- சிறப்பான முகநூற் பதிவுகள் அவ்வபோது பதிவுகளில் மீள்பிரசுரமாகும். அவ்வகையான பதிவுகளிலொன்று இப்பதிவு. - பதிவுகள் -
10.11.2019 அன்று மகாவம்சத்தின் இறுதிப் பாகம் பூரணப்படுத்தப்பட்டு பெரிய விழாவொன்றில் அது வெளியிட்டுவைக்கப்பட்டது. பௌத்த பிக்குகளால் ஏற்பாடு செய்யப்பட்ட இந்த நிகழ்வுக்கு தலைமை தாங்க அழைக்கப்பட்டிருந்தவர் ஜனாதிபதி வேட்பாளர் கோட்டபாய. சரியாக ஜனாதிபதித் தேர்தலுக்கு ஒருவாரத்துக்கு முன்னர் தான் இது நிகழ்ந்தது. இலங்கையிலேயே பெரிய இனவாதக் கோட்டை என்று கருதப்படும் கிரிபத்கொட என்கிற பிரதேசத்தில் இது நிகழ்ந்தது. அங்கு தான் களனி பன்சலையும் இருக்கிறது. புத்தரின் மூன்றாவது இலங்கை விஜயம் இந்த களனியில் நிகழ்ந்ததாக மகாவம்சம் சொல்கிறது.
அரசுக்கு வெளியில்; வெவ்வேறு நபர்களால் உரையெழுதப்பட்ட மகாவம்சப் பிரதிகள் சந்தையில் உண்டு. இது கிரிபத்கொட ஞானானந்த தேரர் முதலாவது தொகுதியை மூன்று பகுதிகளாக எளிமையான சிங்கள விளக்கத்தில் வெளியிட்டிருக்கிறார்.
பௌத்த விகாரைகளுக்கும், பாடசாலைகளுக்கும், நூலகங்களுக்கும் இதை இலவசமாக விநியோகிப்பதாக விளம்பரம் செய்து வருகிறார்கள். “சிங்களவர்களே மீண்டும் எழுங்கள்” என்கிற சுலோகத்துடன் அந்த விளம்பரங்கள் உள்ளன.
மேற்படி மகாவம்ச வெளியீடு குறித்து தமிழில் இந்த முக்கிய நிகழ்வு குறித்து செய்தியாகக் கூட எந்த ஊடகங்களிலும் வெளிவரவில்லை என்பது இன்னொரு கதை.
இந்த நிகழ்வை ஏற்பாடு செய்திருந்த கிரிபத்கொட ஞானானந்த தேரரின் உரையில் இப்படி குறிப்பிடுகிறார்.
“சிங்கள இனமின்றி பௌத்தமும் இல்லை. பௌத்தமின்றி சிங்கள இனமுமில்லை. இதனை தெளிவாக்குகின்ற நூலே மகாவம்சம்.”
இனத்தின் ஆதிக்கமும், மதத்தின் ஆதிக்கமும் ஒரு சேர கோலோச்சும் மரபுக்கு மகாவம்சத்தையே அவர்கள் மூலமாகக் கொள்வதை அறிந்திருப்பீர்கள்.
முதல் பிரதியை கோட்டபாயவின் கரங்களில் ஒப்படைத்துவிட்டு ஞானானந்த தேரர் மீண்டும் இப்படி கூறுகிறார்.
“துட்டகைமுனு எல்லாளனுடன் போர் புரிவதற்கு புறப்பட்ட போது மூன்று முக்கிய பௌத்த மந்திரங்களை உச்சாடனம் செய்துகொண்டு சென்றார். இந்த மந்திரங்களை உச்சாடனம் செய்துகொண்டு தான் துட்டகைமுனு எல்லாளனுடனான போரில் வென்றார். இப்போது நாம் எல்லோரும் அந்த உச்சாடனத்தை கோட்டாபய அவர்களின் தலைமையில் செய்யப்போகிறோம். சகல எதிரிகளையும் வீழ்த்தி அரசை அமைப்பதற்கு பௌத்த முப்பீடங்களின் ஆசீர்வாதம் கிடைக்கும்.”
நன்றாகக் கவனியுங்கள் தேர்தல் பிரச்சாரம் சூடுபிடித்த இறுதிவாரத்தில் இந்த மந்திரங்களை ஓதச்சொல்கிறார்.
இதனைத் தொடர்ந்து அத்தேரர் அம்மந்திரங்களைக் கூறக் கூற கோட்டபாய மீளக் கூறுகிறார்.
பின்னர் மகாவம்சத்தின் உள்ளடக்க கதைகளைப் பற்றி அவர் அரை மணித்தியாலத்துக்கும் மேல் ஒரு உரையை ஆற்றுகிறார். அதில் தொடர்ச்சியாக தமிழ் ஆக்கிரமிப்பாளர்களைப் பற்றியும் அவர்களை சிங்கள அரசர்கள் எப்பேர்பட்ட வீரத்துடன் போரிட்டு விரட்டியடித்தார்கள் என்பதைப் பற்றியும் விளக்குகிறார். அப்படியே ஓரிடத்தில் “இலங்கை – இந்திய உடன்படிக்கை செய்துகொண்ட போது திருகோணமலை சீன துறைமுகத்தில் இருந்த பௌத்த விகாரையின் விகாராதிபதி; அந்த ஒப்பந்தத்தை எதிர்த்து கோசம் எழுப்பிய சிங்களவர்களை தணிக்க முயற்சித்த வேளை; இந்தியப் படைகளை எதிர்க்க தூண்டினார் என்று சந்தேகித்து அத்தேரரை அங்கேயே சுட்டுக்கொன்றனர்” என்று ஒரு புழுகை உணர்ச்சிபொங்க அவிழ்த்துவிடுகிறார். தலையை மேலும் கீழும் ஆட்டியபடி அதனை கோட்டபாய ஆமோதிப்பதை காணொளி காட்டுகிறது.
இதில் உள்ள வேடிக்கை என்னவென்றால் இந்திய இலங்கை ஒப்பந்தம் செய்துகொள்ளப்பட்டவேளை இந்திய அமைதி காக்கும்படை இலங்கைக்கு வந்திருக்கவில்லை என்பது தான். (1)
இதன்மூலம் அவர் கூற வருவது என்னவெனில் அமெரிக்காவுடனான மில்லேனியம் செலேன்ஜ் கொப்பரேஷன் (MCC) உடன்படிக்கையை இரத்து செய்யவேண்டும் என்றும் இலங்கை இந்திய ஒப்பந்தத்தை விட மோசமான ஒப்பந்தம் இது என்றும் கூறுகிறார். கோட்டபாய அதற்கும் தலை அசைக்கிறார். இப்போது கோட்டபாயவின் ஆட்சி அமைக்கப்பட்டுள்ள நிலையில் தென்-மத்திய ஆசியப் பிராந்தியப் பொறுப்பாளரான எலிஸ் ஜே.சார்ல்ஸ் அந்த ஒப்பந்தம் எந்தவித தடையுமின்றி நடைமுறைப்படுத்தப்படும் என்று நவம்பர் 25 அன்று தெரிவித்திருந்தார்.
கோத்தபாயவின் தேர்தல் வெற்றிக்கான வேலைத்திட்டத்தில் பிக்குமார் பல்வேறு முனைகளின் பங்கெடுத்திருந்தார்கள். அப்பேர்ப்பட்ட ஒரு கூட்டம் தான் மேற்படி மகாவம்ச நூல் வெளியீட்டுக் கூட்டம்.
கோத்தபாயவின் வெற்றிக்காக இம்முறை பன்சலைகளை மையப்படுத்திய ஆதரவுத் திரட்டல் எப்படி நிகழ்ந்தது என்பது பற்றி தனியாக விபரிக்கலாம். அங்கிருந்தே சிங்கள பௌத்த வாக்குகளை முழுமையாகக் கைப்பற்றுவதற்கான வலைப்பின்னல் கட்டமைக்கப்பட்டது. உள்ளூராட்சி சபை உறுப்பினர்களைக் கட்டுப்பாட்டுக்குள் கொண்டுவந்து அவர்களின் மூலம் அடிமட்ட மக்களிடம் போய் சேர்த்தார்கள், பணத்தாலும் நம்பிக்கையாலும், அமைப்பாளர்களை தமது கட்டுப்பாட்டுக்குள் கொண்டு வந்து களத்தில் இறக்கினார்கள். இவற்றுக்கெல்லாம் “சிங்கள பௌத்தத்தைப் பாதுகாக்க இருக்கும் ஒரே தலைவர்”, “இறுதி சந்தர்ப்பம்” என்றெல்லாம் தான் பிரச்சாரங்கள் முடுக்கிவிடப்பட்டன.
மகாவம்சத்தில் கோட்டாபய
கோட்டாபய என்கிற பெயர் சிங்களத்தில் மிகவும் அரிது. இந்தப் பெயரின் மூலத்தைப் பற்றி அறிகிற போது மகாவம்சத்தில் வரும் முக்கிய பாத்திரமாக அப்பெயர் இருப்பதை அறிய முடிகிறது.
துட்டகைமுனுவின் தந்தை தான் காவன்திஸ்ஸ (தமிழில் பல இடங்களில் காக்கவண்ணதீசன் என்றும் அழைக்கப்படுகிறார்). காவன்திஸ்ஸவின் தகப்பனின் பெயர் தான் கோட்டபாய. அதாவது துட்டகைமுனுவின் பாட்டனார் தான் கோட்டபாய.
அந்தக் காலப்பகுதியில் அரசன் காவன்திஸ்ஸ தமிழ் அரசனுக்கு திறை செலுத்திவந்தான்” என்று “ராஜாவலிய” கூறுகிறது. (2)
மகாநாம தேரர் எழுதிய மகாவம்சத்தின் முதலாவது மூலத் தொகுதியில் அதிகப்படியான இடங்கள் துட்டகைமுனுவை நாயகனாகக் கொண்ட கதைகள் இருப்பதைக் காணமுடியும். பல சாகசவாதக் கதைகள் நிரம்பிய அந்த பாத்திரத்தின் பிரதான மையக் கதை தமிழ் மன்னன் எல்லாளனைத் தோற்கடிப்பதே. எல்லாளனைத் தோற்கடிப்பதற்காக துட்டகைமுனு மேற்கொள்ளுகிற போர்த் தயாரிப்புகள் குறித்தே அதிகம் நிறைய கூறப்படுகின்றன. மொத்த 37 அத்தியாயங்களில் 15-32 வரையான 16 அத்தியாயங்களைக் கொண்டது அப்பகுதி.
மகாவம்சத்தின் 23வது அத்தியாயம் துட்டகைமுனுவின் படையில் இருந்த அதி முக்கிய பத்து இராட்சச மல்லர்கள் பற்றிய பின்னணி குறித்து 103 செய்யுள்களில் விபரிக்கப்படுகிறது. சிங்களத்தில் இவர்களை “தச மகா யோதயோ” என்று அழைப்பார்கள்.(3) இவர்களை மன்னர் காவன்திஸ்ஸ ஒவ்வொருவராக அடையாளம் கண்டு அவர்களை துட்டகைமுனுவிடம் எப்படி சேர்க்கிறார் என்பது பற்றித் தான் அந்த 23வது அத்தியாயம் விபரிக்கிறது. மேலும் அவர்கள் ஒவ்வொருவரையும் சிறந்த பத்துப் போர்வீரர்களைத் தெரிந்து சேகரிக்குமாறு பணிக்கிறார் காவந்திஸ்ஸ. இப்படி அந்த நூறு பேரும் மேலும் பத்து போர் வீரர்களைத் தெரிவு செய்கிறார்கள். இந்த வழிமுறையின் மூலம் இறுதியில் பதினோராயிரத்து நூற்றுப்பத்து வீரர்களைக் கொண்ட சேனையை உருகுனுவில் கட்டியெழுப்பியதாக மகாவம்சம் கூறுகிறது (அத்தியாயம் 23இல் 98-100வரையான செய்யுள்கள்). காவந்திஸ்ஸவின் இந்த ஆட்சேர்ப்பு உத்தியை அவருக்கு முன்னர் அவரது தகப்பன் கோட்டபாயவும் இதே போன்று பத்து இராட்சச மல்லர்களைப் போர்த் தளபதிகளாக வைத்துக்கொண்டு தான் உருகுணு ராஜ்ஜியத்தைப் பாதுகாத்தார் என்கிறது மகாவம்சம்.
இந்த பிரதான இராட்சத மல்லர்கலான நந்தமித்ர, வேலுசுமன, மகாசோன, கோட்டைம்பர, லுஸ்ஸதேவ, லப்பியவசப, கஞ்சதேவ, தேரபுத்தாபய, சுரநிமலஹரன ஆகிய இந்த பத்து பேரின் பெருமைகளையும், வீரப்பிரதாபங்களையும் அந்த அத்தியாயம் விபரிக்கிறது. இதை மேலும் விரிவாக்கி “தசமகா யோதயோ” என்கிற தலைப்பில் பல நூல்கள் சிங்களத்தில் வெளியிடப்பட்டிருக்கின்றன. இவர்களைப் பற்றி தனித்தனியாக சிறுவர்களுக்கான சித்திரக் கதைகளாகவும் பல சிறு நூல்கள் உள்ளன. கல்வி அமைச்சின் பாடத்திட்டத்திலும் இவர்கள் பற்றிய விபரங்கள் சிங்களத்தில் உள்ளன.
மேற்படி 23வது அத்தியாயத்தில் 55-63வது வரையான செய்யுள்கள் கோட்டபாய சேர்க்கப்பட்ட விபரம் காணப்படுகிறது.
“கிரி எனும் பிரதேசத்தில் வித்திக என்கிற கிராமத்தில் மகாநாக என்பவனின் மகனொருவன் பத்து யானைகளின் பலத்தைக் கொண்டிருந்தான். குள்ளமான உருவத்தை அவன் கொண்டிருந்ததால் கோதக என்று அவனை அழைத்தார்கள். அவனது ஆறு சகோதரர்களும் அவனைக் கேலி செய்வது வழக்கம். (இன்றைய கோட்டபாய சகோதர்களும் 6 பேரைக் கொண்டவர்கள் என்பதும் வியப்புதான்.) ஒருமுறை பயிரிடுவதற்காக சென்றிருந்தவேளை அவன் செய்யவேண்டிய பகுதியை விட்டுவிட்டு வந்திருப்பதாகக் கூறினார்கள். உடனே அங்கு சென்ற கோதகன் அங்கு இருந்த “இம்பர” மரங்களைப் பிடுங்கி எறிந்து தரையை மட்டப்படுத்திவிட்டு வந்தான்.
அவன் செய்த அதிசய வேலையைப் பார்த்து வியந்த சகோதரர்கள் அவனைப் புகழ்ந்தனர். இதனால் அவனுக்கு “கோதைம்பர” என்கிற பெயர் கொண்டு அழைத்தனர். கோத்தபாய என்றும் அவன் அழைக்கப்பட்டான். கோத்தபாயாவைப் பற்றி கேள்வியுற்ற அரசன் அவனை அழைத்து கெமுனுவுடன் (துட்டகைமுனு என்கிற பெயர் பின்னர் தான் வருகிறது.) இருக்குமாறு கட்டளையிட்டான்.
மகாவம்சத்தின்படி எல்லாளனுடனான போரில் முக்கியமான சமர் விஜிதபுரத்தில் நான்கு மாதம் நடக்கிறது. நான்குமாதங்கள் முற்றுகையில் இருந்த இந்த நகரம் மூன்று அகழிகளாலும், பெரும் சுவரினாலும் பாதுகாக்கப்பட்டிருந்தது. தெற்குவாயிலைக் பாதுகாத்து வந்தவன் எல்லாளனின் படையில் இருந்த இராட்சச உருவத்தைக் கொண்ட சீர்ஷகுண்ட என்கிற தமிழன். அவனை எதிர்கொள்ள கோட்டபாயவை துட்டகைமுனு அனுப்புகிறான். கோட்டபாய இரண்டு ஆளுயரத்துக்கு மேலே பறந்து தனது வாளால் சீர்ஷகுண்டனின் தலையை சீவி வேறாக்கி பறக்கவிடுகிறான். விஜிதபுரத்தை வெற்றி கொள்வது அதன்பின்னர் தான் சாத்தியமாகின்றது. ஒரு மரத்தைப் பிடுங்கி சுழற்றி சுழற்றி வீசியடித்து எல்லாளனின் படையை துவம்சம் செய்தானாம் கோட்டபாய.
போர் வெற்றியின் பின்னர் துட்டகைமுனு பல பரிசுகளையும் நிலங்களையும் கோட்டபாயவுக்கு வழங்குகிறான். கோட்டபாய பாரிய அளவு விவசாயத்தில் ஈடுபடுகிறான். அவனே கட்டிய குளத்துக்கு “கோட்டைம்பர குளம்” என்று அழைக்கப்பட்டது. பிற்காலத்தில் அங்கே கோட்டபாயவை சிறுதெய்வமாக வழிபட்டனர் அங்கிருந்த மக்கள்.
தனது அழகிய மனைவியை அடைய முற்பட்ட ஒரு அரக்கக் குல தலைவனைச் சண்டைக்கு வரவழைத்து அவனைக் கொன்றுபோட்ட கோட்டபாய பின்னர் அந்த வெற்றியைக் களிப்பதற்காக மதுவருந்திவிட்டு தனது சகாக்களுடன் துட்டகைமுனுவைக் காணவந்தபோது தூரத்திலிருந்தே அவனின் வரவை தடுத்து திருப்பியனுப்பி விட்டான் துட்டகைமுனு. அப்படி விரட்டப்பட்டதால் மனம் நொந்து அன்றைய தினமே நாகதீபத்துக்குச் சென்று அங்கிருந்து இந்தியாவிலுள்ள காவேரிப்பட்டினத்துக்குச் சென்று பின்னர் இமாலய அடிவாரத்துக்குச் சென்று துறவியாக மாறியதாக தூபவம்சம் குறிப்பிடுகிறது.
ஆக கோட்டபாய என்கிற பெயருக்குப் பின்னால் இருந்த சரித்திர முக்கியத்துவமும், மகாவம்ச வரலாற்றுப் பாத்திரத்தின் ஒப்புமையும் இன்றைய கோத்தபாயவுடன் ஒப்பிடுகிறது சிங்கள பௌத்த தரப்பு. எல்லாளனையும் 32 தமிழ் மன்னர்களையும் தோற்கடித்து இலங்கையைச் சிங்கள பௌத்த குடையின் கீழ் ஒன்றுபடுத்திய துட்டகைமுனுவுக்குப் பின்னர் பிரபாகரனைத் தோற்கடித்து இலங்கையை ஐக்கியப்படுத்திய தலைவனாக கோத்தபாயவைக் கொண்டாடுகிறது சிங்களத் தரப்பு.
கோட்டபாயவின் மகாவம்சம்
துட்டகைமுனு தனது வெற்றியின் பின் எந்த அனுராதபுரத்துக்கு பெரும் படைகளுடனும், மக்கள் கூட்டத்துடனும் வந்து கொண்டாட்டத்துடன் முடிசூட்டிக்கொண்டானோ அதே அனுராதபுரத்தில் துட்டகைமுனுவால் கட்டப்பட்ட ருவன்வெலிசாய தூபம் அமைந்துள்ள பகுதியில் தேர்தல் வெற்றியுடன் சென்ற கோத்தபாய அங்கே பெருமளவு ஆதரவாளர்கள் புடைசூழ தனது சத்தியப்பிரமாணத்தை செய்துகொண்டது தற்செயல் நிகழ்வல்ல என்பதை நாம் கவனிக்கவேண்டும். (4)
அதே சத்தியப்பிரமாண உரையில் தான் சிங்கள பௌத்த வாக்குகளால் தெரிவு செய்யப்பட்டவன் என்று கோத்தபாய வெளியிட்ட கருத்தும்கூட இனிவரும் காலத்தைப் பற்றிய நாசூக்காக ஆரூடம் சொல்லும் குறியீட்டுக் வெளிப்பாடு தான்.
பதவிக்கு வந்ததுமே நவம்பர் மாத இறுதியில் தனது முதலாவது வெளிநாட்டு விஜயமாக இந்தியாவுக்குச் சென்றிருந்த போது அங்கு தி ஹிந்து பத்திரிகைக்கு வழங்கிய நேர்காணலில் (5) “சிங்கள மக்களின் விருப்பமின்றி அதிகாரப் பகிர்வு கிடையாது” என்றும் “13வது திருத்தச் சட்டத்தை முழுமையாக அமுல்படுத்தப்போவதில்லை என்றும் அது பெரும்பான்மை (சிங்கள) மக்களின் விருப்புக்கு எதிரானது” என்றும் குறிப்பாக “பொலிஸ் அதிகாரத்தை வழங்குவது போன்றவற்றைச் செய்யவே முடியாது” என்றும் அவர் தெரிவித்திருந்தார். தமிழர்களுக்குக் குறைந்தபட்ச சொற்பத் தீர்வைக் கூட வழங்கமாட்டேன் என்கிற இந்த அறிவிப்பை அவர் சிங்களத்தில் செய்யவில்லை ஆங்கிலத்தில் செய்திருக்கிறார். அதன் மூலம் உலகுக்குத் துணிச்சலாக சொல்லியிருக்கிறார். அவர் இலங்கையில் கூறவில்லை எந்த இந்தியா அந்த அதிகாரத்தை வழங்கவேண்டும் என்று உடன்பாடு பெற்றிருந்ததோ அதே இந்தியாவிடம், இந்தியாவில் வைத்து அதுவும் பிரதமர் மோடி அதிகாரப்பரவலாக்கம் குறித்து உரையாடிய கையோடு வந்து கூறியிருப்பதைக் கவனிக்க வேண்டும். இது சிங்கள பௌத்த வாக்குகள் கொடுத்த தைரியம் என்பதை நினைவிற் கொள்ள வேண்டும். (6)
என்று இந்திய ஊடகமான “Headlines Today” என்கிற தொலைக்காட்சிக்கும் (11.08.2011) பகிரங்கமாக நேர்காணல் கொடுத்திருந்தார்.
சிங்கள பௌத்த சக்திகள் இப்போது பகிரங்கமாகக் கூறும் ஒரு கதையுண்டு. அதாவது
“உலகிலேயே தோற்கடிக்க முடியாத புலிகள் இயக்கத்துடன் போர் செய்து வெற்றி பெற முடியாது பேச்சுவார்த்தை நடத்துங்கள் என்று அமெரிக்கா, ஐரோப்பா உள்ளிட்ட பல நாடுகள் எங்களுக்கு எச்சரிக்கை செய்தபோது அவர்களையெல்லாம் கணக்கிற்கொள்ளாமல் யுத்தத்தை முன்னெடுத்து அவர்களை முழுமையாக அழித்துக் கட்டினோம். அது போலத் தான் சிறுபான்மை இனங்களின் ஆதரவின்றி இலங்கையின் அரச தலைவர் தெரிவாக முடியாது என்று சொல்லிக்கொண்டிருந்ததை உடைத்துத் தனிச் சிங்கள பௌத்த மக்களால் இலங்கையின் தலைவரை தெரிவு செய்ய முடியும் என்பதையும் நிரூபித்துக் காட்டியிருக்கிறோம்”
என்கிறார்கள்.
இந்த துணிச்சலுடன் தான் தற்போது கோத்தபாய தனது சிங்கள பௌத்த நிகழ்ச்சி நிரலை நிறைவேற்றத் தொடங்கியிருக்கிறார்.
2015 ஆம் ஆண்டுக்கு முன்னர் இருந்த கோத்தபாய அல்ல இப்போதிருக்கும் கோத்தபாய. இந்த ஐந்து வருடங்களுக்குள் எதிரியைப் பற்றியும், தனக்கெதிராக வளர்ந்தெழுந்திருந்த கருத்துக்களைப் பற்றியும் அறிந்தும், கற்றும் வியூகங்களை மாற்றியமைத்துக்கொண்டு களமிறங்கிய கோத்தபாயவே இன்றைய கோத்தபாய. இப்போது அவரால் ஒரு செயற்கைப் புன்னகையைப் பேணியபடி வளம் வர முடிகிறது. கண்டபடி வாயிலிருந்து ஆத்திரங்களோ, ராஜதந்திரமற்ற கருத்துக்களோ வெளியிடப்படுவதில்லை. கூலிக்கமர்த்தப்பட்ட தேர்ந்த கலைஞர்களால் உடல்மொழி கட்டமைக்கப்படுகிறது.
ஆனால் இந்த புறத்தோற்றத்துக்குப் பின்னால் ஒளிந்திருக்கும் கோத்தபாயவின் சிங்கள பௌத்த அராஜக அகத் தோற்றத்தை நாம் அவரால் நடைமுறைப்படுத்தப்படுகின்றவற்றைக் கொண்டு தான் காண்கிறோம். எனவே தான் பெருவாரி சிங்கள பெளத்தர்களைக் கொண்ட (முஸ்லிம்கள் அற்ற) அமைச்சரவை, தனிச்சிங்கள தேசிய கீத அறிவிப்பு, இராணுவமயப்படுத்தும் வேலைத்திட்டம் அனைத்தும் கோத்தபாயவின் நிர்வாகத்தில் நிகழ்கிறது. கோத்தபாய இது குறித்து நேரடியாக எல்லாம் கருத்து கூறி அம்பலப்படமாட்டார்.
கோத்தபாயவின் அராஜக நடவடிக்கைகளுக்கு விளக்கம் கூறுவதைப் பௌத்த பீடங்கள் கேயேற்றுள்ளதைக் கவனிக்க வேண்டும். சுவிஸ் தூதுவராலய ஊழியர் விவகாரத்துக்கும் பௌத்த பிக்குகள் தான் சுவிஸ் தூதுவராலயத்தை கடிந்து கண்டனம் வெளியிடுவார்கள்.
தேர்தலுக்கு முன்னர் அமெரிக்க MCC ஒப்பந்தத்தை எதிர்த்து பிரச்சாரம் செய்த அதே பிக்குகள் தேர்தலுக்குப் பின்னர் அதைப் பூசி மெழுகி நியாயப்படுத்தி அதன் அவசியத்தை வலியுறுத்தி கோத்தபாய அதைச் செய்தல் சரியாகத் தான் இருக்கும் என்று ஊடகப் பிரச்சாரங்களை முன்னெடுக்கிறார்கள்.
சிங்கள பௌத்த சித்தாந்தத்துக்கு கடந்த மூன்று தசாப்தகாலமாக தலைமையேற்று புலிகளையும் தோற்கடிப்பதில் பெரும் பங்கு வகித்த சம்பிக்க ரணவக்கவின் கைதைக் கூட அவரால் வளர்த்தெடுக்கப்பட்ட சிங்கள பௌத்த பிக்கு தரப்பு நைசாக விலகிக் கொள்வதும், அக்கைதை நியாயப்படுத்துவதையும் இந்த மகாவம்சப் பிறழ்வைக் கொண்ட பிக்குகள் தான் செய்கிறார்கள். இன்னொருவகையில் கோத்தபாய இன்று ஏறி நிற்கும் தளத்துக்கான அத்திவாரத்தை அன்றே இட்டுக்கொடுத்தது சம்பிக்க தான் என்று கூட கூறலாம்.
பிக்குமாரே கோத்தபாயவைப் பாதுகாக்கவும், நியாயப்படுத்தவும், போராடவும் முன்னணி படையாக பிக்குகள் இன்று களத்தில் இறக்கிவிடப்பட்டுள்ளனர் அன்றைய மகாவம்சத்தைப் போல.
டிசம்பர் 10ஆம் திகதியன்று வெளியிடப்பட்ட வர்த்தமானிப் பத்திரிகையின் மூலம் அரச நிறுவனங்கள் அனைத்தும் பல்வேறு அமைச்சரவைகளுக்குப் பிரிக்கப்பட்டன. (7) அப்படிப் பிரிக்கப்பட்டவற்றுள் 168 நிறுவனங்களை ராஜபக்ச குடும்பத்தின் கீழ் கொண்டுவந்தனர். 12 அமைச்சர்களுக்குப் பகிரப்படவேண்டிய 290 நிறுவனங்களில் மகிந்தவுக்கு 88, சமல் ராஜபக்சவுக்கு 39, கோத்தபாயவுக்கு 31 என மொத்தம் 168ஐயும் பிரித்துக்கொண்டனர். இத்தகைய அராஜங்ககள் மீண்டும் அரங்கேறியபோது கூட அவர்களைப் பாதுகாப்பது கோத்தபாய “ஹிட்லராகி இந்த நாட்டை ஆளவேண்டும்” என்று கருத்து வெளியிட்ட அதே பௌத்த பிக்குச் சமூகம் தான். (8)
மகாவம்சம் குறித்து மாற்று கருத்துக்கள் வைத்ததால் முன்னாள் முதலைச்சர் விக்னேஸ்வரனுக்கு எதிராக வழக்குகள் தொடரப்பட்டிருக்கின்றன. அவருக்கு எதிரான ஊடக சந்திப்புகள், பத்திரிகைக் கண்டனங்கள், கூட்டங்கள், ஆர்ப்பாட்டங்கள், கொடும்பாவி எரிப்பு, எல்லாம் அரங்கேறுகின்றன. இவை அனைத்துமே “மகாவம்சத்தின் இன்றைய நாயகன்” கோத்தபாயவின் ஆசீர்வாதத்தில் நிகழ்பவை.
சகல இன இலங்கையர்களும் தம்மை சக இலங்கையர்களாகக் கருதிக்கொள்வதற்கு மகாவம்ச முட்டுக்கட்டையின் விபாகத்தைக் குறைத்து மதிப்பிட்டுவிடமுடியாது. மகாவம்ச புனிதக் கற்பிதங்கள் கொலோச்சும்வரை கோத்தபாயக்கள் அவற்றில் குளிர்காயவே செய்வார்கள்.
நன்றி - தினக்குரல்
அடிக்குறிப்புகள்
29.07.1987 அன்று தான் இலங்கை இந்திய ஒப்பந்தம் செய்துகொள்ளப்பட்டது. அடுத்த நாள் 30ஆம் திகதியே இந்திய படையின் ஒரு பகுதியினர் (54வது படைப்பிரிவு) பலாலி விமானத்தளத்தில் வந்திறங்கியது என்பதும் உண்மை தான். ஆனால் அவர்கள் அவ்வளவு விரைவாக தமது படைகளை சகல இடங்களுக்கும் விரிவுபடுத்தவுமில்லை அடாவடித்தனங்களையும் அந்தளவு வேகமாக ஆரம்பித்திருக்கவில்லை.
ஏ.வீ.சுரவீர தொகுத்த –“ராஜாவலிய”. சிங்கள மூலம் . (ப.175) – கல்வி வெளியீட்டுத் திணைக்களம் – 1976.
கலாநிதி சிறி நிஸ்ஸங்க பெரேரா – “දසමහා යෝධයෝ” - (தச மகா யோதயோ - பத்து இராட்சதர்கள்) - சரசவி பதிப்பகம் - 2006 - இந்த நூல் பாடசாலைகளுக்கான நூலக நூலாக கல்வி அமைச்சு சான்றிதழ் வழங்கிய நூல் என்கிற அறிவித்தலுடன் வெளியிடப்பட்ட நூல்.
ருவன்வெலிசாய என்பது, அநுராதபுரத்தில் அமைந்துள்ள மிகப்பெரியபௌத்த தாதுகோபமாகும். புத்தரின் நினைவாக மகத்தான தாதுக்கொபுரமொன்றை கட்டுவது என்பது துட்டகைமுனுவின் பெருங்கனவு. அதன்படி அத் தாதுக்கோபுரத்தை ஸ்தாபிக்கும் பணிகள் துட்டகாமினியால் ஆரம்பிக்கப்பட்டது. ஆனால், இதன் கட்டுமானத் திட்டம், துட்டகைமுனுவின் காலத்துக்குப் பல நூற்றாண்டுகள் முன்னரே, மஹிந்த தேரரால், தேவநம்பியதீசனுக்கு உரைக்கப்பட்டிருப்பதாக, கல்வெட்டு ஆதாரங்களை, சில வரலாற்றாய்வாளர்கள் குறிப்பிடுகிறார்கள். ருவன்வெலிசாயவைக் கட்டுவதற்காக, மன்னன் துட்டகைமுனு, தனது இராச்சியத்தில் 1,000க்கும் மேற்பட்ட கிராமங்களிலிருந்து, ஆதரவைத் திரட்டியதாக மகாவம்சம் கூறுகிறது. ஒட்டுமொத்த இராச்சியமும் ருவன்வெலிசாயவின் கட்டுமானத்தில் பங்கேற்றது. ஆனால், ருவன்வெலிசாயவின் கட்டுமானப்பணிகளை நிறைவுசெய்வதற்குள் துட்டகைமுனுவின் உயிர் பிரிந்தது. துட்டகைமுனுவுக்குப் பின் பதவியேற்ற துட்டகைமுனுவின் தம்பி சதாதிஸ்ஸவால் ருவன்வெலிசாயவின் கட்டுமானப் பணிகள் நிறைவுசெய்யப்பட்டன.
“Will be frank with New Delhi to avoid misunderstandings: Gotabaya Rajapaksa” – The Hindu – 30.11.2019
இப்படித்தான் இதுபோலவே இதற்கு முன்னர் கோத்தபாய பாதுகாப்பு செயலாளராக இருந்த போது யுத்தத்தை முடித்த ஒன்றரை வருடத்தில் “இனி தமிழர்களுக்கு அதிகாரப் பகிர்வு கிடையாது” என்று இந்திய ஊடகமான “Headlines Today” என்கிற தொலைக்காட்சிக்கும் (11.08.2011) பகிரங்கமாக நேர்காணல் கொடுத்திருந்தார்.
10.12.2019 அன்று வெளியான 2153/12 ஆம் இழக்க வர்த்தமானிப் பத்திரிகையில் வெளியான இந்த அறிவிப்பில் அரசியலமைப்பின் 46 (1) ஆம் இலக்க உறுப்புரையின் பிரகாரம் ஜனாதிபதிக்கு வழங்கப்பட்ட அதிகாரத்தின் பேரில் இது மேற்கொள்ளப்பட்டதாக அந்த வர்த்தமானிப் பத்திரிகை அறிவித்தது.
20.06.2018 அன்று கோத்தபாயவின் பிறந்தநாளையிட்டு அவருக்கு பௌத்த ஆசீர்வாதம் வழங்கும் நிகழ்வும் அன்னதான நிகழ்வும் ஒழுங்கு செய்யப்பட்டிருந்தது. இந்த நிகழ்வுக்கு ராஜபக்ச குடும்பத்தினர் அனைவரும் கலந்துகொண்டிருந்தனர். அங்கு பௌத்த ஆசீர்வாதம் வழங்கவென வந்திருந்த வெண்டறுவே உபாலி தேரர் “சிலர் உங்களை ஹிட்லர் என்று வர்ணிக்கிறார்கள். ஆனால் நீங்கள் ஹிட்லராக ஆகியேனும் நீங்கள் இந்த நாட்டை ஆளவேண்டும் என்பதே மகாசங்கத்தினரின் விருப்பம்” என்று தனது ஆசீர்வாத உரையில் தெரிவித்திருந்தார்.
•<• •Prev• | •Next• •>• |
---|