தலைவி தன்னை இகழ்ந்து கூறினாள் என அறிந்த பரத்தை, அத் தலைவியின் தோழியர் கேட்கும்படி இதனைக் கூறியது.
கழனி மாஅத்து விளைந்து உகு தீம்பழம்பழன வாளை கதூஉம் ஊரன்,எம் இல் பெருமொழி கூறித், தம் இல்கையும் காலும் தூக்கத் தூக்கும்ஆடிப் பாவை போல,மேவன செய்யும், தன் புதல்வன் தாய்க்கே. - குறுந்தொகை 8, ஆலங்குடி வங்கனார் -
பொருள்:வயலில் உள்ள மரத்திலிருந்து விளைந்து விழும் இனிய பழத்தை குளத்தில் உள்ள வாளை மீன்கள் கவ்வி உண்ணும் நாட்டவன், என்னுடைய வீட்டில் என்னைப் பெருமைப்படுத்தும் சொற்களைக் கூறுவான். ஆனால் தன்னுடைய வீட்டில், முன் நின்றார் தம் கையையும் காலையும் தூக்கத் தூக்க, தானும் கையையும் காலையும் தூக்குகின்ற, கண்ணாடியில் தோன்றுகின்ற நிழல் பாவையைப் போல், தன்னுடைய மனைவிக்கு, அவள் விரும்பியவற்றைச் செய்வான்.
“பாருங்க மேடம்…… உங்களைத்தான்…. உங்களைத்தான்……”
திரும்பினேன்.
”அபரஞ்சி….. ”
இறந்து போனதாக கருதப்பட்ட என்னுயிர்த் தோழி.
“ரஞ்சி……………” என்னை மறந்து சத்தமிட்டேன்.
அங்கே –
சொகுசுக் கார் ஒன்றில் மிகவும் தோரணையாக தனியொருத்தியாக அவள்.
நாற்பது கடந்த நிலையிலும், முப்பதாகவே பிரகாசிக்கின்றாள். குடுகுடுப்பைக் காரர்கள் போல விடாமல் பேசும் தன்மை அவளது முத்திரை.
கொழும்பு சர்வதேச விமானத்தளம்.
திருவனந்தபுரத்திலிருந்து வந்த நான், விமானத்தள பரிசோதனை முடித்து, வெளியேறும்போது நேரம் : காலை பதினொன்று. அடுத்து இவளின் தரிசனம்………….வீரவநல்லூரில் படித்தோம். ஆறாம் வகுப்பிலிருந்து இருவரும் தோழிகள்.
பன்னிரண்டு படிக்கும்போது, யாரோ பையனுடன் பம்பாய்க்கு ஓடிப்போனவள்.
நினைவுகளில் மூழ்கினேன் நான்.
“வந்து முன்சீட்டு லெப்டில ஏறுடீ….. நம்ம வண்டிதான்…. ஏறு….. ஏறு ஏறு…..”
உரிமையோடு பேசினாள்.
“எங்கே போறே சொல்லு…..”
“வவுனியாவுக்கு ……..”
“நான் அனுராதபுரத்திலதான் இருக்கேன்….. இன்னிக்கு என் வீட்டில தங்கி ரெஸ்ட் எடு…. நாளைக்கு வவுனியாவுக்கு போகலாம்…. ஓகேயா…..
வேண்டப்பட்ட ஒருத்தர், திருவனந்தபுரம் போறாரு…. அனுப்ப வந்தேன்…. நீ கெடைச்சே….. உன்னயபத்தி சொல்லு…. சொல்லு, சொல்லு…..” குடைந்தாள்.
“ டிக்ரீ முடிச்சு, பி.எட்டும் பண்ணி டீச்சர் ஆகிட்டேன், கலியாணம் பண்ணிக்கலை….. ஒரு பொம்பிளைப்புள்ளய வளத்தேன்…. பேரு பவித்ரா…. அவளுக்கு இப்ப வயசு இருபத்தொண்ணு…..”
கார் நகரத் தொடங்கியது.
“எதுக்கு கலியாணம் பண்ணிக்கல….. யாராச்சும் வாத்தியாரை லவ்பண்ணி, பெயிலியர் ஆகி……….”
நமட்டுச் சிரிப்புடன் கேட்ட அபரஞ்சியின் தொடையிலே கிள்ளினேன்.
“வாயமூடுடி குடுகுடுப்பை….. நான் படிக்கிரப்போ எனக்கு ஒரு மூதேவி, பிரெண்டா இருந்தா…. ஒருத்தன்கூட எடுபட்டு பாம்பேக்கு ஓடிப்போயிட்டா….. மூணுவருசம் கழிச்சு, அந்தப்பயல் மட்டும், அவங்க வீட்டுக்கு ஒத்தயில வந்தான்…. பொண்டாட்டியும், குழந்தையும் இறந்து போனதாகவும் சொன்னான்…. என்ன பண்ண முடியும்…. அப்பவே கல்யாண எண்ணம் போயிருச்சு……”
அபரஞ்சியின் கண்ணிலிருந்து கண்ணீர். வண்டியை ஓரம்கட்டி மரநிழலில் நிறுத்தினாள்.
என்மடியில் முகம்புதைத்து அழுதாள்.
சிறிது நேரம் கழித்து சகஜநிலைக்குத் திரும்பியவள்,
அப்புறம்…. சொல்லுடீ வவுனியால யார் இருக்கா……..”
“என் பொண்ணுதான்…..”
“உன் பொண்ணா…. இம்புட்டு தூரம் தள்ளி…. எப்பிடி…..” ஆச்சரியமாகக் கேட்டாள்.
“எப்பிடீன்னா…..அப்பிடித்தான்….. ஓடிப்போக நெனைச்சிட்டா தூரமென்ன…. பக்கமென்ன….. நீ பாம்பேவரைக்கும் ஓடல்ல…..”
“நீ சொல்றதைப் பாத்தா…. அக்கம் பக்கத்திலயிருக்கிற அகதிமுகாம் பையன் யாரோடயாவது…….”
“கள்ளத்தோணில வந்திட்டாங்க……” வெறுப்பாகப் பேசினேன்.
“பொண்ணைப் பாத்திட்டுப் போகலாம்னு வந்தியா….”
“இல்ல…. கூட்டிக்கிட்டுப் போகலாம்னு வந்திருக்கேன்….”
“எதுக்குடி உனக்கு இந்தக் கொலைவெறி….. வாழுகிற குடும்பத்த பிரிச்சு…..
நான் பொறுமையாகப் பேசினேன்.
“கொஞ்சம் நிறுத்திக்க லூசு…. அவன் எம்பொண்ணுக்கு துரோகம் பண்ணி, கூத்தியாள் வெச்சிருக்கானாம்…. நீ குடியிருக்கிற அதே அனுராதபுரம்ங்கிற ஊரிலதான் இந்தப்பய கொத்தனார் வேலை பண்ணிக்கிட்டிருக்கானாம்…. அதே ஊரிலதான் அந்தப் பொம்பிளையும் இருக்காளாம்…. இவன் பவித்ராவுக்குத் தேவைதானா…..”
“தெரியாம யாரையுமே குறைசொல்லாத…..”
“தெரியாம சொல்லல்ல…. இவளைக் கட்டிக்கிட்ட அந்தப் பயல், பண்ற துரோகத்த சகிக்க முடியாம அந்த வீட்டுல பவித்ராவுக்கு ஒதவியா, சமையல் பண்ற அம்மா எனக்கு போன்பண்ணிச்சு……”
“எப்பிடீ …..”
“பவித்ரா டயரில என் நம்பரை எழுதிவெச்சிருந்திருக்கிறா….. அந்த நம்பரை, இந்தம்மா இரகசியமா நோட்பண்ணிட்டுப் போயி, இரவு நேரத்தில அவங்க போனிலயிருந்து பேசிச்சு ………
அதுமட்டுமில்லடி…… பவித்ராட வீட்டுவிலாசம், அவ புருசன்கூட சேந்து எடுத்த போட்டோ எல்லாத்தையும், வாற்சப் பண்ணிருக்கா….
இதில ஒரு சிறப்பைக் கேளு ரஞ்சி…. அந்தப் பொம்பளையை, அதுதான் – இந்தப்பயல் தொடுப்பு வெச்சுக்கிட்டிருக்கிற பொண்ணை, ரொம்ப நல்லவள்னுதான் சொல்லுவேன்….
ஏன்னா, பவித்ராட மாப்பிள்ளையை விட, அவளுக்கு வயசு யாஸ்தியாம்…. முதல்ல - இவனை அவள் அவாய்டெட் பண்ணி, அட்வாய்ஸ் பண்ணிப் பாத்திருக்கா…..இந்தப் பயல் கேக்கல்ல…..
என் பொண்டாட்டி இதய நோயாளி. அவளால குடும்பம் நடத்த முடியாது. நடத்தினா உசிருக்கே கேடுன்னு டாக்டர் சொன்னதா ஒரு பொய்யைச் சொல்லி அந்தப் பொம்பளைய நம்பவெச்சிருக்கான்…..
அதுக்கப்புறம்தான் அவ இவனுக்கு இடம்குடுத்திருக்கா…. இது மட்டுமில்ல……அவனுக்கு தெரியாமெ அவன் போனிலயிருந்து, ஒய்ப்ன்னு போட்டிருக்கிற நேம்-நம்பரைத் தேடிப்பிடிச்சு….. பப்ளிக் டெலிபோன் பூத்திலயிருந்து, பவித்ராவுக்கு போன்பண்ணியிருக்கா….. அவ புருசனோட நடவடிக்கைய புட்டுப்புட்டு வைச்சிருக்கா…. பவித்ராபத்தி அவன் சொன்னதெல்லாம் ரீல்னுபுரிஞ்சப்போ ரொம்பவும் ஷாக் ஆகிட்டா….
ஆனா, இதில ஒரு துன்பம் என்னண்ணா,
முக்கியமா இனி அவன்கூட குடும்ப உறவு வெச்சுக்காதன்னு அவ சொன்னதை நம்ம பவித்ரா லூசு தப்பா புரிஞ்சுகிட்டு அவளை ரொம்ப அசிங்கமா ஏசீரிச்சு….. அந்தப் பொம்பிளை சும்மா விடுவாளா…. நல்லா லெப்ட் அண்ட் ரைட் வாங்கிப்புட்டா…..…..
இந்தாபாரு, ஓம்புருஷன் ஒண்ணும் உத்தமனும் இல்லை…. வேலிபோட்ட தோட்டத்துப் பழமரமும் இல்ல….. வயல்காட்டு பழமரம் புரிஞ்சுக்க….. அதிலயிருந்து விழுகிற பழமெல்லாம் தண்ணியில மெதந்து போய், குளத்துக்குள்ள விழுறப்போ, எங்கேன்னு காத்துக்கிட்டு கெடக்கிற மீனெல்லாம் ஒண்ணையொண்ணு அடிச்சுக்கிட்டு பொரண்டு தின்னுங்க….. அந்தக் காலத்திலயிருந்து, எந்தக் காலத்திலையும் பரத்தை வாழ்க்கை, அதுதான் விபச்சார வாழ்க்கையோட தர்மமே இதுதான்….. வர்ரவன் பிரம்மசாரியா, சம்சாரியா,சின்னவனா,பெரியவனாங்கிற பேதங்கள் இங்க கிடையாது. அவன் கையிலயிருந்து எவ்வளவு பணம் வருதுண்ணு பாக்கிறதில மட்டுந்தான் ஒரு விபச்சாரியோட கவனம் இருக்கும் ……
அதுமட்டுமில்ல….. முன்னாடி நிக்கிற உருவம் எதைப் பண்ணுதோ, அதையேதான் கண்ணாடிக்குள்ள இருக்கிற பிம்பம் பண்றதுபோல….. உம்மேல இருக்கிற காதல் ரொம்ப ஜாஸ்தின்னு உன்னய ஏமாத்துறத்துக்காக, நீ சாயிற பக்கமெல்லாம் சாயிறதும், சிரிக்கிறப்போ சிரிச்சும், அழுகிறப்போ அழுதும் அற்புதமா நடிக்கிறானாமே…..எங்கிட்ட சொல்லிச்சொல்லி சிரிச்சான்…..
இருந்தாலும், ஆரோக்கியமான உடம்புள்ள உன்னய நோயாளின்னு பொய்சொல்லி, உனக்கு துரோகம் பண்ணின ஓம்புருசனால, நாளைக்கு நீ ஒரு நோயாளியா ஆகிடக் கூடாதின்னு மனசுக்குள்ள என்னமோ ஒண்ணு துடிச்சதனாலதான், இம்புட்டு செரமப்பட்டு உன்னய எச்சரிக்கை பண்ணினேன்…. ஏன்னா, நான்பண்ற இந்தத் தொழிலால என்னுடம்பில ஈசியா நோய்கள் வரலாம்…. அந்த நோயி உனக்கு வந்திடக்கூடாது….. அப்பிடீன்னு, அந்தப் பொம்பிளை சொல்லியிருக்கா…..
அவள் சொன்னதைக் கேட்ட பவித்ரா, சொல்லியழக்கூட யாருமில்லையேன்னு இந்தம்மாகிட்ட சொல்லிக் கதறியிருக்கா….
இம்புட்டுத் தகவலையும் அந்தம்மாதான் ஏங்கிட்ட சொன்னாங்க…. நீயே யோசிச்சுப்பாரு ரஞ்சி….. அந்தப் பொம்பளை மனசளவில கெட்டவளாயிருந்தா, இதையெல்லாம் பவித்ராகிட்ட எதுக்கு சொல்லணும்…. ”
மீண்டும் காரை ஓரம்கட்டிய அபரஞ்சி, ட்ராயரைத் திறந்து தைலம் எடுத்து நெற்றியில் தடவிக்கொண்டு சீட்டிலே அண்ணாந்து சாய்ந்தாள்.
“ஓம்பொண்ணு போட்டோ வெச்சிருக்கியா……”
வாற்சப்பில் வந்த ஜோடிப் போட்டோவைக் காட்டினேன்.
அபரஞ்சி பார்வை அப்படியே நிலைகுத்தியது.
“கொஞ்சநேரம் ஓம்மடியில படுத்துக்கிறேண்டீ…… பதிலை எதிர்பாராமல் என் மடியில் முகம்புதைத்துப் படுத்துக்கொண்டாள்.
என் துயரைக்கேட்டு அவள் படுகின்ற வேதனையைக், கதறலுக்கான உடற்குலுங்கல் காட்டிக் கொடுத்தது.
அரைமணி நேரத்தில் நிதானத்துக்கு வந்தாள்.
“பவித்ரா சமாச்சாரத்தில சட்டச்சிக்கல் இருக்கு…..அதனால, நீ வவுனியாவுக்கு போகவேண்டாம்….. என்கூட அனுராதபுரத்துக்கு வந்திட்டு, ஊருக்கு கெழம்பு…. ஒரு மாசத்துக்குள்ள பவித்ரா வீரவநல்லூருக்கு, வந்துசேருவா….. எப்பிடீன்னு இப்போ என்னால சொல்ல முடியாது….. யாரு கேட்டாலும் பாம்பேயிலயோ, கல்கத்தாலயோ, யாரோ சொந்தக்காரரு வீட்ல இருக்கிறமாதிரியும், சீக்கிரமா வந்திடுவாங்கிற மாதிரியும், இப்ப முன்கூட்டியே அக்கம்பக்கத்தில கதைய பரப்பிக்க….. சிலோன்ங்கிற வார்த்தய யூஸே பண்ணிக்காத…. மத்த எல்லாத்தையுமே வாற்சப்-வீடியோ காலில் பேசிக்குவோம்….. ஓகேயா…. ஓகேயா….”
இந்த நிமிசத்திலவிருந்து பவித்ரா புருசனுக்கு அவள் வாழ்க்கையில இடமே இல்ல…… ஓகேயா……”
அபரஞ்சியைப் பொறுத்தளவில் சொன்னதைச் செய்யும் பழக்கம் பிறப்பிலேயே உண்டு. மேலும், பணத்திலும், அரசியலிலும் அவளுக்குள்ள செல்வாக்கைப் புரிய முடிந்தது.
அபரஞ்சிக்கு துணையாக மெனிக்கா என்ற சிங்களத்து அம்மா உள்ளார்கள். அவளிடம் காட்டும் பாசத்தை என்னிடமும் காட்டினார்கள்.
இலங்கையிலிருந்து வந்து, சரியாக இரண்டாவது வாரம். இரவு எட்டு மணி. காலிங்பெல் அடித்தது. கதவைத் திறந்தேன். பவித்ரா ஓடிவந்து காலடியில் வீழ்ந்து கதறினாள்.
நெஞ்சோடு அணைத்துக்கொண்டேன்.
இரவு பவித்ரா உறங்கியபின், வாற்சப்-வீடியோகால் மூலம் அபரஞ்சியோடு தொடர்புகொண்டேன்.
“ரஞ்சி….. ரொம்ப நன்றிடீ…………”
அபரஞ்சி என்னை நோக்கி, கரங்களைக் கூப்பினாள். கண்ணிலிருந்து பொலுபொலுவென கண்ணீர்.
“இனியும் வெயிட்பண்ண முடியாதடி….. உங்கிட்ட பாவ மன்னிப்பு கேட்டுக்கிறேன்…… பவித்ரா வாழ்க்கையில குறுக்கவந்த பாவி நான்தாண்டி….. உன் முகத்தயே பாக்க என்னால முடியல்லடி….. என்னய மன்னிச்சுக்க….. நானா சொல்லாம நீயா எதையும் கேக்கமாட்டேங்கிறத எனக்கு சாதகமா வெச்சுக்கிட்டு எதையுமே சொல்லாம இருந்திட்டேன்…..”
தரையைப் பார்த்தபடி, குலுங்கி அழுதாள்.
“ரஞ்சி….. உன்சமாச்சாரம் எல்லாமே எனக்குத் தெரியும்டீ….. கொழும்பிலயிருந்து, அனுராதபுரத்துக்கு காரிலபோறப்போ, நீ அடிக்கடி உணர்ச்சிவசப்பட்டு, மனச்சாட்சிக்கு பதில்சொல்லமுடியாம, கதறும் போதே எனக்குச் சந்தேகம் வந்திரிச்சு…. நிச்சயமா இந்தத் தப்போட அடிப்படையில நீ இல்லைங்கிறதையும் புரிஞ்சுகிட்டேன்…..
உன்னய பாம்பேக்கு இழுத்துக்கிட்டுப் போனவன் மூணுவருசம் கழிச்சு வந்து, உன்னயும், குழந்தையும் பத்தி சொல்லி அழுத சமாச்சாரம், ஏற்கனவே ஓங்கிட்ட சொல்லிப்புட்டேன் …..
அது வெறும் ட்ரெயிலர்தான்…. மெயின் பிக்சரைக் கேளு……
அப்புறமா அவன்மேல போலீசில புகார் குடுத்து, விசாரிச்சப்பதான் உன்னய விபச்சாரக் குழியில தள்ளினதையும், கடைசில சிலோன்கார முதலாளி ஒருத்தனுக்கு வித்ததையும் சொன்ன அவன், நீ செத்துப்போனதாக தகவல் கிடைச்சதாகவும் சொன்னான்…. குழந்தைய வித்துட்டதாகவும் அட்ரசைச் சொன்னான்…. அப்புறமா போலீஸ் மூலமாத்தான் குழந்தைய மீட்டோம்…..”
“அப்பிடீன்னா….. ஏம்புள்ள…. ஏம்புள்ள ஏம்புள்ள…..”
“பவித்ராதான் ஓம்புள்ளடீ…….”
“பவித்ரா ஏம்புள்ளயா….. நான் பெத்த புள்ளைக்கா நான்……”
முடிக்கவில்லை. மறுகணம்,
“ஐயோ….. கடவுளே……. இனியும் நான் ஒலகத்தில வாழணுமா…..”
இரண்டு கைகளாலும், தலையில் அடித்துக் கதறியவள்…….,
“ எம்புள்ளைக்காக உன் சந்தோசங்களைத் தொலைச்சுப்புட்டு, ஒரு தியாகத் தாயாக வாழுற உன்முகத்த நிமிந்து பாக்கக்கூட முடியல்லடீ…..
நாம ஒண்ணா படிக்கிறப்போ அடிச்ச லூட்டிக….. பண்ணின அட்டகாசங்க….. எல்லாமே ஒண்ணொண்ணா நெனைவுக்கு வருதுடீ….. அடுத்த பொறப்பில உங்கூடப் பொறந்தவளா இருக்கணும்னு ஆசைப்படுறேண்டீ…..”
இப்போதுதான் எனக்கு எல்லாமே புரிந்தது. அபரஞ்சி தற்கொலைக்குத் தயாராகிறாள். என்னை மறந்து சத்தமாகப் பேசினேன்.
“ஏய் ரஞ்சி…. லூசு மூதி….. சொல்ரதைக் கேளுடீ….. நடந்த தப்புகளுக்கும் உனக்கும் எந்த சம்பந்தமும் இல்லடீ….”
அவள் நிமிர்ந்து கை கூப்பினாள்.
“என் பொண்ணை…. சாரி, சாரி….. ஓம் பொண்ணு பவித்ராவ ஓங் கண்மணிபோல உசிராப் பாத்துக்க….. பாத்துக்க, பாத்துக்கடீ…..”
தொடர்பு துண்டிக்கப்பட்டது. அவளது போனுக்கு முயற்சித்தேன். பயனில்லை.
எனது போன் அலறியது. மறுமுனயில் மெனிக்கா அம்மா கதறினார்கள்.
“அம்மே…. மகே ரஞ்சி அம்மா மரணுவா….. மேல மொட்ட மாடிலயிருந்து கீழ குதிச்சு செத்துப் போச்சு….. அம்மே….. மகே ரஞ்சி அம்மே……”
•This e-mail address is being protected from spambots. You need JavaScript enabled to view it•
•<• •Prev• | •Next• •>• |
---|