ஹருகி முரகாமியின் புதிய சிறுகதையான 'பூனைகளின் நகரம்' (Town of Cats), ஒரு தந்தையிற்கும் மகனிற்கும் இடையினான உறவையும் விலகலையும், விடை காணமுடியா சில கேள்விகளையும் முன்வைக்கிறது. மிக ஏழ்மையில் வாழ்ந்த தகப்பன் தன் மகனையும் ஏழ்மை தெரிந்து வாழவேண்டும் போல வளர்க்கின்றார். தகப்பன் ஒரு ஜப்பான் தொலைக்காட்சி நிறுவனத்திற்கு, அவர்களின் வாடிக்கையாளரின் வீடுகளுக்குச் சென்று சேவைக்கான பணத்தை சேகரிக்கும் தொழிலைச் செய்கின்றார். எல்லோரும் விடுமுறையில் இருக்கும் ஞாயிற்றுக்கிழமைகளில் கூட வீடுகளைத் தட்டி பணத்தை அறவிடுகின்றார். ஞாயிற்றுக்கிழமைகளில் பாடசாலை இல்லாததாலும், சிறுவன் பிறந்த சில மாதங்களிலே தாய் இறந்துவிட்டதால் வீட்டில் ஒருவரும் இல்லையென்றபடியாலும், மகனையும் ஞாயிற்றுக்கிழமைகளில் தன் வேலைக்குத் தகப்பன் கூட்டிச்செல்கின்றார்.
தன் வயதொத்த சிறுவர்கள் எல்லாம் ஞாயிறுகளில் குதூகலமாய்க் கழிக்க தான் மட்டும் இப்படித் தந்தையோடு அலையவேண்டியிருக்கிறதே என இச்சிறுவன் வருந்துகின்றான். வளர வளரத் தந்தை தன்னை ஒருவகையில் தன் தொழிலுக்குப் பாவிக்கின்றார் எனவும் இச்சிறுவன் எண்ணிக்கொள்கின்றான். எனெனில் வீடுகளைத் தட்டும்போது, சிறுவனை முன்னேவிடும்போது பணம் கொடுக்காது சும்மா சாட்டுச் சொல்பவர்கள் கூட குறுகுறுப்புடன் உரிய பணத்தைக் கொடுத்துவிடுகின்றார்கள். தந்தையுடன் இனியும் ஞாயிறுகளில் வரப்போவதில்லையென பதினொரு வயதில் மகன் மறுத்துக் கூறுகின்றார். அப்படி வரவில்லையெனில் உனக்கு உணவுமில்லை, தங்குவதற்கு வீடுமில்லை எனத் தந்தை கூறுகின்றார். இந்த விடயம் அந்தச் சிறுவனின் ஆசிரியருக்குத் தெரிந்து அவர் தந்தைக்கும் மகனுக்கும் இடையில் சமரசம் செய்கின்றார். ஆனால் அன்று தொடங்கிய தகப்பனிற்கும் மகனிற்குமான விரிசல் வாழ்வில் என்றுமே ஒட்டமுடியாத சம்பவமாக ஆகிவிடுகின்றது.
வருடங்கள் பல உருண்டோடிவிட்டன. இப்போது தகப்பன் டோக்கியோவை விட்டுத் தொலைவில் வயதானவர்களைப் பராமரிக்கும் விடுதியொன்றில் இருக்கின்றார். அவர் அங்கே போய்ச் சேர்ந்ததன்பின் ஒன்றிரண்டு தடவைகள்தான் மகன் போய்ப் பார்த்திருக்கின்றார். நல்ல வேலையில் இருக்கும் மகன் ஒரு ஞாயிற்றுக் கிழமை தன் தந்தையைப் பார்க்கப் போகலாம் என்று வெளிக்கிடுகின்றார். ரெயில் பயணத்தில் ஒரு ஜேர்மனிய நூலை வாசிக்கத் தொடங்குகின்றார். அந்த நாவலின் பெயரே 'பூனைகளின் நகரம்'.
ஒரு நகரில் ஒருவன் இருக்கின்றான். அவன் பயணம் செய்ய விரும்புகின்றவனாகவும், எந்தத் திட்டமிடல் இல்லாமல் இடங்களுக்குப் பயணித்துக் கொண்டிருக்கின்றவனாகவும் இருக்கின்றான். ஒருமுறை ரெயினில் போகும்போது, ஒரு அழகான இடத்தைக் கண்டு அந்த இடத்தில் இறங்கிவிடுகின்றான். இவன் மட்டுமே அந்த புகைவண்டி நிலையத்தில் இறங்கி நடந்து போகின்றான். அந்த நகரத்தில் எவரது நடமாட்டங்களையும் காணமுடியவில்லை. ஏதோ பெரிய அழிவு நடந்து மக்கள் எல்லாம் இடம்பெயர்ந்து போய்விட்டார்கள் என நினைத்துக் கொள்கின்றான். மனிதர்கள் நடமாட்டமில்லாததால் அடுத்த இரெயினில் ஏறிப்போகலாம் எனவும் நினைத்துக்கொள்கின்றான். இரவாகின்றது. அந்த நகரத்துக்குப் பூனைகள் வெவ்வேறு இடங்களிலிருந்து வரத் தொடங்குகின்றன. அவை மனிதர்களைப் போல் மூடப்பட்ட கடைகளைத் திறக்கின்றன. வியாபாரம் செய்கின்றன. உணவுக்கடைகளில் உணவருந்துகின்றன. தங்களுக்குள் பேசிக்கொள்கின்றன. நகரம் இப்போது களைகட்டி விட்டது. பூனைகளின் நகரத்தை அந்த நகரிலிருக்கும் மணிக்கூட்டு கோபுரத்துக்கு மேலே ஏறியிருந்து இவன் வேடிக்கை பார்க்கின்றான். இவ்வாறான பூனைகளின் நகரைப் பார்த்து வியப்படைந்து அடுத்த நாளும் தங்கி நின்று பூனைகளை நடவடிக்கைகளை இலயித்துப் பார்க்கின்றான்.
மூன்றாவது நாளும் இப்படி மணிக்கூட்டுக் கோபுரத்தில் இருந்து வேடிக்கை பார்க்கும்போது அதன் கீழே இருந்து பெரிதாகச் சத்தம் வர, அங்கே கூடும் பூனைகள் மனிதவாசனை வருவதை அறிந்து மணிக்கூட்டு கோபுரத்தின் உச்சிக்கு ஏறி வருகின்றன. அவை படை படையாக வருவதைக் கண்டு இவன்,தன்னை அவை தாக்கப்போகின்றதென அஞ்சி ஒடுங்கியபடி இருக்கின்றான். ஆனால் பூனைகளால் அவனைக் காண முடியவில்லை. மனிதவாசனை வருகின்றது என்று மட்டும் அவை தங்களுக்குள் கூறிக்கொண்டு போகின்றன. இப்படிப் பூனைகளைச் சந்தேகப்படவைத்ததால் இனியும் இங்கு இருந்தால் ஆபத்து என அடுத்த நாள் வரும் ரெயினில் ஏறிப் போகத் தயாராக ஸ்ரேசனுக்குப் போகின்றான். அவனைக் கடந்து மதியமும் மாலையும் ரெயின் போகின்றது. ஆனால் அவனுக்காக ஸ்ரெசனில் ரெயின் நிற்கவேயில்லை. அந்த ரெயினை ஓட்டும் எஞ்சினியரைக் கூட அவனால் அவதானிக்க முடிகிறது; ஆனால் அவன் அங்கே நிற்பதாகவோ அல்லது அங்கே ஓரு ஸ்ரேசன் இருப்பதாகவோ எதையும் கணக்கெடுக்காது ஒவ்வொரு முறையும் ரெயின் இவனைத் தாண்டிப் போய்க்கொண்டிருக்கின்றது. இறுதியில் அவன் முற்றுமுழுதாகத் தான் 'தொலைந்துவிட்டேன்' என்பதை உணர்கிறான். மேலும் இது பூனைகளின் நகரமல்ல. இது ஒருவர் தன்னைத்தானே தொலைத்துக் கொள்வதற்கான நகரமே என்பதைக் கண்டடைகிறான். இனி எந்த ரெயினும் நிற்கப்போவதில்லை. தான் ஏற்கனவே வந்திருந்த உலகிற்கு தன்னால் ஒருபோதும் இனி என்றைக்குமாய்த் திரும்பமுடியாது என்பதை உணர்கின்றதாய் அந்த ஜேர்மனியக் கதை முடியும்.
இக்கதையை வாசித்தபடி தந்தை வசிக்கும் நகருக்கு மகன் போகின்றான். இரண்டு வருடங்களுக்கு மேலாய்த் தந்தையைப் பார்க்கவில்லை. தந்தையோ அவனை யாரென்று கேட்கின்றார். 'உங்கள் மகனைத் தெரியவில்லையா? என இவர் கேட்க, 'எனக்கு ஒரு மகனும் இல்லை' என்கின்றார் தந்தை. 'நான் உங்கள் மகனில்லை என்றால், நான் யார்?' என்கின்றார் இவர். தந்தையோ 'You were nothing, you are nothing, and you will be nothing.” என்கிறார். தந்தை இப்படிக் கூறியவுடன் இவருக்குத் தான் வாசித்த 'பூனைகளின் நகரத்தில்' கதாபாத்திரமாய் வந்த தொலைந்த மனிதனைப் போல ஆகிவிட்டேன் போலத் தோன்றுகின்றது.
இதுவரை ஓர் இரகசியமாக தனக்குள் வைத்திருந்து, தந்தையிடம் கேட்காத கேள்வியைக் கேட்கின்றார், 'நான் உங்கள் சொந்த மகன் இல்லையா?'. எனெனில் உண்மையில் மகனிற்குத் தெரியும், தனது தாய் தான் பிறந்தவுடன் இறக்கவில்லை. அவர் கிட்டத்தட்ட மகன் பிறந்து ஒன்றரை வருடங்களுக்குப் பின்தான் இறந்திருக்கின்றார் என்று. ஆனால் எப்போது தன் தாயைப் பற்றிக் கேட்டாலும் தந்தை தாயைப் பற்றிக் கதைப்பதை ஒருபோதும் விரும்புவதில்லை என்பதையும் மகன் நினைவில் கொள்கிறார். மகனின் நினைவுகளில் தாய்...
Tengo fundamentally disbelieved his father’s story. He knew that his mother hadn’t died a few months after he was born. In his only memory of her, he was a year and a half old and she was standing by his crib in the arms of a man other than his father. His mother took off her blouse, dropped the straps of her slip, and let the man who was not his father suck on her breasts. Tengo slept beside them, his breathing audible. But, at the same time, he was not asleep. He was watching his mother.
உண்மையை அறிவதற்கு இதுதான் தருணம் என தந்தையிடம் தொடர்ந்து மகன் கேள்விகளைக் கேட்கின்றார். தந்தையோ சாமர்த்தியமாய் இவரின் கேள்விகளைத் தவிர்த்தபடி வேறெதுவோ பேசியபடி இருக்கின்ரார். தந்தையிற்கு மகன் 'பூனைகளின் நகரம்' கதையை வாசித்துக் காட்டுகின்றார். இறுதியில் 'ஒரு வெற்றிடம் எப்போதும் வெற்றிடமாய் இருப்பதில்லை, அது எதையாவது கொண்டு தன்னைத்தானே நிரப்பிக் கொள்கிறது, அப்படித்தான் தானும்' என்கின்றார் தகப்பன். ஆனால் தான் உண்மையான பயோலாஜிக்கல் மகனா என்பதற்கான பதிலை தகப்பன் மகனுக்கு கூறவேயில்லை. உன்னால் 'ஒரு விளக்கமில்லாது ஒன்றை விளங்கிக்கொள்ள முடியாவிட்டால், ஒரு விளக்கம் இருந்தால் கூட அதை உன்னால் விளங்கிக் கொள்ள முடியாது' என்பதை மட்டும் அடிக்கடி கூறும் தந்தையின் வாசகத்தோடு மகன் விடைபெற கதை முடிகின்றது.
ஹருக்கி முராகமி இந்தக்கதை, எவ்வளவு சிக்கலில்லாத வசனங்களுடன் உள்மனதின் ஆழங்களுக்குச் செல்ல முடியும் என்பதற்கு ஓர் உதாரணம். அவரின் மொழியின் அழகிற்கு இந்தப் பகுதியை வாசித்துப் பார்க்க வேண்டும்.
While math was like a magnificent imaginary building for Tengo, literature was a vast magical forest. Math stretched infinitely upward toward the heavens, but stories spread out before him, their sturdy roots stretching deep into the earth. In this forest there were no maps, no doorways. As Tengo got older, the forest of story began to exert an even stronger pull on his heart than the world of math. Of course, reading novels was just another form of escape—as soon as he closed the book, he had to come back to the real world. But at some point he noticed that returning to reality from the world of a novel was not as devastating a blow as returning from the world of math. Why was that? After much thought, he reached a conclusion. No matter how clear things might become in the forest of story, there was never a clear-cut solution, as there was in math. The role of a story was, in the broadest terms, to transpose a problem into another form. Depending on the nature and the direction of the problem, a solution might be suggested in the narrative. Tengo would return to the real world with that suggestion in hand. It was like a piece of paper bearing the indecipherable text of a magic spell. It served no immediate practical purpose, but it contained a possibility.
தந்தைகளுக்கும் மகன்களுக்குமான உறவென்பது எப்போதும் விசித்திரமானதே. அன்பு காட்ட விரும்புகின்ற தருணங்களில் கூட விலத்தி நிற்கும் பொழுதுகளே பலருக்குச் சாத்தியமாகின்றது. அண்மையில் ஓர் ஆய்வின்படி, ஒரு குடும்பத்தில் ஒன்றுக்கு மேற்பட்ட பிள்ளைகள் இருந்தால் பெற்றோருக்கு ஒரு பிள்ளை மட்டும் அதிகப் பிடித்த பிள்ளையாகி விடுகின்றது என்பது இயல்பு எனக் கூறுகின்றார்கள் (இறுதியாய் வந்த Timeஇல் இது பற்றிய கட்டுரை உள்ளது). சிலவேளைகளில் வளர்ந்த மகனுக்கும் தகப்பனுக்கும் இருக்கின்ற விலகல் கூட இயல்போ எனக்கூட எமக்குத் தோன்றக்கூடும். காஃப்கா தன் தந்தைக்கு எழுதி அனுப்பாத கடிதமும் இந்தக்கணத்தில் நினைவுக்கு வருகின்றது.
- நியூயோர்க்கரில் வந்த கதை
நன்றி: http://djthamilan.blogspot.com/2011/09/town-of-cats-by-haruki-muragami.html
•<• •Prev• | •Next• •>• |
---|