[முகநூலில் நண்பர்கள் அவ்வப்போது பதிவு செய்யும் படைப்புகளை, எண்ணங்களை 'முகநூல் குறிப்புக'ளில் மீள்பிரசுரம் செய்கின்றோம். அந்த வகையில் உமாமகேஸ்வரியின் 'மரப்பாச்சி' என்னுமிச் சிறுகதையும் பிரசுரமாகின்றது. இதனை முகநூலில் பதிவு செய்தவர் எழுத்தாளர் சீர்காழி 'தாஜ்'.- பதிவுகள்]
பரணில் எதையோ தேட ஏறிய அப்பா இறங்கும்போது வேறொரு பொருளைக் கையில் வைத்திருந்தார். கடந்த காலத்தின் தூசு அவர் மீது மங்கலாகப் படிந்திருந்தது. பழைய பொருள்களோடு ஞாபகங்களையும் உருட்டிக் களைத்துக் கனிந்த முகம். அப்பா அனுவைக் கூப்பிட்டார் – எந்த நொடியிலும் விழுந்து சிதறுவதற்கான அச்சுறுத்தல்களோடு அவசர வாழ்வில் விளிம்பில் தள்ளாடும் அபூர்வமானதொரு குழந்தைக் கணத்தைத் தன்னிலிருந்து சேகரித்து அவளில் நட்டுவிட வேண்டும், உடனடியாக. ஒரு மாயாஜாலப் புன்னகையோடு அதை அனுவிடம் நீட்டினார். சிறிய, பழைய மஞ்சள் துணிப்பையில் பத்திரமாகச் சுற்றிய பொட்டலம், பிரிபடாத பொட்டலத்தின் வசீகரமான மர்மத்தை அனு ஒரு நிமிடம் புரட்டிப் பார்த்து ரசித்தாள். உள்ளே என்ன? பனங்கிழங்குக் கட்டு? பென்சில் டப்பா? சுருட்டிய சித்திரக் கதைப் புத்தகம்? எட்டு வயது அனுவிற்கு இந்தப் புதிரின் திகில் தாங்க முடியவில்லை. அப்பாவின் ஆர்வமோ அது இவளுக்குப் பிடித்திருக்க வேண்டுமே என்பதாக இருந்தது. அவசர அவசரமாகப் பிரித்தபோது வெளியே வந்தது கரிய மரத்தாலான சிறிய பெண்ணுருவம். அதனுடைய பழமையே அனுவிற்குப் புதுமையானதாயிற்று. தெய்வ விக்கிரகங்களின் பிழைபடாத அழகோ, இயந்திரங்கள் துப்பிய பிளாஸ்டிக் பொம்மைகளின் மொண்ணைத்தனமோ வழவழப்போ அதற்கில்லை. விரல்களை உறுத்தாத சீரான சொரசொரப்பு. இதமான பிடிமானத்திற்கு ஏதுவான சிற்றுடல்; நீண்டு மடங்கிய கைகள்; ஒரு பீடத்தில் நிறுத்தப்பட்ட கால்கள்; வாழ்தலின் சோகத்தை வளைகோடுகளுக்குள் நிறைத்த கண்கள்; உறைந்த உதடுகள். ‘ஹை, பின்னல்கூட போட்டிருக்கப்பா.’ அனு ஒவ்வொன்றாகத் தடவிப் பார்த்தாள் அதிசயமாக. ‘ஒவ்வொரு அணுவிலும் இதைச் செதுக்கிய தச்சனின் விரல்மொழி, உளியின் ஒலி’ என்று அப்பா முழங்கை, கால்கள் மற்றும் முகத்தில் இருக்கிற சிறுரேகைகளைக் காட்டிச் சொன்னார். பிறகு அவளுடைய திகைப்பைத் திருப்தியோடு பார்த்தபடி, புதிய விளையாட்டுத் தோழியுடனான தனிமையை அனுமதிக்கும் விதமாக அங்கிருந்து நகர்ந்தார்.
மரச் செப்புகள், சிறு அடுப்பு, பானை, சட்டி, சருவம், குடம், கரண்டி என்று எதிர்காலச் சமையல் அறையின் மாதிரி அவள் சிறு கைகளில் பரவிச் சமைந்து அவளைக் களைப்புறச் செய்தது. வட்டத் தண்டவாளத்தில் ஓடும் குட்டி ரயிலின் கூவல் சோகத்தின் நிழலை நெஞ்சுள் பூசுகிறது. கிளி, மைனா, புறா என்று பறவை பொம்மைகளின் மொழியோ சதா மேகங்களைத் துழாவிக் கொண்டிருக்கிறது. பிளாஸ்டிக் யுவதிகள் அவள் கற்பனையின் கனம் தாளமாட்டாத மெலிவோடு இருக்கிறார்கள்.
அம்மா சமையல், கழுவுதல், துவைத்தல், துடைத்தல் என எந்த நேரமும் வேலைகளோடிருக்கிறாள். பிறகு தங்கச்சிப் பாப்பாவின் குஞ்சுக் கை, கால்களுக்கு எண்ணெயிட்டு நீவி, காலில் குப்புறப் போட்டுக் குளிக்கவைக்கிறாள். துவட்டிச் சாம்பிராணிப் புகை காட்டி, நெஞ்சோடு அணைத்துச் சேலையால் மூடி மூலையில் உட்கார்ந்திருக்கிறாள் நெடுநேரம்.
‘அம்மா நான் உன் மடியில் படுத்துக்கட்டுமா?’
‘இன்னும் சின்னக் குழந்தையா நீ?’ நெஞ்சு வரை மேடேறிய கர்ப்ப வயிற்றோடு அம்மாவுக்குப் பேசினாலே மூச்சிரைக்கிறது. அவள் பகிர்ந்து தரும் அன்பின் போதாமை அனுவை அழுத்துகிறது.
அப்பா மெத்தையில் சாய்ந்து மடக்கி உயர்த்திய கால்களில் தங்கச்சிப் பாப்பாவைக் கிடத்தி தூரியாட்டுகிறார். கிலுகிலுப்பையை ஆட்டி பாப்பாவிற்கு விளையாட்டுக் காட்டுகிறார். ‘ங்கு, அக்கு’ என்று பாப்பாவோடு பேசுகிறார்.
‘அப்ப, இந்தக் கதையில அந்த ராஜா…’ என்ரு அனு எதையாவது கேட்டால்., ‘பெரிய மனுசிபோல் என்ன கேள்வி நை நைனு, சும்மா இரு’ என்று அதட்டுகிறார்.
‘நான் யார்? பெரியவளா, சின்னவளா, நீயே சொல்’ அனு கேட்கையில் மரப்பாச்சி மௌனமாய் விழிக்கும்.
‘எனக்கு யாரிருக்கா? நான் தனி.’ அனுவின் முறையிடல்களை அது அக்கறையோடு கேட்கும். சுடுகாயைத் தரையில் உரசி அதன் கன்னத்தில் வைத்தால் ‘ஆ, பொசுக்குதே’ என்று முகத்தைக் கோணும். கொடுக்காப்புளிப் பழத்தின் கொட்டையில், உட்பழுப்புத் தோல் சேதம் அடையாமல் மேல் கறுப்புத் தோலை உரித்து நிலை மேல் வைத்தால் பகல் கனவும் பலிக்கும் என்கிற அனுவின் நம்பிக்கைகளுக்கு ‘ஆமாஞ்சாமி’ போடும். அவள் நிர்மாணிக்கிற பள்ளிகளில் மாணவியாக, தொட்டில்களில் பிள்ளையாக, சில நேரம் அம்மாவாக, கனவுலக தேவதையாக எந்த நேரமும் அனுவோடிருக்கும்.
மரப்பாச்சி புதிய கதைகளை அவளுக்குச் சொல்லும்போது, அதன் கண்களில் நீல ஒளி படரும். மரப்பாச்சி மரத்தின் இதயமாயிருந்தபோது அறிந்த கதைகள், மரம் வானை முத்தமிட்ட பரவசக் கதைகள், மழைத்துளிக்குள் விரிந்த வானவிற் கதைகள்… அவள் எல்லா நாளும் ஏதாவது ஒரு கதையின் மடியில் உறங்கினாள்.
வருடங்கள் அவளை உருகிப் புதிதாக வார்த்தன. நீண்டு, மினுமினுக்கிற கைகள்; திரண்ட தோள்கள்; குழைந்து, வளைந்த இடுப்பு, குளியல் அறையில் தன் மார்பின் அரும்புகளில் முதன் முறையாக விரல் பட்டபோது பயந்து, பதறி மரப்பாச்சியிடம் ஓடி வந்து சொன்னாள். அது தனது சிறிய கூம்பு வடிவ முலைகளை அவளுக்குக் காட்டியது.
அவள் குளியல் அறைக் கதவுகளை மூடித் தன்னைத் தனிப்படுத்திக் கொள்வதில் அம்மாவிற்குக் ஆதங்கம். ‘நான் தலை தேய்து விடறேனே’ என்கிறாள்.
‘ஒண்ணும் வேணாம்’ என்று அனு விலகுகிறாள். அம்மா தனக்கும் அவளுக்கும் இடையே தள்ளத் தள்ள முளைத்தாடும் திரைகளை விலக்க முயன்று, தாண்டி முன்னேறுகையில் புதிது புதிதாய் திரைகள் பெருகக் கண்டு மிரண்டாள். நிரந்தரமான மெல்லிய திரைக்குப் பின்புறம் தெரியும் மகளின் வடிவக்கோடுகளை வருடத் தவித்தாள்.
எல்லோரும் தூங்கும் இரவுகளில் அனுவின் படுக்கையோரம் அம்மா உட்கார்ந்திருப்பாள். அனுவின் உறக்கத்தில் ஊடுருவி நெருடும் அம்மாவின் விழிப்பு. உள்ளங்கை அனுவின் உடல் மீது ஒற்றி ஒற்றி எதையோ எதையோ தேடும். ‘என்னம்மா?’ பாதி விழிப்பில் அனு கேட்டால் பதற்றமாகக் கையை இழுத்துக்கொண்டு, ‘ஒண்ணுமில்லை’ என முனகி, முதுகு காட்டிப் படுத்துக் கொள்வாள். அம்மாவின் முதுகிலிருந்து விழிகளும் வினாக்களும் தன் மீது பொழிவதை அனுவால் அறிய முடியும்.
பள்ளிக்குக் கிளம்பும் நேரம் இப்போதெல்லாம் மேலாடையைச் சரியாகப் போடுவது அம்மாதான், சாயங்காலம் அவள் வர பத்து நிமிடம் தாமதித்தால் , வாசலில் அம்மா பதறித் தவித்து நிற்கிறாள். எங்கே போனாலும் அம்மாவின் கண்களின் கதகதப்பும் மிருதும் அடைகாக்கிறது.
தன் அயர்விலும் ஆனந்தத்திலும் மரப்பாச்சி மங்குவதையும் ஒளிர்வதையும் கண்டு அனு வியக்கிறாள். தன்னை அச்சுறுத்தவும் கிளர்த்தவும் செய்கிற ததும்பல்களை மரப்பாச்சியிடமும் காண்கிறாள். கட்புலனாகாத கதிர்களால் தான் மரப்பாச்சியோடு ஒன்றுவதை உணர்கிறாள்.
மரப்பாச்சியின் திறந்த உடல், கோடுகள் தாண்டி மிளிரும் விழிகள், இடுப்பும் மடங்கிய கையும் உருவாக்கும் இடைவெளி அனைத்தையும் உறிஞ்சத் திறந்த உதடுபோல் விரியும். அனுவின் உலகம் அதற்குள் வழுக்கி, நகர்ந்து, சுருங்கும்.
சிறுமிகள் அனுவை விளையாடக் கூப்பிட்டு உதடு பிதுக்கித் திரும்புகிறார்கள். கூடத்துத் தரையில் முடிவுற்று ஆடும் தொலைக் காட்சியின் ஒளி நெளிவுகள், இரவில் ஊறும் இருள், ஜன்னல் கதவுகள் காற்றில் அலைக்கழிய, அனு கட்டில் ஓரத்தில் சுருண்டிருப்பாள். மேஜையில் இருக்கும் மரப்பாச்சியின் கண்கள் அவளைத் தாலாட்டும் மெல்லிய வலைகளைப் பின்னுகின்றன. அதன் முலைகள் உதிர்ந்து மார்பெங்கும் திடீரென மயிர் அடர்ந்திருக்கிறது. வளைந்து இடுப்பு நேராகி , உடல் திடம் அடைந்து, வளைந்த மீசையோடு அது பெற்ற ஆண் வடிவம் விசித்திரமாயும் விருப்பத்திற்குரியதாகவும் இருக்கிறது. அது மெதுவாக நகர்ந்து அவள் படுக்கையின் அருகில் வந்தது. அதன் நீண்ட நிழல் கட்டிலில் குவிந்து அனுவை அருந்தியது. பிறகு அது மெத்தை முழுவதும் தனது கரிய நரம்புகளை விரித்ததும் அவை புதிய புதிய உருவங்களை வரைந்தன.; துண்டு துண்டாக. அம்புலிமாமா கதைகளில் அரசிளங்குமரிகளை வளைத்துக் குதிரையில் ஏற்றுகிற இளவரசனின் கைகள். சினிமாக்களில் காதலியைத் துரத்தி ஓடுகிற காதலனின் கால்கள். தொலைக்காட்சியில் கண் மயங்கிய பெண்ணின் கன்னங்களில் முத்தமிடுகிற உதடுகள். தெருவோரங்களில், கூட்டங்களில் அவள் மீது தெறித்து , உணர்வைச் சொடுக்கிச் சிமிட்டுகிற கண்கள். இன்னும் அம்மாவின் இதமான சாயல்கள், அப்பாவின் உக்கிரக் கவர்ச்சியோடான அசைவுகள், அத்தனையும் சிந்திய நிழற்துண்டங்கள், அபூர்வமான லயங்களில் குழைந்து கூடி உருவாகிறான் ஒருவன். அவள் ஒருபோதும் கண்டிராத, ஆனால் எப்போதும் அவளுள் அசைந்தபடியிருந்த அவன், அந்த ஊடுருவல் தனக்கு நேர்வதைத் தானேயற்று கவனம் கொள்ள முடிவது என்ன அதிசயம்? தனக்கு மட்டுமேயாகவிருந்த அந்தரங்கத்தின் திசைகளில் அவன் சுவாதீனம் கொள்வது குளிர்ந்த பரபரப்பாகப் பூக்கிறது. அந்த இரவு, காலையின் அவசரத்திலும் உடைபடாது நீண்டது. அனு வேறெப்போதும் போலன்றி தன் உடலை மிகவும் நேசித்தாள். கனவின் ரகசியத்தைப் பதுக்கிய மிதப்பில் பகல்களிருந்தன. பள்ளி முடிந்ததும் தாவி வந்து அவளை அள்ளுகிற மரப்பாச்சி; ‘ஏன் லேட்?’ என்று ‘உம்’மென்றாகிற அதன் முகம்; நீள்கிற ரகசியக் கொஞ்சல்கள்; அம்மா இல்லாத நேரம் இடும் முத்தங்கள்; அவள் படுக்கையில் அவளுக்கு முன்பாகவே ஆக்கிரமித்திருக்கிற அவன். போர்வைக்குள் அனுவின் கைப்பிடியில் இருக்கிற மரப்பாச்சியை அம்மா பிடுங்க முயற்சித்தால், தூக்கத்திலும் இறுகப் பற்றிக் கொள்கிறாள். அதன் விரிந்த கைகளுக்குள் தன்னைப் பொதிந்தும், மார்பு முடிகளைச் சுருட்டி விளையாடியும் மீசை நுனியை இழுத்துச் சிரித்தும் தோள்களில் நறுக்கென்று செல்லமாய்க் கிள்ளியும் அவள் நேரங்கள் கிளுகிளுக்கும். தாபங்களின் படிகளில் சுழன்றிறங்குகிறாள் அவள். அகலவும் மனமின்றி அமிழவும் துணிவின்றி வேட்கையின் விளிம்பலைகளில் நுனிப் பாதம் அளைகிறாள்.
கிருஸ்துமஸ் லீவ் சமயம் அத்தை வந்தபோது அனு கவுனை கால்களுக்கிடையில் சேகரித்து, குனிந்து, கோல நடுச்சாணி உருண்டையில் பூசணிப் பூவைச் செருகிக்கொண்டிருந்தாள். ‘அனு எப்படி வளர்ந்துட்டே!’ அத்தை ஆச்சரியத்திற்குள் அவளை அள்ளிக் கொண்டாள். உணவு மேஜையில் விசேஷமான பண்டங்கள், பார்த்துப் பார்த்துப் பரிமாறும் அம்மா. அத்தை அனுவை லீவிற்குத் தன்னோடு அனுப்பும்படி கேட்டதும் அம்மாவின் முகத்தில் திகிற் புள்ளிகள் இறைபட்டன. ‘அய்யோ மதினி, இவளை நாங்க கடிச்சா முழுங்கிடுவோம்? அப்படியே இவள் ஆளாகிற முகூர்த்தம் எங்க வீட்டில் நேர்ந்தால் என்ன குத்தம்? எனக்கும் பிள்ளையா குட்டியா? ஒரு தரம் என்னோட வரட்டுமே’ அத்தை அவளைத் தன்னருகில் வாஞ்சையாக இழுத்துக் கொண்டாள்.
ஒரு உறுப்பையே தன்னிலிருந்து வெட்டியெடுப்பது போன்ற அம்மாவின் வேதனை கண்டு அனு மருண்டாள். துணிகளை அடுக்கிய பெட்டியில் மரப்பாச்சியை வைக்கப் போனபோது அத்தை, ‘அங்கே நிறைய பொம்மை இருக்கு’ என்று பிடுங்கிப் போட்டதுதான் அனுவுக்கு வருத்தம்.
அந்தப் பயணம் அவளுக்குப் பிடித்திருந்தது. நகர்கிற மரங்கள்; காற்றின் உல்லாசம்; மலைகளின் நீலச்சாய்வு. எல்லாமும் புத்தம் புதிது.
அம்மா வற்புறுத்தி உடுத்திவிட்ட கரும்பச்சைப் பாவாடையில் அனுவின் வளர்த்தியை மாமாவும் வியந்தார். பார்த்த கணத்திலிருந்தே மாமாவிடம் இருந்து தன்பால் எதுவோ பாய்வதை உணர்ந்து அவள் கூசினாள். ‘எந்த கிளாஸ் நீ? எய்த்தா, நைன்த்தா?’ என்று கேட்டுவிட்டு பதிலைக் காதில் வாங்காமல் கழுத்துக் கீழே தேங்கிய மாமாவின் பார்வையில் அது நெளிந்தது. ‘ எப்படி மாறிட்டே? மூக்கொழுகிக்கிட்டு, சின்ன கவுன் போட்டிருந்த குட்டிப் பொண்ணா நீ?’ என்று அவள் இடுப்பைத் திமிறத் திமிற இழுத்துக் கொஞ்சியபோது மூச்சின் அனலில் அது ஊர்ந்தது. ‘சட்டை இந்த இடத்தில் இறுக்குதா?’ கேட்டு தொட்டுத் தொட்டு மேலும் கீழும் அழுத்தித் தேடிய உள்ளங்கையில் இருந்து அது நசநசவென்று பரவியது. மாமாவின் கைகளில் இருந்து தன்னை உருவிக்கொண்டு ஓடினாள் அனு.
அத்தை பிரியமாயிருந்தாள். திகட்டத் திகட்ட கருப்பட்டி ஆப்பாம், ரவை பணியாரம், சீனிப்பாலில் ஊறிய சிறு உருண்டையான உளுந்து வடைகள் என்று கேட்டுக்கேட்டு ஊட்டாத குறைதான்.
‘உன் அடர்த்தியான சுருள்முடியில் இன்னிக்கு ஆயிரங்கால் சடை பின்னலாமா? பின்னி முடித்து, கொல்லையில் பூத்த பிச்சி மொட்டுகளை ஊசியில் கோர்த்து வாங்கி , ஜடையில் தைத்து, பெரிய கண்ணாடி முன் திருப்பி நிறுத்தி, சின்னக் கண்ணாடியைக் கையில் தந்தாள். ‘நல்லாயிருக்கா பார் அனு!’
அம்மா ஒளிந்துவைத்த அன்பின் பக்கங்கள் அத்தையிடம் திறந்து புரண்டன. அனு எந்நேரமும் அத்தையை ஒட்டி, இரவில் சுவர் மூலையில் ஒண்டிப் படுத்து, அத்தையின் சேலை நுனியைப் பார்த்தபடியே தூங்க முனைவாள். அவ்வளவு தூரத்தையும் ஒரு விரல் சொடுக்கில் அழித்துவிட்டு , மரப்பாச்சிக்குள்ளிருந்து கிளம்பி வருகிறான் அவன். அத்தைக்கும் அனுவிற்கும் நடுவே இருந்த சிறிய இடைவெளியில் தன்னை லாவகமாகச் செலுத்திப் பொருத்திப் படுக்கிறான். உறக்கத்தோடு அனுவின் தசைகளிலும் நரம்புகளிலும் கிளர்ந்து கலக்கிறான். அவனும் அவளும் இடையறாத மயக்கத்தில் இருக்கையில் ஒரு அன்னியப் பார்வையின் திடீர் நுழைவில் அத்தனையும் அறுபடுகிறது. அனு உலுக்கி விழிக்கிறாள். மிகவும் அவசரமாக கழிப்பறைக்கு போகவேண்டும் போலிருக்கிறது. கொல்லைக் கதவு திறந்து தென்னைகள், பவழமல்லி, மருதாணி எல்லாம் கடந்து, இந்த இருட்டில் குளிரில்…அய்யோ, பயமா இருக்கே. அத்தையை எழுப்பலாமா? ச்சே, அத்தை பாவம். அலுத்துக் களைத்து அயர்ந்த தூக்கம். ஏறி இறங்கும் மூச்சில் மூக்குத்தி மினுக்கும். காதோர முடிப் பிசிறில், கன்னத்து வியர்வைத் துளிர்ப்பில் அத்தைக்குள் புதைந்த குழந்தை வெளித் தெரிகிறது. எப்படியாவது தூங்கிவிடலாம். இல்லை, தாங்க முடியவில்லை. அடிவயிற்றில் முட்டும் சிறுநீர் குத்தலெடுக்கிறது. மெல்ல எழுந்து அத்தைக்கும் முழிப்புக் காட்டாமல் , கொலுசு இரையாமல் பூனைபோல நடந்து, சாப்பாட்டு மேஜையில் இடித்துச் சமாளித்து, இருட்டில் தடவி சுவிட்சைப் போடுகிறாள். கதவில் சாவியைத் திருகும் சிற்றொலி நிசப்தத்தின் மென்மைக்குள் பெரிதாக வெடிக்கிறது. அத்தை புரள்வது கேட்கிறது. ‘ரொம்ப இருட்டாயிருக்குமோ?’ பயந்து, நடுங்கி, அடித்தாழை ஓசையிட நீக்கி, கதவைத் திறந்தால் பளீரென்று நட்சத்திரங்களின் கலகலத்த சிரிப்பு. மின்விளக்கின் மஞ்சளௌளி தரையில் சிறுசிறு நாகங்களாக நெளிகிறது; மிக அழகாக,அச்சமேற்படுத்தாததாக. தன் பயங்களை நினைத்து இப்போது சிரிப்பு வருகிறது. காற்றில் அலையும் பாவாடை. பிச்சிப்பூ மணம். செடிகளின் பச்சை வாசனை. மருதாணிப் பூக்களின் சுகந்த போதை, தாழ்ந்தாடுகிற நட்சத்திரச் சரங்கள். நிலவின் மழலையொளி. கழிவறைக் கதவின் கிறீச்சிடல்கூட இனிமையாக. சிறுநீர் பிரிந்ததும் உடலின் லகுத்தன்மை. இந்த மருதாணிப் புதர்கிட்டே உட்கார ஆசையாயிருக்கே. அய்யோ அத்தை தேடுவாங்க. திரும்பி வருகையில் அனு தான் தனியாக இல்லாததை உணர்ந்தாள். உடல் மீது நூறு விழிகள் மொய்த்து உறுத்தின. அனிச்சையாக ஓடத் தொடங்கியபோது எதன் மீதோ மோத, கடினமான கைகள் அவளை இருக்கின, காலையில் உணர்ந்த அதே சுடு மூச்சு. ‘ச்சீ, இல்லை; என்னை பேய் பிடிச்சிடிச்சோ?’ கரிய, நரை முடியடர்ந்த நெஞ்சில் அவள் முகம் நெருக்கப்படுகிறது. கொட்டும் முத்தங்கள் – கன்னத்தில், உதட்டில், கழுத்தில், அவளுள் தளிர் விடுகிற அல்லது விதையே ஊன்றாத எதையோ தேடுகிற விரல்களின் தடவல், மாறாக அதை நசுக்கிச் சிதைக்கிறது. சிறிய மார்பகங்கள் கசக்கப்பட்டப்போது அவள் கதறிவிட்டாள். வார்த்தைகளற்ற அந்த அலறலில் அத்தைக்கு விழிப்புத் தட்டியது. காய்ந்த கீற்றுப் படுக்கைமீது அனுவின் உடல் சாய்க்கப்பட்ட போது அவள் நினைவின்மையின் பாதாளத்துள் சரிந்தாள். கனமாக அவள் மேல் அழுத்தும் மாமாவின் உடல். அத்தை ஓடிவரவும் மாமா அவசரமாக விலகினார். அத்தையின் உலுக்கல்; ‘அனு, என்ன அனு!’ அவளிடம் பேச்சு மூச்சில்லை. ‘பாத்ரூம் போக வந்தப்ப விழுந்துட்டா போல.’ மாமாவின் சமாளிப்பு. அத்தை மௌனமாக அவளை அணைத்துத் தூக்கிப் படுக்கையில் கிடத்துகிறாள்.
அரை மயக்க அலைகளில் புரளும் பிரக்ஞை. ‘இதுவா? இதுவா அது? இப்படியா, இல்லை, முகமும் முகமும் பக்கத்தில் வரும்; உடனே ஒரு பூவும் பூவும் நெருங்கி ஆடும்; வானில் புதிய பறவைகள் சிறகடிக்கும். நீலமேகமும் பசும் புல்வெளியும் ஒட்டி உறவாடும்; திசைகளெங்கும் குழலிசை இனிமையாகப் பெருகும்; அப்படித்தானே அந்த பாட்டில் வரும்? ஓஹோ, அப்படியிருந்தால் இது பிடித்திருக்குமா? நீ விரும்புவது அணுகுமுறையின் மாறுதலையா? இல்லை. ச்சே, இந்த மாமாவா? காதோர நரை. வாயில் சிகரெட் நெடி. தளர்ந்த தோள்களின் வலுவான இறுக்கத்தில் இருந்த கிழட்டுக் காமத்தின் புகைச்சல். நெஞ்சைக் கமறுகிறது. உடல் காந்துகிறது. மார்பு வலியில் எரிகிறது. கண்கள் தீய்கின்றன.
‘அய்யோ அனு, மேல் சுடுதே. இந்த மாத்திரையாவது போட்டுக்கோ’ அத்தை வாயைப் புடவையால் போர்த்திக்கொண்டு விம்முகிறாள். மாமாவின் அறைக்கு ஓடி என்னவோ கோபமாய்க் கத்துகிறாள்.
‘நான் இனி நானாயிருக்க முடியாதா? மாமாவின் தொடல் என் அப்பாவுடையது போலில்லை. அப்பா என்னைத் தொட்டே ஆயிரம் வருடம் இருக்குமே! என் முதல் ஆண் இவனா! என் மேல் மோதி நசுக்கிய உடலால் என்னவெல்லாம் அழிந்தது? பலவந்தப் பிழம்புகளில் கருகி உதிர்ந்த பிம்பங்கள் இனி மீளுமா? மாமா என்னிலிருந்து கசக்கி எறிந்தது எதை? எனக்கு என்னவோ ஆயிடிச்சே. நான் இழந்தது எதை? தூக்கம் ஒரு நனைந்த சாக்குப்போல் இமைமீது விழுந்தது.
காலையில் தேய்ந்த ஒலிகள். அடுப்படியில் லைட்டரை அழுத்தும் சத்தம், பால் குக்கரின் விசில், டம்ளரில் ஆற்றும் ஓசை. விழித்தபடி படுத்திருந்த அனுவிடம், ‘இந்தா காப்பியைக் குடி அனு’ என்கிறாள் அத்தை.
‘வேணாம், எனக்கு இப்பவே அம்மாகிட்டே போகணும்’
அத்தையின் கெஞ்சல்களை அனு பொருட்படுத்தவில்லை. மாமா பேப்பரை மடித்துவிட்டு பக்கத்தில் வருகிறார். மறைக்க முடியாத குற்ற உணர்வு அவர் முகத்தில் படலமிட்டிருக்கிறது அசிங்கமாக.
‘உனக்கு மாமா ஒரு புது ஃப்ராக் வாங்கித் தரட்டுமா?’. தோளில் பட்ட கையை அனு உடனடியாக உதறித் தள்ளுகிறாள். மாமா அத்தையின் முறைப்பில் நகர்ந்து விலகுகிறார்.
பயணம் எவ்வளவு நீண்டதாக நகர்கிறது? எத்தனை மெதுவாகச் சுழலும் சக்கரங்கள்? அத்தையின் மௌனம் நெஞ்சில் ஒற்றுவதாகப் படிகிறது. அத்தை அம்மாவின் நைந்த பிரதியெனத் தோற்றம் கொள்கிறாள். ‘அம்மா, அம்மா! நான் உன்னிடம் என்ன சொல்வேன்? என்னால் இதை எப்படிச் சொல்ல முடியும்?’
‘என்னாச்சு? உடனே திரும்பிட்டீங்க? அம்மா இடுப்புக் குழந்தையோடு ஓடி வருகிறாள். அனுவைப் பாய்ந்து தழுவும் அவள் பார்வை. அத்தை வரவழைத்துக்கொண்ட புன்னகையோடும் கலங்கி வருகிற கண்ணோடும்.
‘ஒரு நாள் உங்களைப் பிரிஞ்சதுங்கே உங்க பொண்ணுக்குக்க் காய்ச்சல் வந்துடுச்சு’ எனவும் அம்மாவின் விழிகள் நம்பாமல் அனு மீது நகர்ந்து தடவுகின்றன – கை தவறி விழுந்தும் உடையாமல் இருக்கிற பீங்கான் சாமானைப் பதறி எடுத்துக் கீறவில்லையே என்று சரி பார்ப்பதுபோல.
அனு ஒன்றும் பேசாமல் உள்ளே ஓடுகிறாள். வீட்டின் நாற்புறமும் தேங்கிய துயரம். அமானுஷ்யமான அமைதி அங்கே பொருக்குக் கட்டியுள்ளது. ‘என் மரப்பாச்சி எங்கே?’ அனு தேடுகிறாள். கூடத்தில் தொலைகாட்சிப் பெட்டிமீது, அடுக்களையில் பொம்மைகளிடையே, பாப்பாவின் தொட்டிலில், எங்கும் அது இல்லை. ‘அது கீறி உடைந்திருக்கும். நூறு துண்டாக நொறுங்கிப் போயிருக்கும். அம்மா அதைப் பெருக்கி வாரியள்ளித் தூர எறிந்திருப்பாள். அனுவின் கண்களில் நீர் கோர்த்தது. அழுகையோடு படுக்கையில் சரிந்தபோது மரப்பாச்சி சன்னலில் நின்றது. ஆனால் அது அனுவைப் பார்க்கவேயில்லை. அவளையன்றி எங்கேயோ, எல்லாவற்றிலுமோ அதன் பார்வை சிதறிக் கிடந்தது. அனுவின் தொடுகையைத் தவிர்க்க அது மூலையில் ஒண்டியிருந்தது. அதனோடான நெருக்கத்தை இனி ஒருபோதும் மீட்க முடியாதென்று அவள் மனம் கேவியது. உற்றுப் பார்த்தபோது மரப்பாச்சியின் இடை வளைந்து, உடல் மறுபடியும் பெண் தன்மையுற்றிருந்தது. மீண்டும் முளைக்கத் தொடங்கியிருந்த அதன் முலைகளை அனு வெறுப்போடு பார்த்தாள்.
***
நன்றி : உமா மகேஸ்வரி , தமிழினி பதிப்பகம்
•<• •Prev• | •Next• •>• |
---|