“பாருக்குள்ளே நல்ல நாடு எங்கள் பாரத நாடு. எங்கள் மூதாதையர்கள் ஆயிரம் ஆண்டு வாழ்ந்து மறைந்ததும் இந்நாடே”
இதேபோன்று ஆயிரம் ஆயிரம் ஆண்டுகளாக ஆறுகளில் மணல் எடுத்தோம் . கட்டிடங்கள் கட்ட கழல்நிலங்களை சீர்த்திருத்த , தென்னை மரங்கள் நட, ஆறுகளில்தானே மணல் எடுத்தோம். அப்பொழுதெல்லாம் ஆறுகளில் பள்ளங்கள் ஏற்படவில்லையே, எந்த ஒரு பிரச்சினையுமில்லையே. இப்பொழுது சென்ற மூன்று ஆண்டுகளாகத்தானே பிரச்சினை. பிரச்சினை என்றால் சாதாரணமானது அல்ல. மணல் திருட்டு, மணலில் கள்ளச்சந்தை, மணல் எடுத்தால் லாரிகள் பறிமுதல். ஓட்டுநர்கள் நடத்துனர்கள் கைது.. மணல் லாரி ஓட்டுநரை தடுத்த தாசில்தாரை லாரியால் கொலை . ஏன் இந்த நிலைமை ? .அரசாங்கம், பொதுமக்கள்,அதிகாரிகள் பொறியாளர்கள் ,விவசாய வல்லுநர்கள், கட்டிடத் தொழில் வல்லுநர்கள் எல்லோரும் சிந்தித்துப் பார்க்க வேண்டும் .
நிலத்தடி நீர் நாளுக்கு நாள் அதல பாதாளத்துக்குப் போய்க்கொண்டிருக்கிறது. ஆழ்குழாய் கிணறுகள் போடுவதால்தான் இந்த நிலைமை என்று சொல்லுகின்றார்கள், நிலத்தடி நீர் கீழ் நோக்கி போவதால்தான் ஆழ்குழாய் கிணறுகள் தோண்டப்பட்டன. குடிநீருக்குப் பஞ்சம் . தொடர்ச்சியாக பருவமழை பொய்த்துவிட்டது. மழைகுறைவுக்கு வனங்கள் அழிக்கப்பட்டதுதான் காரணம் . வனங்கள் அழிக்கப்பட்டதற்கு அரசாங்கம் தன்னுடைய பொறுப்பைத் தட்டிக்கழிக்க முடியாது. வனமகோத்சவம் நடத்தினோமே அதன் விளைவு என்ன ? ஒன்றுபட்ட மதுரை மாவட்டத்தைப் பற்றி மாத்திரம் குறிப்பிட விரும்புகின்றேன் . வருஷநாடு வனப்பகுதியை அழிப்பதை அரசாங்கம் தடுத்து நிறுத்தி இருக்க வேண்டும் . வைத்ததைச் சொல்லிவிட்டு வருஷ நாட்டுக்குப் போ என்பது 50 ஆண்டுகளுக்கு முந்தைய பழமொழி . கொடைக்கானல் மலைப்பகுதியில் மரங்கள் வெட்டப்படுகின்றன . அதே போன்று அய்யம்பாளையம் கோம்பையில் பஞ்சந்தாங்கி என்ற வனப்பகுதி தாண்டிக்குடி வளர வளர்ந்த வனம் . முற்றிலும் அழிக்கப்பட்டது . கொடைக்கானல் மலையில் ஏன் தமிழ் நாட்டிலே வனங்களை ஏலப்பயிர் சாகுபடி செய்ய தனிப்பட்ட விவசாயிகளுள் 25 வருட குத்தகைக்கு ஏலம் மூலம் விடப்படும், . அதை அரசாங்கம் நிறுத்தி வனங்களைத் தன் வசப்படுத்திக்கொண்டது. தனியார் வசம் இருந்தவரை வனங்கள் பாதுகாக்கப்பட்டன . அரசாங்கம் வனங்களை எடுத்துக் கொண்டதால் சமுக விரோதிகளால் வனப்பகுதியை கொஞ்சம் , கொஞ்சமாக அழிக்கப்பட்டன.. வெள்ளாடுகள் மலைப்பகுதியில் வெளிப்பகுதிகளிலும் , காடுகளிலும் மேய்ப்பதால் பசுமை பாதிக்கப்படுகின்றது . வனங்கள் அழிக்கப்பட்டன. அணைகள் கட்டுவதற்கு பொறியாளர்களின் ஆலோசனை கேட்கப்பட்டதா ? அணைகள் கட்டின செலவு எவ்வளவு ? அதை அரசாங்கம் எப்படி வசூலித்தது. அணைகள் கட்டும்முன்பு இருந்த விவசாய நிலத்தின் விஸ்தீரணம் எவ்வளவு ? அணைகள் கட்டிய பின்பு உள்ள விவசாய நிலம் எவ்வளவு ? அணைகள் கட்டியதால் விவசாயிகளின் REPARIAN RIGHT பாதிக்கப்பட்டதா ? அணைகளைக் கட்டியதால்தானே நிலத்தடி நீர் கீழே போனது . குடிநீருக்கும் பஞ்சம் வந்தது.. ஆறுகளில் பானையைப் புதைக்கும் அளவுக்கும் குழிகள் தோண்டப்பட்டன.. அணையால் தண்ணீரை மட்டும் தேக்கவில்லை . மணலையும் சேர்த்து தேக்கி விட்டோம் . அதனால் தான் இந்த அவல நிலைமை . அணைகளில் தேக்கி வைக்கப்பட்ட தண்ணீர் யாருக்கும் பிரயோஜனப்படாது . வைக்கப் புல்லில் நாய் படுப்பதுபோல்தான் . அணைகள் கட்டியது அரசியல்
விபத்து . பீட்டரைக் கொள்ளை அடித்துப் பாலுக்குக் கொடுத்த கதைதான் . (ROB PETER AND GIVE TO PAUL) உதாரணமாக ஒன்று பட்ட மதுரை மாவட்டம் , ஒன்றுபட்ட இராமநாதபுரத்தில் கட்டப்பட்ட சில அணைகளைப் பற்றி பார்ப்போம் .
-வைகை அணை:-
இது காங்கிரஸ்காரர்கள் ஆட்சிக்காலத்தில் கட்டப்பட்டது . அணைக்கட்டும் விஷயம் சட்டசபையில் விவாதிக்கப்பட்டிருக்கின்றது .ராமநாதபுரம் மாவட்டத்துக்கு தண்ணீர் விட்டது போக எஞ்சிய நீர் வைகை அணையில் தேக்கப்படும்: : என்று சட்டசபையில் வாக்களித்த பின்புதான் தீர்மானம் நிறைவேற்றப்பட்டது . பின்புதான் வைகை அணை கட்டப்பட்டது . ஆனால் எல்லா உறுதி மொழிகளும் காற்றில் பறக்கப்பட்டன . இரண்டு மாவட்ட விவசாயிகளும் பாதிக்கப்பட்டதுடன் மதுரைக்கு குடிநீர் பஞ்சமும் ஏற்பட்டுள்ளது . வைகை அணையில் 22 அடி வண்டல் மண் படிந்து உள்ளது .வைகையில் இரண்டாவது அணைக்கட்ட வேண்டும் என்று சிலர் வாதாடுகின்றார்கள் .இந்த வாதம் முற்றிலும் தவறானது . வைகை ஆற்றில் திறந்துவிடப்பட்ட தண்ணீர் மதுரை வந்து சேரவில்லை . குடிநீர் பிரச்சினை ,
மணல் திருட்டு , ஆற்றில் பானையைப் புதைக்கும் அளவிற்கு பள்ளம் . மதுரை , ராமநாதபுரம் மாவட்ட விவசாயிகளின் பாதிப்பு இவை எல்லாவற்றிற்கும் காரணம் வைகை அணைதான் . அணையில் தேங்கி இருக்கும் வண்டலை வெளியேற்ற வேண்டும் . அணையின் ஷட்டர்களையும் அதன் அடிப்பாகத்தை இடித்து தண்ணீரும் ,வண்டலும் கலந்து Free Flow Of Water and Sand ---- விடப்பட வேண்டும் .இது ஒன்றுதான் எல்லாப் பிரச்சினைகளையும் போக்கும் .
கல்கி உதவி ஆசிரியர் 1986 ம் மருதாநதி, சொட்டங்குளம் ,வஞ்சி ஓடைகளைப் பார்த்து “அணைக் கட்டினார்கள் , அடி வயிற்றில் அடித்தார்கள்” என்று கட்டுரை எழுதினார் . இது எல்லா மாதிரி அணைகளுக்கும் பொருந்தும் . வைகை ஆற்றில் குடவனாறு , மருதாநதி ,மஞ்சளாறு இவைகளில் கழிவுகள் எல்லாம் கட்டாத்து அய்யம்பாளையத்தில் வைகை ஆற்றில் சேரும் . இப்பொழுது கனம் முதலமைச்சர்
அவர்கள் அணைகளில் இருந்து குடிநீருக்காகத் தண்ணீர் திறந்துவிடும்படி உத்தரவு பிறப்பித்திருக்கின்றார்கள் . அணைகள் கட்டாமல் இருந்திருந்தால் ஆற்றில் தண்ணீர் தானாக ஓடிக்கொண்டிருக்கும் . குடிநீர் பஞ்சம் வந்திருக்காது . மணல் பிடிப்புதான் தண்ணீர் சேமிக்கும் வங்கி . அந்த மணலை அணைக்கட்டி தடுத்து நிறுத்தியது மகாதவறு . மக்கள் , அரசியல்வாதிகள் பொறியாளர்கள் விவசாய வல்லுனர்கள் யாரும் சென்ற 50 ஆண்டுகளைத் திரும்பி பார்க்கத் தவறிவிட்டார்கள் . அமெரிக்காவில் Maine ‘s Kennier ஆற்றில் உள்ள 7... 2 . மீட்டர் உயரம் , 85 மீட்டர் அகலம் கொண்ட Edward Dam உடைத்து எறியப்பட்டது . அமெரிக்கா இப்பொழுது அணைகளை இடிப்பதில் ஆர்வமாக உள்ளது . அரசியல்வாதிகளுக்கும் அதிகாரிகளின் Ego தான் அணைகள் கட்டப்பட்டன . இது தான் நிதர்சனமான உண்மை .
திருச்சி ஜில்லாவில் இராமசமுத்திரத்தில் மணல் எடுக்க அரசாங்கம் அனுமதி கொடுத்திருக்கின்றது . இப்படி மணல் அள்ளுவது வெய்யில் காலத்தில் தண்ணீர் ஆற்றில் ஓடுவதைத் தடுத்துவிடும் என்று வாழை சாகுபடியாளர்கள் எதிர்ப்பு தெரிவித்துள்ளார்கள் . ஆனால் ஆட்சியர் டாக்டர் மணிவாசன் குறிப்பிட்ட இடத்தில் மணல் வாரப்படுவதால் தண்ணீர் ஓடுவதைத் தடுக்காது என்று சமாதானப்படுத்தியிருக்கின்றார் . இது தவறான செயல் . நிலத்தடி நீர் மகாநாடு திண்டுக்கல்லில் நடந்தது . ஆற்றில் மணல் அள்ளுவதால் நீர் மட்டம் குறையும் . எனவே மாவட்ட அதிகாரிகள் ரவுடிகளையும் , அரசியல் தலையீட்டையும் கண்காணித்து நடவடிக்கை எடுக்க வேண்டும் என்று தீர்மானித்து உள்ளனர் . அறிவில் சிறந்த அறிவாளர்கள் மதிப்புக்குரிய வி . ஆர் . கிருஷ்ண அய்யர் எச் .சுரேஷ் ,வி .வசந்தாதேவி , எல் . மார்க்கண்டன் , கே . கோபாலகிருஷ்ணன் இவர்கள் அடங்கிய கமிட்டியிடம் மனுக்கள் கொடுத்தனர் . மதிப்புக்குரிய கமிட்டி அங்கத்தினர்கள் மலையிலிருந்து உற்பத்தியாகும் ஆறுகள் சமவெளிப்பகுதியை இணைக்கும் பாலம் . அதைத் தடுக்கும் எந்த வேலைக்கும் மக்களின் நலனையும் இயற்கையையும் பாதிக்கும் என்று கூறியிருக்கின்றனர் . தாமிரபரணி நதிக் கரையில் 100,000 தென்னை மரங்கள் கருகிப்போனது . 50,000 பேருக்கு வேலை இல்லை .அரசாங்கம் மணல் திருட்டை எடுத்த நடவடிக்கை போதுமானதல்ல . கோர்ட்டுக்குப் போயிருக்க வேண்டும் என்றும் சொல்லப்பட்டிருக்கின்றது . ஆனால் ஏன் இந்த நிலைமை ஏற்பட்டது என்பதைப் பொதுமக்களும் சொல்லவில்லை . மதிப்பிற்குரிய கமிட்டி அங்கத்தினர்களும் ஆராயவில்லை .மணல் அள்ளுவற்கு லைசென்ஸ் கொடுக்கக்கூடாது . லைசென்ஸ் வந்தவுடன் ஊழலும் வந்துவிடும் . சிவனப்பன் போன்ற பெரிய , பெரிய வல்லுநர்கள் எல்லாம் இந்த மணல் பஞ்சம் ஏன் ஏற்பட்டது என்று அதன் Root Cause என்ன என்று ஆராயாமல் விட்டுவிட்டார்கள். மணல் அள்ளக்கூடாது என்றால் மணலுக்கு எங்கே போவது ? யாராவது சிந்தித்தார்களா ? வி . ஆர் . கிருஷ்ண் அய்யர் கமிட்டி லேசாகத் கவனித்தது .. ஆனால் ஏனோ ஆழ்ந்து சிந்திக்கவில்லை . அரசாங்கத்துக்கும் , பொதுமக்களுக்கும் உள்ள இடைவெளி இது . ராமன் ஆண்டால் என்ன ? இராவணன் ஆண்டால் என்ன ? என்ற நிலைக்கு பொதுமக்கள் தள்ளப்பட்டார்கள் . கண்ணகி மதுரையை எரித்த பின்பு வைகை ஆற்றில்தான் நடந்து சென்று கேரள எல்லையில் தெய்வமானாள். வத்தலக்குண்டு - உசிலம்பட்டி போகும் வழித்தடத்தில் வைகை ஆற்றில் கட்டப்பட்ட பாலத்துக்கு கண்ணகி பாலம் என்றுதான் பெயர் . மக்களுக்கு அரசியல் தான் முக்கியமாகப் போய்விட்டது . அரசியல்வாதிகள் ஆழ்ந்து சிந்திக்கவில்லை . அவர்கள் அரசியல் பண்ணுகிறார்கள் .
மஞ்சளாறு அணை:-
இந்த அணையும் காங்கிரஸ் ஆட்சியின் போது கட்டப்பட்டதுதான் . மஞ்சளாறு கொடைக்கானல் போகும் வழியில் வெள்ளி நீர் வீழ்ச்சி என்ற ஆறுதான் மஞ்சளாறு . இடையில் கொடைக்கானல் மலைப்பகுதியில் சில சில சிறு ஆறுகளும் அதில் சேரும் . டம் டம் பாறையிலிருந்து பார்த்தால் தண்ணீர் விழும் காட்சி கண்ணைக் கவரும் . 1953 – 54-ல் தேவதானப்பட்டியில் காங்கிரஸ் மாநாடு நடந்தது . உயர்திரு .காமராஜர் அவர்கள்தான் தலைமை வகித்தார் . தேவதானப்பட்டி மக்கள் அணைக்கட்ட வேண்டும் என்று கேட்டார்கள் . இன்று அவர்களுடைய வாரிசுகள் தண்ணீருக்காக அணையைத் திறந்துவிடும்படி கெஞ்சுகின்றனர் . என்னே விபரீதம் மஞ்சளாறு அணையால் தேவதானப்பட்டி , பெரியகுளம் பெரிய விவசாயிகள் அணைக்கு அடிவாரத்தில் உள்ள புஞ்சை நிலங்களை குறைந்த விலையில் விலைக்கு வாங்கி தென்னந்தோப்புகளாக மாற்றிவிட்டார்கள் . அணைக்கட்டியதால் மேற்படி புஞ்சை நிலங்களுக்கு ஊற்று அதிகமாகக் கிடைத்தது . ஆனால் அதனால் ஏற்பட்ட நஷ்டங்கள் சொல்லி மாளாது . கங்குவார்பட்டியிலிருந்து வத்தலக்குண்டு , குன்னுவாரன்கோட்டை, கன்னாபட்டி உள்ள ஏரிகள் எல்லாம் நிரப்பப்படவில்லை. வத்தலக்குண்டு பகுதி இருபோக நெல்விளையும் . வாழை கரும்பு மற்றும் வெற்றிலை சாகுபடி செய்யப்படும் . பெரியகுளம் போகும் ரோட்டின் இருபுறங்களிலும் வெற்றிலை
விற்கப்படும் . வெற்றிலை அமோகமாக சாகுபடி செய்ததால் வெற்றிலைக்குண்டு என்று பெயர் வந்தது . அது மருவி வத்தலக்குண்டு என பெயரிடப்பட்டது. ஆங்கிலேயர்கள் Bataலgundu என்று அழைத்தார்கள் . இருபோகம் நெல் விளைவித்த வத்தலக்குண்டு இன்று ஒரு போகத்திற்கே திண்டாடுகின்றது .
வத்தலக்குண்டுக்கு தண்ணீர் தொட்டியை மூதறிஞர் ராஜாஜி அவர்கள் திறந்து வைத்தார்கள் . வத்தலக்குண்டு தண்ணீர் இளநீர் போன்று இருக்கும் . இன்று வத்தலக்குண்டும் குடிநீர் தட்டுப்பாட்டில் தவிக்கின்றது . மஞ்சளாறு தண்ணீர் மேலே சொல்லப்பட்ட நிலங்களை எல்லாம் செழிக்க வைத்து மீதமுள்ள தண்ணீர் கட்டாத்து அய்யம்பாளையத்தில் வைகையில் சேரும் .
குடவனாறு அணை {காமராஜர் -- சாகர்}
குடவனாறு கீழ்பழனிமலையில் உற்பத்தியாகி கீழே வருகின்றது . அதில் வரும் வண்டல் மண் நிலங்களுக்கு கிடைக்கும் .அதனால் சித்தையன் கோட்டை சம்பா நெல்லுக்கு கிராக்கி அதிகம். திண்டுக்கல்லுக்கு சிறுமலை அடிவாரத்தில் உள்ள ஒடுக்கம் ஊற்றிலிருந்து தண்ணீர் கொண்டு வரப்பட்டது. அது போதவிலை. ஆனதால் திண்டுக்கல் பிரமுகர்கள் குடவனாற்றிலிருந்து தண்ணீர் கொண்டு வரவேண்டும் என்று அரசாங்கத்தை வற்புறுத்தினர். இப்போது காமராஜர் சாகர் அணை தண்ணீர் போதாதால் வைகை ஆற்றில் கிணறு வெட்டி அதிலிருந்து திண்டுக்கல்லுக்கு தண்ணீர் கொண்டு செல்லப்படுகின்றது . இதை முதலிலேயே செய்திருக்கலாம் அல்லவா ? திரு . பக்தவச்சலம் அவர்கள் காமராஜர் அணைக்கட்டு கட்டுவதற்கான இடத்தைப் பார்த்துப் போனார் . நானும் கூடப்போனேன் . அணையை மேலே கட்டுவதாகத்தான் சொல்லப்பட்டது . ஆனால் கீழே இறக்கிக் கட்டிவிட்டார்கள் . திரும்பிவரும்பொழுது ஆத்தூர் விவசாயிகள் காரை மறித்து அணைக்கட்டக்கூடாது என்று சொன்னார்கள் . திண்டுக்கல் நகருக்கு தண்ணீர் தேவைப்படுகிறது . உங்களைப் பாதிக்காது என்றார் . ஆனால் திண்டுக்கல்லுக்கு மாத்திரம் அல்ல . போகும் வழிகள் உள்ள எல்லா கிராமங்களுக்கும் தண்ணீர் கொடுக்கப்பட்டது . குடவனாற்றில் அணைக்கட்டும்போது அணைக்கு ஒரு வாய்க்காலும் , விளைச்சல் நிலங்களுக்கு ஒரு வாய்க்காலும் விடப்பட்டது . விவசாயிகளுக்கும் விடும் வாய்க்காலில் கல்லணை கட்டி வாய்க்காலை இரண்டாகப் பிரித்தார்கள் . ஒரு பகுதி பெரிய அத்திக்குளம் , சின்ன அத்திக்குளம் , ஏத்தல் , சொட்டாங்குளம் பாய்ந்து வஞ்சி ஓடையில் மறுகால் போகும் . மற்றொரு வாய்க்கால் புளியங்குளம் , புல்வெட்டி கண்மாய் , சித்தையன் கோட்டை கண்மாய் , செங்கட்டான்பட்டி கண்மாய் பார்த்து மறுகால் போகும் . இந்த நீர் வஞ்சி ஓடையில் கலக்கும் . ஆனால் 1957- ல் அரசியல்வாதிகள் கல்லணையை உயர்த்திக் கட்டி ஏத்தல் சொட்டாங்குளம் வரும் தண்ணீரைக் குறைத்து செங்கட்டான்பட்டி கண்மாய் மறுகாலை தடுத்து நிறுத்தி சில்க்குவார்பட்டிக்கு தண்ணீர் கொண்டு போய் விட்டார்கள். இது எப்படி நியாயமாகும் . ஏற்கனவே இருந்த பாசனமுறையை ஒரு சில அரசியல்வாதிகள் அவர்கள் இஷ்டம்போல
தண்ணீரை எடுப்பது குற்றமாகும் . ஆனால் அரசாங்கமே ஷட்டரை உடைத்து தண்ணீர் வரும் காலத்தில் தண்ணீரும் மணலும் சேர்ந்து வரவேண்டும் . விவசாயிகளை காமராஜர் சாகரில் உள்ள வண்டலை தங்கள் நிலங்களுக்கு எடுத்துச் செல்ல அனுமதிக்க வேண்டும் . முன்புபோல் கல்லணையைத் தாழ்த்திக்கட்டி ஏந்தல் , சொட்டாங்குளங்களுக்குத் தண்ணீர் விடவேண்டும் . செங்கட்டாம்பட்டி கண்மாய் மறுகாலை தடுத்து கட்டிய கட்டிடத்தை இடித்து வழக்கம்போல் அந்த மறுகால் தண்ணீர் ஓட வேண்டும் . திண்டுக்கல்லுக்கு அணைப்பட்டியிலிருந்து வைகை ஆற்றில் தோண்டப்பட்ட கிணற்றிலிருந்துதான் தண்ணீர் எடுக்க வேண்டும் . அணைகள் எல்லாவற்றையும் தண்ணீர் தேக்காமல் Free Flow ஆக விட்டால் மதுரை மாவட்டத்துக்குக் குடிநீர் பஞ்சமும் வராது . விவசாயமும் முறையாக வளரும் .
மருதாநதிஅணை:-
மாருதாநதி கொடைக்கானல் தாலுகா,தாண்டிக்குடிக்கும்,பண்ணைக்காட்டுக்கும் இடையே உள்ள வனப்பகுதியில் ஆரம்பித்து அய்யம்பாளையம் , பட்டிவீரன்பட்டி , வாடிப்பட்டி , முத்துலாபுரம் வழியாக ஓடும் . இதுவும் கட்டாத்து அய்யம்பாளையத்தில்
வைகையோடு கலக்கும் .ஆங்கிலேயர் காலத்தில் கொடைக்கானலுக்கு திண்டுக்கல் ,ஆத்துர், பெரும்பறை , கானல்காடு , மங்களங்கொம்பு , தாண்டிக்குடி , பண்ணைக்காடு வழியாக சாலை போட நடவடிக்கை நடந்தது . மலை ஏரியாவாலும் , விவசாயிகள் எதிர்ப்பாலும் , மருதாநதி வெள்ளத்தில் ஆவணங்கள் எல்லாம் மருதாநதி உற்பத்தியாகி வரும் இடத்திலேயே வெள்ளத்தால் அடித்துச் செல்லப்பட்டதாலும் தான் இப்பொமுது இருக்கும் காட்ரோடு போடப்பட்டது. மருதாநதியில் வெள்ளம் அந்த அளவுக்கு ஓடும். இப்பொமுது அந்த ஊற்று இருக்கும் இடம் தெரியவில்லை. வனங்கள் எல்லாம் அழிக்கப்பட்டது. மழை குறைந்துப் போய்விட்டது. நதியில் நீர் வரத்தும் குறைந்துவிட்டது. அய்யம்பாளையம், கோம்பையிலும் மலேரியாக்காய்ச்சல் அதிகம்.
மருதாநதியை அய்யம்பாளையத்தில் தாண்டிக்குடி ரோட்டைக் கடக்கும் இடத்தில் பெரிய பெரிய கல்லால் அணைப் போட்டு தண்ணீரை கால்பாவுக்கு ஒரு வாய்க்கால் , மற்றொருவாய்க்கால் தாமரைக்குளம் , கருங்குளம் , சொட்டங்குளம் பாய்ந்து வஞ்சி ஓடையில் ஓடும் . வஞ்சி ஓடையில் மருகால் போகும் . அணையால் தேக்கப்பட்டபோதிலும் மருதாநதியில் கீழே பட்டிவீரன்பட்டி , முத்துலாபுரம் வகையறா ஊர்களுக்கும் , வாடிப்பட்டி கண்மாயையும் நிரம்பி மறுகால் வழியாக வஞ்சி ஓடையில் சேரும் . வஞ்சி ஓடையை நேரில் பார்த்தால் காலங்காலமாக இந்த ஓடையில் எவ்வளவு தண்ணீர் போயிருக்கும் என்று தெரியும் . மருதாநதியில் 7 மாதம் தண்ணீர் ஓடும் . வஞ்சி ஓடையில் 8 மாதம் ஓடும் . வஞ்சி ஓடை , சொட்டாங்குள்ம் மறுகாலிலிருந்து சுமார் 10 மைல் தூரம் ஓடித்தான் கட்டாத்து அய்யம்பாளையத்தில் சேரும் . ஆகவே வைகை ஆற்றில் வருடம் எல்லாம் தண்ணீர் ஓடும் .
அப்படி ஓடும் தண்ணீர் அய்யம்பாளையம் , பஞ்சந்தாங்கி , வனக்கோம்பை , அய்யம்பாளையம் கண்மாய்கள் பாசனம் எல்லாம் கன்னிவாடி ஜமீனைச் சேர்ந்தது . விவசாயிகளின் பொறுப்பில் தண்ணீர் விநியோகிக்கப்பட்டது . பட்டிவீரன்பட்டியிலிருந்து மற்ற கிராமங்கள் எல்லாம் நிலக்கோட்டைத் தாலுகாவைச் சேர்ந்தது . அய்யம்பாளையம் கோம்பையில் அணைக்கட்ட வேண்டும் என்று சில விவசாயிகளும் , அணைக்கட்ட வேண்டாம் என்று ஒரு சிலரும் அரசாங்கத்துக்கு மனு போட்டனர் . ஆனதால் அரசாங்கம் இந்த மனுக்களை எல்லாம் சேர்த்து Chief Engineer . அவர்களுக்கு அனுப்பி வைத்தது . இந்த அணைதான் இரண்டு இன்ஜினியர்களால் பார்வையிடப்பட்டு வெவ்வேறு ரிப்போர்ட் கொடுக்கப்பட்ட அணை . முதலில் மருதாநதியை பார்வையிட்ட இன்ஜினியர் நதியில் தண்ணீர் பற்றாது , வேண்டுமானால் மேலே ஒரு Pick up Dam போட்டு நதியின் ஓட்டத்தைக் கட்டுப்படுத்தலாம் . மக்கள் மனுவில் சொல்லப்பட்ட மனுக்களின்படி அணை கட்டினால் ஏராளமான மா , தென்னை தோப்புகள் அணையில் மூழ்கிவிடும் . அப்படி முழ்கினால் விவசாயிகளுக்கு நஷ்ட ஈடு கொடுக்க வேண்டியதிருக்கும். அணையை கீழே இறக்க சிறிய விவசாயிகள் பலர் பாதிக்கப்படுவார்கள் என்பதால் அணைக்கட்ட வேண்டாம் என்று அரசாங்கத்துக்கு ரிப்போர்ட் அனுப்பி விட்டார் . அந்த இன்ஜினியரும் ரிட்டையர்ட் ஆகிவிட்டார். வேறு இன்ஜினியர் அந்த இடத்துக்கு வந்தார். அரசாங்கமும் மாறி விட்டது ஆனதால் அரசாங்கம் எப்படியும் அணைக்கட்டித் தீரவேண்டும் என்ற பிடிவாதத்தால் இன்ஜினியரைக் கூப்பிட்டு அணை கட்டுவதற்கான ரிப்போர்ட் எழுதும் படியும் , முந்திய இன்ஜினியர் எழுதிய ரிப்போர்ட்டை பைலில் இருந்து அப்புறப்படுத்தியும் , மதுரை மாவட்ட ஆட்சியரை நேரில் கூப்பிட்டு அணைக்கட்ட வேண்டும் என்று ரிப்போர்ட் எழுதி அனுப்புமாறும் உத்தரவிட்டார் . இன்ஜினியர் அணையிலிருந்து தெற்கு வாய்க்கால் , வடக்கு வாய்க்காலாகவும் வெட்டி தண்ணீர் பாய்ச்சலாம் என்றும் , வத்தலக்குண்டுக்குக் கீழே ஏற்கனவே மஞ்சளாறு பாய்ந்த கண்மாய்களையும் சேர்த்து அணைக்கட்டுவதற்கு பல ஆயிரக்கணக்கான அதிகப்படி நிலங்கள் எழுதியதுடன் சொட்டாங்குளத்தையும் , வஞ்சி ஓடையையும் விலக்கிவிட்டார் . ஆனதால் ஆயிரம் ஆயிரம் ஆண்டுளாக தண்ணீர் ஓடிக்கொண்டிருந்த வஞ்சிஓடை வஞ்சிக்கப்பட்டது . கலெக்டர் அவர்களும் முதல்வர் அவர்கள் உத்தரவுப்படி அணைக்கட்டலாம் என எழுதிவிட்டு , லீவு போட்டு சென்னை சென்றுவிட்டார் . அணையில் தண்ணீர் ஓடவில்லை . தண்ணீரும் மணலும் தேக்கி வைக்கப்பட்டதால் ஆற்றில் ஓடவில்லை . தண்ணீரும் மணலும் தேக்கி வைக்கப்பட்டதால் ஆற்றில் மணல் எடுத்து ஆறு 10 அடி ஆழம் பள்ளமாக போய்விட்டது . நிலத்தடி நீர் வற்றிவிட்டது . மணல் திருட்டு , கள்ள வியாபாரம் ஆரம்பமாகிவிட்டது . சுமார் 10 மைல் ஓடும் வஞ்சி ஒடையில் இரு பக்கங்களிலும் தென்னை மற்றும் நெல் பயிரிடப்பட்டு வந்தன் . வஞ்சி ஓடையில் இப்போது பல ஆயிரக்கணக்கான தென்னை மரங்கள் பட்டும் போய்விட்டது . நிலங்களில் எந்த பயிரும் சாகுபடி செய்யப்படவில்லை . மாடுகளுக்குக் கூட புஞ்சைப் பயிர்கள் மேலாகத்தான் விளைச்சல் செய்யப்பட்டு வருகிறது . வத்தலகுண்டு - திண்டுக்கல் ரோட்டிலும் , வத்தல்குண்டு- மதுரை போகும் ரோட்டிலும் வஞ்சி ஓடைகளை ஏற்கனவே பாலங்கள் அமைக்கப்பட்டிருக்கின்றது . பல் ஆயிரக்கனக்கான தென்னை மரங்கள் பட்டுப்போய் விட்டன . விவசாய வேலை இல்லாததால் தங்களுடைய பழைய தொழிலை ஆரம்பித்து விட்டார்கள் . அணைக்கட்டி முடிந்தது . பெரிய விவசாயிகள் மாந்தோப்பும் , தென்னந்தோப்பும் நீரில் மூழ்கின . விவசாயிகள் நஷ்ட ஈடுக் கோரி திண்டுக்கல் சப் - கோர்டில் கேஸ் தாக்கல் செய்தார்கள் . அதற்கு கோர்ட் நஷ்ட ஈடு 1 1/2 கோடி ரூபாய் கொடுக்க உத்தரவிட்டது . ஹைகோர்ட்டும் கீழ்க்கோர்ட் ஆணையை அங்கீகரித்து ரூபாயை உடனே கொடுக்க உத்தரவிட்டது. ரூபாயை அரசாங்கம் கொடுத்துவிட்டு உச்ச நீமன்றத்துக்கு அப்பீல் செய்தது. சுமார் 25 ஆண்டுகள் ஆகின்றன. கேஸ் என்ன ஆயிற்று தமிழக அரசாங்கத்தின் பிடிவாதத்தால் அரசாங்கத்துக்கு ஒரு கோடி ரூபாய் நஷ்டம் . அதை இப்பொழுது யாரும் கேட்கவில்லை . எல்லா கட்சிக்காரர்களும் மறந்துவிட்டனர் . மருதாநதி அணைக்கட்டால் அணையில் தண்ணீர் இருக்கின்றது . ஆனால் அய்யம்பாளையம் , பட்டிவீரன்பட்டி , வாடிப்பட்டி ஆகிய ஊர்களில் குடிநீர் பஞ்சம் . இன்ஜினியர் தண்ணீர் திறந்துவிட மறுத்துவிட்டார் . திண்டுக்கல் மாவட்ட ஆட்சியர் டாக்டர் செந்தில்குமார் ஜ . ஏ .எஸ் ., அவர்கள் அணையை நேரில் பார்த்து 4 நாட்களுக்கு தண்ணீர் திறந்துவிடும்படி ஆணைப்பிறப்பித்தார் . வாடிப்பட்டியில் ஒரு கட்டத்தில் சிலர் தண்ணீர் கேட்டிருக்கின்றார்கள் . தண்ணீர் இல்லை தேநீர் தருகின்றேன் என்று சொல்லியிருக்கின்றார் மாண்புமிகு முதலமைச்சர். அவர்கள் மேட்டூர் அணையிலிருந்தும் , பரம்பிக்குளம் அணையிலிருந்தும் குடிதண்ணீருக்காக அணைகள் திறக்கும்படி உத்தரவு கேட்டிருக்கின்றார்கள் . வைகை அணையும் மதுரை குடிநீருக்காகத்தான் திறக்கப்பட்டிருக்கின்றது . மஞ்சளாறு , குடவனாறு , மருதாநதி அணைகள் எல்லாம் திறந்துவிட்டால் வைகை ஆற்றுக்கு மேற்கொண்டு குடிநீர் கிடைக்கும் . நிற்க , மருதாநதி பாசனசெப்பனிடுவதற்க்காக ரூ . 1. . 45 கோடி ரூபாய் உலக வங்கி கடன் கொடுத்திருப்பதாகவும் , வேலைகள் நடப்பதாகவும் , வத்தலக்குண்டு துணைப்பொறியாளர் பத்திரிக்கையில் அறிக்கைக் கொடுத்தார் . என்ன வேலை நடக்கின்றது என்று எழுதிக் கேட்டேன் . பதில் இல்லை . சம்பந்தப்பட்ட அமைச்சர் அவர்களுக்கும் தமிழில்தான் எழுதினேன் . பதில் இல்லை . சில மாதங்கள் கழித்து அதே இன்ஜினியர் கண்மாயை பாதுகாக்க 4 சங்கங்கள் அமைத்திருப்பதாகவும் இன்னும் 2 சங்கம் அமைக்கப்படும் என்று பத்திரிக்கையில் அறிக்கை விடுத்தார் . எனக்கு தெரிந்தவரையில் வடக்கு வாய்க்கால் , தெற்கு வாய்க்கால் தூர்ந்து போய்விட்டது . சங்கங்கள் வேலை செய்யவில்லை . அதற்காக என்ன செலவு என்பது தெரியவில்லை . நன்றாக இருந்த மண் வாரியை இரண்டுதரம் இடித்துக் கொண்டிருந்தனர் . தண்னீரே விடாத வஞ்சி ஓடையில் ஒருநாள் மணல் வாரி இன்ஜின் வேலை செய்திருக்கின்றது . எங்களுடைய் Reparian Right பறிக்கப்பட்டு இருக்கின்றது . ஆனதால் ஒன்றுபட்ட மதுரை ராமநாதபுரம் மாவட்டங்களைப் பொறுத்தமட்டில் வைகை அணை , மஞ்சளாறு அணை , காமராஜர் சாகர் அணை , மருதாநதி அணை இந்த அணைகள் எல்லாம் முற்றிலுமாக திறக்கப்பட்டு தண்ணீரும் , வண்டல் மண்ணும் சேர்ந்து நதியில் ஓட வேண்டும் . இதுதான் நிலத்தடி நீரையும் , குடிநீர் பஞ்சத்தையும் , மணல்திருட்டையும் , நிறுத்தும் சகல ரோக நிவாரணி . வைகையில் சிவகங்கை மாவட்டத்தில் ஒரு இடத்தில் பெப்சி கோலா கம்பெனிக்கு தண்ணீர் எடுக்க லைசென்ஸ் கொடுக்கப்பட்டதாகக் கேள்வி . அப்படியானால் அதை நிறுத்திட வேண்டும் . விவசாய வல்லுநர்கள் , இன்ஜினியர்கள் , அறிவாளிகள் மற்றும் பலர் ஆழ்ந்து சிந்தித்து ஒன்றுபட்ட ஓர் முடிவு எடுக்குமாறு கேட்டுக்கொள்கிறேன் . முக்காலத்தில் நமது முன்னோர்கள் ஆற்றங்கரையில்தான் குடியேறினார்கள் . மதுரை மாநகரில் எத்தனை கண்மாய்கள் இருந்தன . அவைகளெல்லாம் மூடப்பட்டு வீடுகள் கட்டப்பட்டது . சமீபத்தில் கோர்ட் கூட ஒரு கண்மாயில் கட்டப்பட்டதுதான். வைகை ஆற்றின் உப நதிகளான மஞ்சளாறு ,மருதாநதி குடவனாறு இவைகளில் எல்லாம் அணை கட்டி வைகைக்கு தண்ணீர் வராமல் எப்படி தடுக்கலாம் ? கர்நாடக அரசு கபினி , ஷேங்கி அணை கட்டியதால் காவேரியில் தண்ணீர் வரவில்லை . நாம் உச்சநீதி மன்றத்திற்கு போனோம் . வைகைக்கு வரும் தண்ணீரை தடுத்து அணை கட்டியது எப்படி நியாயமாகும் . வைகை அணை உட்பட தமிழ் நாட்டில் கட்டப்பட்ட அணைகள் எல்லாம் நமக்குநாமே தோண்டிய புதைகுழிகள் ஆகும் . ஆனதால் எல்லா அணைகளையும் திறந்துவிட்டு ஆறுகளில் ஏற்பட்ட குழிகள் எல்லாவற்றையும் மூட வேண்டும் . குழிகள் எல்லாம் மூடப்பட்ட பின்புதான் மணல் எடுக்க வேண்டும் . இதில் அரசாங்கமும் , பொதுமக்களும் இணைந்து செயல்பட வேண்டும் . தேவைப்பட்டால் உயர்நீதிமன்றத்தில் இந்தப்பிரச்சனையை எடுத்துரைத்து நீதி மன்ற உத்தரவு வாங்கவேண்டும் .
அனுப்பியவர்: சிவகாசி திலகபாமா
•This e-mail address is being protected from spambots. You need JavaScript enabled to view it•
•<• •Prev• | •Next• •>• |
---|