எண்பதுகளின் ஆரம்பத்திலிருந்து இன்று வரையிலும் நான் வேறு வேறு காலங்களில் சந்தித்த, அரசியல் வேறுபாடுகளுக்கு அப்பால் பல்வேறுபட்ட மனப்போக்கு கொண்ட நண்பர்கள் சிலரை பல ஆண்டுகளின் பின் தொறான்றோவில் சந்தித்தேன். எண்பதுகளில் ஈழமாணவர் பொதுமன்றத்தின் தமிழகச் செயல்பாட்டாளராக இருந்த வளவன் என்கிற யோகராஜா, பத்து ஆண்டுகளின் முன்பாக நண்பர் காண்டீபன் வீட்டில் எஸ்.வி.ராஜதுரை என்னுடன் தங்கியிருந்தபோது சந்தித்த நண்பர் சேனா, தாகம் மற்றும் நிருபம் போன்ற பத்திரிக்கைகளை நடத்திய நண்பர் நகுலேந்திரன் என்கிற கீரன் பத்தாண்டுகளின் முன்பு எனக்கு அறிமுகப்படுத்திய கோணேஸ்வரன், இலண்டனில் விம்பம் அமைப்பின் செயல்பாடுகளின்போது அறிமுகமான போல், தேசம்நெட் ஜெயபாலன் இல்லத்தில் சந்தித்த நண்பர் ரகுமான் ஜான் போன்றவர்களை மறுபடியும் நான் தொறான்ரோவில் சந்;தித்தேன். கனடாவின் முக்கியமான படைப்பாளிகளாக அறியப்பட்ட கவிஞர் செழியன், நாடகாசிரியர் ஜயகரன், சிறுகதையாசியர் டானியல் ஜீவா, நாவலாசிரியர் தேவகாந்தன், நாவலாசிரியரும் பதிவுகள் இணையத்தள ஆசிரியருமான வ..ந.கிரிதரன், கவிஞரும் சிறுகதையாசிரியருமான மெலிஞ்சி முத்தன், மொழிபெயர்ப்பாளரான மணிவேலுப்பிள்ளை, மொழிபெயர்ப்பாளரும் கவிஞரும் சிறுகதையாசிரியருமான என்.கே.மகாலிங்கம், புகைப்படக் கலைஞரும் ஓவியருமான கருணா, ஆவணப்பட இயக்குனரான கனடா மூர்த்தி, கவிஞரும் கட்டுரையாசிரியருமான கவிஞர் தமிழ்நதி மற்றும் அவரது கணவர் ராஜகுமாரன், மற்றும் புதிய தலைமுறை எழுத்தாளரான அருண்மொழி வர்மன் போன்றவர்களையும் சந்தித்தேன்.
அப்போதுதான் அறிமுகமாகி பலநேரங்கள் கலந்துரையாடிக் கொண்டிருந்த யோகலிங்கம் மற்றும் சுரேன், தவராஜசிங்கம் போன்றவர்களையும், ஊடகவியலாளர்களான ரமணன் மற்றும் நாதன் போன்றவர்களையும், யோக லிங்கம் வில்சன், ரவி, மற்றும் நாடு கடந்த தமிழீழ அரசின் அவைத் தலைவர் பொன்.பாலராஜன் போன்றவர்களையும் சந்தித்துப் பேசமுடிந்தது.
ரதன் ஏற்பாடு செய்த உரையாடலின்போது சாம் சிவதாசன், விளம்பரம் இதழ் உரிமையாளர் ராஜா மகேந்திரன் அதனது ஆசிரியர் பாமா மகேந்திரன் மற்றும் சமகாலத்தில் லெனின் சிவம் இயக்கும் இரண்டாவது திரைப்படத்தைத் தயாரிக்கும் முகுந்த் ஆகியோர் கலந்துகொண்டார்கள். சிங்கள இடதுசாரிகளோடு அரசியல் செயல்பாடுகளை முன்னெடுத்த, இன்றைய கனடிய தொழிற்சங்கவாதியும் மார்க்சியரும் ஆன லோகநாதன் அவர்களையும் சந்தித்து உரையாட முடிந்தது.
வேறுபட்ட பார்வைகள், வேறுபட்ட அரசியல் நம்பிக்கைகள், வேறுபட்ட அனுபவங்கள். ரணங்களும் வலிகளும் மரணங்களும் நிறைந்த வரலாற்றில் வாழத் தலைப்பட்ட மனிதர்கள் இவர்கள். இவர்களது மதிப்பீடுகளையும் அரசியல் நோக்குகளையும் திட்டவட்டமாக மதிப்பிடுவதற்கான எனது தகைமை என்ன என்ற கேள்விதான் முதலில் எனக்குத் தோன்றியது.
இருவிதமான மரணங்களின் வலிகளை இவர்கள் சுமந்து கொண்டிருக்கிறார்கள். இலங்கை அரசினால் தொகையாகக் கொல்லப்பட்ட விடுதலைப் புலிகளின் சொந்த உறவுகள் கொண்டிருக்கும் ரணம் ஒரு புறமெனில், விடுதலைப் புலிகளால் பிற போராளி இயக்கத்தவர்கள் மீது சுமத்தப்பட்ட மரணங்கள் ஏற்படுத்திய ரணம் பிறிதொருபுறம் ஆறாத வடுக்களாக சம்பந்தப்பட்டவர்களிடம் இருந்துகொண்டிருக்கின்றன.
இவைகளை இருதரப்பாரும் உணர்ச்;சிபூர்வமாக நினைவுகூருபவர்களாக இருக்கிறார்கள். இந்த இரு இழப்புகளும் ஈழ விடுதலைப் போராட்ட அரசியல் எதிர்காலத்தைத் தீர்மானிப்பதில் இரு துருவத் தடைகளாக இருந்து கொண்டிருக்கின்றன. இருதரப்பாரும் இப்பிரச்சினையில் தத்தமது உணர்ச்சிபூர்வமான மனஅமைவிலிருந்து தம்மை விடுவித்துக்கொள்வது என்பது சமீப எதிர்காலத்தில் சாத்தியம் என்று தோன்றவில்லை. ஈழத் தமிழர்களின் ஒற்றுமை அரசியல் என்பது இதன்மீது தங்கியிருப்பதனை என்னால் அவதானிக்கக் கூடியதாக இருந்தது.
பிறிதொரு பிரச்சினை இயக்கங்களின் கடந்த கால அரசியலை அவரவர் நிலையில் கடுமையாக நிலைநாட்டும் மனப்போக்கும் காணக்கூடியதாக இருந்தது.
வெளிப்படைத்தன்மைக்கும், ஆவணப்படுத்தலுக்கும் பொறுப்பேற்றலுக்கும் எவரும் தயாராக இருக்கவில்லை. உறுதிப்படுத்திக் கொள்ளமுடியாத பல விடயங்களை உணர்ச்சிவசமாகவும் தர்க்கபூர்வமாகவும் விரிவாகவும்; தனிப்பட்ட பேச்சில் முன்வைக்கிறார்கள். ஆவணப்படுத்தப்பட்ட பல்வேறு எழுத்துக்களை, புத்தகங்களை தத்தமது இயக்கங்களின் தலைமைகளை நிலைநாட்ட முழுமையாக நிராகரிக்கிறார்கள். அந்த நிராகரிப்பை ஆவணப்படுத்தக் கோரும்போது தயக்கம் தெரிவிக்கிறார்கள்.
ஆவணப்படுத்தல் மட்டுமே வரலாற்றை மறுபரிசீலனை செய்ய உதவும் என்பதனையும், அது மட்டுமே அரசியலை முன்னுந்திச் செல்லும் என்பதனையும் ஒப்புக்கொண்டாலும் கூட, அதற்காக முயற்சிக்கிற மனப்பான்மையை பெரும்பாலான இயக்கம் சார்ந்தவர்களிடம் என்னால் காணமுடியவில்லை. சுயவிமர்சனத்துடனான வரலாறு எழுதுதலுக்கு இது மிகப்பெரும் தடையாக இருப்பதை என்னால் அவதானிக்க முடிந்தது.
முள்ளிவாய்க்கால் நினைவாக ஏற்பாடு செய்யப்பட்ட இரு அஞ்சலி நிகழ்வுகளுக்கும் காலம் செல்வம் மற்றும் கோணேஸ்வரன் நண்பர்களுடன் சென்றேன். நாடுகடந்த தமிழீழ அரசும் அதனது ஆதரவு அமைப்புக்களும் இணைந்து ஒரு அஞ்சலி நிகழ்வை கனடிய பாராளுமன்றத்தின முன்பாக ஏற்பாடு செய்திருந்தார்கள். பிறிதொரு நிகழ்வு கனடிய தமிழர் பேரவையினரால் ஸ்கார்பரோவில் ஏற்பாடு செய்யப்பட்டிருந்தது. ஸ்கார்பரோ நிகழ்வில் அதிகத் தொகையிலான மக்களை எம்மால் காணக் கூடியதாக இருந்தது. நடந்து முடிந்த வலிகளைப் பற்றிய உரையாடலோடு ஒற்றுமை குறித்த பேச்சுக்களையும் எம்மால் அவதானிக்க முடிந்தது.
முள்ளிவாய்க்கால் பேரழிவுக்குப் பின்னாகப் பல்வேறு தரப்புக்களாகப் பிளவுண்டிருக்கிற விடுதலைப் புலிகளினிடையிலான இன்றைய ஒற்றுமையின் அவசியம் குறித்து லோகநாதன் வலியுறுத்தியபடி இருந்தது அப்போது ஞாபகம் வந்து போனது.
ஐரோப்பிய நாடுகள் போலவே கனடாவிலும் மூன்றுவிதமான அரசியல் போக்குகளை அவதானிக்க முடிந்தது. தமக்குள் பிளவுண்ட நிலையிலும் வேறு வேறு மட்டங்களில் அரசியல் செயல்பாடுகளை கொண்டிருக்கும் விடுதலைப் புலிகளின் தொடர்ச்சியான அரசியல் மரபாளர்கள் ஒருபுறம். விடுதலைப் புலிகள் குறித்த விமர்சனத்துடனும் இலங்கை அரசு குறித்த கடுமையான எதிர்ப்புணர்வுடனும் புதிய ஈழ அரசியலை அவாவிக் கொண்டிருக்கும் இடதுசாரி தேசிய மரபினர் இன்னொரு புறம், பிறிதொரு புறம் இந்த இருதரப்பாரையும் பகடி விமர்சனத்தின் மூலம் கடந்துபோக நினைக்கும், இலங்கை அரச சார்பு அரசியல்வாதிகளை நோக்கி நகர்ந்துகொண்ருக்கும், மாற்றுக் கருத்தாளர்கள் பகுதியினர். இந்த மூவருக்கும் இடையிலான அரசியல் பதட்டங்களை அவ்வப்போது உணரக் கூடியதாக இருந்தது.
இருவேறு இயக்கங்களில்; தீவிரமாகச் செயல்பட்ட இரு முன்னோடி ஆளுமைகளுக்கு இடையிலான ஒரு உரையாடலில், ஈழவிடுதலை இயக்கத்தின் ஆரம்பகாலத் ஸ்தாபனப் பிரச்சினைகள், இயக்க உருவாக்க நடவடிக்கைகள் பற்றிய அனுபவப் பகிர்வு இடம்பெற்றது. அதனைச் செவியுற்றபோது ஈழ வரலாற்றில் அபத்த நாடகம் திரும்பத் திரும்ப நிகழ்ந்து வந்திருப்பது போலத்தோன்றியது.
மனோரதியமான விடுதலை வேட்கை என்பது தர்க்கத்தையும் அரசியல் தெளிவையும் கொண்டிருக்காதபோது அபத்தநாடகமாகி விடுவது தவிர்க்கவியலாது. பிடல் காஸ்ட்ரோவுக்கும், சே குவேராவுக்கும் பிடித்த இலக்கியப் பாத்திரம் டான் குவிக்ஸாட். டான் குவிக் ஸாட் அபத்த நாடகமா அல்லது வீர காவியமா என்பது எப்போதுமே விவாதத்துக்கு உரிய விடயங்கள்தான். கொலைகளுக்காகவே கொலைகள் என்று ஆனதை அபத்தம் என்றல்லாமல் வேறு எவ்வாறுதான் புரிந்து கொள்வது சாத்தியம்?
மணிவேலுப்பிள்ளை, கிஸ்ஸிங்கர் தமது சீன அனுபவங்கள் குறித்;து எழுதியிருக்கும் நூலைக் குறித்த தனது வாசிப்பைப் பகிர்ந்துகொண்டார். டெங்க்சியாவோ பிங் குறித்து மணிவேலுப்பிளளை எழுதிய கட்டுரை பிங் குறித்த கச்சிதமான விமர்சனக் கட்டுரை. மு.திருநாவுக்கரசு எழுதிய ஒற்றைத் துருவ உலகும் ஈழத் தமிழர் பிரச்சினையும் எனும் நூலில் அக்கட்டுரை பிண்ணினைப்பாக இருக்கிறது. சோவியத் யூனியனின் மீதான மாவோவின் அல்லது சீனத்தின் விமர்சனமும் தாக்குதலும் ஒரு மிகப்பெரும் சித்தாந்தப் போராட்டமாக இன்றளவும் பேசப்பட்டு வருகிறது. மாவோ அது குறித்துப் கிஸிங்கரிடம் பேசும்போது, அது ‘வெற்றுக் கலன்’ அன்றி வேறில்லை என வர்ணித்ததாக கிஸ்ஸிங்கர தனது நூலில் பதிவு செய்திருப்பதாக மணிவேலுப்பிள்ளை பகிர்ந்து கொண்டார்.
புறப்படுவதற்கு முன்பாக நண்பர்கள் கோணேஸ்வரனுடனும் ரகுமான் ஜானுடனும் பல் நாட்களாக ஒத்திப்போட்டு வந்த எனது ஆசைகளில் ஒன்றான நயாகரா நீர்வீழ்ச்சியை பார்க்கப்போனோம். கனடாவையும் அமெரிக்காவையும் இணைப்பதாக அல்லது தெளிவாகப் பிரிப்பதாக நயாகரா நீர்வீழ்ச்சியும் சுதந்திரப் பாலமும் இருக்கிறது. தூரத்து நயாகராவைக் காண்பித்தபடி கோணேஸ்வரனும் ரகுமான் ஜானும் வலது பக்கமாகவே நடந்து கொண்டிருந்தார்கள்.
அருவிகளையும் ஓடும் நதியையும் பார்க்கும் போது எப்போதுமே அதனது சில்லென்ற நீரில் கால் நனைக்க வேண்டும் எனும் ஆசை, சுகம் இனிமையானது. நான் அனுபவம் கொண்ட ஒரே அருவி குற்றாலம். கோவைக்கு வெகு அருகில் கோவைக் குற்றாலம் என்று இருந்தாலும் எனக்கு வாய்க்கவில்லை. நான் பார்த்துப் பரவசமடைந்த பிறிதொரு காட்சி ஒகனேக்கல் அருவி. கர்னாடகாவிலிருந்து வரும் காவிரி நதி ஒகனேக்கலில் காட்டருவியாகக் கீழே விழுந்து தமிழகத்தினுள் அமைதியாக நுழையும் காட்சியை அங்கே காணலாம். நடந்தாய் வாழி காவேரி எனும் வர்ணணையை உணரக் கச்சிதமான இடம் ஒகனேக்கல்.
அடிமைப் பெண் படத்தில் எம்.ஜி.ராமச்சந்திரன் தாவித்திரிந்து பாடும் தாயில்லாமல் நானில்லை பாடல் அங்குதான் படமாக்கப்பட்டது. எம்.ஜி.ராமச்சந்திரன் தனது அன்னையான பண்டரிபாயின் விலங்குடைக்கும் காட்சியும் அங்குதான் படமாக்கப்பட்டது.
தொலைதூரத்தில் நயாகராவின் தண்ணீரை அருகிருந்து பார்க்கலாம் என்றார்கள் நண்பர்கள். தொட்டுப்பார்க்;க முடியுமா என்று கேட்டேன். நமக்கு முன்பாகப் பெருநீர்வளைந்து திண்ணெண வழிந்து வீழம் நதிக்காட்சி உச்சமுயக்கப் பரவசத்தை எனக்குள் ஏற்படுத்தியது. அக்கணம் பிறந்த பயனை அடைந்த கணங்களில் ஒன்று. எனது துணைவியாரையும் எனது குழந்தைகளையும் நினைத்துக் கொண்டேன். மறுமுறை வரும்போது நிச்சயம் நான் அவர்களை அழைத்து வரவேண்டும். முகத்தில் பட்ட நீர்த்திவலைகளும் ஈரச்சட்டை தந்த குளிர்மையும் அந்தக் கோடையின் பேரானந்தம்.
அந்தக் கணத்தில் உடனடியாக எனக்கு தென் அமெரிக்க புகைப்படக் கலைஞன் செபாஸ்தியோ செல்காடோவின் புகைப்படங்கள் ஞாபகம் வந்தன. இயற்கையின் பிரம்மாண்டத்தையும் அதன்முன் எறும்புகள் போன்று நகரும் மனிதர்களின் உழைப்பின் உன்னதத்தையும் மகோன்னதத்தையும் புகைப்படங்களாக்கியவன் செல்காடோ. நயாகரா நதியை அந்தமுனையில் திருப்பிச் சுவரெழுப்பி தழைந்துபோகச் செய்து, நமக்கு அருகில் கொணர்ந்தவன் மனிதன் அல்லவா? எத்துனை அமானுஷ்யமான கற்பனையாற்றலும் உழைப்பும் அதன் பின் இருந்திருக்க வேண்டும்!
ஜன்னலில் விமானம் புறப்பட்டுக் கொண்டிருந்தை வேடிக்கை பார்த்துக் கொண்டிருந்தபோது தொறான்ரோ சென்று அடைந்த இரண்டாம் நாள் தமிழியல் கருத்தரங்கில் கலந்து கொண்டது ஞாபகம் வந்தது. போராசிரியர் செல்வநாயகத்துடன் கொஞ்ச நேரம் உரையாடியதும் நினைவில் வந்து போனது. இரண்டு நாட்களில் எழுபது பேராளர்கள் கலந்து கொண்ட கருத்தரங்கு அது. சமர்ப்பிக்கப்பட்ட கட்டுரைகளை நான்கு பொருள்களில் நிரல்படுத்தி விடலாம். சங்கக் கவிதை முதல் சமகால தமிழக் கவிதை வரையிலான ஆய்வுக்கட்டுரைகள். தமிழ்தேசியம் குறித்த கருத்தியல் மற்றும் அனுபவம் குறித்த கட்டுரைகள். தமிழகம்-ஈழம்-புகலிடம் என சாதிய உறவுகள் குறித்த கட்டுரைகள். தமிழ் சமூகத்தில் பாலுறுவுச் சமத்துவம் குறித்த கட்டுரைகள். இந்த நான்கு வகையிலான கட்டுரைகளே அங்கு சமர்ப்பிக்கப்பட்டு விவாதிக்கப்பட்டன.
கருத்தரங்கின் நோக்கங்களில் ஒன்றாகக் கனடிய தமிழ் சமூகத்துக்கும் கல்வித்துறை ஆய்வுச் சமூகத்துக்கும் இடையில் பிணைப்பை ஏற்படுத்துவது என்பதும் ஒன்றாக இருந்தது. கனடிய தமிழ் சமூகம் எனும்போது ஆங்கில மொழிபேசும் கனடிய தமிழ் சமூகம் என்றல்லாது தமிழ் பேசும் கனடிய தமிழ் சமூகம் என்பதனைக் கவனம் கொண்டுதான் தமிழிலும் சில அமர்வுகள் ஏற்பாடு செய்ப்பட்டிருக்க வேண்டும் என நினைக்கிறேன். ஆங்கில அமர்வுகளோடு ஒப்பிடும்போது தமிழ் அமர்வுகளுக்குப் பிரசன்னம் அளித்தவர்கள் குறைவாகவே இருந்தது என்பது எதிர்காலத்தில் சிந்திக்கப்பட வேண்டிய விடயங்களில் ஒன்றாக இருக்கும் என நினைக்கிறேன்.
ஈழ சமூகம் அதிவருவாய் ஈட்டும் தொழில்சார் படிப்புக்கள் அல்;லாத மனிதவியல் படிப்புக்களில் அக்கறை செலுத்துவது இல்லை எனும் விமர்சனம் எப்போதுமே இருக்கிற சூழலில், 250 பேர் அளவில் கலந்துகொண்ட இக்கருத்தரங்கில் சரிபாதி பேராளர்களும் பங்கேற்பாளர்களும் பெண்களாக இருந்ததும், ஒரு புதிய தலைமுறை ஆய்வாளர்கள் மனிதவியல் துறை சார்ந்த ஆய்வுகளில் ஈடுபடுவதும் மிக நல்ல சமிக்ஞையாகவே தோன்றுகிறது.
பொதுவாக இத்தகைய ஆய்வுகளின் இரு பரிமாணங்களை, நானறிந்த வரையில் சுட்டுவது இங்கு பொருத்தமானது என நினைக்கிறேன். மூன்றாம் உலக சமூகங்கள் குறித்த மேற்கத்திய-அமெரிக்கக் கல்வித்துறை ஆய்வுகளின் கருத்தேர்வுகள் இந்நாடுகள் எமது நாடுகளில் மேற்கொள்ளும் பொருளியல்-அரசியல் முதலீடுகளின்போது எமது சமூகத்தை, அதனது முரண்களை அதற்கமைய இணக்கப்படுத்துவதன் நோக்கத்தின் அடிப்படையிலேயே இருந்துவந்திருக்கிறது. இலண்டன் இன்ஸ்டிட்யூட் ஆப் ரேஸ் ரிலேசன்ஸ் நிறுவனத்தின் வரலாற்று ரீதியிலான செயல்பாடுகள் குறித்துப் பேசும்போது அ.சிவானந்தன் இது குறித்து விரிவாகப் பதிவு செய்திருக்கிறார்.
இத்தகைய ஆய்வாளர்கள் வெறும் கல்வித்துறை ஆய்வுகளில் தேங்கிவிடும்போது இவர்களில் பெரும்பாலுமானோர் அமெரிக்க-மேற்கத்திய நிறுவனங்களில் திங்க் டேங்குகளின் அங்கமாகிவிடுகிறார்கள். இதுவன்றி தமது ஆய்வுகளுக்கும் ஆய்வு நிகழ்த்தப்படும் சமூகத்தின் நடவடிக்கைகளுக்கும் உறவைக் காண்பவர்களே வெகுமக்கள் அறிவுஜீவிகளாக உருவாகிறார்கள். அத்தகைய அறிவுஜீவிகள் தமிழ் மரபில் அருகியே காணப்படுகிறார்கள்.
ஆயிரமாயிரம் கல்வித்துறைசார் அறிவுஜீவிகளில் குறிப்பிடத்தக்க டெரி ஈகிள்டன், ழாக் தெரிதா, காயத்ரி ஸ்பீவக், எட்வர்ட் செய்த், அலைன் பதியூ, ஜிஸாக் போன்ற ஒரு சிலரே கல்வித்துறைக்கும் வெகுமக்கள் சமூகத்துக்கும் பாலமாகவும் பங்களிப்பு வளங்குபவர்களாகவும் விளங்குகிறாரகள். தொறான்ரோ தமிழியல் கருத்தரங்கு அத்தகைய அறிவுஜீவிகளை உருவாக்கும் என நாம் நம்பிக்கை கொள்வோம்.
மணிவேலுப்பிள்ளையின் பொதியைப் பிரித்ததன்பின், விமானத்திற்குள் எடுத்துவந்த கனத்த கைப்பொதியைத் திறந்து பார்த்தேன்.
ஜயகரன் கையளித்த என்னை விசாரணைக்கு உட்படுத்துங்கள் எனும் அவரது நாடகப் பிரதிகளின் தொகுப்பு நூல், மெலிஞ்சிமுத்தன் கையளித்த பிரண்டையாறு எனும் அவரது சிறுகதைத் தொகுப்பு, தேவகாந்தன் கையளித்த மூன்று ஆண்டுகளின் கூர் இலக்கியத் தொகுதிகள் மற்றும் அவரது இரு மறுபதிப்பு நாவல்கள், டானியல் ஜீவா கையளித்த அவரது சகோதரர் டானியல் அன்ரனியின் வலை எனும் சிறுகதைத் தொகுப்பு, என்.கே. மகாலிங்கத்தின் மொழிபெயர்ப்பு நூல்களான விலங்குகளின் வாழ்வு மற்றும் ஆடும் குதிரை என்பதோடு, 1995 கால ஈழ இடப்பெயர்வு குறித்த செங்கை ஆழியானின் போரே நீ போ என நாவலுடன், கனடா மூர்த்தி கையளித்த சிவத்தம்பி மற்றும் ஜெயகாந்தன் குறித்த ஆவணப்படங்கள், ஜயகரனின் மூன்று நாடகங்களின் ஒளிப்பதிவுத்தட்டு, டானியல் ஜீவா கையளித்த தென்மோடி நாடகக் கூத்து பற்றிய மூன்று ஒளித்தட்டுகள், செல்வகுமார் கையளித்த குறும்படம், திவ்யராஜன் கையளித்த பேசாப் பொருள் எனும் இசைத் தொகுப்பு மற்றும் அவரது திரைப்படமான உறவு ஒளித்தட்டு என பல வாரங்கள் வாசிக்கவும் பார்க்கவும் பகிரவுமான விடயங்கள் பொதியினுள் நிறைந்திருந்தன.
நான் இலண்டன் கேட்விக் விமானநிலையத்தில் வந்து இறங்கியவுடனே மகரந்தக் காய்ச்சலின் முதல் தும்மல் உக்கிரத்தோடு பீறிட்டுக் கொண்டு எழுந்தது. கனடாவின் 28 டிகிரி செல்சியஸ் வெப்பம் எனக்குத் தும்மலைத் தராதது இப்போதும் ஆச்சர்யமாக இருக்கிறது. எனது கனடிய நண்பர்களே, பிரிவோம், சந்திப்போம் எனும் இரு சொற்களை மீளவும் நான் ஞாபகப்படுத்திக்கொள்கிறேன். உங்களது விருந்தோம்பலுக்கும் அன்புக்கும், டிம் ஹோர்ட்டன் கடுங்காப்பிகளுக்கும், இரவு நெடுநேரங்கள் ஓயாது பேசிக்களித்த சந்தோஷப் பொழுதுகளுக்கும் எனது நெஞ்சார்ந்த நன்றி. மறுபடி சந்திப்போம்.
•<• •Prev• | •Next• •>• |
---|