- அண்மையில் ஓவியர் கெளசிகனுடன் மின்னஞ்சல் மூலம் நடைபெற்ற நேர்காணலிது. - பதிவுகள் -
ஓவியர் கெளசிகன் தன்னைப்பற்றி........
1963ம் ஆண்டு நவம்பர் மாதம் 18 திகதி பதுளையில் பிறந்தேன். கொழும்பு கொட்டாஞ்சேனையில் U.C. மெதடிஸ்ட் கல்லூரியில் G.C.E. O/L வரை கல்விகற்றேன். 1980 களில் சிந்தாமணி பத்திரிகையில் பகுதிநேர ஓவியராக கடமையாற்றினேன். அதன்பின்னர், 1990 களில் தினகரனில் பத்திரிகையில் பகுதிநேர ஓவியராக கடமையாற்றினேன். 1994 முதல் தொழில்முறை ஓவிய ஆசிரியராகவும், 1998 முதல் ஒரு தொழில்முறை கணினி வரைகலைஞராகுவும், இணையத்தள பக்க வடிவமைப்பாளராகவும் கடமையாற்றி வருகிறேன். 2003 இலிருந்து தொடர்ச்சியாக 11 ஓவியக்கண்காட்சிகளை எனது மாணவர்களை இணைத்துக் கொண்டு நடாத்தியுள்ளேன். 2018 இல் முதன் முதலாக இந்தியாவில் கொல்கத்தாவிலுள்ள சாந்திநிகேதனில் எனது கண்காட்சி ஒன்று அரங்கேறியது. இலங்கையிலிருந்து சாந்திநிகேதன் சென்று ஓவிய கண்காட்சி ஒன்றை நடாத்திய முதல் இலங்கையர் என்பதில் பெருமிதம். சென்ற மாதம் தமிழ் இலங்கையின் பாரம்பரிய மற்றும் நவீன கலைகளின் கலைஞர்களுக்கான 2019 மாநில விருது வழங்கும் விழாவில் தேசிய ஒருங்கிணைப்பு, உத்தியோகபூர்வ மொழிகள், சமூக முன்னேற்றம் மற்றும் இந்து மத மற்றும் கலாச்சார விவகாரங்கள் திணைக்களம் ஆகியவற்றால் "கலைச்சுடர்" என்ற பட்டத்தை கௌரவ அமைச்சர் மனோ கணேசன் அவர்களினால் எனக்கு வழங்கப்பட்டது.
கேள்வி: உங்களுக்கு ஓவியத்துறை மீதான ஆர்வம் எப்பொழுது ஏற்பட்டது? ஏன்?
ஓவியர் கெளசிகன்: வணக்கம். எனது ஒன்பதாம் பத்தாம் வயது என நினைக்கிறன். செய்தித்தாள் மற்றும் புத்தகங்களில் வரும் சில படங்களை trace பண்ணித்தான் எனது ஓவியக்கலையை வளர்த்துக்கொண்டேன். அதோடு trace பண்ணி
முடித்தவுடன், மூல படத்தின் இருக்கும் விவரங்கள் பார்த்து பார்த்து வரைய பழகினேன். ஓவியத்தில் ஏன் ஆர்வம் வந்தது என்று குறிப்பிட்டு சொல்லமுடியவில்லை காரணம், சிறுவயதிலேயே வரைய ஆரம்பித்துவிட்டதினால் என்றே நினைக்கிறேன்.
கேள்வி: உங்களது ஓவிய ஆர்வத்துக்கு ஆரம்பத்தில் ஓவியர்கள் எவரினதும் ஓவியங்கள் காரணமாக இருந்துள்ளதா?
ஓவியர் கெளசிகன்: எனது நினைவிக்கு தெரிந்தவரை அப்படி இல்லை. எந்த ஒரு ஓவியரையும் பின்பற்றவில்லை. எனக்கு சுயமாகவே ஓவியம் வரையும் திறமை இருந்ததாகவே நான் நினைக்கிறேன். ஆனால், நடிகர் திலகம் அவர்களின் புகைப்படங்கள் பத்திரிகைகளில் வரும்போது அவற்றைத்தான் அதிகமாக நான் சிறுவனாக இருக்கும்போது வரைந்து பழகியிருக்கின்றேன். இந்த பயிற்சிதான் என்னை ஒரு முழுமையான உருவப்பட ஓவியனாக ஆக்கியது என்பதை மறுக்கமுடியாது.
கேள்வி: உங்களது ஓவிய ஆர்வத்துக்கு ஆரம்பத்தில் ஓவியர்கள் எவரினதும் ஓவியங்கள் காரணமாக இருந்துள்ளதா?
ஓவியர் கெளசிகன்: எனது பத்து பன்னிரண்டு வயதுகளில் ஒரு ஓவியரைப் பார்த்து நான் ஈர்க்கப்பட்டேன் என்று நினைத்துப்பார்க்க முடியாது. காரணம் 1970, 80 களில் இணையம், கணணி என்றெல்லாம் ஒன்றுமே அன்றைய காலகட்டத்தில்
இருக்கவில்லை. ஆகவே,எனக்கு என்ன வந்ததோ, என்ன தோன்றியதோ அவற்றை தான் நான் வரைந்து வந்தேன்.
கேள்வி: உங்களுக்குப் பிடித்த ஓவியர்கள் பற்றி, அவர்களது உங்களுக்குப் பிடித்த படைப்புகள் பற்றிக் கூறுங்கள்.
ஓவியர் கெளசிகன்: எப்பொழுதுமே, ராஜா ரவிவர்மா, வின்சென்ட் வான் கோக், பிக்காசோ அவர்களது ஓவியங்கள் மிகவும் பிடிக்கும். அதோடு, சில வட இந்திய ஓவியர்களின் பாணிகள் மிகவும் பிடிக்கும்.
கேள்வி: சஞ்சிகைகள், பத்திரிகைகளில் உங்கள் ஓவியங்கள் வெளியாகியுள்ளனவா? அவை பற்றியும் அறியத்தாருங்கள்.
ஓவியர் கெளசிகன்: ஆமாம், 1980 களில், தினபதி சிந்தாமணி பத்திரிகைகளுக்கு சிறுகதைகளுக்கான ஓவியங்கள், அரசியல் கேலிச்சித்திரங்கள், சிறுவர்களுக்கான கதை சித்திரங்கள் என பலவகையான ஆக்கங்கள் செய்துள்ளேன். அதன் பின்னர், நீண்ட
காலம் தினகரன் பத்திரிகைக்கும் மேற்குறிப்பிட்ட ஓவியங்களை வரைந்துள்ளேன். அவற்றைத்தவிர, ஒவ்வொரு வருடமும் நான் எனது மாணவர்களுடன் இணைந்து ஓவியக்கண்காட்சிகளை நடத்தி வருகிறேன். 2018ல் இந்தியாவின் கொல்கத்தாவில்
உள்ள வங்கக்கவிஞர் ரபீந்திரநாத் தாகூர் அவர்களின் பல்கலைக்கழகங்கள் அமைந்துள்ள சாந்திநிகேதனில் எனது ஓவியக்கண்காட்சி ஒன்று மாணவர் ஒருவருடன் இணைந்து இரு தினங்களுக்கு நடைபெற்றது. சாந்திநிகேதன் சென்று கண்காட்சி நடாத்திய முதல் இலங்கை ஓவியர்கள் என்ற பெருமையை இக்கண்காட்ச்சில் நாம் பெற்றோம்.
கேள்வி: புனைகதைகளை இரசிப்பவர்கள் அவற்றின் மொழி, பொருள், பாத்திரப்படைப்பு போன்ற விடயங்கள் மூலம் அவற்றை அறிந்துகொள்வர்கள். பலருக்கு ஓவியங்களை உண்மையில் எவ்விதம் இரசிப்பது என்பது தெரிவதில்லை. கண்ணுக்கு
அழகாகவிருந்தால் மட்டும் சிறந்ததாக எண்ணி விடுகின்றார்கள். அவர்களுக்கு ஓவியங்களை எவ்விதம் இரசிக்கலாம் , முக்கியமான ஓவிய அம்சங்கள் எவை, அவற்றை எவ்விதம் ஓவியமொன்றிலிருந்து இரசிக்கலாம் அல்லது எடை போடலாமென்பது பற்றிய விளக்கத்தினை உங்கள் மொழியில் அனைவருக்கும் புரியும் வகையில் எளிமையாகக் கூற முடியுமா?
ஓவியர் கெளசிகன்: ஓவியங்களை ரசிப்பதென்பது அவரவர் ரசிப்புத்தன்மையை பொறுத்தது. மரபு ரீதியாக வரையபட்ட ஓவியங்களை பொதுவாக எல்லோருமே விரும்புவார்கள். அவர்களில் காட்சிகள், உருவ ஓவியம், விலங்கியல் வாழ்க்கை என
பலவகை ஓவியங்களை விரும்புவார்கள். ஆனால், நவீன ஓவியங்களை ரசிப்பதற்கு ஒருவகை விசேஷமான தகுதி வேண்டும். ஓவியர் தனது படைப்பினூடாக என்ன சொல்கிறாரோ அதை புரிந்துகொள்ள சிலரால் மட்டுமே முடியும். சிலசமயங்களில் ஓர்
ஓவியரின் தனிப்பட்ட சொந்தக்கருத்திற்கு எதிராகக்கூட பார்வையாளரின் கருத்து இருக்கக்கூடும். கண்ணுக்கு அழகாகவிருந்தால் மட்டுமே ஓர் ஓவியம் சிறந்ததாகிவிட முடியாது. ஓவியம் பற்றி தெரிந்தவர்கள் அவற்றிலுள்ள கோடுகள்,
வண்ணத்தெளிப்புக்கள், நிழல் மற்றும் ஒளி போன்றவற்றை வெகுவாக ரசிப்பார்கள். எனவேதான், ஓவியங்களை ரசிப்பதில் ஒருவருக்கொருவர் மாறுபடுவர்.
கேள்வி: ஓவியத்தின் வரலாறு என்றால் அது பல்வகையான கோட்பாடுகளை, இசங்களைக் கடந்து வந்துள்ளது. உங்களது ஓவியப்பாணி பொதுவாக எவ்வகையானது? கியுபிசம் போன்ற நவீன ஓவியப் பாணியிலும் நீங்கள் ஓவியங்கள் வரைவதுண்டா?
ஓவியர் கெளசிகன்: எனது ஓவியங்கள் பொதுவாகவே யதார்த்தமானதாகவும், மரபுசார்ந்ததாகவும் அதேசமயம் நவீன உத்திகளையும் கொண்டிருக்கும். கடந்த ஆகஸ்ட் மாதம் நான் மாணவர்களுடன் இணைந்து நடாத்திய எனது பதினோராவது ஓவிய கண்காட்சியில் 3D முப்பரிமாண ஓவியங்களை முதன்முறையாக அறிமுகப்படுத்தியிருந்தேன். இவ் வகையான ஓவியங்களை இதற்குமுன் இலங்கையில் பார்த்ததில்லை என்று பலபேருடைய பாராட்டுக்களையும் அவை பெற்றன. தற்போது கணனியில் வரையப்படும் டிஜிட்டல் ஓவியங்கள் மிக பிரபலமாகி வருகின்றன. அந்தவகையில், நான் பல டிஜிட்டல் ஓவியங்கள் பலவற்றை எனது கடந்த சில கண்காட்சியில் பார்வைக்கு வைத்திருந்தேன்.
கேள்வி: ஓவியத்தில் ஆர்வமுள்ளவர்களுக்கு நீங்கள் கூறும் அறிவுரையென்ன?
ஓவியர் கெளசிகன்: நாம் கற்றது கை மண்ணலவே என்பதை எப்போதுமே நினைவில் வைத்துக்கொள்ள வேண்டும். பயிற்சிகளை எப்போதுமே கைவிடாமலும், புதிய உத்திகளை கையாண்டும், கற்றுக்கொண்டும் இருக்கவேண்டும். கண்காட்சிகள்
பலவற்றிற்கு சென்று புதிய உத்திகளை கற்றுக்கொள்ளலாம். எல்லாவற்றையும் கவனிப்பதும் ஒரு நல்ல பயிற்சியாகும்.
கேள்வி: ஓவிய ஆற்றலை எவ்விதம் வருமானத்துக்குரிய தொழிலாக ஒருவர் உபயோகிக்கலாமென்று எண்ணுகின்றீர்கள்?
ஓவியர் கெளசிகன்: இது பெரும்பாலும் கொஞ்சம் கஷ்டமான விடயம் தான். ஏனென்றால், ஒரு பெயர் பெற்ற ஓவியராக நீங்கள் இருப்பீர்களானால், எப்படியும் உங்களது பெயருக்காகவே உங்கள் ஓவியங்கள் விலைபோகும். உங்கள் ஓவியங்களை சமூக வலைத்தளங்களில் மற்றும் உங்கள் சொந்த வலைத்தளங்களில் மற்றவர்களுடன் பகிரும் பட்சத்தில் தொழில்ரீதியாக அவை விலைபோக வாய்ப்புகள் உள்ளன.
கேள்வி: நீங்கள் இணையத்தில் வலைப்பதிவு , இணையத்தளம் வைத்துள்ளீர்களா? அவ்விதம் வைத்திருந்தால் அவை பற்றி அறியத்தாருங்கள்.
ஓவியர் கெளசிகன்: ஆமாம், இதுதான் எனது வலைத்தளம் www.graffixxsolution.com இன்னும் முழுமையாக வில்லை. எனது ஓவியங்கள் உள்ளடக்கிய வலைத்தள பக்கங்களை இன்னும் வடிவமைத்துக்கொண்டிருக்கிறேன்.
•This e-mail address is being protected from spambots. You need JavaScript enabled to view it•
•<• •Prev• | •Next• •>• |
---|