சிட்னி பொய்ரியேய் (Sidney Poitier) 02/20/2020 இலே தொண்ணூற்றுமூன்றாம் அகவையை எட்டியிருக்கும் ஹொலிவுட் நடிகர். நாற்பதுகளிலே போல் உரோபிசன் (Paul Robeson), ஐம்பதுகளிலே ஹரி பெலொபாண்டே (Harry Belafonte), என்ற வரிசையிலே வெள்ளைத்தோலர்களின் அருகிலே பத்தோடு பதினொன்றாய் நின்று எடுபிடி வேலைசெய்யும் (Gone with the Wind இன் மாமி, போக், பிரிஸி போன்ற) கறுப்பினப்பாத்திரங்களுக்கு மாறாக, தோல் நிறம் சார்ந்த சமூகப்பிரச்சனைகளை அக்காலகட்டத்தின் எல்லையை மீறியோ மீற முயன்றோ பேசமுயன்ற ஹொலிவுட் படங்களின் நடிகராய் அறுபதுகளிலே சிட்னி பொய்ரியேய் வருகிறார். ஒப்பீட்டளவிலே உரோபிசனுக்கிருந்த வசதியும் உயர்கல்விபெறும் வாய்ப்பும் கரிபியன்பின்புலத்தைக் கொண்ட நண்பர்களான பின்னைய இருவருக்குமிருக்கவில்லை. ஆயினும், ஐம்பதுகளிலே நியூ யோர்க்கின் வட அமெரிக்கக்கறுப்பர் நாடக அமைப்பினூடாகத் தம்மை வெளிக்காட்டி ஹொலிவுட்டினுள்ளே நுழைந்தவர்கள். இவர்கள் திறந்துவைத்த கதவு ||ஓரளவுக்கு|| வெள்ளையருக்குமப்பால் அனைத்துத்தோலர்களையும் உள்ளடக்கும் வெளியினை ஏற்படுத்தித் தந்திருக்கின்றதெனலாம். அதற்கு அறுபதுகளிலே மார்டின் உலூதர் கிங்-இளையவர் முன் நின்று போராடிய குடிசார் உரிமைக்கான அமைப்பு மட்டுமல்ல, ஊடகங்களாலே பேச மறுக்கப்படும் ஆயுதம் தாங்கிய கறுப்புச்சிறுத்தைகள் போன்ற அமைப்புகளும் காரணமாகின்றன! அதேவேளையிலே கிங்கோடு வன்முறையறு போராட்டங்களிலே தம் திரைச்செல்வாக்கினையும் முதலாய்ப் போட்டுக் கலந்துகொண்டவர்களிலே பெலொபாண்டேயும் பொய்ரியேயும் அடங்குவார்.
பார்த்த பொய்ரியேயின் படங்களிலே குறிப்பிடத்தக்கவையெனக் கருதுகின்றவை, The Defiant Ones, Lilies of the Field, A Raisin in the Sun, Guess Who's Coming to Dinner, To Sir, with Love, In the Heat of the Night. They Called Me Mr. Tibbs படம் அவரின் In the Heat of the Night படத்தின் பாத்திர வெற்றியை முதலிட்டுக் காசு காண வந்த படமாகவே தோன்றியது. தொண்ணூறுகளிலே வந்த Sneakers, The Jackal இரண்டும் அக்காலகட்ட நட்சத்திரப்பட்டாளங்களோடு இரண்டாம் நிலைப்பாத்திரமாக அவர் வந்துபோகும் நகைச்சுவை, விறுவிறுப்புப்படங்கள். அவரின் அறுபதுகளிலே வந்த படங்களின் சமூகம் சார்ந்த பிரச்சனைகளைப் பேசும் தேவை அவற்றிலிருக்கவில்லை அல்லது அவற்றுக்கிருக்கவில்லை.
The Defiant Ones: சிறையிலிருந்து தப்பும் கறுப்பு-வெள்ளைக்கைதிகளூடாக ஐம்பதுகளின் பிற்பகுதியின் அமெரிக்கக்கறுப்புவெள்ளை நிலவரத்தைப் பேசும்படம். நடிகை ஜேமி லீ கேர்டிசின் தந்தை ரொனி கேர்டிசுடன் இணையராக பொய்ரியேய் தோன்றிய படம். ஒட்டாத சமாந்திர வெளிகளிலே அருகருகே வாழ்கின்றவர்களை வெளியினைப் பகிர்ந்தாகவேண்டிய வெட்டுத்துண்டுகளுள்ளே இருக்க நெருக்கினால், அவர்களும் சமூகமும் எப்படியாக எதிர்கொள்ளுமென்பதைச் சமூகப்பரிசோதனை செய்யும் படம். பின்னாலே, இதே நிலைமுரணை ஏற்படுத்தும் சூழலை உருவாக்கிப் பேசும் பல படங்கள் வந்தன. எடி மேர்பி- டான் ஆர்க்ரோய்ட் நடித்த Trading Places, இரிச்சர்ட் ப்ரையர்- ஜீன் வைல்டர் நடித்த Silver Streak மற்றும் See No Evil, Hear No Evil உள்ளிட்ட சில படங்கள் இப்படியான சூழலை உருவாக்கின நகைச்சுவைப்படங்கள். இதுபோன்ற முரண்பாடுடையோரைச் சூழ்நிலையமுக்கத்தாலே வெளியைப் பங்கிடும் நிலையை உருவாக்கிச் சமூகச்சிக்கல்களைப் பேசும் போர்க்காலப்படங்கள் அமெரிக்காவுக்கு அப்பாலும் அண்மைக்காலத்திலே விரிந்திருக்கின்றது; பொஸ்னியச்சிக்கலை முன்னிட்ட No Man’s Land ஓரெடுத்துக்காட்டு.
Lilies of the Field: கறுப்பர்-வெள்ளையர் பிரச்சனை மையங்கொண்ட அமெரிக்கதென்பகுதியிலிருந்து முற்றும் தள்ளி, அமெரிக்க மேற்கிலே நாட்டுக்குக் குடிபெயர்ந்து ஆங்கிலம் கொஞ்சமே தெரிந்த ஹங்கேரியன், ஜெர்மனிய மொழிகளைப் பேசும் கத்தோலிக்கக் குரு-அம்மைகட்கிடையேயும் அவர்களுக்குத் தேவாலயம் அமைப்பதிலே வேலைசெய்யும் ஆங்கிலம் பேசும் ஓர் அமெரிக்கக்கறுப்பருக்குமிடையேயான பயங்களையும் ஒருவர் மற்றோரிலே தங்கியிருக்கவேண்டி நிர்ப்பந்திக்கப்பட்ட தேவையினையும் அதன்பாற்பட்டுப் பழகையிலே மெதுவாக ஏற்படும் புரிதலையும் பேசும் படம். அறுபதுகளிலே நிகழ்காலச் சிக்கலை ஒரு வகையிலே கேள்வி கேட்கும்விதமாக, குடிவரும் நாட்டின் மொழி தெரியாத புதுவெள்ளையினத் திருநிலைப்படுத்தப்பட்ட பெண்களுக்கும் அந்நாட்டின் மொழியினைப் பேசும் குடிமகனான ஒரு கறுப்பாணுக்குமிடையே தோன்றக்கூடிய முரண்களினைக் காட்டி, ஒடுக்குமுறைக்கான பிரச்சனைகளிலேயும் இருக்கக்கூடிய அடுக்குகளைச் சுட்டும் படம்.
A Raisin In the Sun: குடிசார் உரிமைப்போராட்டகாலத்துக் கறுப்பு-வெள்ளையின முரண்களை நேரடியாகப் பேசாது, கறுப்பினக்குடும்பத்தின் உள்ளேயான பொருளாதார, பால்நிலைசார்சிக்கல்களைப் பேசும் படம். மிகவும் மெதுவாக ஊரும் காட்சிகள்.
Guess Who's Coming to Dinner: அறுபதுகளிலே ஓரு வெண்பெண்ணும் வைத்தியனான கறுப்பாணும் விரும்புதல் அவளின் குடும்பத்திலே பெற்றோராலே எப்படியாக எடுத்துக்கொள்ளப்படுகின்றதென்பதைப் பேசும் படம். பெண்ணின் பெற்றோராக வரும் ஸ்பென்சர் ட்ரேசியும் கத்ரீன் ஹெப்ரோனும் திரைக்கு அப்பாலும் காதலராகவிருந்த உச்சநிலை நடிகர்கள். இப்படம் மிகவும் அழுத்தமாக அமெரிக்காவிலே ஆண் – பெண் உறவிலே தோலுக்குக் கீழும் நிறத்தின் ஆழூடுருவலைப் பேசியது. அமெரிக்க ஜனநாயகக்கட்சியின் பூட்டாஜிஜின் வாக்குகளைத் தீர்மானிக்கப்படும் அலகாக ஒருபாலுறவென்பதைக் காண்கையிலே, இன்னமும் எவரோடு எவர் உறவினை ஏற்படுத்தலாம் என்பதற்கான போராட்டம் தொடர்வதைக் காட்டுகின்றது; அவ்வகையிலே, இப்படத்தின் கருவுக்கு உரு மாறினாலும் படம் நிகழ்காலத்துக்குப் பொருந்துவதைக் காட்டுகின்றது. இப்படத்தின் பிற்கால வடிவமாகவே தொண்ணூறின் இடென்சில் வோஷிங்டன், சரிதா சௌத்ரி நடித்த மீரா நாயரின் Mississippi Masala இனைச் சொல்லலாம். இன்றுங்கூட, பல்லாண்டுகளாக ஒரு கர்நாடக சங்கீதக்காரரின் மகள் ஓரு வெள்ளையரை மணம் செய்திருப்பதைப் பெருமிதமாக ஏற்றுக்கொள்ளும் சமூகம் இன்னொரு கர்நாடக சங்கீதக்காரரின் மகள் கறுப்பரை விரும்புவதைச் சமூகவலைகளிலே பதைபதைத்துப் பார்க்கும் தட்பவெட்பத்திலே நாம் Guess Who's Coming to Dinner! The Big Sick!
To Sir, with Love: இக்காலகட்டத்திலும், அமெரிக்க நகர்ப்பாடசாலைகள் பொதுவாக கறுப்பினமாணவர்களாலே நிரம்பியவை. அங்கிருக்கும் சிக்கல்கள், பொருளாதாரநிலையிலே ஓரளவு சமாளித்துக்கொள்ளும் மாணவர்கள் ஓரளவு இனம் சாராது கலந்த புறநகர்ப்பாடசாலைகளுக்கோ தனியார் பாடசாலைகட்கோ இருப்பதில்லை. அறுபதுகளிலே இந்நிலை இன்னமும் மோசமானதென்பதைச் சுட்டித் தெரியவேண்டிய அவசியமில்லை. இப்படியான ஒருநிலையிலே இருக்கக்கூடிய இங்கிலாந்தின் நகர்ப்புறப்பாடசாலைக்கு வரும் ஒரு கறுப்பாசிரியர் எவ்வகையிலே மாணவராலே நேசிக்கப்படுமளவுக்கு மாற்றத்தை ஏற்படுத்துகின்றார் என்பததே படம். ஒரே வேறுபாடென்பது, இம்மாணவர்களிலே ஓரிருவர் தவிர்த்து ஏனையோர் வெண்மாணவர்கள்; ஆசிரியர் புலம்பெயர்ந்த கறுப்பர். இதே வகையான ‘மோசமான நிலையிலிருந்து எல்லாமே சுபமாகி எல்லோருமே இறுதியிலே இன்புற்றார்’ படங்கள் இப்போதும் ஆண்டுக்கு இரண்டாவது வருகின்றபோதுங்கூட, உண்மையான ஐம்பதுகளின் ஆசிரியரொருவரின் வாழ்க்கையை ஒற்றிய இப்படம் அதுவந்த காலகட்டத்தினை வைத்துப் பார்க்கையிலே ஒரு முன்மாதிரியான தூண்டலாகவிருந்திருக்கவேண்டும். சமூகமேம்படுத்தலுக்கான கொள்கையோடும் வரையறுத்துக்கொண்ட குறிக்கோளோடும் செயற்றிட்டத்தோடும் சில ஆசிரியர்களேனும் பாடசாலைகளை நோக்கி நகர்ந்த காலமாக அஃதிருந்திருக்கவேண்டும். எழுபதின் Conrack படத்தின் Jon Voight – ஆஞ்சலிகா ஜுலியின் தந்தை- ஆசிரியர் பாத்திரம் இதுபோன்ற உண்மையான (ஆனால், வெள்ளையின) ஆசிரியர் ஒருவர் தென் கரோலினத்தீவுப்பகுதிக்கு ஆசிரியராகப் போய்ச் செய்யும் சேவையைக் காட்டும் பாத்திரமே! ஆனால், கறுப்பின மாணவர்கள் எதிர்கொண்ட|கொள்ளும் (இன்னமும் கொள்ளும் சிக்கல்கள் வெறும் பொருளாதாரம், குடும்பக்கட்டுமானம், குடும்பத்துள்ளான பால்சார்படிநிலை இவற்றினைமட்டுமே கொண்டவையல்ல) நிறம்சார்விரிப்பொன்றாலும் சிக்குண்ட நிலையைக் கையாள அவர்களின் நிறம் சார்ந்த சமூகத்திலிருந்தே வரும் ஓராசிரியரே மாணாக்கராலே அடையாளம் ஒத்துக்கண்கொள்ளப்படத் தேவைப்படுகின்றார். இங்கிலாந்தின் நிலை பற்றி அறியாதபோதுங்கூட, அமெரிக்கப்பாடசாலைகளினையும் அவற்றின் வரலாற்றினையும் புரிந்துகொள்ளும் வகையிலேயே இப்படத்தினையும் பொருந்த உள்வாங்கமுடிந்தது. இப்படத்திலே இங்கிலாந்து (இலண்டன்) நகரப்பாடசாலைக்கு வரும் பொய்ரியேயின் ஆசிரியர் பாத்திரம் கறுப்பராக இருந்தாலும், பிரிட்டிஷ் கயானாவிலிருந்து வருகின்றவர். ஆசிரியராயிருந்தலென்பது பாதி போதிக்கும் தொழில்; மீதி பெற்றோராய்ப் பாவனை பண்ணும் தொழில். சில ஆசிரியர்கள் சில மாணவர்களைத் தாமும் ஆசிரியர்களாகப் போதிக்காமலே புரிய வைக்கின்றார்கள். அப்படியானோராலேயே அத்தொழில் இன்னமும் நேரம் கட்டாமலும் நினைவு தப்பாமலும் நகர்கின்றது.
In the Heat of the Night: பொய்ரியேயின் படங்களிலே மிகவும் பிரபலமான படமெனலாம்; அறுபதுகளிலே அமெரிக்க நிறப்பாகுபாடு மிக்க தெற்குக்கு அமெரிக்க வடக்கின் பிடடெல்பியாவிலிருந்து நகர்காவற்றுறையின் துப்பறிவாளனாகப்போகும் வேர்ஜில் திப்ஸ் என்பவரினை மையப்படுத்திய படம். நகர்காவற்றுறை நிர்வாகியாக வரும் வெள்ளைநிற Rod Steiger கடமையுணர்வுகொண்ட ஆனால், இன்னுமும் ‘வெள்ளை’யுள்ளம் கொண்டவர். இப்படியாகக் கறுப்பு-வெள்ளை என்று நிறம் பிரித்து ஆளைப் போடமுடியாத பாத்திரங்களிலான படங்கள். ‘Virgil! It is a funny name! What do they call you up there in Philadelphia?” என்று கேட்கும்போது அவர் சொல்லும், “They call me Mister Tibbs!” என்பதே படத்தின் சாரம். வெள்ளைநிறப்பெண்கள் கறுப்பு ஆண்களைக் குறித்துக் குற்றம் சும்மாவே சுமத்தக்கூடிய பழங்காலத்தின் அவலத்தைச் சுட்டின To Kill a Mockingbird கதை படமாக வெளிவந்து ஐந்தாண்டுகளிலே இப்படம் ஒரு கறுப்பரை வெள்ளையர் கொலை செய்யப்பட்டிருப்பது குறித்துத் துப்பறிகின்றவராகக் காட்டி வந்திருப்பது, அறுபதுகள் எத்தகைய விரைசுழல்மாற்றங்களை ஏற்படுத்திய காலமெனக் காட்டுகின்றது. படம் கூடுதலாகவே ஓர் கொலையைத் துப்பறியும் கருவோடும் செல்வதாலே, அதன் வெற்றி பொருளீட்டலிலும் நிச்சயப்படுத்தப்பட்டிருக்கவேண்டும். இதே கருவோடு தொடர்ச்சியாக இன்னும் இரு படங்களும் பின்னாலே, மிக அருமையான, ஆனால், ‘நல்லவர்கள்-கெட்டவர்கள்’ என்ற இருவகைமாந்தரேயுள்ளார் என்ற வகைப்பட்ட தொலைக்காட்சித்தொடரும் வந்தன. எண்பதின் இத்தொலைக்காட்சித்தொடரிலே பொய்ரியேய் நடிக்கவில்லையென்றாலுங்கூட, தொடர் சிறப்பாக அமைந்திருந்தது. இப்படங்களின் பொய்ரியேயின் திப்ஸ் பாத்திரத்தினையும் Beverly Hills Cop படங்களின் எடி மேர்பியின் அக்செல் பொலி பாத்திரத்தினையும் பார்க்கும்போது, வர்த்தக ஊடகங்களும் நிறுவனங்களும் எவ்விதமாக மாற்றத்தை உள்வாங்கிச் சிக்கல்களையே சிரிப்பாக்கிச் சிதைத்தும் காசாக்கிப் போகச் செய்யக்கூடியதெனத் தெரியும்.
•<• •Prev• | •Next• •>• |
---|