- இச்சிறுகதை ஏற்கனவே 'பதிவுகள்', 'திண்ணை' ஆகிய இணைய இதழ்களில் வெளியானது. தற்போது எனது முகநூல் நண்பரும், பல தமிழ்ப்படைப்புகளைச் சிங்கள மொழிக்கு மொழிபெயர்த்தவருமான எழுத்தாளர் ஜி.ஜி..சரத் ஆனந்த அவர்கள் இச்சிறுகதையினையும் சிங்கள மொழிக்கு மொழிபெயர்த்துள்ளார். இதுபற்றிய தகவலை அவர் அறியத்தந்திருந்தார். இதற்காக அவருக்கு எனது நன்றி. -
அதிகம் நடமாட்டமில்லாமலிருந்தது அந்த 'பார்'. வியாழன் வெள்ளியென்றால் களை கட்டி விடும். திங்களென்றபடியால் அமைதியில் மூழ்கிக் கிடந்தது. ஓரிருவர்களேயிருந்தார்கள். 'சிக்கன் விங்ஸ்'உம் 'பட்வைசர்' பியரையும் கொண்டுவரும்படி 'வெயிட்டரிடம்' கூறிவிட்டுச் சிந்தனையில் மூழ்கிக் கிடந்தேன். நினைவெல்லாம் வசுந்தராவே வந்து வந்து சிரித்துக் கொண்டிருந்தாள். என் பால்ய காலத்திலிருந்து என் உயிருடன் ஒன்றாகக் கலந்து தொடர்ந்திருந்த பந்தம். இருபது வருடத் தீவிரக் காதல். எனக்குத் தெரிந்த முகவன் ஒருவன் மூலம் அண்மையில் தான் கனடா அழைத்திருந்தேன். அவ்விதம் அழைத்ததற்காகத் தற்போது கவலைப் பட்டேன். அவளது வாழ்க்கையை மட்டுமல்ல என் வாழ்க்கையையுமே சீரழித்து விட்டேனா? இவ்வளவு நாள் பொறுத்திருந்தவன் இன்னும் சில வருடங்கள் பொறுத்திருக்கக் கூடாதா? எனக்குக் கனடா நாட்டு நிரந்தரக் குடியுரிமை கிடைத்ததும் முறையாக அவளை அழைத்திருக்கலாமே. ஒரு விதத்தில் அவளுக்கேற்பட்ட இந்த நிலைக்கு நானும் ஒருவிதத்தில் காரணமாக இருந்து விட்டேனே. இது போன்ற பல சம்பவங்களைப் பற்றி ஏற்கனவே அறிந்திருந்தேன். ஆனால் எனக்கு இவ்விதம் ஏற்படுமென்று நான் கனவிலும் நினைத்திருக்கவில்லையே.
அந்த முகவன் திருமணமானவன். பார்த்தால் மரியாதை வரும்படியான தோற்றம். அதனை நம்பி ஏமாந்து விட்டேன். வசுந்தராவின் பயணத்தில் வழியில் சிங்கப்பூரில் மட்டும் தான் ஒரு தரிப்பிடம். தனது மனைவியென்று அவளை அவன் அழைத்து வருவதாகத் திட்டம். பொதுவாக இவ்விதம் பெண்களை அழைத்து வரும் சில முகவர்கள் சூழலைப் பயன்படுத்தி, ஒன்றாகத் தங்கும் விடுதிகளில் வைத்துப் பல பெண்களைப் பாலியல் பலாத்காரம் செய்திருப்பதாகக் கதைகள் பல கேள்விப்பட்டிருக்கின்றேன். ஆனால் எனக்கே இவ்விதமேற்படுமென்று நான் நினைத்துப் பார்த்தேயிருக்கவில்லை. கனடா வந்ததும் வசுந்தரா கூறியதும் என்னால் நம்பவே முடியவில்லை. இவர்கள் இருவரும் ஒன்றாகத் தங்கியிருந்திருக்கின்றார்கள். அருந்தும் பானத்தில் அவன் போதை மருந்தொன்றினைக் கலந்து கொடுத்து இவள் மேல் பாலியல் வல்லுறவு வைத்திருக்கின்றான். மறுநாள் தான் இவளுக்கே தெரிந்திருக்கின்றது. அது மட்டுமல்ல. இவள் விரும்பினால் இவளைத் தொடர்ந்து 'வைத்திருப்பதாக'க் கூடக் கூறியிருக்கின்றான். இவன் இது போல் ஏற்கனவே வேறு சில பெண்களுடனும் இவ்விதம் நடந்திருக்கின்றான். அவர்களிலொருத்தி இங்கு புகார் செய்து தற்போது சிறையிலிருக்கின்றான்.
இப்போது என் முன் உள்ள பிரச்சினை......வசுந்தராவை ஏற்பதா இல்லையா என்பது தான். ஐந்து வயதிலிருந்தே இவளை எனக்குத் தெரியும். ஒன்றாகப் பாடசாலை சென்று, படித்து, வளர்ந்து உறவாடியவர்கள். இவளில்லாமல் என்னாலொரு வாழ்வையே நினைத்துப் பார்க்க முடியாது. ஆனால்...இவளது இன்றைய நிலை என் மனதில் ஒரு தடுமாற்றத்தை ஏற்படுத்தி விட்டதென்னவோ உண்மைதான். தத்துவம் வேறு நடைமுறை வேறு என்பதை உணர வைத்தது இவளுக்கேற்பட்ட இந்தச் சம்பவம். பார்க்கப் போனால் தவறு இவளுடையதல்லவே. ஒரு விதத்தில் நானும் காரணமாகவல்லவா இருந்து விட்டேன்....
'நண்பனே. நான் உன் தனிமையைப் பகிர்ந்து கொள்ளலாமா?"
எதிரே கனேடிய பூர்வீக இந்தியனைப் போன்ற தோற்றமுள்ள ஒருவன் நின்றிருந்தான்.
"தாராளமாக நண்பனே!" என்றேன்.
வெயிட்டரிடம் அவனுக்கும் சேர்ந்த்துக் கொண்டு வரும்படி கூறினேன்.
"நன்றி நண்பனே!" என்று அருகில் அமர்ந்தான்.
"என் பெயர் ஜோ உடைந்த கால் ( Joe Broken leg) ). உன்னைச் சந்தித்ததில் மகிழ்ச்சி நண்பனே. இன்றைய பொழுதை எவ்விதம் கழிப்பேனோ என்றிருந்தேன். நல்லதொரு துணையாக நீ" என்று தனது கைகளை நீட்டினான். வித்தியாசமான பெயர். ஆனால் இவர்களது சமூகத்தில் இது போன்ற பல வித்தியாசமான பெயர்கள் சர்வசாதாரணம்.
"என் பெயர் ஆனந்தன். எனக்கும் உன்னைச் சந்தித்ததில் மகிழ்ச்சிதான் நண்பனே!" என்று அவன் கைகளைப் பற்றிக் குலுக்கினேன்.
ஜோ உடைந்த கால் உண்மையிலேயே வித்தியாசமானவன் தான். அவனுடன் கதைத்த பொழுதுதான் தெரிந்தது அவன் உடைந்த கால் மட்டுமல்ல உடைந்த மனிதன் என்பதும். எல்லாவற்றையும் தன்னுள் போட்டு மூடி வைத்திருக்கின்றானென்பதும்.
"என்னைப் பற்றி என்ன நினைக்கின்றாய்?" என்றான்.
"நீ மிகவும் நல்லவனைப் போல் தென்படுகின்றாய்" என்றேன்.
அதற்கவன் இதழ்களில் புன்னகை கோடு கிழித்தது.
"உண்மைதான். எல்லோரும் அவ்விதம் தான் கூறுகின்றார்கள். ஆனால் எனக்கு நல்லவனாக இருந்து அலுத்து விட்டது. லிசா விண்டகர் கூட அவ்விதம் தான் கூறினாள். ஆனால் எனக்கு நல்லவனாக இருந்து அலுத்தே போய் விட்டது. கெட்டவனாக மாறலாமா என்று கூட யோசிக்கின்றேன்."
எனக்கு அவன் கூறியது வித்தியாசமாகவிருந்தது. இதற்கிடையில் வெயிட்டர் 'சிக்கன் விங்ஸ்'சையும் 'பட்வைசர்'உம் கொண்டு வந்து வைத்தகன்றான். சிக்கனைச் சுவைத்தபடி பியரை அருந்தியபடி உரையாடலைத் தொடர்ந்தோம்.
"நீ ஒரு புதிர் போல் படுகின்றாய். யாரது லிசா விண்டகர். அவள் பெயரைக் கூறும் பொழுதே கனவுலகில் சஞ்சரிக்க ஆரம்பித்து விடுகின்றாயே? உன் காதலியா?" என்றேன். அவளது பெயரைக் கேட்டதுமே அவன் முகத்தில் மகிழ்சி படர்ந்தது.
"நண்பனே. நீ கூறுவது சரிதான். அவள் என் காதலிதான். அவள் இல்லையென்றால் எனக்கு வாழ்வே இல்லை என்று தானிருந்தேன். ஆனால்..."
"ஆனால்..என்ன நண்பனே!:"
அவன் தொடர்ந்தான். "அவள் இப்பொழுது இந்த உலகிலேயே இல்லை. ஆனால் நான் மட்டும் இன்னும் உயிருடன் இருக்கின்றேன்"
அவன் குரலில் கவலையின் தொனி.
"என்னை மன்னித்துக் கொள். தேவையில்லாமல் உன் மனதை வருத்தி விட்டேனோ"
"பரவாயில்லை. அவளைப் பற்றிப் பேசாமல் யாரைப் பற்றிப் பேசப் போகின்றேன். இந்த உலகில் இருக்கும் வரையில் அவளைப் பற்றி நினைத்து, பேசியே என் வாழ்வு போகட்டும். அதனைத் தான் நானும் விரும்புகின்றேன். பாவம். பரிதாபத்திற்குரிய பெண். கடவுள் அவளை நன்கு வருத்தி விட்டார். அவள் ஆன்மா சாந்தியடையட்டும்"
அவனே தொடர்ந்தான். "நண்பனே. அவளுக்காக நான் எதனையுமே கொடுப்பேன். உனக்குத் தெரியாது அவளுக்கும் எனக்கும் இடையிலிருந்த உறவின் ஆழம்"
"உன்னைப் பார்த்தாலே தெரிகிறதே" என்றேன்.
"ஐந்து வயதிலிருந்து நாங்கள் இருவரும் இணை பிரியாத பறவைகள் போல் தான் வாழ்ந்து வந்தோம். அந்தச் சிறுவயதில் அவள் அடைந்த துன்பத்தை நினைத்தால் எனக்கு இப்பொழுதும் குலை நடுங்குகின்றது."
எனக்கு அவனது உரையாடலில் சுவாரசியம் ஏற்பட்டது.
"அவளை அவளது வளர்ப்புத் தந்தை படாதபாடு படுத்தி விட்டான். அந்தச் சிறுவயதில் அவளது பன்னிரண்டாம் வயது வரையில் அவன் அவளைப் பாலியல் பலாத்காரம் செய்து வந்திருக்கின்றான். அவள் வயதின் அறியாமையாலும் பயத்தினாலும் அதனை வெளியில் கூறாமல் பொத்திப் பொத்தி வைத்திருந்தாள். எனக்கே அவள் பன்னிரண்டு வயதான போது தான் கூறினாள். கடவுள் அந்தச் சிறுவயதிலேயே என் லிசாவை மிகவும் கொடுமைப் படுத்தி விட்டார்."
அவனது குரல் உடைந்து கண்களில் நீர் கோர்த்தது.
"அப்பொழுது எனக்குப் பதினான்கு வயது. அவள் அதனை எனக்குக் கூறிய பொழுது என்னால் தாளவே முடியவில்லை. அவளை எவ்விதமாவது அந்தக் கொடியவனிடமிருந்து விடுவிக்க வேண்டுமென்று தீர்மானித்தேன். ஓரிரவு அவன் குடி மயக்கத்தில் படுக்கையில் புரண்டு கிடந்தான். அந்தச் சந்தர்ப்பத்தைப் பாவித்து அவனைக் கத்தியால் குத்திக் கொலை செய்து விட்டேன். இளம் குற்றவாளியென்னும் அடிப்படையிலும் , லிசாவிற்கேற்பட்ட நிலைமையின் அடிப்படையிலும் மூன்று வருடங்கள் சிறைத்தண்டனை கிடைத்தது. லிசா எனக்காகவே காத்திருந்தாள். ஆனால் இன்று அவளில்லை."
அவனது கதை எனக்குப் பெரிதும் ஆச்சர்யத்தையும், வியப்பினையும், மதிப்பினையும் கூடவே அநுதாபத்தினையும் ஏற்படுத்தியது. தொடர்ந்து நடந்ததை அறியும் ஆவலில் "அவளுக்கு என்ன நடந்தது?" என்றேன்.
"அதன் பிறகு சுமார் பதினைந்து வருடங்களாக நாங்கள் ஒன்றாக இணைபிரியாமல் வாழ்ந்து வந்தோம். கடந்த வருடம் தான் அவளைப் புற்று நோயில்,இழந்தேன். லிசா நன்கு புகை பிடிப்பாள். ஆரம்பத்திலேயே அவளைப் பலமுறை தடுத்தேன். ஆனால் அவள் கேட்கவில்லை. இறுதியில் அதுவே அவள் உயிரைக் குடித்து விட்டது. இறுதி வரை அவள் நினைவுடனேயே வாழ்ந்து விட வேண்டும். அது தான் என் எண்ணம். நண்பனே! தேவையில்லாமல் என் கதையைக் கூறி உன் நேரத்தை வீணடித்து விட்டேனா? இப்பொழுது சொல். நான் நல்லவனா?" என்றான்.
"அதிலென்ன சந்தேகம். நீ நல்லவன் தான். நிரம்பவும் நல்லவன் தான். உன் காதலிக்காக காதலுக்காக எவ்வளவு பெரிய தியாகம் செய்திருக்கின்றாய். உன்னை நினைக்க எவ்வளவு பெருமையாகவிருக்கிறது"
அன்று நேரங்கழித்து வீடு திரும்பியபொழுது நல்லதொரு நண்பனை அடைந்த திருப்தி. அதே சமயம் ஜோ உடைந்த காலை நினைக்க நினைக்க அவன் மேல் என் மதிப்பு அதிகரித்துக் கொண்டே போனது. பாலியல் வல்லுறவால் பாதிக்கப் பட்டிருந்த தன் லிசாவைக் காப்பதற்காகச் சிறை சென்று, மீண்டு, அவளுடன் வாழ்ந்து இன்று அவள் நினைவுகளே வாழ்வாக வாழ்ந்து கொண்டிருக்கும் அவன் முன்னால் நான் எம்மாத்திரம். சந்தர்ப்ப சூழ்நிலைகளால் பாதிக்கப் பட்ட என் வசுந்தராவை ஏற்பதா இல்லையா என்று மண்டையைப் போட்டு உடைத்துக் கொண்டிருக்கின்றேன்.
நன்றி: திண்ணை, பதிவுகள்.
•This e-mail address is being protected from spambots. You need JavaScript enabled to view it•
•<• •Prev• | •Next• •>• |
---|