- பிரபல தமிழ் -> சிங்கள் மொழிபெயர்ப்பாளரும், சிங்கள எழுத்தாளருமான திரு.ஜி.ஜி.சரத் ஆனந்த அவர்களுடன் அண்மையில் 'பதிவுகள்' இணைய இதழானது மின்னஞ்சல் வாயிலாக நேர்காணலொன்றினை நடாத்தியது. மின்னஞ்சல் மூலம் அனுப்பப்பட்ட கேள்விகளுக்கு சரத் ஆன்ந்த அவர்கள் விரிவான பதில்களை அளித்துள்ளார். அதற்காக அவருக்கு எமது முதற்கண் நன்றி. இந்நேர்காணலில் அவர் தன்னைப்பற்றி, தான் சிங்கள மொழிக்கு மொழிபெயர்த்துள்ள தமிழ்ப்படைப்புகள் பற்றி, மொழிபெயர்க்க எண்ணியுள்ள தமிழ்ப்படைப்புகள் பற்றி, இவ்வகையான மொழிபெயர்ப்புகள் இனங்களுக்கிடையிலான நல்லுணர்வுக்கும், புரிந்துணர்வுக்கும் ஏன் அவசியமானவை என்பது பற்றி, சமகாலச் சிங்கள கலை, இலக்கியச் செயற்பாடுகள் பற்றி, தான் ஏன் மொழிபெயர்ப்புத் துறைக்கு வந்தார் என்பது பற்றி, தற்போதுள்ள நாட்டின் அரசியற் சூழல் பற்றி, நாட்டின் எதிர்காலம் பற்றி.. இவ்விதம் பல்வேறு விடயங்களைப்பற்றியும் தன் சிந்தனைகளைப் பகிர்ந்துள்ளார்.
இணையம் மூலம், குறிப்பாக முகநூல் வாயிலாக நாம் அடைந்த பயன்கள் ஆரோக்கியமானவை என்பதற்கு இவரைப்போன்ற கலை, இலக்கியவாதிகளுடனான தொடர்புகள், கருத்துப்பரிமாறல்களே பிரதான சான்றுகள். இவரது மொழிபெயர்ப்பில் எனது சிறுகதைகளான 'உடைந்த காலும், உடைந்த மனிதனும்', மற்றும் 'நடு வழ்யில் ஒரு பயணம்' ஆகியன லக்பிமா' சிங்களப் பத்திரிகையின் வாரவெளியீட்டில் வெளியாகியுள்ளன. எனது 'நல்லூர் ராஜதானி நகர அமைப்பு' ஆய்வு நூலினையும் மொழிபெயர்ப்பதில் தற்போது ஈடுபட்டுள்ளார்.
2003 இருந்து இதுவரை இவர் 11 சிறுகதைத் தொகுப்புகளும், 3 நாவல்களும், ஒரு சிறுவர் கதைத் தொகுப்பும், ஒரு கவிதை நூலும் மற்றும் பேராசிரியர் அ. மார்க்ஸ் அவர்களின் ‘புத்தம் சரணம்’ என்ற பௌத்த ஆய்வு நூலையும் சிங்கள மொழியில் மொழிபெயர்த்து வெளியிட்டுள்ளார் என்பது குறிப்பிடத்தக்கது. அத்துடன் சிங்கள் மொழியில் வெளியாகும் பத்திரிகைகள், சஞ்சிகைகளில் 200 சிறுகதைகள் வரையில் இவரது மொழிபெயர்ப்பில் வெளியாகியுள்ளன. இவ்விதமான நேர்காணல்கள், மொழிபெயர்ப்புகளின் தேவை தற்காலச்சூழலில் மிகவும் அவசியமென்று 'பதிவுகள்' கருதுகின்றது. அதனால் இந்நேர்காணலை வெளியிடுவதில் பெருமையுமடைகின்றது.
1. முதலில் உங்களைப்பற்றிய அறிமுகமொன்றினைத் தாருங்கள். உங்களது எழுத்துப்பணியின் ஆரம்பம், குடும்பம் போன்ற விடயங்கள்..?
நான் ஹம்பாந்தொட்டை மாவட்டத்தில் திஸ்ஸமஹாராம (Tissamaharama) நகரத்தில் பிறந்தேன். பிறந்த திகதி 20/06/1972. அப்பா ஒரு விவசாயி. அம்மாவுக்குத் தொழில் இல்லை. (ஒரு குடும்பப் பெண்.) இப்போது அவர்கள் உயிருடனில்லை. மறைந்து விட்டார்கள். எனக்கு எட்டு சகோதர, சகோதரிகள். நான் தான் கடைக்குட்டி. இளையவன். நெதிகம்வில (Nadigamwila) என்ற கிராமத்தில் வாழ்ந்து வருகின்றேன். திஸ்ஸமஹாராம – தெபரவெவ (Debarawewa) தேசீய கல்லூரியில் படித்தேன். பேராதனை பல்கலைக்கழகத்தில் வெளிப்புற மாணவனாக இளங்கலைப் (B.A) பட்டமும், களனிப் பல்கலைக்கழகத்தில் முதுகலைப் (M.A) பட்டமும் பெற்றுள்ளேன். திருமணமாகிவிட்டது. மனைவியின் பெயர் ஸுமித்ரா. ஆரம்பத்தில் ‘லக்பிம’ சிங்கள பத்திரிகையின் நிருபராகப்பணியாற்றினேன். அதுவே என் முதற் தொழில்.
சிறிது காலம் திஸ்ஸமஹாராம பிரிவேனாவில் ஓர் ஆசிரியராகவும் வேலை பார்த்தேன். 2005 ஆண்டிலிருந்து) 'காணி உரித்து நிர்ணயத் திணைக்களத்தில்' (Department of Land Title Settlement) ஓர் அபிவிருத்தி உத்தியோகத்தராக (Development officer) வேலை பார்த்து வருகின்றேன்.
பாடசாலைக் காலத்திலிருந்து சிறுகதைகள், கவிதைகள், கட்டுரைகள் எழுதி வருகின்றேன். அவை பல பத்திரிகை, சஞ்சிகைகளில் வெளியாகியுள்ளன. அவற்றில் சில இலக்கிய போட்டிகளில், சான்றிதழ்கள், பரிசுகள் பெற்றுள்ளன. ஆதலால் ஆர்வம் அதிகரித்தது. அப்படி தான் நான் இலக்கியத் துறைக்கு வந்தேன்.
2. தமிழ்ப்படைப்புகளைச் சிங்கள மொழிக்கு மொழிபெயர்க்க வேண்டுமென்ற ஆர்வம் எப்பொழுது ஏற்பட்டது? தமிழ் மொழியைப் படிக்க வேண்டுமென்ற ஆர்வம் எப்பொழுது ஏற்பட்டது? இவ்வகையான ஆர்வம் ஏற்படுவதற்கு உங்களைத் தூண்டிய விடயங்கள் யாவை?
நான் வாழும் பகுதியில் தமிழ் மொழி பாவனையிலில்லை . கல்விப்பொதுத்தராதர உயர்தரப் (G.C.E - A/L) பரீட்சைக்காக விஞ்ஞான பாடங்களை படிக்கும் காலத்தில் நல்லோர் ஆசிரியரைச் சந்தித்தேன். அந்த ஆசிரியரின் பெயர் M.H.M. நவாஸ். அவர் மூலம் தமிழ் மொழியைப் படித்தேன். A/L முடித்தவுடன் றுஹுண பல்கலைக்கழகத்தில் ‘Certificate course in Tamil language’ படித்து சான்றிதழைP பெற்றுள்ளேன். மற்றும் ‘மாற்றுக் கொள்கைகளுக்கான நிலையம்’ (Centre for policy alternatives) மூலம் நடாத்திய ‘விபாஷா மொழிபெயர்ப்பு நிகழ்ச்சி திட்டத்தி'ல் திறமைச் சித்தி பெற்று, 'டிப்ளோமா' சான்றிதலைப் பெற்றுள்ளேன். அப்பாட நெறியைக் கற்கும்போது பிரபல உரை மொழிபெயர்ப்பாளரான எஸ்.சிவகுருநாதன் அவர்களை சந்திக்கும் சந்தர்பம் கிடைத்தது. தமிழ்ப் படைப்புகளை சிங்களத்துக்கு மொழிபெயர்ப்பதன் முக்கியத்துவம் பற்றி அவர்தான் எனக்கு எடுத்துரைத்தார். இந்தப் பாதைக்கு என்னைக் கொண்டு வந்தவர் அவர். அது மட்டுமல்ல. இலங்கையில் பிரபல தமிழ் எழுத்தாளர்களின் நூல்களையும் அவர் எனக்குத் தந்தார். அவற்றை வாசிக்கும்போது அந்த அனுபவங்களை எனது சிங்கள சமூகத்துக்கும் தர வேண்டும் என நினைத்தேன்.
முதலாவதாக நான் தமிழ்ச் சிறுகதைகளை மொழிபெயர்த்து சிங்கள பத்திரிகைகள், சஞ்சிகைகள் மூலம் வெளியிட்டேன். பிறகு தான் நூல்களாக வெளியிட ஆரம்பித்தேன். என் முதலாம் நூல் தான் ‘பேத நெத்தி ஹதவத்’ (பேதமில்லா நெஞ்சங்கள்) என்ற சிறுகதைத் தொகுப்பு. அது 2003ஆம் ஆண்டில் வெளியானது. 2004ஆம் ஆண்டில் அரசகரும மொழிகள் திணைக்களம் (Department of official languages) நடாத்திய ‘எழுத்துக்கலை மூலம் மொழி அபிவிருத்திக்கும், இன ஒற்றுமைக்கும் வழங்கும் பங்களிப்புக்கான சிறந்த மொழிபெயர்ப்பு நூலைத் தெரிவு செய்வதற்கான போட்டியில்’ முதலாம் இடத்தை அந்த நூல் பெற்றது. அதற்கான பரிசாக 10,000 ரூபாய் பெறுமதியுள்ள ஒரு காசோலையும் கிடைத்தது. என் ஆர்வமும் அதிகரித்த்து. அவ்வாறு தான் இத்துறைக்கு பிரவேசித்தேன்.
3. நீங்கள் மொழிபெயர்ப்புகளைச் செய்யும்போது எவ்வாறு மொழி பெயர்க்கின்றீர்கள்? சிலர் படைப்பொன்றின் சாரத்தை உள் வாங்கி அதனை மொழி பெயர்ப்பார்கள். சிலர் வரிக்கு வரி மொழி பெயர்ப்பார்கள்/ உங்கள் மொழி பெயர்ப்புகள் எவ்விதமானவை.
நல்லொரு கேள்வி தான் அது. எங்களுக்கு செய்திகள், அறிவியல், சட்டம், மருத்துவம், வர்த்தகம், தொழில் நுட்பம் ஆகிய துறைகளில் ‘Word by word’ அல்லது ‘sentence by sentence’ முறையாக மொழிபெயர்க்கலாம். ஆனால் இலக்கியத் துறையில் அந்த படைப்பின் கருத்துக்களை தான் அடுத்த மொழியில் எழுத வேண்டும். நானும் அந்த முறைதான் பின்பற்றுகிறேன். மூலநிலையில் அதனை எழுதியவர் எவ்வெவ்கருத்துக்களைத் தொடர்புறுத்த அதனை எழுதினாரோ, அதே வலுவுடன் மொழிபெயர்ப்பில் அதனைக் கொண்டு வர முடியுமேயானால் அம்மொழிபெயர்ப்பினைச் செய்தவரின் பணி நன்கு நிறைவேற்றப் பட்டுள்ளதாகக் கொள்ளலாம்.
4. இச்சமயத்தில் உங்களுக்குத் தனிப்பட்டரீதியிலும் எனது நன்றியினைத் தெரிவிக்க வேண்டும். அண்மையில் எனது சிறுகதைகளான 'உடைந்த காலும், உடைந்த மனிதனும்', மற்றும் 'நடு வழியில் ஒரு பயணம்' ஆகிய சிறுகதைகளைச் சிங்களத்தில் மொழிபெயர்த்திருக்கின்றீர்கள். அவை 'லக்பிமா' சிங்களப் பத்திரிகையின் வாரவெளியீட்டில் வெளியாகியுள்ளன. அவற்றுக்காக நன்றி. அதற்கு உங்களுக்கு ஒத்துழைத்த 'லக்பிமா'வில் இலக்கியப்பகுதிக்குப் பொறுப்பான எழுத்தாளர் கத்யான அமரசிங்க (Kathyana Amarasinghe ) அவர்களுக்கும் நன்றி. அச்சிறுகதைகளை மொழிபெயர்க்க வேண்டுமென்று உங்களைத் தூண்டியவை எவை? அறிய ஆவலாயுள்ளேன்.
ஈழத்துத் தமிழ் இலக்கியத்தின் அபிவிருத்திக்காக – (விஷேடமாக சிறுகதைத் துறை) வட – கிழக்கு எழுத்தாளர்களும், மலையக எழுத்தாளர்களும், முஸ்லிம் எழுத்தாளர்களும் பிரபலமாக பங்குபற்றினார்கள். நான் அவர்களின் பல படைப்புகளை வாசித்து மற்றும் மொழிபெயர்த்திருந்தேன். ஆனால் உங்கள் சிறுகதைகளுள் அடங்கியுள்ள அனுபவங்கள் அவற்றை விட வித்தியாசமானவை. அபூர்வமானவை. வாசித்த போது அவற்றை சிங்கள வாசகர்களுக்காகத் தர வேண்டும் என நினைத்தேன். மற்றும் எதிர் காலத்தில் உங்கள் 10 – 12 சிறுகதைகளை சேர்ந்து ஒரு மொழிபெயர்ப்புத் தொகுதியாக வெளியிடவும் என்னுள் ஓர் எதிர்பார்ப்புண்டு. உங்கள் அனுமதி கிடைக்கும் எனக்கருதுகின்றேன்.
5. இதுவரையில் சிங்கள மொழியில் நீங்கள் மொழி பெயர்த்த தமிழ்ப்படைப்புகள் பற்றிய விபரங்களைத் தர முடியுமா? அவற்றை மொழிபெயர்க்க உங்களைத் தூண்டியவை எவை?
நான் 2003 இருந்து இதுவரை 11 சிறுகதைத் தொகுப்புகளும், 3 நாவல்களும், ஒரு சிறுவர் கதைத் தொகுப்பும், ஒரு கவிதை நூலும் மொழிபெயர்த்து வெளியிட்டுள்ளேன். மற்றும் பேராசிரியர் அ. மார்க்ஸ் அவர்களின் ‘புத்தம் சரணம்’ என்ற பௌத்த ஆய்வு நூலையும் மொழிபெயர்த்து வெளியிட்டேன். பத்திரிகைகளுக்கும், சஞ்சிகைகளுக்கும் 200 சிறுகதைகள் மொழிபெயர்த்துள்ளேன். சில நூல்கள் மொழிபெயர்க்கும்படி சிலர் கேட்டுக்கொண்டனர். சிலவற்றை நானே தெரிவு செய்து மொழிபெயர்த்தேன். விஷேடமாக இனங்களுக்கிடையில் புரிந்துணர்வுக்கும், சமாதானத்துக்கும் பொருத்தமான படைப்புகளைத் தான் தெரிவு செய்து மொழிபெயர்க்க வேண்டும் என்றும், அது ஒரு கடமை என்றும் நினைத்து ஆசையுடன் அக்காரியத்தைச் செய்கிறேன். முற்போக்கு எழுத்தாளரான நீர்வை பொன்னையனின் சிறுகதைகளை ‘லென்கதுகம’ (பாசம்) என்னும் தலைப்பில் 2006ஆம் வருடத்தில் வெளியிட்டேன். அந்நூலுக்கு அவ்வருடத்துக்குரிய அரச இலக்கிய விருது கிடைத்தது. 2014 வருடத்தில் வெளியிட்ட ‘அலுத் அவியக்’ (ஒரு புதிய ஆயுதம் – முற்போக்குச் சிறுகதைகள்) சிறுகதைத் தொகுப்புக்கும், 2016 ‘ஸரணாகத்த குருலு வத்த’ (அடைக்கலங் குருவிகளின் கதை) சிறுகதைத் தொகுப்புக்கும் ‘கொடகே விருது’ பெற்றுள்ளேன். எஸ். கணேசலிங்கனின் ‘சடங்கு’, ராஜ ஸ்ரீகாந்தனின் சிறுகதைகள், தமிழினியின் படைப்புகளை என்னால் மொழிபெயர்க்கப்பட்ட ஏனைய முக்கிய படைப்புகளாக குறிப்பிடலாம்.
6. நீங்கள் மொழிபெயர்ப்பதுடன், சிங்கள மொழியில் கதைள், கட்டுரைகள் , கவிதைகள் , நாவல்கள் போன்றும் எழுதுவதுண்டா.
ஆம். நான் எழுதிய கவிதைகள், சிறுகதைகள், கட்டுரைகள் ஆகியவற்றைச் சிங்கள பத்திரிகைகள், சஞ்சிகைகள் வெளியிட்டுள்ளன. சில போட்டிகளில் வெற்றியும் பெற்றுள்ளன. ஆனால் இன்னும் என் ஒரு நூலையாவது வெளியிடும் சந்தர்பம் கிடைக்கவில்லை. இப்போதும் 30 – 40 வருடங்களுக்கு முன் இருந்த எமது ஊரை பற்றி, அன்று வாழ்ந்த மக்களின் வாழ்க்கை பற்றி ஒரு நாவலை எழுதிக்கொண்டு இருக்கின்றேன்.
7. தமிழினியின் சிறுகதைகளை மொழிபெயர்த்துள்ளது பற்றிச் சிறிது கூற முடியுமா?
தமிழினியின் சிறுகதைகள் திருமதி லரீனா அப்துல் ஹக்வுடன் சேர்ந்து தான் மொழிபெயர்த்தேன். தமிழினியின் கணவர் திரு ஜெயகுமாரன் அவர்களின் அழைப்பின்பேரில் அவருடைய ஆறு சிறு கதைகளை மொழிபெயர்த்து ‘அலுயம் ஸிஹினய’ (வைகறைக் கனவு) என்று நூலாக வெளியிட்டோம். உண்மையாகவே அது எங்களுக்கு விஷேடமானது. L.T.T.E அமைப்பின் தலைவிகளில் ஒருவராகவிருந்தவரின் ... முன்னாள் ஆயுததாரி ஒருவரின் எழுத்தை மொழிபெயர்க்கும்போது எங்கள் மனதில் ஓடிய எண்ணங்களை........... எப்படிச் சொல்வேன்? மற்றும் தமிழினி எழுதிய கவிதைகளையும் மொழிபெயர்த்தேன். அந்த நூலில் அவருடைய கவிதைகளைப் பற்றி நீங்கள் எழுதிய ஓர் ஆய்வுக் கட்டுரையும் அடங்கியுள்ளது.
8. இணையம், முகநூல் போன்ற சமூக ஊடகங்கள் பற்றிய உங்களது கருத்துகள் எவை? உண்மையில் அவை ஆரோக்கியமானவை என்பதென் கருத்து. அதனால்தான் உங்களூடனான எனது தொடர்பு கூட ஏற்பட்டது.
அவையெல்லாம் விஞ்ஞான வளர்ச்சியின் பயன்கள். நாங்கள் உலகத்துடன் முன்னுக்குப் போக வேண்டும் தானே. ஆதலால் அவை எங்களுக்கு அவசியமானவை. சமுகத்தின் நன்மைக்காக தான் உபயோகப்பட வேண்டும். ஆனால் சிலர் தீமைக்காகவும் உபயோகப்படுகிறார்கள். என்ன செய்வது? நினைத்து பாருங்கள். நீங்கள் கனடாவில் இருந்நு எழுதிய சிறுகதைகளைத் தற்போது இலங்கையின் சிங்கள பத்திரிகைகளும் வெளியிட்டு சிங்கள வாசகர்களும் படிக்கிறார்கள். அதற்கும் காரணம் முகநூல் தான்.
9. தற்போதுள்ள சூழலில் இலங்கையில் நிலவும் சமூக, அரசியல் சூழல் பற்றிய உங்களது சிந்தனைகளைப் பகிர்ந்துகொள்ள முடியுமா? நல்லதோர் எதிர்காலம் தென்படுகின்றதா?
எமது நாட்டில் தற்பொதுள்ள சமூக அரசியல் சூழலைப் பற்றி நினைத்த போது துக்கம் தான் உண்மையில் ஏற்படுகின்றது. நாட்டின் சகல கட்சிகளும், குழுக்களும் தமது அரசியல் நலன்களுக்காக, பலத்துக்காக இனவாதத்தை தோற்றுவிக்கிறார்கள். இலவச கல்வித்துறையிலும் வாதமும், பேதமும் தாம். நல்ல எதிர்காலமொன்று எப்படி தென்படும்? எப்படி எதிர்பார்ப்போம்?
10. எல்லா இனங்களிலுமுள்ள இனவாதிகளின் உணர்ச்சி அரசியலே அனைத்துப் பிரச்சினைகளுக்கும் காரணம் என்பதென் கருத்து. உங்கள் கருத்தென்ன?
நானும் உடன்படுகிறேன். யோ.பெனடிக்ற் பாலனின் ‘மனிதனும் மனிதனும்’ என்ற சிறுகதையில் இப்படி கூறப்பட்டுள்ளது. ‘சிங்கள மக்களும் தமிழ் மக்களும் நல்லவர்கள். சுயநல அரசியல்வாதிகள்தாம் அவர்களின் மனங்களைக் கெடுக்கிறார்கள்.’ அது முழுமையாகவே உண்மை என்றும் நினைக்கிறேன்.
11. எதிர்காலத்தில் நீங்கள் மொழிபெயர்க்கவுள்ள தமிழ்ப்படைப்புகள் இருப்பின் அவற்றைப்பற்றிய விபரங்களையும் பகிர்ந்துகொள்ள முடியுமா?
இவ்வருடத்துக்குள் நானும் லரீனா ஹக்வும் சேர்ந்து மொழிபெயர்த்த எம்.எம். நௌஷாத் அவர்களின் (ஒரு வைத்தியர்) சிறுகதைத் தொகுப்பொன்றை வெளியிடும் எண்ணமுண்டு. மற்றும் இவ்வருடத்துக்குள் உங்களின் ‘நல்லூர் இராஜதானியின் நகர அமைப்பு’ நூலினை மொழிபெயர்த்து முடிக்க எண்ணியுள்ளேன். தொடர்ந்தும் சிங்கள பத்திரிகைகளுக்காக தமிழ் சிறுகதைகள் மொழிபெயர்த்து அனுப்புகிறேன். மற்றும் பெனடிக்ற் பாலனின் ‘சொந்தக்காரன்’ நாவலையும், எஸ். ராமேஸ்வரனின் ஒரு நாவலையும் மொழிபெயர்க்கவுள்ளேன்.
12. உங்களைக்கவர்ந்த சிங்கள, தமிழ் மற்றும் உலக இலக்கிய ஆளுமைகள் யார் யார்? அவற்றைப் பற்றியும் சிறிது கூற முடியுமா?
மார்ட்டின் விக்ரமசிங்கா, எரவ்வல நந்திமித்ரா, குணசேன வித்தானா, ஜே. கம்மெல்லவீரா, திக்குவெல்லை கமால், பராக்ரம கொடித்துவக்கு, எஸ். கனேசலிங்கன், ரத்ன ஶ்ரீ விஜேசிங்ஹா, நீர்வை பொன்னையன், கமல் பெரேரா போன்ற ஈழத்து எழுத்தாளர்களும், அன்ரன் செக்கொப், மோபசான், மக்சிம் கோர்க்கி, ஆர்.கே.நாராயணன் போன்ற உலக எழுத்தாளர்களும் எனக்கு விருப்பமானவர்கள். அவர்கள் எல்லோரும் முற்போக்கு இலக்கியவாதிகள்.நீர்வை பொன்னையன் எழுத்தாளரின் இவ்வாக்கியம் என்னை கவர்ந்ததொன்று: ‘....நாம் உலகை மாற்றி அமைப்பதற்காக எழுதுகின்றோம்.’
13. அண்மைக்காலச் சிங்கள இலக்கியம் பற்றிய சுருக்கமான அறிமுகமொன்றினைத் தர முடியுமா? அங்கு நிலவும் இலக்கியப்போக்குகள், சிறந்த படைப்புகள் (நாவல்கள், சிறுகதைகள், கவிதைகள் போன்ற) பற்றியும் கூற முடியுமா?
ஆம். சமீபத்தில் சிங்கள இலக்கியத் துறைக்கு நல்ல படைப்பாளிகள் வந்துள்ளார்கள். நல்ல நாவல்கள், சிறுகதைகள், கவிதைகள் வெளியாகியுள்ளன. மஹிந்த பரசாத் மஸ்இம்புலாவின் ‘செங்கொட்டங்’, நிஸ்ஸங்க விஜேமான்னாவின் ‘ஹந்த பலுவ தனி தருவ’, கத்யானா அமரசிங்காவின் ‘வன்னதாசி’ போன்ற நாவல்களும், லக்சாந்த அத்துகோரலா, பெனடிக் தர்மசிரி போன்றவர்களின் கவிதைகளும் விஷேடமாக குறிப்பிடலாம். சிங்கள பத்திரிகைகளுக்கும் நல்ல கவிதைகள், சிறுகதைகள் எழுதும் புதிய படைப்பாளிகளும் இருக்கிறார்கள்.
14. சிங்களக் கலை உலகத்தைப்பற்றியும் சிறிது அறிமுகமொன்றினைத் தர முடியுமா? உதாரணமாகச் சிங்களத் திரைப்படங்கள்,கலைத்துவம் மிக்க திரைப்படங்கள் போன்ற விடயங்கள்..
சிங்கள திரைப்படங்கள் இப்போது சர்வதேசீயமாகவும் வெற்றிகள் பெற்றிருக்கின்றன. பேராசிரியர் சுனில் ஆரியரத்னா, சோமரத்ன திசானாயக்கா, அசோக ஹந்தகமா, சுதத் ரோஹனா, ஜயந்த ச்சந்தரசிரி போன்ற நல்ல திரைப்பட இயக்குனர்கள் நாட்டில் இருக்கிறார்கள். ஆனால் அவர்களின் படைப்புகளை பற்றிய பொதுவான விமர்சனங்கள்தாம் நாட்டில் இல்லை. சுயாதீன விமர்சகர்கள் எம்மிடையே இல்லை. மேடை நாடகங்கள், தொலைக்காட்சி நாடகங்கள், சங்கீதம் தொடர்ப்பாகவும் நிலைமை அப்படிதானுள்ளது.
•This e-mail address is being protected from spambots. You need JavaScript enabled to view it•
புகைப்படங்கள்: நன்றி - ஜி.ஜி.சரத் ஆனந்த
•<• •Prev• | •Next• •>• |
---|