“சங்கர், நீங்க தனியத்தானே இருக்கிறீங்க, உங்களோடை ஒருத்தரும் இல்லைத்தானே?”
“ஓம், நான் தனியத்தான் இருக்கிறன்”
“என்ரை பெயர் ஜோசேப். நான் ஒரு லோயர், சட்ட உதவி நிலையத்திலிருந்து கதைக்கிறன். குடிச்சிட்டு வாகனம் ஓடினதெண்டும் மனைவியைத் தாக்கினதெண்டும் உங்களிலை குற்றம்சாட்டப்பட்டிருக்கு …”
“குடிச்சதெண்டு என்னைப் பொலிஸ் பிடிக்கேல்லை, அப்பிடி நான் குடிக்கவுமில்லை”
“சரி, நானும் யூனிவேசிற்றிலை இருக்கேக்கே குடிச்சிட்டு வாகனமோட்டியிருக்கிறன்தான். அது பிரச்சினையில்லை. ஆனா, பிழையை ஒத்துக் கொள்ளவேணும்… சரி, அதைப் பத்திப் பிறகு உங்கடை லோயரோடை கதையுங்கோ. இப்ப உங்கடை உரிமையள் என்னெண்டு சொல்லத்தான் நான் கோல் பண்ணினான்.”
“ஓ, ஓகே”
“பொலிஸ் உங்களிட்டை என்ன கேள்வி கேட்டாலும் பதில் சொல்லாதேங்கோ, நீங்க சொல்றதை உங்களுக்கெதிராக அவை கோட்டிலை பாவிக்கேலும். அவை என்னத்தைக் கேட்டாலும், லோயர் கதைக்கவேண்டாமெண்டு சொன்னவர், லோயர் கதைக்கவேண்டாமெண்டு சொன்னவர் எண்டு திரும்பத்திரும்பச் சொல்லிக்கொண்டே இருங்கோ, சரியோ!”
“ஓ, ஓகே”
“ஆனா அவை ஏதாவது செய்யச் சொல்லி உங்களைக் கேட்டால் நீங்க செய்யோணும். அதுக்கு மறுப்புச்சொல்லேலாது. உதாரணத்துக்கு உங்கடை ரத்தத்திலை இருக்கிற அற்கோலின்ரை அளவைப் பாக்கிறதுக்கா ஊதச்சொல்லி அவை உங்களைக் கேட்கக்கூடும்.”
“ஓகே”
“நாளைக்குக் காலமை உங்களை அவை கோட்டுக்குக் கொண்டுபோவினம். ஆராவது உங்களைப் பிணையிலை எடுக்கோணும். பிணையிலை போறதுக்கு உதவி செய்யிறதுக்கு என்னைப் போல லோயர்மார் அங்கை இருப்பினம். சரியோ? வேறை என்ன? என்னட்டைக் கேட்கிறதுக்கு உங்களுக்கு வேறை ஏதேனும் கேள்வியிருக்கோ?”
“இல்லை, நன்றி”
“ஓகே”
போனை வைத்தவனிடமிருந்து பெருமூச்சு ஒன்று கிளம்பியது. வேண்டாவெறுப்பாகப்போய் மூடியிருந்த அந்த அறைக்கதவைத் தட்டினான். அறைக்கு வெளியில் காவலிருந்த பொலிஸ் உத்தியோகத்தர் அவரின் மூக்குக்கண்ணாடிக்குக் கீழால் அவனைப் பார்த்தார். அவனை அவர் இளக்காரமாகப் பார்ப்பது போல அவனுக்கிருந்தது. அவன் தலையைத் தாழ்த்திக்கொண்டான்.
அவனிருந்த அறைக்குள் மீளவும் அவனைக் கொண்டுபோய்விட்ட அவர் கதவைப் பூட்டிக்கொண்டார். வெற்றுத்தீவொன்றில் தனித்துவிடப்பட்டிருப்பதுபோல அவனுக்கு மிகுந்த பதற்றமாகவிருந்தது. தலையிடித்தது. நாள் முழுவதும் எப்படி அங்கே கழியப்போகிறதென்ற எரிச்சல் எதையாவது அறையவேண்டும்போல ஆத்திரத்தைக் கொடுத்தது.
மீண்டுமொரு முறை அவனுக்குள் எரிமலை ஒன்று வெடித்தது.
“சனியன் நிம்மதியாய் திண்டு குடிச்சுக்கொண்டு என்ரை வீட்டிலை சொகுசா இருக்கும், நான் இங்கைகிடந்து அவதிப்படவேண்டிக்கிடக்கு. அந்த நாயின்ரை சகவாசமே இனி வேண்டாம்.” வெறுப்புடன் தனக்குத் தானே சொல்லிக்கொண்டான்.
முதல்நாள் இரவு நிகழ்ந்தவை திரும்பத்திரும்ப அவனை அலைக்கழித்தன.
“கனடா டேய்க்கு வீட்டிலை பாபர்கீயூ செய்யிறம், மனிசையையும் கூட்டிக்கொண்டு வாவன்,” குரலில் மிகுந்த உற்சாகத்துடன் மகேஸ் சொன்னான்.
“அண்டைக்குதான் மனுசியின்ரை பேர்த்தேயடா, அவள் என்ன பிளான் போட்டிருகிறாளோ தெரியாது.”
“கனடாவின்ரையோடை அவவின்ரையையும் சேத்துக்கொண்டாடினால் போச்சுது. பிறகு வீட்டை போய் உங்கடை கொண்டாட்டங்களைச் செய்யலாம்தானே!” தோளில் தட்டிக் கண்ணடித்தான் மகேஸ்.
***
பன்னிரண்டு மணி தாண்டிய அந்த நடுச்சாமத்தில் பார்ட்டி சூடேறிக் கொண்டிருந்தது.
“வாழ்வே மாயம்,” விமல் பாடத்தொடங்க ஆண்களும் பெண்களுமா தனித்தனிய இருந்து கதைத்துக் கொண்டிருந்தவர்கள் எல்லாம் அந்த இடத்தில் திரண்டனர். றிங்ஸ் உடன் உவப்பாச் சாப்பிடுவதற்காக மகேசின் மனைவி மேலும் தின்பண்டங்களைக் கொண்டுவந்து மேசையில் வைத்தா.
வீட்டுக்குப் போவம் என சர்மிளா அவனை ஆக்கினைப்படுத்த ஆரம்பித்தாள். அந்த முஸ்பாத்தியை விட்டிட்டுப்போக அவனுக்கு மனசு வரவில்லை. அவள் அவனிடம் அப்படிக் கேட்டுக்கொண்டிருக்கிறதைப் பார்த்த மகேசின் மனைவி, “உங்களோடை தனியக் கொண்டாட வேணுமெண்டு அவ விரும்புறா, கூட்டிக்கொண்டு போங்கோவன்” என வாயைக் கோணலாக வைத்துக்கொண்டு சிரித்தா.
அவனுக்கு வெட்கமும் எரிச்சலும் அவமானமும் ஒரே நேரத்தில் ஏற்பட்டன. சரி வெளிக்கிடு என அவளுக்குச் சொன்னவனை சந்திரன் வந்து கட்டியணைத்து, மச்சான் என்ஜோய் என்றான். மற்றவர்கள் அனைவரும் ஹப்பி பேர்த்டே சர்மி, என ஒரே நேரத்தில் ஆரவாரமாக திரும்பவும் வாழ்த்தினர்.
“நீங்க நிறையக் குடிச்சிருக்கிறியள், நான் உங்களோடை வரமாட்டன், ஊபரைக் கூப்பிடுங்கோ, அல்லது நான் பஸ்சிலை போறன்” வெளியில் வந்ததும் அவள் அவனிடம் அடம்பிடித்தாள்.
“சாமத்திலை ஊபரிலை போறன் எண்டு நிக்கிறாய், உனக்கென்ன பைத்தியமே?”
“உங்களோடை வாறதுதான் ஆபத்து, நான் வரமாட்டன்”
“எனக்கென்ரை அளவு தெரியும். நான் அப்பிடி ஒண்டும் தலைகீழா நிக்கேல்லை. நாடகம் போடாமல் பேசாமல் ஏறு இப்ப!”
அப்போதும் மரக்கட்டைபோல அவள் அசையாமல் நின்றதில் அவனுக்கு ஆத்திரம் வந்தது.
அவளின் தலைமயிரைப் பிடித்திழுத்துக் அவளைக் காருக்குள் தள்ளினான். வீட்டுக்குப் போகும்வரைக்கும் அவன் எதுவும் பேசவில்லை. அவள் அழுதுகொண்டிருந்தாள்.
காரைவிட்டிறங்கி நேரடியாகப் படுக்கையறைக்குப் போனவன் உடையை மாற்றிக்கொண்டு வாஸ்ரூமுக்குப் போகவென வெளியில் வந்தபோது, லிவ்விங் ரூமிலிருந்து அவள் கதைப்பது அவனுக்குக் கேட்டது.
“குடிச்சுச்போட்டுக் கார் ஓடவேண்டாமெண்டு சொன்னதுக்கு தலைமயிரை பிடித்…”
பேர்த்டே என்பதால் ஊரிலிருந்து அவளின் தாய் அவளைக் கூப்பிட்டிருக்கிறா என்பது ஒரு கணத்துக்குள் அவனுக்கு புரிந்தது. வேகமாகக் கீழே போனவன் போனவேகத்தில் போனைத் துண்டித்தான். ஏதோ சொல்வதற்காக வாயெடுத்தவளின் கன்னத்தைப் பொத்தியடித்தான்.
“உனக்கென்னடி விசரே? அங்கையிருக்கிறவைக்கு தேவையில்லாக் கதை சொல்றாய், உனக்காண்டி அவங்கள் பார்ட்டி வைச்சாங்கள், அதை அரைநடுவிலை விட்டிட்டு இங்கை வாறன். நாய், நாய் … நாயைக் கொண்டுவந்து நடு வீட்டுக்கை வைச்சது என்ரை பிழை… திரும்பக் கோல் பண்ணடி … லைன் கட் ஆயிற்று எண்டு சொல்லு…”
“மாமி, அப்பிடி ஒண்டும் நான் பெரிசாய்க் குடிக்கேல்லை. சும்மா ஆட்களோடை சேந்து கொஞ்சம் எடுத்தனான். இவ என்னடா எண்டா அதைப் பெரிசாப் படம் காட்டுறா. இந்த நேரத்திலை தனிய ஊபரிலை வரப்போறனெண்டு நிண்டா. கொஞ்சம் புத்தி சொல்லுங்கோ …” சொன்னவன் அவளிடம் போனைக் கொடுத்தான்.
அவள் ஏதும் கதைக்கவில்லை. வெறுமன அழுதாள். அவளின் உதடும் ஒரு பக்கக் கன்னமும் வீங்கியிருந்தன.
அவன் மேலே போய் படுத்துக்கொண்டான். அவள் கீழேயே இருந்தாள்.
வீடு ஒரே நிசப்தமாக இருந்தது.
***
கதவு தட்டும் சத்தம் அவனை நித்திரையிலிருந்து எழுப்பியது. அவனுக்கு மிகவும் அசதியாக இருந்தது. சத்தி வருவது போல ஓங்காளித்தது. வயிற்றைப் பிரட்டியது. யாரடா விடாமல் தட்டுறது, எரிச்சலுடன் எழும்பிப்போய்க் கதவைத் திறந்தான். அங்கே ஓர் ஆணும் ஒரு பெண்ணுமா பொலிஸ் நின்றது.
அவன் காலடி நிலம் அதிர்ந்தது.
இரவுபகலா ஓடித்திரிந்து இரண்டு வேலைசெய்து, வசதியான வீட்டில் அவளை வாழவைத்ததுக்கு, அவளுக்கு நல்லதொரு வாழ்க்கையைக் கொடுத்ததுக்கு அவனுக்குக் கிடைத்த பரிசு இதுதானென அவனின் மனம் அவமானத்திலும், ஆத்திரத்திலும் வெந்தது.
***
அடுத்த நாள் பிணையில் அவனை அழைத்துச் செல்வதற்காக வந்திருந்த அவனின் அக்காவின் கணவர் சுரேசைப் பார்த்ததும் அவனுக்கு உடுப்பு உரிந்து விழுந்ததுபோல மிகவும் வெட்கமாக இருந்தது.
அக்கா மீனாவின் குத்தரிசிச் சோறும், ஆட்டிறைச்சிக் கறியும், நன்கு கடைந்த முளைக்கீரைக் கறியும் அவனைப் பார்த்து முழித்தன.
“யோசிக்கிறதை விட்டிட்டுச் சாப்பிடு தம்பி, நேற்று முழுக்கப் பட்டினி கிடந்திருப்பாய்!”
அவளின்உபசாரம் அவனைக் கரைத்தது. அவனின் முதுகை மீனா ஆதரவாக வருடிக்கொடுத்தாள்.
“என்ன பொம்பிளையடா அவள்? கட்டின புருஷனை ஜெயிலுக்கு அனுப்புறவள், ஒரு தமிழ் லோயரோடை இவர் எல்லாம் கதைச்சிருக்கிறார் …” அவளது குரல் இடறியது.
“கனடாவுக்கு வாறதுக்காண்டிக் கட்டுறது, பிறகு ஏதாவது ஒண்டைக் காட்டிப் பிரிஞ்சால் தங்கடை எண்ணத்துக்கு ஆட்டம் போடலாமெண்டுதான் இவளவை இப்பிடி ஆடுறாளவை. என்னோடை வேலைசெய்யிற ஒரு ஆளின்ரை பெண்சாதிக்கு இன்னொருத்தனோடை தொடர்பிருந்ததாம். இப்ப புருஷனை மாட்டிப்போட்டு அவள் அவனோடை போட்டாள்”
“இவைகளின்ரை இந்தக் கூத்துகளாலைதானே சில ஆம்பிளையள் விசர்பிடிச்சலைஞ்சு கொலைசெய்யிறளவுக்குக்கூட மாறினம்.” மீனா அலுத்துக்கொண்டாள்.
“அங்கிள் நீங்க இனி எங்களோடைதான் இருக்கப்போறியளாம் எண்டு அம்மா சொன்னா. அன்ரிக்கு என்ன வருத்தம்?”
அவனின் மடியில் ஏறியமர்ந்த மீனாவின் மகளுக்கு என்ன சொல்வதென அவனுக்குத் தெரியவில்லை.
***
அந்தத் தமிழ் லோயர் தர்மாவின் அலுவலகத்தில் பலர் காவல் இருந்தார்கள். ஒரு மணித்தியாலத்துக்குப் பிறகு அவர் அவனைக் கூப்பிட்டார். புத்தகங்களும் பைல்களுமா அந்த அறை நிறைந்திருந்தது. ஹலோ சொன்ன அந்த மெல்லிய, உயரமான, வயதுபோன லோயரின் கண்களில் அவனுக்குக் கருணை தெரிந்தது. அவர் சொல்வதற்கு முன்பே அவருக்கு முன் இருந்த கதிரையில் அவன் அமர்ந்துகொண்டான்.
“எப்பிடியிருக்கிறியள்?”
“என்னத்தைச் சொல்றது?”
”ஒண்டுக்கும் யோசிக்காதேயுங்கோ. ஒரு பிரச்சினையுமில்லை. உங்களை ஒருத்தரும் ரெஸ்ற் பண்ணிப்பாக்கேல்லை. அதாலை குடிச்சுப்போட்டுக் கார் ஓடினது எண்டதை அவை நிரூபிக்கேலாது… இப்பிடியான குடும்ப வன்முறை வழக்குகளிலை முதல்தரம் குற்றம்சாட்டப்படுறவைக்கு மன்னிப்பிருக்கு. அடி தடி இல்லாமல் பிரச்சினைகளை எப்பிடிக் கையாளுறது எண்டு சொல்லித்தாற வகுப்புகளுக்கு போகச் சொல்லி ஜட்ஸ் சொன்னவர்தானே, அதுக்குப் பதியுங்கோ…”
“இதாலை என்ரை வேலையிடத்திலை ஏதேனும் பிரச்சினை வருமோ?”
“இல்லை, இல்லை. அது அவைக்குத் தெரியத்தேவையில்லை. நீங்க வழமைமாரி வேலைக்குப் போங்கோ, ஆனா பிணை நிபந்தனைகளின்படி நடக்கிறது முக்கியம். எந்தவிதத்திலும் உங்கடை மனிசியை நீங்க தொடர்புகொள்ள முயற்சிக்கக்கூடாது. ஆருக்கூடாகவும் ஏதாவது செய்திகூட அனுப்பேலாது. அவ போற இடங்களிலிருந்தும் 500 மீற்றர் விலகியிருக்கோணும். எங்காவது தற்செயலாகக் கண்டிட்டாலும் விலகிப்போயிடோணும். எதையாவது மீறினியள் எண்டால் உங்களைத் திரும்பவும் பொலிஸ் கைதுசெய்யலாம்… பிறகு நீங்க தன்னைச் சந்திக்கலாம் அல்லது வீட்டை வரலாமெண்டு அவ எழுத்திலை சொன்னா மட்டும்தான் உங்கட வீட்டுக்கு நீங்க திரும்பிப்போகலாம். அப்பிடித் தாற ஒப்புதலைக்கூட எந்தநேரத்திலும் வாபஸ் பண்ணுற உரிமை…”
“அவ சொல்லி நான் என்ரை வீட்டை போகோணும்! ம், நல்ல கதைதான்!. முதல் வேலையா அவளை டிவோஸ் பண்ணோனும், அவளோடை மனிசன் வாழேலுமே.”
“பொம்பிளையளுக்கு இந்த நாடு குடுக்கிற இடம்தான்.. அதாலை வாற திமிர்தான். என்ன செய்யிறது? டிவோஸ் எடுக்கோணும் எண்டால் எடுக்கலாம், ஆனா அது வேறை கதை. அதுக்கு நீங்க அதற்கான வக்கீலைச் சந்திக்கோணும். இப்ப முதலிலை இந்த வழக்கை முடிக்கப்பாப்பம்.”
***
அந்த வகுப்பு நடக்கும் இடத்தின் வாகனத்தரிப்பிடத்தில் காரை நிறுத்திப்போட்டு, கீழே இறங்கியபோது அந்தக் குளிருக்குள்ளும் அவனுக்கு வியர்த்தது. கால் இடறியது. வானம் ஒரே கருமையாக இருந்தது. அவனுக்குள் இருந்த இயலாமை அவனின் நடையில் தெரிந்தது.
‘இந்தச் சனியனைப் போய் கலியாணம்கட்டிக் கூட்டிக்கொண்டுவந்தனே. பெரிய கண்ணை உருட்டி உருட்டிப் பாத்த பார்வையிலை விழுந்த என்னைச் செருப்பாலை அடிக்கோணும்! வெள்ளைத் தோல் எண்டு சீதனத்தையும் குறைச்சு வாங்கி, காசைச் செலவழிச்சு இங்கை கூப்பிட்டு விட்டால் … நாய் ஆட்டம் போடுறாள். இனியென்ன, என்னை ஏமாத்தி கனடாவுக்கு வந்திட்டாளே …. நாய்!’ அவனின் மனம் குமுறியது.
சுனாமி ஒன்று பெருக்கெடுத்துப் பாய்ந்து அவன் நெஞ்சை அமுக்கியது.
அந்தச் செங்கல் கட்டிடத்துக்கு முன்னால் பல்வேறு வயதுகளில் இருந்த பல இன ஆண்கள் கூடியிருந்தனர். தமிழர் மாதிரித் தெரிந்த ஒரு முதியவருக்குப் பக்கத்தில் போய் அவன் நின்று கொண்டான். சரியாக ஆறு மணிக்குக் கதவு திறந்தது. அவரவர் வருமானத்துக்கு ஏற்ப ஒதுக்கப்பட்ட கட்டணத்தை வரிசையில் நின்று எல்லோரும் கட்டினர். தன் பங்குக்கான பணத்தை அவன் எடுத்தபோது, மணித்தியாலத்துக்கு பதினாலு டொலர் தாறன்தானே என்ற தோறனையில் முதுகு முறிய வேலைவாங்கும் முதலாளி நினைவுக்கு வர அவனுக்கு மனம் கசந்தது.
என்ன பிரச்சினைக்காக அந்த வகுப்புக்கு அவர்கள் வந்திருக்கிறார்கள், அதைப் பற்றி என்ன உணர்கிறார்களென ஒவ்வொருவராகக் கூறும்படி அந்த வகுப்பை ஒருங்கிணைக்கும் ஜோன் கேட்டார். தாடியைத் தடவியபடி அவர் சிரிக்கும்போது அவரின் முகத்தின் குறுக்கே விரியும் ஒளிர்வுமிக்க அந்த வெள்ளைப் பற்கள் அவனைக் கொஞ்சம் இலேசாக்கியது.
“சாப்பாடு சரியில்லையெண்டு கோவத்திலை அடிச்சுப்போட்டன், அது பிழையெண்டு இப்ப விளங்குது. பிள்ளையளை விட்டிட்டு இருக்கிறது சரியான கஷ்டமாயிருக்கு. எப்ப திரும்ப வீட்டுக்குப் போவன் எண்டிருக்குது.” என்றார் ஒரு நடுத்தர வயது மனிதர்.
“சமரிலை ஒவ்வொரு சனியும் சொக்கர் விளையாடுறனான். அண்டைக்கு மனிசி போகவிடாம குறுக்கே நிண்டுகொண்டு சரியான அரியண்டம் தந்தா. கடைக்குப் போகோணுமெண்டு அடம்பிடிச்சா. அவவைத் தள்ளிப்போட்டு நான் சொக்கருக்குப் போட்டன், அங்கை வந்து பொலிஸ் பிடிச்சிட்டுது. என்ரை மகன் நான் இல்லாமல் படுக்கமாட்டான் … அதை நினைக்கேக்கேதான் கவலையாயிருக்கு,” அந்த இளைஞன் அழுதுவிடுவான் போலிருந்தது.
“முப்பது வருஷத் தாம்பத்தியம். ஒரு நாளும் பெரிசா பிரச்சினைப்பட்டதில்லை… மகன் ஒரு சொல்லும் கேட்கிறதில்லை. அவனிலை இருந்த கோவத்தை அண்டைக்கு மனிசியிலை காட்டிப்போட்டன். சும்மா தள்ளினதுதான். அதுக்கு அவன் பொலிசைக் கூப்பிட்டிட்டான்,” இது அந்த முதியவர்.
“அண்டைக்குப் பார்ட்டி முடிஞ்சு வீட்டுக்குப் போகேக்கை காருக்குள்ளை ஏறமாட்டன் எண்டு சாமமெண்டும் பாக்காம மனிசி கத்திக்கொண்டு நிண்டா. அதாலை ஏறச்சொல்லி நான் காருக்கை தள்ள வேண்டியிருந்துது. அவவின்ரை நன்மைக்காண்டித்தான் நான் அப்பிடிச் செய்தனான். அதிலை எந்தப் பிழையுமிருக்கிறதா எனக்குத் தெரியேல்லை …, ம்ம் வரவேணுமெண்டதுக்காண்டித்தான் இங்கை வந்திருக்கிறன்” என்றான் சங்கர்.
ஒவ்வொருவராக சொல்லும்போது அவர்கள் செய்த விடயம் சரியா, வேறென்ன வழியில் அதைத் தீர்த்திருக்கலாமென ஜோன் கேட்டபோது எல்லோரும் ஏதோ ஒன்றைச் சொன்னார்கள். ஆனால் அவன் மட்டும் அதைத் தவிர வேறு வழி எதுவுமில்லை என்றான்.
“சரி, 12 வாரத்துக்கு நாங்கள் சந்திக்கப்போறம். பல விடயங்களைக் கற்கப்போறம். முடிவில நீங்க என்ன சொல்றியளெனப் பாப்பம். எல்லாரும் கலந்துரையாடல்களில பங்குபற்றோணும், வீட்டுப்பாடம் செய்யோணும். உங்கடை செயற்பாடுகளைப் பத்தி உங்கடை கோட் தவணைக்கு முதல் உங்கடை நன்னடத்தை அதிகாரிக்கு நான் அறிவிக்கோணும், மற்றது வரவு மிகவும் முக்கியம். …” எனச் சொன்ன ஜோன் வேறும் சில விதிமுறைகளையும் கிரமங்களையும் விளங்கப்படுத்தினார்.
வகுப்பு முடிந்துபோகும்போது, “நீங்க இப்பிடிக் கதைக்கக்கூடாது. சும்மாதன்னும் ஓம் செய்தது பிழைதான், இனிச் செய்யமாட்டன் எண்டு சொல்லாட்டி உங்கடை பெயரைப் பதிவுகளிலை இருந்து எடுக்கமாட்டாங்கள்,” சங்கரின் காதுக்குள் குசுகுசுத்தான் அவனுக்குப் பக்கத்திலிருந்த ஜஸ்ரின்.
***
உடல்ரீதியாகத் துன்புறுத்துவது மட்டும்தான் துன்புறுத்தல் அல்ல என துன்புறுத்தல்களின் வேறுபட்ட வகைகளை ஜோன் பட்டியலிட்டார். சொற்களாலும் செயல்களாலும் ஒருவரை உணர்ச்சிரீதியாகத் துன்புறுத்துவது குறித்தவருக்கு மிகப் பெரிய வேதனையாக இருக்கும் என்பதை விளக்கும் வீடியோவை அனைவரும் பார்த்தனர். ஒருவருடைய கோபத்துக்குக் இன்னொருவர் காரணமாக இருக்கமுடியாது, அவரவர் செயலுக்கு அவரவரே காரணம் என்பதை விளங்கப்படுத்தும் ஒரு உளவியலாளரின் பேச்சை எல்லோரும் கேட்டனர். மற்றவரின் கருத்துக்களைச் செவிமடுக்காமல், தனது செய்கைகளை மட்டும் நியாயப்படுத்தி நடப்பது குறித்தவரின் சுயமதிப்பைப் பாதிக்கலாம் என்பதைப் பற்றியும் அது அவர் மனவுளைச்சலுக்கு உள்ளாவதற்குக் காரணமாகலாம் என்பதைப் பற்றியும் அங்கிருந்தவர்கள் கலந்துரையாடினார்கள். அச்சுறுத்தல்களுக்குள் வாழ்பவர்களின் உணர்வுகளும், வேதனைகளும் எப்படியிருக்கும் என்பதை சில உதாரணங்களுக்கூடாக உணரவைக்கும் கேள்வி பதில் அமர்வில் அவனும் பங்கெடுத்தான். ஆண்களும் சமூகமயப்படுத்தலும் என்ற ரெட் ரோக்கை அனைவரும் செவிமடுத்தனர். ஆண்களுக்கும் பெண்களுக்குமான சமூக எதிர்பார்ப்புகள் எங்கனம் அவர்களையும் அறியாமல் அவர்களை வரையறுக்கிறது என்பதை அவர்களின் வாழ்க்கை உதாரணங்களுடாகப் பகிர்ந்துகொண்டனர். அவற்றிலிருந்து வெளிவர வேண்டிய அவசியத்தை ஒத்துக்கொண்டனர்.
பன்னிரண்டாவது வார முடிவில் ஒவ்வொருவரிடமும் எதைக் கற்றீர்கள், எப்படி வித்தியாசமாகச் செயல்படுவீர்கள் என ஜோன் கேட்டபோது, அங்கு கற்றவற்றைப் பாடசாலையில் கற்பித்திருந்தால் எவ்வளவு நல்லாயிருந்திருக்கும் என ஒரு இளைஞன் கவலைப்பட்டான்.
ஆணுக்கும் பெண்ணுக்குமான வரையறைகளையும், கடமைகளையும் சுமத்தி சமூகமும் கலாசாரமும் எவ்வளவு அநியாயம் செய்கிறது என இன்னொருவர் குமுறினார்.
“அவளின் கரிசனையையும் பயத்தையும் மதித்து ஊபரிலேயே ரண்டு பேரும் அண்டைக்குப் போயிருக்கலாம்… தாய்க்கு அவள் சொன்னவை பற்றின என்ரை உணர்ச்சிகளை நான் தன்மையா அவளுக்கு விளங்கப்படுத்தியிருக்கலாம்…”
என்ற அவன், அவனுடைய கோபத்துக்கு அவள்தான் காரணமென அவளை வைத பொழுதுகள் அவனைக் கூச வைப்பதாகவும், அவனின் செயல்கள் அவனுக்குக் குற்றவுணர்வைத் தோற்றுவிப்பதாகவும் மேலும் கூறினான். அத்துடன் அவளுக்கு அவன் நல்ல கணவனாக இருக்கவில்லை, இனியும் அவளுடன் சேர்ந்து நன்றாக வாழ முடியுமாவெனத் தெரியவில்லை என்றான்.
அனைவரும் சங்கர் சொன்னதை அமைதியாகக் கேட்டனர். ஆமோதிப்பைத் தலையசைப்பினால் சிலர் வெளிப்படுத்தினர். வகுப்பு முடிவில் நடந்த சம்பவம் தொடர்பாக அவரவர் துணைவர்களுக்கு கடிதம் எழுதும்படி அனைவரிடமும் கேட்கப்பட்டது.
அன்புள்ள சர்மி,
அடிச்சும், கெட்ட வார்த்தைகளாலை பேசியும் நான் உன்னைத் துன்புறுத்தியிருக்கிறன். என்னைக் கோவப்படுத்துறாய் எண்டு உன்னைக் குற்றம்சாட்டியிருக்கிறன். என்ரை நடவடிக்கைகளாலை நீ எவ்வளவு தூரம் பாதிக்கப்பட்டிருப்பாய் எண்டதை இப்ப என்னாலை கற்பனைசெய்து பாக்கமுடியுது.
இயன்றவரைக்கும் வித்தியாசமாய் நடக்கிறதுக்கு நான் இனி முயற்சிப்பன். என்ரை செயல்களை, எண்ணங்களை எப்படிக் கையாளலாமெண்டு இந்த வகுப்பிலை சொல்லித்தந்திருக்கினம். உனக்கு நல்லதொரு கணவனாக நான் நடக்காததுக்காக என்னை மன்னிச்சிடு.
அன்புடன்
சங்கர்
எழுதியதை ஜோனிடம் அவன் சமர்ப்பித்தான். ஆசுவாசமா மூச்சுவிட்டான். பாரம் இறங்கிய மகிழ்ச்சியுடன் வகுப்பை விட்டு வெளியேறினான்.
“ஜோன் சொன்னமாரியே நீங்க மாறியிட்டியள், நீங்க கதைச்சவிதம் நல்லாயிருந்துது. இனிமே நாங்க இங்கை திரும்பிவரக்கூடாது. குட் லக்”
ஜஸ்ரின் அவனின் கையைக் குலுக்கினான். கொடுப்புக்கால் சிரித்தபடி சங்கர் அங்கிருந்து விலகினான்.
•This e-mail address is being protected from spambots. You need JavaScript enabled to view it•
•<• •Prev• | •Next• •>• |
---|