எழுத்தாளர் வடகோவை வரதராஜன் அவர்கள் சிறுகதை, கவிதை மற்றும் கட்டுரை என இலக்கியத்தின் பல்வேறு தளங்களிலும் இயங்கி வருபவர். சூழற் பாதுகாப்பில் மிகுந்த ஈடுபாடு மிக்கவர். அவர் அண்மைக்காலமாகப் பறவைகளைப் பற்றி எழுதி வரும் கட்டுரைத்தொடர் முக்கியத்துவம் வாய்ந்ததொரு தொடர். வாரம் ஒரு பறவையெனப் பறவைகளை அறிமுகப்படுத்தி வருகின்றார். அவர் தனது முகநூற் கட்டுரைகளைப் பதிவுகள் இணைய இதழில் பதிவு செய்வதற்கு அனுமதித்துள்ளார். அவருக்கு எம் நன்றி. - வ.ந.கிரிதரன், பதிவுகள்.காம் -
வாரம் ஒரு பறவை (5) :மீன்கொத்தி அல்லது மீன் குத்தி
மீன்கொத்திப் பறவைகளில் பல இனங்கள் இருந்தாலும் யாழ்ப்பாணதில் உங்கள் வீட்டு வளவுகளில் காணப்படும் மீன்கொத்தி பறவை 'வெண்கழுத்து மீன்கொத்தியாகும்' ( White throated Kingfisher ) ஆகும் . மீன்கொத்தி என்றும் சில இடங்களில் மீன்குத்தி எனவும் தமிழ் நாட்டில் சில இடங்களில் விச்சிலி அல்லது கிச்சிலி அழைக்கப்படும் இப்பறவையின் விஞ்ஞானப் பெயர் Halcyon smyrnensis என்பதாகும் . க்விக் க்விக் என உரத்த குரலில் ஒலி எழுப்பியபடி பறந்து திரியும் வர்ண மயமான இப்பறவையின் முதுகு , இறக்கைகள் ,வால் என்பன அடர் நீல வர்ணத்திலும் , அடிவயிறு ,கழுத்து , தோள் என்பன கடும் மண்ணிறத்திலும் , கழுத்துக்கு கீழே மார்புப் பகுதி வெள்ளையாகவும் காணப்படும் . ஆண் பெண் பறவைகளுக்குக்கிடையில் சிறிய நிற வித்தியாசம் காணப்படும் . ஆண் பறவை அடர் வர்ணாமாய் இருக்க , பெண் பறவை சிறிது வெளிறிய வர்ணத்தைக் கொண்டது . இதன் சொண்டுகள் பெரிதாக தடித்து செம்மஞ்சள் நிறமாக காணப்படும் . ஏறத்தாழ 28 CM நீளம் வளரும் இப்பறவை பெரிய தலையையும் குறுகிய வாலையும் , கட்டையான கால்களையும் கொண்டது . சிறிய பல குளங்கள் உள்ள கோப்பாயில் இப்பறவையே சர்வசாதாரணமாக கண்டுள்ளேன் . குளங்கள் எதுவுமே அற்ற ஏழாலையில் இப்பறவைக் கண்டு 'இவருக்கு இங்கே என்னவேலை' என்று ஆச்சரியப்பட்டேன் .
எனது வாழைத் தோடத்தில் வேலை முடித்து வைத்திருக்கும் மண்வெட்டி பிடியின் மீது சர்வ சாதாரணமாய் வந்தமர்ந்திருக்கும் இப் பறவை , குளம்கள் இல்லாத ஊரில் ,உணவுக்கு என்ன செய்யும் என்று யோசித்தேன் . இதன் பின் இதை அவதானிக்கத் தொடங்கினேன் . ஆச்சரியமாக இவை , வெட்டுக்கிளி , சிறு பூச்சிகள் , மண்புழு , வண்டுகள் , சிறு ஓணானான் , அரணை என்பவற்றை உண்பதை கண்டு வியப்படைந்தேன் . இது மாத்திரமல்ல சிறிய பறவைகளைக்கூட இது பிடித்து உண்ணுகிறது . நீரிலே மீன் பிடிக்க இதை இயற்கை தகவமைத்தாலும் , ஆகாத உணவு போட்டியில் இது சூழலுக்கேற்ப தன்னை மாற்றியமைத்து தனது வழமையான உணவல்லாத பூச்சிகளை பிடித்து உண்டு தக்கன தப்பி பிளைக்கும் என்ற டார்வினின் இயற்கைத் தேர்வுக் கொள்கைக்கு வாழும் சான்றாக இருப்பது ஓர் ஆச்சரியமான விடயமல்லவா ?
நீர் நிலைகளில் இது மீன் பிடித்தல் இன்னும் ஆச்சரியமான விடயம் . நீர் நிலைக்கருக்கில் ஏதாவது மரக் கிளையில் இது பொறுமையாக உட்கார்ந்திருக்கும் . மீன் கூட்டம் ஏதாவது மேற்பரப்பிற்கு வந்தால் , நீர் நிலைக்கு மேல் பறந்து சென்று ஒரே இடத்திலேயே பறந்து கொண்டு நின்று , வேவு பார்த்து , சடார் என நீரில் செங்குத்தாக குதித்து மீனை பிடித்து கொண்டு வரும் . இதில் கூட ஒரு விஞ்ஞான தத்துவத்தை இது கையாள்கிறது . ஒளியானது ஒரு ஊடகத்தில் இருந்து வேறு ஓர் ஊடகத்திற்கு போகும் போது முறிவடைகிறது . இது பௌதிகவியலில் ஒளி முறி எனப்படும் . இவ் ஓளி முறிவின்போது பொருட்கள் சற்றே இடம்மாறி தோற்றம் காட்டுகின்றன . ஆனால் செங்குத்து பார்வையாக பார்த்தால் இந்த இடம்மாறு தோற்றவழு ஏற்படாது . இந்த பௌதிகவியல் விதியை மீன்கொதி கனகச்சிதமாக பிரயோகிக்கிறது . மீன் கொத்தி , நீரில் ஒரு கோணத்தில் பாய்ந்தால் இந்த ஒளிமுறிவு விதியின் தோற்ற வழுவால் மீன் இருக்கும் இடம் மாறுபாடகவே மீன்கொத்திக்கு தெரியம் . இதை தவிர்க்க , நீரின் மேல் ஒரேஇடத்தில் நின்று பறந்து கொண்டு தலையை 90 பாகை கோணத்தில் நீர்ப்பரப்பை நோக்கி திருப்பி , மீனை அடையாளப் படுத்தியதும் செங்குத்தாக பாய்ந்து சரியான இடத்தில் மீனைப் பிடிக்கிறது . பௌதிகவியல் தத்துவத்தை ஒரு பறவை கைக்கொள்வது ஆச்சரியமான விடயமல்லவா ?
இன்னுமோர் இலகு தத்துவத்தையும் இது கையாள்கிறது . பிடித்த மீனை அந்தரத்தில் தூக்கிப்போட்டு அதன் தலைப் பக்கம் முதலில் உள்ளே போகுமாறு விழுங்குகிறது இப்பறவை . மற்றய பறவைகள் எல்லாம் மரக்கிளைகளிலோ ,அல்லது மரப்பொந்துகளிலோ கூடமைத்து குஞ்சு பொரிக்க ,மீன்கொத்தியோ சரிவான தரைகளில் ,கிடையாக வளைதோண்டி அதில் கூடமைக்கிறது . கூட்டில் பளபளப்பான வெள்ளை நிறத்தில் ஆறு வரையான முட்டைக்கள் இட்டு அடைகாத்து குஞ்சு பொரிக்கிறது. இத்தனை சிறப்பியல்புகளைக் கொண்ட , பூச்சி புழுக்களை உணவாக்கி விவசாயிகளுக்கு உதவுகின்ற இப்பறவையே பார்த்து இரசிப்போம் நண்பர்களே .
வாரம் ஒரு பறவை (6): செண்பகம் அல்லது செம்போத்து
செண்பகம் அல்லது செம்போத்து யாழ்ப்பாணத்தில் பரவலாக காணப்படும் ஓர் பறவையாகும். தமிழ்நாட்டில் சில இடங்களில் செங்காகம் அல்லது கள்ளிக்காகம் எனப்படும் இது ஆங்கிலத்தில் Crow Phesant எனப்படும் . இதன் விஞ்ஞானப் பெயர் Centroid sinensis என்பதாகும் . ஏறத்தாழ அண்டம்காக்கையின் உடற்பருமனுள்ள இது 48 CM நீளமுள்ளது . தலை ,கழுத்து ,கால்கள் வால் என்பன கருமை நிறமாகவும் , இறக்கைகள் செங்கட்டி சிவப்பு நிறமாகவும் காணப்படும். குயிலைப் போன்று இதன் கண்களில் அடர் சிவப்பு நிற வளையம் காணப்படும் . சொண்டு உறுதியாகவும் சிறிது நுனி வளைந்து கூர்மையாகவும் காணப்படும். இது நடக்கும் போது இதன் வால் தரையை தொட்டுக்கொண்டிருக்கும் . ஆண் பெண் பறவைகளில் பெரிய வித்தியாசம் தெரியாது .கூர்ந்து கவனித்தால் பெண் பறவையின் இறக்கைகள் சிறிது பெரிதாக காணப்படும் . ஆச்சரியம் என்னவென்றால் இது குயில்க் குடும்பத்தை சேர்ந்த பறவையாகும் . ஆனால் சொந்தமாக கூடுகட்டி முடையிட்டு குஞ்சுகளை பராபரிக்கும் . மரக் கவர்களுக்கிடையில் சிறிய சுள்ளிகள் , சருகுகள் , தும்புகள் போன்றவற்றைக்கொண்டு பந்து போன்ற பெரிய கூடுகட்டும்.
Feb தொடக்கம் sept வரை இதன் இனப்பெருக்க காலமாகும் . இக்காலத்தில் இது 'பாங்க் பாங்க்' என்று பெரிய தொனியில் அகவலிடும் . இக்காலத்தில் இணை சேர்ந்து 3 தொடக்கம் 4 முட்டைக்கள் வரை இடும் . இதன் குஞ்சுகள் கருமை நிறமாக காணப்படும். வளரும்போது நிற மாற்றம் ஏற்படும் .
செண்பகம் அதிக நேரத்தை தரையில் கழிக்கிறது . சருகுகளைக் கிளறி , நத்தைகள் , பூச்சிகள் , ஓணான் , அறணை , சிறிய பாம்புகள் என்பவற்றை பிடித்து உண்ணும் . மயிர்கொட்டிகளையும் இது உண்பதை கண்டிருக்கிறேன் . இதுமாத்திரமல்ல பழங்கள் , விதைகள் என்பவற்றையும் உண்ணும் . மூர்க்ககுணமுள்ள இப்பறவை , மற்றைய பறவைகளின் கூடுகளை அழித்து அதில் இருக்கும் குஞ்சுகளையும் முட்டைகளையும் உண்பதில் பிரியப்படும் .
பறக்கும் தன்மை குறைந்த இந்த மந்தமான பறவை , உங்கள் வளவுகளில் அரக்கி அரக்கி நடப்பதைப் பார்த்திருப்பீர்கள் .இதன் மந்தத்தன்மை காரணமாக இது தெருவைக் கடக்கையில் அதிகளவில் விபத்திற்குள்ளாகிறது . ஆஸ்மா நோய் குணமாகும் என்ற நம்பிக்கையில் சிலர் செண்பக இறைச்சியை உண்கின்றனர் . மாந்திரிகத்தில் , மிருக வசியம் செய்ய இதன் இறகுகள் பயன் படுத்தக்படுகின்றன .
பழம் தமிழ் இலக்கியங்களில் இப்பறவை 'செம்பூழ்' என்ற பெயரில் பேசப்படுகிறது . 'கரும்தாள் மிடற்ற செம்பூழ் சேவல் சிறு புள் பெடையோடு குடையும் ஆங்கண்' என்று இப்பறவை பற்றி அகநானூறு குறிப்பிடுகிறது . சகுன சாஸ்திரத்திலும் இப்பறவை பேசப்படுகிறது .
பரிமளப் புனுகு பூனை
முசலொடு கோழி கள்ளிக்காக்கை மந்தி நாரை
விரையென நம்பும் புள்ளிமான் சுபமது கொக்கு
நிஜமிது வலமாய் வந்தால்
நினைத்தது ஜெயமாம் கண்டாய் .
அழகற்றதும் ,கடூரமான குரலும் ,மந்தமான தன்மையும் , மற்றைய பறவைகளின் குஞ்சுகளையும் முட்டைகளையும் திருடும் குணத்தையும் கொண்ட இப்பறவை தமிழ் ஈழத்தின் தேசிய பறவையாக இருக்க எந்த தகுதியும் அற்றது. உலர்வலயத்தில் மட்டும் காணப்படுகின்ற சாந்தமான வேறோர் பறவையே தேசிய பறவையாக இருக்க தகுதி பெற்றது . அப்பறவை பற்றி வேறோர் பதிவில் பார்ப்போம் .
வாரம் ஒரு பறவை (7): நந்தவனப் பறவை எனப்படும் புல் புல் அல்லது கொண்டைக் குருவி
மனிதர்களோடு அண்டி வாழக் கூடிய ஓர் பறவை இக் கொண்டைக் குருவியாகும் . இதை கொண்டலாதி என சில இடங்களில் அழைத்து பெயர் குழப்பத்தை ஏற்படுத்துகிறார்கள். கொண்டலாத்தி என்பது வேறு ஒரு வகைப் பறவையாகும் .இது பற்றி அடுத்த வாரம் பார்ப்போம் . இக் கொண்டைக் குருவிகளில் அநேக வகைகள் காணப்பட்டாலும் , 'சிவப்பு வாலடி'க் குருவி அல்லது 'செம்புழை கொண்டைக் குருவி'யே யாழ்ப்பாணணத்தில் பரவலாக காணப்படுகிறது. உங்கள் நந்தவனத்தில் உற்சாகமாக பாடியபடி திரியும் இப்பறவையை நீங்கள் தொந்தரவு செய்யாவிடில் உங்கள் வீட்டு முற்றத்தில் உள்ள பூ மரங்களிலேயே கூடுகளை அமைக்கும் . தமிழ் நாட்டில் செல்லமாக 'சின்னான்' என அழைக்கப்படும் இப்பறவையின் ஆங்கிலப் பெயர்Red-ventel Bulbul என்பதாகும் . உயிரியல் பெயர் Pycnonotus cafer .
அடைக்கலம் குருவியை விட சற்றுப் பெரிதாக காணப்படும் இப் பாடும் பறவையின் தலையில் கருப்பு நிற கொண்டை காணப்படுகிறது . குதவடி வட்டமாக இரத்தச் சிவப்பு நிறத்தில் காணப் படுவதாலேயே இது செம்புழை கொண்டைக் குருவி என்ற காரணப் பெயரைப் பெறுகிறது . தலையில் கருமையான கொண்டை , கருப்பு நிறக் கால்கள் , வெள்ளையான அடிவயிறு ,மரப்பட்டை நிறத்தில் ,மீன் செதில் போன்ற கறுப்பு வெள்ளை திட்டுகளைக் கொண்ட இறகுகள் கொண்ட அழகிய இப்பறவையில் ஆண் பெண் பறவை களுக்கிடையில் நிற பேதம் இருப்பதில்லை. இது பழங்களையும் பூச்சி புழுக்களையும் உணவாக கொள்கிறது. குறிப்பாக நாயுண்ணி அல்லது கடுகு நாவல் எனப்படும் லன்ரானா ( )புதர்களில் அதன் பழங்களை உண்பதையே நான் அதிகம் கண்டுள்ளேன் .
மரக் கொப்புகளுக்கிடையில் நார்கள் கொண்டு கிண்ண வடிவில் கூடுகளை அமைத்து அதில் 2தொடக்கம் 3 முட்டைக்கள் வரை இட்டு அடைகாத்து குஞ்சு பொரிக்கிறது . இதன் குஞ்சுகள் மிக வேகமாக வளர்ந்து ஒரு வாரத்தில் கூட்டைவிட்டு பறந்து விடுகின்றன . ஒருமுறை கடும் காற்று அடித்த ஓர் மழை நாளில் , பக்கத்து வீட்டு முற்றது மாமரத்தில் இருந்து ஓர் குருவிக்கூடு கீழே விழுந்து குஞ்சுகள் மழையில் நனைவதாக எனக்கு தகவல் வந்தது .போய் பார்த்தபோது அது கொண்டைக் குருவியின் கூடு . என்னிடம் இருந்து மழை புகா பறவைக் கூண்டை எடுத்துச் சென்று அதற்குள் அக்கிண்ண வடிவ கூட்டை வைத்து , குஞ்சுகளை ஈரம் போக உலர்த்தி அக் கூட்டினில் வைத்து , பெற்றார் போய் வரத்தக்கதாக ,கம்பிக் கூண்டின் வாசலை அகலத் திறந்து விட்டேன் . பெற்றார் பறவைகள் கூண்டுக்குள் சென்று குஞ்சுகளுக்கு உணவு ஊட்டின . இறக்கைகள் வளர்ந்தபின் அக் குஞ்சுகளை எடுத்து வளர்ப்பது எனது நோக்கமாக இருந்தது . ஒரு வாரத்தின் பின் சென்று பார்த்தபோது , குஞ்சுகள் வளர்ந்து கூட்டை விட்டு பறந்து விட்டன. உங்கள் விட்டு மரங்களில் பலகையாலோ அல்லது கடினமான அட்டைப் பெட்டியாலோ ஒரு பறவைக் கூண்டை அமைப்பதன் மூலம் இக் கொண்டைக் குருவியை வரப்பண்ணி , உங்கள் நந்தவனத்தை அதன் பாட்டால் இனிமையாக்குங்கள் நண்பர்களே .
வாரம் ஒரு பறவை (8): கறுப்பு வெள்ளை ரொபின்
இப்பறவை என்ன பெயரால் யாழ்ப்பாணத்தில் அழைக்கப்படுகிறது என எனக்கு சரியாகத் தெரியவில்லை . சிலர் கறுப்பு வெள்ளைக் குருவி என்கிறார்கள் . சிலர் ஊர்க்குருவி என்கிறார்கள் . சிலர் கரிக்குருவி என்கிறார்கள் . ஆனால் கரிக்குருவி எனப்படுவது வேறு ஒரு வகைப் பறவையாகும் .உண்மையான கரிக்குருவியின் வால் இரண்டாக பிளவு பட்டிருக்கும் .நான் இங்கே குறிப்பிடும் பறவை ,தமிழ் நாட்டின் சில பகுதிகளில் 'வண்ணாத்திக் குருவி'யென்றும் , சில பகுதிகளில் 'கொண்டு கரிச்சான்' எனவும் அழைக்கப்படுகிறது . அன்பர்களே உங்கள் பகுதிகளில் இது என்ன பெயரில் அழைக்கப்படுகிறது என்பதனை அறியத்தந்தால் மகிழ்ச்சி அடைவேன் . ஆங்கிலத்தில் Oriental magpi robin என அழைக்கப்படும் இதன் உயிரியல் பெயர் Copsychus salaries என்பதாகும் . நான் இதற்கு வைத்த பெயர் 'யாழ்ப்பாணத்து ரொபின்' . என் அம்மா வைத்த பெயர் 'லோசினி'க் குருவி .அம்மா ஏன் இந்தப் பெயரை வைத்தார் என்பதை பின்பு சொல்கிறேன் .
கோடைகால காலை வேளைகளில் இதன் பாடல் இல்லாமல் பொழுது விடியாது . தந்திக் கம்பங்களிலோ மரக்கிளைகளிலோ இருந்து கொண்டு உச்சகீழ்ஸ்தாயில் இது பாடும் பாடல் மிக இனிமையானது . இந்தப் பாட்டிற்க்கு எதிர்ப் பாட்டாக வேறு ஒரு பறவை பாடத் தொடங்கும் . இப் போட்டி நீண்ட உச்சதொனிக் குரனிலில் முடியும் .
காட்டு விலங்குகள் தங்கள் எல்லையை அடையாளம் பண்ண ஆங்காங்கே சிறுநீர் கழித்து வைக்கின்றன . நாய்களில் இந்த பழக்கத்தை நீங்கள் அவதானித்திருக்க முடியும் . இந்தச் சிறுநீர் வேலிக்குள் வேறு ஒரு விலங்கு நுழையுமானால் போர் தொடங்குகிறது . இவ்வாறே பறவைகளும் 'ஒலி வேலி' அமைக்கின்றன . எந்த பறவை உச்சதாயில் ஒலி வேலி அமைக்கிறதோ அந்த ஒலி எல்லைக்குள் வேறு பறவையை நுழைய அனுமதிக்காது. அதே வேளை பெண் பறவையை கவரவும் இப்பாடல் பாடப்படுகிறது. மிக இனிமையான குரலில் பாடும் இப்பறவை ஏறத்தாழ புலுனியின் அளவுள்ளது .புலுனியின் உடல் குண்டாக இருக்க இதன் உடல் இறுக்கமாக இருக்கும் . தலை கழுத்து என்பன அடர்த்தியான கறுப்பாக இருக்க இறகு வயிறு என்பன பால் வெள்ளை நிறம் கொண்ட அழகிய பறவை இது . ஆண் பறவை அடர்ந்த கருப்பு வர்ணத்தில் இருக்க பெண் பறவையில் இக்கறுப்பு வர்ணம் சாம்பல் நிறமாக காணப்படும் . இதன் மெலிய வால் எப்போதும் மேலே தூக்கியபடியே இருக்கும் . பாடும் போது ஸ்ருதி பேதங்களுக்கு ஏற்ப வால் மேலேயும் கீழே போய் வரும் . February தொடக்கம் August வரை இதன் இனப்பெருக்க காலமாகும் .
இக்காலங்களில் இதன் பாடல் உச்சமாக இருக்கும் .
மரபொந்துகளில் கூடமைத்து அதில் 3 தொடக்கம் 5 முடடைக்கள் வரை இடும் . முட்டைகள் செம்புள்ளிகள் கொண்ட வெளிர் நீல நிறமாக இருக்கும் . தாய் ,தகப்பன் பறவைகள் இணைந்து குஞ்சுகளுக்கு உணவூட்டி வளர்க்கும் . இப்பறவைகளின் பிரதான உணவு பூச்சி புழுக்களாகும் .
எமது சமையலறைக் கழிவு நீர் வெளியேறும் பகுதியில் தினமும் இப்பறவையே காண்கிறேன் . அங்குள்ள மண்புழுக்களை உண்ண இது வருகிறது . ஆச்சரியமாக சோற்று பருக்கைகளையும் இடியப்பம் புட்டு துணிக்கைகளையும் இது உண்பதை அவதானித்தேன் . இரவில் எமது வீட்டு பூவரசமரத்தில் தங்கி அதிகாலையில் தன் இன்னிசையால் எமது வீட்டு வளவை சோபிதமாக்குகிறது . ஒருமுறை எனது தங்கை வீட்டு தபால் பெட்டியில் தும்புகளால் கூடமைத்து குஞ்சு பொரித்திருந்ததை மகன் தனது போனில் படம் பிடித்ததை இங்கு பகிர்ந்துள்ளேன் .
- வடகோவை வரதராஜனின் அம்மா! -
இயற்கையில் எனக்கு ஆர்வமூட்டியவர்கள் எனது பூட்டி சிவசிதம்பரமும் அம்மா ராஜேஸ்வரியுமே ஆவார்கள் . அம்மாவிற்கு ஊரில் லோசினி என்ற செல்லப் பெயரும் உண்டு . இந்த பறவை பாடும்போது லோ----என நீட்டி பின் --ச்சினி முடிப்பது போல் அதன் ஒலி இருக்கும் . இதை அவதானித்த அம்மா சிரித்தவாறே இதுதான் 'லோசினி'க் குருவி என அதனை எங்களுக்கு அறிமுகம் செய்து வைத்தார் . அதிகாலை வேளையை தனது கானங்களால் பொலிவாக்கும் இந்த லோசினிக் குருவியை இரசிப்போம் நண்பர்களே .
•Next• •>• |
---|