[பதிவுகள் இதழில் ஏற்கனவே வெளிவந்த படைப்புகள் அவ்வப்போது ஒருங்குறி எழுத்துருவில் மீள் பிரசுரம் செய்யப்படுகின்றன. அந்த வகையில் பதிவுகளின் ஆரம்பகால இதழொன்றில் வெளிவந்த ஜெயகரனுடனான நேர்காணல் இம்முறை மீள்பிரசுரம் செய்யப்படுகின்றது.]-கனடாவில் நாடகமென்றால் பா.அ.ஜயகரனின் நினைவு வராமல் போகாது. அந்த அளவுக்குக் கனடாத் தமிழ் நாடக உலகில் காத்திரமான பங்களிப்பினைச் செய்தவர் , செய்து கொண்டிருப்பவர் ஜயகரன். கவிஞராகத் தன்னை ஆரம்பத்தில் வெளிக்காட்டிய ஜயகரன் தற்போது தன்னை நாடக உலகிற்கே அதிகமாக அர்ப்பணித்துள்ளதை அடிக்கடி இங்கு மேடையேற்றப்படும் நாடகங்கள் புலப்படுத்துகின்றன. 'எல்லாப் பக்கமும் வாசல்', 'இன்னொன்று வெளி', 'சப்பாத்து', 'பொடிச்சி' உட்படப் பல நாடகங்களை எழுதி மேடையேற்றியவர் ஜயகரன். தமிழில் காத்திரமான நாடகப் பிரதிகளில் இல்லாத குறையினை நீக்கும் முகமாக அவற்றினைத் தானே எழுதித் தயாரித்து மேடையேற்றும் ஜயகரன் பாராட்டிற்குரியவர். அவரை இம்முறை பதிவுகளிற்காகப் பேட்டி கண்டோம்.-
ஆரம்பத்தில் மனவெளிக் கூடாக தங்களது நாடகங்கள் அரங்கேற்றப்பட்டன. ஆனால் தற்போது நாடக அரங்கப் பட்டறை வாயிலாக அரங்கேற்றுகிறீர்கள். இது ஏதாவது பிளவுகளின் அறிகுறியா? அல்லது.....?
கனடாவில் தமிழ் நவீன நாடகத்துறைக்கு ஊற்றுகோலாய் இருந்தது தேடகம் அமைப்புத்தான். (தமிழர் வகைதுறைவள நிலையம் - தவநி). தவநி தான் எனது முதலாவது நாடகமான பொடிச்சியையும் இரண்டு புள்ளிகள் நாடகத்தையும் தயாரித்து அளித்தது. கனேடிய தமிழ் நாடக சூழலின் முனைப்புக்கு தவநிதான் முதற் காரணம்.
மனவெளி, நாளை நாடக அரங்கப் பட்டறை போன்றவற்றின் தோற்றத்திற்கும் தவநியே காரணம். நாம் எல்லோருமே தவநியின் அளிக்கைகளாலும், பட்டறைகளாலும் வளக்கப்பட்டவர்களே. எல்லாப்பக்கமும் வாசல் நாடகப் பிரதியை நு¡லாக தவநியே வெளியிட்டது. பிளவுகள், உடைவுகள் இவை அதீத நம்ப§க்கைளின் பின்னாலான அவலங்கள். நான் மனவெளி மீது அதீத நம்பிக்கைகளை வைத்து செயற்பட்டன் அல்ல. நான் அவர்களின் அங்கத்துவனும் அல்லன். ஆனால் நாடகங்கள் மீது மிகவும் ஆர்வம் கொண்டவன். அதனால் மனவெளி மீதும் அக்கறை கொண்டவன். மனவெளி நாடக விழா அமைப்பு. அது நாடக கர்த்தாக்களை அழைத்து நாடகங்களை அளிக்கிறது. எனது எல்லாப்பக்கமும் வாசல், இன்னொன்று வெளி நாடகங்களை மனவெளி தனது அரங்காடலில் அளித்தது. எனக்கும் மனவெளிக்குமான உறவு என்பது அது மட்டுமே. நாடகம் என்பது பற்றிய எனது ஈடுபாடும், ஆற்றுகைத் தளத்திற்கான சுதந்திரம் பற்றிய எனது கோட்பாடுகளும் வித்தியாசமானது. படைப்பிலக்கியவாதி, நாடக கர்த்தா என்ற வகையில் எனக்கான ஆற்றுகைத் தளம், ஆற்றுகைக்கான சுதந்திரம் முக்கியமானது. அதனால்தான் நாடக அரங்கப் பட்டறையை உருவாக்கினேன்.
நல்ல நாடகர்களின் பக்க பலத்துடன் அது அளிக்கைகளை வழங்கி வருகிறது. கருத்து ரீதியான முரண்கள் எப்போதும் எல்லோருக்கும் உள்ள விடயங்கள்தானே. அதையும் மீறி சுயமான ஆற்றுகையின் வெளிப்பாடே நாளை நாடக அரங்கப் பட்டறை. அதன் முதல் அளிக்கைகள் கடந்த யூன் 9,10 திகதிகளில் இடம் பெற்றன. எல்லாப் பக்கமும் வாசல், எதிர்க் காற்றினிலே, சொல்லின் ஆழத்துள், மீறல்- முதல்வர் வீட்டு நாய், மீறல் - இரசிகன் ஆகிய நாடகங்களை அளித்தோம். மிகுந்த வரவேற்பைப்பெற்ற நிகழ்வாயும், மாற்றீடான அரங்க அளிக்கைத் தரத்தையும் அது கொண்டிருந்தது. அளிக்கைக்கு புத்துயிப்பாய் இருந்தவர்களான டிலீப்குமார், பாபு பரதராஐ¡, ரெஜி மனுவல்பிள்ளை, பாலன் திருநாவுக்கரசு, சுமதி ரூபன், சத்தியா தில்லைநாதன், தான்யா தில்லைநாதன், சிவம் சிவலோகநாதன், கா¢காலன் போன்றோரை இச் சந்தர்ப்பத்தில் குறிப்பிடவேண்டும். என்னைப் பொறுத்தவரையில் மேலும் பல நாடக இயக்கங்கள் தோன்ற வேண்டும் நாடகத்திற்கான முன்னெடுப்புகள் இடம்பெறவேண்டும். அப்போதுதான் தமிழில் காத்திரமான நாடகத் துறையை வளர்த்தெடுக்க முடியுமென்று கருதுகிறேன். நாளை நாடக அரங்கப் பட்டறை தமிழ் நாடகத் தேடலின் இன்னுமொரு தடம்.
கவிஞரான தாங்கள் அண்மைக் காலமாக நாடகத் துறைப் பக்கம் கவனம் செழுத்தியிருக்கிறீர்கள். அத்துறையில் பெயர் சொல்லுமளவுக்கு காத்திரமாக கால் பதித்தும் உள்ளீர்கள். நாடகத் துறை உங்களை ஈர்த்ததன் காரணம் என்ன?
கவிதைகளை எழுதுபவர்கள் எல்லோரும் கவிஞர்களா? நான் கவிதைகள் சில எழுதியுள்ளேன்.ஆனால் கவிஞன் அல்லன். கவிதைகளை எழுத முன்பே நாடகத்திற்கான ஈடுபாடு இருந்தது. திருநெல்வேலியில் வாழ்ந்த காரணத்தினால் பல நாடகங்களைப் பார்க்கும் சந்தர்ப்பங்கள் கிடைத்தன. யாழ் வளாகத்துள் நடந்த பல நாடக முயற்சிகளை சிறு வயதிலிருந்து பார்க்கும் சந்தர்ப்பங்கள் கிடைத்தன. நாடக அரங்கக் கல்லு¡ரியின் அளிக்கைகளையும் பார்க்கும் சந்தர்ப்பங்கள் கிடைத்தன. அத்துடன் நண்பர்களுடன் சேர்ந்து நாடகங்களை ஆக்கவும், நடிக்கவும் முடிந்தது. பின்னர் 1980 களில் நிலவிய போருக்குள் வாழ்வும் அதன் கலை வெளிப்பாடுகளும் என்னை ஈர்த்தன. புலம்பெயர்வ§ன் பின்னாலான தேடகத்தின் பணிகளும் என்னை நாடகத்தின் ஈடுபாட்டை செழுத்தத் து¡ண்டியது. தேடகத்தின் நாடகப் பட்டறைகளையும், கல்வி வட்டங்களையும் குறிப்பிட்டுச் சொல்ல முடியும். அத்துடன் 1990ம் ஆண்டு தேடகத்தின் கலை நிகழ்வுக்காக நாடகமொன்றை எழுதினேன். அதுதான் எனது முதலாவது நாடகம். அது அரங்கேறவில்லை. பின்னர் அப்பிரதியை காத்திருப்பு எனும் நாடகமாக சுருக்கினேன். போர்க்காலத்தில் போருக்குப் போன மகனுக்காய் காத்திருக்கும் தாய் பற்றிய நாடகம் அது. 1980 களை எமக்கு முன்னே கொண்டு வந்து நிறுத்துகிறது.
தமிழ் நாடகங்கள் பெருமளவில் பழகிப்போன பாணியிலே மைந்திருக்கும். ஆனால் மனவெளி, நாடக அரங்கப் பட்டறை நாடகங்கள் கனடாத் தமிழ் நாடகத் துறையை நவீனமயப்படுத்தி வருகின்றன .தங்களது நாடகங்கள் இப்படித்தானிருக்கவேண்டும் வரையறைக்குள் தயாரிக்கிறீர்களா? நாடகத்திற்கு கூறும் பொருள் முக்கியமா? வடிவம் முக்கியமா?
நான் முதலே குறிப்பிட்டது போல தவநிக்கு முதன்மைப் பங்குண்டு. நவீனத்தின் மீது ஈடுபாடு கொண்ட கலைஞர்களின் நாடகங்களுக்கு மனவெளியும் அரங்கமைத்துக் கொடுத்தது. அதன் ஆரம்பகர்த்தாக்களின் பங்கும் மிகவும் முக்கியமானது. குறிப்பாக பாபு, டிலிப்குமார், சபேசன், சிவம், பாலன், புராந்தகன், செல்வன் ஆகியோரின் உழைப்பு முக்கியமானது. இவர்களில் பலரும் தவநிக்கூடாக வெளிவந்தவர்கள்தான். மனவெளிக்கு என்று ஒரேயொரு பாணி உண்டு... அது நவீன நாடகங்களை மட்டும்தான் அளிக்கிறது என்று கூற முடியாது. மனவெளியை அரங்காடலில் போடும் நாடகங்கள்தான் தீர்மானிக்கிறது. குறிப்பாக ஞானம் லம்பேர்ட் மேற்கத்திய நாடக மேதைகளின் பல நாடகங்களை தமிழில் மொழிபெயர்த்து அரங்காடலில் வழங்கியிருந்தார். இவரின் பங்களிப்பு மனவெளிக்கு சீரிய நாடகத்திற்கான இயக்கம் என்ற அங்கீகரிப்பைக் கொடுத்தது. அதன் பின்பு எனது அரங்க முயற்சிகள் மற்றும் விக்னேஸ்வரன், புராந்தகன், சாந்திநாதன், நவம், செழியன், சேரன் போன்றவர்களின் அரங்க முயற்சிகளையும் குறிப்பிட முடியும். அந்த அங்கீகரிப்பு மனவெளிக்கு ஆபத்தையும் கொடுத்தது. அதை அவர்களால் தக்க வைக்க முடியவில்லை. ஏனெனில் நாடகங்களுக்காக அரங்காடல் என்று இல்லாமல் அரங்காடல் நடைபெறவேண்டும் என்பதற்காக நாடகங்களை நிறைக்க முற்பட்டது. சீரிய நாடகங்கள் குறித்தான குழப்பங்கள் மனவெளி குழுவுக்கு ஏற்பட்டது. எனவே போடும் நாடகங்களைப் பொறுத்து மனவெளியும் அங்கும் இங்கும் என்று ஊசல் ஆடிக் கொண்டிருக்கும்.
மனவெளி என்பது தீவிர நாடகத்திற்கான இயக்கம் என்பதை விட, மனவெளி நாடக விழா அமைப்பு அது தீவிர நாடகங்களுக்கும் களம் அமைத்துக் கொடுக்கிறது என்பதே சாலப் பொறுத்தமாய் இருக்கும். இச் சந்தர்ப்பத்தில் நாடக அரங்கப் பட்டறையை வேறுபடுத்திப் பார்க்க விரும்புகிறேன். எமது பட்டறையின் செயற்பாட்டு வடிவம் வித்தியாசமானது. பட்டறையின் நெறியாளராகவும் நாடக எழுத்தாளராகவும் நான் தொழிற்படுகிறேன். இப் பட்டறைக்காக நாடகத்தின் பல்வேறு பரிமாணங்களை உள்ளடங்கியதான கலைஞர்களை பட்டறை மூலம் வளர்த்து ஒரு கூட்டமைப்பின் ஊடாக அள§க்கைகளை வழங்குவது என்பதே பட்டறையின் நோக்கு. இதற்காக நாடகப் பட்டறைகளை அளிப்பது என்பது எமது முதன்மையான பணியாய் உள்ளது. எமது பட்டறையால் போடப்படும் நாடகங்கள் பட்டறைக்குறியது என்ற தற்பெருமையைக் கொண்டிருக்கும். இனி நவீனம் என்பது இடக்கான சொல். ஒவ்வொருவரும் ஒவ்வொரு வரையறையை நவீனத்துக்கு கொடுக்கலாம். என்னைப் பொறுத்தவரையில் ஒரு நவீன படைப்புக்கும் வாசகர்கள் அல்லது பார்வையாளருக்கிடையே ஒரு சிந்தனை வெளியொன்று உண்டு. அந்த சிந்தனை வெளியை நிரப்பவேண்டிய கடப்பாடும், ஆர்வமும் பார்வையாளருக்கும், வாசகருக்கும் இருக்கவேண்டும். வெளி சுருங்கச் சுருங்க நவீனத்துடனான ஈடுபாடும் அதிகரிக்கிறது. நவீனம் குறித்தான ஈடுபாடும் வலுவுறுகிறது. எனது நாடகங்களில் அவ்வகையான சிந்தனை இடைவெளி நிறையவே உண்டு. நாடகங்கள் பார்வையாருக்கான பார்வைச் சுவையை வழங்கும் அத்துடன் சிந்திப்பதற்கு நிறையவே உண்டு. கூறுபொருள், வடிவம் இரண்டுமே நாடகத்திற்கு முக்கியமானது. எனது நாடகங்களில் கூறுபொருளுக்கு ஏற்ப வடிவமும் உள்வாங்கப்படுகிறது. நாடகம் என்பது பார்வைக் கலையென்பதால் வடிவம்
நாடகத்தின் பொருளை பார்வையளரிடம் கொண்டு செல்வதற்கு பயன்படுகிறது. நாடகம் என்பது உணர்வுகள் உள்ள மனிதர்களின் வெளிப்பாடு. எனவே வார்த்தைகளாயும், கவிதைகளாயும், பாவங்களாயும், மெளனங்களாயும், ஆடல்களாயும், பாடல்களாயும் நாடகவெளி நிறைகிறது.
நாடகமொன்றின் வளர்ச்சியென்பது பாத்திரங்கள், உரையாடல்களுடன் மட்டும் நின்று விடுவதில்லை. அரங்க அமைப்பு, ஒளி, ஒலி யென்று பல்வேறு விடயங்கள் அதன் வளர்ச்சியைத் தீர்மானிக்கின்றன. கனடாத் தமிழ் நாடகங்களைப் பொறுத்தவரையில் பாத்திரங்கள், உரையாடல்கள் வளர்ச்சியடைந்த அளவிற்கு ஏனையவை வளர்ச்சியடைந்ததாகத் தெரியவில்லை. பொருளாதாரம்தான் அடிப்படைக் காரணமா?
எமது நாடகங்களைப் பொறுத்தவரையில் போதிய மேடை அமைப்பு, ஒலி, ஒளி, ஒப்பனை என்பன போன்ற நாடக அளிக்கைக்கான ஏனைய கூறுகளையும் உள்வாங்கியே நிகழ்த்தப்படுகிறது. அரங்காடலிலும் போதியளவு கவனம் செழுத்தப்படுகிறது. நாம் எல்லோருமே முழு நேர நாடகர்களோ, நாடக இயக்கங்களோ அல்ல. அதாவது எமது நாளாந்த வாழ்வுக்கு இன்னும் நாடகம் தீனி போடவ§ல்லை. அதனால் நாடகத்தின் பல்வேறு பரிமாணங்களை வளர்ப்பதும் கலைஞர்களை வளர்ப்பதிலும் பல சிக்கல்கள் உள்ளன. இவ் வகையான குறையை நிவர்த்தி செய்யும் போக்குடனே பட்டறையை ஆரம்பித்தோம். நம்பிக்கையும் உண்டு. என்னைப் பொறுத்த மட்டில் போதியளவு அரங்கப் பயன்படுத்துகிறேன். பொருளாதார சிக்கல் எப்போதும் உள்ள பிரச்சினைதான். கலையார்வம் கொண்ட வியாபார பிரமுகர்களின் உதவி எமக்கு தொடர்ந்தும் கிடைப்பதால் வருடத்தில் ஒரு நிகழ்ச்சியையாவது ஒழுங்கு செய்யக் கூடியதாய் உள்ளது. நாடக அரங்குகளை விடுத்து கல்லு¡ரி அரங்குகளில் நாடகங்களை நிகழ்த்தும் போது பல்வேறு சிக்கல்களை நாம் எதிர் நோக்குகிறோம். அதனால் நாம் நினைக்கும் அளிக்கைத் தரம் அங்கு அமைவதில்லை. அங்கு நாடகம் பார்க்கும் தீவிர நாடக ஆர்வலர்களுக்கு நாடகத்தின் அளிக்கைத் தரம் சிக்கலாய் இருக்கும். எனவே ஒரு சின்னச் சேதி நாம் நாடக அரங்குகளில் அளிக்கைகளை செய்யும்போது வந்து பார்த்து விடுங்கள்.
மேடையேற்றவிருக்கும் தங்களது நாடகங்களைப்பற்றி சிறிது கூறுங்களேன்.
நான் இதுவரையில் 20 ற்கும் மேற்பட்ட நாடக பிரதிகளை உருவாக்கியுள்ளேன். இவற்றில் சில குறு நாடகங்கள். இது வரையில் பொடிச்சி, எல்லாப்பக்கமும் வாசல், இன்னொன்று வெளி, இரண்டு புள்ளிகள், சொல்லின் ஆழத்துள், காலம் ஓடுது, எதிர்க் காற்றினிலே, முதல்வர் வீட்டு நாய், இரசிகன், சப்பாத்து போன்ற நாடகங்களை அளித்துள்ளேன். எனது அடுத்த வருடத்துக்கான நாடகம் குளிக்குளிருந்து மீள்வதாய். ஒரு மாபெரும் அவலத்துக்குள்ளால் தப்பிய ஜவர் ஒரு நிலவறைக்குள் தஞ்சமடைகின்றார்கள். அவலம் வெளியில் தொடர்கிறது. இந்த ஜவரின் இருப்புக்கான போராட்டம் நாடகமாகிறது. கிட்டத்தட்ட இரண்டு மணிநேர வாழ்வின் மீதான விவாதம்தான் இந் நாடகம். உலகளாவிய விவாதத்தை தன்னுள் உள்வாங்கியிருக்கிறது இந் நாடகம். இந்த நாடகத்தை 1999 ல் எழுதி முடித்தேன். இன்றைய அரசியல் நிலவரங்களைப் பார்க்கும் போது இன்னும் நாடகத்துடன் ஜக்கியமாகக் கூடியதாயிருக்கும். அவலத்தில் இருந்து மீண்டு இன்னொரு அவலத்துள் வீழ்ந்து விட்டோமா?
வழக்கமான கேள்வியொன்று... இத்துறையில் ஈடுபட விரும்புவர்களுக்குத் தங்களது அறிவுரையென்ன? இதுவரை காலக் கனடாத் தமிழ் நாடக வளர்ச்சிபற்றிய தங்களது மதிப்பீடு என்ன?
நான் அறிவுரைகளை போதிக்கும் சாமியார் அல்ல. எனது சுயம்பற்றிய தேடலும், எனது வாழ்வு பற்றிய கேள்விகளும் என்னையொரு நாடக கர்த்தா ஆக்கியது. நேரம் கிடைக்கும் போதெல்லாம் நாடகங்கள் பார்ப்பேன். வாசிப்பேன். என்னைச் சூழ்ந்த மனிதர்களை உன்னிப்பாய் நோக்குவேன். இவைகள் பிற்காலம் நாடகத்தின் பாத்திரங்களாக உருவாக்கம் கொள்கின்றன.கனடா நாடகங்கள் பற்றிய எனது மதிப்பீடு: புலம்பெயர்ந்த ஈழத் தமிழர்கள் பெருமளவில் வாழும் நாடு என்பதால் பல்வேறு முயற்சிகளுக்கு முனைப்பாய் கனடா இருக்கிறது. இதில் காத்திரமான நாடங்களின் வருகையும், சீரிய நாடகங்கள் மீதான ஆர்வலர்களும் இங்கு குறிப்பிடும்படியாக உள்ளது.
பொதுவாக ஈழத்து நாடகங்கள் எனும் போது சீரிய நாடகங்களே அதன் பிரதான போக்காயும் உள்ளது. மேற்கத்திய பாணி நவீன நாடகங்கள் என்ற வகையில் கனடாவில் குறிப்பிடத்தக்க முயற்சிகள் இடம் பெறுகின்றன. தரமான நாடகங்கள் வெளி வந்துள்ளன. நல்ல நடிகர்கள், தொழில் நுட்ப கலைஞர்கள் தோன்றியுள்ளார்கள். நல்ல நெறியாளர்கள், நாடக எழுத்தாளர்கள் வந்துள்ளார்கள். இவ்வகையான முனைப்பின் பயனாய் தமிழ் நாடகத் துறைக்கு பயனுள்ள விடயங்கள் கிடைத்துள்ளன. இவைகள் ஏனையோருக்கும் பரவும்வகை செய்ய வேண்டும். கனடாவில் தமிழ் மரபு நாடகங்கள் குறித்தான செயற்பாடுகளும், அது குறித்தான பிரக்ஞையும் அற்றே காணப்படுகிறது. இது தமிழ் சமூகத்துக்கு உள்ள ஒட்டுமொத்தமான குறை. எமது பாரம்பரிய நாடக மரபு என்பது மிகவும் ஆழமானதும், பல்வேறு உயரிய நாடக பண்புகளால் வளர்க்கப்பட்டு வந்ததும் ஆகும். அதை தமிழர்களிடம் ஊன்றவிடாமல் இருந்த காரணிகளை அகற்றி மீண்டும் எமது கூத்துக் கலைகளுக்கு புத்துயிர் வழங்க வேண்டும். என்னைப் பொறுத்தவரையில் எமது இன்றைய நடப்புகளை, எமது நாளாந்த சிக்கல்களை இவ் கூத்துக் கலைகளுக் கூடாக மிகவும் உன்னதமாக வெளிப்படுத்த முடியும். கூத்துகள் குறித்த ஆழமான அறிவின்மையால் பிரதிகள் ஆக்க முடியாத வேதனை என் ஆழ் மனதில் உண்டு. தமிழர்களின் பிரதான வெளிப்பாட்டுக் கலையை அழியவிட்டுவிட்டு நாம் நவீனம் படைக்கிறோம் என்று பீற்றுவதில் எந்தப் பயனும் இல்லை. பாரம்பரியம் என்பது மாற்றங்களுக்கு அப்பாற்பட்டது என்ற மனப்பாங்கு எம்மத்தியில் மாறவேண்டும். புதிய அகராதிகள் கலைகளுக்குள் உள்வாங்கப்பட வேண்டும். தமிழ் சமூகமும், தமிழர் சார்ந்த அரசுகளும், நிறுவனங்களும் இது குறித்து செயலாற்ற வேண்டும். கூத்து குறித்தான பட்டறையை நடாத்துவதிற்கு நாமும் முயன்று வருகின்றோம்.
தொடர்ந்தும் நாடகத்துறையில்தான் அதிகமான கவனத்தை வைத்திருப்பீர்களா? அல்லது கவிதைப் பக்கமும் பார்வையைத் திருப்புவீர்களா?
எனது நாடகங்களை ஒவ்வொரு கவிதையாகவே கருதுகிறேன். கவிதைக்குறிய கனகச்சிதம் நாடகத்திற்கும் இருக்கவேண்டும் என்பதே எனது நிலை. கவிதையை எழுதுவதற்கான காலத்தில் ஒரு நாடகத்தைப் படைத்துவிடலாம் என்பதே எனக்கு இயல்பாய் இருக்கிறது. நான் கவிஞர்களை குறிப்பிடவில்லை. ஒவ்வொரு நாளும் பல கவிதைகளை எழுதிக்குவிக்கும் கவிஞர்கள் இருக்கிறார்கள் தானே. அவர்களைப் போல் நாடகங்களை எழுதிக் குவிக்க முடியாது. நாடகமே எனது துறையாக உணர்கிறேன். அதில்தான் கூடிய கவனத்தைச் செழுத்த முயற்சிக்கின்றேன்.
கவிஞர், நாடகாசிரியர், நல்தொரு மேடைப் பேச்சாளர் என பல்பரிமாணங்களில் அறியப்பட்ட தங்களது எதிர்காலத்திட்டங்கள் என்ன?
பட்டறையின் நோக்கங்களை செயல்படுத்த முயற்சிக்கின்றேன். பரந்துபட்ட தமிழர் பரம்பலில் நாடக கலைஞர்களுக்கான ஒர் அமைப்பும் அதற்கூடாக பரஸ்பர பரிமாற்றங்களையும் செய்யவேண்டுமென்பது எனது அவா. பலவற்றை அறியவும், கற்கவும் வழி பிறக்கவேண்டும். இயலுமானவரை நாடகங்களை எழுதுவது அவற்றை அளிக்கை செய்வது. நாம் மிகவும் நெருக்கடியான வாழ்க்கையோட்டத்தில் வாழ்ந்து கொண்டிருப்பவர்கள். குறிப்பாக முதலாளித்துவத்தின் வயிற்றுக்குள் சீவிப்பவர்கள். முதலாளித்துவத்திற்கு சக்தி தேவைப்படும் போதெல்லாம் நாம் சமிக்க வேண்டியுள்ளது. அந்த நெருக்கடிக்குள்ளிருந்து இவ் வகையான நாடக அளிக்கைகளை தருவதென்பது மானிட ஓர்மம்தான். கலைகள் மானிடத்தை நிமிர்த்தும், மானுடத்தை மீட்கும் என்ற நம்பிக்கையும் என்னைப் பின் தொடர்கிறது. அது ஒரளவேணும் என்னை சோர்வடையாமல் வைத்திருக்கிறது.
சந்திப்பு: ஊர்க்குருவி
- பதிவுகள் டிசம்பர் 2001; இதழ் 24.
•<• •Prev• | •Next• •>• |
---|