- சிறப்பான முகநூற் பதிவுகள் அவ்வபோது பதிவுகளில் மீள்பிரசுரமாகும். அவ்வகையான பதிவுகளிலொன்று இப்பதிவு. சந்திரா நல்லையா அவர்களின் முகநூற் பதிவுகளிலிருந்து பெறப்பட்டது. நன்றி. - பதிவுகள் -
பதினேழாம் நூற்றாண்டில் 1692 தொடக்கம் அமெரிக்காவில் Massachusetts, Salem போன்ற பகுதிகளில்( witch-hunt ) சூனியக்காரிகளை அழித்தல் எனும் சம்பவம் நடந்ததை வரலாறுகளினூடாக அறிய முடிகிறது. இந்த சம்பவம் பெண்ணிலைவாதிகளினால் பெரும் விமர்சனத்திற்கு உள்ளாகியிருப்பதையும் காணமுடிகிறது. இவ்வாறு விமர்சித்தவர்களில் Silvia Ferederic என்பவர் குறிப்பிடத்தக்கவர் எனலாம். இதே சம்பவமானது ஐரோப்பாவில் 15, 16, 17 நூற்றாண்டு காலப்பகுதியில் ஜேர்மனி , சுவிஸ்லாந்து , பிரான்ஸ், இத்தாலி, இங்கிலாந்து, ஸ்பெயின் போன்ற இடங்களிலும் நிகழ்ந்திருப்பதையும் அறிய முடிகிறது. ஆதலால் இந்த வரலாறு பற்றி சற்று முன்நோக்கி பார்ப்பது அவசியமாகிறது.
விஞ்ஞானம் வளர்ச்சியடைந்த பின்பும் மனிதர்கள் சூனியம், சாஸ்திரம் போன்ற அறிவிற்கு பொருந்தாத விடயங்களை இன்றும் மிகையாக நம்புவதைக் காணலாம். ஆனால் நானூறு வருடங்களுக்கு முன்பு அறிவுத்துறை வளர்ச்சியடையாத காலகட்டத்தில் அமெரிக்காவில் சேலம், Massachusetts போன்ற பகுதிகளிலும், மற்றும் உலக நாடுகளிலும் சூனியத்தில் நம்பிக்கையானது மிகவும் வலிதானகாகவே இருந்திருக்க முடியும். “ Witches “ என்பது சூனியக்காரிகள் என அடையாளம் காணப்பட்டவர்கள் ஆவர். இவர்கள் பெரும்பாலும் பெண்களாகவே இருந்தார்கள். இந்த சூனியக்காரி அடையாளமானது வெறும் வதந்திகளுடனும், சந்தேகங்களுடனும் தொடங்கியது எனலாம். இவ்வாறு ஏன் “சூனியக்காரி “ என்ற முத்திரை குத்தப்பட்டார்கள் என்பதை பரிசீலனை செய்வது இன்றியமையாததாகும்.
சில நூற்றாண்டுகளுக்கு முன்பு விஞ்ஞான தொழில்நுட்ப வளர்ச்சி என்பது பாரியளவில் நிகழ்ந்திருக்கவில்லை என்பதே நிஜமானது. இக்காலங்களில் மக்கள் நோய்களினால் பாதிப்பிற்கு உள்ளாகும்போது இயற்கை மருத்துவமே பயன்படுத்தப்பட்டது. Salem, Massachusetts லும் மற்றைய இடங்களிலும் மக்கள் பல்வேறுபட்ட நோய்களினால் பாதிக்கப்பட்டுள்ளார்கள். இங்கு மனநோய் ( hysteria ) உள்ளவர்கள் இருந்தமை குறிப்பிடத்தக்கது. இதன்போது பெண்களால் நாட்டுப்புற மருத்துவம் மேற்கொள்ளப்பட்டது. இம்மருத்துவ முறையில் பெண்களால் இயற்கை மூலிகைகளுடன் paganism எனப்படும் கிறிஸ்தவத்திற்கு முந்திய புராதன மதநம்பிக்கைகளும் பயன்படுத்தப்பட்டது. இங்கு பெண்களது சுதந்திரமான செயற்பாடுகள் குறித்து கேள்விகள் எழலாயிற்று. இவ்வாறு வரம்பு மீறிய, சக்தி வாய்ந்த பெண்கள் மீதே சூனியக்காரி என்ற குற்றம் சுமத்தப்பட்டது. குற்றத்திற்கான காரணங்களாக * பெண்களால் செய்யப்படும் இந்த மருத்துவமானது இயற்கைக்கு அப்பாற்பட்டது. தீமை நிறைந்தது. சேலம் கிராமத்தில் உள்ள மக்கள் கிறிஸ்தவ மதத்தை நன்கு பின்பற்றியவர்கள். அதனால் ஆதாமுக்காகவே ஏவால் படைக்கப்பட்டாள் என்பதை வலிமையாக ஏற்றுக்கொண்டவர்கள். பெண்கள் மனைவியாக இருக்கும்போதே மரியாதைக்குரியவர்கள்.அதனை சூனியக்காரிகள் சீர்குலைப்பதாக கருதினார்கள். அங்கு வாழ்ந்த பெண்களை நல்லவர்கள், சூனியக்காரிகள் என வகைப்படுத்தினார்கள். நல்லவர்கள் கடவுளால் உருவாக்கப்பட்டவர்கள் எனவும் சூனியக்காரிகள் சாத்தானால் கையாளப்படுபவர்கள் எனவும் நம்பப்பட்டது. இவர்கள் கடவுளுக்கு கீழ்படிவதில்லை என்றவாறே குற்றங்கள் சுமத்தப்பட்டன.
சூனியக்காரி என்ற சொல்லானது கிரீக் ஐதீகத்தில் ( Greek mythology ) இருந்து பெறப்பட்டதாக கூறப்படுகிறது. எதிரிகளை குறிப்பிடவே இச்சொல் பயன்பட்டது. இந்த சொல்லுக்கான சித்திரங்கள் மிகவும் மோசமான வரையறையற்ற இழிவுபடுத்தலைக் கொண்டிருந்தது எனலாம். இந்த படங்களானது monster,பேய், துஷ்ட தேவதை போன்ற வடிவங்களை ஒத்ததாகவே இருந்துள்ளது. அத்துடன் அவர்கள் நடு ராத்திரியில் பேய்களுடன் பாலுறவு கொள்வதும் அதனாலேயே மந்திரசத்தியை பெறுவதாகவும் குற்றம் சுமத்தப்பட்டனர். இவர்கள் குழந்தைகளை உண்பார்கள் cannebalism எனவும் கூறப்பட்டார்கள். வரலாற்றின் மறுமலர்ச்சிக் காலத்தில் வரைதல் கலையும் சிறப்பாக வளர்ச்சி அடைந்திருந்தது. இங்கு சூனியக்காரிகளின் வரைபடங்களும் வரையப்பட்டுள்ளது. இவ்வாறு வரையப்பட்ட படத்தில் மிகவும் குறிப்பிடத்தக்கது பின்வரும் விளக்கத்தைப் கொண்ட படமாகும். பெண்கள் நிர்வாணமாக தும்புத்தடியில்( broomstick ) இருந்துகொண்டே பறப்பதுபோல் அந்த படம் அமைந்தது. இங்கு பயன்படுத்தப்பட்ட தடியின் குறியீடு ஆண் உறுப்பு எனவும் கூறப்படுகிறது. இத்தகைய ஓவியங்களை பார்க்கும்போது பெண்கள் மீதான எவ்வளவு கொடூரமான வன்மங்களை வெளிப்படுத்தியள்ளமை தெரியவருகிறது. பெண்களை கட்டுப்படுத்துவதற்கு ஆண் மைய சமூகமானது கையாளும் கண்ணியமற்ற செயற்பாடு, அவர்களை நிர்வாணமாக்குவதும் பாலியல் ரீதியில் பலி சுமத்துவதுமே என்றால் இன்றும் கூட பொருத்தமாகவே இருக்கும். ஐரோப்பாவில் பொதுவாக 15- 17 நூற்றாண்டுகளில் இந்த சூனியவேட்டை நடந்தாக ஆய்வுகள் வெளிப்படுத்துகின்றன. அதாவது 1450 -1750 காலப்பகுதியில் ஆகும். ஐரோப்பாவில் கிட்டத்தட்ட 40,000 - 60,000 வரை குற்றம் சாட்டப்பட்டுள்ளார்கள். உலகலாவிய ரீதியில் 100,000 ற்கு அதிகமாகவே கொல்லப்பட்டனர்.
1486 இல் கத்தோலிக்க மதகுரு ஹென்றி கிராமர் (Heinrich Kramer ), Jacob Springer ஆகியோரால் லத்தின் மொழியில் எழுதி மல்லீயஸ் மாலெபிகாரம் (Malleus Maleficarum ) எனும் சூனியம் பற்றிய சிறப்பு கட்டுரைகளை உள்ளடக்கிய நூல் ஜேர்மனியில் வெளியிடப்பட்டது. நவீன ஐரோப்பிய காலத்தில் துன்புறுத்தலை ஊக்குவிக்க பயன்பட்ட முக்கிய நூலாக நம்பப்படுகிறது. இந்நூல் ஜேர்மன், பிரென்ஞ், ஆங்கிலம் என பல மொழிகளில் மொழிபெயர்க்கப்பட்டது. சூனியத்திற்கும் witch craft ற்கும் பேயியல் - பேய் பற்றிய நம்பிக்கை ( demonology ) ற்கும் இடையேயுள்ள தொடர்பை விளக்குவதாகும் கருதப்பட்டது. ஆங்கிலத்தில் இது Hummer of witches என அழைக்கப்பட்டது. Witches என்பது பெண்களையே குறிப்பிடப்படுகிறது. இப்புத்தகம் 16, 17 நூற்றாண்டுகளில் சூனியத்தின் மீது மிருகத்தனமான வழக்கு தொடர பங்களித்தது எனவும், மக்களின் கலாச்சாரத்தில் பெரும் தாக்கத்தை ஏற்படுத்தியது எனவும் கூறப்படுகிறது. இது மூன்று பகுதிகளாக பிரித்து பார்க்கப்படுகிறது. பகுதி 1 இல் சூனியம் என்பது உண்மையானதா? அல்லது கற்பனையானதா? பிசாசுகள் இருப்பது உண்மை ஆதலால் சூனியமும் உண்மையே.இங்கு தீங்கு விளைவிக்கும் மந்திர செயல்களை செய்வதற்கான ஆற்றலை சூனியக்காரி சாத்தானுடன் செய்யும் ஒப்பந்தம் மூலமே பெற்றுக்கொள்கிறாள் எனவும் கூறப்படுகிறது. இந்த ஒப்பந்தத்தை பின்வருமாறு விபரிக்கின்றது .
பிசாசுடன் ஒரு ஒப்பந்தம்.
பிசாசுடன் பாலியல் உறவு.
வான்வழி விமானம்.
சாத்தானின் தலைமையில் சந்திப்பு.
தீங்கிழைக்கும் மந்திரத்தின் நடைமுறை.
குழந்தைகளின் படுகொலை.
பகுதி 2 இல் மந்திரவாதிகள் எவ்வாறு மந்திரங்களை பயன்படுத்துகிறார்கள்? சூனியத்தால் ஏற்படும் தீங்குகளாக பஞ்சம், நோய், மழையின்மை, பயிர்செய்கையில் விளைச்சல் இன்மை சமூகபிளவுகள், போர் போன்றவை குறிப்பிடப்படுகிறது. சூனியத்தை எவ்வாறு தடுப்பது ? பாதிக்கப்பட்டவர்களுக்கு எப்படி உதவுவது ? எனவும் கூறப்படுகிறது.
பகுதி 3 இல் சூனியக்கார்ரை எவ்வாறு கண்டறிவது? ( குற்றச்சாட்டுகளை சேகரித்தல், சாட்சிகளை விசாரித்தல் ) சூனியக்கார்ரை எவ்வாறு தண்டிப்பது ? இங்கு தண்டணையில் கைது செய்தல், சிறையில் இடுதல், சித்திரவதை பண்ணல், மரணதண்டனை அளித்தல் என பல்வகை கூறப்படுகிறது. மரணதண்டனையில் தூக்குத்தண்டணை ( hanging) பிரதானமானது எனலாம்.
சூனியக்கார்ரை நிரூபிக்க ஒப்புதல் வாக்குமூலம் பெறப்பட வேண்டும் எனவும், இவ் ஒப்புதல் வாக்குமூலத்தை பெறுவதற்கு சித்திரவதைகள் மேற்கொள்ளப்பட்டது எனவும் கூறப்படுகிறது. இவ்வாறு வழங்கப்பட்ட சித்திரவதைக்கு பலவகையான துன்புறுத்தும் சாதனங்களும் பயன்படுத்தப்பட்டது. அவற்றில் சில மாதிரி நித்திரையின்றி வைத்திருத்தல் (Sleeping deprivation ), குற்றவாளியை கதிரையுடன் பிணைத்து நீருக்குள் அமிழ்த்துதல் (Dunking chair ), இரும்பாலான முகமூடி ( Witch’s Bridle ) , Pear of Anguish, முள்ளுக்கரண்டியை ஒத்த சாதனம் (Heretic’s fork ), witch cutting, தீயில் போடுதல் ( Burning at the stake ) போன்றவற்றை குறிப்பிடலாம் .
இவ்வாறு Hummer of witches எனும் நூல் முக்கியத்துவம் வாய்ந்ததாக காணப்படுவதுடன். 16, 17 ம் நூற்றாண்டுகளில் சூனியத்தின் மீது தொகையாக வழக்குகள் தொடர காரணமாகவும், நீதிமன்றங்களால் பயன்படுத்தப்பட்டு வந்துள்ளது எனவும் கூறப்படுகிறது. இந்நூல் சுதந்திரமான பெண்களுக்கு எதிரான கருத்துக்களை கொண்டதாகும்.
சேலத்தில் முதன்முதலில் குற்றம் சாட்டப்பட்டர் SaraGood என்ற பெண் ஆவர்.
இவர் Feb 29 , 1692 ல் கைது செய்யப்பட்டார். அவர் அக்குற்றச்சாட்டுகளை ஏற்க மறுத்தபோது பலர் சாட்சியமளித்தனர். இவர்களில் சாரா குட் இன் கணவரும் வேறு பெண்களும் உள்ளடங்குவர். சூனியக்காரிகளின் வேட்டை என்னும் நிகழ்வில் பல்லாயிரக்கணக்கான பெண்கள் உலகம் முழுவதும் ஒடுக்கப்பட்டு அழிக்கப்பட்டுள்ளார்கள். பலர் தூக்கில் தொங்கவிடப்பட்டும், சிறைச்சாலைகளில் அடைக்கப்பட்டு துன்புறுத்தப்பட்டும் தண்டிக்கப்பட்டார்கள். பொதுவாக witch-hunt இல் கொல்லப்பட்ட பெண்களின் எண்ணிக்கை சரியாக சொல்ல முடிவதில்லை.
அக்கால கட்டங்களில் மக்கள் வறுமையினால் பெரும் கஸ்டங்களை அனுபவித்தார்கள். அதேவேளை பலவித நோய்த்தொற்றுக்களும் ஏற்பட்டது. மனநிலை பாதிப்பிற்கும் உட்பட்டிருந்தார்கள். இவர்களுக்கு அப்பகுதியில் வாழ்ந்த பெண்களால் இயற்கை முறையில் மருத்துவம் வழங்கப்பட்டது. இவ்வாறு பெண்கள் சுதந்திரமாகவும், ஆற்றல் கொண்டவராகவும், பொருளாதார பலம் வாய்ந்தவராகவும் முன்னேற்றம் வகித்தார்கள்.
ஆனால் சமூக அமைப்பானது மதசார்பான கருத்துக்கும் ஆண்மைய வாதத்திற்கும் முதன்மை அளிக்கும் நிலையிலேயே இருந்தது. இதனால் ஆண்கள் இயல்பாக பெண்களை விட உயர்ந்தவர்களாயும், பெண்கள் ஆண்களுக்கு கீழ்ப்பட்டவர்களாகவும் வாழ்வதையே விரும்பினார்கள். இதற்கு மாறாக பெண்கள் பொதுவெளிக்கு வருவதை விரும்பவில்லை.
இதனை மறைமுகமாக கட்டுப்பாட்டிற்கு கொண்டுவரவே சூனியக்காரிகள் என்ற பட்டத்தை மிக கேவலமாக சித்தரித்தார்கள். இவ்வாறு குற்றம் சாட்டப்பட்ட பெண்களை கண்ணியமான சமூகத்திற்கு வெளியே தள்ளுவதையே நோக்கமாக கொண்டிருந்தார்கள். இதற்கு தேவாலயமும் பரிந்துரை செய்தமையும் குறிப்பிடத்தக்கதே. ஆனால் இது பெண்களுக்கு எதிரான வன்முறை என்றே பெண்ணியவாதிகள் வலியுறுத்துகிறார்கள். Silvia Federici எனும் பெண்ணிலைவாதி தமது ஆய்வுகளில் பெண்களின் கைகளில் வளர்ச்சியடைந்து வந்த மருத்துவதுறையை பறித்தெடுத்து ஆண்களிடம் கையளிப்பு செய்வதற்கும், பெண்களை கட்டுப்படுத்தி ஆண்களுக்கு கீழ்ப்பட்டவராக வீட்டுக்குள் அடிபணிய வைப்பதற்குகே இந்த சூனியக்காரி வேட்டையானது பெரும் பங்கு வகித்ததை வரலாற்று ரீதியில் பெண்களுக்கு இழைத்த பெரும் கொடுமை என்றே குறிப்பிடுகிறார்.
எனவே சூனியக்காரிகளின் வேட்டை என்பதனை வெறும் இறையியல்( Theology ) கண்ணோட்டம் கொண்டு நோக்காது அறிவியல் விஞ்ஞான வளர்ச்சியுடன் ஆய்வு செய்வதே பகுத்தறிவிற்கு உகந்ததாக இருக்கும் எனலாம். இந்த வகையிலேயே அறிவுஜீவிகளாலும், பெண்ணியலாளர்களாலும் உற்று நோக்கப்பட்டுள்ளது. அவர்கள் அக்கால கட்டங்களில் கிறிஸ்தவ மதநம்பிக்கை(powerful Religious), சமூக நெருக்கடி ( Social tension ), பால்வேறுபாடு (Gender ) சமூக்கட்டமைப்பு(Patriachy system) பெண்வெறுப்பு (Misogyny) போன்ற பல பின்னனியில் ஆராய்ந்து தமது தெளிவான கருத்துக்களை முன்வைத்துள்ளமை அறிவியல் உலகில் வரவேற்கப்படுகிறது.
15, 16, 17 ம் நூற்றாண்டுகளில் சமூகத்தில் மதநம்பிக்கை மிகையாக இருந்தது எனலாம். பொதுவாக கத்தோலிக்க மதமே பின்பற்றப்பட்டு வந்துள்ளதுடன், கத்தோலிக்க ஆலயம், மதபோதகர்களின் கருத்துக்களை பின்பற்றக் கூடியதாகவும் இருந்துள்ளது. இதன் வெளிப்பாடே மதபோதகர் ஹென்றிச் கிராமரால் லத்தின் மொழியில் எழுதப்பட்டு ஜேர்மனியில் வெளியிடப்பட்ட Malleus Maleficarum ( Hammer of witches ) எனும் நூலாகும். இந்நூல் பல மொழிகளிலும், பலதடவை மறுபிரசுரமும் செய்யப்பட்டுள்ளது. பைபிலையும், இந்நூலையும் தொடர்புபடுத்தி மக்களின் மதநம்பிக்கையினை மிக ஆழமாக வலுப்படுத்தியது என்றால் பொறுத்தமானதே. இதனால் மக்கள் சூனியம் பற்றி கூறப்பட்ட எல்லா கட்டுக்கதைகளையும். கண்மூடித்தனமாக நம்பினார்கள். இன்றும் கூட சூனியம், சாஸ்திரங்கள் என மதம் சார்பாக மக்கள் நம்பிக்கை இருக்கவே செய்கிறது.
அடுத்து அக்காலகட்டத்தில் நிலவிய சமூக நெருக்கடிகள்( Social tension )பற்றி பார்த்தால், சமூகமானது பலவித துன்பங்களுக்கு ஒரே நேரத்தில் முகம் கொடுக்க வேண்டியவர்களாக இருந்தார்கள். மிக கடுமையான காலநிலை மாற்றங்கள் குறிப்பாக மழையின்மை, பயிர்செய்கையில் பாதிப்பு, பஞ்சம், வறுமை, அதிகளவு நோய்த்தொற்று, காலனிய நாடுகளாக இருந்தமையால் நடந்த போர்கள், உள்ளூர் குழுக்கள் இடையே குழுமோதல் இவ்வாறு பல்வேறுபட்ட இன்னல்களை கடக்க வேண்டிய கடினமான காலத்தையே கொண்டிருந்தார்கள் எனலாம். இந்த சூனியகார வேட்டையாடுதல் என்பது கிட்டத்தட்ட 300 ஆண்டுகளுக்கு மேலாக நடந்துள்ளது என்பதை வரலாறுகளை விளக்கும் புத்தகங்கள் வாயிலாக அறிய முடிகிறது.
சமூக்கட்டமைப்பு என பார்த்தால் அன்றைய சூழல் (patriarchy ) ஆண்மைய கருத்துக்களால் வடிவமைக்கப்பட்டதாகவே இருந்துள்ளது. அதாவது ஆண் மேலாதிக்கம் செல்வாக்கு பெற்றிருந்தது எனலாம். இங்கு பெண் என்பவள் பால் ரீதியாக ஆணுக்கு கீழ்ப்படிந்து கட்டுப்பட்டவளாகவே இருப்பதே விரும்பப் பட்டது. ஆனால் அன்றய காலத்தில் விஞ்ஞானம் பெரியளவில் வளர்ச்சியின்றி இருந்தமையால் ஆங்கில மருத்துவ வசதிகள் இருக்கவில்லை. குழந்தைபேறு, கருத்தடை, கருக்கலைப்பு , மற்றும் இயற்கை மூலிகை மருந்துகள் என பெண்களே இயற்கை மருத்துவத்துறையில் முன்னேறியவர்களாக இருந்தமை குறிப்பிடத்தக்கது. இப் பெண்கள் சுதந்திரமாகவும், ஆண்களின் கட்டுப்பாட்டை விரும்பாதவர்களாகவே இருந்துள்ளார்கள். பெண்ணிய ஆய்வாளர்கள் சூனிய வேட்டை( witch-hunt )என்பதனை அறிவுபூர்வமாகவே விபரித்துள்ளார்கள். இவர்களில் இன்று பெரிதும் பேசப்படுபவராக Silvia Federici எனும் ஆய்வாளரை குறிப்பிடலாம். இவர் சூனிய காலகட்ட ஆய்வுகளை Caliban and the Witch, Witches Witch-Hunting and Woman போன்ற தமது நூல்களில் விவரித்துள்ளார்.
பண்ணையுடமை சமுதாயத்தில் பெண்களும், ஆண்களும் உழைப்பில் ஈடுபட்டார்கள். குடும்ப நிறுவனத்தில் சுரண்டல் இருக்கவில்லை. பெண்கள் விரும்பியே குழந்தைகளை பெற்றுக் கொண்டார்கள். ஆனால் காலப்போக்கில் நிலவுடமை சமுதாயத்தில் ஆண்கள், பெண்களையும் உடமையாக்குவது நிகழ்கிறது. அக்காலகட்டத்தில் பெண்கள் குழந்தை பேறு, கருக்கலைப்பு, கருத்தடை, வேறு நோய்க்கான மூலிகை மருந்துகள் என மருத்துவத்துறையில் முன்னேறிய நிலையில் சுதந்திரமாக இருந்துள்ளனர். இவர்கள் ஆண்களுக்கு கீழ்படியாமையும், சுதந்திரமும் கொண்டிருந்ததால் ஆண் மேலாண்மை கொண்டவர்கள் பெண்களை தமது கட்டுப்பாட்டிற்குள் கொண்டுவரும் பொருட்டும், பெண்களிடம் இருந்த மருத்துவத்தை பறித்து ஆண்களிடம் கொடுப்பதற்கும் இந்த சூனியவேட்டையை நடத்தியதாக கூறப்படுகிறது. பெண்கள் மருத்துவதுறைக்கு வருவதற்கு மருத்துவபட்டதாரியாக இருத்தல் வேண்டும் எனவும் சொல்லப்பட்டது. அதேநேரம் பெண்களுக்கு பல்கலைக்கழகம் செல்வதற்கு அனுமதியற்ற நிலையும் காணப்பட்டது. சமூகமானது நிலவுடமையில் இருந்து முதலாளித்துவம் நோக்கி நகர்ந்தபோது, ஆண்கள் தொழிற்சாலையிற்கு செல்ல வீட்டில் இருந்து ஒருவர் கவனிக்க வேண்டிய தேவை உருவாகிறது. இத்தேவை பெண்களை வீட்டுக்குள் முடக்குவதன் வாயிலாக பூர்த்தி செய்யப்படுகிறது. இது பெண்களின் விருப்பத்திற்கு மாறாக குடும்பம் என்ற நிறுவனத்தின் ஊடாக குழந்தைகளை பெறுவதும், வளர்ப்பதும் என்றானபோது, குழந்தை பெறுவது, பெண்களுக்கு அன்நியப்பட்டு போகிறது. எனவே Silvia Federici இன் ஆய்வு பெண்களிடைய சுதந்திரமான செயற்பாடானது, ‘சூனியக்காரி’ என்று பெண்களுக்கு எதிரான வன்முறையை கட்டவிழ்த்து விட்டதனால் வீட்டுக்குள் முடக்கப்படும் நிலமை உருவாகிறது. இத்தகைய நிகழ்வு மறைமுகமாக முதலாளித்துவத்தின் மூலதன குவிப்பிற்கே வழிவகுத்தது எனவும் விவரிக்கிறார்.
•<• •Prev• | •Next• •>• |
---|