுவில் உலர்ந்த புல் குவிக்கப்பட்டது. சூரியக் கதிர்கள் அந்த உருப் பெருக்கியின் ஊடாகச் செலுத்தப்பட்டன; நெருப்புப்பற்றியது. காந்தங்கள் தந்த ஏமாற்றத்திலிருந்து இன்னும் மீளாதிருந்த ஹோஸே ஆர்காடியோ புயெந்தியா இந்தக் கண்டுபிடிப்பை ஒரு போர்க்கருவியாகப் பயன்படுத்த எண்ணினார். மறுபடியும் மெல்குயாடெஸ் எச்சரித்தான். அவர் ஏற்கவில்லை. இரு காந்தக்கட்டிகளுடன் மூன்று தங்க நாணயங்களைத் தந்து மாற்றாக அந்த உருப்பெருக்கியைப் பெற்றுக்கொண்டார். திகைப்பும் அச்சமுமாக உர்சுலா அழுதார். அவருடைய தந்தை வாழ்நாள் முழுதும் வறுமையில் உழன்று சேமித்துவைத்த நாணயப் பேழையிலிருந்த தங்கப் பணம் அது. அதைத் தன் படுக்கைக்குக் கீழ் அவர் புதைத்துவைத்திருந்தார். தக்க தருணத்தில் அதைப் பயன்படுத்த நம்பியிருந்தார். அவருக்கு ஆறுதல் கூற ஹோஸே ஆர்காடியோ புயெந்தியா முயலவில்லை. ஒரு விஞ்ஞானியின் மறுதலித்தல் உணர்வுடன் திறமார்ந்த பரிசோதனைகளில் முற்றாக மூழ்கிப்போயிருந்தார்; தன் உயிரைப் பற்றிக்கூட அவர் கவலைப்படவில்லை. எதிரியின் துருப்புகள்மீது அந்தக் கண்ணாடி எத்தகைய விளைவுகளைத் தோற்றுவிக்கும் என்பதை விளக்கும் முயற்சியில் சூரியக் கதிர்கள் தன்மீது குவிந்து பாயச் செய்தார்; பட்ட சூடுகளும் அவை ஏற்படுத்திய புண்களும் ஆற நெடுங்காலம் பிடித்தது. அவருடைய மனைவி இத்தகைய ஆபத்தான கண்டுபிடிப்புகளைக் கடுமையாக எதிர்த்தார். அதைப் பொருட்படுத்தாது ஒரு சமயம் வீட்டையே எரியூட்ட அவர் தயாரானார். தன்னுடைய அறையில் அவர் பல மணிநேரம் கழித்தார். அவருடைய நவீனக் கருவியின் போர்த்திறம் சார்ந்த வாய்ப்புகளைப் பற்றியே கணக்குப்போட்டுக் கொண்டிருந்தார். ஒரு வழியாக ஒரு கையேட்டை உருவாக்கினார். அதில் அக்கருவி பற்றித் தெளிவான விளக்கக் குறிப்புகள் இருந்தன. அதை அரசுக்கு அனுப்பினார்; பல பக்கங்களைக் கொண்ட அக்கையேட்டில் தன்னுடைய பரிசோதனைகள் பற்றிய விளக்கங்கள், வரைபடங்கள் முதலியவற்றைத் தந்திருந்தார்; அதைக் கொண்டுசெல்ல ஒரு தூதரையும் ஏற்பாடு செய்தார். அவருடைய செய்தியுடன் புறப்பட்ட அந்த நபர் மலைகளைக் கடக்க வேண்டியிருந்தது; ஆழந்தெரியாத சதுப்பு நிலங்கள், சேறு-சகதிகள், சீறிப்பாயும் ஆறுகள் எனப் பல தடைகளை எதிர்கொள்ள நேர்ந்தது. வேதனை ஒருபுறம். நோய் ஒருபுறம், கொடிய விலங்குகளின் தாக்குதல் ஒருபுறம் எனப் பலவிதத் துயரங்களுக்குப் பிறகு அஞ்சல்களை எடுத்துச் செல்லும் கோவேறு கழுதைகள் பயன்படுத்தும் பாதையைக் கண்டு சேர்ந்தார். அந்தக் காலத்தில் தலைநகருக்குச் செல்வ தென்பது பெரும்பாலும் இயலாது எனக் கருதப்பட்டது. அத்தகைய காலத்தில் ஹோஸே ஆர்காடியோ புயெந்தியா அத்தகைய பயணத்தை மேற்கொள்ள உறுதிபூண்டிருந்ததையும் அரசாங்கத்தின் ஆணை கிடைக்கப் பெற்றவுடன் தன் கண்டு பிடிப்பு பற்றி ராணுவ அதிகாரிகள் முன்பு நேரடிச் சோதனைகளைச் செய்துகாட்டி நிரூபிக்கத் தயார் என்பதையும் சிக்கலான இந்தச் சூரியக் கதிர் யுத்தக் கலையில் அந்த அதிகாரிகளுக்குப் பயிற்சியளிக்கத் தன்னால் முடியுமென்றும் அவர் குறிப்பிட்டிருந்தார். காத்திருந்து சோர்ந்துபோன நிலையில் தன்னுடைய திட்டம் தோல்வி கண்டதை மெல்குயாடெஸிடம் சொல்லி அழுதார் அவர். தன்னுடைய நேர்மையை நம்பத்தகுந்த விதத்தில் நிரூபிக்கும் வகையில் உருப்பெருக்கிக் கண்ணாடியைப் பெற்றுக்கொண்டு அந்தப் பொன் நாணயங்களை மெல்குயாடெஸ் திருப்பித் தந்தான். அத்துடன் சில போர்ச்சுக்கீசிய நில வரைபடங்களையும் திசைகாட்டும் பல கருவிகளையும் தந்தான். மாங்ஹெர்மான் ஆய்வுகள் குறித்துச் சுருக்கக் குறிப்பொன்றைத் தன் கைப்பட எழுதித் தந்து அதைக் கொண்டு உயர்வுமானி, திசைக்கருவி, கோணமானி ஆகியவற்றைப் பயன்படுத்துவது பற்றி அவர் தெரிந்துகொள்ள முடியுமென்றும் கூறினான். மழைக்காலம் பல மாதங்களுக்கு நீடித்தது. ஹோஸே ஆர்காடியோ வீட்டின் பின்புறம் தான் கட்டியிருந்த சிறியதொரு அறையிலேயே இருந்தார். தன்னுடைய பரிசோதனைகளுக்கு யாராலும் தொந்தரவு வரக் கூடாது என்பதில் கவனமாக இருந்தார். குடும்பத்துக்கான தன் கடமைகளை முற்றாகத் துறந்துவிட்டிருந்தார். இரவுகளில் நட்சத்திரங்களை ஆராய்வதிலும் நடுப்பகல் பற்றித் துல்லியமாக அறியும் முயற்சியிலும் மூழ்கியிருந்தார். விளைவாக வெயில் வெப்பத்தாக்கு நோய்க்கு ஆளானார் எனலாம். தன்னுடைய கருவிகளைப் பயன்படுத்துவதிலும் திறமையாகக் கையாள்வதிலும் நிபுணத்துவம் பெற்றபோது அவர் மனத்தில் ஓர் அண்டவெளிக் கருத்து உருவாயிற்று. அறியப்படாத கடல்கள், மக்கள் காலடிபடாத நிலங்கள் ஆகியவற்றுக்குத் தம் ஆய்வறையில் இருந்தபடியே செல்லவும் சுடர்விடும் உயிரினங்களுடன் தொடர்புகொள்ளவும் அவரால் முடிந்தது. அந்தக் காலத்தில்தான் அவர் தனக்குத்தானே பேசிக்கொள்ளும் பழக்கத்தைப் பெற்றார். வீட்டிற்குள் நடப்பார். ஆனால் மற்றவர்கள் அங்கே புழங்குவதே அவருக்குத் தெரியாது. உர்சுலாவும் குழந்தைகளும் தோட்டத்தில் முதுகொடிய உழைத்து கூவைக் கிழங்கு, கொடிவள்ளி, கத்தரி பயிரிட்டுக் கொண்டிருந்தபோது அவர் தம் போக்கில் உலவிக்கொண்டிருந்தார். திடீரென்று பரபரப்பு தடைபட்டது; அந்த இடத்தை ஒரு வகை ஈர்ப்பு பற்றிக்கொண்டது. மாயத்தால் மயக்கப்பட்டவர்போலப் பல நாட்களைக் கழித்தார். அச்ச மூட்டும் ஊகங்களை மெல்லிய குரலில் தமக்குத் தாமே தொடர்ந்து உச்சரித்துக்கொண்டிருந்தார். இந்த ஊகங்கள் பிறப்பது அவரிடம்தான் என்பது அவருக்குத் தெரியவில்லை. இறுதியில் ஒரு டிசம்பர் செவ்வாய்க் கிழமை நண்பகல் உணவுவேளையின்போது தன் மனப்பாரத்தை முழுவதுமாக இறக்கிவைத்தார். அந்த வீறார்ந்த, மாண்புறு வெளிப்படுத்தலை அவருடைய குழந்தைகள் அவருடைய வாழ்நாள் முழுதும் நினைவில் கொண்டிருப்பர். அவருடைய நீடித்த ஓய்வுறா விழிப்பின் பாதிப்பு அவருடைய கற்பனையின் சீற்றம் அந்த வேளையில் வெளிப்பட்டது:
“இந்தப் பூமி உருண்டை, ஆரஞ்சைப் போல.”
உர்சுலா பொறுமை இழந்தார். “பித்துப் பிடித்து அலைவதானால் அந்த வெறி உங்களுக்குள்ளேயே இருக்கட்டும். உங்கள் நாடோடிக் கருத்துகளைப் பிள்ளைகள்மீது திணிக்காதீர்கள்” என்று இறைந்தார். ஹோஸே ஆர்காடியோ புயெந்தியா அமைதியாயிருந்தார். அவருடைய மனைவியின் கசப்பும் வெறித்த நிலையும் கண்டு அவர் அச்சப்படவில்லை. கோபவெறியில் உர்சுலா அந்த உயர்வுமானியைத் தரையில் ஓங்கி அடித்து நொறுக்கினார். மற்றொரு மானியை அவர் உருவாக்கிக்கொண்டார். கிராமத்து ஆண்களைத் தன் சிறிய அறைக்கு அழைத்துவந்தார். தன் புனைவுகளை விளக்கிக்காட்டினார். அவர்களில் யாருக்கும் அது புரியவில்லை; கிழக்கு நோக்கி ஒருவர் பயணத்தைத் தொடங்கினால் முடிவில் புறப்பட்ட இடத்துக்கே திரும்பி வர இயலும் என்பது அவர்களுக்குப் புரியவில்லை. ஹோஸே ஆர்காடியோ புயெந்தியா அறிவிழந்துவிட்டார் என்று ஊரே நம்பியது. அப்போது மெல்குயாடெஸ் திரும்பவும் வந்து நிலைமையைச் சீர்செய்தான். ஏற்கனவே நடை முறையில் நிரூபிக்கப்பட்ட ஒன்றை வெறும் வானியல் ஊகத்திலிருந்து ஒரு புனைவாக அறிவித்த அந்த மனிதனின் அறிவாற்றலை அவன் ஊரறியப் புகழ்ந்தான். அதுவரை மகொந்தோ மக்களுக்கு அந்தக் கருத்தாக்கம் தெரியாது. தன்னுடைய பாராட்டுக்குச் சான்றாக அவருக்கு ஒரு பரிசு தந்தான். அந்தக் கிராமத்தின் எதிர்கால வாழ்வில் அது ஆழ்ந்த தாக்கத்தை ஏற்படுத்தி யது: அது ஒரு ரசவாத ஆய்வுக் கூடம்.
அந்த இடை ஆண்டுகள் மெல்குயாடெஸின் தோற்றத்தில் விரைவான மாறுதல்களைக் கொண்டுவந்தன. இப்போது அவன் முதுமை தெரிந்தது. முதன்முறையாக, பின்பு அடுத்தடுத்து அவன் அந்தக் கிராமத்துக்கு வந்தபோது அவனுக்கு ஹோஸே ஆர்காடியோவின் வயது தான். ஆனால் குதிரையின் காதுகளைப் பிடித்து நிறுத்துமளவுக்கு அவர் உடலில் அசாதாரண வலு நீடித்தபோது அந்த நாடோடி, களைத்து, ஏதோ ஒரு நோயின் பிடியில் நொறுங்கிப்போயிருந்தான். அவன் உலகைச் சுற்றி எண்ணிலடங்காப் பயணங்களை மேற்கொண்டபோது தொற்றிய பல்கூட்டான, அபூர்வ நோய்களின் விளைவு அது. அந்த ஆய்வுக் கூடத்தை அமைக்க ஹோஸே ஆர்காடியோ புயெந்தியாவுக்கு உதவியபோது சாவு எவ்வாறு தன்னை எங்கும் தொடர்ந்து வந்தது என்பதையும் கால்சராயைத் தொட்ட அது இறுதிப்பிடியை இறுக்குவதை இன்னும் தீர்மானிக்கவில்லை என்பதையும் குறிப்பிட்டான். மனித குலத்தைத் தாக்கிய எல்லாவிதக் கொடிய நோய்களிலிருந்தும் இடர்களிலிருந்தும் தப்பிப் பிழைத்துள்ளதை விவரித்தான். பெர்சியாவில் கொடிய தோல் வெடிப்பு நோயிலிருந்தும் மலாய்த் தீவுக் கடலில் கரப்பான் நோயிலிருந்தும் அலெக்ஸாண்டிரியாவில் தொழு நோயிலிருந்தும் ஜப்பானில் தவிட்டான்நோயிலிருந்தும் மடகாஸ்கரில் அக்குள் நெறிக் கட்டிலிருந்தும் சிசிலியில் நில நடுக்கம் மற்றும் மகெல்லன் கடற்காலில் கப்பல் அழிபாட்டிலிருந்தும் தப்பிப் பிழைத்ததை விவரித்தான். அவன் ஓர் அதிசயப் பிறவி. நோஸ்ட்ராமஸ் அளித்த முற்குறிப்புகளுக்கான உயிர்நிலை அவனிடம் இருப்பதாகப் பேசப்பட்டது. ஆனால் இன்று அவன் சோர்வுற்று வருந்தி நிற்கிறான். அவனைச் சுற்றி நிற்பது சோக வளையம். அவன் பார்வையில் ஓர் ஆசியத்தன்மை இருந்தது; ஒன்றின் மறுபுறத்தில் உள்ளதை அறியும் ஆற்றல் அது. பெரியதொரு கருப்புத் தொப்பி அணிந்திருந்தான். அது பரந்து விரிந்த இறக்கைகளைக் கொண்ட அண்டங்காக்கையைப் போலத் தோன்றியது. அவன் அணிந்திருந்த கையில்லா அரைச் சட்டை பூம்பட்டால் ஆனது; அதனுடைய நூறாண்டுகள் ஆன பசுங்களிம்புப் படலம். அளக்கவியலாத அறிவும் மறைவடக்க வீச்சும் இருந்தும் அவனிடம் மனிதநேயம் இருந்தது; அது அன்றாட வாழ்க்கையின் சிறு சிக்கல்களிலும் அவனை ஈடுபாடுகொள்ளவைத்தது. முதுமைக்குரிய நோய்களைப் பற்றிக் குறைபடும் அவன், பொருளாதாரரீதியில் சிறு சங்கடங்களையும் உணர்ந்தவன். நெடுநாள் முன்னரே வாய்விட்டுச் சிரிப்பதை நிறுத்திவிட்டிருந்தான். ஏனெனில் ஊட்டச்சத்துக் குறைவால் ஏற்பட்ட பல் எதிர்வீக்க நோயால் பற்களை இழந்திருந்தான். திணறவைக்கும் அந்த நண்பகலில் தன் ரகசியங்களை அந்த நாடோடி வெளிப்படுத்தியபோது, மாபெரும் நட்பின் தொடக்கமாக ஹோஸே ஆர்காடியோ புயெந்தியா உறுதிபட உணர்ந்தார். அவனுடைய விசித்திரக் கதைகள் குழந்தைகளை வியப்பில் ஆழ்த்தின. அவ்ரேலியானோவுக்கு அப்போது ஒன்பது வயதுக்கு மேலிருக்காது. அந்தப் பிற்பகலில் அவனைக் கண்டதும் ஜன்னலிலிருந்து தகதகத்த ஒளி வந்ததும் அவனுடைய ஆழ்ந்த சாரீரமும் கற்பனையின் அடர்த்தி மிக்க கதைகளைக் கேட்டதும் வாழ்நாள் முழுவதும் அவர் நினைவில் நின்றன. அந்த அறை வெப்பத்தில் அவனுடைய கன்னப் பொட்டில் வழிந்த மசகையும் அவர் மறக்கவில்லை. அவருடைய அண்ணன் ஹோஸே ஆர்காடியோ, அந்த விந்தை மிகு படிவத்தைத் தன் வாரிசுகள் அனை வருக்கும் தொடர்ந்து சொல்லி வந்தார். ஆனால் உர்சுலாவுக்கு அந்த வருகை, ஒரு கெட்ட நினைவு. ஏனெனில் அந்த அறைக்குள் அவர் நுழைந்த போதுதான் கவனக் குறைவால் மெல்குயாடெஸ், பாதரசக் குடுவையை உடைத்துவிட்டிருந்தான்.
“பிசாசு நெடி” என்று உர்சுலா கூறினார்.
“இல்லவே இல்லை” என்று மெல்குயாடெஸ் திருத்தினான். “பிசாசு, கந்தகக் கூறுகளைக் கொண்டுள்ளது. இது கொஞ்சம் அரித்துத் தின்னவல்ல பதங்கம்.”
அறிவுறுத்திப் பேசுவதில் நாட்டமுள்ள அவன் சிவப்பு நிறக் கனிமத்தில் பேய்த்தனமிக்க கூறுகள் இருப்பதைப் பற்றிப் புலமை சான்ற விளக்கமளித்தான். ஆனால் அதை உர்சுலா கண்டுகொள்ளவில்லை. அந்த இடத்திலிருந்து குழந்தைகளைக் கிளப்பிப் பிரார்த்தனைக்கு இட்டுச் சென்றார். அவர் மனதில் அந்தச் சகிக்க முடியாத நாற்றம் பற்றிய நினைவு என்றும் இருக்கும்; மெல்குயாடெஸ் பற்றிய நினைவுடன் அது பிணைந்திருந்தது.
அது மிகச் சாதாரணமான ஆய்வுக்கூடம். பானைகள், பெய் குழல்கள், வாலைகள், வடிகட்டிகள், சல்லடைகள் - ஒரு பழங்காலத் தண்ணீர்க்குழாய், நீண்ட, மெல்லிய கழுத்துடன் கூடிய ஒரு கொடுகலம், ரசவாதிகள் பயன்படுத்தும் பொய்க்கல், அதன் மறுவடிவம் - வேறுசில கருவிகளையும் கொண்டிருந்தது. பழங்கால வடிகலம் அவற்றில் ஒன்று. யூதர்களின் மேரி மூன்றடுக்கு வாலை ஒன்றை வைத்திருந்தாள் என்பது கதை. அதன் நவீன விவரிப்பை ஒட்டி அந்த நாடோடிகள் வடிவமைத்த கருவி அது. இவற்றுடன் ஏழுவகை உலோகங்களின் மாதிரிக் கூறுகளையும் மெல்குயாடெஸ் விட்டுச் சென்றிருந்தான்; ஏழு கிரகங்களுக்குப் பொருந்திவருவன போல அவை இருந்தன. பொன்னின் அளவை இரட்டிப்பாக்குவது குறித்து மோசஸ், ஜோஸிமஸ் தந்த கட்டளை விதிகள், பேருரையில் கண்டவாறு புரிந்துகொண்டு சித்துமணிக்கல்லை உருவாக்க முனைபவர்களுக்கு உதவும் குறிப்புகள், வரைபடங்கள் ஆகியவற்றையும் அவன் தந்திருந்தான். பொன்னின் அளவை இரட்டிப்பாக்கும் குறியீடுகள் மிக எளிமையாக இருந்தன. புயெந்தியாவின் ஆசையைத் தூண்டியது. வாரக்கணக்கில் அவர் உர்சுலாவுடன் பேசினார்; உர்சுலா புதைத்துவைத்திருந்த பொற்காசுகளைத் தோண்டி எடுத்து பாதரசம் கொண்டு அவற்றைப் பலமடங்கு பெருக்கிவிடுவதைப் பற்றியே பேசினார். பிறருடைய அறிவுறுத்தல்களை ஏற்காது பிடிவாதமாக இருக்கும் கணவனின் வற்புறுத்தலுக்கு இணங்க வேண்டியவரானார். பிறகு மூன்று ஸ்பானிய பொற்காசுகளைக் கொதிகலத்தில் போட்டார். செப்பு, தாளகம், கந்தகம், ஈயம் ஆகியவற்றை உருக்கிக் கலந்தார்; விளக்கெண்ணெய் நிறைந்த பானையில் இட்டுக் கொதிக்கவைத்தார். சகிக்க இயலாத நாற்றமெடுத்த சாதாரண கருவெல்லப் பாகுபோன்ற கலவை தான் கிடைத்தது. மதிப்பு வாய்ந்த பொன்கிடைக்கவில்லை. வெறுத்துப்போன நிலையில் அந்த ஏழு கிரகத்து உலோகங்களையும் சேர்த்து உருக்கி வடிகட்டிப் பார்த்தார். மாயத்திறம் வாய்ந்த பாதரசத்தையும் சைப்பிரஸ் நாட்டுக் கந்தகத்தையும் கலந்தார். முள்ளங்கி எண்ணெய் கிடைக்காத நிலையில் ஆண்பன்றிக் கொழுப்பையும் இட்டுக் கிளறினார். உர்சுலாவின் வழிவழிச் சொத்து வறுத்தெடுத்த பன்றிக் கொழுப்புப் பட்டையாகப் பானையின் அடியில் வசமாக ஒட்டிக்கொண்டிருந்தது.
மீண்டும் நாடோடிகள் வந்தபோது அவர்களுக் கெதிராக உர்சுலா அந்த ஊரையே திருப்பிவிட்டார். ஆனால் அச்சத்தைவிட ஆவல் பெரிது. அந்தத்தடவை நாடோடிகள் எல்லா வித இசைக் கருவிகளையும் கொண்டு பெரும் இரைச்சல் எழுப்பியவாறு வலம் வந்தனர். கூவி விற்பனை செய்யும் ஒருவன், மிக உன்னதமான நாசியன்செனிஸ் கண்டுபிடிப்பைக் காட்சியில் வைப்பதாக அறிவித்தான். ஒரு சதம் செலுத்தி ஒவ்வொருவராகக் கூடாரத்துக்குள் சென்றனர். அவர்கள் கண்டது இளமை ததும்பும் மெல்குயாடெஸை. அவன் பூரண நலம் பெற்றிருந்தான். முகத்தில் சுருக்கங்கள் இல்லை. புதிய பளபளக்கும் பல்வரிசை. பல்நோயால் ஈறுகள் பாதிக்கப்பட்டு, சுருக்கம் விழுந்து ஒட்டிய கன்னங்கள் வாடிய உதடுகளுடன் அவன் இருந்ததை நினைவுபடுத்திக்கொண்டவர்கள் அந்த நாடோடியின் அதீத சக்தி இறுதி நிரூபணமாக முன்நிற்பதைக் கண்டு அச்சத்தால் நடுங்கினர். மெல்குயாடெஸ் தன் ஈறுகளில் பதிந்திருந்த பல்வரிசையை அப்படியே எடுத்து ஒரு கணம் அனைவருக்கும் காட்டினான். அந்த ஒரு கணத்தில் அவன் மறுபடியும் பல காலத்துக்குமுன் முதுமைத் தளர்ச்சியும் மோசமான உடல் நிலையுமாக இருந்த நிலைக்குத் திரும்பினான். மீண்டும் பல்வரிசையைப் பொருத்தினான், முறுவலித்தான். இளமை மீண்டது. இதையெல்லாம் கண்டவர்களின் அச்சம் பீதியாக மாறியது. மெல்குயாடெஸின் அறிவு, மட்டு மீறிய நிலையைத் தொட்டுவிட்டதாக புயெந்தியாவே கருதினார். ஆயினும் பொய்ப்பல் வரிசை எவ்வாறு செயல்படுகிறது என்பதை அந்த நாடோடி அவருக்கு மட்டும் விளக்கிச் சொன்னபோது மகிழ்ச்சியும் உற்சாகமும் அடைந்தார். அந்த நிகழ்வு மிகச் சாதாரணமானது. அதே சமயத்தில் பேராற்றல் வாய்ந்தது, வியப்பூட்டக் கூடியது. விளைவாக ரசவாதச் சோதனை முயற்சிகளில் அவருக்கிருந்த ஆர்வம் ஓரிரவில் காணாமற் போனது. அவர் மன நிலையில் மாற்றம், எரிச்சல், வெறுப்பு நேரத்தில் உண்பதையும் தவிர்த்தார். வீட்டுக்குள்ளேயே சுற்றிவந்தார். “நம்புதற்கு முடியாத பலவும் உலகத்தில் நிகழ்கின்றன” என்று உர்சுலாவிடம் கூறினார். “ஆற்றுக்கு மறுபக்கத்தில் பலவகையான வியத்தகு கருவிகள். ஆனால் நாமோ கழுதைகளாகத் தொடர்ந்து வாழ்ந்து கொண்டிருக்கிறோம்.” மகொந்தோ உருவான நாளிலிருந்து அவரை அறிந்தவர்கள், மெல்குயாடெஸின் பாதிப்பால் அவர் எந்த அளவு மாறிவிட்டார் என்பதை உணர்ந்துதிடுக்குற்றனர்.
தொடக்கத்தில் புயெந்தியா துடிப்பான குடும்பத் தலைவராகவே இருந்தார். பயிர்செய்வது பற்றி, குழந்தைகளை, வீட்டு விலங்குகளை வளர்ப்பது பற்றி அறிவுறுத்துவது, சமுதாய நலனுக்காக எல்லோருடனும் இணைந்து செயல்படுவது, உடல் உழைப்பிலும் பங்குகொள்வது என்றே இருந்தார். தொடக்க காலத்திலேயே கிராமத்தில் அவருடைய வீடுதான் சிறந்தது. அதைப் பார்த்துத் தான் அதே போன்ற வடிவத்தில் மற்றவர்கள் கட்டிக்கொண்டனர். சிறிய நல்ல வெளிச்சமான அமர்வுக் கூடம், உணவருந்துதலுக்கு ஒட்டுத்தள வடிவிலான அறை, அதில் களிப் பூட்டும் வண்ணமலர்கள், இரண்டு படுக்கை அறைகள், சுற்றுக் கட்டு வெளியிடம், அகன்ற இலைகளைக் கொண்ட பிரமாண்டமான செந்த விட்டு மரம், நன்கு பராமரிக்கப்பட்ட தோட்டம், ஒரு தொழுவம், அங்கு அமைதியாக வாழும் ஆடுகள், பன்றிகள், கோழிகள். அவருடைய வீட்டில் மட்டுல்ல. அந்தக் குடியிருப்பு முழுவதிலும் தடை செய்யப்பட்டவை சண்டைச் சேவல்கள்தாம்.
உர்சுலா உழைப்பாற்றல் மிக்கவர். புயெந்தியாவின் உழைப்புக்கு ஈடானது அது. சுறுசுறுப்பும் மனவுறுதியும் கொண்டவர். சிற்றளவான தோற்றம், ஆனால் கடுமுனைப்பு உடையவர். அவர் வாழ்க்கையில் ஓய்வாகப் பாடி யாரும் கேட்டதில்லை. உழைப்பு, அதிகாலை முதல் நள்ளிரவுவரை உழைப்பு. பாவாடை கஞ்சிபோடப்பட்டிருக்கும். அதன் மெல்லிய மொற மொறப்பு அவருடைய நடமாட்டத்தை உணர்த்தும். மண் தரை. ஆனால், உறுதிமிக்கது. மண்சுவர்கள் வெள்ளை அடிக்கப்படுவதில்லை. மேசை, நாற்காலி போன்ற அறைகலன்கள் மரத்தால் ஆனவை; அவர்களே அவற்றைச் செய்துகொண்டனர். எளிமையைப் பறைசாற்றும் அவை எப்போதும் துப்புரவாக இருந்தன. துணிமணிகளைப் பழைய அடுக்குப் பெட்டிகளில் வைத்திருந்தனர். அவற்றிலிருந்து துளசி மணம் வரும். அந்த ஊரிலேயே செயலாக்கத் திறன் மிக்கவர் புயெந்தியாதான். வீடுகளை அவர் அமைத்திருந்த விதம் அலாதியானது; வீட்டை ஒட்டிய ஆற்றிலிருந்து சிறிதே முயன்று தண்ணீர் எடுத்துக்கொள்ள முடியும். தெருக்களை அவர் திட்டமிட்டு அமைத்திருந்தார். கோடைப் பருவத்தில் அதிகமாக வெயில் எரிக்காத வண்ணம் அவை உருவாக்கப்பட்டிருந்தன. அதில்கூட ஒருவித சமத்துவம். சில ஆண்டுகளில் மகெந்தோ சீரான வளர்ச்சி கண்டது. எண்ணிக்கையில் முன்னூறைத் தொட்ட அந்த ஊர் மக்கள் கடும் உழைப்பாளிகள் எனப் பெயர் பெற்றனர். உண்மையில் அது மகிழ்ச்சி பொங்கிய கிராமம். மக்களின் வயது பெரும்பாலும் முப்பதுக்குக் கீழ்; மரணம் அவர்களைத் தொடவில்லை.
உருவான நாளிலிருந்தே அந்த ஊர்ப் பகுதியில் புயெந்தியா வலைப் பொறிகளையும் கூடுகளையும் அமைத்தார். விரைவில் அவர் வீட்டில் மட்டுமின்றிக் கிராமத்தி லிருந்த எல்லா வீடுகளிலும் மைனாக்கள், பாடும் பறவையினங்கள், பஞ்சுவிட்டான்கள் வளர்ந்து இனிமை சேர்த்தன. பலவிதப் பறவைகள் எழுப்பிய ஒலி சமயங்களில் அமைதியைக் குலைத்தது. தேன்மெழுகால் உர்சுலா காதுகளை அடைத்துக் கொள்வார். யதார்த்த உலகைப் பற்றிய உணர்வை இழக்கக் கூடாதல்லவா? முதன் முதலில் மெல்குயாடெஸ் இனத்தவர்கள் தலைவலிக்கு மருந்து எனக் கண்ணாடி உருண்டை வடிவத்தில் ஒன்றைக் கொண்டுவந்தபோது அந்த ஊர் அரைத் தூக்கநிலையில் இருந்த சதுப்பு நிலமாக இருந்ததைக் கண்டனர். ஆனால் இப்போதோ அந்தப் பறவைகளின் பாட்டொலிதான் தமக்கு வழிகாட்டியதாக ஒப்புக்கொண்டனர்.
விரைவில் அத்தகைய சமூகத் தன்னூக்க உணர்வு மறைந்தது. காந்தப் பட்டைகள், வானியல் கணக்கீடுகள், ரசவாத மாற்றம் பற்றிய கனவுகள், உலக அதிசயங்களைக் கண்டுவிடும் வேட்கை ஆகியன அந்த உணர்வை இழுத்துச் சென்றுவிட்டன. சுத்தமும் சுறுசுறுப்புமாக இருந்த புயெந்தியா தோற்றத்தில் சோம்பேறியாக மாறிப்போனார்; உடுத்துவது, தாடி புதராக மாறிப்போவது பற்றி அவர் கவலைப்படவில்லை. சமையல் கத்தியைக் கொண்டு பெரும் பிரயாசையுடன் தாடியைச் சீர்செய்ய உர்சுலா முயன்றார். விசித்திரமான ஏதோ ஒரு மந்திரத்தால் புயெந்தியா கட்டுண்டிருந்தார் எனச் சிலர் நினைத்தனர். அவருடைய பித்து பற்றி உணர்ந்திருந்தவர்கள்கூடத் தத்தமது வேலையையும் குடும்பத்தையும் விட்டு அவர்பின் வரவே செய்தனர். தன்னிடமிருந்த கருவிகளை அவர்கள்முன்வைத்தார். நிலத்தைச் சீர்செய்ய வேண்டுமென்றார். மகொந்தோ வெளிஉலகின் மாபெரும் கண்டுபிடிப்புகளை அறிய வேண்டும், அதற்கான வழிகளைக் காண வேண்டும் என்றார். மறுபேச்சின்றி அவர்கள் அவருக்குப் பின்னால் திரண்டனர்.
அந்தப் பகுதியின் நிலஅமைப்பு பற்றி அறியாதவராகவே புயெந்தியா இருந்தார். கிழக்கே ஒரு மலைத் தொடர் - ஊடுருவ இயலாத மலைகள் - அதற்கப்பால் மறுபுறத்தில் மிகப் பழைய ரியோஹச்சா நகரம் இருக்கிறது என்பது அவருக்குத் தெரியும். அங்குதான் சர் பிரான்சிஸ் டிரேக், பெரிய துப்பாக்கிகளுடன் முதலை வேட்டைக்குச் சென்றார் என்றும் கொல்லப்பட்ட முதலைகளை நன்னிலைப்படுத்தி உலர்ந்த புற்களைத் திணித்து எலிஸபெத் ராணிக்குக் கொண்டு சென்றார் என்றும் அவருடைய பாட்டனார் அவ்ரேலியானோ புயெந்தியா சொல்லியிருந்தார். அவருடைய இளமைக் காலத்தில் அவரும் அவருடைய ஆட்களும் தத்தமது மனைவிமார்கள், குழந்தைகள், விலங்குகள் மற்றும் எல்லாவித வீட்டு உபகரணங்களுடன் மலைகளைக் கடந்து சென்றிருக்கிறார்கள். கடல் உள்ள இடத்தைத் தேடுவதே நோக்கம். இருபத்தாறு மாதத் தேடலுக்குப் பின்பு அவர்கள் அந்த நீண்ட பயணத்தைக் கைவிட்டனர். மகெந்தோவை நிறுவினர்; இனிப் புறப்பட்ட இடத்துக்குத் திரும்பிச் செல்ல வேண்டியதில்லை. எனவே அந்தப் பாதைமீது அவர் ஆர்வம் கொள்ளவில்லை; அப்பாதை, சென்ற காலத்துக்கு இட்டுச் செல்வது. தெற்கில் சதுப்பு நிலங்கள். தாவரக் கசடுகள் போர்த்திய ஈரநிலம். முழுதும் முடிவற்ற சதுப்பு நிலப்பரப்பு. அப்படித்தான் அந்த நாடோடிகள் சொல்லியிருந்தனர். மேற்கில் இந்தப் பெரிய சதுப்பு எல்லையற்ற நீர் நிலையைத் தொட்டுக் கலந்தது. அங்கு மெல்லிய தோல் போர்த்த டால்பின்கள், கடற்கன்னிகள் இருந்தன. தலையும் உடற்பகுதியும் பெண்ணின் உருவத்தில். அசாதாரண மார்பகங்களின் கவர்ச்சி மாலுமிகளின் அழிவுக்குக் காரணமாக இருந்தது. அந்தப் பாதையில் ஆறுமாதங்கள் பயணித்து ஒரு நிலப்பகுதியை அடைந்தனர். அதைத் தாண்டி அஞ்சல் சுமந்து வரும் கோவேறு கழுதைகள் சென்றன. புயெந்தியாவின் கணக்கின்படி நாகரிக உலகுடன் ஆன தொடர்பு வடக்குத் திசை வழியில்தான். எனவே நிலத்தைச் சீர்திருத்தும் கருவிகள் மற்றும் வேட்டைக்கான ஆயுதங்களைப் புயெந்தியா தன் ஆட்களிடம் ஒப்படைத்தார். மகொந்தோ நிறுவப்பட்டபோது அவருடன் இருந்தவர்கள் அவர்கள். திசைகாட்டும் கருவிகள், நிலவரை படங்கள் முதலியவற்றை ஒரு தோள் பையில் இட்டார்; விளைவுகளைப் பற்றி எண்ணிப் பார்க்காது ஓர் அசாதாரண பயணத்தை மேற்கொண்டார்.
முதல் நாட்களில் குறிப்பிடத்தக்க தடை எதையும் அவர்கள் எதிர் கொள்ளவில்லை. கற்கள் பரவி அமைந்த ஆற்றங்கரை வழியே நடந்து முன்னேறினர். பல ஆண்டுகளுக்கு முன்பு படைவீரரின் கவசத்தைக் கண்டுபிடித்த இடத்தை அடைந்தனர். அங்கிருந்து இயற்கையாக வளர்ந்திருந்த ஆரஞ்சு மரங்களுக்கிடையே செல்லும் தடத்தில் சென்று காட்டுக்குள் நுழைந்தனர். முதல் வார இறுதியில் ஒரு மானைக் கொன்று சுட்டு வறுத்தனர். பாதியை மட்டும் உண்டு எஞ்சியதை அடுத்த நாட்களுக்கு வைத்துக்கொள்ள உப்புக்கண்டம் போட்டனர்; இதற்கு அனைவரும் ஒப்பினர். இந்த முன்னெச்சரிக்கை உணர்வுடன் பனைவகைக் கிழங்குகளை உண்ணும் அவசியத்தைத் தள்ளிப்போட முயன்றனர். அவற்றின் சுளைப்பகுதி புனுகு நாற்றத்துடன் கடினமாக இருக்கும். அடுத்த பத்து நாட்களுக்கு மேலாக சூரியனே தென்படவில்லை. தரை ஈரமாக இருந்தது; எரிமலைச் சாம்பல்போல உராய்வற்றிருந்தது. மரஞ்செடி கொடிகளின் அடர்த்தி மிகுதி. பறவைகளின் ஒலி, குரங்குகளின் ஆரவாரம், மிகத் தொலைவிலிருந்து கேட்டது. இந்தத் தொலைவு அதிகப்பட்டு வந்தது. உலகம் நிரந்தரமாகச் சோகத்தில் ஆழ்ந்ததுபோலப்பட்டது. எங்கும் ஈரம், நிசப்தம்; தொடக்க காலப்படிமூல நிலைக்கு மீண்டும் சென்றுவிட்டதாக அவர்கள் உணர்ந்தனர். அவர்களுடைய காலணிகள் ஆவி பரக்கும் எண்ணெய் வெள்ளத்தில் மூழ்கின; அவர்களுடைய வெட்டுக்கத்திகள், மணி வடிவ வெண் மலர்களையும் நீண்ட வால் உடைய பொன்னிற விலங்குகளையும் துவம்சம் செய்தன, அவற்றைச் சிவப்பாக்கின. ஒரு வாரக் காலம் அவர்கள் பேசிக்கொள்ளவில்லை. தூக்கத்தில் நடப்பவர்களைப் போல, துயரத்தில் தோய்ந்து மூழ்கியவர்களைப் போலப் பயணித்தனர். ஆங்காங்கே ஒளி சிந்தும் பூச்சி புழுக்கள் தரும் வெளிச்சம்தான். திக்குமுக்காடச் செய்யும் ரத்தவாடை அவர்களுடைய நுரையீரல்களை நிறைத்தது. அவர்களால் திரும்பி வரவும் இயலாது. ஏனெனில் அவர்கள் உண்டாக்கிய வழித்தடத்தில் புதிய செடிகொடிகள் முளைத்திருக்கும்; அவர்கள் கண்முன்னே ஒரு புதிய செடி கிளைத்து வளர்வது போலப்பட்டது. “சரி, என்னவானாலும் சரி. நமது மனவுறுதியை இழக்கக் கூடாது என்பதுதான் முக்கியம்” என புயெந்தியா கூறுவதுண்டு. எப்போதும் அவருடைய திசைகாட்டும் கருவியைப் பார்த்துக்கொண்டு புலப்படாத வடதிசை நோக்கி அவர்களை நடத்திச் சென்றவாறிருந்தார். இந்தக் கவர்ச்சிப் பிரதேசத்திலிருந்து வெளிவந்துவிட முடியும், அதற்குத்தான் வடதிசைப் பயணம். கும்மிருட்டு. நட்சத்திரங்கள் இல்லை. ஆனால் அந்த இருள் புதிய, தூய காற்றால் நிறைந்திருந்தது. நீண்ட நடைப் பயணத்தால் களைத்துச் சோர்ந்துபோய் தமது தூங்கு மஞ்சங்களை, தொட்டில்களைக்கட்டத் தொடங்கிவிட்டனர். இரண்டு வாரங்களில் முதல் தடவையாக ஆழ்ந்து உறங்கினர். விழித்தெழுந்தபோது சூரியன் உச்சத்துக்கு வந்துவிட்டான். அந்தக் கவர்ச்சியும் ஈர்ப்பும் அவர்களைப் பேசவிடவில்லை. அவர்களைச் சுற்றி எங்கும் மரங்கள் - பனை மற்றும் பசுந் தோகை இலைகளுடன் கூடிய, ஆனால் பூக்கள் இல்லாத பெரணி மரங்கள் - சில வெண்மைப் பூச்சுடன் காணப்பட்டன. காலைப் பொழுது. நிசப்தம். அப்போது ஒரு பெரிய ஸ்பானியக் கப்பல் அவர்கள் கண்ணில் பட்டது. வலதுபக்கம் நோக்கி அது சற்றே சாய்ந்திருந்தது. கொடிக்கம்பம் சீராக இருந்தது; ஆனால் கப்பல் பாய்கள் தூசுபடிந்தும் கிழிந்தும் இருந்தன. அதைத் தாங்கும் வடக்கயிறுகளில் ஆங்காங்கே பல வண்ண நெக்கிட்டுகள். கப்பலின் உடற்பகுதி, அச்ச மூட்டும் நத்தை, நண்டுகள் மற்றும் பாசிகளால் நிறைந்திருந்தது; மேற்பகுதி முழுதும் கற்களால் உறுதியாகப் பிணைக்கப்பட்டிருந்தது. அதன் கட்டுமானம், அதற்குரிய இடத்தைப் பிடித்துக்கொண்டிருப்பது போலத் தோன்றியது; அதில் தெரிந்த தனிமை, சூழலைப் பற்றிய பிரக்ஞையே இல்லாத நிலை. காலத்தின் கடுங்குற்றங்களோ பறவைகளின் பழக்கவழக்கங்களோ அதைப் பாதிக்கவில்லை. அத்தகைய பாதுகாப்பு. அதன் உட்புறத்தை அந்தப் பயணிகள் துருவி ஆராய்ந்தபோது அவர்கள் கண்டதெல்லாம் அடர்ந்த மலர் வனத்தை மட்டுமே. கப்பல் கண்டுபிடிக்கப்பட்டது. கடல் அருகாமையில் இருப்பதன் அடையாளம் அது. இந்த நிகழ்வு ஹோஸே ஆர்காடியோ புயெந்தியாவின் மனவுறுதியைக் குலைத்தது. கடலைத் தேடிப் புறப்பட்டதும் எண்ணற்ற தியாகங்கள், துயரங் களுக்குப் பின்னும் அதைக் காண இயலாது தவித்ததும் திடீரென்று அதைக் காண நேர்ந்ததும் வேண்டாத விதியின் விளையாட்டு என அவருக்குப்பட்டது. இதெல்லாம் அவருடைய பாதையில் குறுக்கிடும் பெரும் சிக்கல் என அவர் நினைத்தார். பல ஆண்டுகளுக்குப் பிறகு கர்னல் அவ்ரேலியானோ புயெந்தியா மறுபடியும் இந்தப் பிரதேசத்தைக் கடந்து சென்றபோது - அப்போது அது அஞ்சல் வழிப் பாதை - அவர் கண்டதெல்லாம் கப்பலின் ஒரு பகுதியைத்தான்; அதுவும் கசகசாச் செடிகள் படர்ந்திருந்த நிலத்தின் நடுவே எரிந்துபோன விளிம்புப் பகுதி. அப்போது தான் இந்தக் கதை, அவர் தந்தையின் கற்பனையில் பிறந்ததல்ல என்பது அவருக்குத் தெளிவாயிற்று. ஆயினும் கப்பல் கடலோரத்திலிருந்து இவ்வளவு உள் தள்ளியிருந்த இடத்துக்கு எவ்வாறு வந்தது என அவர் வியந்தார். ஹோஸே ஆர்காடியோ புயெந்தியா இது பற்றிக் கவலை கொள்ளவில்லை. கப்பல் காணப்பட்ட இடத்திலிருந்து நான்கு நாட்கள் பயணத்துக்குப் பிறகு கடலை அவர் கண்டார். வெளிறிப் போன, நுரை பொங்கும் அழுக்குகள் நிறைந்த கடல் வெளி அது. இதற்கா இவ்வளவு ஆபத்துகள், தியாகங்கள் நிறைந்த பயணத்தை மேற்கொண்டோம் என அவர் புலம்பினார். கனவுகள் முடிந்தன.
எரிச்சலும் கோபமுமாகக் கத்தினார். “மகெந்தோ எல்லாப் பக்கங்களிலும் நீரால் சூழப்பட்டுள்ளது.”
மகெந்தோ ஒரு தீபகற்பம் எனும் கருத்தே நீண்டகாலமாக நிலவி வந்தது. தனது பயணத்தை முடித்துக்கொண்டு திரும்பிய ஹோஸே ஆர்காடியோ புயெந்தியா காரண அடிப்படை ஏதுமின்றி உருவாக்கிய நிலவரைபடம் அத்தகைய நம்பிக்கையைத் தந்தது. சினம், கேடு விளைக்கும் எண்ணம் மேலோங்க அதை வரைந்தார். தொடர்பு வசதிகளை ஏற்படுத்துவதில் நேர்ந்த கஷ்டங்களை அவர் பெரிதுபடுத்தியிருந்தார்; முற்றிலும் அறிவிழந்து அந்த இடத்தைத் தேர்வுசெய்தமைக்காகத் தனக்குத்தானே தண்டனை வழங்கிக்கொள்வது போலிருந்தது. “நன்றாக மாட்டிக்கொண்டோம்” என்று உர்சுலாவிடம் அவர் புலம்பினார். “விஞ்ஞானத்தின் பயன்களைப் பெறாது இந்த இடத்தில் நம் வாழ்க்கை கெட்டுப் போகும்.” அவ்வாறு அவர் உறுதியாக நம்பினார். சோதனைக் கூடமாக அவர் பயன்படுத்திய அந்தச் சிறு அறையில் பல மாதங்கள் அடைபட்டுச் சிந்தனையில் மூழ்கியிருந்தார். விளைவாக மகெந்தோவை விட்டு நல்லதொரு இடத்துக்குச் சென்றுவிட முடிவெடுத்தார். அவருடைய மனக்கிளர்ச்சியால் இத்தகைய திட்டங்கள் உருவாகும் என்பதை உர்சுலா முன்கூட்டியே எதிர்பார்த்திருந்தார். ஒரு சிறு எறும் பின் ரகசியமான, தடுக்க இயலாத வேலைத் திறத்துடன் அவர் செயல்பட்டார்; பெண்களைத் திரட்டி அங்கிருந்து வெளியேற முனைந்த அவர்களுடைய கணவன்மார்களின் திடசித்தமில்லாத, அடிக்கடி மனம் மாறும் போக்குக்கு எதிராக ஆயத்தப்படுத்தினார். எந்த வினாடியில் அல்லது எந்தவித எதிர்நிலைகளால் தன் திட்டம் சாக்குப் போக்குகளில் ஏமாற்றங்களில் தட்டிக்கழிப்பில் சிக்குண்டது என்பதைப் புயெந்தியா அறியவில்லை; அது வெறும் பிரமையாகிப்போனதை மட்டும் உணர்ந்தார். உர்சுலா அவரை ஒருவித அப்பாவித் தனத்துடன் கவனித்துவந்தார்; காலையில் வீட்டின் பின்னறையில் புறப்படும் திட்டங்கள் குறித்து முணுமுணுத்தவாறு ஆய்வுக்கூடத் துண்டு துணுக்குகளை அவற்றுக்குரிய பெட்டிகளில் அவர் வைத்திருந்ததைக் கண்டபோது அவருக்குச் சிறிது பரிதாபம் ஏற்படவும் செய்தது. பெட்டிகளை மூடி ஆணி அடித்து மை தோய்த்த பிரஷால் முதலெழுத்தைக் குறியிட்டதுவரை கவனித்த அவர் ஒன்றும் கடிந்து சொல்லவில்லை. ஆனால் கிராமத்து ஆண்கள் தன் முயற்சிக்கு ஆதரவு தரவில்லை என்பதைப் புயெந்தியா இப்போது அறிந்திருந்தார். ஏனெனில் மெல்லிய குரலில் அவர் தனி மொழி ஒலிப்பது உர்சுலாவுக்குக் கேட்டது. அறையின் கதவைப் பெயர்த்தெடுக்க அவர் முயன்றபோதுதான் உர்சுலா தட்டிக்கேட்டார். ஒருவிதக் கசப்புணர்வும் வெறுப்புமாகப் புயெந்தியா பதிலளித்தார்: “வேறு யாரும் புறப்பட விரும்பாத நிலையில் நாம் மட்டுமாவது புறப்படலாம்.” உர்சுலா கலங்கவில்லை.
“நாம் புறப்படப்போவதில்லை; இங்கேயே தொடர்ந்து இருப்போம் ஏனெனில் இங்கு நமக்கு ஒரு மகன் இருக்கிறான்” என்று உர்சுலா கூறினார்.
“நம் குடும்பத்தில் இங்கு ஒரு சாவும் நிகழவில்லை; ஒருவர் செத்து நிலத்தில் புதையுண்டதுவரை ஓர் இடம் நம்முடையது ஆகாது” என்று புயெந்தியா சொன்னார்.
உர்சுலா, மெல்லிய, ஆனால் உறுதிப்படப் பதிலளித்தார்:
“எஞ்சியுள்ள நீங்கள் அனைவரும் இங்கேயே தங்கிவிட வேண்டும் என்பதற்காக நான் இறக்க வேண்டுமெனில் நான் சாகிறேன்.”
தன்னுடைய மனைவியின் விருப்பம் அவ்வளவு உறுதியுடன் இருக்குமென ஹோஸே ஆர்காடியோ புயெந்தியா நினைத்திருக்கவில்லை; அவருடைய கற்பனைப் புனைவுகளை அவிழ்த்துக் கவர்ச்சியூட்டி இணங்கவைக்கப் பார்த்தார். ஒரு விந்தை உலகில் ஒரு மாயத்திரவத்தை நிலத்தில் தெளித்தால் போதும், ஒருவன் விரும்பும்போது செடிகளில் பழங்கள் காய்த்துத் தொங்கும், வலிகளுக்கு மாற்றான கருவிகள் அனைத்தும் மலிவு விலைகளில் கிடைக்கும் என்றெல்லாம் கதைத்துப் பார்த்தார். தொலைவிலுணர்தல் அவருக்கு முடியலாம். ஆனால் அதற்கெல்லாம் செவி கொடுக்கும் நிலையில் உர்சுலா இல்லை.
“சிறுபிள்ளைத்தனமாக உங்கள் கண்டுபிடிப்புகள் பற்றி நினைத்துக்கொண்டு சுற்றி அலைவதற்குப் பதில் உங்கள் பிள்ளைகளைப் பற்றிக் கவலைப்படுங்கள். அவர்கள் நிலைமையைப் பாருங்கள். தான்தோன்றிக் கழுதைகளைப் போல அலைகிறார்கள்” என்று அவர் பதிலளித்தார்.
மனைவியின் சொற்களை அப்படியே ஒப்புக்கொண்டார் புயெந்தியா. சன்னல் வழியே எட்டிப் பார்த்தார். தகிக்கும் வெயிலில் செருப்புகள் அணியாது குழந்தைகள் ஓடியாடிக்கொண்டிருந்தனர். அவர்கள் இருப்பதே அந்தக் கணத்தில் தான் அவருக்கு உறைத்தது. உர்சுலாவின் மந்திரச் சொல் அவரைக் கட்டிப்போட்டது. அவருள் ஏதோ நிகழ்ந்தது. விவரிக்க இயலாத புதிர் அது; ஆனால் கண்டறிய முடிந்த ஒன்று. அப்படியே ஆடிப்போய்விட்டார். அவருடைய அந்த வேளையில் அவருடைய நினைவு மண்டலத்திலிருந்து கட்டுமீறி வெளிவந்துவிட்டார். வீட்டைத் துப்புரவு செய்வதை உர்சுலா தொடர்ந்தார்; இனி அவர் வாழ்நாள் இறுதிவரை இங்குதான் இருப்பார். இப்போது இது பத்திரமான இடம். புயெந்தியா ஆழ்ந்த சிந்தனையில் மூழ்கினார். குழந்தைகளைப் பற்றி எண்ணினார். அவர் கண்கள் பனித்தன; புறங்கையால் துடைத்துக்கொண்டார். மனம் ஒவ்வாத, ஆனால் மாற்ற இயலாத ஒன்றை ஏற்றுக்கொள்ளும் மனநிலையில் ஆழ்ந்த பெருமூச்சுவிட்டார்.
“எல்லாம் சரி. பெட்டிகளிலிருந்து பொருட்களை வெளியே எடுத்துவைக்க எனக்கு உதவுமாறு அவர்களிடம் கூறு” எனப் புயெந்தியா கூறினார்.
பிள்ளைகளில் மூத்தவன் ஹோஸே ஆர்காடியோ. வயது பதினான்கு. சதுர வடிவத்தில் தலை. அடர்த்தியான தலைமுடி. தந்தை யின் பண்பு நலன்களைக் கொண்டிருந்தான். பலசாலியாக துடிப்புடன் வளர்ந்தாலும் கற்பனை வளம் குறைந்தவன் என்பது முதலிலேயே தெரிந்துவிட்டது. மகெந்தோ கிராமம் உருவாவதற்கு முன்பு, சிரமத்துடன் மலைகளைக் கடந்து வந்தபோது கருக்கொண்டவன், பிறந்தவன். குழந்தையிடம் விலங்கினக் கூறுகள் இல்லை எனத் தெரிந்தபோது வானுலகுக்குப் பெற்றோர் நன்றி கூறினர். மகெந்தோவில் பிறந்த முதல் குழந்தை அவ்ரேலியானோ. மார்ச் மாதம் வந்தால் அவனுக்கு ஆறு வயது. அவன் அமைதியாக, ஒதுங்கி இருப்பான். தாயின் கருப்பையில் இருந்தபோது அழுதவன்; பிறக்கும்போதே அவன் கண்கள் திறந்திருந்தன. தொப்பூள் கொடியை அவர்கள் துண்டித்தபோது தலையை ஒருபுறம் மறுபுறம் திருப்பி அசைந்தவன்; அறையில் இருந்தவற்றை உற்று நோக்கி அச்சமில்லா ஆர்வத்துடன் முகங்களை ஆராய்ந்தவன். அவனை நெருங்கி வந்து மற்றவர்கள் பார்த்தபோது அவனுடைய கவனம் பெரு மழையால் விழுந்துவிடும் போலிருந்த பனை ஓலைக்கூரையில் நிலைத்திருந்தது. அந்த நாள்வரை மீண்டும் உர்சுலா நினைவுகூரவில்லை. ஆனால் அவனுக்கு மூன்று வயதானபோது ஒரு நாள் சமையல் கட்டுக்குள் வந்தான். அப்போது அடுப்பிலிருந்து கொதிக்கும் வடிச்சாறை எடுத்து மேசைமீது உர்சுலா வைத்தார். குழம்பிப்போன அவ்ரேலியானோ, கதவருகில் நின்றவாறே “சிந்தப்போகிறது” என்றான். மேசையின் மத்தியில் ஆடாது அசையாத நிலையில் வைக்கப் பட்டிருந்த பாத்திரம், குழந்தை அந்த அறிவிப்பைச் செய்தவுடன் தெள்ளத் தெளிவாக விளிம்பு நோக்கி அசைந்து ஏதோ உள்ளீடான விசையால் செலுத்தப்பட்டதுபோல நகர்ந்து தரையில் விழுந்து நொறுங்கியது. திடுக்கிட்டுப்போன உர்சுலா இந்த நிகழ்வைக் கணவரிடம் கூறினார். ஆனால் அவர் இதை இயல்பான நேர்வு என்று விளக்கமளித்தார். அவர் அப்படித்தான். தன் பிள்ளை களின் இருப்பே அவர் நினைவுகளில் இருப்பதில்லை; அந்த அளவுக்கு அவர் அன்னியப்பட்டுப்போயிருந் தார். ஏனெனில் அவரைப் பொறுத்த வரை குழந்தைமை, மனத்தளவில் நினைவு பெறாத காலம்; மறுபுறம், கற்பனை ஊகங்களில் அவர் முற்றிலு மாக மூழ்கிப்போயிருந்தது.
ஆனால் ஆய்வுக் கூடத்தில் அந்த நாள் பிற்பகலில் பண்டங்களை வெளியே எடுத்துவைக்க உதவுமாறு பிள்ளைகளை அழைத்தபோதிருந்து நல்ல பொழுதுகளை அவர்களுடன் செலவிட்டார். சிறிய, தனித்த அறை யில் சுவர்கள் கொஞ்சம் கொஞ்ச மாக வினோதமான வரைபடிவங் களாலும் வளமார்ந்த சித்திரங்க ளாலும் நிரப்பப்பட்டன; படிக்கவும் எழுதவும் கணக்குகளைப் போடவும் அவர்களுக்குக் கற்றுத் தந்தார். உலக அதிசயங்களைப் பற்றி அவர்களிடம் பேசினார். அவருடைய படிப்பறிவு விரிந்தவரை சொல்லிக் கொடுத்தார்; அவருடைய கற்பனை வரம்புகள் மீறி உச்சங்களையும் தொட்டார். இவ்வாறாகத்தான் பையன்களின் கல்விப் பயிற்சி அமைந்தது; ஆப்பிரிக்காவின் தென்கோடியில் வாழ்ந்த மக்கள் மிகுந்த அறிவுடையவர் களாகவும் அமைதி நாட்டம் உடையவர்களாகவும் இருக்கின்றார் கள் என்றும் அவர்களின் ஒரே பொழுது போக்கு அமர்ந்திருந்து சிந்திப்பது மட்டுமே என்றும் கிரேக்கத்துக்கும் துருக்கிக்கும் இடைப்பட்ட ஏஜியன் கடலை நடந்தே கடக்க முடியும் என்றும் ஒரு தீவிலிருந்து மற்றொன் றுக்குத் தாவிச் சென்றே சலோனிகா துறைமுகத்தை அடையலாம் என்றும் அவர் சொல்லிக் கொடுத் திருந்தார். உண்மையில் காணப் படாத ஒன்றைக் காணுதல், மாயக் காட்சிகள், பொய்த் தோற்றங்கள் அவருடைய பாடங்களில் பிரதான அம்சங்கள். இவற்றை உள்வாங்கிய குழந்தைகள் மனத்தில் அவை ஆழப்பதிந்தன. விளைவாகப் பல ஆண்டுகளுக்குப் பின்பு, சுடுமாறு ஆணை பிறந்த அந்த ஒரு விநாடிக்கு முன்புகூட கர்னல் அவ்ரேலியானோ புயெந்தியாவின் கண்முன்னே அந்த மார்ச் மாதப் பிற்பகலும் பௌதீகப் பாடம் நடத்திக்கொண்டிருந்த தன் தந்தை இடையில் நிறுத்திவிட்டுக் கவர்ச்சி வசத்தில் நின்று, தன் கையை மேல் நோக்கி வீச, கண்கள் அசை வற்றிருக்க, தூரத்திலிருந்து அந்த நாடோடிகள் இசைத்த குழல் -முரசு - சிறுமணி ஒலிகளும் அவர் கள் மீண்டும் அந்தக் கிராமத்துக்கு வந்ததும் மெம்பிஸ் ஞானிகளின் வியப்பூட்டும் கண்டுபிடிப்பை அறிவித்ததும்தான் நிழலாடின.
இப்போது வந்த நாடோடிகள் புதியவர்கள். ஆண்களும் பெண்களுமாக அனைவரும் இளையவயதினர். தங்கள் மொழியை மட்டுமே அறிந்தவர் கள். அழகிய தோற்றம் உடையவர் கள். அவர்களுடைய தோல்கள் பளபளத்தன; கைகளில் சுறுசுறுப்பு. அவர்களுடைய நடனங்களும் இசை யும் ஆரவார மகிழ்ச்சிப் பெருக்கும் தெருக்களை நிறைத்தன, திகில் ஊட்டின. அவர்கள் இசைத்தது இத்தாலியப் பண்களை; பக்கவாத்தி யங்கள் ஒலிக்க ஒருவர் மட்டுமே பாடுவார், அது நீண்ட பாடலாக இருக்கும். ஆப்பிரிக்கக் கஞ்சிரா இசை ஒலி கேட்டதும் ஒரு கோழி ஒரு நூறு பொன்முட்டைகளை இடும். மனித மனங்களில் ஓடுவதைப் படித்துவிடும் பயிற்சி பெற்ற குரங்கு. ஒரே பொறி, ஒரே சமயத்தில் பொத்தான்களைத் தைக்கும், காய்ச்சலைக் கட்டுப் படுத்தும், கெட்ட நினைவுகளை மறக்கச் செய்யும்; ஒரு மெல்லிய துணி, காலத்தை மறக்கச் செய்யும். இன்னும் ஆயிரத்துக்கு மேற்பட்ட கண்டுபிடிப்புகள். அனைத்தும் அவர் களே உருவாக்கியவை, அசாதாரண மானவை. ஹோஸே ஆர்காடி யோவும் ஒரு இயந்திரத்தைக் கண்டுபிடிக்க விரும்பினான். அது நினைவுப் பொறி; அதன்மூலம் எல்லா வற்றையும் நினைவுகளில் பதிக்க ஆசைப்பட்டான். ஒரு விநாடியில் அந்த நாடோடிகள் கிராமத்தையே புரட்டிப்போட்டுவிட்டனர். மகெந்தோ வாசிகளுக்கு அவர்கள் தெருக்களே புதியனவாகத் தெரிந்தன. அலை மோதும் களியாட்டம், காட்சி; அவர் கள் திக்குமுக்காடிப் போயினர்.
அந்த ஆரவாரக் குழப்பத்தில் குழந்தைகள் தொலைந்துபோய்விடக் கூடாது என்பதற்காக அவர்களின் கைகளைப் பிடித்து ஹோஸே ஆர் காடியோ புயெந்தியா நடத்திவந்தார். கழைக்கூத்தும் பிற ஆட்டங்களும்; அவர்களுடைய பற்களுக்குத் தங்கக் கவசம். காற்றுவெளியில் பொருட்களைச் சுண்டிவிடுவார் ஒருவர், அவருக்கு ஆறு கைகள்; ஒரே சமயத்தில் பல வித்தைகள் காட்டுவார் மற்றொருவர். கூட்டத்தினரின் மூச்சுகளில் பலவிதக் கழிவு நாற்றங்கள், நறுமணங்கள். புயெந்தியா ஒரு பித்தர்போல எங்கும் சுற்றிவந்தார். அவர் மெல்குயாடெஸைத் தேடினார்; அந்த நேர்த்திமிக்க கொடுங்கனவின் முடிவற்ற ரகசியங்களை அந்த நாடோடி தெரியப்படுத்துவான் என்பதால் அவனைத் தேடினார். அங்கிருந்த பல நாடோடிகளிடமும் விசாரித்தார். அவருடைய மொழி அவர்களுக்குப் புரியவில்லை. இறுதியில் மெல்குயாடெஸ் வழக்கமாகத் தன் கூடாரத்தை அமைக்கும் இடத்தை அடைந்தார். அங்கு ஓர் ஆர்மினியன் (அவனைப் பார்த்தவுடன் புரிந்துகொள்ள முடியும்) ஸ்பானிய மொழியில் பேசி நீர்மம் ஒன்றை விற்றுக்கொண்டிருந்தான். அந்தப் பாகை அருந்தியவன் பிறர் கண்களுக்குத் தெரியமாட்டான் என்று அவன் கூறிக்கொண்டிருந்தான். அதிர்ச்சியூட்டும் காட்சியைக் கண்டு வியப்பில் மூழ்கிப் போயிருந்த கூட்டத்தை விலக்கிக்கொண்டு அவனைப் புயெந்தியா நெருங்கியபோது மஞ்சளும் பழுப்பும் கலந்த நிறத்தில் இருந்த அந்தப் பாகை அவன் ஒரேமடக்கில் குடித்தான். அவனிடம் தன் கேள்வியைக் கேட்க அவரால் முடிந்தது. பெருவாரி நோய் விளைவிக்கும் சேற்று மடுவில் மூழ்கியவனைப் போலப் புகைக்களத்தில் கரைவதற்கு முன்பு அவன் பேசினான்: “மெல்குயாடெஸ் செத்துப் போய்விட்டான்.” அந்தச் சொற்களின் எதிரொலி இன்னும் கேட்கிறது. இந்தச் செய்தி புயெந்தியாவை நிலை குலையச் செய்துவிட்டது; அவர் அசைவற்று நின்றுவிட்டார். கூட்டம் கலையும்வரை துயரத்திலிருந்து மீண்டு எழ அவர் முயன்று கொண்டிருந்தார். வியப்பூட்டும் பிற கருவிகளைக் காணக் கூட்டத்தினர் வேறுபுறம் சென்றனர். மெல்குயாடெஸின் சாவை மற்ற நாடோடிகளும் உறுதி செய்தனர்; சிங்கப்பூர் கடற்கரையில் தொற்றிய காய்ச்சலுக்கு அவன் பலியானதையும் ஜாவா கடலின் ஆழப் பகுதியில் சடலம் வீசப்பட்டதையும் அவர்கள் நிச்சயப்படுத்தினர். இச்செய்தி பற்றிக் குழந்தைகள் அக்கறைப்படவில்லை. மெம்பிஸ் ஞானிகளின் புதுமையைக் காண அழைத்துச் செல்லுமாறு அவர்கள் முரண்டுபிடித்தனர். ஒரு கூடாரத்தின் வாயிலில் அப்புதுமைப் பற்றிய விளம்பரம் வைக்கப்பட்டிருந்தது; அது, சாலமோன் அரசருக்குச் சொந்தமானது என்று அதில் கூறப்பட்டிருந்தது. குழந்தைகளின் பிடிவாதத்துக்குப் பணிந்து முப்பது ஸ்பானிய நாணயங்களைச் செலுத்திவிட்டுக் கூடாரத்தின் நடுப்பகுதிக்கு அவர்களை இட்டுச்சென்றார். அங்கே ஒரு பிரமாண்ட உருவம். உடலெங்கும் ரோமம்; தலை மழிக்கப்பட்டிருந்தது. மூக்கில் ஒரு செப்பு வளையம்; கணுக்காலில் கனத்ததொரு இரும்புச் சங்கிலி. ஒரு கனத்த பெட்டியை அந்த உருவம் பார்த்தவாறு இருந்தது. அந்தப் பெட்டியை அது திறந்த போது பனிக்கட்டிப் பாளத்தால் உண்டாக்கப்படும் புகை வெளிவந்தது. உள்ளே ஒரு பெரிய கட்டி. ஒளி ஊடுருவுகின்ற, உள்ளீடு தெரியும் படிகப்பாளம். பேரளவான எண்ணிக்கையில் ஊசிகள். அந்தி நேர ஒளி அவற்றில் ஊடுருவும்போது பல வண்ண நட்சத்திரங்களாக அவை சிதறிய தோற்றம். குழந்தை களுக்கு உடனடி விளக்கம் தேவை. திடுக்குற்ற ஹோஸே ஆர்காடியோ புயெந்தியா முணுமுணுத்தார்.
“உலகின் மிகப் பெரிய வைரம்.”
“இல்லை” என்று அந்த நாடோடி அடித்துச் சொன்னான். “அது பனிக்கட்டி”
புயெந்தியாவுக்குப் புரியவில்லை. அந்தக் கட்டியை நோக்கிக் கையை நீட்டினார். ஆனால் அந்தப் பெரிய உருவத்தான் தள்ளிவிட்டான்.” தொடுவதற்கு இன்னும் ஐந்து நாணயங்கள் தர வேண்டும்” என்று அவன் சொன்னான். புயெந்தியா அவ்வாறே செலுத்தினார். பனிக்கட்டிமீது கையைவைத்தார். பல மணித்துளிகள்வரை அதைப் பற்றியவாறே இருந்தார். மர்மத்துடன் ஏற்பட்ட தொடர்பால் அவர் நெஞ்சை அச்சமும் மகிழ்ச்சியும் நிறைத்தன. என்ன சொல்வதெனத் தெரியாத நிலையில் மேற்கொண்டு பத்து நாணயங்களைச் செலுத்தினார். தன் பிள்ளைகளுக்கும் அந்த வியப்பூட்டும் பேரனுபவம் கிடைக்கட்டுமென அவர் நினைத்தார். குட்டி ஹோஸே ஆர்காடியோ அதைத் தொட மறுத்தான். ஆனால் அவ்ரேலியானோ ஓர் எட்டு முன் வந்து அதன்மீது கைவைத்தான். உடனே கையை எடுத்துவிட்டான். “அது சுடுகிறது” என்று கூவினான். அவனுக்கு ஒரே வியப்பு. ஆனால் அதையெல்லாம் தகப்பன் கவனிக்கவில்லை. அதிசயத்தின் சான்றைக் கண்ட மயக்கத்தில் அவர் ஒருகணம் அனைத்தையும் மறந்தார். பிறழ் சிந்தை வயப்பட்ட தன்னுடைய முயற்சிகள், மெல்குயாடெஸின் சடலம், அது எண்கை மீன்களுக்கு உணவாக வீசப்பட்ட பரிதாபம் - அனைத்தையும் மறந்தார். மறுபடியும் ஐந்து நாணயங்களைச் செலுத்திவிட்டு அந்தக் கட்டிமீது தன் கையை வைத்தார், புனித நூல்களின்மீது கை வைத்து சாட்சியம் அளிப்பதுபோல. அவர் குரலில் பெருவியப்பு:
“நமது காலத்தின் மிகப் பெரிய கண்டுபிடிப்பு இது.”
o
ஸ்பானிய மொழியிலிருந்து நேரடியாகத் தமிழில் மொழிபெயர்க்கப்பட்டு காலச்சுவடு பதிப்பக வெளியீடாக விரைவில் வரவிருக்கிறது.
‘அவர் ஒரு பிரமாண்டப் பறவையாய்க் காட்சியளிக்கிறார்’ - மார்கெஸ் பற்றி ஒரு நூல்
மார்கெஸ் பற்றி உலகமொழிகளில் சிறந்த நூல்கள் தொடர்ந்து வெளிவந்தவண்ணமுள்ளன. அவ்வகையில் அண்மையில் வெளிவந்த நூல்களில் மார்டின் (Gerald Martin) எழுதிய Gabriel Garcia Marquez: A Life என்னும் நூல் குறிப்பிடத்தக்கது இந்த நூலை மேலோட்டமாக வாசிப்பதுகூட மார்கெஸின் படைப்பாளுமையை ஒரளவு புரிந்துகொள்ள துணைசெய்யும்.
வாழ்க்கை, ஒருவர் வாழ்ந்ததைக் கூறுவதன்று; வாழ்ந்ததை அவர் எவ்வாறு நினைவுகூர்கிறார் என்பதைக் கூறுவது. உள்ளத்தில் அதை இருத்தவே அவர் எண்ணிப் பார்க்கிறார். மார்கெஸ் (Gabriel Garcia Marquez) தன்னுடைய நினைவுகளை நூல் வடிவில் (Living to Tell the Tale-2003) தன் வரலாறாக வடித்துள்ளார். நினைவை அடையாளம் கண்டு அதற்குத் தெளிவான சொல் வடிவம் தந்தவர் அவர். ஒரு படைப்பாளியின் வாழ்க்கைக்கு இவை இரண்டும் ஆதாரங்களாக அமைவன. அவருடைய நினைவுக் குறிப்பைத் தொடர்ந்து மார்ட்டின் எழுதிய இந்தப் புதிய வாழ்க்கை வரலாறு வெளிவந்துள்ளது.
மார்கெஸ் உலகின் மூலைமுடுக்குகளிலிருந்தெல்லாம் பட்டறிந்தவை ஏராளம். காடார்ந்த அந்த அனுபவங்களைத் தன்னுடைய சொற்களில் அவர் கொண்டு சேர்த்தார். கொலம்பியாவில் அவருடைய குழந்தைப் பருவம் பதற்றச் சூழலில் கழிந்தது. இளைஞனாகப் பாரிஸ் நகரில் வாழ்ந்தபோது தாச்சியா குவின்டினாமீது அவர் கொண்ட காதல் அவலக் கதையாக முடிந்தது. காஸ்த்ரோ (Castro), மரியோ (Mario Vargos Liosa) போன்ற பெருமக்களுடன் அவர் நட்பு ஆழமானது. இலக்கிய உலகில் அவருக்குப் பல நண்பர்கள். கால வெளியில் இலக்கியபூர்வமான, அறிவார்ந்த நட்பை இன்றுவரை அவர் போற்றிப் பாதுகாத்து வருகிறார். அந்த நண்பர்களைப் பற்றிய நினைவுகள் அவர் நெஞ்சில் ஆழப் பதிந்தவை. அவற்றைத் தோண்டி மேலெடுத்து அழகாக உணர்த்துகிறார் மார்ட்டின்.
நினைவுகூர்வதில் மார்கெஸ் உருவாக்கியுள்ள முறை தனித்தன்மை மிக்கது. நினைவுகளை மீண்டும் சொல்லிச் செல்வதை அவர் ஒரு வித்தையாகவே உருவாக்கியுள்ளார். அது மாயமிக்கது. ஆனால் உண்மையானது. நினைவோடையிலிருந்து விலகி நிற்பதும் மீண்டும் நினைவுகூர்வதும் புதியதோர் உருவைச் சமைக்கிறது. அதுவும் அவர் விரும்பிய வண்மை அமைகிறது. மென்மையும் திறமும் அதில் பளிச்சிடுகின்றன. இந்த ஆற்றல்தான் அவருக்கு நோபெல் பரிசைப் பெற்றுத்தந்தது. அது ஈடிணையற்ற ஆற்றல். புனை கதை மரபுக்கு நெடிய, புதிய பல வண்ணங்களைச் சேர்த்த ஆற்றல்.
மார்கெஸின் வாழ்க்கையை விவரிப்பது ஓர் அறை கூவல். மார்ட்டின் அதைத் துணிவுடன் ஏற்றுப் பெரு வெற்றி கண்டுள்ளார். அவர் மேற்கொண்ட நுண்ணிய ஆய்வுகள் நூல் முழுவதும் விரவி நிற்கின்றன. மார்கெஸின் வாழ்க்கை, நெஞ்சத்துணர்வுகள், அவர் படைத்துள்ள புனைகதைகளுடன் இரண்டறக் கலந்து நிற்பதை, நேர்காண்பதை ஆசிரியர் நம்கண் முன்நிறுத்தியிருக்கிறார்; கதைத் தலைவனுடன் பல முறை உரையாடி, புரிந்துகொண்டு, உழைத்து, கோர்வைப்படுத்தியிருக்கிறார். விளைவாக நாம் பயன்பெறுகிறோம்.
ஒரு மாபெரும் வாழ்க்கையை வரலாறாக உலகுக்குக் கொண்டு வருவது எளிதான பணி அன்று. மார்ட்டினின் முயற்சி, ஜேம்ஸ் ஜாய்ஸ் பற்றி எல்மான் அளித்த வாழ்க்கை வரலாற்றை நினைவுக்குக் கொண்டுவருகிறது. அத்தகைய பீடுமிக்க மரபு தொடர்வது மகிழ்ச்சி அளிக்கிறது; மனநிறைவு தருகிறது. அதில் ஓர் அழகிய குறும்பும் தெரிகிறது!
மார்கெஸ் நம்மிடையே வாழ்கிறார். அவருடைய படைப்பாற்றல் இன்றும் வீறுடன் திகழ்கிறது. அத்தகையவரிடம் வினா எழுப்புவதும் அவரை ஆழங்காண முயல்வதும் எளிதன்று. ஆனால் மார்டின் 300 முறை நேர்கண்டுள்ளார்; மார்கெஸ், மற்றும் அவருடைய மனைவி, குடும்பத்தினர், நண்பர்கள், முன்னாள் காதலி என அந்த மாயோனுடன் பழகிய பலரையும் கண்டு பேசியுள்ளார். திரட்டிய அனைத்தையும் பயன்படுத்தி அழகிய ஓவியமாக உருவாக்கியுள்ளார். விளங்காப் பொருள் ஒன்று சுவைமிக்க வாழ்க்கைக் கதையாகப் படைக்கப்பட்டுள்ளது.
அழியாத் தன்மைமிக்க பல வண்ணங்கள் மார்கெஸின் படைப்புகளில் விரவி நிற்பதைக் காணும் வாசகன், நுண்ணிய வரலாற்றுண்மைகளை, சுவைமிக்க சமூக, அரசியல், பண்பாட்டுக் கூறுகளை, ‘உள்ளபடி’ அறிகிறான். ‘வீடு’, அவருடைய முதல் புதினம். அதுவே ‘ஒரு நூறாண்டுத் தனிமை’ (Cien Anos de soledad)க்கான ஊற்று. அவருடைய பாட்டியின் கனவுக்கதைகள், பல இரவுகளில் கேட்ட, பிரமிப்பூட்டும், நம்ப இயலாத கதையாடல்கள், அவற்றில் பொதிந்து செழித்த மாயத்தன்மை, மனவெளித் தளங்கள், கற்பனையூர்கள், மிரளவைக்கும் வருணனைகள் - இவை அனைத்தும் மார்கெஸின் படைப்புகளுக்கு அற்புதங்களைச் சேர்த்தன. ஏற்கப்பட இயலாத, கதைத் தன்மைமிக்க அந்தக் குழந்தையின் பிறப்பு, பாட்டியுடன் அந்தக் குழந்தை கழித்த முதல் ஏழாண்டுகள், ஒரு சிறுமியுடன் அந்தச் சிறுவன் உருவாக்கிக்கொண்ட கனவு, அது பழங்கனவாய்ப்போன கதை, இருந்தும் இல்லாத பெற்றவளின் கதை, இவை விளைத்த அவலங்கள், கொலம்பிய மண்ணுக்கே உரிய வன்முறைச்சூழல், எப்போது என்ன நடக்குமோ எனும் பதைப்பு - இவையெல்லாம் மார்கெஸை ஓர் அற்புதப் படைப்பாளியாக மாற்றத் துணை நின்றன. எனவேதான் அவர் படைப்புகளில் விந்தைமிகு புதுமைகளைக் காண்கிறோம்.
ஒரு கவிஞன், ஒரு படைப்பாளி சில அசாதாரண உரிமைகளை எடுத்துக்கொள்வது இயல்பு. மார்கெஸின் கற்பனை நயங்கள் அவருடைய வாழ்க்கை ரகசியங்களுக்குள் சென்றுவிடாமல் நம்மைக் கட்டிப் போடுகின்றன. அவருடைய கூற்றுப்படி ஒவ்வொருவருக்கும் மூன்று முகங்கள் (வாழ்க்கை) உண்டு. பொதுவான ஒன்று, அனைவரும் அறிந்துகொள்ளும் விதத்தில் அமைவது. இன்னொன்று தனிவாழ்வு. மற்றொன்று அந்தரங்கமானது, ரகசியமானது. மார்கெஸை வெளிக்கொணர்வது, அவருடைய சுழலியக்க மையத்தைத் தொடுவது நல்ல முயற்சி. அதில் மார்டின் மகத்தான வெற்றிபெற்றுள்ளார். நமது காலத்தில் அற்புதப் படைப்பாளியான மார்கெஸுக்கு மூப்பு உண்டா? ஏனெனில் அவர் ஒரு பிரமாண்டப் பறவையாகக் காட்சியளிக்கிறார்
நன்றி: http://www.kalachuvadu.com/issue-124/page14.asp
•<• •Prev• | •Next• •>• |
---|