எழுத்தாளரும் , அறிவியல் அறிஞருமான ஜெயபாரதன் அவர்கள் கவிஞர் ரவீந்திரநாத் தாகூரின் கீதாஞ்சலிக் கவிதைகளைத் தமிழாக்கம் செய்துள்ளார். மிகுந்த வரவேற்பைப்பெற்ற அக்கவிதைகள் திண்ணை இணைய இதழில் வெளியானவை. பின்னர் நூலுருப்பெற்றவையும் கூட. அவற்றை மீள்பிரசுரமாகப் பதிவுகளில் வெளியிடுகின்றோம். சில மீள்பிரசுரங்கள் உலக இலக்கியத்தின் வளத்தை அறிவதற்கு உரியவை. இம்மொழிபெயர்ப்பும் அத்தகையது. இக்கவிதைகளுக்காகவே அவர் இலக்கியத்துக்கான நோபல் பரிசினைப் பெற்றவரென்பதும் குறிப்பிடத்தக்கது.
இவரைப்பற்றி குறிப்பாக இக்கவிதைகளைப்பற்றி 'இரவீந்திரநாத் தாகூர்' என்னும் விக்கிபீடியாக் கட்டுரை பின்வருமாறு குறிப்பிடுகின்றது:
" கீதாஞ்சலி எனும் கவிதைத் தொகுப்பின் ஆசிரியர் ஆவார். [3] இந்த கவிதைத் தொகுப்பிற்காக இவர் 1913-ல் இலக்கியத்திற்கான நோபல் பரிசு பெற்றார். இலக்கியத்திற்கான நோபல் பரிசு பெற்ற முதல் ஆசியர் இவரே ஆவார். மேலும் ஐரோப்பியர் அல்லாத ஒருவர் இந்த விருதைப் பெறுவதும் இதுவே முதல் முறையாகும்.[4] தாகூரின் படைப்புகள்ஆன்மீகததை அடிப்படையாகக் கொண்டதாக இருந்தது. இருந்த போதிலும் இவரின் படைப்புகளில் இருந்த நேர்த்தியான உரைநடையும், கவிதையின் மாயத் தன்மையும் வங்காளத்திற்கு மட்டுமல்லாது அனைத்துத் தரப்பிற்கும் பொருந்தக் கூடியதாக இருந்தது.[5]சில நேரங்களில் இவர் வங்காளக் கவி எனவும் அறியப்படுகிறார்.[6] இந்தியாவின் தேசியகீதமான ஜன கண மன பாடலை இயற்றியவரும் இவரே. . இவருடைய மற்றொரு பாடல் அமர் சோனார் பங்களா வங்காளதேசத்தின் தேசிய கீதமாக ஏற்றுக்கொள்ளப்பட்டது. இவரது நூல்களில் சிலவற்றை த. நா. குமாரசாமி தமிழில் மொழிபெயர்த்துள்ளார்." - பதிவுகள் -
காவியக் கவியோகி தாகூர் (1861-1941)
பாரத நாட்டில் இராமயணம் எழுதிய வால்மீகி, பாரதம் படைத்த வியாசர் ஆகியோருக்குப் பிறகு ஆயிரக் கணக்கான பாக்களை எழுதியவர், இதுவரைத் தாகூரைத் தவிர வேறு யார் இருக்கிறார் என்று தெரியவில்லை எனக்கு. எண்பது ஆண்டுகள் சீருடன் வாழ்ந்த தாகூரின் அரிய காவியப் படைப்புகள் சுமார் அறுபது ஆண்டுகளுக்கு நீடித்தன. கவிதை, நாடகம், இசைக்கீதம், கதை, நாவல், என்னும் பல்வேறு படைப்புத் துறைகளில் ஆக்கும் கலைத் திறமை கொண்ட தாகூருக்கு ஈடிணையானவர் உலகில் மிகச் சிலரே! ஏழை படும்பாடு (Les Miserables), நாட்டர் டாம் கூனன் (The Hunchback of Notre Dame) போன்ற நாவல்கள் எழுதிய, மாபெரும் பிரெஞ்ச் இலக்கியப் படைப்பாளி விக்டர் ஹூகோ [Victor Hugo (1802-1885)] ஒருவர்தான் தாகூருக்குப் படைப்பில் நிகரானவர் என்று சொல்லப்படுகிறது.
1913 ஆம் ஆண்டில் அவரது ஆங்கிலக் கீதாஞ்சலி இலக்கியத்துக்காக நோபெல் பரிசு பெற்றவர் இரவீந்தரநாத் தாகூர். அவர் ஒரு கவிஞர், இசைப் பாடகர், கதை, நாவல் படைப்பாளர், ஓவியர், கல்வி புகட்டாளர், இந்தியாவிலே வங்காள மொழியில் மகத்தான பல காவிய நூல்கள் ஆக்கிய மாபெரும் எழுத்தாளர். இரண்டாயிரத்துக்கும் மேற்பட்ட இசைப் பாடல்கள், ஆயிரத்துக்கும் மேற்பட்ட கவிதைகள், ஏறக் குறைய இருபது பெரு நாடகங்கள், குறு நாடகங்கள், எட்டு நாவல்கள், எட்டுக்கு மேற்பட்ட சிறுகதைத் தொகுப்புத் தொடர் நூல்கள் எழுதியவர். எல்லாப் பாடல்களை எழுதி அவற்றுக்கு ஏற்ற மெட்டுகளையும் இட்டவர் தாகூரே. அத்துடன் அவரது ஓவியப் படைப்புகள், பயணக் கட்டுரைகள், ஆங்கில மொழிபெயர்ப்புகள் ஆகியவற்றையும் சேர்த்துக் கொள்ள வேண்டும்.
பாரதியாரைப் போல் மாபெரும் தேசீயக் கவியான தாகூர், தேசப்பிதா காந்தியின் மீது மதிப்புக் கொண்டவர். காந்திக்கு “மகாத்மா” என்னும் பட்டம் அளித்தவர் தாகூர் என்பது பலருக்குத் தெரியாது. நோபெல் பரிசு பெற்ற தாகூருக்குப் பிரிட்டிஷ் அரசாங்கம் 1915 இல் நைட்கூட் (Knighthood) கௌரவம் அளித்தது. ஆனால் 1919 இல் ஜாலியன் வாலா பாக் தளத்தில் ஆயுதமற்றுப் போராட்டம் நடத்திய 400 மேற்பட்ட இந்திய சீக்கியரைப் பிரிட்டிஷ் படையினர் சுட்டுக் கொன்ற பிறகு தாகூர் அவர்கள் அளித்த கௌரவப் பட்டத்தைத் துறந்தார். எட்டு வயது முதலே தாகூர் தான் கவிதை புனையத் தொடங்கியதாய்த் தனது சுய சரிதையில் கூறுகிறார். அவரது முதல் கவிதைத் தொகுப்பு 17 ஆவது வயதில் வெளியானது. தாகூரின் படைப்புகளில் பரம்பரை இந்தியக் கலாச்சாரமும் மேற்கத்திய முற்போக்குக் கருத்துக்களும் பின்னிக் கிடக்கின்றன. 1901 ஆம் ஆண்டில் கொல்கத்தா நகரின் வெளிப்பகுதியில், “விசுவ பாரதி” என்னும் கலைப் பள்ளியை ஆரம்பித்தார். காலஞ் சென்ற பிரதமர் இந்திரா காந்தி விசுவ பாரதி கலைப் பள்ளியில் பயின்றவர்.
வங்காள மூலத்தில் எழுதிய தாகூரின் கீதாஞ்சலிக்கு வங்காளிகள் முதலில் நல்ல வரவேற்பு அளிக்கவில்லை. பிறகு தாகூரே அவற்றை ஆங்கிலத்தில் மொழி பெயர்த்து வெளியிட்ட போது, மேற்திசை நாடுகள் கீதாஞ்சலியை பாராட்டிப் போற்றின. அதன் மகத்தான வரலாற்று விளைவுதான் கீதாஞ்சலிக்குக் கிடைத்த நோபெல் பரிசு. கீதாஞ்சலிப் பாக்களில் தாகூர் தன்னோடு உரையாடு கிறார். நம்மோடும் உரையாடுகிறார். எல்லாம் வல்ல இறைவனுடன் உரையாடுகிறார். சில சமயம் அவர் பேசுவது கடவுளிடமா அல்லது காதலியுடனா என்று தெரிந்து கொள்வது சற்றுச் சிரமமாக உள்ளது.
தாகூரின் கீதாஞ்சலியைத் தமிழில் மொழிபெயர்ப்பது சிரமமான முயற்சி. தாகூரின் கலைத்துவ உள்ளத்தைக் காண்பது கடினமானது. நான் கூரை மீது நின்று மேரு மலைச் சிகரத்தை எட்டத் துணிந்தேன். கீதாஞ்சலியை ஆங்கிலத்தில் படிக்கும் போது, எனக்கு அத்தனை இனிமையாக இல்லை. ஆனால் அந்த வரிகளைத் தமிழில் வடித்து நான் வாசிக்கும் போது, தாகூரின் பளிங்கு உள்ளம் நளினமாக ஒளிர்வது எனக்குத் தெரிந்தது. ஆன்மீக வளர்ச்சி பெற்ற இந்திய மொழிகளில் தான் தாகூரின் கீதாஞ்சலி பட்டொளி வீசிப் பறக்கிறது. தனது வங்க மூலத்தை ஆங்கிலத்தில் மொழி பெயர்க்க முடியாமல், சில இடங்களில் தாகூரே தடுமாறுவது தெரிகிறது. சில இடங்களில் என்ன கருத்தைச் சொல்ல விரும்புகிறார் என்றே தெரிய வில்லை. எனக்கு வங்க மொழி தெரியாது. தாகூரின் ஆங்கில மொழி பெயர்ப்பே எனக்கு மூல நூல். தாகூரே தமிழ் கற்றுத் தமிழில் கீதாஞ்சலியை எழுதினால் எப்படி இருக்கும் என்று மனதில் நிறுத்தி, அவரது உன்னத காவியத்தைத் தமிழாக்க முயன்றேன். அந்த முயற்சியில் நான் வெற்றி பெற்றேனா என்று வாசகர்தான் சொல்ல வேண்டும்.
“என் பயணம் முடிய வில்லை”, என்று கீதாஞ்சலியில் கூறும் தாகூர் நூற்றி நாற்பது ஆண்டுகளுக்கும் மேலாக நம்மிடையே வாழ்ந்து வருகிறார். இராமாயணம், மகாபாரத இதிகாச நூல்கள் போல், தாகூரின் கீதாஞ்சலியும் பல்லாயிரம் ஆண்டுகள் பாரதத்தில் சீராய் நிலைக்கப் போகிறது என்பது என் ஆழ்ந்த எண்ணம். வாரம் ஒரு முறையாக ஈராண்டுகள் பொறுமையாகத் திண்ணையில் தொடர்ந்து பதிப்பித்த என் மதிப்புக்குரிய நண்பர்கள், திண்ணை அகிலவலை இதழ் அதிபர்கள், திரு. கோபால் ராஜாராம், அவர் சகோதரர் திரு. துக்காராம் ஆகிய இருவருக்கும் எனது உளங்கனிந்த நன்றிகள். தாகூரின் கீதாஞ்சலி முழுவதையும் தமிழ்கூறும் உலகுக்கு “அன்புடன் இலக்கிய வலைப்பூங்கா” மூலமாகவும் வழங்கிட எனக்கொரு வாய்ப்பளித்த என்னருமை நண்பர் கவிஞர் புகாரிக்கும் எனது உளங்கனிந்த நன்றி.
சி. ஜெயபாரதன்,
கிங்கார்டின், அண்டாரியோ,
கனடா
(ஜனவரி 21, 2007)
விழித்தெழுக என் தேசம்!
இதயம் எங்கே அச்சமின்றி உள்ளதோ,
எங்கே தலை நிமிர்ந்து நிற்கிறதோ,
அறிவு வளர்ச்சிக்கு
எங்கே பூரண
விடுதலை உள்ளதோ,
குடும்பத்தின் குறுகிய தடைப்பாடுகளால்
வெளி உலகின் ஒருமைப்பாடு
எங்கே உடைபட்டுத்
துண்டுகளாய்ப்
போய்விட படவில்லையோ,
வாய்ச் சொற்கள் எங்கே
மெய்நெறிகளின்
அடிப்படையிலிருந்து
வெளிப்படையாய் வருகின்றனவோ,
விடாமுயற்சி எங்கே
தளர்ச்சி யின்றி
பூரணத்துவம் நோக்கி
தனது கரங்களை நீட்டுகிறதோ,
அடிப்படை தேடிச் செல்லும்
தெளிந்த
அறிவோட்டம் எங்கே
பாழடைந்த பழக்கம் என்னும்
பாலை மணலில்
வழி தவறிப்
போய்விட வில்லையோ,
நோக்கம் விரியவும்,
ஆக்கவினை புரியவும்
இதயத்தை எங்கே
வழிநடத்திச் செல்கிறாயோ, அந்த
விடுதலைச் சுவர்க்க பூமியில்
எந்தன் பிதாவே!
விழித்தெழுக
என் தேசம்!
தங்கமான என் வங்காளம்
(பிரிட்டிஷ் இந்தியாவில் வங்காள மாநிலம் பிரியாமல் ஒன்றாக இருந்த போது, கவியோகி இரவீந்திரநாத் தாகூர், தான் பிறந்த தாயகத்தைத் “தங்கமான என் வங்காளம்” என்று வருணனை செய்து உள்ளத்தைத் தொடும் உன்னதக் கவிதை இது! பாரதம் விடுதலை அடைந்து, மேற்கு வங்காளம், பங்களா தேசம் என்று இரண்டாகத் துண்டு பட்டாலும், தாகூரின் இவ்வரிய கவிதையைப் பங்களா தேசத்தின் இஸ்லாமிய வங்காளிகள் தமது தேசீய கீதமாகப் பாடிப் பரவசம் அடைவது, பாராட்டுவதற்கு உரியது)
பொன்னான என் வங்காள நாடே!
நின்னை நான் நேசிக்கிறேன்.
வானளாவிய நின் தென்றல் காற்று என் நெஞ்சைப்
புல்லாங்குழல் ஆக்கி எப்போதும் இசைமீட்டும்!
வசந்த காலத்தில்
என்னரும் தாயகமே!
நின் சதுப்புநிலத் தோப்பு மணம்
உல்லாசம் அளித்தென்னைத் தாலாட்டும்!
என்னே என் நெஞ்சின் புல்லரிப்பு!
இலையுதிர் காலத்தில்
என்னரும் தாயகமே!
முற்றும் மலர்ந்த நின் நெற்கதிர்கள்
புன்னகை சிதறிப் பொங்குவதைக் காட்டும்!
என்னரும் தாயகமே!
என்னே உந்தன் எழில்மயம்!
என்னே உந்தன் வண்ணமயம்!
என்னே உந்தன் அருமை!
என்னே உந்தன் மென்மை!
ஆலமரங்களின் பாதங்களிலே
ஆற்றங் கரைகளின் தோள்களிலே
எத்தகைய பச்சைக் கம்பளம் விரித்துளாய்!
என்னரும் தாயகமே!
உன்னிதழ்கள் உதிர்க்கும் மொழிகள்
தேனாய் இனிக்குமென் செவியினிலே!
என்னே என் நெஞ்சின் புல்லரிப்பு!
என்னரும் தாயகமே!
நின்முகத்தில் சோக நிழல் படியும் போது
என் கண்களில் பொங்கி எழும்
நீர்த்துளிகள
என்னிசைக் கீதம்
காற்றினிலே வருமென் கீதம், குழந்தாய்!
உனைத் தழுவி
ஆசைக் கரங்கள் போல்
அணைத்துக் கொள்ளும்!
உனது நெற்றி மீது முத்தமிட்டு
இதழால் ஆசி அளிக்கும்!
தனித்துள்ள போது உன்னருகில் அமர்ந்து
உனது செவியில்
முணுமுணுக்கும் என் கீதம்!
சந்தடி இரைச்சலில் நீ தவிக்கும் போது
அரண் அமைத் துனக்கு
ஏகாந்தம் அளிக்கும், என் கீதம்!
இரட்டைச் சிறகுகள் போல்
என் கீதம்
உன் கனவுகள் உயிர்த்தெழ
உந்துசக்தி தரும்!
கங்கு கரையற்ற காணாத காட்சிக்கு
உன் இதயத்தை
ஏந்திச் செல்லும் என் கீதம்!
நடக்கும் பாதையில்
காரிருள் சூழும் போது உனக்கு
நன்றியுடன்
வழிகாட்டும் என் கீதம்,
வானத்து விண்மீனாய்!
உன்னிரு கண்ணின் மணிக்குள்
அமர்ந்து கொண்டு
உன் நெஞ்சின் விழிகளுக்கு
ஒளியூட்டும், என் கீதம்!
மரணத்தில் எந்தன் குரல் மங்கி
மௌன மாகும் போது,
உயிருள்ள
உன்னித யத்தில் போய்
ஓசையிடும்
என் கீதம்!
தாகூரின் தமிழ்க் கீதாஞ்சலி: கீதங்கள்: (1 – 5)
- ஆங்கில மூலம்: கவியோகி இரவீந்தரநாத் தாகூர்| தமிழாக்கம்: சி. ஜெயபாரதன், கனடா. -
கீதாஞ்சலி (1) உடையும் பாண்டம்
அந்திமக் கால மின்றி என்னை
ஆக்கியுள்ளாய் நீ!
உவகை அளிப்ப தல்லவா அது உனக்கு?
உடையும் இப்பாண்டத்தை
மீண்டும், மீண்டும்
வெறுமை ஆக்குவாய் நீ!
புத்துயிர் அளித்து,
மறுபடியும் அதை நிரப்புவாய் நீ!
குன்றின் மீதும், பள்ளம் மீதும் நீ
ஏந்தி வந்த
புல்லின் இலையான
இச்சிறு
புல்லாங்குழல் விடும் மூச்சுக் காற்றில்
கால மெல்லாம்
புதிய கீதங்கள் பொழிய வைப்பாய் நீ!
உந்தன் தெய்வீகக் கரங்கள்
என்மேல் படும்போது,
எந்தன் நெஞ்சம்
உவகையின்
எல்லை மீறிச் செல்லும்!
மேலும் அதில்
ஊகிக்க முடியா
உரைமொழிகள் உதிக்கும்!
அளவின்றி
அள்ளி அள்ளிப் பெய்த உந்தன்
கொடைப் பரிசுகள்
எனது இச்சிறு கைகளில் மட்டுமே
கிடைத்துள்ளன!
கடந்து
போயின யுகங்கள்!
ஆயினும்
இன்னும் நீ இப்பாண்டத்தில்
பொழிந்து பொழிந்து கொட்டுகிறாய்!
அங்கே
காலியிடம் உள்ளது இன்னும்,
மேலும் நீ நிரப்பிட!
கீதாஞ்சலி (2) இசைப் பாடகன்
இன்னிசைக் கீதத்தைப் பாடென்று
என்னை நீ
ஆணையிடும் போதென்
நெஞ்சம் திறந்து பெருமிதத்தில்
பூரிக்கிறது!
உன் முகத்தை நோக்கும்
என் விழிகள்
மடை திறந்து
வீழ்த்தும் நீர்த் துளிகள்!
வாழ்க்கை நெடுவே என்னை
துன்புறுத்தும்
இன்னல், வெறுப்பு, வேறுபாடு எல்லாம்
கனிந்துருகி
இனிய ஓர் சீரமைப்பில்
ஏகிச் சங்கமிக்கும்!
உன் மீது நான் கொண்டுள்ள
மதிப்பீடு
அகண்ட கடல் நெடுவே
பயணம் துவக்கும்
ஆனந்தப் பறவைபோல்
விரிக்கும் தனது
சிறகுகளை!
இன்னிசைக் கீதத்தை பாடும் போதுன்
செவிகள் சுவைத்து
இதயம் இன்புறும்
என்பதை நான் அறிவேன்!
உன்னரிய சன்னிதிக்கு முன்னால்
ஓரிசைப் பாடகனாய்
வருவதையே
விரும்புகிறேன் நான்!
வேட்கை மிகையாய் இருப்பினும்
என் கரங்கள் நீட்சிக்கு
எட்டாத
உன் பாதங்களை
வெகு தூரம் விரிந்து செல்லும் என்
கீதச் சிறகின் முனைதான்
தொட முடிகிறது!
இன்னிசைக்
கீதத்தை பாடிக் கொண்டுள்ள போதே
ஆனந்தப்
போதையில் மூழ்கி
மெய்மறந்து நான் உன்னை
நண்பா!
என்று அழைத்தேன்
என் அதிபனே!
கீதாஞ்சலி (3) உன்னிசைக் கீதம்
இன்னிசையில் கானத்தை,
எவ்விதம் நீ பாடுகிறாய்
என்பதை நான் அறிந்திலேன்
என்னரும் அதிபனே!
உன் கீதத்தைக் கேட்டு
காலங் காலமாய்
மௌனத்தில் மூழ்கி
உள்ளம் வியப்பில் ஆழ்ந்தது!
உலகெங்கும் பரவி விளக்கேற்றும்,
உன் கானத்தில் எழும்
ஒளிச்சுடர்!
உன் கானம் விடுகின்ற
உயிர் மூச்சு
அண்டவெளியில்
வான்விட்டு வான் தாவும்!
புனித நீரோடை போல
கரடு முரடான
கற்பாதைத் தடைகளைக்
கடந்து
முன்னோக்கி விரைந்தோடும்,
உன்னினிய கானம் !
பாடிவரும் உன் கானத்துடன்
ஒன்றாய்க் கலந்திட
நாடி ஏங்கும் என்னிதயம்!
வீணாய் அதற்கு
ஓரிசைக் குரலைத் தேடிப்
போராடும்,
என் மனது!
உரை நடையில் உன் கானத்தை
ஓதுவேன் ஆயினும்
இசை கலக்க முடியாமல்
குழம்பிக்
கூக்குர லிடுவேன்!
கால வரம்பில்லாத
உன்னரும் இன்னிசைக் கானத்தின்
பின்னலில்
என் இதயத்தைக் கட்டி
அந்தோ நீ!
வசப்படுத்தி வைத்துள்ளாய்
என் அதிபனே!
கீதாஞ்சலி (4) என் வாழ்வில் கட்டுப்பாடு
இது என் வாழ்வின்
வாழ்வைப் பற்றிய வரலாறு.
என் அங்கம் அனைத்தையும்
புத்துயிர் அளிக்கும்,
உன்னுயிர்க் கரங்கள் தொடுவதை
என்னிதயம் உணர்வதால்
ஓயாமல் முயல்கிறேன் எப்போதும்
என் உடம்பைத்
தூயதாய் வைத்திருக்க!
ஆதி மூலக் காரணியான
நித்திய ஒளியை எனது
நெஞ்சில் தூண்டி விடும்
சத்திய நெறியே
நீயென்று
முக்தி பெற்ற நான்
உண்மைக்குப் புறம்பட்ட அனைத்தையும்
எண்ணாமல் இருக்க
எந்நாளும் முயல்வேன்.
இதயக் கோயிலின்
உட்புறச் சன்னிதியில் நீ
திருப்பீடம் அமைத்து ஆசனத்தில்
இருப்பிடம் கொண்டுள்ளது
நினைவில் இருப்பதால்,
உள்ளத்தைக் களங்கப் படுத்தும்
தீவினை எல்லாம்
நெஞ்சத்தை நெருங்க விடாமல்
நீக்க முயல்வேன்,
பூக்கள் மேல் கொண்டுள்ள
என் மோகத்தைக்
குன்றாமல் வைத்துக் கொண்டு!
உனது பேராற்றல் இதுவரை
எனக்கு ஊட்டியுள்ள
மன உறுதியே
எப்போதும் என்னை இயக்கும் என்பது
தென்பட்டு வருவதால்,
நன்னெறி முறைகளைக்
கடைப்பிடித்துச்
சிரமப்பட்டு முயல்வேன்,
நடத்தையின் மூலம் என்னை
உனக்கு
எடுத்துக் காட்ட!
கீதாஞ்சலி (5) கானத்தைப் பாடும் தருணம்
தனித்துவ உரிமையில் கண நேரம்
சன்னிதியில்
உன்னருகே உட்கார்ந்திட
என்னிதயம் ஏங்குகிறது.
கைவசம் உள்ள
எந்தன் படைப்பு வேலைகளைப்
பின்னர்
முடித்துக் கொள்ளலாம்.
கனிந்த நின் திருமுகக் காட்சியைக்
காணாத
மறைவுப் புறத்தில்
நடமிடும் போது படபடத்து,
என்னிதயம்
தன்னிலை மாறி
தவியாய்த் தவிக்கும்!
அப்போது என்
படைப்புகள் அனைத்தும்
எனக்குச் சுமக்க முடியாத பளுவாய்
கனத்துப் போய்விடும்,
கங்குகரை இல்லாத
கடற்பாரம் போன்ற
உடல் உழைப்பாய்!
வேனிற் கால வெயில்
இன்று என்
வீட்டுப் பலகணி வழியே
பெருமூச்சை விட்டுக் கொண்டு
புகுந்திருக்கிறது,
முணுமுணுப்புடனே!
மொட்டுகள் மலர்ந்து
பொங்கி விரியும் பூந்தோப்பில்
தேனீக்கள் தேன் குடிக்க
கான ரீங்காரமுடன்
பாடிக் கொண்டு
மும்முரமாய் ஈடுபட்டுள்ளன!
இச்சமயத்தில்
நின் கனிவுத் திருமுகத்தை
நேராக நோக்கிய வண்ணம்
அமர்ந்து
பூரண அமைதியில்
பூரித்துப் பொங்கும்
இந்த ஓய்வு வேளையில்
வந்து விட்டது,
எந்தன் வாழ்வை அர்ப்பணிக்கும்
கானத்தை
நான் பாடும் தருணம்!
[ தொடரும் ]
•<• •Prev• | •Next• •>• |
---|